வழக்கம் போல அன்றைக்கும் செந்தில்தான் விமான நிலையத்திற்கு வழியனுப்பி வைக்க வந்திருந்தான். நான் ஊருக்கு வந்துப் போகும் சமயங்களில் அது அவனுடைய தார்மீகக் கடமைகளில் ஒன்றாகவும் ஆகிவிட்டிருந்தது என்றும் கூட சொல்லலாம். ஏனென்றால் புதுக்கோட்டைக்காரனான எனக்கு திருச்சி விமான நிலையமே பக்கம். ஆனால் அப்படிப் பயணப்படும் பட்சத்தில் சென்னையில் பணிபுரிந்து வரும் செந்திலைக் காணும் வாய்ப்புகள் அரிதாகிவிடும் அல்லது அமையாமலும் போய்விடும்.

அதனால் அவனை காணும் பொருட்டு எனது வருகை மற்றும் புறப்பாட்டிற்கு மீனம்பாக்கத்தையேத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அது அவனுடைய கட்டளையும் கூட! ஆனால் இந்த முறை எப்போதும் போலில்லாமல் கூடுதல் பொறுப்பொன்றும் இன்னொரு நண்பன் வழியில் வந்துச் சேர்த்துக் கொண்டது. அதாவது தன்னுடைய மகளின் பிரவசத்திற்காக முதன்முறையாக விமானம் ஏறவிருக்கும் ஒரு அம்மாவையும் என்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும்! 

இரண்டு நாட்களுக்கு முன்புதான், ஓமானில் நானிருக்கும் பகுதியிலேயே வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எங்களின் கல்லூரி நண்பனான சதீஷ் என்னைத் தொடர்புக் கொண்டிருந்தான். நான் வரும்போது சென்னையிலிருந்து ஒரு அம்மாவையும் கூட அழைத்து வர வேண்டுமென்ற அவனது கோரிக்கையை என்னால் மறுதலிக்க முடியவில்லை. ஏனென்றால் உள்ளூரில் செந்தில் போல ஓமானில் சதீஷோடுதான் அதிகம் சுற்றிக் கொண்டிருப்பேன். மேலும் இதுபோல் உதவிகளில் ஈடுபடுவதும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஆத்ம திருப்தி தருபவை.

அந்த அம்மா அவனுடன் பணி புரிந்து வரும் சக ஊழியரின் மாமியாராம். அவருக்கு இதுவே முதற் விமானப்பயணம் என்பதால் மஸ்கட் வரை நல்லபடியாக கொண்டு வந்துச் சேர்ப்பது என்னுடைய தார்மீகப் பொறுப்பென அவன் தயக்கம் தயக்கமாக முன்வைத்த கோரிக்கை உரையாடல் முற்றுப்பெறும்போது உரிமைச் செறிந்த கட்டளையாகவும் உருபெருத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து நண்பன் சதீஷ், முரளி மற்றும் ஆனந்த் என்ற பெயர்கள் தாங்கிய தொடர்பு எண்களைப் பகிர்ந்திருந்தான். அதில் முரளி எனும் பெயரிலிருந்தது உள்ளூர் எண். மற்றொன்று ஒமான். விமான நிலையத்தை அடைந்ததும் சதீஷ் அனுப்பியிருந்த உள்ளூர் எண்ணிற்கு தொடர்புக் கொண்டேன். போனில் முரளி தன்னை ஆனந்தின் மைத்துனர் என்று சுய அறிமுகம் செய்து கொண்டார்.

சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, தன்னுடைய தாயாரோடு தற்சமயம் என்னுடைய வருகையை எதிர்பார்த்த வண்ணம் விமான நிலைய வளாகத்திலிருந்த ஒரு சைவ உணவகத்தின் பெயரைச் சொல்லி தான் அதனருகே காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நானும் நண்பனும் குறிப்பிட்ட இடத்திற்கு முடிந்த வேகத்தில் விரைந்தோம்.

திருவிழாவிற்கு ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு கிளம்பிய சிறுக் கூட்டம் போல அங்கே ஒரு குடும்பமே அந்த அம்மாவை வழியப்பி வைக்க நின்றுக் கொண்டிருந்தது. போனில் பேசிக்கொண்டேச் சென்றதால் எங்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட முரளி, முகமலர்ச்சியோடு கையசைத்து வரவேற்றதில் முதற்கட்ட நேர் பரிச்சயங்கள் இனிதாய் அமைந்தது. மங்களகரமான அந்த அம்மாவின் முகம் எனக்கு எங்கோ பழக்கப்பட்டது போல் தோன்றியது. இப்படி யாரையாவது கண்டுவிட்டால் சில நேரங்களில் எதேச்சேயாக மனதில் அப்படி ஒரு நினைவு எழுந்தடங்குவதுமுண்டு.

எல்லோருக்கும் போலத்தான் அந்த அம்மாவின் முகத்தில் புதிய இடத்திற்குச் செல்லும் பதற்றங்கள் எக்கச்சக்கமாய் குடிக் கொண்டிருந்தன. முதன் முதலாக பள்ளிக்கு சேர வந்திருந்த நாலைந்து வயதுச் சிறுமியின் மருட்சியை வெளிப்படுத்தினாலும் அவர் இட்டு வந்திருந்த ஒரு ரூபாய் அளவு வட்டப்பொட்டு மட்டும் தெம்போடு தனித்து ஈர்த்தது.

‘பயப்படாதீர்கள்.. தைரியமா வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றேன்.

ஒளி படப் பட பிரகாசிக்கும் பெயர் தெரியாத இளம் மஞ்சள் நிற மலராய் சுற்றி நின்றவர்கள் கொடுத்த தைரியங்களில் அவரது இறுக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று சிறிது சிறிதாக புன்முறுவல்களைக் கொண்டுவர தன்னளவிலும் முயற்சிகள் மேற்கொண்டு, வெற்றியும் கண்டது போல் அவர் முகம் ஓரளவு தெளிவு கொள்ள ஆரம்பித்தது என்றேச் சொல்ல வேண்டும். எதுவும் சாப்பிடுவோமா என்று என்னையும் செந்திலையும் முரளி அந்த உணவகத்திற்குள் இழுத்தார். பொதுவாக பயணம் செய்யும்போது முடிந்தளவு உணவுண்பதை தவிர்த்துக் கொள்வேன் என்றதும் ஆமோதிப்பதுபோல் புன்னகைத்தார். ஃபிளைட்டில் கொடுக்கும் உணவே போதுமானதென்றதும் அவர் முகம் முழுத் திருப்திக் கண்டிருந்தது.

அந்த அம்மாவை முடிந்தவரை தைரியப்படுத்தி அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளில் அவரது மகன் மட்டுமல்லாமல் அவரது மருமகள், பத்து பன்னிரெண்டு வயது பேரன் பேத்தி, இளம் வயதில் இன்னொரு பெண், அவளுடைய வயதில் இன்னொரு பெண்ணென என அந்த கூட்டமே கோதாவில் இறங்கியிருந்தது. ‘இதுவரை அம்மா விமானத்தில் பயணித்ததில்லை; பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என முரளி, ஐந்து நிமிடங்களில் பத்து பதினைந்து முறையாவதுச் சொல்லியிருப்பார். அவ்வேளைகளில் அந்த அம்மா தன் மகனை நெகிழ்ந்து ரசித்தவராக என்னையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.

பயண நேரத்திற்கு சரியாக இரண்டரை மூன்று மணி நேரம் இருக்க, எங்களுக்கான நுழைவாயில் திறப்பட்டது. செந்தில் மற்றும் அந்த அம்மாவின் குடும்பத்தினருக்கு விடைகொடுத்துவிட்டு இருவரும் புறப்பாட்டிற்கு  ஆயத்தமானோம். பயணச்சீட்டு மற்றும் பாஸ்போர்ட் இத்யாதிகளை சரிப்பார்த்துவிட்டு அங்கிருந்த சந்தன தட்டைப் போன்ற முகம் கொண்டிருந்த வடஇந்திய காவலாளி எங்களை உள்ளேச் செல்லுமாறு சமிஞை செய்தார்.

அந்த அம்மாவும் நானும் ஓரிரு முறை திரும்பி, திரும்பி எங்களை வழியனுப்ப வந்தவர்களை நோக்கி புன்னகைப்படி முகங்களை திருப்பிக் கொண்டோம். செந்தில் சிறைக்கைதியை காண வந்திருந்த பார்வையாளரைப் போல அருகில் நின்றுக் கொண்டிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு எனை நோக்கி எக்கி எக்கி கைக்காட்டிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் குடியிருந்ததை போல எனக்குள்ளும் பழக்கப்பட்டுவிட்ட ஒரு வெறுமையை உணர்ந்தேன். எவ்வளவு ரசித்தாலும், கொண்டாடினாலும் ஆறு அடித்துச் செல்லும் சருகைப் போல ஏதோ புள்ளியில் எந்த ஒரு காட்சியும் நம் கண்ணை விட்டு மறையத்தானேச் செய்கிறது!

அழகியப் பூனைக்குட்டி போல் என்னைப் பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த அந்த அம்மாவை, ஒவ்வொரு முறையும் அந்த அம்மா, அந்த அம்மா என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டுக் கொண்டிருப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. அதனால் அவருடைய பெயரான ஜெயலட்சுமியை லட்சுமியாக்கி இனி லட்சுமியம்மா என்றே உங்களிடம் எங்கள் பயணத்தைப் பற்றி பகிர்ந்திருக் கொள்கிறேன்.

லட்சுமியம்மா கொண்டுவந்திருந்த பிரதான அதாவது முப்பது கிலோக்குரிய லக்கேஜில் பிரச்சினைகள் ஏதும் வரவில்லை. ஆனால் கை பையை தவிர்த்திருந்த மற்றொரு ஹேண்ட் லக்கேஜில் நிறைய செலவு பொருட்கள் அதாவது பொடிக்கப்பட்ட மசாலா வகையறாக்கள் பொட்டலம் கட்டப்பட்டிருந்தன. விமானம் ஏறுவதற்கு முன்பான சோதனையில் அதில் சில பொட்டலங்களை வட இந்திய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் அதை பெரிதாக ஏதும் பொருட்படுத்தாமல் குப்பையில் போடுவது போன்று அவைகள் கையாளப்பட்டதை லட்சுமி அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘இதெல்லாம் ஹேண்ட் லக்கேஜில் அனுமதியில்லைங்கம்மா’ என்று சங்கடப்பட்டவனாய் நானும் சொல்லி அவரை புரிய வைக்க முயற்சி செய்தாலும், என்னாலும் அதை முழு மனதோடு நிறைவேற்ற முடியவில்லை. பிரியமானவர்களுக்கு ஆசை ஆசையாய் கொண்டு செல்லும் பரிசுப் பொருட்களை இடையில் யாரோ தட்டிப் பறிப்பது போல் கலங்கிப் போயிருக்க கூடும்; லட்சுமியம்மாவின் முகம் அப்படியே வாடித் தொங்கிவிட்டது!

அதிகாரிகளிடம் அவருடைய பயணத்தைப் பற்றியும் அதற்கான நோக்கங்களையும் முடிந்தவரையில் அவர்கள் இறங்கி வருவார்கள் என்ற நம்பிக்கையில் உணர்வுப் பூர்வமாக விவரிக்க முயற்சி செய்தேன். அடுத்தமுறை இப்படியெல்லாம் கொண்டுவராதீர்கள் என்று ஒருவழியாக எடுத்துச் செல்ல வழிவிட்டார்கள். பொதுவாக அப்படி நிகழ்வதில்லை. அவர்கள் அன்று அனுமதித்ததும் ஆச்சர்யம்தான். லட்சுமியம்மாவின் முககடாட்சத்திற்கு கிடைத்த சலுகையாகவே அந்த அனுமதியை எண்ணினேன். அதைச் சொன்னபோது சிறுபெண்ணைப் போல் வெட்கப்பட்டார்.

விமானப்பணிப்பெண்கள் மூவர் பாதுகாப்பான பயணத்திற்குரிய விதிமுறைகளையும் அவசரக் கால மற்றும் அபாய நேர முன்நடவடிக்கைகளையும் பற்றியும் செயல்முறை விளக்கங்களை குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் இன்று ஆங்காங்குத் தந்துக் கொண்டிருக்க, அனைத்தையும் லட்சுமி அம்மா ஆவென பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அவருடைய முகம் முதல் பெஞ்சிலமர்ந்து பாடம் கவனிக்கும் ஒரு இளம் மாணவியைப் போல ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. அந்நேரம் நான் அவரை இரட்டை ஜடையில் கற்பனை செய்துப் பார்த்ததெல்லாம் ஒரு வளர்ந்த மகனுக்குரிய குறும்புத்தனம்.

அதே நேரம் என்னுடைய முதல் விமானப் பயணம் கூட நினைவிற்கு வந்துச் சென்றது. அன்றும் சென்னையிலிருந்துதான் கிளம்பினேன். சென்னை வரை வந்து வாப்பாவின் நண்பர்தான் வழியனுப்பி வைத்ததெல்லாம். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அவருக்கு என் சாக்கில் சென்னையிலிருக்கும் உறவினர்களை சந்திக்க வேண்டும். இன்னொன்று தாய் ஏர்வேஸில் டிக்கெட் புக் செய்திருந்தார். தாய் ஏர்வேஸைத் தேர்ந்தெடுக்க பிரத்யேகமான காரணமும் இருந்தது. ஆனால் என்னிடம் சொன்ன காரணம், அதில்தான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு தன்னுடைய நண்பரொருவரையும் துபாய்க்கு ஏற்றிவிட்டிருக்கிறார். அந்த நண்பர் அவரிடம் அந்த விமான சேவையைப் பற்றி ஏகத்திற்கும் புகழ்ந்துச் சொல்லவே, தந்தையின் அனுமதியோடு எனக்கும் அதுவே விதியானது.

முதல் விமானப்பயணமென்பதே ஒரு பெரிய கனவுதான். அந்த கனவளவிற்கு அந்த விமானமும் கூட கப்பல் மாதிரி மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. உண்மையில் பறப்பது போலில்லை; மிதப்பது போலிருந்தது. அதை மெய்ப்பிப்பது போல அதில் பாதி பேர் அளவின்றிக் கிடைத்துக் கொண்டிருந்த மதுவில் உண்மையில் மிதந்துக் கொண்டுதானிருந்தார்கள். இதுதான் என்னை ஏற்றிவிட வந்த நபரின் நண்பருக்கும் மலைப்பை ஏற்படுத்திருக்க கூடும். மேலும் என்னை அன்று வழியனுப்பி வைக்க வந்திருந்த ஆசாமியும் தண்ணி வண்டிதான்.

சாய்ந்தமர இருக்கைகள் மிகவும் விசாலமானதாகவும், பெரிய அரியணையை போன்றும், மிருதுவில் மெத்தைக்கே சவால் விட்டுக் கொண்டிமிருந்தது. ஒரு புறம் வெள்ளை வெளேரென உடுப்பும் உடம்புமாய் ஒரு மஞ்சள் – றோஸ் நிறம் கலந்த முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு அரபி. அமர்ந்தவுடன் என்னைப் பார்த்து நட்பாய் புன்னகைத்ததும் ஆங்கிலத்தில் நலம் விசாரித்ததும் அந்த பயணத்தை மகிழ்வானதாக ஆரம்பித்து வைத்ததென்றால் இன்னொரு புறம் அதாவது எனக்கு வலப்பக்கம் ஒரு அழகிய ஆந்திர மங்கை! சந்தன நிறத்திலிருந்து சற்று கருத்தவள் போல் திராவிடத்தோலைக் கொண்டிருந்தாள். அப்போதுதான் தாவணியிலிருந்து புடவைக்கு மாறியிருந்த செப்புச் சிலைப் போல் தோற்றமளித்தவள், என்னிடம் பேச ரொம்பவேத் தயங்கினாள். மையிடாமலேயே கண்கள் மயிலிறகாய் பட்டுப் பார்வையை வீசிக் கொண்டிருந்தன. அடர்ந்த செவ்விதழ்கள் மறுநாள் பூக்க வேண்டிய ரோஜாப்பூ போல் என் இதழ்களைத் தட்டுவது போல் பார்த்தது. எதிர்கொள்ள முடியாமல் அதிலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டேன்.

இருந்தாலும் அப்படியே விட்டுவிட முடியுமா? எனது முதல் ‘ஹாய்..’க்கு வெட்கத்தோடு புன்னகையை மட்டும் பதிலாக்கினாள். முதலில் அவளை தமிழ் பெண் என்றே நினைத்திருந்தேன். ஆனால் முழுமையாக நம்பமுடியாமல் ஆங்கிலத்தில் எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரிக்க நேரிடையாக தெலுங்கிலேயே மிகவும் சுருக்கமாக தட்டு தடுமாறி பதில் சொன்னாள்.

எனக்கு ஓரளவு தெலுங்கு தெரியுமென்பதால் நானும் தெலுங்கிலேயே மாட்லாட அப்பொழுதுதான் தனக்கு உயிர் வந்தது போல ‘மீக்கு தெலுகு தெல்சா?’ உங்களுக்கு தெலுங்கு தெரியுமா என்று தனது மயிலிறகு கண்களை பாற்கடலின் மையப்பகுதியிலெழுந்த பசுந்தீவு அளவிற்கு விரிவடையச் செய்தாள்.

அதுவரை அவளிடம் குடிகொண்டிருந்த பயங்கள், பதற்றங்கள் விலகி அவளது முத்துப் பற்களை நான் முழுமையாக ரசிக்குமளவிற்கு கொஞ்சம் சிரித்துப் பேசத் தொடங்கினாள். அந்த நேரங்களில் எனது ஆவி மட்டும் அவளின் எதிரிலமர்ந்து அவளது பட்டுக்கன்னங்களையும் கைகளையும் பற்றிக் கொண்டு ‘பேசு கண்ணம்மா.. பேசு!’ என்று அவளிடம் காதல்வயப்பட்டதுப் போல கற்பனைகளில் திளைத்துக் கொண்டிருந்தேன்.

அவள் பணிப்பெண் வேலைக்குத்தான் துபாய்க்கு வருகிறாளாம். சொல்ல மறந்து விட்டேனே.. எனது முதல் விமானப்பயணம் சென்னையிலிருந்து துபாய்க்கானது. இன்டர் வரை அதாவது ப்ளஸ் டூ வரை மட்டுமே படித்திருப்பதாகவும் சொன்னாள். அவளுடைய பெரியம்மா வழி அண்ணன் ஒரு அரபி வீட்டில் டிரைவராக இருக்கிறானாம். அங்கேதான் இவளுக்கும் வேலையாம். மிகவும் பயமாகவும் இருப்பதாகவும் அவ்வப்போது சொல்லிக் கொண்டாள். எனக்கும் கூட அந்த பயணம் முதல் அனுபவமென்பதால் ‘பயப்பட வேண்டாம் அதான் உன் அண்ணன் அங்கே இருக்கிறானே’ என்று முடிந்த ஒரு பொதுவான தேற்றத்தைக் கொடுத்தேன். இன்று இந்த லட்சுமியம்மாவிற்கு போல அன்று அந்த சுதாவிற்கும் நானே மெய்க்காப்பாளனாக என்னை நானே அமர்த்திக் கொண்டேன்.

அதற்கு இன்னொரு காரணமுமிருந்தது. பார்க்க சாயலில் நடிகை சங்கவி போல இருந்தாள். அடிப்படையில் நானும் ஒரு விஜய் ரசிகன் என்பதால், எங்கள் பொருத்தம் அன்று நன்றாகவே வேலை செய்துக்கொண்டிருந்தது. மிகவும் அமைதியான பெண். வயது இருபத்தி இரண்டைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை. அதாவது என் வயதாகவோ அல்லது ஓரிரு வயது குறைந்தவளாகவோ இருந்திருக்க கூடும். கல்யாணமா செய்து கொள்ள போகிறோம் என்று அந்த விபரங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கவில்லை.

ஆனால் அந்த பயணத்தில் அவளுடைய முதன்மை உணவு முதல் மற்ற மற்ற நொறுக்குத்தீனி மற்றும் அவ்வப்போது கேட்டுப்பெற்ற பானங்கள் வரை அத்தனையையும் நானே தெரிவு செய்துக் கொடுத்தேன். இருப்பினும் தவிர்க்க முடியாததாய் அதில் கிழக்காசிய பண்டங்களும் கலந்தே வந்துக் கொண்டிருந்தன. குடிமகன்களுக்கு மதுவை போல் எங்களுக்கும் கேட்க கேட்க பழரசங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட நான்கு மணி நேர பயணம். அவ்வப்போது விமான ஓட்டி கடந்த மற்றும் கடக்க வேண்டிய கிலோ மீட்டரின் அளவை மைக்கில் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். மையமாக ஆங்காங்கே சொருகப்பட்டிருந்த தொலைகாட்சி மெல்லிய பெட்டிகளிலும் ஒளிப்படமாய் குறிகள் மெதுவாக விமான திசைப்போக்கில் நகர்ந்துக் கொண்டிருந்தன. சில இடைவெளிகளில் ஒளித்திரையில் மேகமும் பாலைவனமுமாய் வந்து வந்து போனது.

இங்கு கொங்கு மண்டலம் போல ஆந்திரத்தில் ராஜ மந்திரி, என்னுடைய தெலுங்கு ராஜமந்திரி சாயலை ஒத்திருக்கும். அந்த மரியாதை மிகுந்த வட்டாரப்பேச்சு நெல்லூர்க்காரியான அவளை என் பக்கம் நிறையவே சரிய வைத்தது. ஆனாலும் சாப்பிட்டதும் சுதாவிடம் பேச்சேதும் கொடுக்க முயலாமல் நன்றாக தூங்கிவிட்டிருந்தேன்.

எல்லாம் முந்தைய இரவில் சென்னையில் அப்போது பணிபுரிந்துக் கொண்டிருந்த வகுப்பு நண்பர்களோடு அளவற்று அடித்த கூத்தும் கும்மாளங்களும்தான். என்னதான் அடுத்த நாள் பயணமிருந்தாலும், பாம்பின் கால் பாமறியும் போல் நண்பர்களோடு என்னை தனித்துவிட்ட வாப்பாவின் நண்பரின் நாசூக்கை பாராட்டியே ஆக வேண்டும்.

கண்விழித்த போது துபாய் வர அரை மணி நேரமே தொலைக்காட்சிகளில் ஒளிர்ந்துக் கொண்டிருந்த வரைபடம் காட்டியது. நான் மிகவும் அசதியாக தூங்கிவிட்டிருந்ததை கேலி செய்யும் விதமாக சுதா நான் கண்விழிக்க காத்திருந்தவள் போல், பார்த்ததும் சிரித்தாள் அல்லது நானே அப்படி கருதிக் கொண்டேன்.

எனக்கு வெட்கம் தொற்றிக் கொண்டது. கூடவே வேலையைப் பற்றிய சிந்தனைகளும். அதன் பிறகு துபாய் அடையும் வரை பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரின் இதழோரங்களில் புன்னகைகள் மட்டும் அடர்ந்திருந்தது. விமானம் தரை தட்டியவுடன் மற்றவர்களைப் பொருட்படுத்தாத ஒரு வேகமும் பரபரப்பும் என்னைத் தொற்றிக் கொண்டது.

விமானம் தரையிறங்கியதும், தயார் நிலையிலிருந்த ஒரு சிறிய பஸ் மூலமாக விமான நிலையத்தினுள் நுழைந்தோம். அதுவரை சுதா என் கண்களில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்தாள். பிறகு என்னவானாள் என்று தேடுமளவிற்கு எனது நிலைமையுமிருக்கவில்லை.. எனக்கான அடுத்தடுத்த பரபரப்புகளில் மூழ்கினேன்.

வேலையோடு வந்தவர்கள் தனிப்பிரிவாக வேறொரு திசை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். அதில்தான் அவளும் எங்கோ மறைந்திருக்க கூடும். நான் முதன்முதலில் விசிட் விசாவிலேயேச் சென்றேன். எறும்பு போல் ஆட்கள் தங்களது விசா மற்றும் பாஸ்போர்ட்டோடு வளைந்து நெளிந்து ஒவ்வொரு வரிசையிலும் தங்கள் முறை வர காத்து நின்றனர். குடியேற்ற மற்றும் காவல் அதிகாரிங்கள் எங்களை ஒழுங்கிப் படுத்திக் கொண்டிருந்தனர்.

“தம்பி..” லட்சுமியம்மா குரல் கேட்டு முதற் பயண நினைவுகளிலிருந்து மீண்டு வந்தேன். சீட் பெல்ட் எப்படி மாட்டுவதெனக் கேட்டார். என்னுடையதை மாட்டிக் காட்டினேன். குழந்தைச் சிரிப்போடு ‘சரிப்பா சரிப்பா’ என்று விளங்கிக் கொண்டவர் போல தலையை ஆட்டிக்கொண்டு ஒரு சாதனைப் புன்னகையை வெளிப்படுத்தினார்.

அன்று நாங்கள் சென்றுக் கொண்டிருந்தது ஓமான் ஏர்வேஸ். ஓரளவு பெரிய விமானமென்றாலும் தாய் ஏர்வேஸ் அளவிற்கெல்லாம் பிரமாண்டமில்லை. என்னுடைய அறிவில் இத்தனை வருடங்களில், சகாய டிக்கெட் விலையில் தாய் ஏர்வேஸை அடித்துக் கொள்ள இன்னொரு விமானச் சேவையும் வரவில்லை. ஆனால் இப்போது தாய் ஏர்வேஸ் நிறுத்தப்பட்டுவிட்டது வேறு விஷயம். பின்னே இப்படி விழுந்து விழுந்து குடிகாரர்களை குளிப்பாட்டிக் கொண்டுச் சென்றால் எல்லா சீசனிலும் லாபம் பார்க்க முடியுமா?!

ஓமான் ஏர்வேஸில் அதெல்லாம் அனுமதியில்லை. உணவு தெரிவில் வழக்கம் போல சைவம் மற்றும் அசைவமிருந்தது. பொதுவாக பயணங்களில் நான் சைவப் பட்சியாக மாறிவிடுவேன். நானும் லட்சுமி அம்மாவும் வெஜ் புலாவும் ராஜ்மாவும் சாப்பிட்டோம். கூடவே சமோசா, பாதுஷா, பழ ரசம், டீ / காப்பியும் விநியோகிக்கப்பட்டன. விமான பயணங்களில் உண்பதே ஒரு பொழுதுப் போக்கு மாதிரிதான். எப்படியும் அதிலேயே நான் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது கடத்தப் பார்ப்பேன். எல்லா விமானங்களிலும் உணவு  சேவை திருப்திகரமாக இருக்குமெனச் சொல்லிவிட முடியாது.

ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களினால் நான் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏறினால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை விட்டால் வேறு கதியில்லை!

சோப்பு டப்பா அளவில் உணவு பொட்டலம் கொடுக்கப்படும் அதில் இரண்டு ஸ்பூன் ஜீரா ரைஸும் ஒரு ஸ்பூன் மசிச்ச காய்கறி கூட்டும் பேருக்கு ஒரு சிறிய பாட்டில் தண்ணீர் அவ்வளவுதான். தற்சமயம் அது கூட நிறுத்தப்பட்டுவிட்டதாய் கேள்வி.

ஒரு முறை ஒரு மாறுதலுக்கு சென்னையிலிருந்து ஏர் இந்தியாவை புக் பண்ணினேன். நேரடி விமான சேவை இல்லை. சென்னையிலிருந்து மும்பை, அங்கேயிருந்து மஸ்கட். போதும் போதும் என்றாகிவிட்டது. அந்த பயணத்தில்தான் பக்கத்து இருக்கைக்காரராய் மும்பையிலிருந்து மஸ்கட் வரை நம்மூர்க்காரர் என்னோடு இணைந்து கொண்டார். வருஷங்கள் கடந்துவிட்டாலும் சுதா அளவிற்கு அவர் பெயரை நினைவுக் கூற முடியவில்லை. அவர் மூலம் கிடைத்த அனுபவங்களும் அப்படி. அதனால் கதைக்காக மிஸ்டர் வாசு என்று வைத்துக் கொள்வோம்.

மிஸ்டர் வாசு, மிஸ்டர் பீட்டர் போல சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். எனக்கும் பயணங்களில் பேசிக்கொண்டே செல்வது பிடிக்கும். பயண சலிப்பை போக்க அது எனக்கு உதவும். கதை அனுமதித்தால் அதைப்பற்றி சிறிய குறிப்பொன்றை பின்னால் வரைகிறேன். இப்போது வாசுவை பற்றி மட்டும் பேசுவோம். அவர் பேச பேச வடஇந்திய சேனல்களில் அலைவரிசை எண்களை மாற்றி மாற்றி ஆங்கில செய்திகள் பார்ப்பது போன்றிருந்தன.

நான் படிப்பெல்லாம் முடித்த கையோடு கொஞ்ச நாள் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் ராஜ மந்திரி பக்கம் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டிருந்தாலும் அப்போது முழு நேர வேலையாக எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வதாகதான் இருந்தது.

ஆங்கிலப் பத்திரிகைகள் வாங்குவேன். வாய்விட்டு வாசிப்பேன். தொலைக்காட்சியில் இந்தியா டுடே, சி என் என், என்டிடிவி, பிபிசி போன்றவைகளில் ஆங்கில செய்திகளை தொடர்ந்துப் பார்ப்பேன். ஸ்டார் மூவீஸ், எச் பி ஓ போன்ற டிவி சேனல்களையும் இரவு நேரங்களில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். அப்போது பல நேரங்களில் மொழிப்பயிற்சித் தேடல்கள் வேறு வேறு வேறு கவனச் சிதறல்களில் தடமாறியும் போயிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக ரியாலிட்டி டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த 18+ தொடர்களையும் காத்திருந்துப் பார்ப்பதையும் வழக்கமாக வைத்திருந்தேன். கிட்டத்தட்ட ஆங்கிலோ இண்டியன் அளவிற்கு என் உடை நடை பாவனைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். அதற்காகவே இன்ஸ்டன்ட் மாடலாக எஸ் எஸ் மியூஸிக்கில் ‘ரீச் அவுட்’ போன்ற நிகழ்ச்சிகளில் வரும் கிரைக், ஷ்யாம் போன்றோரை நகலெடுத்துக் கொண்டிருந்தேன்.

அதனால் மிஸ்டர் வாசுவும் அநியாயத்திற்கு என்னைக் கவர்ந்து போனார். நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம். ‘சார்..! நார்த் இண்டியன் போல உங்க இங்லீஷ் செம்மையா இருக்கு சார்!’ என்றேன். எங்கள் கம்பனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த பவன் கர்மார்க்கர் என்பவனின் ‘ப்ளீஜை’ தற்செயலாய் மறந்து போய். அவர் “பார்ன் அன் ப்ராட் அப் இன் மும்பை” என்று அங்கிருந்தான் என் பொறுமையை சோதிக்க ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் வாழும் நம்மவர்களை ஏகத்திற்கும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி சார்ந்து தாழ்வாகவும் ஏளனப்படுத்தியும் பேசத் தொடங்கினார். எனக்கு ‘ஏண்டா சொன்னோம், ச்சீ..!’ என்று ஆகிவிட்டது!

இங்கே ஏன் அவரை நினைவு கூறுகிறேன் என்றால் அன்று அதே உடல்மொழியில், நாற்பது ப்ளஸ் வயதிலிருந்த ஏர் ஹோஸ்டஸ் ஒருவரை அழைத்து சாப்பாட்டை பற்றி ஏகத்திற்கும் குறைக் கூறினார். இதற்கு நடுவே அவர் ஒருமுறை எக்ஸ்ட்ரா சரக்கு கேட்டு, அந்த பெண் சத்தியராஜ் மறுத்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்னதான் இருந்தாலும் வாசுவின் புகாரும் நியாயமானதுதான் முளைவிட்ட பயிரை மென்றுத்தின்ற போது எனக்கும் கூட கல்லொன்று தட்டுப்பட்டது. ஆனால் அதற்காக அவர் ஹை டெசிபெலில் விட்ட சவுண்டுதான் சகிக்க முடியவில்லை. அவரின் நக்கல் நையாண்டி கேலி எல்லாம் எல்லோரின் முன் ஆங்கிலத்தில் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தாலும், இரசிக்கும் மனநிலையில் நானிருந்திருக்கவில்லை.

அந்த பணிப்பெண்ணிற்கு அந்த மாதிரியான சலம்பல் எல்லாம் சகஜம் போல ஒரு புகார் படிவத்தைக் கொடுத்து மிகவும் சாந்தமாக நிரம்பித் தருமாறுக் கோரினார். அதில் தன் சேவையில் குறைகள் இருந்தாலும் குறிப்பிடலாம் என்று சொல்ல, தலைவர் வெறிபிடித்த எஸ் ஜெ சூர்யா போல ஆங்..! ஊம்! என விறுவிறுவென்று எதையோ கிறுக்கிக் கொடுத்தார். நான் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். யுக்தா முகியின் உயரத்தைக் கொண்டிருந்த அந்த லிப்ஸ்டிக் தேவதை ‘அவள் ஒரு நவரச நாடகம்..’ லதாவை போல நளினம் காட்டி சிரித்து வாங்கிக் கொண்டது. நமஷ்கார்தான் சொல்லவில்லை!

லட்சுமி அம்மா என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல உள்ளுணர்வுத் தூண்ட, முகத்தை அவர் பக்கம் திருப்பினேன். ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்து கொண்டோம். அவரிடம் ஏதாவது பேச வேண்டுமென எனக்கும் தோன்றிற்று அவரும் நினைத்திருக்க கூடும். முன்பே சொன்னது மாதிரி பயணங்களில் பேசுவது எனக்குப் பிடிக்கும். அதற்கேற்ப பக்கத்திலுள்ள ஆள் நன்றாக வாயடிக்கும் ஆளாக (சரியான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவும்) அமைந்துவிட்டால் போதும் போதும் நிறுத்து எனும் அளவிற்கு பேசிக் கொண்டிருப்பேன். இதில் நகைப்பான விசயம் என்னவென்றால் அப்படி அன்யோன்யமாகப் பேசிக்கொண்டிருந்த அதே நபரை யாரோ எவரோவென விமானம் தரை தட்டியதும் கடந்து செல்வது அநேகப் பயணிகளுக்கான பொது விதி.

ஆனால் லட்சுமி அம்மாவை அப்படியெல்லாம் கடந்துச் செல்ல வாய்ப்பில்லை. நான் தங்கியிருக்கும் நகரில்தான் எனது நண்பனான சதீஷ் குடும்பமும் இருக்கிறது. அவர்களின் அண்டை வீட்டில்தான் லட்சுமி அம்மாவின் மகள் – மருமகன் வசிக்கிறார்கள். நேரம் போக லட்சுமி அம்மாவிடம் எதைப் பற்றி பேச ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை.

எதேச்சையாக உருண்டு திரண்டிருந்த அவரது கைகளின் தங்க வளையல்கள் பக்கம் கவனம் சென்றது. குறித்த காரணங்களெல்லாம் ஏதுமில்லை. எதேச்சையாகப் பார்த்தேன். அவரும் அதை தன்னிச்சையாக உணர்ந்தவர் போல எதிரெதிர் கைகளால் மறைத்துக் கொண்டார். காதில், கழுத்தில் என வசதி, வாய்ப்பிற்கு குறை ஒன்றும் சொல்லாதபடி மகராசியாகவே நிறைந்திருந்தார். அதை விட அழகு அவரது சிரிப்பு. எப்போதும் மெலிதான புன்முறுவல் அவரது  இதழைச் சுற்றி ஓடிக்கொண்டேயிருந்தது.

நமது எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒன்றை இயல்பாகவே அருகிலிருப்பவர்கள் ஆரம்பிப்பதை என்றைக்காவது எதிர்கொண்டிருக்கிறீர்களா?

“தம்பி.. அங்கிருந்து வரும்போது கொண்டு வர தங்கமெல்லாம் அலோவ் பண்ணுவாங்கல்லப்பா?” என்று அவரே பேச்சுக் கொடுத்தார்.

“பண்ணுவாங்கதாம்மா.. ஆனா லிமிட் உண்டு” என்று ஆண் என்றால் இவ்வளவு, பெண் என்றால் இவ்வளவு என்று கொண்டு வர அனுமதிக்கப்படும் அளவைகள் குறித்து விபரங்கள் பற்றிச் சொன்னேன். ஓஹ் அப்படியா சரி சரி என்று தனக்கே உரிய மழலைச் சிரிப்புடன் தலையாட்டினார். அதற்கு பிறகு மற்ற மற்ற செய்திகளை பேசத் தொடங்கினார். தனது அண்ணன் மகனுக்குத்தான் மகளைக் கொடுத்திருப்பதாகவும்.. தனது மருமகனை சிறு வயதிலிருந்து தான்தான் பார்த்துப் பார்த்து வளர்த்ததாகவும், அவனும் தன் மேல் மிகுந்த பாசமுள்ளவன் என்றும் மிகுந்த நெகிழ்ச்சியோடு தனது மருகனான ஆனந்தைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைந்தார்.

மகள் கொஞ்சம் தங்கக்காசு சேர்த்து வைத்திருப்பதாகவும் ஊருக்கு திரும்பும்போது அதை கொண்டுவர வேண்டுமெனவும் மனதிலிருந்த எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய வெள்ளந்தியானப் பேச்சு எனக்கு கொஞ்சம் கவலையையும் கொடுத்தது. தனிப்பட்ட விஷயங்களை அதிகம் பகிராமல் இருந்தால் நல்லதெனப்பட்டது. பாதகமேதும் இல்லையென்றாலும் முன்பின் இருக்கைகளில் இருப்பவர்களும் காதாத்தக் கூடுமென எச்சரிக்கையோடு அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தேன்.

ஒரு முறை இப்படித்தான் மஸ்கட்டிலிருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த ஒரு ஆசாமி ஏகத்திற்கும் நகைகளை வாங்கி கழுத்து கை காலென எல்லா இடங்களிலும் மாட்டிக்கொண்டு பக்கத்து சீட்டில் வந்தமர்ந்தார். தனது கருத்த மேனிக்கு ஒரு கருத்த கண்ணாடியும் அணிந்திருந்தார் என்றால் அச்சு அசல் சங்கர் கணேஷ்தான். அவர் முகத்தில் மகிழ்ச்சி புறமிருந்தாலும் சுங்க அதிகாரிகளைப் பற்றிய பயமும் பதற்றமும் மேலோங்கிக் கொண்டிருந்தன. அடக்க முடியாமல், வெளிப்படுத்தவும் செய்தார். பார்க்க அவரும் ஏகத்திற்கும் விபரமில்லாத ஆள் போலதான் காட்சியளித்தார்.

கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருட உழைப்பின் திரண்ட பலன். சாதாரண கட்டிட வேலை ஊழியரான அவர் வீட்டிற்கு அனுப்பியதை தவிர்த்து, பசி பட்டினியோடு ஒவ்வொரு சம்பளத்திலிருந்தும் குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்தும், கடைசியாக கிடைத்த சேவை முடிப்புத்தொகையிலும் கணிசமான நகைகளை வாங்கி குவித்திருக்கிறார். இத்தனைக்கும் ஆண்கள் என்றால் அதிகபட்சமாக பதினாறு கிராம்கள்தான் கொண்டு வர அனுமதி என்று அவருக்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பேயில்லை. அவருக்கு விபரம் போதவில்லை என்றாலும் உடன் தங்கியிருப்பவர்களாவது நிச்சயம் எச்சரித்திருக்க கூடும்.

அவர் மனதளவில் மிகுந்த அலைக்கழிப்பிலிருந்தது எனக்கு நன்றாகவேப் புலப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது காலம் தாழ்ந்த கவலை. அருகிலிருந்த மற்றவரும் அவரை மேலும் பீதியடையும்படி தான் கண்ட, கேட்ட மற்றவர்கள் விமான நிலையத்தில் பிடிபட்ட அனுபவங்களை எடுத்துவிட இப்போது தான் என்ன செய்வதென சீட்டுக்கு சீட்டு தாவி அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரிடமும் தப்பிக்கும் வழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படியெல்லாம் ஒருவர் வெளிப்படையாக எல்லோரிடமும் சொல்லி யோசனைகள் கேட்பாரா என்று எனக்கு வியப்பாக இருந்தது.

அதிலொருவர் கீழ் உள்ளாடையில் கொஞ்ச நகையை வைத்துக் கொள்ளுங்கள் என்று பழைய ஐடியாவொன்றைக் கொடுத்தார். ஆனால் பார்ட்டியோ பட்டப்பட்டி வகையறாவை அணிந்து வந்திருக்கிறது. அங்கேயும் ஒரு தொள தொளச் சிக்கல். என்னிடம் கை பேக்கில் இரண்டு மூன்று உபயோகப்படுத்தாத ஜட்டிகள் இருந்தன. ஒன்று தரட்டுமா என்றேன். முதலில் வேண்டாமென நெளிந்தவர் பிறகு ரெஸ்ட் ரூம் சென்று மாற்றிக் கொண்டு வந்தார். அவருடைய வெட்கம் கலந்த சிரிப்பை விமானம் தரையை தட்டும் வரை நானும் ரசித்துக் கொண்டே வந்தேன். எப்படியோ அந்த சிங்கம் புலி கேரக்டர் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடமிருந்து பிழைத்துக் கொண்டால் போதுமென்றிருந்தது.

ஆனால் ஒரு பக்கம் எதிர்பார்த்தபடி, சோதனையில் வகையாய் பிடிபட்டு சுங்க அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். நான் நினைத்திருந்தால் அதில் முடிந்ததை என் பொறுப்பில் வாங்கி வைத்துக் கொண்டு வெளியில் வந்தவுடன் ஒப்படைத்திருந்திருக்கலாம். நானும் அருகிலிருந்த மற்றவர்களும் சில சமயம் அதன் எதிர்பாராத பின்விளைவுகளை கருதி அந்த முடிவுக்குச் செல்லவில்லை. அந்த மனுஷன் அதிகாரிகளிடம் எத்தனை பவுன் அல்லது ஆயிரங்களை அபராதமாய் இழந்தாரோ.. அதையெல்லாம் நினைத்து கவலைப்பட யாருக்கும் அங்கே நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. அது போல் இன்னொரு பயணத்தில் என் முன் மற்றுமொரு அம்மா தன் பெண் கொடுத்தனுப்பிய தங்க காசுகளில் சிலவற்றை கஸ்டம்சில் இழந்திருக்கிறார். அவர் படித்த பிராமணப்பெண், ஆங்கிலத்திலும் எவ்வளவோ பிளந்துக் கட்டியும் பார்த்தார்; நியாயம் கேட்டார்.. ம்ஹூம்.. அதிகாரிகளிடம் எதுவும் பலிக்கவில்லை.

இதையெல்லாம் லட்சுமி அம்மாவிடம் ஒரு உரையாடல் போல பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. அதே நேரம் யாரும் விபரம் தெரியாதவர்களா என்ன அவரவர் கதைகளை அவரவர் பார்த்துக் கொள்வார்களென தூங்க முயற்சி செய்தவன் சற்று யோசித்து, அவர் பக்கம் திரும்பினேன்.. அதுவரை பிரகாசித்துக் கொண்டிருந்த அவரது பால் முகம் வியர்வைத் துளித்துக் கொண்டு சுருங்குவதைக் கண்டு பயந்து, என்னை உதறிக் கொண்டு, “என்னாச்சுங்கம்மா?” என்றேன்.

என் வலக்கையைப் பற்றிக் கொண்டு வாந்தி வருவது போல் சைகைக் காட்டினார். அவரை ரெஸ்ட் ரூம் வரை அழைத்துச் செல்லவெல்லாம் நேரமில்லை. பரபரவென எதிர் இருக்கையின் பின் புறம் சொருகப்பட்டிருந்த தடிமமான காகிதப்பையை உருவி, விரித்து அவர் பக்கம் நீட்டினேன். ‘உவாக்.. உவாக்’க்கென எடுத்துத் தட்டினார். அந்த பை பலமிழப்பது போல் தோன்றவே, அவரை சற்று பொறுக்கச் சொல்லிவிட்டு அதை கீழே வைத்தேன். அவர் இருக்கையின் எதிரிலிருந்த பையை எடுத்து மறுபடியும் நீட்டினேன். அதில் கொஞ்சமே எடுத்தார். ட்ஷ்யூ பேப்பரை கொடுத்தேன், சோர்ந்த முகத்தோடு அஹ் அஹ் என்று முனங்கியவாறு துடைத்துக் கொண்டார்.

தீவிரமறிந்து அருகிலிருந்தவர்கள் ஏர் ஹோஸ்டஸை அழைத்தார்கள். அவர் மருத்துவர் யாரும் இருக்கிறீர்களா என்று குரல் கொடுக்க, சுபாஷினி கனிகா எனும் கன்னட பெண் மருத்துவர் எங்கிருந்தோ விரைந்து வந்துப் பார்த்தார். அவர் சரியாக தூங்கவில்லை எனவும், சாப்பிட்ட உணவையும் வயிறு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நாடி, தாடையைப் பிடித்துப் பார்த்துச் சொன்னார். லட்சுமி அம்மாவின் கைகள் நீர் பூத்த ஐஸ் கட்டியாட்டம் பிடித்தால் வழுக்கிக் கொண்டுச் சென்றது. அம்மாவைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே அந்த மருத்துவர் சொன்ன ‘கவலைப்பட ஒன்றுமில்லை!’ என்ற வார்த்தைகள் தெம்பூட்டியிருக்க வேண்டும்; லட்சுமி அம்மாவும் சிரமப்பட்டு சிரிக்க முயன்றார். ‘ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஹர்!’ என்று புன்முறுவல் பூத்து எனக்கும் ஊக்கம் தந்துச் சென்றார்.

ஏர் ஹோஸ்டஸ் வெந்நீர் மற்றும் ஆரஞ்ச் மிட்டாய் போன்றதொரு வஸ்துவையும் அம்மாவிடம் நீட்டினார். வெந்நீரால் வாய் கொப்பளித்துவிட்டு, சிறிது குடித்தவர் மயக்கம் வருவது போல் இருக்கையில் சாய்ந்தபடி மிட்டாயை உள்ளங்கையில் இறுக்கிக் கொண்டார். எனது கைகளிலும் வாந்தி கொஞ்சம் பட்டிருந்தது; சுத்தப்படுத்திக் கொள்ள ரெஸ்ட் ரூம் சென்ற எழுந்தேன். அந்த சோர்விலும் என்னை பரிவொடுப் பார்த்தார். 

‘ஒன்றுமில்லை சரியாகிவிடும்..’ ‘முதல் பயணம்ல அதான்..’ ‘கவலைப்படாதீங்க!’ என்று மனதிலிருந்து வாய்க்கு எட்டிய ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னேன். சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு ஓய்வெடுத்தார்.

அப்படி இப்படி என்று ஒன்றிரெண்டு மணி நேரம் சென்றிருக்கும் மஸ்கட் விமான நிலையத்தை இன்னும் சில நிமிடங்களில் அடையப் போவதை மாலுமி ஒலிபெருக்கியில் அறிவித்தார். சத்தம் கேட்டு விழித்தவர் குடிக்க ஏதாவது வேண்டுமென்றார். வரக்காப்பி வரவைத்தேன். இப்போது பரவாயில்லை என்று ஓரளவு சகஜ நிலைக்கு வந்துவிட்ட மாதிரி சைகை காட்டினார். எனக்குள்ளும் ஒரு ஆசுவாசம் பிறந்தது. அவர் உடுத்தியிருந்த ஆடைகள் வியர்வையில் இறுகி காய்ந்த அடையாளங்கள் ஆங்காங்குத் தென்பட்டன. ரெஸ்ட் ரூம் நானேக் கூட்டிச் சென்றேன். முகத்தை நன்றாக கழுவிய புத்துணர்வு கதவை திறந்து கொண்டு அவர் வெளிப்பட்டபோது பளிச்சிட்டது. மனம் இலகுவானது.

பொதுவாக இரயில் பயணங்கள் போலத்தான் விமானத்திலும் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டால் அதுவரை எவ்வளவு பேசியிருந்தாலும் பழகியிருந்தாலும் அந்த பரிச்சயம் அடுத்த கட்டத்திற்கு பெரும்பாலும் போவதில்லை. இத்தனை வருட வளைகுடா வாழ்க்கையில் ஒரே ஒரு சகப்பயணி மட்டும் தனது தொடர்பு எண்ணை என்னிடம் பகிர்ந்திருந்தார். இருந்தும் நான் அழைத்துப் பேச முயற்சியெடுக்கவில்லை.

இன்னும் சில நிமிடங்களில் அல்லது ஓரிரு மணி நேரங்களில் லட்சுமி அம்மாவும் அப்படிதான் விமான நிலைய சம்பிரதாயங்கள் முடிந்து வெளியேச் செல்லும்போது அவருக்கான வண்டியும் எனக்கான வாகனமும் எங்களைக் கூட்டிச் செல்ல காத்திருக்கும். ஒரு மரியாதை நிமித்தமான வணக்கத்தையும் நன்றியையும் பெற்றுக் கொண்டு அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்ல வேண்டியதுதான் என்று எனக்குள்ளாகவேப் பேசிக் கொண்டிருந்தேன்.

இறங்கியதும் தாலிபிற்கு போன் செய்தேன். தாலிப் கம்பெனி டிரைவர். ஓமானி. ட்ரைவர் என்று சொன்னாலும் இளைய சகோதரன் போல பழகுவான். நேசம் மிக்கவன். எப்போது எங்கே செல்ல வேண்டுமென்றாலும் நொடிப் பொழுதில் வந்து நிற்பான். ஆனால் அப்போது நான் அழைத்த நேரம் போனை எடுக்கவில்லை.

இரவு நேரம் வேறு. எனது கவலை ரேகைகளைப் படித்த லட்சுமி அம்மா என்னாச்சு என்று விசாரித்தார். விபரம் சொன்னேன். “அவ்வளவுதானே? அதான் ஆனந்த் வருகிறானே..! நீங்க இருக்கிறதும் ஒரே ஊர்தானே.. எல்லாரும் ஒண்ணாப்  போய்க்க்கலாம் தம்பி!” என்றார். அதில் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாலும் தாலிபிற்கு என்னாவாகிவிட்டது ஏன் வரவில்லை என்ற கேள்விகள் எழுந்தன.

உடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவருக்கு போன் செய்து விசாரித்தேன். பிறகு கொஞ்ச நேரத்தில் தாலிபே என்னைத் தொடர்பு கொண்டான். சில தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த நேரத்திற்கு புறப்பட முடியவில்லையாம். இனிமேல்தான் கிளம்பி வர வேண்டுமென்றான். மன்னித்துக்கொள்ளும்படி கெஞ்சினான். அவன் இனி கிளம்பி வந்தாலும் கூடுதலாக ஒண்ணரை இரண்டு மணி நேரங்களெடுக்கும். லட்சுமியம்மா கொடுத்த தைரியத்தில் நானே வந்துக் கொள்கிறேன் என்று விபரங்களைச் சொன்னேன். அவனும் வேலை குறைந்ததென்ற நிம்மதியில் சரி என்றபடி போனை வைத்து விட்டான்.

விமான நிலையத்திற்குள் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு வெளியில் வந்தோம். ஆனந்த் தனது அத்தையை அடையாளம் கண்டுகொண்டு எங்களை நோக்கி வந்தார். நான் அதற்குமுன் அவரை ஓரிரு முறை பார்த்திருக்கிறேனே தவிர பேசியதில்லை. என்னதான் லட்சுமி அம்மாவை நான் கூட்டி வந்திருந்தாலும், அவர்களுடன் காரில் செல்வது பற்றிக் கேட்பது கூச்சமாக இருந்தது. டாக்சியில் செல்லலாம் என்றால் அந்த இரவில் அது நல்ல யோசனையாகப்படவில்லை.

நம்ம ஆளுதானே.. என்ற எண்ணத்தில் சந்தித்த உடனே நானே விசயத்தைச் சொன்னேன். அதை அவர் எதிர்பார்க்காதவராய் சங்கடத்தோடு தயங்கி ஒத்துக் கொண்டது போல் தெரிந்தது. கூடவே ஆசை ஆசையாய் தங்களை நாடி வந்த தன்னுடைய அத்தைக்கு அவர் கொடுக்க வேண்டிய வரவேற்பை எதிர்பார்த்திருந்த அளவில் கொடுக்காததை லட்சுமி அம்மா முகம் தொலைத்திருந்த அந்த ட்ரேட் மார்க் புன்னகையிலிருந்து படித்துக் கொள்ளவும் முடிந்தது. மனதில் புதுக் குழப்பம் மேலெழுந்தது.

மறுபடியும் யோசனைகள்.. அந்த நேரத்தில் டாக்சியில் அவ்வளவு தூரம் செல்வது நல்ல முயற்சியாகப்படவில்லை. ஒருவாறு என்னை தளர்த்திக் கொண்டே அவரது வண்டியில் ஏறினேன். லட்சுமி அம்மாதான் கொஞ்சம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தார். ஆனந்திடமிருந்து பட்டும் படாமலும் பதில்கள்.. அதை பார்க்க எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. கூடவே பேச்சோடு பேச்சாக என்னைப் பார்த்து உங்களுக்கும் டாக்சி செலவு மிச்சம் என்றும் சொல்ல எனக்கு கோபமும் வருத்தமும் அதிகமானது. அவரது பேச்சை சமாளிக்க சிரிப்பது போல நடிக்க முயன்றேன். பிறகு எங்கள் எல்லைகளை அடையும் வரை ஒரு வார்த்தை யாரும் பேசிக் கொள்ளவில்லை. அவரது வார்த்தைகள் என்னைத் துளைத்துக் கொண்டேயிருந்தன. கொஞ்சம் நேரம் நானும் அயர்ந்து தூங்கியிருக்க கூடும். விழித்த போது என்னுடைய இடம் வந்திருந்தது.

அதன் பிறகு விடுமுறை நாளொன்றில் சதீஷ் தனது வீட்டிற்கு உணவுண்ண அழைத்திருந்தான். அப்படி அவ்வப்போது அழைப்புகள் வரும். லட்சுமி அம்மாவின் மகள் பக்கத்து வீடு என்று சொல்லியிருந்தேனல்லவா.. அந்த தெரு வளாகத்தில் நுழைந்து, சதீஷ் வீட்டை நாங்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வீட்டு வாசலில் லட்சுமி அம்மா பேரனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தவர் நாங்கள் வருவதை கவனித்ததும் புன்னகைக்க முயன்று, பின் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார். அது என்னை என்னவோச் செய்தது.

ஆனால் அவர் என்னை மறக்கவில்லை; அந்த அமைதியில் உனக்கு ஒழுங்கான பிரதி உபகாரம் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற பரிதவிப்பை உணர்ந்தேன். மேலும் அங்கே யாரிடமும் ஒழுங்காக பேசி பழக சரியான துணை யாருமில்லாத தனி மனுஷியை போல் ஒடுங்கிக் காணப்பட்டார். உள்ளேயேயும் ஏதோ சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

அன்று நடந்ததை எதுவும் நான் சதீஷிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவனாகத்தான் சொல்ல ஆரம்பித்தான், ஆனந்திற்கு தனது மாமியார் அங்கே வந்ததில் அதிக உடன்பாடில்லையாம். ஆனந்த் பிரசவ சாக்கை வைத்து தனது அம்மாவை இங்கேயே வரவழைத்து வைத்துக்கொள்ள நினைத்திருந்தானாம். அதன் பொருட்டு அடிக்கடி கணவன் மனைவியிடையே பலமுறை வாக்குவாதங்களும் எழுந்தடங்கியிருக்கின்றன. ஆனால் அதற்காக அவன் மைல்கள் தாண்டி வந்தவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கெல்லாம் வந்துவிட முடியாது. லட்சுமியம்மா எதிர்பார்த்து வந்தது போல் அந்த பயணம் அவருக்கு அவ்வளவு இனிமையாக இல்லாதது மட்டும் எனக்கு விளங்கியது.

அவரைப் பற்றி அதீதமாய் நானே ஏதேதோ யோசித்துக் கொள்கிறேனோ..?!

நண்பன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் எங்கள் உலகமும் வேறானது.

என்னைக் கண்டதும், “ரியாஸ் மாமா..!” என்று கைகளை விரித்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்த சதீஷின் ஐந்து வயது செல்ல மகள் ரக்ஷிதா ஓடோடி வந்தாள்.

“ரச்சுக்குட்டீ..!” அவளை அள்ளி வாரிக் கொண்டேன். எங்களின் சத்தம் கேட்டு தன் அறையிலிருந்து வெளிவந்த தங்கை ரம்யா எப்போதும் போல இன்முகத்துடன், “வாங்கண்ணா..!” என வரவேற்றாள்.

வழக்கத்திற்கு மீறி சின்னதும் பெரியதுமாய் மூன்று நான்கு உணவு வகைகள் கூடி, மொத்தம் ஏழெட்டு பாத்திரங்கள் மேசையின் மீது வரிசைக்கட்டி மூடி வைக்கப்பட்டிருந்தது. என்னவாக இருக்குமென எனது ஆர்வங்கள் கூடின.

“என்னமா இன்னைக்கு ஐட்டங்கள் கொஞ்சம் கூடுதலா இருக்கும் போலயே.. உங்க வீட்ல எதும் ஸ்பெஷலா? சதீஷ் கூட எங்கிட்ட எதுவும் சொல்லலையே..!”

“அதாங்கண்ணா.. ஆனந்தண்ணா வொய்ஃபு மசக்கையா இருக்காங்கல்ல.. அதனால அப்பப்ப நான்தான் போய் ஹெல்ப் பண்றது. இப்போ அவங்க அம்மா வந்த பிறகு அவங்களே மேனேஜ் பண்ணிக்கிறாங்க. அவங்க அம்மாவும் இங்க அப்பப்ப வருவாங்கத்தான். ஹெல்ப் பண்றேனு சின்ன சின்ன வேலைகள் மறுத்தாலும் கேட்காம செஞ்சுக் கொடுப்பாங்க. இன்னைக்கு எதார்த்தமா நீங்க வர்றீங்கன்னு சொன்னேனா.. யாரு? என்னைய வரும்போது கூட்டி வந்தாப்ளயே.. அந்த பையனானு விசாரிச்ச மேனிக்கு அவங்களாவே இன்னைக்கு நானே எல்லாத்தையும் பண்றேன்னு.. சட்டு சட்டுன்னு நிறைய பண்ணி வச்சிட்டாங்கண்ணா! அவங்க வீட்டுக்கும் எடுத்து வச்சிருக்கேன். கொண்டு போயி கொடுக்கணும். நல்லா சமைப்பாங்க போல டேஸ்ட்டு செம்மையா வந்துருக்குண்ணா.. ரொம்ப நேரம் ரெண்டு பேரும் நல்லா வெளில சுத்திட்டு வந்திருக்கீங்க.. இன்னைக்கு உங்களுக்கெல்லாம் செம்ம வேட்டதான் போங்க! அப்புறம்ங்கண்ணா..” என்று படபடவெனப் பேசிக் கொண்டிருந்தவள் கொஞ்சம் நிறுத்தினாள். நானும் சதீஷும் அவளையேப் பார்த்தோம்..

“உங்கள பத்தி நிறைய சொன்னாங்கண்ணா.. பெத்தப்புள்ள மாதிரி பொறுப்பா கொண்டு வந்து சேத்தீங்கன்னு.. ஃப்ளைட்ல நடந்த எல்லாத்தையும் கூட சொன்னாங்கண்ணா. கேக்கவே ரொம்ப சந்தோசமா இருந்திச்சிங்கண்ணா!” என்று மறுபடியும் ஒரு இடைவெளியை விட்டாள்.

“இன்னைக்குத்தான் நிறைய நேரம் ஏங்கிகிட்ட பேசிட்டு இருந்தாங்க.. வந்ததிலேர்ந்து நானும் கவனிச்சிருக்கேன் அவங்க ஃபேமிலில ஏதோ இஷ்யூஸ் போல.. அதனால நானா அவங்ககிட்ட அதிகம் பேச்சுக் கொடுத்துக்கிட்டதில்ல. ஆனந்தண்ணா வொஃய்ப் கிட்டேயும் அதைப்பத்தி வெளிப்படையா எதுவும் கேட்டுக்கிட்டதில்ல. அப்பப்ப சின்னதா ஹெல்ப்ஸ் பண்றதோட சரி. இன்னைக்குத்தான் அவங்க வந்ததுலேர்ந்து நிறைய நேரம் மனசு விட்டு பேசினாங்க. அதுக்கு நீங்க வர்றீங்கன்னு சொன்னதும் ஒரு காரணம்” என புன்னகைத்தாள். 

எனக்கு கண்கள் சுரப்பது போல் உணர்ந்தேன்.

“இன்னைக்கு அவங்களும் நம்மளோடேயே சாப்பிட்டா நல்லாருக்கும்ல..ம்மா?!” என்று சொன்னபோது சதீசும் தலையசைத்தான்.

“நானே நெனச்சேங்ண்ணா..!” என்றபடி நொடியில்  சிறகு முளைத்தவளாய் ரம்யா வாசல் பக்கம் விரைந்தாள்.

***

இத்ரீஸ் யாக்கூப்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *