மருங்காபுரி வனம் மிகப்பெரிய வனம். அதில் சோலை என்கிற அனாதைக் குரங்கு ஒன்று தனித்து வாழ்ந்து வந்தது. அது தன் கூட்டத்தாரோடு இணைந்து வாழ பல வழிகளில் முயற்சி செய்து பார்த்தும் ஒன்றும் வேலைக்கே ஆகவில்லை. மற்ற கூட்டத்திலிருக்கும் ஆண் குரங்குகள் சோலையைக் கண்டால் கையில் கிடைத்த கட்டை, கல் என்று தூக்கி எறிந்து விரட்டிவிடும். இதனால் சோலைக்கு எந்த நேரமும் வருத்தமும், சோகமும் தான்.
அதற்கு தன் தாய், தந்தையரைப்பற்றி எந்த ஞாபகங்களும் இப்போதில்லை. எப்படி தான் மட்டும் தனியே இந்த மருங்காபுரி வனத்தில் சுற்றுகிறோமெனவும் அதற்குத் தெரியவில்லை. வயிற்றுக்குத் தீனி என்று வனத்தில் சோலைக்கு பழவகைகள் கிடைத்தபடிதான் இருந்தன. இப்படி எத்தனை நாட்களுக்குத்தான் தனியே சாப்பிட்டு, தனியே உறங்கி, தனித்தே வாழ முடியும்? தனக்கென ஒரு குடும்பம் வேண்டுமல்லவா! குடும்பம் வேண்டும் தான்.
ஆனால் குரங்கார்கள் விரட்டுகிறார்களே! அப்படி என்ன தீங்கிழைத்துவிட்டேன் நான் அவர்களுக்கு? சொந்த வனத்திலேயே இப்படி முடுக்கி முடுக்கி விரட்டுகிறார்கள் என்றால் பக்கத்து வனத்திற்குப்போனால் என்ன கதி நேருமோ! சோலை தூங்கப்போகையிலும், வயிறார உண்டபின் களைப்பில் படுத்திருக்கும் வேளையிலும் தனக்கென ஒரு குடும்பம் வேண்டும்! என்றே யோசித்தபடி கிடக்கும்.
இப்படி நாட்கள் நகருகையில் சோலையை சொந்தம் கொண்டாடி ஒரு குரங்குக் குடும்பம் வந்து சேர்ந்தது. வந்து சேர்ந்த குடும்பத்திலிருந்த தலைவன் ‘மருமகனே! நீங்க மருங்காபுரி வனத்துலயே வாழறீங்க? நாங்க எங்கெங்கோ உங்களைத்தேடி அலைஞ்சோம் தெரியுமா! உங்கம்மாவை.. அதான் என் அக்காளையும், மாமனையும் அஞ்சு வருஷம் முன்னால ஆத்துல திடீருன்னு வந்த வெள்ளம் அடிச்சுட்டு போயிடுச்சு! அப்ப நீங்க சின்னப்பயல்! ஆனா தகவல் தெரிஞ்சு நானும் உங்கத்தையும் அந்த இடத்துக்கு வர்றப்ப உங்களையும் உங்க அண்ணனையும் காணோம்! அப்பயிருந்து உங்க ரெண்டு பேரையும் தேடிட்டே அலையுறோம் மருமகனே! எங்கே உங்க அண்ணன் சேது?” என்று கேட்கவே முதலில் குழப்பமாகிவிட்டாது சோலை.
’யாரிது? மாமன்னு சொல்லுதே! கூட குண்டாயிருக்கிறது அத்தையா? கூட என்னோட சோட்டுல மூனு பசங்க.. அட.. ரெண்டு பெண்களும் இருக்காங்களே! அப்ப நிஜமா மாமனாத்தான் இருக்கணும் இவரு! ஆஹா! ரொம்ப காலமா எனக்கொரு குடும்பம் இல்லையின்னு எவ்ளோ வருத்தத்துல இருந்தேன்.. வந்து சேர்ந்தான் மாமன் தன் குடும்பத்தோடு மருங்காபுரி வனத்துக்கு!’ என்றே நினைத்தது சோலை.
“சொல்லுங்க மருமகனே! உங்க அண்ணன் எங்கே இப்போ?”
“எனக்கு அண்ணன் இருக்கானா? எனக்குத்தெரிஞ்சு நான் ஒருத்தன் தான் தனியா இந்த வனத்துல ரொம்ப வருசமா இருக்கேன். மத்தவங்க எல்லாரும் என்னை விரட்டி அடிக்கிறாங்க மாமா.. என்னை, கூட யாருமே சேர்த்திக்கறதில்லே! அதனால எனக்கு பெரிய வருத்தமெல்லாம் இல்ல மாமா. இப்ப நீங்க திடீர்னு வந்து மருமகனேன்னு வாயாற கூப்புடுறீங்க.. எனக்கு சந்தோசமாத்தான் இருக்குது. இங்கயே இருக்கீங்களா.. நான் போய் உங்களுக்காக சாப்பிடறதுக்கு தேன் வாழை கொண்டுட்டு வர்றேன்” என்று சொல்லிக்கொண்டு சோலை மரம் மரமாய்த் தாவிச்சென்றது. ‘அப்பிடியே நாவல் பழமிருந்தா கொண்டுட்டு வாங்க மருமகனே.. எனக்கு ரொம்பப்பிடிக்கும்!’ என்று அத்தைக்குரங்கு சொல்வதும் சோலையின் காதில் கேட்டது.
’ஆஹா! அத்தைக்கும் நாவல் பழம் பிடிக்குமா! எனக்கும் அதானே பிடிக்கும். அத்தைக்கு நாவல் பழம் கொடுத்தால் அவள் எனக்கு தன் பெண்ணை சீக்கிரமாக எனக்கு கட்டிக்கொடுப்பாள் அல்லவா! சீக்கிரமாய் என்னை அப்பா என்று கூப்பிட பிள்ளைகள் பிறக்குமே! எங்கியோ உனக்கு மச்சம் இருக்குடா சோலையப்பா!’ என்று நினைத்துக்கொண்டே சென்றது சோலை.
மருங்காபுரி வனத்தில் இப்படித்தான் சோலைக்கு ஒரு குடும்பம் அமைந்துவிட்டது. அத்தைகாரிஎப்போதுமே தான் இருந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டு எந்த நேரமும் நாவல் பழம் சாப்பிடுவதையே வாடிக்கையாய் வைத்திருந்தாள். மாமனும் அவன் பிள்ளைகளும் தங்களுக்கான உணவுகளை அவர்களே தேடிச்சென்று சாப்பிட்டுக்கொள்கிறார்கள். இந்த அத்தைகாரிக்கு யாரும் உணவு கொண்டுவந்து கொடுப்பதாய் தெரியவில்லை. அவளுக்கான உணவு முழுசும் சோலையப்பனே வனத்திலிருந்து கொண்டுவந்து கொடுப்பான்.
அப்படியான சமயங்களில் அத்தை தன் புருசன் குரங்கை கண்டபடி திட்டுவாள். ‘மாமனைத் திட்டாதீங்க அத்தை!’ என்று சோலை சொல்லுவான். ‘நீ கம்முனு இர்றா மருமவனே! அனாதிப்பயலெல்லாம் எனக்கு புத்தி சொல்ல கிளம்பிட்டியோ! விளாறு எடுத்தன்னா வீசுவீசுன்னு வீசிடுவேன் பார்த்துக்க! சுண்டக்காபயலே!’ என்று சோலையை திட்டத்துவங்கிவிடுவாள் அத்தைக்குரங்கி. இத்தனை திட்டுக்களை வாங்கியும் சோலை அத்தைக்கு உணவு கொண்டுவந்து தருவதை நிறுத்தவில்லை.
அவளது மூத்த பெண் முத்தரசியை எப்படியும் தனக்கே கட்டிவைத்து விடுவாள் என்றே நம்பியது சோலை. அந்த முத்தரசியோ சோலையை ஒரு பொருட்டாய்க்கூட மதித்து ஒரு பார்வை பார்ப்பதில்லை. அவளது கூடப்பிறந்த முத்துமணியும் அப்படித்தான். சோலை என்கிற ஒருவன் இருப்பதையே கண்டுகொள்வதில்லை அவைகள். மாமனுக்கு வயது ஆகிவிட்டதால் வயிறு நிரம்பியதும் குறட்டை போட்டுக்கொண்டு தூங்குவதே அவர் வேலை.
இப்படியிருக்க நாவல்ப்பழ மரத்தில் பழங்கள் குறைந்துகொண்டே வந்தன. அத்தைகாரியிடம் அதைப்பற்றி சோலை எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஒருநாள் நாவல் பழ மரத்திலிருந்து விழுந்து தன் பின்னங்காலில் ஒன்றை ஒடித்துக்கொண்டது சோலை. வலிவேறு பயங்கரமாய் இருக்கவே கொஞ்சம் பழங்களோடு திரும்பிற்று. காலை நொண்டிக்கொண்டே வந்து அத்தையிடம் பழங்களை கொடுத்தது சோலை.
‘எனக்கென்ன பிச்சையா போடுறே மருமகனே? இது எவ்ளோ நேரத்துக்கு வரும் எனக்கு? நீயெல்லாம் சொந்தம்னு சொல்லிட்டு எங்ககூட இருக்கே சாவமாட்டாம! போ.. போய் இன்னும் பழங்கள் கொண்டுவா!’ என்று சத்தம் போட்டது அத்தைக் குரங்கி. சோலை தன் கால் முறிந்த விசயத்தை அத்தையிடம் சொல்லிவிட்டு வேறு மரத்தினடியில் வந்து சாய்ந்துவிட்டது. ‘வேணும்னே கால் ஒடிஞ்சாப்ல நடிக்கிறயாடா மருமவனே.. நீதான் அத்தைகாரியை காப்பாத்துறவனாடா? போயிச்சாவுடா!’ என்று கண்டபடி கத்த ஆரம்பிக்கவும் வேறு இடம் தேடி சோலை வந்து படுத்துக்கொண்டது.
இரண்டு நாட்கள் பசியால் வாடி அதே இடத்தில் கிடந்தது சோலை. மூன்றாம் நாள் எழுந்து நின்று பார்த்தது. கால்வலி கொஞ்சம் குறைந்திருந்தது. இருந்தாலும் பின்னங்கால் கோணையாய் நின்றது. பார்த்த மாமன் சொன்னார்..’கோணக்கால் மருமகனாப் போயிட்டிங்களே! இனி கோணக்காலா.. கோணக்காலான்னு தான் உங்களைக் கூப்பிடனும்’ என்று சொல்லவும் சோலைக்கு எரிச்சலாய் இருந்தது. ‘எப்பிடி அடிப்பட்டுச்சு?’ என அத்தை பெண் முத்தரசியோ, முத்துமணியோ, அவர்களது அண்ணன்களோ ஒருவார்த்தை கேட்கவில்லையே என்று சோலைக்கு வருத்தமாய் இருந்தது. இது என்ன சொந்தம்? இதற்காகவா இத்தனை வருடம் காத்திருந்தேன்?
இப்படியிருக்க அத்தைகாரி சோர்வாய் இவனை திட்டக்கூட தெம்பில்லாமல் மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். சோலை கோணைக்காலை இழுத்துக்கொண்டு அத்தையிடம் சென்று நின்றான்.
“வாடா கோணக்காலா! நீ பாட்டுக்கு காலை ஒடச்சுட்டு போயி நீட்டிப்படுத்துட்டே.. உம்பட மாமன்காரன் இந்த வனம் பூராவும் தேடியும் ஒரு மரத்துலகூட நாவல் பழம் இல்லைன்னுட்டான். நாவல் பழம் இல்லாம எனக்கு பைத்தியம் புடிச்சாப்ல ஆயிடுச்சுடா கோணக்காலா! உனக்குத்தான் நிறைய பழம் தர்ற மரம் இருக்குற இடம் தெரியுது. ரெண்டு நாளா பழம் இல்லாம நான் தவிக்கிறேண்டா! இன்னிக்காச்சிம் போய் கொண்டுவாயேண்டா!’’ என்று அத்தைகாரி கேட்டாள்.
“அத்தே, வனத்துல நாவல்பழம் இந்த வருசக்காய்ப்பு அவ்வளவுதான். இனி அடுத்த வருசம் தான் நாவல் பழமரத்துல பூவிட்டு, பூவெல்லாம் காயாய் மாறி அப்புறம் பழங்களாகும். இந்த வருஷ சீசன் முடிஞ்சுது அத்தே! இனி மாம்பழ சீசன் வந்துடும். இனிமேல் நீங்க மாம்பழம் சாப்பிடுங்க!” என்றான் சோலை.
“ஏண்டா மொண்டி மருமவனே.. நீயெல்லாம் எனக்கு புத்தி சொல்ற அளவுக்கு வந்துட்டியாடா? மாம்பழம் திங்கறதாம் மாம்பழம்! ஒரு நாவல் பழத்துக்கு ஈடாகுமாடா அந்த மாம்பழம். அனாதிப்பயலுக்கு நாவல் பழ அருமை எங்கே தெரியும்? டே மொண்டி.. ஹைப்ரேட்டுன்னு இப்ப மனுசங்க எல்லா நேரத்துலயும் எல்லாப்பழ வகையும் கிடைக்குறாப்ல பண்ணிட்டாங்களாம். இந்த வனத்தை விட்டு நீ டவுனுக்குப்போ! அங்கபோய் எனக்கு ஒரு மூட்டை ஹப்ரேட் நாவல்பழம் வாங்கிட்டு கொண்டு வா!”
“எனக்கு நகரத்துக்குப் போக வழியே தெரியாதுங்க அத்தை! நாவல்பழம் வாங்கணும்னா காகிதம் கொடுத்தாத்தான் மனுசங்க குடுப்பாங்க!”
“அது எனக்குத்தெரியாதாடா மொண்டி மருமகனே! காகிதத்துக்கு நானெங்க போவ? நீ தான் முயற்சி செஞ்சு அத்தைக்காக கொண்டு வரணும்.”
“நான் கொண்டு வர்றேன்.. அதுக்கு முத்தரசியை எனக்கு கட்டிக்குடுக்கணும் நீங்க எனக்கு”
“பார்றா மொண்டி மருமவனுக்கு வந்த ஆசையை! செரி அதுகிடக்கட்டும்.. மொதல்ல நீயி ஒருமூட்டை நாவல்பழம் கொண்டுட்டு வா! அதை அப்புறம் பேசிக்கலாம். கிளம்பு நீயி!” அத்தைக் குரங்கு சொல்லவும் சோலை மருங்காபுரி வனத்திலிருந்து கிளம்பினான்.
தன் கோணைக்காலை வைத்துக்கொண்டு பொடிநடையாய் வனத்தைவிட்டு வெளிவந்து காடு, மேடென அலைந்து ஒருவழியாய் குறுநகரை அடைந்த சோலை அங்கே மனிதர்களின் மிரட்டல்களுக்கு ஆளாகியது. பகல் வேளையில் இவர்கள் விரட்டத்தான் செய்வார்கள் என்பதையறிந்த சோலை இரவு நேரத்தில் பழமுதிர்ச்சோலைக் கடையில் கூரை ஓட்டைப்பிய்த்துக்கொண்டு இறங்கிவிட்டது. இத்தனைக்கும் இடைஞ்சலாய் இருக்கும் தன் கோணைக்காலின் மீது மிக வருத்தப்பட்டது சோலை.
ஒருவழியாய் ஹைப்ரேட் நாவல் பழங்களை ஒரு சிறு மூட்டையில் கட்டி தன் முதுகில் சுமந்தபடி குறுநகரைவிட்டு இரவில் வெளியேறியது சோலை. விடிகாலையில் காட்டுப்பகுதிக்குள் வந்துவிட்ட சோலை களைப்பு மிகுதியில் எங்கேனும் சாய்ந்துவிட நினைத்தது. ஆனாலும் பொட்டல் காடாக அது இருந்தமையால் இது சுத்தப்படாதென நிதானமாக மருங்காபுரி வனம் நோக்கி நடந்தது. முதுகில் இருக்கும் நாவல்பழ மூட்டை நேரம் செல்லச்செல்ல அதிக கனமாய் அதற்குத் தோன்றியது.
இவ்ளோதூரம் அத்தைக்காக கொண்டுவந்தாகிவிட்டது.. எப்படியேனும் இதை அத்தையிடம் கொண்டுபோய் சேர்ப்பித்துவிட்டால் அத்தை முத்தரசியை எனக்கு கட்டிக்கொடுத்துவிடும். பின்பாக நான் என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள வேண்டியது தான். முத்தரசியோடு வாழத்துவங்கும் வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைத்தபடி சோலை மரங்கள் சூழ்ந்த பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டது. இருப்பதில் நல்ல நிழல் தரும் மரமாய்ப்பார்த்து மூட்டையை அருகாமையில் பத்திரமாய் வைத்து.. அதன் அருகில் படுத்துவிட்டது சோலை. நல்ல உறக்கம்.
கிட்டத்தட்ட மூன்றுமணி நேர உறக்கத்திற்குப்பிறகு கண்விழித்த சோலை தன் அருகில் அஞ்சாங்கல் ஆடிக்கொண்டு அமர்ந்திருந்த கருங்கிழவியைக்கண்டு திடுக்கிட்டு எழுந்தமர்ந்தது. கிழவி தன் முழியாங்கண்ணை உருட்டியபடி நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு சோலையைப் பார்த்தாள். தன் கையில் வைத்திருந்த அஞ்சாங்கல்லில் ஒன்றை பொட்டென சோலையின் மண்டையில் படுமாறு வீசினாள்.
“யார்டா கொரங்குப்பயலே நீ? இங்கெங்கே ராசாவாட்டம் படுத்து கொறட்டை போட்டுட்டு தூங்குறே? இது யாரு வனம்னு நினைச்சே? இந்த அழகுரோசா அம்பிகாபதி வனமாக்கும் தெரிஞ்சுக்கோ! இதுக்காக உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்னோட எண்ணெய்ச்சட்டியில தூக்கி உள்ளார போட்டு உன்னை பொறிச்சுடுவேன்!” என்று கிழவி உறுமினாள்.
“பாட்டி! நான் குறுநகர்ல இருந்து மருங்காபுரி வனம் நோக்கி போயிட்டிருக்கேன். நட்ட நடுராத்திரியில இருந்து நடந்தே வந்ததால அப்பிடியே நீட்டி சாய்ஞ்சுட்டேன். ஆமா நீ ஏன் இப்பிடி ஒல்லிக்குச்சியாட்டமிருக்கே? கஞ்சிக்கி வழியில்லாத பஞ்சப்பாட்டு பாடுற கிழவியாட்டமே இருக்கே பாட்டி! எனக்கு ஒரு அத்தைகாரி இருக்கா…”
“நிறுத்து நிறுத்துடா குரங்குப்பயலே! என்னையப்பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க தெரியுமா? நீ என்னடான்னா என்னை பாட்டின்னு கூப்பிடறே பயமே இல்லாம!”
“பாட்டி.. உன்னையப்பார்த்து நானெதுக்கு பயப்படனும்? நீயே பல்லுப்போன பாட்டி. இன்னைக்கோ நாளைக்கோன்னு இருப்பியாட்ட இருக்கு! நீ நல்லா திடகாத்திரமா இருக்கோணும்னா நான் சொல்றைதைக்கேளு. எண்ணெய்ச்சட்டி, மண்சட்டின்னு வர்றவங்களை மிரட்டீட்டு இந்த வனத்துல சுத்தாதே.. வனமெல்லாம் யாருக்கும் சொந்தம் கிடையாது. வயசானதால வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது பாட்டி. நீ தெம்பா இருக்கணும்னா என் அத்தைகாரி மாதிரி தினமும் நாவல் பழம் சாப்பிடு. ஒடம்பு கணுக்கணுன்னு ஆயிடும். தெம்பா இருக்கும்!”
“அப்பிடியா சொல்றே? அந்தப்பழத்துக்கு நான் எங்க போவேன்? இந்த வனத்துல நாவல்பழ மரமே இல்லையே! ஆமா.. அதென்ன உன் பக்கத்துல ஒரு மூட்டை? அதுலதான் நாவல் பழம் வச்சிருக்கியா? அதை எனக்கு குடுத்துடு கொரங்கா.. நான் உனக்கு கரடி பாஷை தெரிஞ்ச கழுகு தர்றேன்!”
“ஐய்யோ! இந்த நாவல்பழ மூட்டையை நான் என் அத்தைகாரிக்கு கொண்டுபோய் கொடுத்தே ஆகணும். அப்பத்தான் அத்தை தன்னோட பொண்னு முத்தரசியை எனக்கு கல்யாணம் கட்டி வைக்கும்!”
“அப்படியா! கழுகுக்கூடவே பேசுற கிளி ஒன்னு தர்றேன். அப்புறம் தினமும் பதினாலு பழம் தர்ற கொய்யாச்செடி தர்றேன். அதை நீ நிலத்துல நட்டாலும் சரி, கையில வச்சிருந்தாலும் சரி.. எப்பயும் தினமும் பதினாலு பழம் குடுக்கும்! இந்த மூனையும் வச்சிக்கோ! உன்னோட அத்தைகாரிக்கு நீ பழமூட்டையை கொண்டுபோய் குடுத்ததீம் உடனே தன்னோட மகளை கட்டிக்குடுத்திருவாளா? அவ்ளோ நல்லவளா? யோசனை பண்ணு கொரங்கே! கொரங்குகளுக்கெல்லாம் வாழ்க்கைல ஒருக்காத்தான் அதிர்ஷ்டம் அடிக்கும். அப்ப அந்த அதிர்ஷ்டத்தை ஒதுக்கீட்டு போன கொரங்குக நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை! நீ எனக்கு நாவல் பழமூட்டையை கொடுத்துட்டு போனீன்னா காலம் உள்ள வரைக்கும் நான் உன்னை வாழ்த்துவேன்! உன்னோட அத்தை பொண்ணைவிட அழகான குரங்கி உனக்கு நிச்சயம் கிடைப்பா! ராஜ வாழ்க்கை நீ வாழலாம் தெரிஞ்சிக்க!” என்று கிழவி சொன்னாள்.
சோலை மனதுக்குள் அத்தைகாரியை நினைத்துப்பார்த்தது. கிழவி சொல்வது போல அத்தைகாரி ’மீண்டும் நகரம் சென்று அடுத்த மூட்டை கொண்டுவா கோணக்காலா..’ என்று சொன்னாலும் சொல்லிவிடுவாள். பதிலாக இந்தப்பாட்டிக்கு மூட்டையைக் கொடுத்துவிட்டு கழுகு, கிளி, கொய்யாச்செடி என்று வாங்கிக்கொண்டு போவதுதான் சாலச்சிறந்தது! என்று எண்ணியது சோலை. அதன்படியே சோலை பாட்டிக்கு நாவல்பழ மூட்டையை கொடுத்துவிட்டு கிளி, கழுகு தனக்குப்பின்னால் பறந்தபடி தொடர்ந்துவர கொய்யாச்செடியை கையில் பிடித்துக்கொண்டு மருங்காபுரி வனம் நோக்கிச்செல்லாமல் வேறு திசையில் பயணம் செய்யத் துவங்கிற்று!
தன் கோணைக்காலை இழுத்துக்கொண்டு சோலை நாள் முழுக்க நடந்து சொர்க்கபுரி வனத்திற்குள் நுழைந்தது. அப்போது இருளும் சூழ்ந்துவிட்டது. கிளியானது சோலையிடம், ‘எசமானரே! போதும் உங்கள் பயணம். எனக்கு இனி இரவில் கண் தெரியாது! உங்களைத் தொடர்ந்து வரமுடியாது. எங்கேனும் மரத்தில் தங்கி நாம் ஓய்வெடுத்துவிட்டு விடிகாலையில் பயணம் செய்வோம்!’ என்று சொல்லவும் சோலை மாமரம் ஒன்றில் மேலே தாவி ஏறி வாகான கிளையொன்றில் சாய்ந்துவிட்டது. கையில் கொய்யாச்செடியை அது விடவில்லை. கழுகும், கிளியும் மற்றொரு கிளையில் அமர்ந்து கண்ணை மூடின.
விடிந்து வெகுநேரம் கழித்து கண்விழித்த சோலை தன் கையில் பிடித்திருந்த கொய்யாச்செடியில் பிஞ்சுகள் இருப்பதைப்பார்த்தது. நேற்று சோலை கையில் பிடித்து இதைக்கொண்டு வருகையில் செடியில் எந்தக் காய்களுமில்லை. சரியென மாமரத்தின் கீழே பார்த்தது. மரத்தின் அடியில் ஒரு பெரிய கரடி நின்றுகொண்டிருந்தது. அதனிடம் கழுகானது தன் குரலில் எதையோ சொல்லிக்கொண்டிருக்க, அந்த கரடி கழுகிடம் கைகட்டி கெஞ்சிக்கேட்டுக்கொண்டிருப்பது போல சோலைக்கு தெரிந்தது. பின்னர்தான் சோலைக்கு கழுகானது கரடி பாஷை அறிந்தது என்ற விபரத்தை பாட்டி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அருகிலிருந்த கிளையில் அமர்ந்திருந்த கிளியானது, ‘எசமான்! அந்தக்கரடிக்கு உங்கள் கழுகு தேவைப்படும் போல தெரிகிறது.’ என்றது.
“அந்தக்கழுகை அதனிடம் கொடுத்துவிட்டு நான் என்ன சும்மா போவதா கிளியே? பாட்டி எனக்காக உங்களை கொடுத்திருக்கிறாள் தெரியுமா! எனக்கான அதிர்ஷ்டம் நீங்கள் தான்!”
“எல்லாம் சரி தான் எசமானரே! முதலில் நீங்கள் மரத்தை விட்டு கீழே இறங்குங்கள்! என்னவென விசாரிப்போம்!” என்று சொன்ன கிளி நேராக மரத்தடியில் வந்து இறங்கிற்று. அந்த கரடியோ கிளிக்கும் ஒரு வணக்கம் வைத்தது. ‘காலை வணக்கம் கிளியாரே!’ என்றது. பின்பாக கையில் கொய்யாச்செடியுடம் இறங்கிய குரங்காரைப்பார்த்தும் வணக்கம் வைத்தது.
“காலை வணக்கம் சோலைக்குரங்காரே!”
“என் பெயர் எப்படி உனக்குத் தெரியும்?”
“இதோ.. இந்த கழுகார் தான் சொன்னார் சற்று முன்பாக! நான் இந்த சொர்க்கபுரி வனத்தில் எலும்புமுறிவுக்கு சிகிச்சை செய்யும் வைத்தியன் சோலைக்குரங்காரே! வயதாகிவிட்டதால் என்னால் முன்பு போல மூலிகைகள் தேடி இந்த வனத்தில் சுற்றமுடிவதில்லை. போக எங்கே மலைத்தேனீக்கள் கூடு வைத்திருக்கின்றன? என்பதையும் அறிய முடிவதில்லை. உங்களுக்கு பின்னங்கால் பிசகி வளைந்துவிட்டதாய் இந்தக்கழுகார் கூறினார். அதை நான் ஒருமணி நேரத்தில் சீராக்கிவிடுவேன். பதிலாக உதவியாய் இருக்க இந்த கழுகாரை எனக்குத் தாருங்கள்! உங்களுக்கு புண்ணியமாய்ப்போகும்!’’ என்று கரடியார் சொல்லி வணங்கி நின்றார்.
ஆமாம்! இந்த கோணைக்காலை வைத்துக்கொண்டு மற்றவர்களால் ஏளனத்திற்கு உள்ளாகிறேனே! இதை சரிப்படுத்துவதால் பிற்காலத்தில் நல்லது தானே! என்று யோசித்த சோலை, கரடியாருக்கு சம்மதம் தெரிவித்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த கரடியார் பத்து நிமிடத்தில் சோலைக்குரங்காருக்கு அதே இடத்தில் வைத்தியத்தை ஆரம்பித்துவிட்டார். வைத்தியம் ஒருமணி நேரம் சோலையாருக்கு நடந்தது. பின்பாக கரடியார் குரங்காரை எழுந்து நடக்கச்சொன்னார். சோலை எப்போதும் போல எழுந்து குடுகுடுவென ஓடிப்பார்த்தது. பின்னங்கால் சீராகிவிட்டதே! யாரும் இனி கோணைக்காலன் என்று கூப்பிட மாட்டார்கள்! ஆஹா!
“கரடியாரே! நீங்கள் மாபெறும் வைத்திய நிபுணர் தான் போங்கள்! இதோ நீங்கள் கேட்டபடி என் கழுகுப்பயலை உங்களுக்கு காணிக்கையாகத் தருகிறேன்!” என்று சொல்லி கழுகாரை கரடியாருக்குக் கொடுத்து விட்டு மகிழ்ச்சியாய் வனத்தில் பிரயாணப்பட்டது சோலை. ஒருமணி நேர பிரயாணத்திற்குப்பிறகாக ஒரு மரத்தினடியில் அழகான வெள்லைநிறக்குதிரை ஒன்று சோம்பலாய் கிடக்கவே அருகில் சென்று பார்த்தது சோலை. அந்தக்குதிரையின் கண்கள் மூடியிருந்தது. வாய் திறந்திருக்க மூக்கில் சுவாசம் வந்துகொண்டிருந்தது. ‘குதிரையே! உனக்கு என்னவாயிற்று?’ என்று சோலையின் தோளின்மீது அமர்ந்திருந்த கிளி கேட்டது. லேசாய் கண்விழித்துப்பார்த்த குதிரை மிக மெதுவாய் கனைத்துக்காட்டியது.
“இந்தக்குதிரைக்கு இப்போதைக்கு தண்ணீர் காட்டினால் கொஞ்சம் சுறுசுறுப்பாகிவிடும் எசமானே!’ என்றது கிளி.
“இந்த வனம் எனக்கு புதியது கிளியாரே! தண்ணீர் இருக்குமிடம் எங்கே என்று நான் தேடுவேன்! நீ தான் சிறகுகள் வைத்திருக்கிறாய்.. பறந்து சென்று நீர்நிலை எங்கிருக்கிறது என்று பார்த்து வா!” என்றது சோலை. ‘அப்படியே செய்கிறேன்!’ என்று கூறிக்கொண்டு கிளியார் பறந்து சென்றார். குரங்கு, குதிரையின் முகத்தருகில் அமர்ந்தது. தன் கையிலிருந்த கொய்யாச்செடியை கீழே வைக்கையில் அதன் கிளைகளில் பழுத்த நிலையில் கொய்யாக்கனிகள் பதினான்கு இருப்பதைப் பார்த்தது. கொய்யாப்பழ வாசனையை நுகர்ந்த குதிரை செடியை நோக்கி நாவை நீட்டவும்.. சோலை அதன் கனிகளைப்பறித்து குதிரைக்கு வாயில் திணித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் தலையை உயர்த்தி பழங்களை சாப்பிட்ட குதிரையானது பதினான்கு பழங்களையும் சாப்பிட்டு முடித்தது. பறந்து சென்ற கிளியாரும் திரும்ப வந்திறங்கினார்.
‘எசமான், இங்கிருந்து கிழக்கே கொஞ்சம் தூரத்தில் ஒரு குளமிருக்கிறது. அங்கே நிறையப்பறவைகள் இருக்கின்றன. அங்கே உங்கள் இனத்தைச்சேர்ந்த பெண்கள் சிலர் குளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
“எது என் இனத்தைச்சேர்ந்த பெண்களா?” என்றது சோலை.
“ஆமாம் எசமானரே! ஒரு ஏழெட்டுப்பேர்கள் இருப்பார்கள். அவர்கள் உண்பதற்கான பழவகைகளும் குளக்கரையில் இருந்தன. சில பழவகைகளை நான் கண்ணால் கூட முன்பாக பார்த்ததேயில்லை. அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதால் நான் இரண்டு பழங்களை கொத்திச் சாப்பிட்டுவிடலாமா? என்றுகூட யோசித்தேன். திருட்டுப்பழக்கம் ஆகாது என்பதால் ஆசையை அடக்கிக்கொண்டு திரும்ப வந்துவிட்டேன்!” என்றது கிளி.
குதிரை ’கொஞ்சம் தூரத்தில் குளம் இருக்கிறது’ என்ற கிளியின் குரல் கேட்டு ஓரளவு தம் கட்டி எழுந்து நின்று தன் உடலை சிலிர்த்துக்கொண்டது. ஒரு கனைப்பையும் போட்டது.
“முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் போல குதிரைக்கு கொய்யாக்கனி கொடுத்த வள்ளல் சோலையப்பன் வாழ்க!’’ என்று குதிரை சொன்னது.
“குதிரையாரே! ஏன் அப்படி உடல்நலக்குறைவு போல இந்த இடத்தில் படுத்துக்கிடந்தீர்கள்? இப்போது பார்த்தால் உங்கள் உடலில் ஒன்றுமில்லாதது போல சுகமடைந்து நிற்கிறீர்களே!” என்று கிளியார் கேட்டார்.
“எனக்கு திருக்கல் வியாதி இருக்கிறது. நன்றாகத்தான் இருப்பேன். மாதத்தில் இரண்டுமுறையேனும் இப்படியாகிவிடுகிறது. முதலாக இந்தத் திருக்கல் வரும்முன் தலைக்குள் யாரோ ஓடுவது போலிருக்கும். அப்படியே எந்த இடமாயினும் நின்றுவிடுவேன். ஒரு பத்து நிமிடம் போல எனக்கு நினைவு இருக்காது. பின்னர் சரியாகி விடுவேன்.”
“இந்த சொர்க்கபுரி வனத்தில் கரடி வைத்தியர் இருக்கிறாரே குதிரையே! அவரிடம் நீங்கள் உங்கள் வியாதியைப்பற்றி சொல்லலாமே! உங்களுக்கு காக்காவலிப்பாக இருக்கும்!”
“இல்லை. எனக்கு அந்த வலிப்பில்லை. கரடியாரையும் பார்த்தேனே! அவர் இந்த வியாதியை இதுவரை கேள்விப்பட்டதேயில்லை என்று சொல்லிவிட்டார். குறுநகரில் இதற்கு மாத்திரை வில்லைகள் தருகிறார்களாம். தினமும் காலம் முழுசும் மாத்திரை விழுங்க வேண்டுமாம். அங்கே நான் சென்றால் சர்க்கஸ்காரர்கள் யாரேனும் பிடித்துப்போய் வித்தை பழக்கி கூண்டினுள் நிற்கவைத்து விடுவார்களென பயமாய் இருக்கிறது!”
“சரி நாம் குளக்கரைக்கு செல்வோமா?” என்றது கிளி.
“சோலைக்குரங்காரே, என் முதுகில் ஏறுங்கள்.. இதற்கும் முன்பாக குதிரைச்சவாரி செய்திருக்கிறீர்களா?”
”அதென்ன சூத்திரமா? இதோ!’’ என்று சோலை குதிரையின்மேல் தாவி ஏறிக்கொள்ள அவர்கள் குளம் நோக்கி புறப்பட்டார்கள். இவர்கள் குளக்கரைக்கு வருகையில் கிளியார் சொன்னது போலவே அழகழகான குரங்குப்பெண்கள் குளித்து முடித்து அங்கிருந்து புறப்படும் ஆயத்தத்தில் இருந்தார்கள். ’அவ்வளவுதான் உங்கள் அதிர்ஷ்டம் சோலைக்குரங்காரே! இவர்கள் கிளம்பிவிட்டார்கள்!’ என்று கிளியார் பேசவும், பெண்கள் கூட்டத்திலிருந்த ஒரு குரங்குப்பெண் ‘இதென்ன கிளி பேசுகிறதே!’ என்று ஆச்சரியப்பட்டு, ‘நீ பேசும் கிளியா?’ என்று கேட்டாள்.
“இதற்கும் முன்பாக நீங்கள் பேசும் கிளியை பார்த்ததேயில்லையா? தமிழ் தான் மூத்த மொழி! வேறு மொழிகள் எனக்குத்தெரியாது!” என்று கிளி பேசியது.
“எனக்கு இது ஆச்சரியம் தான் கிளியே! சரி இந்தக்குரங்கார் எதற்காக கையில் அந்த செடியை பிடித்தபடியே குதிரைமேல் அமர்ந்திருக்கிறார்? பிறக்கையிலேயே கையில் செடியுடன் பிறந்தவரா? இந்த வனத்தில் தான் என்னவென்ன அதிசயங்களை இன்றைய நாளில் நான் காணவேண்டியிருக்கிறது! அதிலும் இந்த வெள்ளைக்குதிரையை இன்றுதான் பார்க்கிறேன்! எங்களுக்கு நேரமாகிவிட்டது. நீங்கள் சாவுகாசமாய் குளித்துவிட்டு கிளம்புங்கள். நாங்கள் புறப்படுகிறோம்!” என்று குரங்குப்பெண்கள் கூட்டம் கிளம்பிற்று அங்கிருந்து.
சோலையாரும், குதிரையாரும், கிளியாரும் குளத்தில் மகிழ்ச்சியாய் குளியல் போட்டார்கள். குளத்திலிருந்த தண்ணீர் தேன் போல இனித்தது. வெகுநேரம் குளத்தினுள்ளேயே கிடந்தவர்கள் பின்பாக கரையேறினார்கள். அவர்களை அழைத்துப்போக குரங்கார்கள் இருவர் அங்கே வந்து சேர்ந்தார்கள்.
“எங்கள் தலைவருடைய பெண் உங்கள் மூவரைத்தான் இங்கே சந்தித்தார்களா? உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். எங்களோடு புறப்படுங்கள் மூவரும். உங்களை கையோடு அழைத்துவர உத்தரவிட்டிருக்கிறார் எங்கள் தலைவர் மாமுனிக்குரங்கார். குரங்குக்கூட்டத்தின் பாதுகாவலர்!” என்று ஒரு குரங்கார் சொல்ல, சோலை மறுப்பேதும் சொல்லாமல் அவர்களோடு குதிரையில் கிளம்பியது.
இவர்கள் கால்மணி நேர பிரயாணம் செய்து அந்த வனத்திலேயே மிகப்பெரிய ஆலமரத்தை வந்தடைந்தார்கள். அங்கே இருபுறமும் வரிசை போட்டு இவர்களை வரவேற்றன குரங்குக்கூட்டம். அவைகள் அனைத்துமே நின்றவாக்கில் கைகளை தட்டியபடி சோலையாரை வரவேற்றன. இறுதியாய் மாமுனிக்குரங்காரின் முன்பாக குதிரை சென்று நிற்கவும் சோலையார் குதிரையிலிருந்து கீழே குதித்தார். பின்பாக மாமுனியாருக்கு ஒரு வணக்கம் வைத்தார். அவர் அருகில் குளத்தில் பார்த்த அழகிய குரங்கி நின்றிருந்தாள்.
“சோலையாருக்கு என் வந்தனங்கள்! இதோ என் அருகில் இருப்பவள் என் கடைசி மகள் மல்லி. இவளுக்கு அதிசயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உங்களுடன் இருப்பது பேசும் கிளியாம். நீங்கள் பிறக்கையிலேயே கையில் செடியுடன் பிறந்தவராம். உங்கள் குதிரை தேவலோக குதிரையாம் என்று மகள் சொல்கிறாள். அப்படியா?”
“அப்படியெல்லாம் இல்லையே! தமிழ் எனக்கு உயிர் மூச்சு.. தமிழ் என் மூதாதையர் மொழி! அதனால் நான் தமிழில் பேசுகிறேன். சோலையார் என் எசமான். இந்தக்குதிரை தேவலோக குதிரையல்ல. இந்த வனத்தில் நாங்கள் பார்த்து எங்களோடு சேர்த்திக்கொண்ட புதிய நண்பர். என் எசமான் கையிலிருக்கும் செடி கொய்யாச்செடி. அது தினமும் பதினான்கு பழங்கள் தரும் வல்லமை பெற்றது.” என்று கிளியார் விளக்கம் அளித்தார்.
“சரி இருக்கட்டும். என் மகள் மல்லி உங்கள் எசமானர் சோலையாரை மணந்துகொள்ள ஆசைப்படுகிறாள். அவருக்கு சம்மதமா? என்று கேட்டுச்சொல்கிறீர்களா?” என்று மாமுனிக்குரங்கார் கேட்டார்.
“திறமையும் அழகும் ஒருங்கே பெற்ற உங்கள் மகள் மல்லியை மணந்துகொள்ள என் எசமானர் என்ன.. நானேகூட சம்மதம் சொல்லிடுவேனே! அதோ பாருங்கள்.. என் எசமானர் வெட்கப்புன்னகை பூக்கிறார்” என்று கிளியார் சொல்லவும், அங்கிருந்த குரங்குக்கூட்டம் மகிழ்ச்சியில் கைதட்டி சிரித்தன!
000
