அப்பாவின் உடல்

ஆடாமல் அசையாமல்

அசதியால் உறங்கிக் கொண்டிருக்க

நாங்கள் தான் ஆரவாரம்

செய்து அழுது புலம்பி ஊரையே

எழுப்பிக் கொண்டிருக்கிறோம்

*

பெயர்பலகை 

இல்லாத ஒரு சிறிய கிராமம்

தம்பி காலனிக்கு

எந்த தெரு வழியாக

போகலாமென்று கேட்க

தான் அணிந்திருந்த

காலணியை நோட்டமிட்டவாறே செட்டியார் வீட்டு

கடைசி தெரு வழியாக

போகலாமென்று அவன் கூற

என் பாதங்களை தலையில் தூக்கி

வைத்துக்கொண்டே

தான் நடந்தேறுகிறேன்

ஒவ்வொரு முறையும்

அந்த ஊர் தெருவை கடந்து

என் சேரிக்கு

போகும் பொழுதெல்லாம் ,

*

வண்ணங்களால் மின்னும்

அந்த புதிய சுவரெங்கும்

புலியை வரைவதும்

யானையை வரைவதும்

சிறுத்தையை வரைவதும்

குரங்குகளை வரைவதும்

இப்படியே

விலங்குகளை

வரைவதே வாடிக்கையாக

கொண்ட என் மகளுக்கு

எப்படி புரிய வைப்பேன்

நீ வரைந்ததையெல்லாம்

தாங்கி நிற்கும்

இந்த சுவருக்கு பின்னால் தான்

அப்பொழுது

ஒரு  காடு இருந்ததென்றவாறு ,

*

மலம் சுமக்கிறேன்

உன் பிணம் சுமக்கிறேன்

நீ பசியாற சோறு சுமக்கிறேன்

நெல் சோறாக  வேக

விறகு சுமக்கிறேன்

உனக்காகவே எல்லாம் சுமந்த

என் உடல்களை

தூக்கிக்கொண்டு போகிற

பாதங்களை

சுமக்கவே மறுக்கிறது

உன் வீட்டு

தெருவு வழியாக

சுடுக்காட்டிற்கு போகிற

அந்த ஒத்தையடி பாதை ,

*

பள்ளியில் ஆசிரியர்

அடித்ததை அப்பாவிடமும்

அம்மாவிடமும் சொல்லி

முடிக்கையில் அக்காவும்

ஒரு அடி அடித்து சிரிக்கிறாள்

நீ என்

புத்தகத்தை

எடுத்துட்டு போனா

அடிக்காமா

கொஞ்சுவாங்காளென்றவாறு ,

*

பத்து ரூபாய்

கேட்ட தன் மகளிடம்

ஐந்து ரூபாயை

கொடுத்து

பள்ளிக்கு போயிட்டு

வா யென

கையசைத்தவாறு

வழியனுப்பி

வைக்கிறார் அப்பா

ஒன்றுக்கு 

இரண்டு மூன்று முறையாவது

திரும்பி திரும்பி

பார்த்தவாறே

ஐந்து ரூபாய்நாணயத்தை

தடவியவாறே

வகுப்பறைக்குள்

நுழைகிறது

புன்னகையால் மிளிரும்

மகளின் பூ முகம்,

*

ஒரு குவளை

தண்ணீரை யெடுத்து

இரண்டு குவளையாக பிரித்து

ஒரு குவளை தண்ணீரை

எனக்கு ஊற்றுகிறான்

குடித்து விட்டு

மீண்டும் ஊற்றென ததும்புகிறேன்

இன்னும் தீர்ந்தபாடில்லை

இரட்டை குவளைகளின் தாகம்.

***

ச.சக்தி

பண்ருட்டியில் அழகு பெருமாள் குப்பம் சார்ந்த படைப்பாளர். கவிதைகள் எழுதிவருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *