மராட்டிய பெயர்களை நினைவில் வைப்பதும் விளிப்பதும் இப்போதும் திகைப்பாகத்தான் இருக்கிறது. மும்பை வந்து இருபத்திரண்டு ஆண்டுகளாகி விட்டது என்றாலும் இன்று வரை இதுதான் நிலைமை.
பணியிடத்தில் எங்கள் பிரிவு ஊழியர்கள் பத்து பதினைந்து நபர்களின் பெயர் தவிர மற்றவர்களை குறிப்பிடும் போது “அரே ஓ…. லம்பூ வாலா, கோரா – கோரா என அடையாளங்களையோ அல்லது அவரோட சொந்த ஊர் கூட ஜல்காவ்…” என குறிப்பிடுவனே தவிர அந் நபரின் பெயர் தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோரை முகப் புன்னகையுடன் பரிச்சயம்! பார்த்தால் நட்பாகப் புன்னகைப்பார்கள் – நானும், பெயரைக் கேட்டால் தெரியாது!
‘கத்தாலே – மாத்ரே’ என்ற பெயர்கள் வினோதமானவை என்றாலும் அவைகள் நினைவிலிருக்கும்! ‘மாதே’ என்ற பெயரை ‘மகாதேவ்’ என வருடக்கணக்கில் விளித்திருந்திருக்கிறேன். ‘அரே அண்ணாஜீ ஐசா நை….எங்கே சொல்லு’ மாதே’ எனத் திருத்தினான் அந்த நண்பன் .
வந்த புதிதில் மனம் முழுவதும் மராட்டிய ஆர்வம் கொப்பளிக்க – எளிமையான வார்த்தைகளால் வாக்கியம் கட்டி, பேசவும் – பேச முயற்சித்தும் கொண்டிருந்தேன். சாப்டாச்சா? என கேட்கவேண்டும். உணவிற்கு மராட்டியில் ‘ஜெவ்வன்’! ‘ஜெவ்லா கா?’ எனக் கேட்டிருக்க வேண்டும் .
நான் தவறி எப்படி உச்சரித்தேன் என்பது நினைவில் இல்லை. திலீப் ஹல்தன்கர் விழுந்து விழுந்து சிரித்தான்! வயிற்றைப் பிடித்துக்கொண்டபடி – கண்களில் கண்ணீரோட, அவனால் முடியவில்லை. மெஷினின் பேனல் போர்டை பிடித்துக்கொண்டான்.
யோகஷிடம் போய் நடந்ததைச் சொன்னேன்.’ அரே பாப் ரே பாப்’ என தலையில் கையை வைத்துக் கொண்டான். ‘நீ என்ன கேட்ட தெரியுமா?, இங்கே வா … ‘ என காதில் சொன்னான். இப்படி ஒரு அர்த்தமா? எனக்கே அவமானமாகப் போய் விட்டது. அன்றிலிருந்து மராட்டிய மொழி முயற்சியை கைவிட்டேன்.
எனவே ஒவ்வொரு கடினமான பெயர்களையும் நினைவில் வைக்க நானே அவைகளுக்கு ஈடாக தமிழ் பெயர்களை சூட்டி கொண்டேன்.’ விநம்ர தண்டவதே’ என்ற பெயரை தண்டபாணியாக்கி விட்டேன்.
‘ராஜ்வீர்’ என்ற பெயரை ‘வெற்றிவேல் ‘ஆக்கிக் கொண்டேன். ‘அரே ஓ வெற்றிவேல் கோ தேக்கா க்யா? ‘ எனக் கேட்பேன். நண்பர்களும் சிரித்தபடியே ‘அவன் இப்பதா வாஷ்ரூம் போனான்’ எனச் சொல்வார்கள்.
‘ஜிதேந்திர பைட்கர்’ என்ற பெயரில் ஒருவன், அவனுக்கு நானிட்ட பெயர் ‘wide ball ‘!
சிலரைப் பார்த்தாலே பிடிக்காது தானே, அந்தப் பட்டியலில் ‘வைட்பால் ‘ முதலில் வருவான்! இருகாதிலும் கொத்தாக மேல் நோக்கிய படிக்கு முடி, எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்பது போல ஒரு முகம், சாதாரணமாக பேசினாலே சண்டையிடுவது மாதிரியான ஒரு குரல். இந்த வைட்பால் ‘மெட்டீரியல் மூவ்மெண்ட் – ற்காக இருக்கும் ஒரு பேட்டரி வண்டியின் (forklift) டிரைவர். எங்கள் செக்ஷனில் மட்டுமல்ல அனைத்து செக்ஷனிலும் முடிந்திருக்கும் பணிகளை அடுத்த செக்ஷனுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது அவனது பணி.
“ஓ….பைட்கர் இஸ்கோ ஜரா க்ரைண்டிங் செக்ஷன் மே தே தேனா” என சொல்லிவிட்டு அவனைப் பார்ப்பேன் .
இதற்கு அவன் என்ன பதில் தருவான் என்பதும் எனக்கு அத்துப்படி! எனக்கு இன்னும் நாலு ‘மூவ்மெண்ட்’ இருக்கு அது முடியட்டும் வருகிறேன் என்றோ அல்லது இப்ப முடியாது தோடா ருக்னா படேகா , அதுவுமில்லையா கையால் ஆசி வழங்குவது போல செய்வான்! (இருக்கட்டும் – இருக்கட்டும் பிறகு )
இதற்குள் அடுத்த டிபார்ட்மென்ட் சூப்பர்வைசர் இன்டர்காமில் “இன்னுமா வரல அரே யார் …ரொம்ப அர்ஜென்ட்” என்பான். மீண்டும் வைட் பாலிடம் “பகூத் அர்ஜெண்ட் ஜரா ஜல்தி ஜானா” என்றால் “எனக்கு என்ன 5 கையா…” இருக்கு? என்பான் .
வெளியே இருந்து வந்தவன்தானே, ‘மதராஸி’ இவன் சொல்லி நாம வேலை செய்வதா? ( மராட்டியர்களுக்கு வெளி மாநிலத்தவர் அவர் அதிகாரியாயினும் – வேலை சொல்லக்கூடாதாம்!) இம்மாதிரியான இடரை உ பி வாலா, பீகாரி, தென்னிந்தியர்கள் என அனைத்து வெளிமாநிலர்களும் எதிர் கொண்டே ஆக வேண்டும். இதில் வெளி மாநில ஒப்பந்த தொழிலாளியா போச்சு – நாயாக விரட்டுவார்கள். !
எங்கள் செக்ஷனின் செல்லீடர்( cell leader ) நான். இந்த செல்லீடர் என்பது பாதி தொழிலாளி – பாதி சூப்பர்வைசர்! தொழிலாளியும் திட்டுவான், மேனேஜ்மென்ட்ம் திட்டுவான். மத்தளம் !
“பாத்தியா இந்த இட்லி வடா தோசா எனக்கு வேலை சொல்றான் ….யேடா – பாகல்…” என தன் சகாவிடம் இந்த வைட்பால் சத்தமாகவே சொல்லிக் கொண்டிருந்தான். நான் காதில் விழாத மாதிரி கடந்து போய் விட்டேன் .
இன்னொரு எதிர் ட்யூட்டிக்கு வரும் ட்ரைவர் சுனில் ( தப்பிப் பிறந்த மராட்டி ) யார் வேலை சொன்னாலும் பேதமின்றி செய்வான்.
எனக்கும் இந்த வைட்பாலிடம் மல்லுக்கட்டி போதுமென்றாகிவிட்டது ! இதற்கு முடிவு கட்ட வேண்டும் என எண்ணியிருந்தேன் .
திங்கட்கிழமை பாதுகாப்பு கமிட்டி மீட்டிங் இருக்கிறது என்பதால் உற்பத்தி தலைமை மேனேஜர் கோபிநாத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் பெங்களூருகாரர் எப்போதும் என்னிடத்தில் கன்னடத்தில் தான் நலம் விசாரிப்பார் , நான் தமிழன் எனத் தெரிந்தும்! ( ‘ஏனப்பா சென்னாக இத்தியா? ஹுடுகி ஏனு மாடுதாளே? எல்லாரு ஒந்து ஜினா மனேஹே பன்றீ பா’ )
அவரிடம் வைட்பால் பற்றி காதில் போட்டால் போதும். புகாராகச் சொல்ல வேண்டாம்.
‘இந்த வைட்பாலை கொஞ்சம் என்னன்னு கேளுங்க ‘என்ற ரீதியில் சொல்ல வேண்டும் என யோசித்திருந்தேன் .
ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை வழக்கமான பரபரப்போடு துவங்கியது .
காலை ஆறேமுக்காலுக்கு பாதுகாப்பு உறுதிமொழி முடிந்ததும் ஒரு சிறிய மீட்டிங் அல்லது எதையாவது சொல்வார்கள். ஒரு சூப்பர்வைசர் இரண்டு ப்ராஜெக்ட்களின் எண்ணை குறிப்பிட்டு 15 தினங்கள் பின்தங்கியபடி செல்கிறது எனவும், சற்று வேலையை துரிதப்படுத்தி அதை ஈடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .
அனைவரும் கலைய மெல்ல ஷாப் ஃப்ளோர் உயிர்பெற்றது. எட்டே முக்காலுக்கு சாய் வந்து போனது. மீண்டும் வேலை துவங்கி ஒரு பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது. ஒரு பெரும் வெடி சத்தம் – அதைத் தொடர்ந்து புகையும் எழுந்தது. எல்லோரும் சத்தம் வந்த திசை நோக்கி விரைந்தார்கள். திடீர் புகையால் ஆபத்துக்கால அலாரம் ஓசை எழுப்பியது. யாரோ ஒருவர் ” விஸ்ஃபோட் ஹோ கயா … ” என இன்னொறுவன் “க்யா ப்ளாஸ்டா? ” என்றபடி விரைந்தார்கள் .
என் கண்முன்னே மிகவும் ஆபத்தான நிலையில் ஓம் பிரகாஷ் ராம் எனும் ஒப்பந்த தொழிலாளி அடிபட்டு கீழே விழுந்திருந்தான். அருகே இரத்தம் தேங்கி கிடக்க துடிக்கிறான். இதற்குள் எச் ஆர் மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி எல்லோரும் விரைந்து வர, இவர்கள் தவிர மற்ற ஊழியர்களும் விபத்திடத்திற்கு வர ….பாதுகாப்பு அதிகாரி ப்ரமோத் சுர்வே அனைவரையும் அவரவர் பணியிடத்திற்கு போகும்படி கேட்டுக் கொண்டிருந்தார் .
ஆம்புலன்ஸ் அலறலோடு வந்து காட்டன் ஸ்ட்ரெச்சரை விரித்து அதில் எடுத்துப் போனார்கள். உடன் ஹெச் ஆர் மேனேஜர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி சென்றார்கள்.
பாய்லர் அழுத்தம் பரிசோதிக்கும்போது வெடித்ததில் அதன் பெரிய மூடி பறந்து கிட்டத்தட்ட ஷாப்ப்ளோரின் மறு கோடியில் வேலை செய்து கொண்டிருந்த ஓம் ப்ரகாஷின் பின்னந்தலையின் ஹெல்மெட் மீது தாக்கியது.
வேலை ஸ்தம்பித்தது .
கனத்த சோகமும் மௌனமும் ஷாப் புஃளோர் முழுவதும் விரவியது .
“முஷ்கில் ஹை….நிறைய ரத்தம் போய்விட்டதால் பிழைப்பது கடினம்” “நிர்வாகம் இதை வேறு விதமாக மாற்றி தப்பித்துக் கொள்வார்கள்…”
மெல்ல தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
ஓம் ப்ரகாஷ் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பழக்கமானவன். ஒப்பந்த தொழிலாளி என்பதால் சுழற்சி முறையில் என் செக்ஷனுக்கு வரும் சமயங்களில் எல்லா பணிகளையும் தட்டாமல் செய்து தருவான் . வேலை முடிந்து விட்டது என்றாலும் கேபின் கண்ணாடியை பளிச்சென துடைத்தபடி இருப்பான் .
ஸர் – ஸர் எனத் துவங்கி நிறைய கேள்விகள் கேட்பான். தினம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 கேள்விகள். ‘ஸர் உங்க மதராஸில் நிறைய யானைகள் இருக்கா? அதை வீட்டில் வளர்ப்பார்களா?’
‘யானையா?? ‘
‘தேக்கோ ஓம்…யானை ஒரு வேளைக்கு 200 கிலோ புல் சாப்பிடும். ஒரு ட்ரம் தண்ணீர் குடிக்கும்… அதை வீட்ல வளத்த முடியுமா ? நீயே சொல்லு’
‘நை ஸாப் , தக்லிப் ஹை‘
அடுத்ததாக ஒரு அருவாளைப் போட்டான் .
‘பெரிய கொய்தா( அருவாள் ) நீங்களும் வீட்ல வச்சிருக்கீங்களா ? ‘
நான் கேட்டேன் ‘அருவாளை நீ எங்கே பார்த்தே? ‘
நாக்கை மடக்கி கடித்துக் காண்பித்து சட்டை காலரிலிருந்து அருவாளை எடுத்தான் .
மேலும் சௌத் கா பிக்சர் மே தனுஷ் ஏன் நாக்கை மடக்கிய படிக்கு கடித்துக் கொண்டிருக்கிறார் எனவும் கேட்டான். !
இன்னொறு தினம் சொன்னான் ….
‘ஸர் எங்க வீட்டு பக்கத்துல ஆப்கா மதராசி மந்திர் இருக்கு முத்து ‘ மரியம்மன்‘ மந்திர் அதில் பண்டிகை காலத்தில் தீ மிதிக்கிறார்கள் . கன்னத்தில் – நாக்கில் குத்திக் கொள்கிறார்கள்’
கையால் குத்திக் காண்பித்தான். ‘அவர்களுக்கு வலிக்காதா’ மேலும்
பெரிய படகை நிறைய பேர் வேகமாக ஓட்டுகிறார்களே பார்க்க அழகாக இருக்கு’ என்றான் .
‘ஓம் அது கேரளாவில் ‘
‘அப்ப கேரள் மதராஸில் இல்லையா ‘
அவனுக்கு ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்தேன்.
‘இங்க பாருப்பா தென்னிந்தியாவில் 4 மாநிலம் 4 மொழி …’
மாநிலத்தின் பெயர் அங்கு பேசும் மொழி என விளக்கினேன் .
‘அப்ப கேரள் அவுர் உங்க ஊர் எவ்வளவு தூரம்?’
‘ம்…. எங்க கோவையிலிருந்து இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் கேரள் போயிடலாம்’
‘எனக்கு ஊட்டி, திருப்பதி பாலாஜி இதெல்லாம் பார்க்கணும்… எவ்வளவு செலவு ஆகும் ஸர்?’
‘ஒரு பத்து நாள் லீவு எடு ஓம், நா ஊருக்குப் போவேன் அப்ப எங்கூடவா சுத்தி பாக்கலாம்’
இன்னும் 24 மணி நேரம் கழித்துதான் சொல்லமுடியும் என்ற தகவல் பதினோரு மணிவாக்கில் வந்தது .
அரைமணி நேரம் கழித்து இறந்து விட்டான் எனப் பேசிக்கொண்டார்கள். ஒப்பந்த தொழிலாளி என்பதால் இரங்கல் செய்தி நோட்டீஸ் போர்டில் போடவில்லை.
“யூனியன்ல மெம்பரா சேர்த்துக் கொள்வார்களாம், ஆனா நோட்டீஸ் போர்டுல போட மாட்டாங்களாமா? உஸ்கீ….மா …கீ “
கண்ணம்வார் நகர் பகுதியின் மெயின்ரோட்டில் இருந்து 100 மீட்டர் உள்ளே தள்ளி இருந்தது அந்த குடிசை பகுதி. மிகவும் அழுக்கான இடமாக தென்பட்டது. நிரந்தர ஊழியர்களுக்கு கம்பெனி குடியிருப்பு தந்திருக்கிறது. ஆனால் ஒப்பந்த தொழிலாளியின் நிலை… அதை வீடு என்று கூட சொல்லமுடியாது. உள்ளே எட்டி பார்த்தேன். பத்துக்கு பத்து ஒரே அறை மேலே சிமெண்ட் ஷீட்- உள்ளே நிமிர்ந்து நின்றால் தலை முட்டும்.
அவன் மனைவியாக இருக்கக்கூடும் அழுது கொண்டிருத்தாள், ஐந்து வயதில் ஒரு சிறுவனும் 3 வயதில் ஒரு சிறுவனும் அவள் அருகில் உட்கார்ந்து அவர்களும் அழுகையோடு. நான்கைந்து பெண்கள் தலைக்கு சேலை முக்காடிட்டு அழுதபடிக்கு உட்கார்ந்திருந்தார்கள். ஓமின் முக ஜாடையோடு ஒரு வயதான மனிதர் அதிர்ச்சியாக எதோ ஒரு டப்பாவின் மேல் உட்கார்ந்திருந்தார் .
வாசலில் ஓம்பிரகாஷ் உடன் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நான்கைந்து பேர் நின்றிருந்தார்கள், உடன் ஒன்றிரண்டு நிரந்தர ஊழியர்களும் .
அங்கிருந்தவர்கள் பாடி போஸ்ட் மார்ட்டம் முடிந்து காட்கோபர் ராஜாவாடி மருத்துவமனையிலிருந்து இப்போது வந்துவிடும் என எதிர்பார்த்திருந்தார்கள் .
டிசம்பர் மாதம் என்பதால் மாலை ஆறுமணிக்கே இருட்டி ரோடில் நியான் வெளிச்சங்களோடு கடைகள் பரபரத்துக் கொண்டிருந்தது . ஒவ்வொரு ஆட்டோவிலும் மூவராக விக்ரோலி ஸ்டேஷனிலிருந்து கோர்ட் வரைக்கும் – அங்கிருந்து மீண்டும் விக்ரோலி ஸ்டேஷனுக்குமாக கறுப்பு ஷேர் ஆட்டோக்கள் விரைந்து கொண்டிருந்தது. எதிரிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் அனைத்து வீடுகளிலும் டிவியில் கிரிக்கெட் மேட்ச் ஒளிர்ந்து கொண்டிருந்தது .
“ஓ பாயீ ஸாப் …ஜரா ஸைட் தேனா… ” பரிச்சயமான குரல் கேட்டு திரும்பினால் வைட்பாலும் இன்னொறு அசெம்ப்ளி ஊழியரும் பச்சை மூங்கில்களோடும் மற்ற சாமான்களோடும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள் .
பரபரவென வேலையை துவங்கினார் பைட்கர். கயிறை நீரில் முக்கி, இரு பச்சை மூங்கில்களை நீளவாக்கில் வைத்து குறுக்காக சின்ன மூங்கில் குச்சிகளை வைத்து ஒரு தேர்ந்த பயிற்சி பெற்ற வேலையாள் மாதிரி கட்டி முடித்தார் .
“ஆம்புலன்ஸ் ஆ கயா என யாரோ குரல் கொடுக்க, பைட்கர் ” இதெல்லாம் முடியட்டும்… நா சொல்றேன்” என்றார்.
அங்கே இறக்கி வைப்பதற்கு இடமுமில்லை.
மூங்கில் கட்டி தயாரானதும் மெல்லிய வெள்ளைத் துணி விரித்து அதன் மேல் குங்குமம் மற்றும் கலர் பொடிகள் தெளிக்கப்பட்டது.
மூன்று கற்களை அடுக்கி அதன்மேல் சிறிய மண்சட்டி வைத்து தீ மூட்டி தண்ணீர் ஊற்றி சிறிதளவு அரிசி போடனும் என அங்கிருந்தவனிடம் சொல்லியபடி அடுத்த வேலைக்கு கிளம்பி போனார் பைட்கர்.
ஆம்புலன்ஸை பின்னால் வரச்சொல்ல – டிரைவரிடம் பேசி கதவைத் திறந்து உள்ளே போய் மிகச்சரியாக இறக்கி, தயாராக இருந்த பாடையில் வைத்தார்கள் .
முகம் மட்டும் பார்க்கும் படியாகவும் உடல் வெள்ளை துணியில் கட்சிதமாக பேக் செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்தது .
வாங்கி வந்திருந்த சுமார் ரக பூமாலைகள் போடப்பட்டது. சிறிய அளவில் கூட்டம் சேர்ந்துவிட்டது .
பெரியவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். கண்ணீரோடு நடுங்கும் கைகளால் மகனின் காலை சில வினாடிகள் பற்றிக்கொண்டு “அரே ஓம்…மேரா பேட்டா“ என்றார் கண்ணில் பெருக்கெடுக்கும் நீரோடு !
பிசைந்த 3 கோதுமை மாவு உருண்டைகள் சடலத்தோடு வைக்கப்பட்டது. ஆதார் கார்டு மற்றும் சான்றிதழ்களை தயாராக வைத்திருந்தார் பைட்கர்.
முன்பே எரியூட்டும் சுடுகாட்டிற்கு தகவல் சொல்லி இருந்தார்கள்.
டாகூர் நகர் மயானம் ஒரு பூங்கா மாதிரி இருந்தது. நிறைய மரங்கள், நந்தியாவட்டை மற்றும் செம்பருத்தி செடிகள் இதனுடன் ஒரு எளிமையான சிவன் சிலையோடு கோவில். மரங்களில் பறவைகள் அடைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே இரு சிதைகள் எரிந்துகொண்டிருந்தது. மூன்றாவது மேடை – ஓமிற்கு தயார் நிலையில் இருந்தது .
ஓமின் புதல்வனை அழைத்து வந்தார்கள். மூன்று முறை சிறுவன் சிதையை வலம்வந்து மண்சட்டி உடைத்து தன் பிஞ்சுக் கைகளால் கொள்ளி வைத்தான் .
விறகுகளுக்கு நடுவில் போடப்பட்டிருந்த டால்டா உருகி சிதை வேகமாக எரிய ஆரம்பித்தது. தணலோடு பெரும் புகை மேலே எழ, மயானத் தொழிலாளி பொத்தானை அழுத்த – லேசான இரைச்சலோடு அத்தனை புகையும் சிம்னி வழியே உறிஞ்சப் பட்டு நீண்ட குழாய் வழியே உயரப் போய் வெளியே வந்தது .
ஓம்பிரகாஷ் ராம் எனும் ஜார்கண்டை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி புகையாய் மும்பையின் காற்றில் கலந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் நின்றுவிட்டு -அனைவரும் அங்கிருந்த குழாய்களில் கை கால் கழுவி ஹால் மாதிரியான இடத்திற்கு நகர்ந்தார்கள் .
அஜீத் பைட்கர் மராத்தியில் பேசினார் “நம் சக தொழிலாளி ஓம்பிரகாஷ் ராமின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோமாக, மற்ற அனைத்து காரியங்களும் வீட்டளவில் செய்யப்படும்” என்ற தகவலையும் சொன்னார்.
மறுதினம் வழக்கம் போல் புதிய தினமாகத் துவங்கியது. உறுதிமொழி முடிந்தது. ஓம்பிரகாஷிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நம் நிறுவனத்திற்கு புதிய ஆர்டர் ஒன்று கிடைத்திருப்பதாகவும் அது ‘எக்ஸ்பிரஸ் ஆர்டர்’ என்பதால் எவ்வளவு வேகமாக முடியுமோ – அதை முடித்துத் தந்தால் மேற்கொண்டு ஆர்டர்கள் வாய்ப்புள்ளது என்றனர்.
எட்டு மணிவாக்கில் முடிந்திருந்த வேலைகளை அடுத்த செக்ஷன் எடுத்துப்போக பைட்கரை அழைத்தேன். வருகிறேன் என்பதாக சைகை காட்டினார். இந்த முறை வருவார் என்றே தோன்றியது .
நான் எதிர்பார்த்தபடியே பைட்கரின் பேட்டரி வண்டி எங்கள் செக்ஷனை நோக்கி வந்து கொண்டிருந்தது .
இனி ஜிதேந்திர பைட்கர் என்ற பெயர் என் நினைவிலிருந்து என்றும் அகலாது! !
++
பலராம் செந்தில்நாதன்
முதல் கதை கணையாழியில் பிரசுரமாகியது . 98 கல்கி நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு . அவ்வப்போது கல்கி கணையாழி செம்மலர் இதழ்களில் கதைகள் பிரசுரமாகியுள்ளது . ஆனந்தவிகடனிலும் !
நண்பர்கள் கரு பாலா , ஷாராஜ் , ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் மற்றும் நிறைய நண்பர்கள் எழுத உற்சாகப்படுத்துவார்கள் .
மனைவி மட்டும் ‘ ஒரு கதை இருக்கு சொல்ட்டா ? ‘ என்றால் எப்போதுமே ‘வேலை இருக்கு ! அப்றம் ‘ என தெரித்து ஓடுவார் . என்றாலும் சொல்லி விடுவேன் .