1
தலைக்கட்டு__ சிறுகதை
***************************
–சுபி
1
அபிசேகம் செய்யும் பூசாரி தங்கராசு, கரகம் தூக்கும் பூசாரி சரவணன், காவடி தூக்கும் பூசாரி பாலாஜி மூவரும் தங்கள் குலதெய்வக் கோவிலின் முகப்பு மண்டபத்தில் உட்கார்ந்திருந்தார்கள். மூவரும் பேசி வைத்தபடி மனதுக்குள் குறித்து வைத்துக்கொண்ட மூலையில் பல்லி சயனம் கொடுக்கிறதா என்று உற்றுக்கவனித்தபடி இருந்தனர். அமர்ந்து ஒரு மணி நேரம் தாண்டிவிட்டது.
தங்கராசுதான் வாயைத் திறந்தார் முதலில். ‘இத்தன வருசமா பூசபண்ணி உன்னக் குளிர வச்சிருக்கோம். அறிஞ்சு அறியாம தெரிஞ்சுந் தெரியாம ஒம்புள்ளங்க நாங்க ஏதாவது தப்பு பண்ணிருந்தா மன்னிச்சு ஏத்துக்கிடு. உனக்கு காப்பு கட்டி கரஹம்பாலிச்சு, காவுடி எடுத்து, ஆத்து தண்ணில குளிப்பாட்டி கும்புடு போட சயனங்கொடு கன்னிமாரு’ கைகளை உயரத்தூக்கி வணங்கினார்.
அவர்கள் பேசிவைத்த வடமேற்கு மூலையில் பல்லி ‘படிபடீபடீர்’ என அடித்தது. மூவருக்கும் இருப்பு கொள்ளவில்லை. சந்தோஷத்தில் கைகால் ஓடவில்லை.
‘நம்ம என்ன கொற வச்சம். நம்ம கும்படற சாமி நம்மைக் கைவிடலப்பா. சாமி சயனம் நல்லபடியா குடுத்துருச்சப்பா. அல்லா அங்கும்பங்காளிய வரச்சொல்லி கூட்டம் போடோணுமப்பா உடனே!’ என்றார் தங்கராசு. எல்லோருக்கும் தகவல் சொல்லப்பட்டு அந்த வார இறுதி நாளில் கூட்டம் போடப்பட்டது.
கரஹம் பாலித்தல், காவடி தூக்குதல், ஆற்றில் தண்ணி எடுத்து வருதல், கெடாவெட்டிப் பொங்கல் வைத்து படையலிடுதல், பொது வேண்டுதல்கள் என்று ஒவ்வொன்றுக்குமான நாளை, நேரத்தைக்குறித்தனர். ஒரு நல்லநாள் பார்த்து காப்பு கட்டினர். நோட்டீஸ் அடித்து எடுத்துக் கொண்டு எல்லா பங்காளிகள், மாமன் மச்சான்மார்களுக்கு, பிறந்த பிள்ளைகளுக்கு அழைப்பு விடுக்க ஊர் ஊராக கிளம்பிச் செல்ல தங்கராசுவும், பாலாஜியும் செல்வது என்றும், சரவணன் கோவிலில் இருக்கும் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டும், கோவில் இதர நிகழ்ச்சிநிரல் வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு முறையும் கூட்டம் போடுகையில் கருத்து வேறுபாடுகளுக்குப் பஞ்சமிருக்காது. வெளியூரில் இருந்து அடிக்கடி வரமுடியாத, அன்று முளைக்கும் காளானென திடீரென எப்போதாவது வரும் பங்காளிகள் அல்லது அவர்கள் புத்திரர்கள் என்று அனைவருக்கும் வரவு செலவு கணக்குகளை சொல்வதற்குள் கிறுக்குப் பிடித்தாற் போலாகிவிடும். இந்தக் கூட்டத்தில் எப்போதும் வராத புதுப்பிரச்சினை ஒன்று முளைத்தது.
‘நம்ம கோயில் கருவறைக்குள்ள பொம்பளயாளுக ஆரும் போவக்கூடாதுனு தெரியுமில்லெ.. அதென்ன காவடி பூசாரி பாலாஜி சம்சாரம் பட்னு அன்னிக்கு உள்ள போகுது… அதுக்கு வெவரந்தெரியாதா’ என்றார் ஈரோட்டில் இருந்து வந்த பங்காளி கோபால்.
‘அது தெரியாமல் நடந்து போச்சுங்ண்ணா. நம்ம பாலாஜி கண்ணாலம் பண்ணி கொஞ்சநாள்தான் ஆவுது. அவெ பொறுப்புக்கு வந்த பொறவு அந்த புள்ள இப்பத்தேன் கோவிலுக்கு வந்தது… வெவரந்தெரியாம சடக்குனு போயிருச்சு, அப்பறம் அது வழக்கமில்லீனு சொல்லிப் புரிய வச்சாச்சுங்கண்ணா’ என்றார் தங்கராசு.
‘ஓஹோ, ஒங்களுக்கு ஒரு நாயம், எங்களுக்கொரு நாயமா? பூசாரி ஊடுன்னு சலுகை எடுத்துக்கறாங்கங்கறே? என்னய்யா யாரும் பேசாம வேடிக்கை பாக்குறீங்க? நம்ம ஊட்டுபொம்பளயாளுகளையும் இனிமேட்டு உள்ள உடலாமானு கேளுங்க ஆராச்சும்? இல்ல அப்படி போயிருந்தா இந்நேரம் தெரியாம நடந்துருச்சுனு உட்ருவாங்களா? குத்தங்கட்டுங்கனு சொல்லி இருப்பாங்களா இல்லியா? எல்லாரும் வரி குடுத்துத் தான சாமி கும்புடறம். அப்ப சலுகையு ஒண்ணாத்தான இருக்கோணு. நான் மட்டும் கேட்டு கெட்டவனாவோணு நீங்கள்லாம் நல்லவிங்க அப்படித்தான’ என்று மற்ற பங்காளிகளைப் பார்த்து கடுகடுப்போடு பேசினார்.
கோபால் தன் அண்ணன் மகனுக்கு காவடி பூசாரி பாலாஜி வகிக்கும் பொறுப்பை தரச் சொல்லி இரண்டு மூன்று முறை கூட்டத்தில் வலியுறுத்தினார். பாலாஜி குலதெய்வ கோவில் இருக்கும் ஊரான ஜெக்கம்பட்டியிலேயே இருந்ததால் எதுவாக இருந்தாலும் சென்றுவர அருகில் இருக்கும் என்று அவனைப் பொறுப்பில் போட்டதில் இருந்தே ஏதாவது பிரச்சினை வருமா எனக் காத்துக் கிடந்தார். அவருக்கு நல்ல வாய்ப்பு தருவது போல அந்த நிகழ்ச்சி நடந்துவிட்டது.
தங்கராசுதான் மீண்டும் சமாதானம் செய்தார். ஈரோடு மாவட்ட பங்காளிகளை அழைக்கப்போகும் போது ‘நீங்கள் வரவேண்டும் அப்பத்தான் ஒரு மரியாதையா இருக்கும்’ என அப்போதைக்கு அவர் வாயை அடைத்தார்கள்.
எல்லோரும் போனபிறகு பாலாஜி தான் கேட்டான். ‘என்னண்ணே, கோபாலண்ணே இந்த எவுரு எவுர்றாரு.?’
‘அட, அவரு அப்படித்தானப்பா. ஏதாவது குட்டிக்கலாட்டா உடலீன்னா அவருக்குத் தூக்கம் வராது. பொச்செரிப்பு புடிச்ச மனுசெ. இவனுங்க கைல கால்ல வுழுந்து சாமியக் கும்பிடங்காட்டி நம்ம டங்குவாரு அந்துரும். நீ புதுசுல்ல. கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிரும். இந்த புடுங்கலு புடிச்ச பதவிக்குத்தேன் இத்தினி அடிதடி பண்ணிக்கறானுங்க. நம்ம இதுலருந்து வெலகிக்கிரணுமப்பா வெரசா.’
கரூர் மாவட்டத்தில் இருந்து பாளையம் செல்லும் வழியில் பிரிந்து செல்லும் வெள்ளியணையில் இருந்து உள்ளே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது ஜெக்கம்பட்டி. ஒரு மணிக்கொரு முறை பேருந்துகள் வரும். வரக்காடு என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைவான வீடுகளே இருந்தன. சரவணன் தான்தோன்றிமலையிலும், தங்கராசு அருகில் இருக்கும் கிராமமான கொக்கம்பட்டியிலும், பாலாஜி ஜெக்கம்பட்டியிலும் இருந்தனர். மூவரும் கோவிலுக்கு வரவேண்டும் என்றால் தொலைபேசி வழியே வருகையை உறுதிப்படுத்திக் கொண்டு வேலை பார்க்க வந்து விடுவார்கள். மூவருக்கும் நல்ல அலைவரிசை இருந்ததால் திட்டமிடலை சரியாக வகுத்துக் கொண்டனர்.
2
நேற்று நடந்தது போலிருக்கிறது. பத்து வருடங்கள் ஓடிவிட்டது. வாசல் திண்ணையில் உட்கார்ந்து அந்த நிகழ்வை யோசிக்க யோசிக்க கண்களில் நீர் திரண்டு வெளியேறி புடவையில் விழுந்து மார்பை நனைத்தது விஜயாவிற்கு. கோபக்கார கணவன்தான் மூர்த்தி என்றாலும் பாசத்துக்கு பஞ்சமில்லாதவன். முந்தானையைக் காட்டி எல்லாம் அவனை மயக்கிவிட முடியாது என்பது விஜயாவுக்கு நன்கு தெரியும். எந்த வழியிலும் அவனை சரிக்கட்ட முடியாது. அவனாக ஒரு முடிவு எடுத்தால் அதை அவனே மாற்றிக்கொண்டால்தான் உண்டு.
ஒவ்வொரு முறை சாமிசாட்டும் போதும் இந்த வருத்தம் அழுந்தி அழுந்தி மேலெழுந்து அந்த நாட்களில் விஜயாவும், மூர்த்தியும் சரியாக பேசிக்கொள்ளாது தனித்தனியே புழுங்கிக் கிடப்பார்கள். ஒரு முறை மெல்ல விஜயா, ‘எந்த தப்புஞ்செய்யாம நாம ஏன் தண்டன அனுபவிக்கறாப்புல இப்புடி ஊரோட ஒட்டாம ஓரியாக் கெடக்கோணும்’ எனக் கேட்டபோது, ‘மீதி எதுனாலும் சொல்லு விஜயா, இந்த விஷயத்தில் என்ன வற்புறுத்தாத’ என்பார் மூர்த்தி.
குலதெய்வ வழிபாட்டுக்கு போகாமல் தான் தங்களுக்கு குழந்தை இல்லையோ என குழம்பித் தவித்தாள் விஜயா. குலதெய்வ வழிபாட்டுக்கு எல்லோரும் செல்லும் போது அவளும், அவரும் மட்டும் வீட்டில் அடைந்து கிடக்கும் சோகம் மேலும் ரணத்தைக் கிளறியபடியே இருந்தது. அந்த நிகழ்வுக்குப்பின் மூர்த்தி தனியாக வந்து பாளையம் செல்லும் வழியில் இருந்த ஜெகதாபியில் சிமெண்ட் கடைவைத்திருந்தார். அண்ணன் கடையில் வேலை பார்த்து கற்றுக் கொண்டு இங்கே வந்துவிட்டார். வீட்டில் யார் சொல்லியும் கேட்கவில்லை. தானே தனியே தொழில் செய்து வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்பதே அவர் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. தன் கடுமையான உழைப்பால் திறமையால் பத்து வருடங்களில் ஜெகதாபியில் நன்கு பெயரறிந்த கடையாக உருமாறியது அவருடைய ‘விஜயா சிமெண்ட்ஸ்’ கடை.
கும்புடுக்கு அழைக்க வந்து வாசலில் இறங்கினார்கள் தங்கராசுவும், சரவணனும்.
‘வாங்க மாமோவ், ஏது இந்தப் பக்கம்? காரணமில்லாம வரமாட்டீகளே. நீர் மோரு கரச்சுத்தரவா? என்னா குடிக்கிறவெக?’ வீட்டுக்கு வந்தவர்களை வாய் நிறைய விஜயா வரவேற்றாள்.
பழைய காலத்து வீடென்றாலும் பளிச்சென்று சுத்தமாக வைத்திருந்தாள் . வாசலில் பசுஞ்சாணம் போட்டு மெழுகியிருந்தது. ஒரு மேடுபள்ளமின்றி திமுசுக்கட்டையை வைத்து இடித்து சிமெண்ட் தரை போல் பளபளவென மின்னியது மெழுகியிருந்த வாசல். சுவர் ஓரத்தில் கூடை, முறம் எல்லாவற்றிலும் சாணமிட்டு மெழுகிக் காய வைத்திருந்தாள். வாசலில் இருந்த விறகு அடுப்பிலும் சாணம் இட்டு வழுவழுவென மெழுகி இருந்தது. சாட்டுக்கு போகா விட்டாலும் அந்த நாட்களில் வீடு முழுவதும் சுத்தம் செய்து வீட்டில் சாமியைக் கும்பிட்டு கணவன் மனம் மாறவேண்டுமென பிராது வைப்பாள்.
‘ஏம்மா விஜயா, அன்னிக்கு பாத்தாப்புலே படபடபடனு பேசற? இன்னும் மாறவேயில்லம்மா நீயி.?’
‘எதுக்கு மாமா மாறோணு. நாலு காசு கைல வந்தவொடன ஆடற பழக்கம் இந்த வரிக்காபட்டிக்காரிக்கு இல்லீங்கொ. எந்நாளுந் தன்னாளா இருக்கோணு…அதான் பொறப்புக்கு பெரும மாமோ.?’
‘செரி செரி, தம்பி மூர்த்தி இல்லியா, எங்க போயிருக்காப்புடி? எத்தனை மணிக்கு வருவாப்புடி? என்றார் தங்கராசு.
‘என்ன சோலிங்கொ மாமொ?’’
‘என்னத்தா இப்புடி கேக்குற. நம்ம ஜெக்கம்பட்டி சாமி நாலுவருசெங்கழிச்சு சயனங்கொடுத்துருக்கு இந்த வருசந்தே. மூர்த்தி தம்பி சொல்லலியா ஒங்கிட்ட.?’
‘அந்த வெவகாரத்துக்குப் பொறவு அவருக்கு மனசு உட்டுப்போச்சு மாமா. கோவில் சம்பந்தமா எதுவும் பேசமாட்டாரு எங்கிட்ட. எங்களுக்குப் பதிலாத்தே பெரிய மாமெ வந்து பணங்கொடுத்தாரே.. அப்பொறமென்ன மாமொ?’
‘அட ஏம்மா, எப்பயோ போனத இன்னும் யோசிச்சுகிட்டு. தம்பிக்கு பத்திரிகை வச்சுட்டு அவரு கிட்ட சிமெண்டு, கல்லு, மணலு ஏதாவது அனுப்ப முடியுமானு கேக்கோணு. இந்த மொற கோவில் வெளித் திண்ணைய நீட்டிவுட்டு ஒரு கேட்டு போட்ரலாமினு முடிவு பண்ணிருக்கம். நீ போன் பண்ணி சொல்லும்மா.?’
விஜயா போனில் தகவல் சொன்னவுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த அரைமணிக்குள் மூர்த்தி வந்துவிட்டார்.
‘வாங்கண்ணெ, வாங்க. பெரிய அண்ணெ போன் போட்டு தகவல் எல்லாஞ் சொல்லுச்சு..’என இழுத்தார் மூர்த்தி.
‘ஏம்ப்பா மூர்த்தி, சும்மா நாளுந்தெ நீ கோவிலுக்கு வாரதில்ல. நாலு வருசெங்கழிச்சு சயனந்தந்திருக்கு சாமி. நீ ரெண்டு கும்புடுக்கு வரல. கொலதெய்வத்துக்கிட்ட கோவிச்சுகிட்டு எங்கய்யா போறது நம்ம.’
அப்படி எல்லாம் இல்லெண்ணே என்று மூர்த்தி முடிப்பதற்குள் தங்கராசுவே தொடர்ந்தார்.
‘எனக்கு தெரியும்ப்பா. நீ எத மனசில வச்சுகிட்டு பேசறன்னு? மனுசெ பண்றதுக்கு தெய்வம் என்னய்யா செய்யு? அந்தாளு இன்னிக்கு கூட வம்பிழுத்தாப்டி. பங்காளிய உட்டுட்டு எங்கே போறதுனு அனுசரிச்சு பேசி வச்சிருக்கு.!’
‘அண்ணெ, எதுக்கு பழசயெல்லாங் கெளறிக்கிட்டு. அது நாசுவெங்குப்பெ கெளறுனாப்புலதே ஆவும். நாந்தே எந்த பிரச்சனையும் பண்ணிக்கறதில்லயே. பேசாம ஒதுங்கித் தானெ கெடக்கெ.’ கொஞ்சம் சூடாகப் பேசினார்.
‘தெரியுமப்பா. உன்னப் பத்தி தெரியாதா? அவெம்மூஞ்சில முழிக்கப்டாதுனு நல்லது கெட்டதுல கூட முழிச்சுக்க முடியாம இப்படி கெடக்கியேனு வருத்தமாருக்கு. நமக்கும் நாலு சாதிசெனம் வேணுமில்ல செத்தா கைநீட்டவாச்சு..’ தங்கராசுவும் விடாமல் பேசினார்.
‘அண்ணெ அந்தாளு இல்லனா கைநீட்டக்கூட ஆளில்லங்கெறீங்களா?’ வேற ஏதாவது வேணுமின்னா சொல்லுங்க. இந்தப் பேச்ச விட்ரலாமே.’
‘வாதத்துக்கு மருந்து தரலா. புடிவாதத்துக்கு எங்கே மருந்து தரது. ஒன்னோட உரிமையா பேசறதால கேட்டுப்புட்டேன் தம்பி.’ அவரே தொடர்ந்தார். ‘சரிப்பா. அழைக்கிறது மொற. அழைச்சாச்சு. அப்பற ஒம்பிரியம். இந்த வாட்டி கோவில் வெளித்திண்ணைய நீட்டி விடலாம்னு கூட்டத்தில் முடிவு பண்ணிருக்குல்ல… அதுக்கு மணல், சிமெண்டு செலவு எல்லாம் தேவைப்படுது. நீ ஏதாவது செய்ய முடியுமானு கேக்க வந்தோம்’ தங்கராசு சொல்லி முடித்தார்.
‘அதனால் என்னண்ணெ முழுச் செலவு நம்மளோடதுதே…எவ்வளவு வேணும் என்ன வெவரம்னு கணக்கு பண்ணிச் சொல்லுங்க…பசங்கள அனுப்பி வைக்கச்சொல்றேன்.’ நிறைவாகச் சொன்னார் மூர்த்தி.
3
திக்கென்று தூக்கத்தில் இருந்து விழித்தார் பூசாரி தங்கராசு. கழுத்தில் கிடந்த பச்சைத்துண்டால் முகத்தில் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக் கொண்டார். அவருக்கு நடந்தது கனவா நனவா என உணர வெகுநேரம் பிடித்தது. கோவிலிலேயே மணியடித்துப் பழியாக கிடந்த போதெல்லாம் கூட இப்படிக் கனவு வந்ததில்லை. அதுவும் சாமி கும்பிட நாளெல்லாம் குறித்த பிறகு இந்த மாதிரி நடந்தால் என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்தார். கழுத்துக்குக் கீழ் வேட்டி கட்டும் இடம் வரை மேல் சில்லிட்டுக் கிடந்தது.
கொல்லையில் கட்டியிருந்த கன்று ‘ம்மா ம்மா’ என்று சத்தமிட ஆரம்பித்திருந்தது. கோழி குடாப்புக்குள் இருந்து கொக்கரக்கோ சத்தம் காதில் கேட்டபோது கோழி தனது பஞ்சாரக்கூடையை ஆட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கூடையின் சந்து வழியே கோழி பார்த்தபடி தனது காலால் எட்டி உதைத்து வெளியே போகமுடியுமா என முயற்சி செய்தது. குஞ்சுகளின் க்ரீச் க்ரீச் சத்தமும் கோழியின் சத்தத்தோடு கேட்டது. தங்கராசு மெல்ல எழுந்து சென்று மாட்டுக் கொட்டத்தின் வலது புறமிருந்த தென்னந்தடுக்கு மறைவில் நின்று சிறுநீர் கழித்தார்.
கை காலைக் கழுவிக்கொண்டு கோபால் பல்பொடியை எடுத்து நன்றாக தரதரவென பற்களில் தேய்த்துக் கொப்பளித்தார். அருகில் கிடந்த தண்ணீர்த் தொட்டியில் கிடந்த அலுமினிய சொம்பால் வாய் கொப்பளித்து விட்டு திரும்பியபோது மாடு தலையை ஆட்டி வாலை மடிக்குள் அடித்துக் காண்பித்து சமிக்ஞை காட்டுவது போல் கொம்புகளை ஒரு முறை வேகமாக ஆட்டியது. மாட்டின் அருகில் சென்ற தங்கராசு லேசா கனச்சாக்கூட போதும், புள்ளய விட்டுட்டு இருக்க மாட்டியாக்கும் என செல்லமாக திட்டியபடி பக்கத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை அழைத்து வந்து மடியருகே நிறுத்தினார். வேகவேகமாக தலையாட்டியபடி மடியை முட்டி முட்டி காம்புகளில் தாகந்தணிக்கத் தொடங்கியது கன்று.
அவர் உடல் வேலை செய்தாலும் மனம் முழுவதும் சற்று நேரத்திற்கு முன் கனவில் வந்த சிறுமியும், அவளின் குரலும் மீண்டும் மீண்டும் மனதோடு ஓடிய படியே இருந்தன. அந்த கனவின் காரணம் புரிந்தாலும் அதை எப்படிச் செயல்படுத்துவது, வேறு யாரிடம் இதை சொல்வது என்று யோசித்தபடியே இருந்தார்.
மனம் ஆசுவாசமானவுடன் சற்று முன் வந்த கனவுக்காட்சியை துல்லியமாக மீண்டும் ஒரு முறை ஓட்டிப் பார்த்தார். ஒரு சிறுமி சிகப்பு நிற சட்டையும், பச்சை நிறப் பாவாடையும் அணிந்து கொண்டு இடுப்பு வரை தொங்கும் முடியோடு தலையில் குட்டியாக சும்மாடு வைத்தபடி அதன் மேல் ஒரு தோண்டியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு எங்கிருந்தோ நடந்து வருகிறாள். அந்தப் பெண்ணின் முகத்தை அவர் எங்கோ பார்த்தது போலவே இருக்கிறது. அவள் நெருங்கி வரவர யாரென்று அவருக்குப் புரிகிறது. புரிந்தவுடன் நாக்கு உலர கண்களைக் கசக்கி அவள்தானா என கூர்ந்து பார்க்கிறார். நடந்து வந்தவள் தனது கயிற்றுக் கட்டில் அருகே தலைமாட்டில் வந்து நிற்பதைக் கண்டதும் அவருக்கு தொண்டையில் இருந்து பேச்சு எழவில்லை. குரல் வெளிவராமல் அடைத்து விடுகிறது. தங்கராசு பார்க்கும் போதே தலைமாட்டில் நின்றவள் தன் தலைமேல் இருந்த தோண்டியை எடுத்து அவர் தலையோடு தண்ணீரை கடகடவென ஊற்றிவிட்டுச் சிரிக்கிறாள். தண்ணீர் மேலே பட்டவுடன் சில்லென்று சிலிர்த்த உணர்வில் அவர் எழுந்து கொண்டவுடன் ‘என்ன தூக்கம் எழுந்திரி பூசாரி’ என்கிறாள்.
கண்கள் மிளிர மிளிர இன்ன உணர்வென்று கண்டுபிடிக்க முடியாத முகத்துடன் பேசுகிறாள். ‘பல்லி படிபடினு அடிச்சதுன்னு சாமி கும்பிடப் போறீங்களே, எம்புள்ள இத்தின வருசமா வராம கெடக்கெ அதுக்கு ஒரு முடிவு கட்ட முடிஞ்சுதா. உங்கள சுத்தல்ல விடத்தே சயனங்கொடுத்தே’ என்றாள் வயதுக்கு மீறிய குரலுடன். தங்கராசுவுக்கு கிறுகிறுவென சுற்ற அவள் என்ன சொல்கிறாள் என்பதை ஒரு வழியாக யூகித்துக் கொண்டார்.
எம்பய புடிவாதக்காரெந்தே அதுக்குனு உட்ருவீகளா, எனக்கு குளுரவெக்கிறப்ப எல்லாத்தையும் தந்துப்புட்டு எப்பிடி மருவிக்கெடக்கறாந்தெரியுமா? இந்த கும்புடுக்கு அவெ வரலீன்னா எங்கெடா துளுக்காது. கும்புடு வேணாமெனக்கு. எம்புள்ளய ரெட்டக்கெடாயா வெட்டச் சொல்லு. அதேங்குறிப்பு பாத்துக்க. எம்புள்ள மருவும்போது நானிங்க மஞ்சக்குளிச்சு காவடியாடி குளுந்து என்னய்யா செய்யப் போறெ? தாயிக்குத்தேந் தெரியும் புள்ள மனசு. அவெ வந்தாத்தேங்குளிரும் எம்மனசு. எம்புள்ளக்கி மவளாப்போயாச்சு அவனச் சந்தோசமா பாக்கோணு. புரிஞ்சுதா தங்கராசு ரெட்டக்கெடா நானே கேட்டுருக்கே?
-குரல் கலைந்து உருவம் மறைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமி காணாமல் போயிருந்தாள்.
கன்றுக்குட்டியின் கயிறை விட்டவுடன் துள்ளியவாறு முன்புறம் ஓடியது. பாலருந்திவிட்டு தாடையின் அருகில் வந்து உரசிய கன்றுக்குட்டியை தாய் மாடு நாவால் நக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தது.
விடிந்ததும் விடியாததுமாக தங்கராசு போனை எடுத்து மூர்த்தி நம்பருக்கு அழைத்தார்.
4
சுந்தரேசனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். கடைசி மகன்தான் மூர்த்தி. எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இருந்தனர். மூத்த மகன் நல்லுச்சாமிதான் எல்லா சிமெண்ட் கடைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் காசு வரவுசெலவு எல்லாம் அவர்பார்வையில் இருந்தது. எல்லா கடைகளிலும் மூர்த்தி பம்பரமாக பறந்து போய் வரும் வசூலை எடுத்து வந்து அண்ணணிடம் கணக்கு தரவேண்டும். சாமி கும்பிடு வரும் போது எல்லோருக்கும் கல்யாணம் ஆகியிருந்தாலும் கூட்டுக்குடும்பம் என்பதால் ஒரே பொதுவரியாக தந்துவிடுவார் சுந்தரேசன். அந்த முறை சுந்தரேசன் இறந்துவிட்டதால் இனிமேல் அவரவர் பெயரில் தனி வரியாக தரலாம் என்றார் நல்லுச்சாமி, எப்போதும் போல ஒரே வரியாக இருக்கட்டும், உங்கள் பெயரிலேயே தந்து விடுங்கள் என்று இரண்டு தம்பிகளும் அவரிடம் சொல்லி விட்டார்கள்.
மூர்த்தியின் பெரிய அண்ணன் நல்லுச்சாமியின் சகளை ஈரோடு கோபால் அந்த முறை தாங்களும் இவர்களோடு சேர்ந்து கிடாவெட்டு வைப்பதாகவும் அதற்குரிய பணத்தைத் தந்துவிடுவதாகவும் சொல்ல வேறு வழியின்றி சகளையைத் தவிர்க்க முடியாமல் சரி சொல்லிவிட்டார். கோபாலுக்கு காசு மட்டும் தந்தால் போதும். சொந்த பந்தங்களை அழைக்கும் வேலைகள், மளிகை, சமையல் ஆட்கள் எதற்கும் மெனக்கெட தேவையில்லை. நோகாமல் வந்து நோம்பி கும்பிட்டுவிட்டு சென்றுவிடலாம்.
மற்ற ஊர்க்கார பங்காளிகளும் இந்தக் கோவிலுக்கு குலதெய்வ வழிபாடு செய்தார்கள். சமையலுக்கு ஆள் கூட்டி வந்து கூடாரம் போட்டு ஆங்காங்கே காடுகளை சுத்தம் செய்து சமைத்து முடித்ததும் தனித்தனி பந்தலிட்டு அவரவர் பந்தலில் கெடாவிருந்து வைப்பார்கள். மூர்த்தி எப்போதும் வேலை வேலை என்று ஓடி விடுவதால் சாமி கும்பிட முதல் ஆளாக வந்து தலையை காட்டிவிட்டுச் சென்று விடுவார்.
அன்று கெடாவெட்டு நடந்து கொண்டிருந்தது. இவர்கள் பந்தல் மேற்பார்வையை மூர்த்தியின் அம்மா மருதாயி பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எழுபதை நெருங்கியும் சோர்ந்து போகாதவள். துறுதுறுவென வேலை வாங்கி விடுவாள். சமையல் நடக்கும் போது கோபாலின் பையன் மருதாயி அப்பாயியிடம் சென்று கோழிக்கறி கேட்டிருக்கிறான். மருதாயிக்கு தனது மகன்கள் மீது எப்போதும் பொறாமைப்படும் கோபாலின் துஷ்ட குணத்தின் மீதிருந்த எரிச்சல் அவன் பையனிடம் தாவியது. ‘அதெல்லாம் இப்பகெடயாது, பந்தலுக்கு வரும் போது தான் எல்லாருஞ் சாப்பிடோணு.ஒனக்குத் தந்தா அல்லாருங்கேப்பாங்கொ.. ஓடு போ போ’ என்று விரட்டி விட்டாள். கூடாரம் அருகே யதேச்சையாக நடந்து வந்து கொண்டிருந்த ஈரோடு கோபால் காதுகளில் இது விழுந்து விட்டது. சமயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நகர்ந்து விட்டார்.
சமையல் தயாராகிவிட்டது. எல்லோரையும் அவர்கள் பந்தலில் சாப்பிட வருமாறு அழைத்தாள் மருதாயி. நிறைய விருந்தாளிகள் வரக்கூடும் என்று நீண்ட பந்தலாக போட்டிருந்தார்கள். ஒரே பந்தியில் இருநூறு பேருக்கு மேல் சாப்பிடும்படி இருந்தது பந்தல். ஒவ்வொருவராக வரத்துவங்கினர். கோபால் தன் மகனை அழைத்துக் கொண்டு சாப்பிட வந்தார். மருதாயி எல்லோருக்கும் இலை போடச் சொல்லி ஆட்களை ஏவிக் கொண்டிருந்தாள். மூர்த்தி பந்தலுக்கு அருகே வந்தவர் ‘எதுவும் உதவி வேணுமாம்மா’ என்று மருதாயியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘இல்லீடா கண்ணு, அண்ணணுங்கெல்லா இங்கே ஆளுக்கொரு வேல பாக்கறாங்கெ. இன்னிக்கு ஒரு நாளு போவலீன்னாலு யாவாரம் நட்டந்தானெ. நீ வெரசா சாப்டுட்டு கடையைப் போய் பயலுகள நீக்கச்சொல்லி பாத்துக்கெ. வா, வந்துக்கோரு. சாப்பாடு போடறெ’ என்றாள். மருதாயியின் மற்ற மருமகள்கள், மூர்த்தியின் மனைவி விஜயா எல்லோரும் ஒவ்வொருவராக ஒத்தாசைக்கு வரத்தொடங்க சொந்த பந்தங்கள் கூடத் தொடங்கியிருந்தனர்.
மூர்த்தி இலையில் சோறு போட்டு சிக்கன் வறுவலும், மட்டன் குழம்பையும் ஊற்றச் சொன்னாள் மருதாயி விஜயாவிடம். அவள் வாளியை எடுத்துக்கொண்டு வந்து ஊற்றிக் கொண்டிருக்கும் போதே கோபாலின் குரல் சத்தமாக கேட்டது.
‘வரிகட்ட வக்கில்லாத நாய்ங்கலாம் மொதச்சோறு திங்குது. காசையும் கொடுத்துப்போட்டு காண்டு வெறி புடிச்சி நம்ம கடெசி வெரைக்கு நிக்கோணும்போல’ என்றவுடன் கூட்டமே அதிர்ச்சிக்குள்ளானது. அவர் யாரைச் சொன்னார் என்பது புரிந்து விட்டது எனும்படியாக மூர்த்திதான் இலையில் அந்த நேரத்தில் சோற்றில் கை வைக்கப்போனார்.
அவர் இப்படிச் சொன்னதும் மூர்த்தி முகம் சிவந்து கடுகடுவென மாறியது. இலையை மூடிவிட்டு எழுந்தவர் விஜயா பெஞ்சில் ஊற்றிவிட்டு வைத்திருந்த ஒரு வாளிக்குழம்பை எடுத்துத் தட்டிவிட்டார். ‘ச்சைக், இந்த சோத்துக்கு அலையறவன்னு நெனச்சியா என்ன? அலுசாதிக்குப் பொறந்த பய… இனிமே ஒம்மூஞ்சில கூட முழிக்க மாட்டேன் போய்யா’ என்று ஒரு கத்து கத்திவிட்டு தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பப்போனார். சத்தம் கேட்டு ஓடிவந்த எல்லோரும் அவரைத் தேக்கியும் அவர் உடல் மட்டும் கிடுகிடுவென ஆடியபடியே இருந்தது.
‘நாங்க அப்படி நெனச்சாத்தான சாமி. நீ ஏய்யா வேகப்படற. அவ ஆயி ஒருத்தனுக்குப் பெத்துருந்தா இப்படி கும்பல்ல வந்து வாய்க்கு வந்தபடி பேசுவானா தேவுடியாப்பய. குசலம் பண்ணி குடும்பத்தை கெடுக்கன்னே வந்த பாவி. நம்ம அண்ணெ பொது வரி குடுத்து கெடாவெட்டு காசும் எல்லாருக்கும் பொதுவுல தந்திருக்கானய்யா. அவெ மனசு பொக்குனு போயிருமல்லோ. அந்த கோடாரிக்கொம்பு பேசறத நீ ஏஞ்சாமி பெருசா நெனைக்கிற’ என்று கத்தினாள் மீண்டும் மருதாயி பின்னாலேயே ஓடிவந்து.
யார் சொன்னதையும் காதில் வாங்காமல் வீடு வந்த மூர்த்தி நல்லுச்சாமி அண்ணணிடம் தான் வெளியே சென்று கடை வைப்பதாகச் சொல்லி எந்தக் காசும் வேண்டாம் என்றும் வந்துவிட்டார். விஜயாவின் நகைகளை வைத்து கடையை ஆரம்பித்தது எல்லோருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அப்பா வீட்டிற்குப் போய் வந்தாலும் அண்ணன்களோடு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் அதன் பிறகு சாமி கும்பிட தனி வரியாகவே கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். தன்னுடைய தனி வரியையும் அண்ணனிடம் ஒவ்வொரு முறை கொடுத்து விடுவது வழக்கம். ஆனால் அதிலிருந்து கோவிலுக்குச் செல்லாமல் தவிர்த்து விட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நல்லுச்சாமியும் கெடா வெட்டாமல் இருந்தார்.
விஜயா அவர் அருகே வந்தாள். ‘அதையே நினைச்சுகிட்டு இருக்கீங்களா இத்தினி வருசத்துக்கு இன்னும். இன்னிக்கு நீங்க எவ்வளவு சம்பாதிக்கறீங்கொ. கோவிலுக்கு எவ்வளவு செய்யறீங்கொ. நம்ம ஏங்க தப்பு பண்ணாப்ல ஓரமா நிக்கோணு.’ சொல்லிவிட்டு உள்கட்டுக்கு விஜயா சென்றவுடன் வெகுநேரம் சேரில் யோசனையில் அமர்ந்திருந்தவருக்கு தங்கராசு போன் செய்தது காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தபடியிருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக விஜயா, விஜயா! என்றழைத்தார்.
‘சொல்லுங்கொ?’என்றாள் உள்கட்டில் இருந்தபடியே.
‘இங்கனக்குள்ள வா. முக்கியமான விசயம் ஒண்ணு சொல்லோணு!’
மூர்த்தி வாயில் இருந்து என்ன வார்த்தைகள் வரப்போகிறதோ என யோசனையும், ஆர்வமும் கூட வேகவேகமாக வந்து நின்றாள் விஜயா.
000
000

சுபி
கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.
இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ், கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. க.சீ. சிவகுமார் நினைவு இயக்கம் நடத்தியதில் இவரது ‘காவன்மரம்’ சிறுகதை பரிசு பெற்றுள்ளது.