01, கனவு மழை
மழை வருகிறதென்று
திரும்பி படுக்கிறேன்
கனவிலிருந்து வெளியேறுகிறது மேகம்,

02, நிலா
நீயும் நானுமாய்
அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்
நீ ஒருவரிடமும்
நான்வேறு ஒருவரிடமும்
பேசுவதை தவிர வேறு
ஏதேனும் செய்திட முடியுமா
நம்மால் இப்பொழுதுக்கு ,
பரந்து விரிந்த
அந்த நீல வானத்தில்
இரவில் எப்பொழுதும்
ஒரே ஒரு நிலா தான் ,

03, உழைப்பு
கணக்கு புத்தகத்தின் நடுவே
மறைத்து வைத்திருக்கும்
மயிலிறகு போலவே
மறைந்திருக்கிறது
அப்பாவின் நினைவுகளை
சுமந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கும்
மகனின் அகப்புத்தகம்
விலை சற்று அதிகம்
அவரின் உழைப்பு

04, கனவு
தூக்கம் வராமல்
இந்த பக்கம் திரும்புவதும்
அந்த பக்கம் திரும்புவதா
இரண்டு பக்கமும் திரும்புவதுமாக புரண்டு புரண்டு படுக்கிறேன்
மீதி இருக்கும்
இரண்டு பக்கமும்
புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கிறது கனவு

05, நினைவு ,
எத்தனை
எத்தனையோ
முறையேனும் வீடு மாற்றினாலும் வாழ்ந்த பழைய
வீட்டின் நினைவுகளை
அசைப்போட வைக்கிறது
புது வீட்டின் நுழைவு
வாயில் பூத்திருக்கும் அரளி பூ ,

06,
ஏவ் எப்போதும் போல இன்னிக்கும்
நீ குடிச்சிட்டு வந்திருக்கிறாயா
ஆமாம் டி
இன்னிக்கும் நா குடிச்சிட்டு
தான் வந்திருக்கேன்
“யாயா படுபாவி இப்படி
தெனமும் குடிச்சிட்டு
வந்தேனா உடம்புக்கு
என்னையா ஆகுறது
நீ பட்டுனு
நாக்கு வறண்டு
செத்து தொலைஞ்சிட்டனா
எங்களுக்குனு
யாருயா இருக்கிறாங்க…?
வானம் கூரையின்
வாசலைபார்த்துக்கொண்டிருக்க
குடித்து குடித்து குடல் சுருங்கி
செத்து போன அப்பாவின் கண்கள்
எண்ணிலடங்கா நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டியிருந்தது
அய்யோ பாவி மனுஷா
இப்படி எங்கள அனாதையா
விட்டுட்டு போயிட்டியே யென
நீளும் அம்மாவின்
ஒரே ஒரு ஒப்பாரியில்
ஓராயிரம் கண்கள் கலங்க தொடங்கியது வானம் இன்னும்
பார்த்துக்கொண்டே
இருக்கிறது
கீழ் இறங்கி வராமல் ,

புன்னகை இதழ், கொலுசு இதழ், வாசகசாலை இணைய இதழ், ஆதிரை இதழ், புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது ,