தான் தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தினடியில்தான் அந்த இரு போதகர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதைவிட மாற்றிமாற்றி போதித்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த போதனைகளை இந்தப் பழமும் உன்னிப்பாகக் கேட்க தொடங்கியது.
“பூமியில் பிறக்கும் உயிர்கள் அனைத்திற்குமே இறப்புக்கப்பால் கர்மவினைகளுக்கேற்ப சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ இடமுண்டு” என்ற அவர்களது உரையாடலை ஆழ்ந்து கவனித்தது அப்பழம். சட்டென அதனுடைய கற்பனை எல்லைகள் விரிவடைய, தானும் இறந்த பிறகு சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசை அந்தக் குட்டிப் பழத்திற்கு வந்துவிட்டது. ஆனால் அதற்கான வழிகளை போதகர்கள் சொல்லவில்லை.
நாட்கள் நகர்ந்தன. குட்டிப்பழம் இப்போது முழுமையாகப் பழுத்து பருவம் எய்தியிருந்தது. இருந்தும் அதன் குட்டி வட்ட வடிவில் எந்த மாற்றமும் இல்லை. அந்தக் குட்டிப்பழம், மரக்கிளையின் பிடியிலிருந்து கீழே விழப்போகும் காலமும் நெருங்கிக்கொண்டிருந்தது.
போவோர் வருவோரிடமெல்லாம் ஒரு ரிங்கிட் கேட்டு வயிற்றை நிரப்பிப் பிழைத்துக்கொண்டிருந்த ஒரு மெலிந்த ஆடவனுக்கு அன்று யாருமே கருணை காட்டவில்லை. தள்ளாடிப் பசி மயக்கத்தில் பல மணி நேரம் நடந்தவன் இறுதியில் அம்மரத்தடியில் வந்து அமர்ந்தான். பசியால் வாடி வயிறு சுருங்கியிருந்தது. ஈரக்காற்றையாவது விழுங்கலாம் என்று காய்ந்திருந்த வாயை வானம் காட்டி திறந்திருந்தான்.
குட்டிப்பழத்திற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. இதுதான் சமயமென்று தனது உலகக் கட்டுகளை உதறிவிட்டுக் காய்ந்து போயிருந்த அவன் வாய் நோக்கி குதித்தது.
சில வினாடிகளில் நடந்தவற்றை உணர்ந்து, சூதாரித்துக் கொண்டவன் அந்தக் குட்டிப்பழத்தை கடித்துத்தின்னத் தொடங்கினான். அப்போதைக்கு உயிர் பிழைத்தான். உயிர்த்தியாகம் செய்த குட்டிப் பழமோ பூமியிலிருந்து குதூகலமாகச் சொர்க்கம் சென்றது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பலாப்பழத்துக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசை பீறிட்டது. இன்று வந்தவனைப் போலவே உயிர்ப்பிச்சை வேண்டி இன்னொருவன் வந்தால், தனது ஆசையை நிறைவேற்றிவிடலாம் என்ற சிந்தனையில் வெகுகாலம் காத்துக்கொண்டிருந்தது. தனது எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, சொர்க்கம் செல்ல வேண்டுமென்ற ஒரே வேட்கையுடன் மாதக்கணக்காக வாய்ப்பிளந்த ஒருவனின் வருகைக்காக ஒற்றைக் காம்பில் தொங்கிக்கொண்டிருந்தது.
இப்படியாக ஏங்கித் தவித்தே பலாப்பழம் பழுத்தது. அதற்கு பாரம் கூடியது. இதுவரை தாங்கியிருந்த காம்பும் வலுவிழந்தது. சட்டென்ற வேகமான காற்றில் அந்தக் காம்பு அசைந்து பாரம் தாங்காது உடைந்தது. சொர்க்கம் செல்லும் கனவில் இருந்த அந்தப் பலாப்பழம் கனவு கலைந்தபடியே தரையை நோக்கி விழுந்தது.
நன்றாகப் பழுத்திருந்ததால் தரையில் விழுந்ததும் உடல் சிதறி இதுவரை தான் வைத்திருந்த பழங்கள் எல்லாம் நான்கு திசைகளிலும் தெறித்தன. அதன் மஞ்சள் ஒளி தெருவோரம் இலேசாக மிளிரியது.
சற்று நேரத்தில் அவ்விடம் நோக்கி வந்த பல்லாயிரக்கணக்கான எறும்புகள் சிறுசிறு பெயர் தெரியாத பூச்சிகள், சிதறிய அப்பலாப்பழத்தைச் சுவைக்கத் தொடங்கின.
அந்த இராஜவிருந்து பல வாரங்களுக்குத் தொடர்ந்தது. அத்தனை ஆயிரம் உயிர்களின் பசிதீர்ந்த உள்ளக்களிப்பில், பலாப்பழம் அந்தச் சொர்க்கத்தையே தன்னிடம் கொண்டு வந்தது….
++

பிருத்விராஜு
மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்களில் புதிய வரவு. வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு சில கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவ்வப்போது கவிதைகள் குறுங்கதைகள் சிறுகதைகள் என எழுதிக்கொண்டிருக்கின்றார். தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்பின் இன்பத்தை புரிய வைக்க பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் செய்துவருகின்றார். ‘சிறகுகளின் கதைநேரம்’ என்னும் இணையம் வழி சிறுகதை கலந்துரையாடலை வழிநடத்துபவர்களில் இவரும் ஒருவர்.