இரவு உணவுக்குப்பின் காத்தாட எல்லோரும் திண்ணையில் அமர்ந்திருந்தோம். வெயிலுக்கு காற்று மிகவும் இதமாக இருந்தது.
தாத்தா பேச ஆரம்பித்தார்: “ஏம்ப்பா, போடற மொதலுக்கு எதுவும் பக்கத்துல கூட வெளச்சல் இல்லியேப்பா. வருஷா வருஷம் குச்சிக் கிழங்கு தான் போடறம். முக்கால்வாசி சீனமில்காரனேப் புடுங்கிக்கிறான்.பேசாம இந்த காட்ட வித்துட்டு டவுன் பக்கம் ஏதாவது வீடு வாங்கி உட்கார்ந்துரலாமா? பசங்களுக்கும் நல்ல படிப்பு வசதி கெடைக்கும். நீ என்ன சொல்ற?”.
அம்மா முகத்தில் மிகவும் சந்தோஷம்.
“இவ்வளவு நாள் சமாளிச்சு ஓட்டியாச்சி. இன்னும் கொஞ்ச நாளு தாக்குப் புடிச்சா, இன்னும் கொஞ்சம் நல்ல வெல கெடைக்கும். யாருக்கிட்டயாவது ஜாதகம் பார்க்கலாமா?” இது அப்பா.
“இல்ல அப்பு. ஜாதகம் சரி வராது. பரிகாரமுன்னு சொல்லி காசு புடுங்கரானுங்க. கோவில்ல பூப்போட்டுப் பாக்கலாம். நம்ம கோதண்ட ராமசுவாமி கோவில்லயே கூட பாக்கலாம். நான் புரட்டாசி மாசம் வரைக்கும் வெயிட் பண்ணனும்”.
“தாத்தா, என்னோட பிரண்டு சேகரோட அப்பா குறி சொல்வாராம். சேகர் தான் சொன்னான்”.
“அப்படியா, நமக்குத் தெரியாம போச்சே. அவரு சாமியில்ல சொல்லிக் கிட்டு இருந்தாரு. ஏதோ உடம்பு சரியில்லாமல் சொல்றத நிறுத்திட்டதா கேள்விப்பட்டேன்”.
“இல்ல தாத்தா, சேகர் தான் சொன்னான், கல்லுக்குறி பார்ப்பாருன்னு சொன்னான்”.
“சரி, அவரா வருவாரா, இல்ல, நாம் அவங்க வீட்டுக்குப் போவனுமான்னுத் தெரியல. அதையும் கேட்டுக்க. வர்ற ஞாயிறு வீட்டுக்கு வரச் சொல்லறயா”.
“சரி, தாத்தா. நாளைக்கு ஸ்கூலுக்குப் போய்ட்டு சாயந்திரம் வரும் போது, சேகர் வீட்டுக்கு போயிக் கேட்டுட்டு வர்றன்”.
அடுத்த நாள் மாலை, சேகருடன், அவனுடைய வீட்டுக்குச் சென்றேன். கூரை வேய்ந்த மண் சுவர்களாலான வீடு. நிறைய தென்னை மரங்கள் இருந்தன.
“வா, கண்ணா. தாத்தா பாட்டி எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்றார் சேகரின் அப்பா ராமசாமி .
“எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணா”.
“வரக் காப்பி குடிக்கிறிய கண்ணு”. என்றார் சேகரின் அம்மா.
“இல்லக்கா, பரவாயில்லை”.
ராமசாமி அண்ணனிடம் கேட்டேன். “அப்பா, ஒங்கள ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வரச் சொன்னாரு. ஏதோ, கல்லுக்குறி பாக்கனும்னு சொல்லச் சொன்னாரு”
“இப்பல்லாம் அதிகம் வெளியப் போறதில்ல. சரி ஞாயத்துக்கெழம காலைல ஒரு பத்து பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லு”.
“சரிங்கண்ணா. சேகரு, நான் கெளம்பறன்” என்று சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
“ஏண்டா, இவ்வளவு லேட்டு?”.
“இல்லம்மா, சேகரு வீட்டுக்குப் போயி, அவங்க அப்பா வர்றாங்களான்னு கேட்டுட்டு வந்தேன்”.
“தாத்தா, ஞாயத்துக்கெழம காலைல ஒரு பத்து , பதினோரு மணிக்கு வர்றேன்னு சொன்னாரு”.”சரி தங்கம், சாப்புட்டுட்டு தூங்கு”.
ஞாயிறன்று, நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த என்னை அம்மா தான் எழுப்பினாள். “சேகரு அப்பா வந்துருவாங்கடா. சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாவு”. “இன்னைக்கும் குளிக்கனுமா?”.”ஆமா, கட்டாயம் குளிக்கனும். சீக்கிரமா ஓடு”.
குளித்து விட்டு, அவசர அவசரமாக, இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகையில், சேகர் தனது அப்பாவுடன் வந்து விட்டான்.
“அண்ணா, வாங்க” என்று வரவேற்றார் அப்பா. “வாங்க கவுண்டரே” என்றார் தாத்தா.
“அண்ணா, டீ சாப்பிடுறீங்களா. அஞ்சு நிமிஷத்துல போட்டுறன்” என்றார் அம்மா.
“இல்லைங்க அம்மா. நான் வெளியே எதுவும் சாப்புடறது இல்ல. இந்தத் திண்ணையிலேயே உட்கார்ந்துக்கலாம். முக்கியமான ஏதோ ஒன்னு ரெண்டு மட்டுமே கேளுங்க”.
வெள்ளை வேட்டி, வெள்ளை அரைக்கை சட்டை. நரைத்த தலைமுடியும் மீசையும். உறுதியான ஒல்லியான உடல்.
நாங்கள் அனைவரும் ஒரு புறமும், அவர் எதிராகவும் திண்ணையில் அமர்ந்தோம்.
“கேட்க வேண்டியத மனசுல நெனச்சுங்க”.
அவர் கண்களை மூடிக்கொண்டு, கோதண்டராமனை மனசுக்குள் நினைத்து ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து, பிறகு, தனது சிறிய சுருக்குப் பைபோல ஒன்றிலிருந்து, கற்களை எடுத்து, திண்ணையில் வீசினார். பிறகு கற்களை ஒத்தையாக ரெட்டையாகச் சேர்த்த பிறகு, சொல்ல ஆரம்பித்தார்.
“நீங்க நெனச்சுத இப்ப செய்ய வேணாம். இன்னும் கொஞ்ச காலம் தள்ளிப் போடுங்க. அவசரப் பட வேணாம். இன்னும் ஒரு கேள்வி கேட்கலாம்”.
“கேட்க வேண்டியத மனசுல நெனச்சுங்க” என்றார்.
கண்களை மூடி வேண்டிக்கொண்டுக் கற்களை வீசினார்.
“ஆமாங்க. இந்த வீட்டுப் பெரியவர்களுக்கு ஒரு கண்டம் இருக்குது. உடம்ப ஜாக்கிரதையாப் பாத்துக்கணும்” என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டார்.
“இப்ப சொல்லுங்க. முதல்ல என்ன கேட்டீங்க”. “இந்த காட்ட வச்சுக்கிட்டு சமாளிக்க முடியலங்க கவுண்டரே. அதுதான் வித்துறலான்னு ஒரு நெனப்பு”.
“இப்பத்திக்கு வேண்டாங்க. கொஞ்ச நாளு போகட்டும். இறைச்சா அள்ளறதுக்கும், கோக்கறதுக்கும் மணியில்லங்க இது. நிலம்கிறது எல்லாத்துக்கும் வா ய்க்காதுங்க. யோசனை பண்ணிச் செய்யுங்க. சரிங்க, நான் அப்ப கெளம்புறங்க”.
“அண்ணா, காணிக்கை?”. “நம்ம வீட்டுல எதுக்குங்க. புரட்டாசி மாசம் வீட்டுக்கு வாங்க. அன்னதானத்துக்கு ஏதாவது செய்யுஙக. அது போதும்” என்று கிளம்பி விட்டார்.
எல்லோரும் அப்படியே திண்ணையிலேயே அமர்ந்திருந்தோம். தாத்தா தான், சற்றே உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார்.
“நாளக்கு டாக்டர்கிட்ட ஒரு நடை போயிட்டு வந்தறலாம்” என்றார் அப்பா.
“இல்லடா அப்பு, எனக்கு ஒண்ணும் இல்ல. நான் நல்லா தான் இருக்கிறன். இந்த நெலத்த வச்சுக்கிட்டு சமாளிக்க முடியலயேன்னுதான் என்னோட கவலை எல்லாம்”.
“சரி, பாத்துக்கலாம். இப்பத் தூங்குங்க”.
தாத்தாவுக்கு அன்று சுத்தமாகத் தூக்கம் வரவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான், கடன் வாங்கி வாங்கி, முதல் போட்டுக்கொண்டே இருப்பது. பசங்க வேற பெரிசாயிட்டு இருக்காங்க. அவங்க காலேஜ் படிப்புக்கு பணம் வேண்டும்.இதுவரை இழுத்து வந்த, தேரை நிலை சேர்க்க வேண்டும். அவர் மனசெல்லாம் வெறுமையும் வலியும் நிறைந்திருந்தது. அதிகாலையில் கண்கள் அவரை அறியாமல் மூட, தூங்க ஆரம்பித்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, விடியற்காலை ஐந்து மணியளவில் கிருஷ்ணன் வந்தான். பெரிய அத்தையின் இரண்டாவது பையன். அப்பா வழிச் சொந்தம்.ஆயா நேற்று சேலம் போனது இரவு வரவில்லை.
திண்ணையில் சற்று நேரம் காத்திருந்து, பிறகு, தாத்தா வீட்டுக் கதவைத் தட்டினான்.
“பாட்டிக்கு உடம்பு சரியில்லை. கெளம்பி வர்றீங்களா?”
“அப்புவை எழுப்பு. உடம்ப எடுத்துக் கிட்டு வந்தர்லாம்” என்றார்.
வீடே பரபரப்பானது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா தான் சொன்னது: “பாட்டிக்கு ஒடம்பு சரியில்ல. ஒங்க தாத்தாவும் அப்பாவும் பாத்துட்டு வரப் போறாங்க. பயப்படாதிங்க”.
அப்போதெல்லாம் ஆயா கனகாம்பரம் வியாபாரம் செய்து வந்தது. ஓரளவுக்கு தண்ணீர் இருந்ததால், தைரியமாக செய்ய முடிந்தது.
எங்கள் காட்டுடன், பக்கத்தில் ஒயர்மேன் காடு, நண்பன் சேகரின் காடு, முத்தாயக்கா காடு எனப் பலரும், கனகாம்பரம் பயிரிட்டிருந்தார்கள்.
ஒரே ஒரு காட்டில் மட்டும், சாயபு காடு, கரும்புக்காடு , எல்லாம் தாண்டி, மல்லிகை பயிரிட்டிருந்தார்கள். அவர் வீட்டில் கீழிருந்து மல்லிகைக் கொடி மாடி வரை ஏறியிருக்கும். அடிக்கடி பாம்பு வந்ததாகச் சொல்வார்கள். கொஞ்ச காலத்தில் அவர்களும் மல்லிகை பயிரிடுவதை நிறுத்தி விட்டார்கள்.
கனகாம்பரம் பெண்களால் மிகவும் விரும்பித் தலையில் சூட்டப்பட்ட ஒரு பூவாக இருந்தது. மல்லிகையையும் கனகாம்பரத்தையும் சேர்த்துத் தலையில் வைத்துக் கொள்வார்கள். காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் எனப்பல கலர்களில் வரும் பூ. கனகாம்பரக் கலர் என்றே புடவை எடுக்கும்போது கேட்பது வாடிக்கையானது.
யாரோ ஒருவர் மட்டும் ரோஜா வளர்த்தார்கள்.
அதுவுமில்லாமல் ஓரளவுக்குத் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தண்ணீர் தேங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பாத்தி கட்டி விதை விதைத்து, நாற்றுகளைப் பிடுங்கி மீண்டும் வரிசையாக இடைவெளி விட்டு நட வேண்டும். விதைக்கும் போது, சாம்பலில் கலந்து விதைப்பார்கள். இதனால் நெருக்கமாக நாற்றுகள் வளர்வதைத் தடுக்கலாம்.
பாத்திகளிலும், கால் பாத்திகளிலும் ஓரங்களில் செடிகளை நடுவார்கள். சற்று வளர்ந்த பிறகு, மண் சேர்த்து அணைத்து நடுவில் கொண்டு வந்து விடுவதால், தண்ணீர் பாய்ச்ச சுலபமாக இருக்கும். காலமெல்லாம் இல்லை. ஆண்டில் எல்லா மாதங்களிலும் வளர்க்கலாம்.
அவ்வப்போது வேப்பம்புண்ணாக்கு உரமாகப் போடுவோம். அதே போல, பூச்சி மருந்தாக வேப்பெண்ணெய் பயன்படும்.
பனி கலைந்து காலை ஆறு மணியளவில் பூ எடுப்பது வழக்கம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூ எடுப்பர். சேகரும் எங்கள் காட்டில் வந்து பூ எடுத்து இருக்கிறான். பூப்பறிக்க ஒரு படிக்கு பதினைந்து காசுகள். பத்து இருபது நாட்கள் பூப்பறித்து, அப்பாவிடம் கேம்லின் பேனா வாங்கி வரச் சொல்வான். பூப்பறிக்க மேட்டுப்பட்டியிலிருந்து ஒரு பெண் வழக்கமாக வருவாள். பக்கத்துக் காட்டு மாதேஸ்வரன் மனைவி கோவிந்தம்மாளும் வருவாள்.
ஈரமான ஒரு பையில் போட்டு, சைக்கிளில் எடுத்துச் சென்று, ஆயாவை பேருந்து ஏற்றிவிட்டு வருவான் சந்துரு.
அந்தக் காலத்தில், அதாவது, எண்பதுகளிலேயே, கனகாம்பரம் கிலோ இருபத்து ரூபாய்க்கு விற்கும். நல்ல டிமாண்ட்.
ஆயாவின் கையில் நல்ல காசு புழக்கமிருந்தது. பூ விற்கும் காசுக்கு நிறைய நகை வாங்கினாள். டவுனில் ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே கழுத்தில் காதில் நகையணிந்தாள். மற்ற நேரங்களில், சொந்தக்காரர்களிடம் கொடுத்து வைத்திருந்தாள்.
ஆயா எப்போதும் சற்று கோபத்தோடும் சலிப்போடுமே இருந்தாள். தாத்தா சுதந்திரப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபட்டார். அடிக்கடி பிரசங்கத்திற்குச் சென்று விடுவார். பத்து நாட்கள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவாராம். போராட்டத்தில் கைதாகி பல முறை சிறை சென்றிருக்கிறார். அப்போது இன்னும் மோசம்.
இதையெல்லாம் தாங்கிக் கொண்டு, பணியாரம் சுட்டு வியாபாரம் செய்து, பிள்ளைகளை வளர்த்திருக்கிறாள் ஆயா. ஆறு பிள்ளைகளில் இரண்டு போக, மிஞ்சியது நால்வர். அப்பா இரண்டாவது. மூன்று பெண் மக்களில் ஒரு பெண் பார்வையற்றவர்.
பெரிய அத்தையும், சின்ன அத்தையும் சின்ன வயதிலேயே வீட்டு வேலைகளுக்குச் சென்றிருக்கிறார்கள். அப்பாவை மட்டும் சற்று செல்லமாக வளர்த்திருக்கிறார்கள்.அப்பா மீது, ஆயாவுக்கு மிகவும் பிரியம். அப்பு அப்பு என்று தான் கூப்பிடும். ஆயா நல்ல மனநிலையில் இருக்கும் போது, எங்கள் மீது மிகுந்த பாசமாக இருக்கும். ஆயா, பொட்டுக்கடலை போட்டு கெட்டிச் சட்னியுடன் ஊத்தப்பம் செய்தால், இரண்டுக்கு மேல் உள்ளே போகும். தோசையை திரும்பிப் போடாமல், மூடி வைத்திருந்து, வெந்தவுடன் எடுத்து விடும்.
ஆயா ஒரு பால் மாடு வளர்த்து வந்தது. அந்த மாடு ஆயாவுக்கு மட்டுமே பாலுக்கு நிற்கும். அம்மா கறக்கப் போனால், தலையை ஆட்டும். அம்மா பயந்து கொண்டு வந்து விடும்.பால் கறந்து எங்களுக்கு கொடுக்கும். ஆனால் அப்பாவிடம் பாலுக்கு காசு வாங்கி விடும். இப்படித்தான் ஒரு முறை, பாலில் தண்ணீர் கலந்து கொடுத்ததைப் பார்த்து விட்டு நான் அம்மாவிடம் சொல்லப்போக, பெரிய சண்டையில் முடிந்தது.
எங்கள் கிராமத்தின் பக்கத்தில் வெள்ளாளகுண்டம் என்றொரு கிராமம் இருக்கிறது. நடேசா என்றொரு டெண்ட் தியேட்டர் இருந்தது. அதுதான் எங்களுக்கு மிகவும் அருகாமையில் உள்ள தியேட்டர். இதை விட்டால், ஒன்று, அயோத்தியா பட்டினம் போகவேண்டும். இல்லை என்றால், வாழப்பாடி செல்ல வேண்டும். அடுத்த ஸ்டாப் என்பதால், எங்கள் கிராமத்திலிருந்து நிறைய கும்பலிருக்கும் .
தரை டிக்கெட் ஐம்பது காசுகள். அடுத்தது சேர். பிறகு பாக்ஸ்.
ஒரு விடுமுறை நாளில் ஆயாவை நச்சரித்துப் படத்துக்குச் செல்ல சம்மதிக்க வைத்து விட்டோம். அப்பாவிடமும் அனுமதி வாங்கிய பிறகு, மதியம் மேட்னிக்குச் செல்வது என முடிவானது. அம்மா வரவில்லை. துணைக்கு மாதேஸ்வரன் மனைவி கோவிந்தம்மாள் வந்தாள். மதியம் பன்னிரண்டு மணிக்கு, வேகாத வெய்யிலில் நடக்க ஆரம்பித்தோம். எட்டி மரத்துக்குச் செல்லும் போதே, கால்கள் வலிக்க ஆரம்பித்தது. வியர்வை வழிந்தது. “ஆயா, காலு வலிக்குது. இன்னும் எவ்வளவு தூரம்?” என்று தம்பி ராஜ் ஆரம்பிக்க, “இன்னும் கொஞ்ச தூரம். அப்புறம் பஸ் ஏறி தான் போகப்போறம்” என்று சமாதானம் செய்து, நடக்க வைத்து விட்டாள்.
பேருந்து நிறுத்தம் வந்ததும், பெட்டிக்கடையில் விக்ஸ் மிட்டாய் வாங்கி வாயில் போட்டபடியே நின்றிருந்தோம். கால் மணி நேரம் கழித்து ஒரு வழியாக, நாற்பத்தி நாலாம் நம்பர் வந்தான். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் பஸ்கள் நிற்காது. மேட்டுப்பட்டி இல்லையென்றால் இந்தப் பக்கத்தில் வெள்ளாள குண்டம் செல்ல வேண்டும். நிறைய பேர் நின்றிருந்ததால், பேருந்து நின்றது.
டிக்கெட் எடுத்து அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அதற்குள் அடுத்த நிறுத்தம் வந்ததால், இறங்கினோம். கொஞ்ச தூரம் நடந்ததும், நடேசா தியேட்டர் வந்தது. ஸ்பீக்கரில் சத்தமாகப் பாட்டு போட்டிருந்தார்கள்.
அப்போது தான், மலையூர் மம்பட்டியான் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. படம் மிகப்பெரிய வெற்றி. சரியான கும்பல். பாடல்கள் எல்லா கிராமங்களிலும் ஒலித்துக்கொண்டு இருந்தது. ‘காட்டுவழி போற பொண்ணே கவலப்படாத’ மற்றும் ‘சின்னப்பொண்ணு சேல செம்பருத்தி போல’ ஆகிய பாடல்கள் ஒலிக்காத கிராமங்களிலில்லை. இராஜசேகர் இயக்கத்தில், தியாகராஜன் சரிதா நடிப்பில் 1983ல் வெளிவந்த படம்.
எப்படியோ கும்பலில் கஷ்டப்பட்டு சேர் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டோம். படம் நன்றாக இருந்தது. தம்பிதான் இடையிலேயே தூங்க ஆரம்பித்து விட்டான். இண்டர்வெல்லில் அவனை எழுப்பி விட்டு, ஆயா எங்களுக்கு முறுக்கு வாங்கித் தந்தது. நான் கலர் வாங்கித் தரச் சொல்லி அடம்பிடித்து, லவ்ஓ வாங்கி, மூவரும் குடித்தோம். அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று ஆயாவிடமும், கோவிந்தம்மாளிடமும் கெஞ்சினோம்.
மாலையில் படம் முடிந்ததும், அவசர அவசரமாக நடந்து, பேருந்து நிற்குமிடம் சென்றால், கால் மணி நேரத்திற்கு மேல் பஸ்ஸே வரவில்லை. வாழப்பாடியிலிருந்து சேலம் போகும் எழுபத்தி நாலு வந்தது. ஏறிய பின்னர், ஆயா டிக்கெட் எடுக்கக் காசு எடுக்கையில்,”எங்க போறீங்க?” என்ற நடத்துனரிடம்,”செல்லியாக்கோவில் ஓடை” என்று ஆயா சொல்ல, நடத்துனர் கத்த ஆரம்பித்து விட்டார். “அங்கல்லாம் நிக்காது. மேட்டுப்பட்டியில இறங்கிக்கங்க” என்று சொல்ல, ஆயா பதிலுக்குக் கத்த ஆரம்பிக்க, எங்களுக்கு ஒரே பயம். எப்படியோ வாயாடி, ஆயா பேருந்தை நிறுத்த வைத்து விட்டாள். இறங்கி மீண்டும் நடை. அன்றிரவு தூக்கத்தில் படத்தின் காட்சிகள் வந்து போயின.
அதே காலகட்டத்தில் வெளிவந்த மற்றொரு திரைப்படம் முதல் மரியாதை. பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் சிவாஜியும் நடிகை ராதா மற்றும் நடிகை வடிவுக்கரசி ஆகியோர் நடித்த படம். மிகச் சிறந்த நடிப்பு, இசை, சிறப்பான பாடல்கள், சிறந்த இயக்கத்தால் , பெரிய அளவில் வெற்றி பெற்ற படம்.
அப்பா படம் பார்த்து விட்டு வந்து, யாவை அப்படி ஒரு கிண்டல் செய்தார். எங்களிடம் தான். “படத்துல வடிவுக்கரசி அப்படியே ஒங்க பாட்டிதாண்டா. திட்டறதும், தண்ணி சொம்பை நங்குன்னுக் கீழ வைக்கறதும், சளியைச்சிந்தி விட்டு, சீலயில தொடச்சிக்கிறதும்.”. அப்பாவின் முகத்தில் நோக்கோடு சேர்ந்த பெருமிதம். என்னதான் சண்டை போட்டாலும், வீட்டை விட்டு விட்டு பல தடவை வெளியே சென்றாலும், தேசாந்திரம் போய்டுவன் என்று மிரட்டினாலும், ஆயாவுக்குத் தாத்தா மீது, பாசம் இருக்கத்தான் செய்தது.
தாத்தா நல்ல உயரம். ஆறடி உயரத்தில் நல்ல ஆஜானுபாகுவான உடல். ஆயா குள்ளம். நாலரை அடி உயரம். நல்ல குண்டான உடல்வாகு. தாத்தா ஓரளவுக்கு நல்ல கலர்.ஆயா மாநிறத்துக்கும் சற்று குறைவு. இவ்வளவுக்குப் பின்னரும், இருவருக்கும் ஒரு அன்பு இருக்கத்தான் செய்தது. அதனால்தான் கிருஷ்ணன் வந்து சொன்னவுடன், தாத்தா, “உசிரு போயிருந்தா, எடுத்துக் கிட்டு வந்தர்லாம்” என்று சொன்னார். அவருக்குத் தெரிந்திருந்தது.
ஆயாவின் உடலை ஒரு வண்டியில் எடுத்து வந்திருந்தார்கள். அதற்கு முன்னரே, தென்னையில் பாடை செய்யப் பட்டிருந்தது. வாசலில் கிடத்தி இருந்தார்கள். அவ்வளவு ஓட்டம் ஓடிய கால்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஆயா தூங்குவது போலவே இருந்தது. “ஆயா, எழுந்து வா. நாம வெள்ளாள குண்டம் டெண்ட் தியேட்டருக்கு வேற படம் பார்க்க போகலாம் என்று கூப்பிட்டால், எழுந்து வந்து விடுவது போலிருந்தது எனக்கு.
அத்தைகள் இருவரும் வந்திருந்தார்கள். அம்மா வீட்டினுள்ளே அவர்களுடன் அழுது கொண்டிருந்தார்.
தாத்தா அமைதியாக திண்ணையில் அமர்ந்து இருந்தார். பெரிய மாமா, சின்ன மாமா எல்லோரும் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
அப்பா மிகவும் பிஸியாக இருந்தார். அம்மா அவ்வப்போது எங்களை அழைத்து, வந்தவர்களுக்கு டீ கொடுக்கச் சொன்னார்.
வந்தவர்களுக்கு சாப்பாடும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
ஆயாவுக்கு எல்லா சடங்குகளும் ஒவ்வொன்றாக நடந்தன. பேரன்களான எங்களையும், மகள் வயிற்றுப் பேரன்களையும், நெய்ப்பந்தம் பிடிக்கச் சொன்னார்கள். எரியும் குச்சிகளுடன் ஆயாவின் உடலைச் சுற்றி வந்தோம்.
காட்டின் கடைசி மூலையில் குழி வெட்டித் தயாராக இருந்தது. ஆயா தனது இறுதிப் பயணத்திற்குத் தயாரானாள். அப்பாவுடன் மற்ற மாமன்களும் பாதையைச் சுமந்து நடக்கத் தொடங்கினார்கள். அம்மாவும் அத்தைகளும் அழுது கொண்டே பார்த்துக் கொண்டு இருக்க, நாங்களும் ஆயாவின் உடலுக்குப் பின்னால் நடந்தோம். காலெல்லாம் நெருஞ்சி முட்கள் குத்தின. எடுத்துப் போட்டுக் கொண்டும், முட்கள் இல்லாத இடங்களில் காலை வைத்தும், புதை குழியை அடைந்தோம்.
தாத்தாவுடன் ஆயாவின் தம்பியான பெருமாள் தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு துணையாக வந்தார்.
ஆயாவைக் குழிக்குள் இறக்கிவிட்டு, உப்பைக்கொட்டினார்கள். எல்லோரையும் ஒரு முறை முகத்தைப் பார்த்துக் கொள்ளச் சொன்ன பின்னர், மண்வெட்டியால் மண்ணை வாரி வாரி இறைத்துக் குழியை மூட ஆரம்பிக்க, முதல் முறையாக தாத்தாவின் உடம்பு குலுங்கியது. எதற்காகவும் கலங்காதவர் முதல்முறையாக கண் கலங்குவதைப் பார்த்தேன். எனக்கும் அழுகை வந்தது.
அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, “தாத்தா, அழுவாத தாத்தா” என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். நண்பன் சேகரும் அவன் அப்பாவோ வந்திருந்தான்.
அன்றிரவு சின்ன அத்தை உங்களுடனே தங்கியிருந்தது. பெருமாள் தாத்தாவும், தாத்தாவுக்குத் துணையாக, வீட்டிலிலேயே தங்கி இருந்தார்.தாத்தாவுக்கு இது சற்று ஆறுதலாக இருந்தது. முதுமையில் தனிமை மிகவும் கொடுமையானது.
மூன்றாம் நாள் பால் தெளிக்க முக்கியமான உறவினர்கள் வந்திருந்தார்கள். சின்ன அத்தையும் வந்திருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. பெருமாள் தாத்தாவை, அப்பா காட்டிலிலேயேத் தங்கி விட்ச் சொல்லி விட்டார். அவரும் சம்மதித்து விட்டார்.
சின்ன அத்தை தான் சேலத்திற்குச் சென்று, ஆயா நகை கொடுத்து வைத்திருந்த உறவினர்களிடம் விசாரிக்கச் சென்றது.எல்லோரும் கை விரித்து விட்டனர். போண்டாக்காரப் பொன்னம்மா மற்றும் குப்பாயி எவரிடமும் பைசா பெயரவில்லை. கடைசியாக மண்ணை வாரி இறைத்து சாபம் கொடுத்து விட்டு திரும்பி வந்தது சின்ன அத்தை.
ஓடி ஓடி உழைத்துக் கடைசியில் வெறுங்கையுடன், சேர்த்து வைத்த நகையும் பணமும், மகனுக்கும் மகளுக்கும் கிடைக்காமல், போய்ச் சேர்ந்து விட்டது ஆயா என்னும் ஜீவன்.
அண்ணன் சந்துரு தான் பல நாட்களாக அழுது கொண்டே இருந்தான். ஆயாவுக்கு மிகவும் பிடித்த பேரன். நாங்கள் சிறுவர்கள் ஆதலால் அதிகமாகத் தெரியவில்லை.
அம்மாவுக்கு ஆறுதலாக, சின்ன அத்தை தான் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தது.
இப்போதெல்லாம் தாத்தா திண்ணையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். எங்களில் யாரோ ஒருவர், தட்டில் சாப்பாடு கொண்டு, தாத்தாவிடம் கொடுத்தோம். பெருமாள் தாத்தாவும், தாத்தாவும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். தாத்தாவை மச்சான் என்று தான் கூப்பிடுவார்.
இப்போது ஆயா வளர்த்து வந்த, பசு மாட்டில் அம்மா பால் கறக்கக் கற்றுக்கொண்டார்.
ஒரு நாள் இரவு உணவுக்குப் பின்னர், பெருமாள் தாத்தா சொன்னார்:”அப்பு, காட்டல்லாம் விக்க வேணாண்டா. நம்மால் முடிஞ்சத செய்வோம். மத்தவங்க முன்னாடி நின்று காட்டனும் நாம.”
அன்றிலிருந்து காட்டு வேலைகள் எல்லாவற்றையும் பெருமாள் தாத்தாவும் செய்ய ஆரம்பித்தார். அவரைப் போல வேலை செய்ய ஆட்களே கிடையாது.
அவருக்குச் சொந்த ஊர் பள்ளிப் பாளையம். நூல் வியாபாரம். நூல் வியாபாரத்தில் சூரர். மகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார். குடிப்பதில் பெரும் விருப்பம் கொண்டவர். தினமும் அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. இதனாலேயே மனைவியால் வெறுக்கப்பட்டவர். நாங்கள் பெருமாள் தாத்தா பாட்டி என்று தான் கூப்பிடுவோம். எப்போதும் பாட்டியிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார்.
அப்பா மீண்டும் ஒரு சிறிய பரப்பளவுள்ள நிலத்தைத் திருத்தலாம் என ஆரம்பித்தார்.
கிணறு வெட்டப் போய், பூதம் வந்தது போல், எங்கு தோண்டினாலும் கற்கள், கற்கள். கடப்பாரையால் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி, மம்பட்டியால் வாரினார்கள். இந்தக் கற்களை இரும்புச் சட்டியில் அள்ளி அள்ளி வேறு இடத்தில் கொட்டினார்கள்.
காசுதான் கரைந்ததே தவிர, நிலம் திருந்தியது போலத் தெரியவில்லை. அப்பா வெளியில் மீண்டும் கடன் வாங்க ஆரம்பித்தார். முடிக்காமல் பாதியில் விட்டாலும், பக்கத்துக் காட்டுக் காரர்கள் நக்கலாகப் பேசுவார்கள். எப்படா திண்ணை காலியாகும் என்று காத்திருந்தனர். என்ன செய்வது என்று தெரியவில்லை.
அப்பா, ஆபத்துக்குப் பாவமில்லை என்று, பக்கத்துக் காட்டுப் பெருமாள் கவுண்டரையே ஒரு நாள் வரச்சொல்லி கேட்டார். “அண்ணா, ஆரம்பிச்சிட்டிங்க. பாதியில் விட்டா நல்லா இருக்காது. பக்கத்து நிலத்திலேயே, ஒரு பெரிய குழியாகத் தோண்டி, எல்லா கல்லையும் போட்டு மூடிறலாம். உழவு ஓட்டுறதுக்கும் பின்னால், பிரச்சினை வரலாம் இருக்கும். யோசிச்சு செய்யுங்க” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
-வளரும்.

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.
அருமையான கிராமத்துக்காவியம்.
யதார்த்தமான நடையில், வாழ்க்கை சித்திரத்தை, கண்ணன் விவரிக்கும் விதம், ஒரு கிராமத்தின் சித்திரமாக விரிகின்றன.
ஜெயானந்தன்