எங்கே யாரிடம்

போய் கேட்பேன்

வேப்பம் மர இலை உருவி

அம்மியில்  அரைத்து

வாரத்திற்கு ஒருமுறையேனும் 

உருண்டை பிடித்து

கொஞ்சம்  சக்கரையோடு 

என் வாய் துருத்தி ஊட்டி

நோய் துரத்திய பழைய

பால்ய அம்மாவின் நினைவுகளை

இப்பொழுதெல்லாம்

வாசலுக்கு வாசல்

முளைக்க தொடங்கிருக்கின்றன 

ரோஜா செடியும் அரளி பூவும் ,

*

எப்பொழுதே

நாம் பேசிக்கொண்டது போல் இருக்கிறது நினைவு

இப்பொழுதும்

பேசிக்கொள்கிறோம்

நான் யார் என்பதையும் நீயும் 

நீ யார் என்பதையும் நானும் மறந்து மறதி நோயினால்

ஆட்கொண்டு ,

பேசும் நம் இருவரின்

மீதும் பூவை தூவுகின்றன

நஞ்சவட்டான் மரங்கள் 

அப்பொழுதும் போல்

இப்பொழுதும்  பேசிக்கொள்கிறார்கள்

பூங்காவை பூட்டுவதற்கு

இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கிறதென்று ,

*

யாரிடமும் சொல்லாதீர்கள்

மழை வேண்டி

கிடா வெட்டுகிறோம் யென்று

என் தாய் அழுவது போல் அழத்தொடங்கிடும்

அதன் தாயும் அழத்தொடங்கிடும்

கோவிலின் வாசலெங்கும்

கண்ணீர் ஆறுகளின் ஊற்று ,

*

பகல் நிலா

பள்ளிலிருத்துக்கொண்டு

பாசாங்கு காட்ட

ஒண்டி நிற்க நிழலில்லாமல்

தன் நிழலில் ஓடி நிற்க

அகல விரிய தொடங்கும்

சாலையின் இருபுறமும்

தழைகளற்ற மொட்டை மரங்களாய்   வெட்டி சாய்க்க

சாமத்து குடுகுடுப்புகாரன்

வாசல் தோறும் கூவ

குண்டி கழுக நீரில்லாமல்

கண்ணீரால் கழுவ

வா வா யென்று

அழைக்கிறது குழந்தைகள்

வரைந்த தொடங்கும்

மர ஓவியங்கள்

உயிரோவியமாய் ,

*

வண்டி

வண்டியாக பூக்கள்

சூடிக்கொள்ள மனமில்லை

கனவில் அமங்கலி‌ அவதாரம் ,

*

தொலைவதென்று

முடிவான பிறகு

உயிர் விடுதலைவிட வேறென்ன

இருக்க போகிறது

இப்பிரபஞ்சத்தில்

வா அதற்குள்ளாவது

ஒரு முத்தத்தை

கொடுத்துவிட்டு இறந்து போகலாம்

*

அது யாராக

இருக்கக்கூடும்

நிழலா

நினைவா

பக்கத்து அறைக்குள்ளிருந்து

ஜன்னல் வழியாக

கையசைத்து

சாப்பிட்டியா யென கேட்கிறது

தலைவிரி கோலத்துடன்

நீண்ட பற்களுடைய

ஓர் வயதான

தாயொருத்தியின் பிம்பம்

நானுமாய் கையசைக்கிறேன்

அடி வயிற்றை பிசைய ஆரம்பிக்கிறது

இருவருக்குமான பசி ,

*

எதை எதையோ

சொல்லி தேற்றினாலும்

பசிக்கிறது யென்று

தன் தாயின் முலை காம்புகளை

தேடும் சிறு குழந்தையின் பசியை

எதைக் கொண்டு தேற்றிட முடியும்

அழுவாதே யென்று தேற்றும் ஒவ்வொருவரின்

கைகளிலும் நீளமாய் முளைத்திருக்கிறது

அன்பின் பால் சுரக்கும்

முலை காம்புகள் பத்து ,

*

அரை கம்பத்தில் பறக்கின்றன

சேரியிலுள்ள கட்சி கொடிகள்

பறை முழங்க

பட்டாசு சிதற

பூ பல்லாக்கிள்

ஊர்வலம் போகிறது பிணங்கள்

நானும் நீயுமாய்

கூட்டத்தோடு கூட்டமாய் போகிறோம் நீயும் ஓர் பிணமாய் நானும் ஓர் பிணமாய்

உங்கள் விழிகளிலே எரிந்து  சாம்பலாகிறது  சேரி  பிணங்கள்

வேறு என்ன செய்து

மாற்றிட போகிறோம் ஆதிக்கத்தை கூணி குறுகிய எங்கள் தேகமே

உங்களை எரிக்கும்

நூறு சுடுகாடுகள் ,

*

நீண்ட நேரமாய்

பகலிலும் எரியும்

காமாட்சியம்மன் விளக்கு

எண்ணெய் கொண்டு

திரி துருத்தி பிரகாசமாக

படரும் வெளிச்சம்

சவப்பெட்டியில் தூங்குகிறது

நாளைய தன்

மகன் மகளுக்கான

நீண்ட கனவுகள்

நிறைவேறாமலே ,

*

எதையாவது

பேசி சிரிக்க வைக்கும்

உன் பூ முகம் வாடிப்போய்

வாஞ்சையாய் கிடக்கிறது

கண்ணாடி பேழைக்குள்

மூச்சு முட்ட

நீ உதிர்த்த வார்த்தைகள்

வலி கொண்டு அடிக்கிறது

என் மன கூடுக்குள்

வா கொஞ்சம்

நேரம் பேசலாம்

மீண்டும் எப்பொழுது

பார்க்க போகிறோம் உன் பூ முகம்

அழுதபடியே வீற்றிருக்கிறார்

வீர அய்யனாரப்பன்

என் சேரி முச்சந்தியில் ,

*

எரிவது

என் சேரியாகவே

இருந்துட்டு போகட்டும்

கற்பூரம் இல்லாத

இக்கலியுக காலத்தில்

ஆகாய சாமியாவது

அழுது தன் கண்ணீரை

தண்ணீராக பொழிந்து

அஸ்தமனம் ஆக்கட்டும்

எரியும் எங்கள்

நெஞ்செனும் குடிசைகளை ,

*

பீரிட்டு அழும் குழந்தை

அறுக்கப்பட்ட மார்பகங்கள்

வயிற்றில் பசி நோய் ,

வா முத்தமிட்டு

கொள்ளலாம் என்றேன்

அங்கும் இங்குமாய்

பார்த்தவாறு ஓர் முத்தத்தை பரிசளிக்கிறாள் (கனவு)

இப்பொழுது

நான் முத்தமிட தொடங்குகிறேன்

“சீ சீ தள்ளி போய் படுயா

காலையில ஆறு மணிக்கே

எழுந்து  ஊடு வாசல் கழுவுனும் நாளைக்கு வெள்ளிக்கிழம மாரியாத்தாலுக்கு

கூழ் ஊத்தனும்

விரித்து போடப்பட்ட

கோரை பாயெங்கும்

நெளிந்து சாகிறது

ஓர் முத்ததிற்கான நீட்சி.

++

ச.சக்தி

புன்னகை இதழ், கொலுசு இதழ், வாசகசாலை இணைய இதழ், ஆதிரை இதழ், புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன

என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது ‌,

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *