துருப்பிடித்த
இரும்புக் கம்பி
கூண்டுக்குள்
உறங்கும் ஆடுகளத்தானின்
எகிறுவீரம்
முனைமழுங்கி
இறைச்சி ஆகும் தருணம்
சுற்றி நின்ற
ரசிகக்கூட்டத்தில்
பந்தயப்பணம்
லுங்கி வாசத்தோட
கைமாற
‘விரு விரு’
உன்னத்தான்
நம்பிக்கிடக்கேன்
உசுப்பல் வார்த்தைகளில்
கோபம் கொப்புளித்த
கணங்களில்
தாக்குதலில் சரிந்த
பசுபதி
ஜெய் விருமாண்டி
விண்ணைப்பிளக்க
சிலிர்த்த சேவல்
பாய் கறிக்கடையில்
அமைதியாய்
இறைச்சி ஆனது
உடலெங்கும்
சக்தி மஞ்சத்தூள்
தடவிய விருவின்
கண்கள்
கூண்டைநோக்க
அங்கே
கழிச்சலின் நீச்சம்
உதிர்ந்த இறகுகளின்
மரணம்
சேவலின் இறுதியை
படம்பிடித்துக் கொண்டிருந்தது.

இ.செல்வராஜ்
புனைபெயர் சூர்யமித்திரன்
சொந்த ஊர்.காஞ்சிபுரம். தற்போது.வசிப்பிடம்.குடியாத்தம் தொழில்.ஓய்வுபெற்ற உதவிகருவூல
அலுவலர். 1976முதல் வாசிப்பனுபவம். கட்டுரை/கதை/விமர்சனம்/கவிதை/ படைப்பாளர்.