அத்தியாயம் மூன்று
“கண்ணா, வெரல வெட்டிக் கிட்டன்டா, அம்மாவக் கூப்புடுறா” என்று கத்தினான் அண்ணன் சந்துரு. வலது கை ஆள்காட்டி விரல் நுனி வெட்டுப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ரத்தம் வழிந்து தரையில் சொட்டிக் கொண்டிருந்தது. அவ்வளவு ரத்தத்தைப் பார்த்ததும் எனக்கு தலை சுற்றுவது போலிருந்தது. தம்பி ராஜும் பயந்து போய், திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். வீட்டுக்குள் ஓடினேன். அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். வார்த்தையே வரவில்லை. சமாளித்துக் கொண்டு கத்தினேன்: “அம்மா, சந்துரு கைய வெட்டிக் கிட்டான். ரத்தமா வருது”. “ஏண்டா இப்படி பண்றீங்க” என்றபடியே வெளியே வந்தவள், பழைய சேலையைக் கிழித்துச் சந்துருவின் விரலில் கட்டினாள். அவனை வீட்டுக்குள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று பாயில் படுக்க வைத்தாள்.
“ஒங்கப்பா காட்டுப்பக்கம் போனாங்க. ஓடிப் போய் கூட்டிட்டு வா” என்றாள். நான் வேகமாக ஓடிப்போய் குச்சிக் கிழங்கு வயலில் இருந்த அப்பாவிடம் மூச்சு வாங்க நடந்ததைச் சொன்னேன். “போ, வர்றன்” என்றவர், வீட்டுக்குள் நுழைந்ததும், சந்துருவை திட்ட ஆரம்பித்தார்: “எரும, பாத்து நறுக்கக் கூடாதா?. செங்கான வெட்டித் தரச் சொல்ல வேண்டியது தான”.
தாத்தாவும் ஆயாவும் வந்து விட்டார்கள். “இனிமே எனக்கு பல்லுக்குச்சியே வேணாண்டா” என்றார். பாரஸ்ட் பக்கமிருந்த கருவேல மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி எடுத்து வந்து, மரக்கட்டையில் வைத்து, கொடுவாளால் பல்லுக்குச்சி நறுக்கும் போதுதான் இது நடந்தது. தாத்தா வேலங்குச்சி இல்லையெனில் வேப்பங்குச்சியில் தான் பல் விளக்குவார்.
அப்பா வேட்டியை மாற்றிக் கொண்டு, அண்ணனை சைக்கிளில் பின்பக்க கேரியரில் வைத்து தள்ளிக் கொண்டு போனார்.
அன்று எங்கள் இருவருக்கும் பள்ளி விடுமுறை. மதியம் நாலு மணிக்கு மேல், அப்பாவும் அண்ணனும் வந்து சேர்ந்தார்கள். அண்ணன் விரலில் பெரிய கட்டு. “தையல் எதுவும் வேணாம்னு சொல்லிட்டாரு டாக்டர். ஊசி போட்டாரு. மாத்திரை ஒரு வாரத்திற்கு கொடுத்திருக்கிறார். இன்னும் ஒரு கட்டு போடனும்னு சொன்னாரு” என்று அப்பா, அம்மாவிடமும் தாத்தாவிடமும் சொல்லிக் கொண்டு இருந்தார். ஆயா தான் அழுதுகொண்டே அண்ணனை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னது. இந்த நிகழ்வுப் பிறகு, பல்லுக்குச்சி நறுக்கும் வேலை, செங்கானுக்குக் கைமாறியது.
செங்கான் எங்கள் காட்டுக்குப் பண்ணையத்துக்கு வந்தவன். ஆளுக்காரன் என்று சொல்வார்கள். வருடத்திற்கு மொத்தமாகச் சம்பளம் கொடுத்து விடுவார்கள். முதலில் நெல் மூட்டைகளாக இருந்த சம்பளம் பிறகு பணமாக மாறியது.
செங்கானின் அம்மா, அவனையும் கூட்டிக்கொண்டு, முதல் கணவனை கைவிட்டு, ஓடக்கார கந்தனுடன் வந்து விட்டாள். கந்தன் மூலமாக அவளுக்கு, மாதய்யன், சின்னு என இரு பிள்ளைகள். மாதய்யன் சேகரின் காட்டில் வேலை செய்ய, சின்னு கரண்டுகார முத்துவின் காட்டில் பண்ணையத்துக்கு இருந்தான்.
பள்ளித் தோழன் சேகரின் அப்பா ராமசாமி, மன்னார் பாளையத்தில், அவரது சிறு வயதில், பண்ணையத்துக்கு இருந்தாராம். வருடத்திற்கு அப்போதெல்லாம் கூலி ஐம்பது ரூபாய் தானாம், சேகர் சொல்லியிருக்கிறான்.
எங்கள் காட்டுக்குப் பண்ணையத்துக்கு இருந்தவர்களின் பட்டியல் நீண்டது: பழைய பெரியசாமி, கூழ ராமசாமி, மனோகரன், செங்கான், பாட்டப்பன் தம்பி மாதேஸ்வரன், கடைசியாக ‘மாப்பி’ என்கிற ஆறுமுகம்.
சிலர் தங்கள் வீட்டிலிருந்து தினமும் வந்து போவார்கள். செங்கான் போன்றவர்கள் எங்கள் காட்டிலேயே தங்கி விடுவார்கள். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில், தெற்குப் புறமாக, எருக்குழிக்குப் பக்கத்தில், செங்கானுக்கு ஒரு அறை கொண்ட வீடு இருந்தது. எங்கள் வீடு போலவே மண் சுவரால் கட்டப்பட்டு, தென்னங்கூரை வேயப்பட்ட வீடு. சமையல், தூக்கம் எல்லாம் அதில் தான். நாங்கள் ஒரே ஒரு முறை உள்ளே சென்று பார்த்திருக்கிறோம்.
அவன் மனைவி தான் லட்சுமி. அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. தினமும் குடித்து விட்டு வந்து இரவில் லட்சுமியை அடிப்பான். அவளின் அழுகை சத்தம் கேட்டு, தாத்தா எழுந்து போய், “டேய் செங்கான். ஏண்டா அந்தப் பொண்ணப் போட்டு இப்படி அடிக்கிற. தினமும் ஒன்னால குடிக்காம இருக்க முடியாதாடா?” என அதட்டுவார். “சரிங்க அய்யா, இனிமேல் இப்படி பண்ண மாட்டங்க” என்பான். இரண்டு நாட்களுக்குப் பிறகு, மீண்டும் அழுகை சத்தமும், சண்டையும் கேட்கும்.
செங்கான் நன்றாகவே வேலை செய்வான். ஏர் ஓட்டுவது, பரம்பு அடிப்பது, பாத்தி கட்டுவது, குச்சிக்கிழங்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என எல்லா வேலைகளும் செய்வான். ஒரே பிரச்சினை சாயந்தரமானால் குடிக்காமல் இருக்க முடியாது அவனால்.
ஒரு விடுமுறை நாளில் அப்பாவிடம் வந்து, “அண்ணா, பசங்களப் படத்துக்குக் கூட்டிட்டு போவட்டுமா?. அயோத்தியாப் பட்டணத்துல, புதிய தோரணங்கள் படம் ரிலீஸ் ஆகியிருக்கு” என்றான். “நல்ல படமாடா? சாயந்திரம் வீட்டுக்கு வந்திரனும்” என்றார். “பேய் எல்லாம் வருதாங்க. பசங்களுக்குப் புடிக்கும்” என்றான். அப்பா இவ்வளவு சீக்கிரம் அனுமதி கொடுப்பார் என்று நினைக்கவேயில்லை. சட்டை டவுசரை மாற்றிக் கொண்டு, மூவரும் செங்கானோடு நடந்து, பேருந்து நிலையம் அடைந்து, சேலம் பேருந்தில் ஏறி, அயோத்தியா பட்டினத்தில் இறங்கினோம்.
ரோட்டைக் கடந்தால் சற்று தூரத்தில் நடராஜா தியேட்டர். அந்தளவுக்கு கும்பல் இல்லை. சேர் டிக்கெட் வாங்கிக் கொண்டு படம் பார்க்க அமர்ந்தோம். படத்தில் வெள்ளைக் குதிரை முன்னங்கால்களை உயர்த்திக் கனைக்கும் போதெல்லாம், செங்கான் எங்களைப் பயமுறுத்தினான் “பேய் வருது”. அப்படியொன்றும் பயமாயில்லை. தம்பி ராஜ்தான் சற்றே பயந்து போயிருந்தான். இடைவேளையில் முறுக்கு, தட்டுவடை தின்பதற்குக் கிடைத்தது. மூவருக்கும் ஜாலியாக இருந்தது. திரும்ப வீட்டிற்கு வருவதற்கு ஏழு மணியாகி விட்டது.
அன்று இரவு, ராஜ் தூக்கத்தில்,”வெள்ளக் குதிர, பேய்” என உளறி, அம்மாவிடம் “இதுக்குத் தான் இந்த மாதிரிப் படத்துக்கு வேணாம்னு சொன்னேன்” என்று திட்டு வாங்கினான். காலையில் எழுந்ததும் அம்மா லட்சுமியை அழைப்பாள்: “லட்சுமி, ரெண்டு குண்டான அப்படியே எடுத்துட்டு வா”. லட்சுமி வாசலுக்கு வந்து, “அக்கா” எனக் கூப்பிட்டதும் அம்மா வெளியே வந்து, “நேத்து மீந்த சாதமும் கொஞ்சம் கொழம்பும் இருந்திச்சி. அதுதான் வரச் சொன்ன” என்றபடியே சோற்றையும் குழம்பையும் குண்டாக்களில் போட்டாள்.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், செங்கானும், லட்சுமியும், வெளியே இருக்கும் திண்ணையில் அமர்ந்து, விருந்துண்பதைப் பார்த்திருக்கிறேன்.
எங்களிடம் இரண்டு காளை மாடுகள் இருந்தன. ஒருவன் கூழையாக இருந்த குண்டன். மற்றொருவன் கூரான கொம்புடைய வளத்தி. குண்டானைத் தடவிக் கொடுக்க சாதுவாக நிற்பான். ஆனால், வளத்தி சீறுவான். அதனால் அவன் பக்கத்தில் போகவே எங்களுக்கு பயம்.
இப்படித்தான் ஒரு முறை, வீட்டுக்குப் பின்புறம் இருந்த நிலத்தில் செங்கான் பரம்பு ஓட்டிக் கொண்டு இருந்தான். இடையில் ஓய்வுக்கு நிறுத்திய போது, ராஜ் குண்டனைத் தடவிக் கொடுக்கச் சென்றான். செங்கானும் சொம்பில் தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தான். வளத்தி திடீரென நகர ஆரம்பித்தான். ராஜின் அருகே வந்து கொம்பில் ஒரு முட்டு முட்டியது. அதற்குள் செங்கான் ஓடி வந்து கயிற்றைப் பிடித்துக் கொண்டான். ராஜின் உதடு சிறிது கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது. பயத்தில் கத்த ஆரம்பித்தான். சந்துரு டக்கென்று அவனைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடி விட்டான். ஆயா அவனைப் பார்த்து கத்த ஆரம்பித்தாள். அப்பா, ஆயாவை அடக்கிய படி, அம்மாவிடம், “மஞ்சத்தூள எடுத்து உதட்டில பூசு. ரெண்டு நாள்ல சரியாப் போயிடும். இந்த எருமைங்க, பரம்பு ஓட்டற எடத்துக்கு ஏன் போகுதுங்க” என்றார்.
திடீரென ஒரு நாள், காலையில் செங்கான் அப்பாவிடம் வந்து, “அண்ணா, நான் வேலய உட்டரலான்னு இருக்கன். கணக்குப் பார்த்து அனுப்பி உட்டுருங்க” என்றான். “ஏண்டா திடீர்னு சொன்னா என்னடா செய்யறது. இன்னும் ஒரு வருஷம் முழுசா கூட முடியிலியேடா. வேற ஆளு தேடனுமேடா” என்றார் அப்பா. “இல்லண்ணா, டவுனுக்கு கட்டட வேலைக்குப் போகலாம்னு இருக்கிறன். பாட்டப்பன் தம்பி வர்றனு சொன்னாண்ணா, கேட்டுப் பாருங்க”.
“சரிடா, வேல செய்ய இஷ்டம் இல்லாதவன வற்புறுத்தக் கூடாது. மாதேஸ்வரன மதியம் வரச் சொல்லு” என்று கோபத்துடன் கூறிவிட்டு நகர்ந்தார்.
சாயங்காலம் மாதேஸ்வரன் வந்தான். செங்கான் கூட்டி வந்திருப்பான் போலிருந்தது. “என்னடா மாதேஸூ, செங்கான் இப்படிப் பண்றான். திடுதிப்புன்னு சொன்னா எப்படி? சரி, உனக்கு இஷ்டம் தானே. நாளையிலிருந்து வந்திடு. அவனுக்குக் கொடுக்கறத விட ஒரு ஆயிரம் சேத்தியேக் கொடுக்கிறேன். காலையில ஆறு மணிக்கு டான்னு வந்துரனும். சாயந்திரம் வேலய முடிக்காம போகக்கூடாது. வூடு பக்கத்திலேயே இருக்குறதால அடிக்கடி போவக் கூடாது. மதியம் சாப்பாட்டுக்குப் போனா அரை மணி நேரத்தில வந்துரனும். சொல்லாம லீவு போடறதோ, அடிக்கடி லீவு போடறதோ ஆகாது. சரின்னா சொல்லு” என்றார் அப்பா.
“சரிங்கண்ணா” என்றான் மாதேஸ். அடுத்த நாளே செங்கான் வீட்டைக் காலி செய்து விட்டு கிளம்பி விட்டான். லட்சுமி அம்மாவிடம் அழுதுகொண்டே விடை பெற்றாள். செங்கான் அப்பாவிடமும் தாத்தாவிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினான். மாதேஸ்வரனுக்கு பக்கத்து காடு என்பதால் அவனுக்கு வீடு தேவைப் படவில்லை. அது தேவையற்ற பொருட்களை சேகரித்து வைக்கும் இடமானது.
மாதேஸ்வரன் தினமும் வர ஆரம்பித்தான். பக்கத்துக் காடு என்பதால், அப்பாவுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லுவான். அவன் அம்மா காத்தாயி, அவனின் அண்ணன் பாட்டப்பனும் அவ்வப்போது வேலை செய்தார்கள். அப்போது கிணற்றில் தண்ணீர் நன்றாக இருந்தது. இரண்டு வயல்களில் நெல் சாகுபடி செய்தோம். மற்ற வயல்களில் வழக்கம் போல குச்சிக் கிழங்கும், மேட்டாங்காட்டில் சோளமும் போடுவார் அப்பா. இதற்கே ஏகப்பட்ட செலவானது. அப்பா கடன் வாங்கி காட்டுக்குச் செலவு செய்ய ஆரம்பித்தார்.
அப்பாவும் தாத்தாவும் விவசாயத்தில் தடுமாறுவதை, எல்லோரும் கவனிக்கத் தவறவில்லை. சுற்று வட்டாரத்தில் எல்லோரும் முழு நேரமாக விவசாயம் செய்பவர்கள். குடும்பத்தில் எல்லோரும் உழைப்பாளிகள். எங்கள் காடும் பக்கத்து ஒயர்மேன் காடும் விதிவிலக்குகள். கரண்டுகார முத்துவின் காட்டில்,வேலை நேரம் போக மற்ற நேரங்களில்,அவரே எல்லா வேலைகளும் செய்வார்.
அவரின் கண்களில் எங்கள் காடு உறுத்தியது. ஓய்வு நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் செய்து கொண்டிருந்தார். அப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் காட்டை விற்பதைப் பற்றியே பேச ஆரம்பித்தார்.
ஒரு விடுமுறை நாள் காலையில், முத்து, அவரின் இரண்டு மகன்கள் இந்திரன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் வந்து விட்டார். இந்திரன் தான் மூத்தவன். ஒரு வாகன விபத்தில் சிக்கியதால், காலை நொண்டி நொண்டி நடப்பான். கிருஷ்ணன் சரியான முரடன். அவனப் பார்க்கவே எங்களுக்குப் பிடிக்காது.
அம்மா தந்த டீயைக் குடித்த பிறகு, இளம்பச்சைக் கலரில் பேப்பர்களை வைத்துக்கொண்டு அப்பாவிடமும் தாத்தாவிடமும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்தார்கள். எனக்கு ஏனோ அவர்கள் எப்போது வெளியே போவார்கள் என்று தோன்றியது.
திடீரென அப்பா எங்களை அருகில் அழைத்து அமரச் சொன்னார். “நம்ம காட்ட வச்சுக்கிட்டு சமாளிக்க முடியல. அதனால வித்துடலான்னு இருக்கன். நீங்களும் கையெழுத்துப் போடனும்” என்றார்.
என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஏன் அப்படிப் பேசினேன் என்றும் தெரியவில்லை. தாத்தாவைப் பார்த்துச் சொன்னேன்: “காட்ட விக்க வேணா தாத்தா. எனக்குப் புடிக்கல” என்று சொல்லி விட்டு, வீட்டிற்குள் ஓடி விட்டேன். அம்மா எவ்வளவோ முயன்றும் நான் வெளியே செல்லவில்லை.
முத்து ரொம்ப நேரம் கழித்து, “பசங்களயும் கலந்துக் கிட்டுச் சொல்லுங்க. இன்னொரு நாள் பார்ப்போம்” என்று எழுந்து சென்று விட்டார்.
அன்று இரவு நன்றாக அடி விழும் என்று நினைத்தற்கு மாறாக, தாத்தா என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
மாதேஸ்வரன் தினமும் வந்து போய்க் கொண்டிருந்தான். காலையில் நாங்கள் எழுவதற்கு முன்பே வந்து விடுவான். முதல் வேலையாக மாட்டுச்சாணத்தை எல்லாம் அள்ளி எருக்குழியில் கொட்டி விட்டு, கட்டுத்தறியை சுத்தமாக கூட்டிப் பெருக்குவான். பிறகு வைக்கப் போரிலிருந்து தீனியைப் புடுங்கி மாடுகளுக்கு வைத்து விட்டு, மாட்டுத் தாழிகளில் தண்ணீர் நிரப்புவான்.
இதற்குள் அம்மா எழுந்து சமையலை ஆரம்பிப்பாள். அம்மாவிடம் டீயை வாங்கிக் குடித்து விட்டு, வயல் வேலைகளுக்குத் தயாராவான்.
இதற்குள் அப்பா மோட்டார் ரூமிலிருந்து மோட்டாரைப் போடுவார். தண்ணீர் பெரிய தொட்டியில் நிரம்பி சிறிய தொட்டி வழியாக, வாய்க்காலில் பாயும்.
பழைய பெரியசாமி, கூழ ராமசாமி பண்ணையம் இருந்த காலத்தில் மோட்டார் ஏதுமில்லை. கவலை இறைத்து தண்ணீரை நிரப்புவார்கள். இருவருக்குமே கவலை இறைக்கத் தெரியும். விடிவதற்கு முன்பே, பெரியசாமி வந்து விடுவார். மாடுகளுக்கு கொஞ்சமாக வைக்கப்புல்லும், தண்ணீரும் வைத்து, அவை சாப்பிட்டதும், கவலையில் பூட்டி விடுவார். இரண்டு மாடுகளும் ஙகத்தடியில் பூட்டப்பட்டு, வடக்கயிற்றுடன் இணைக்கப் பட்டிருக்கும். கடைசி முனையில் பரி இணைக்கப் பட்டிருக்கும். தண்ணீர் இறைக்கும் தோலாலான புனல் வடிவ ஒன்று தான் பரி. தண்ணீர் நிரம்பியதும் ஒரு குறிப்பிட்ட தூரம் பரியை இழுக்க வேண்டும். அதற்கென சரிவான மண்ணாலான பாதையிருக்கும். மாடுகளுக்கு சரியான தூரம் பழகியிருக்கும் . பரி மேலே வந்ததும், கயிற்றை இழுத்து சாய்த்தால், தொட்டியில் தண்ணீர் நிரம்பும். அதைப் பிறகு வாய்க்கால்கள் வழியாக நிலத்திற்குப் பாய்ச்சலாம். மிகவும் நுணுக்கமான,கடினமான வேலை. ஆனால் பெரியசாமியும், கூழ ராமசாமியும் சளைக்காமல் நீர் இறைப்பார்கள்.
கிணற்றுக்கு மேல் இரண்டு நீண்ட கனமான கருங்கல்களிருக்கும் . அவை கிணற்றுக்கு உள்ளே சில அடிகள் நீட்டிக் கொண்டிருக்கும். இரண்டு கற்களிலும் ஓட்டை இடப்பட்டு, மரக்கட்டைகள் சொருகப் பட்டிருக்கும். அவைகள் மேல்புறம் வளைவாகவும், அடிப்புறம் தடிமனாகவும் இருக்கும். இரண்டு கட்டைகளிடையே மர உருளை இருக்கும். பரி இந்த உருளை வழியாகவே வடக்கயிறு மூலமாக உள்ளே சென்று வரும். தண்ணீர் ஊற்றுமிடம் மத்தியில் இரண்டாகப் பிரிந்து, இடதுபுறம் தொட்டிக்கும், வலதுபுறம் ஒரு வாய்க்காலுக்கும் செல்லும் படி இருக்கும். ஒரு புறம் முழுத்தண்ணீரும் வேண்டியிருப்பின், எதிர்ப்புறம் மரப்பலகையால் அடைத்து விடலாம். மிகச் சிறந்த தொழில்நுட்பம்.
பரி செய்வதற்கும், கிழிந்தால் தைப்பதற்கும் ஆட்கள் இருந்தார்கள். கவலை இறைப்பவர் வடக்கயிற்றில் தான் அமர வேண்டும். பெரியசாமி இரண்டு மொத்தமான துண்டுகளை பிணைத்துக் கட்டி, அதன் மீது அமர்ந்து கொள்வார். வெறும் கோவணம் மட்டுமே கட்டியிருப்பதால், பின்புறம் கண்ணிப்போயிருக்கும். கவலையிறைக்கும் போது, பெரியசாமி புகையிலை நிறைய போடுவார். மென்று கொண்டே, சில சமயங்களில், ஏதேனும் பாடல்களைப் பாடிய படியே, ஒரு வயலுக்கானாலும் தண்ணீர் இறைத்து விடுவார்.
கொஞ்சம் கொஞ்சமாக கவலை இறைப்பது மறைந்து போய், மோட்டார் வந்து விட்டது.
அப்பா மோட்டார் போட்டதும், மாதேஸ்வரன் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பிப்பான். தென்னை மரங்கள் நிறைய நட்டிருந்தோம். வரிசையாக நடப்பட்டு இருப்பதால், தண்ணீர் பாய்ச்ச சிரமமேதுமில்லை. ஒவ்வொரு தென்னையைச் சுற்றிலும் ஒரு பெரிய வட்டமாக மண்ணால் கட்டியிருக்கும். அதனால் தண்ணீர் தேங்க வசதியாக இருக்கும். குச்சிக் கிழங்கில் பெரும்பாலும் நஷ்டம் ஏற்பட்டதால், வருமானத்திற்கு அப்பா தென்னை மரங்களைத் தான் பெரிதும் நம்பியிருந்தார்.
அப்பா தென்னை மரங்களைக் குத்தகைக்கு விட்டிருந்தார். ஒரு வருடத்திற்கு என்று குத்தகை முடிவானதும் பணம் கைமாறும். வருடத்திற்கு இரண்டு முறை தேங்காய்களை வெட்டுவார்கள். குத்தகை எடுத்தவன், “இந்த வெட்டுல காயே சரியில்லங்க. ஒரம் கிரம் ஏதாவது போட்டாத்தான மரத்துக்கு சத்திருக்கும்” என்று எப்போதும் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பான். “ஏப்பா, ஒரம் போடாமயா இருக்கறம். தவறாம போடறம். இந்த வண்டு பிரச்சினை தான் அதிகமா இருக்கு. அதுக்கும் மருந்து வைச்சிக்கிட்டு தான் இருக்குறம்” என்பார் அப்பா.
குத்தகைக்கு விட்ட மரங்களில் தேங்காய் பறிக்கக் கூடாது. சொந்த உபயோகித்திற்கென நான்கு மரங்கள் விடப்பட்டிருக்கும். அதிலிருந்து அவ்வப்போது இளநீர் குடிப்பதற்குக் கிடைக்கும்.
முதலில் வீட்டுக்கு முன்னால் ஒரு பத்து தென்னை மரங்கள் தான் நட்டிருந்தோம். அப்போது அப்பா பனமரத்துப்பட்டியில் கிராம சேவகராக பணி செய்து கொண்டிருந்தார். அங்கிருந்து வாங்கி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக நாற்பது ஐம்பது தென்னை மரங்களாகி விட்டன. இவை வளர்வதற்கு மூன்று நான்கு வருடங்கள் ஆனாலும், பத்து வருடங்களாவது உயிருடன் இருக்கும். வருடத்திற்கு மூன்று முறை காய்வெட்டு நடக்கும்.
காய்ந்த தென்னை மட்டைகள் கீழே விழுந்து கொண்டே இருக்கும். அவைதான் அடுப்பெரிக்க உதவின. ஆனால் வீட்டுக்குக் கூரை மாற்ற வெளியில் தான், பின்னப்பட்ட தென்னை கீற்றுகள் வாங்க வேண்டும்.
கிணற்றிலிருந்து இடதுபுறம் சென்றால் ஒரு நெல்லி மரம் இருக்கும். சந்துரு மட்டும் மேலே ஏறி உலுக்கி விடுவான். நாங்கள் பெரும்பாலும் கீழே விழுந்ததை எடுத்துக் கழுவி சாப்பிடுவோம். எனக்கு பழுத்த நெல்லி மிகவும் பிடிக்கும். சில சமயம், சடைசடையாய் காய்த்திருக்கும். அந்த சமயங்களில்,நெல்லிக்காய் ஊறு கிடைக்கும்.
நெல்லி மரத்திலிருந்து அப்படியே நடந்தால் இரண்டு வயல்கள் தாண்டி, எனக்குப் பிடித்த ஒரு சிறிய தென்னை மரம் இருந்தது. பெரும்பாலும் எனது படிப்பு அந்தத் தென்னையடியில்தான்.
மாதேஸ்வரனும் ஒரு நாள் அப்பாவிடம் பேசினான்: “அண்ணா, பண்ணையத்திலிருந்து நின்னுக்கலாமுன்னு இருக்கறன். செலவு அதிகமாயிடுச்சி. வெளி வேலக்கிப் போலாம்னு இருக்கிறன்”.
“ஏண்டா, இப்படி எல்லாருமே வெளி வேலக்கிப் போய்ட்டா, விவசாய வேலய யாரு பார்க்கறது? வேற யாரு இருக்கறா?” என்றார் அப்பா.
“எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கிறான்னா. ஆறுமுகன்னு பேரு. இப்பதான் கல்யாணம் ஆச்சு. அவன் நாளைக்கு வரச் சொல்றன்” என்றான்.
இப்படித்தான் மாப்பி என்கிற ஆறுமுகம் வந்து சேர்ந்தான். வெட வெடவென்று நல்ல உயரம். ஒல்லியான தேகம். மனைவி மாரியம்மாவுடன் வந்து விட்டான். மெதுவாகப் பேசுவான். எருக்குழிக்குப் பக்கத்தில் இருந்த வீடு மறுபடியும் திறக்கப்பட்டது. இந்த முறை, சம்பளம் ஐயாயிரத்தைத் தாண்டியது. காடு விற்கும் வரை, ஆறுமுகம் தான் பண்ணையத்திலிருந்தான். வேலைகளைச் சற்று மெதுவாகவே செய்வான்.
“ஆறுமுகம், இதுலேயே ஒக்கார்ந்து இருந்தா, மத்த வேலையெல்லாம் யாரு பாக்கறது?” எனத் திட்டுவது வழக்கமாகி விட்டது. அவன் மனைவி மாரியம்மாவும் காட்டு வேலைகள் செய்யப் பழகிக் கொண்டிருந்தாள். ஆறுமுகம் பண்ணையத்துக்கு சேரும் போது, இரண்டாவது போர் போட்டிருந்தோம். இடையில் இரண்டு ஆண்டுகளுக்குக் கிணற்றில் தண்ணீர் இல்லாமல், படாதபாடு பட வேண்டியிருந்தது. சந்துரு தான் சைக்கிளில் பக்கத்துக் காட்டிலிருந்து குடங்களைக் கட்டி தண்ணீர் எடுத்து வருவான். கிணற்றை மேலும் ஆழப் படுத்தியும் தண்ணீர் நன்றாக வரவில்லை.
அப்போதெல்லாம் வெடி வைத்து ஆழப்படுத்தும் வழக்கமில்லை. பரிக்குப் பதிலாக மூங்கில் கூடையைக் கட்டி இறக்கி விட்டு, கடப்பாரையால் தோண்டி, மம்முட்டியால் முறம்பை வாரி, கூடையில் மேலே அனுப்புவார்கள். கூடை மேலே வந்ததும், இருவர் வாங்கி பக்கத்திலிருந்த கெணத்து மேட்டில் கொட்டுவார்கள். தாத்தா என்னையும் கூடையில் அமர வைத்து கிணற்றுக்குள் இறக்கி விடச் சொன்னார். கிணறு அறுபதடிக்கு மேல் ஆழமிருக்கும். கீழே இறங்கும் போது, ராட்டினத்தில் கீழிறங்குவது போலிருந்தது. சரியான பயமாக இருந்தது. வயிறு பிடித்துக் கொண்டது. கீழே கடப்பாரை, மம்முட்டியுடன் நான்கைந்து பேர் வேலை செய்தனர். வெளிச்சம் குறைவாக இருந்தது. கற்களும் மொரம்பும் இருந்தது. ஓரத்தில் சிறிய அளவில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. அதுதான் ஊற்றாக இருக்கும் என நினைத்தேன்.
தாத்தாவும் இருந்ததால் சற்று பயம் குறைந்திருந்தது. ஆனாலும் தாத்தாவிடம்,”தாத்தா, எனக்குப் பயமாக இருக்குது. சீக்கிரம் மேல போவனும்” என்றேன். இறங்கியது போலவே, கூடையில் ஏறி அமர்ந்து கொண்டேன். மிக இறுக்கமாக கயிறுகளை பிடித்துக் கொண்டேன். மேலும் கீழும் பார்க்காமல், தலையை கவிழ்ந்து, பயத்தில் கண்களை மூடியபடியே மேலே வந்தேன். இருவர் கூடையை இழுத்து வாங்கிக் கொண்டு காலை கீழே வைத்து இறங்கச் சொன்னார்கள். காலைக் கீழே எடுத்து வைக்க மிகவும் பயமாயிருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காலை கீழே வைத்தேன். தரை ரொம்ப தூரத்தில் இருப்பது போலிருந்தது. எப்படியோ இறங்கி வந்து விட்டேன். அடுத்த நாள் பள்ளி முழுவதும் எனது இந்தச் சாகசத்தை எல்லோரிடமும் சொல்லியபடியே இருந்தேன். அந்த சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
ஒரு இன்ச் தண்ணீர் கூட வரவில்லை. குடிப்பதற்கேத் தடுமாற வேண்டியிருந்தது. அப்பா போர் போடலாம் என முடிவு செய்தார். நீர்த் தாரை பார்ப்பதற்கு செல்வம் தான் வந்தார். யார் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. மேட்டாங்காட்டிலிருந்த ஓடைக்கருகில் ஒரு இடத்தைக் காண்பித்தார். அவர் வைத்திருந்த குச்சி தானாகச் சுற்றுவதைப் பார்க்க எங்களுக்கெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அடுத்த நாள் ஒரு பெரிய போர் போடும் வண்டி வந்தது. இரவு வரையில் வேலை செய்து, நானூற்று ஐம்பது அடியில் தண்ணீர் ஊற்று கிடைத்தது. ஆனால் ஒரு இன்ச் தண்ணீரே வந்தது. அனைவருக்கும் ஏமாற்றம். இதற்காக அப்பா நிறைய கடன் வாங்கி இருந்தார். அங்கிருந்து பிளாஸ்டிக் பைப் வழியாக வந்து கிணற்றில் தண்ணீர் சேகரமானது. இரவு முழுவதும் போர் மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் கிணறு தான் நிரம்பவில்லை. ஒரு இரண்டு வருடங்கள் ஓடியது. தென்னை மரங்களுக்கேத் தண்ணீர் போதவில்லை. மீண்டும் போர் போட வேண்டியிருந்தது. இந்த முறை காட்டின் கடைகோடியில், கரண்ட்டுக் கார முத்துவின் காட்டுக்கு அருகில். மீண்டும் கடன். இந்த முறை, எழுநூறு அட. அரை இன்ச் தண்ணீர் அதிகம் கிடைத்தது. பைப்புகளின் நீளம் வெகு தூரம் நீண்டது. போர் மோட்டார் இரவெல்லாம் ஓடிக் கொண்டேயிருந்தது.
-வளரும்
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.