1
ஒற்றைப் பனையடிகளிலும்
வௌவால்கள் சிறகொலிக்கும் கோவில்களிலும்
மனித வாசனையறியா காடுகளின் ஆழத்திலும்
இன்னும் எத்தனை காலம் தவித்தலைவது?
அறிவேன்.
நம் சந்திப்புதான் என் வாழ்வின் கடைசித் துளி
நிலம் பதியா உன் பாதங்களின் நல்இசைக்கு
ஆடைகளின் தூசு படியா
உன் பொன்மேனியின் நறுமணத்துக்கு
கருணையும்,காதலும்,காமமும் பொங்கும்
உன் விழிகளின் குளிர்ச்சிக்கு
ஏங்கித் தவிக்கின்றன என் புலன்கள்
முதலும் கடைசியுமான
உன் ஆலிங்கனத்தின் நினைவில்
தகித்துக் கிடக்கிறதென் தேகம்
என் உதடுகளைப் பிளந்து
நீளும் உன் நா நுனியின்
ஈரத் தீண்டலுக்கு ஏங்கி
துடிக்கிறதென் நாக்கு
உன்
நீண்ட ஈரமற்ற விளையாட்டை நிறுத்தி
அருகில் வா.
இத்தனை ஜென்மங்களின் கொடுந் தவத்தின்
நல் வரமாக
ஒரு முறை,ஒரேயொரு முறை
என்னை அணைத்துக் கொல்
2
மாமிச யட்ஷணி
கிட்டத்தட்ட சம அளவிலான துண்டுகளாய்
கவனமாக அரிகிறாய்.
மிளகாய்த் தூள்,மல்லித் தூள்,மஞ்சள் தூள்,
உப்பு,அரிசி மாவு,எலுமிச்சம் பழச் சாறு சேர்த்த
மசாலாவில் கலந்து
அரை மணி நேரம் மேரினேட் செய்கிறாய்,
அள்ளியெடுத்து
வாயிலிட்டு
கண்கள் மூடி ரசித்துச் சுவைக்கிறாய்
ஓரங்கள் மினுங்கியபடி
கொதிக்கிற எண்ணையில் தத்தளிக்கிற
என் மனதை .
3
கொடுந்துயர் சிதைத்த மனதிலிருந்து
வார்த்தைகள் வழிந்து கொண்டேயிருக்கின்றன.
ஒற்றை வார்த்தையும் பேசாமல்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அவனுக்கு
அதுவே தேவையானதாயிருக்கிறது
அவனுக்கு
அதுவே போதுமானதாயிருக்கிறது
00

ஜி சிவக்குமார்
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர்
பட்டம் பெற்றுள்ளார். தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி
இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள்
எழுதுவதோடு, பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும்
விருப்பம் கொண்டவர். ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி
இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது
கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.
வெம்புகரி என்ற சிறுகதைத்தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை, ஆத்மாநாமின் கடவுள், தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்