சென்னியப்ப முதலியார் போன வாரம் நெய்த சேலைகளை வழக்கமாகப் போடும் கடைக் காரனிடம் போட்டுவிட்டு, இந்த வாரத்துக்கு வேண்டிய ‘பாவு’ நூலுடனும் இரண்டொரு முடிச்சுக்களுடனும் கீரனூரை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அநேகமாக வந்து விட்டார் என்றே சொல்லவேண்டும். அதோ, கோவிலும், கிணறும், புளிய மரமும், அருகில் உள்ள ஐயர் வீடும், அதற்கப்பாலுள்ள பாவடியும், இன்னும் இடிந்தும் இடியாமலும் இடிந்து போய்க்கொண்டுமிருக்கிற எல்லா வீடுகளுமே தெரிகின்றனவே!

முதலியார் இப்போது அடி எடுத்து வைக்கும் பாறை ரொம்ப மேட்டிலுள்ளது. வண்டிச் சக்கரம் பாறையின் இரு பக்கங்களிலும் பதிந்து பதிந்து குடைந்திருந்தது. அதன் ஓரமாக, கல் இடுக்கில், கால் சரிக்காமல் கடப்பதற்கு கொஞ்சம் பழக்கமும் வேண்டித்தானிருந்தது. அங்கே யிருந்து பார்த்தால், கூப்பிடு தூரத்தில் உள்ள கிராமக் காட்சிகளெல்லாம் தெரியும் என்றாலும், இந்த உச்சி நேரத்தில் ’அன்னநடை’ போட்டுக்கொண்டு தலையைத்தூக்கி எந்தக் காட்சியையும் காணவேண்டுமென்று ஆவல் எழாது.

சூடேறிய இரும்புத் தகடுபோலுள்ள அந்தப் பாறையிலிருந்து, முதலியார் துரிதமாகக் கீழே மணலுக்கு வந்ததும், “அடடா! கால் வெந்துதான் போகும்; இப்படிப் பத்திக்குதே!” என்று சொல்லிக் கொண்டே, மூட்டையைக் கை மாற்றிக்கொண்டார்.

காலையில் புறப்படும்போது, மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து விடவேணும் என்றுதான் முதலியார் நினைத்திருந்தார். ஆனாலும், வழக்கம்போல் கடைக்காரன் தாமதம் பண்ணிவிட்டான். ஒவ்வொரு புடவையாக எடுத்து

”இதிலே ஏன் பட்டுக்குறி நன்றாயில்லை? அங்கே ஏன் ‘பொறசல்’ விழுந்தது? இங்கே இழை படர்ந்து வந்தது தெரியலையா? இது அப்படி; அது இப்படி. இதிலே அது சொத்தை; அதிலே இது சோடை” என்று அவன் தன் புராணத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டால், நேரம் ஆகுமா, ஆகாதா?

“அடுத்த வாரத்துக்கு ஆகட்டும், விடிஞ்சதும் விடியாமே போயிடறேன். அப்படி அதி காலையிலே போனால், இள மத்தியானத்துக்குள்ளே வந்திட லாம்” என்று முதலியார் நினைத்துக் கொண்டார். இப்படி நினைப்பது இன்றைக்குப் புதிதல்ல. கடந்த இருபது வருஷங்களாக, அவர் தறிக்குழியில் உட்கார்ந்து, ‘நாடா’வை இந்தப் புறமும் அந்தப் புறமும் ஓட்ட ஆரம்பித்ததிலிருந்து, இப்படியேதான் நித்த நித்தம் நினைத்து வந்திருக்கிறார். ஆனால், அந்த நினைவெல்லாம் கருத்தளவிலேயே அணைந்து விடுகிறதே ஒழிய, கிரியாம்சையில் இன்று வரை பிரகாசிக்கவில்லை.

“என்ன,கூப்பிட்டது காதில் விழலியா?’ என்ற குரல் கேட்கவும், முதலியார் திரும்பிப் பார்த்தார்.

புளிய மரத்தடியில் புட்டுக் கூடையுடன் உட்கார்ந்திருந்த கிழவன் சிரித்துக்கொண்டே, “ஏனப்பா, நிலா வெளிச்சமாட்ட நடக்கிறையே; செருப்பு வாங்கிப் போட்டுக்கப் படாதா?” என்று அவன் கேட்டான்.

இரண்டு மாத காலமாகவே செருப்பு வாங்க வேண்டுமென்று தாம் தீர்மானித்திருந்த விஷயம், அப்போதுதான் முதலியாருக்கு ஞாபகம் வந்தது. அது வந்து என்ன செய்கிறது? அன்றாடம் சம்பாத்தியத்தால் ஏதோ வயிற்றைக் கழுவலாம் என்ற நிலையைத் தாண்டி மேலுக்குப் போக முடியவில்லையே! என்ன கரணம் போட்டாலும் வரவுக்கும் செலவுக்குமே சரிக்கட்ட வில்லை. சில சமயம் கடனும் வந்து விடுகிறது. அந்தப் பற்றுத் தராசுதான் கீழ் நோக்கிப் போகிறதே தவிர, தாராளத்துக்கு அங்கே இடமே இல்லை. முதலியார் அடிக்கடி சொல்லுகிற மாதிரி, ஆடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியாயிருந்தது.

எதையோ சொல்ல எண்ணிய முதலியார் அதைவிட்டு “இந்தப் புளியமரம் இருக்கிறவரை நீங்களும் இங்கேதான்” என்றார்.

”என்னப்பா அப்படிச் சொல்றே!” என்று கேட்ட கிழவன், மறுபடியும் சிரித்து விட்டு, “உம், யாரப்பா கண்டது? நான் இண்ணைக்குச் செத்தா நாளைக்கு இரண்டு நாள். இந்த மரமும் என் கூடவா வந்திடப் போவுது?” என்றான் ஒருவிதச் சலிப்போடு.

உண்மை; அந்த விருத்தனோடு அம்மரமும் உடன்கட்டை ஏறி விடப் போவதில்லை. ஆனால், அது இருப்பதாலும், ஒன்றும் பிரயோ ஜனமில்லை பூக்கிறது, காய் காய்க்கிறது என்ற பேச்சே அதனிடம் எந்தக் காலத்திலும் கிடையாது.

ஏதோ மொட்டையாக இல்லாமல், கொம்பில் கொஞ்சம் தழைகள் ஓட்டிக்கொண்டிருக்கின்றன; அவ்வளவுதான். கிழவனுடைய வியாபாரத்துக்கு ஏற்ற இடமாக விளங்கும் பெருமை ஒன்றுதான் அது பெற்ற பாக்கியம். முதியவன் சொன்ன தொன்றையும் முதலியார் கவனிக்க வில்லை, அவருக்கு எத்தனையோ ஜோலிகள், கவலைகள். “சரி; சாவகாசமாய்ப் பேசிக்கலாம். நான் வாரேன்” என்று சொல்லிக் கிளம்பினார்,

பாவடியை அவர் தாண்டும் போது, அங்கே கற்களின் அடியே கஞ்சிப் பசை வறண்டு ஏடாக நிற்குமிடங்களில், கழிநூல் ஏராளமாகக் குவிந்திருப்பதைக் கண்டு “எதுக்கும் கொஞ்சம், பாங்கு, பணிக்கு வேண்டாமா? இப்படிக் கண்டபடி சேதம் செய்திருக்காங்களே, பசங்கள்!” என்றும் இன்னும் பலவிதமாகவும் யோசனை செய்துகொண்டே தம் வீடு வந்து சேர்ந்து, தமது மூட்டை முடிச்சுக்களை இறக்கி வைத்தார்.

இத்தனை நேரமும் வைத்த கண் வாங்காமல் தடம் பார்த்துக் கொண்டு நின்ற முதலியாரின் மனைவி தங்கம்மாள், அவரது மூட்டை முடிச்சுக்களை எடுத்துப் போய், அதனதன் இடத்தில் சேர்த்துவிட்டு, ஒரு செம்பு தண்ணீர் கொண்டுவந்து திண்ணையிலே வைத்துக்கொண்டே, “இலை போடட்டுமா?” என்று கேட்டாள்.

“என்ன அவசரம்! சற்றுப் போகட்டும். முதலிலே பாயை விரி” என்று முதலியார் சொன்னார்.

அந்த அம்மாள் பாயை எடுத்து வந்து போட்ட பின்பு, “தலையணையும் வேணுமோ?” என்று கேட்டு நகைத்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவர் சாப்பிட எழுந்து விடுவார். இந்தச் சயனம் சிறிது சிரம பரிகாரம் செய்யத்தான் என்பதாலேயே, அவள் அவ்விதம் கேட்டாள். “கொஞ்சம் விசிறி எடுத்து வந்தாலே போதும்’ என்று சொல்லிக்கொண்டே, அவர் படுத்தார்.

மடியில் சுற்றி வைத்திருந்த சில்லறை, அவர் கீழே படுக்கவும், சலசலத்தது.

“இந்தா…….” என்று மனைவியைக் கூப்பிட்டார்.

“ஏன்? விசிறி வாண்டாமா?” என்று உள்ளிருந்து குரல் வந்தது.

முதலியார் பேசவில்லை. அதற்குள்ளாக, ”இருக்கிறது இரண்டே முக்கால் ரூபாய்தானே? அரிசிக்காரனுக்கு ஒண்ணரை; எண்ணெய் புளி வாங்கினது அஞ்சணா.. அப்புறம் தெக்கால வீட்டானுக்கு ஒரு மூணணா ……..” என்ற கணக்கில் மூழ்கிவிட்டார்.

என்னமோ சொன்னீங்களே? என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள் மனைவி.

”அட ஆமாம். நீ ஏனோ மறந்திட்டயேண்ணு பார்த்தேன்” என்று சொல்லிய முதலியார், தம் கையில் உள்ள பணத்தை மூடிக்கொண்டே காட்டினார்.

“மறக்கிறாப் போலவா இருக்குது! அந்த மிளகாய்க்காரி இந் நேரம் ‘சில்லு சில்லுன்னு’ நின்னாளே. மூணரைத் துட்டுக்குப் பெரிய போடாப் போடறா. அவ கிட்டே வாங்கப் படாதுன்னு இருந்தாலும், வாங்க வேண்டி வந்திடுது” என்று ஆரம்பித்தாள் மனைவி.

முதலியார் தடுத்து, “அதெல்லாம் என் கிட்டச் சொல்லாட்டி என்ன? இவ்வளவுதான் இருக்குது, எல்லாம் எப்படியோ சமாளிச்சுக்கோ” என்று கூறி, ஒரு அணாவைத் தம் சொந்தச் செலவுக்கு வைத்துக்கொண்டு, மீதியைத் தமது மனைவியிடம் கொடுத்தார். அதைக் கொடுக்கையில், கை தவறி நாலைந்து அணா வாசற்படிக் கல்மீது விழுந்தது.

“எதண்ணா! துட்டுச் சத்தமாய்க் கேட்குது?” என்று விசாரித்துக்கொண்டே பக்கத்து வீட்டு அப்பாவு வந்தான்.

“ஆமாமப்பா! நெசவுகாரன், நோட்டுப் பவுனைக் கனாவில்தான் பாக்க முடியும். துட்டு… செப் பத் துட்டுத்தான் நாம் கண்டது. அதுக்குங்கூடப் பஞ்சம் வரச் சொல்லறையா?” என்றார் முதலியார்.

“நானேன் சொல்றேன்? கடைக்காரன் கொடுக்கிற கூலியிலே எல்லாம் இருக்குது ” என்றான் அப்பாவு.

”அது நெசந்தானப்பா; அவன் கொடுக்கிற கூலிக்கு அவனுக்கு ஆண்டவன்தான் கூலி கொடுக்க வேணும்.”

அப்பாவு சொன்னான்: “மனம் நொந்தவன் திட்ட வேண்டிய தில்லை ; வயிறு நிறைஞ்சவன் வாழ்த்த வேண்டியதில்லை.! அண்ணா! அது கெடக்குது. நாளைக்கு எங்க பாவு துவையறோம். ஆள் ஒருத்தரையும் காணோம். நாளைக்கு உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். வாரயாண்ணா?”

“நீ பாவுக்குச் சொல்லத்தான் வந்திருப்பாயிண்ணு அப்பவே நெனச்சேன்” என்றாள் தங்கம்மாள்.

கண்ணை மூடிக்கொண்டிருந்த முதலியார், மௌனமாகவே இருந்தார்.

”அண்ணா! மறந்திடாதே” என்று சொல்லிக்கொண்டே, அப்பாவு எழுந்தான். அவன் புறப்படுகையில் “ஒரு இலை இருந்தாக் குடு” என்று தங்கம்மாள் கேட்டாள்.

அப்பாவு திரும்பி, ‘இல்லை’ யென்பதற்கு அடையாளமாக உதட்டாலும் தலையாலும் சைகை செய்துகொண்டே போய் விட்டான்.

முதலியாருக்கு அதிகப் பசிதான். ஆனால், ‘குளு குளு’ என்று வரும் காற்றில் அப்படியே படுத்திருப்பது ரொம்பச் சுகமாயிருந்தது. எதிரில் வாசலில் தங்கரளி மரம் சற்று நேரத்துக்கொருதரம் அசையும். அது அசையும்போது, “இது இப்படியே எக் காலமும் அசைந்து கொண்டிருந்தால், எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!” என்று எண்ணுவார். ஆனால், ஜடப்பொருளாக இருந்தாலும், எந்நேரமும் இயங்கிக் கொண்டே யிருக்க முடியுமா?

“அப்பாடி!” என்றுகையில் நெட்டை எடுத்துக்கொண்டே, முதலியார் திரும்பிப் படுத்தார். தலை மாட்டிலிருந்த தறியின் விளிம்பில் அவர் கை சுருக்கெனப் பட்டு விட்டது. ஓரத்தில் சாய்ந்திருந்த நாடா ‘லொடக்’கென விழுந்தது. அந்த நாடாவிலுள்ள பட்டுத்தாரைப் பார்த்ததும், “இதை எடுத்து வைக்கப் படாதா? பிரிந்து போச்சுன்னா இது என்னத்துக் காகும்?” என்று மனைவி காதில் விழச் சொன்னார்.

உள்ளே பூவரசம் தழைகளில் இலை தைத்துக் கொண்டிருந்த மனைவி “ஆச்சு ஆச்சு, இதோ ஆயிட்டது” என்று பதில் குரல் கொடுத்தாள்.

“நான் ஒண்ணு கேட்டா, இவளொண்ணு சொல்றது இன்னைக்கித்தான் புதுசா?” என்று, முதலியார் தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார். அப்படியே எதை எதையோ பற்றி எண்ணியவர், தம்மைப்பற்றி நினைக்கவும் கிலேசமடைந்தார். அந்த ஏக்கத்தால், அவருக்கிருந்த பசியும் பறந்து போய் விட்டது.

“நித்தமும் ஓயாமல் இந்த ஒரே வேலைதானா? சாப்பிடும் நேரத்தைத் தவிர, மற்ற வேளைகளில் எல்லாம் தறிக்குழியிலேயே அழுந்திச் சாகவேண்டியதுதானா? இவ்வளவும் சோற்றுக்கு………அட ஊரிலுள்ள எத்தனையோ பேர், நாடகம் பார்க்கப்போகிறார்கள்; சினிமாப் பார்க்கப் போகிறார்கள். என்ன என்னவோ கண்டு வந்ததாகச் சொல்லுகிறார்களே! ஆனால், நமக்கு வெளியே போக வழியுண்டா? அப்படிப் போனாலும், ஒரு ராத்திரி தூக்கம் முழித்தால், இரண்டு மூன்று நாளைக்குச் சேர்ந்தாற்போல் தூங்கியாக வேண்டுமே !… என் ஜன்மம் இப்படி! யாரைச் சலித்து என்ன பயன்?…” என்று ஏதோ எண்ணி ஏங்கினார்.

தங்கம்மாள் சாதம் பரிமாறிக் கொண்டே, “எளுந்திருச்சு வாங்கோ” என்று குரல் கொடுத்தாள்.

முதலியார் தொடர்ந்து யோசித்தார்: “இந்த வாழ்க்கை வசதிகள் எல்லாம் யாருக்கு? மனிதனுக்கா, மிருகத்துக்கா? அப்படியானால் நான் மனிதனல்லவா? சீமான் வீட்டில் நான் பிறக்கவில்லையே என்பதற்காக வருத்தப்படவில்லை. இந்தக் கூரை வீட்டில் இருந்தாலும், இருக்கிற வரையிலுமாவது சுகமாக இருந்துவிட்டுப் போக வேண்டாமா?”

இப்படி நினைத்துக்கொண்டே, முதலியார் மெதுவாகக் கண்ணயர்ந்தார். அந்த நித்திரை நிலையிலே அவரை வாட்டும் வேதனையும் இல்லை. மனிதனுடைய வாழ்நாளிலே பாதிக்காலம் தூக்கத்தில் வீணாகி விடுகிறது’ என்கிறார்கள். ஆனால் அந்தத் தூக்கமும் இல்லாதிருந்தால்…

000

எமது நன்றிகள் :- சக்தி 1941 இதழில் வந்த கதை.

ஆர். ஷண்முகசுந்தரம் (1917-1977) தமிழக எழுத்தாளர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய “நாகம்மாள்” என்ற புதினம் இவரின் பெயரை முன் நிறுத்தியது.

பழைய கோவை மாவட்டத்திலிருந்த தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் செல்வாக்குமிக்க, வசதியுள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார்[1] குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஷண்முகசுந்தரம்.

நாகம்மாள் 1942, பூவும் பிஞ்சும் 1944, பனித்துளி 1945, அறுவடை 1960, இதயதாகம் 1961, எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் 1963, அழியாக்கோலம் 1965, சட்டிசுட்டது 1965, மாலினி 1965, காணாச்சுனை 1965, மாயத்தாகம் 1966, அதுவா இதுவா 1966, ஆசையும் நேசமும் 1967, தனிவழி 1967, மனநிழல் 1967, உதயதாரகை 1969, மூன்று அழைப்பு 1969, வரவேற்பு 1969 முதலியன இவரது நாவல்கள். 

நந்தா விளக்கு, மனமயக்கம்  (சிறுகதைத் தொகுப்பு)

மொழிபெயர்ப்புகள் :- பதேர்பாஞ்சாலி, கவி – தாராசங்கர் பானர்ஜி, 1944, அல்லயன்ஸ், சென்னை, சந்திரநாத், பாடகி, அபலையின் கண்ணீர், தூய உள்ளம், இந்திய மொழிக் கதைகள் (1964)

ஆர்.சண்முகசுந்தரம் பற்றி வந்துள்ள முக்கிய நூல்கள் வருமாறு:

கொங்கு மணம் கமழும் நாவல்கள் – டி.சி.ராமசாமி

ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை – பெருமாள்முருகன்

இலக்கியச் சிற்பிகள் வரிசை : ஆர்.சண்முகசுந்தரம் – சிற்பி பாலசுப்பிரமணியன்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *