1
வார இறுதியில் தான் சீக்கிரமே விழிப்பு வந்து விடுகிறது. வேலை நாட்களில் அடித்துப் போட்டது போல அப்படி ஒரு தூக்கம் வருகிறது. பக்கத்து வீட்டு தென்னை மரத்திலிருந்து ஐந்து மணியிலிருந்தே மயில் ஒன்று பக்கத்து ஏரியிலிருக்கும் தனது நண்பர்களை அகவி அழைத்துக் கொண்டு இருந்தது. அவ்வப்போது பக்கத்திலிருக்கும் காளியம்மன் கோவிலிலிருந்து உச்ச சத்தத்தில் பாட்டுகள் ஒலி பரப்பாகும். பெரும்பாலும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்கள்.அதுவும் ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ என்று ஆரம்பித்தால், கண்கள் கலங்கிப் போகும். அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஆறரை மணிக்கே எழுந்து விட்டேன். மனைவி காபி கொடுத்ததும், குடித்து விட்டு, நல்ல தண்ணீர் மோட்டார் போட்டு விட்டு, செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினேன். மல்லிகை, பப்பாளி, துளசிச் செடிகள், கற்றாழை, பவளமல்லி – இப்படி கலந்து கட்டி இருக்கும். பக்கக் கதவைத் திறந்து விட்டு, வீட்டு முன்னால் இருக்கும் செம்பருத்தி, மல்லிகை, வெற்றிலை, கிறிஸ்மஸ் மரம் ஆகியவற்றுக்கும் நீர் ஊற்றினேன்.
முடிந்தவுடன் நந்தீஸ்வரியிடம் சென்றேன்.
நந்தீஸ்வரி எங்கள் வீட்டுப் பசு மாடு. மனைவிதான் பெயர் வைத்தாள். கன்றுக் குட்டியாக எங்கள் வீட்டுக்கு வந்தது, இப்போது மாடாகி நிற்கிறது.
மின்னாம்பள்ளி மாட்டுச் சந்தை மிகவும் பிரசித்தமான ஒன்று. சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மாடுகளை வாங்கவும் விற்கவும் இங்கு தான் வருவார்கள். மனைவிதான் பசு மாடு வளர்க்கலாம் என ஆரம்பித்தாள். வாங்குவது என முடிவானதும், அண்ணன் சந்துருவிடம் பேசினேன். ‘வர்ற ஞாயிறு மின்னாம்பள்ளி வந்துரு. நம்ம காட்டுல வேலசெஞ்ச ஆறுமுகத்தையும் வரச்சொல்லிட்டன். அவனுக்கு யாரோ மாட்டுத் தரகரத் தெரியுமாம்’ என்றான்.
அண்ணனை வரச்சொல்லி விட்டு, அடுத்த ஞாயிறு காலையில் நேரமாகவே மின்னாம்பள்ளி சென்று விட்டேன். சந்துரு சற்று நேரம் கழித்து ஆறுமுகத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தான்.
ஆறுமுகம் யாருக்கோ போன் செய்து பேசினான். “தரகர் இப்ப வந்துடுவாங்கண்ணா. பசுங்கன்னு வேணும்னு சொல்லியிருக்கன்” என்றான். பத்து நிமிடத்தில் தரகர் வந்தார். “நாட்டு மாட்டுப் பசுங்கன்னு தானே? பார்த்திரலாம். பின்னால் வாங்க” என்றான்.
எங்கு பார்த்தாலும் மாடுகள். அவ்வளவு மாடுகளை ஒரே இடத்தில் முதன் முறையாகப் பார்க்கிறேன். மாட்டு மூத்திர நாற்றம் மற்றும் சாணத்தினூடே நடந்தோம். தாயைப் பிரிந்த கன்றுகள் அம்மாவென அடிக்குரலில் கத்தின. பக்கத்திலேயே மாடுகளுக்குத் தேவையான கழுத்துக் கயிறு, மூக்கனாங்கயிறு, கழுத்தில் கட்டும் மணி, நெற்றிச்சுட்டி எல்லாம் விற்கும் கடைகளிருந்தன.
மாடுகளினூடாக நடந்து ஒரு மாட்டையும் கன்றையும் அடைந்தோம். தரகர் கேட்டார்: “இது நாட்டு மாட்டுக் கன்னுதான?”. மாட்டுக் காரர் சொன்னார்: “இல்லீங்க. இது கிராஸ்”.
மீண்டும் மாடுகளினூடகா நடை. நீண்ட கொம்புகளையுடைய மாடுகளைப் பார்த்தவுடன் பயமாக இருந்தது. சிலது முட்டவும் வந்தது.
இன்னும் ஒரு தாயும் சேயும். இம்முறை கன்றுக்குச் சுழி சரியில்லை என நிராகரிப்பு. ரெட்டச் சுழிக் கன்று வீட்டுக்கு ஆகாதாம்.
இப்படியே ஒரு மணிநேரம் போனதும், தரகர் சொன்னார்: “அடுத்த சந்தைக்கு வாங்க. நானும் சொல்லி வைக்கிறேன்” என்று தலையைச் சொறிய, அவருக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்தேன். எந்த நாட்டு மாட்டுப் பசுங்கன்றும் கிடைக்காததால், கிளம்ப முடிவு செய்து, டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு பசுங்கன்றைப் பார்த்தோம். வேனில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். அவ்வளவு முக லட்சணம். லட்சுமி கடாட்சம்.
கூடவே வந்திருந்த அண்ணன் சந்துரு, முன்பு எங்கள் காட்டில் வேலை செய்த ஆறுமுகத்திடம் “இது நாட்டு மாடாப் பாரு” என்றான். “ஆமாண்ணா, நாட்டு மாடு தான்” என்றான். பேரம் பேசி முடிவாக, ஆறாயிரம் ரூபாய்க்குக் கை மாறியது. புதிதாக கழுத்துக் கயிறு, கட்டுவதற்கு நீண்ட கயிறு, கழுத்து மணி எல்லாம் வாங்கியபின், எங்கள் சுமோ வண்டியிலேயே கன்றை ஏற்றிக் கொண்டு கிளம்பினோம். ஆறுமுகம் பின்னால் அமர்ந்து பிடித்துக் கொண்டு வந்தான்.
வீட்டிற்கு வந்ததும், ஆறுமுகம், கன்றை ஒரு குழந்தையைப் போல தூக்கியபடி, வீட்டிற்குப் பின்புறம் சென்றான். மொளக்குச்சி ஒன்று அடித்துக் கொடுத்து விட்டு, வக்கப்புல்லு ஒரு கட்டு வாங்கி வைத்து விட்டு, தண்ணீருக்கு ஒரு சிமெண்ட் தொட்டி வாங்கி வைத்து விட்டுச் சென்றான் ஆறுமுகம். இன்று வீட்டிற்கு வந்தது போலிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பக்கம் ஆகிறது.
சாணியெல்லாம் அள்ளிச் சுவற்றுக்கு மறுபுறமிருக்கும் காலி இடத்தில் கொட்டி விட்டு, ஒரு பக்கெட்டில் வக்கப்புல்லும், மற்றொன்றில் தண்ணீரும் வைத்தேன். கைகால் கழுவி விட்டு, பூக்கள் பறித்துப் பூஜையறையில் வைத்து விட்டு, போனோடு அமர்ந்தேன்.
‘போன நோண்டுனது போதும். சமைக்கக் காயி எதுவுமில்லை. மார்க்கெட் போயி, தேங்காய், தக்காளி, காய்கறிகள் ஏதாவது கம்மி வெலயில, கருவேப்பிலை, கொத்தமல்லி வாங்கிட்டு வாங்க’ என்றார்.
கட்டப்பைகள் இரண்டை எடுத்துக் கொண்டு, செல்போனைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
கைலாசநாதர் கோவில் சந்து வழியாக நடந்து, கோட்டைக் கடந்து சென்றால், அவ்வளவு கூட்டம். ரோட்டில் பாதியை இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. பேருந்துகள் சத்தமாக ஒலி எழுப்பியபடியேக் கடந்து சென்றன.
சுற்று வட்டாரப் பகுதியிலிருக்கும் எல்லா கிராமங்களிலும் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வருவார்கள். எல்லாவித காய்கறிகளும் புதிதாக கிடைக்குமென்பதே சிறப்பு. சீசனுக்கு தக்க வகையில் விலையில் ஏற்ற இறக்கமிருக்கும். சதுர வடிவில் இருக்கும்.
நுழைந்ததும் ரோட்டிலேயே குடைகளுடன் பல பூக்கடைகள். வண்டியில் வருபவர்கள் அடமாக நிறுத்தி பூ வாங்கி எல்லோருக்கும் தொந்தரவு தருவார்கள்.
இடதுபுறத்தில் வெற்றிலை, எலுமிச்சை விற்கும் கடைகளும், காய்கறிக் கடைகளும். வலது புறம் பூண்டு, மசால் சாமான் கடை, வாழை இலை கடைகள். பிறகு வரிசையாகக் காய்கறி விற்கும் கடைகள்.
தாண்டிச் சென்றால் இடது புறம் செட்டியார் தாத்தா கடை. இவரிடம் குடை மிளகாயும் பூண்டும் கிடைக்கும். தொடர்ந்து வாங்கவில்லையெனில் மரியாதை குறையும்:”இஞ்சி பத்து ரூபாய்க்கா? கால் கிலோ வாங்கிக்க. விக்கிற வெலக்கி பத்து ரூபாய்க்கா?” என்பார்.
அவரைத் தொடர்ந்து தேங்காய்க்கடைகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கீரை வகைகள், பிறகு காய்கறிக் கடைகள்.
மார்க்கெட் முடியும் இடத்தில், வலதுபுறம் பழக்கார பாட்டி கடை. மனைவிக்கு ரொம்ப பழக்கம். எப்போது பழம் வாங்கினாலும் மாட்டிற்கென இலவசமாக நிறைய பழங்கள் கொடுக்கும். மாட்டைப் பற்றி விசாரிப்பார்.”இன்னும் சென் ஆவலியா? மூணு வருஷம் ஆச்சு. ஏதாவது ஊசி கீசி போடலாமில்ல?”. “அதெல்லாம் போட்டாச்சிம்மா. சென முடிக்க மாட்டேங்குது”. “வித்துட்டு வேற வாங்கிடுங்க” என முடிக்கும் போது எனக்குக் கோபம் வரும். “சரிம்மா, பாக்கலாம்” என நகர்ந்து விடுவேன்.
இடதுபுறம் தேங்காக்கார தாத்தா. எப்போதும் நூறு ரூபாய்க்கு ஐந்து தேங்காய்கள் தருவார். அவர் தோட்டத்தில் விளைந்த தக்காளி, வெண்டைக்காய் எல்லாம் கூறுகட்டியும் வைத்திருப்பார்.
ரோட்டு முனையில் காமராஜர் சிலைக்குக் கீழே மற்றுமொரு பழக்கார அம்மா கடை. செவ்வாழை நன்றாக இருக்கும். பக்கத்திலிருக்கும் பழக்கடையில் பேரம் பேசி வாங்கித் தருவார். முன்பு சேலத்திலிருந்து பழங்கள் வாங்கி வந்து, கைலாசநாதர் கோவில் முன்பு அமர்ந்து விற்றுக் கொண்டிருந்தார். அவ்வப்போது நாட்டு சோளக்கதிரும் விற்பார். இவரும் இன்னொரு அம்மாவும் விற்பார்கள். இப்போது தான் இடம் மாற்றி விட்டார்.
முன்னால் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணிடம் தேங்காய்களை வாங்கிக் கொண்டு, மார்க்கெட் நுழைவாயிலுக்கு வந்தேன். வலதுபுறம் திரும்பி முதலாவது கடையிலிருக்கும் அண்ணனிடம் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தபோது, போனடித்தது. அந்த அண்ணனுக்கு இரண்டு ஆண்கள். இருவருமே சேலத்திலிருக்கும் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார்கள். செலவு அதிகம் பிடிக்கும் கல்லூரிகளில் அதுவும் ஒன்று. எப்படி சமாளிக்கிறார் என ஆச்சரியமாக இருக்கும்.
என்னைப் பார்த்ததுமே,”அண்ணா, நாட்டுச் சுரைக்காய் வந்திருக்கு” என்பார். எப்போதும் காய்கறிகள் புதிதாக இருக்கும். அவருடைய தோட்டத்தில் இருந்தும் அவருடைய அப்பா சைக்கிளில் கட்டி எடுத்து வந்து விடுவார். நூக்கல் இவரிடம் தான் கிடைக்கும். விலையும் நியாயமாக இருக்கும்.
மனைவியிடம் இருந்து அழைப்பு. “சொல்லு, இப்பதான் காய்கறி வாங்கிட்டு இருக்கிறன்” என்றேன்.
“யாரோ சேகராம், செல்லியம்மன் நகராம். மகளுக்குக் கல்யாணப் பத்திரிகை வைக்க வந்திருக்கிறாரு. சீக்கிரம் வாங்க” என்றாள்.
“பத்து நிமிஷம், வந்தர்றன். காபி போட்டுக் கொடு” என்றேன்.
சேகரைப் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது. காடு விக்கும்போது கூட, அவனைப் பார்க்க முடியவில்லை. என்னுடன் பத்தாவது வரை படித்தவன். தினமும் காலையில் வீட்டிற்கு வந்து விடுவான். என்னை விட்டு விட்டு தனியாக அவன் பள்ளி சென்றதில்லை. இருவரும் சேர்ந்து பள்ளிக்குச் செல்வோம். என்னைப் போலவே, தொப்பை போட்டிருக்குமோ, தலை முடி நரைத்திருக்குமோ? ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தேன்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனை சேகர் தான் வரவேற்றான். இளமையாகவே காட்சியளித்தான். எப்போதும் போல, ஒல்லியாகவே இருந்தான். “வா, கண்ணா. நல்லாயிருக்கயா?” என்றான். “நல்லா இருக்கறன் சேகரு. அப்பா, அம்மா எப்படி இருக்காங்க. பசங்க என்ன பண்றாங்க. இப்ப எங்க இருக்க?” எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன் .
“எல்லாரும் நல்லா இருக்கிறாங்க. அப்பாவும் அம்மாவும் செல்லியம்மன் நகர் காட்டுலதான் இருக்காங்க. இப்ப வாழப்பாடியில பேக்கரி ஒண்ணு வெச்சிருக்கன். பொண்ணுக்கு தான் கல்யாணம். வர்ற ஞாயித்துக்கெழம சாயந்திரம் ஆறு டூ ஒன்பது. நம்ம அயோத்தியா பட்டணம் கல்யாண மண்டபத்தில தான். குடும்பத்தோடக் கட்டாயம் வந்துறனும்” என்றான். “மாப்பிள்ள என்ன பண்றாரு?” என்றேன். “மாப்பிள்ளை டாக்டரு. வாழப்பாடியிலேயே சின்னதா ஒரு கிளினிக் வைச்சிருக்காரு. செல்லியம்மன் நகர் ரோட்டு மேலய, ஒரு நாலு ஏக்கரா கிரயம் பண்ணிக் குடுத்துட்டன். ஐம்பது பவனு நகை போடறம். எல்லாம் நம்ம பொண்ணுக்குத் தான” என்றான்.
“என்னோட பொண்ணு இப்பதான் ஒன்பதாவது படிக்கறா. நான் என்ன செய்யப் போறனோத் தெரியல” என்றேன். “எல்லாம் நல்ல படியா நடக்கும். சரி கண்ணா. பக்கத்துல இரண்டு மூணு பேருக்கும் பத்திரிகை வெக்குனும். நேரமாயிடுச்சி” என்றபடியே கிளம்பினான்.
“ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க. சாப்பிடாமயேக் கெளம்பற” என்றேன். “இல்ல கண்ணா, இன்னொரு நாளைக்கு வர்றேன்” என்றபடியே கிளம்பி விட்டான்.
அண்ணன் சந்துருவுக்குப் போன் செய்தேன். “சொல்லு கண்ணா?” என்றான்.
“சேகரு வந்தானா? பொண்ணு கல்யாணமா, பத்திரிகை வைச்சிட்டு இப்பதான் போறான்” என்றேன்.
“நேத்து தான் எனக்கு பத்திரிக்கை வச்சான். ஞாயித்துக்கெழம வீட்டுக்கு வந்துடு. சேர்ந்து போய்ட்டு வந்திரலாம்” என்றான்.
“நான் மட்டும் தான் வருவேன். மாலதி வர முடியாது. பாப்பாவுக்குப் பாட்டு கிளாஸ் இருக்குது” என்றேன்.
“இங்கயும் நான் மட்டும் தான் வர முடியும். இவங்க திருச்செங்கோடு போறாங்க” என்றான்.
“சரி சந்துரு, ஞாயித்துக்கெழம அஞ்சு மணிக்கு அங்க வந்தர்றன்” என்றபடியே போனை கட் செய்தேன்.
அந்த வாரம் சற்று மெதுவாக ஓடியது போல் தோன்றியது. ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. மூன்று மணியிலிருந்தே தயாராக ஆரம்பித்து விட்டேன். நான்கு மணிக்குப் பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் ஏறினேன். சரியான வெய்யில். ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி நினைவுகளை அசை போட்டேன்.
சேகர் இல்லாமல் நான் பள்ளி சென்ற நாட்களை எண்ணி விடலாம். மூன்றாவது வகுப்பு வரை, அப்பா என்னையும் தம்பியையும் சைக்கிளில் மேட்டுப்பட்டி ஊருக்குள்ளிருந்த பள்ளிக்கு அழைத்துச் செல்வார். நான்காம் வகுப்பிலிருந்தே நடந்து செல்ல ஆரம்பித்தோம். அப்போது துணைக்கு வந்தவன் தான் சேகர். எங்கள் காட்டுக்குச் செல்லும் வழியில் ஒயர்மேன் நாடார் காட்டிலிருந்து இடதுபுறம் திரும்பி நடந்தால், முதலில் வருவது ராமசாமிக் கவுண்டர் காடு. இரண்டாவது மகன் தான் சேகர். சேகருக்கு மூத்தவன் கணேசன். சின்னவன் சுரேசு. இரண்டு பேருமே எங்களுடன் படித்தவர்கள்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, மேட்டுப்பட்டி ஊருக்குள்ளிருந்த பள்ளிக்கு நடந்து செல்கையில் வழியில் இருக்கும் முனியப்பன் கோவிலில் தினமும் கற்பூரம் கொளுத்தி சாமி கும்பிடுவோம். ஏனோ முனியப்பனை அவ்வளவு பெரிய மீசையோடு பார்க்கும் போது பயமாக இருக்கும். பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் வர வேண்டிக்கொள்வோம்.
தனபால் வாத்தியார் கணக்கு சொல்லிக் கொடுத்தார். அவருக்கு ஜோசியம் சொல்வது பகுதி நேர வேலை எனப் பிறகு, அண்ணன் வழியாக தெரிந்து கொண்டேன். இவருடைய வகுப்பில் தான் ஒரு முறை ஏதோ எடுத்து வரச்சொல்லி தனபால் சார் அனுப்பினார். நோட்டை எடுத்து வருவதற்கும், வடிவுக்கரசி வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. நன்றாக மோதிக் கொண்டோம்.
தனபால் சார் கவனித்து விட்டு,”ஏண்டா, ரிஷப ராசிக் கானா? மாடு மாதிரி முட்டும்?” என்றார். “அந்த பொண்ணு தான் கண்ண மூடிக்கிட்டு வந்தது” என்றேன்.”சரி சரி, இனிமே பாத்து வா” என்றார்.
சுருட்டை முடியுடன், கம்பளிப் புழு மாதிரி சன்னமான மீசையுடன் பழனிச்சாமி வாத்தியார் ஆங்கிலம் சொல்லித் தந்தார்.
ஐந்தாம் வகுப்பில் பஞ்சவர்ணன் என்பவன் நண்பன் ஆனான். அவன் வீடு பள்ளிக்கு நடந்து சென்றால் பதினைந்து நிமிட தூரத்தில் இருந்தது. தினமும் மதிய உணவு இடைவேளையில் நானும் சேகரும் அவன் வீட்டுக்குச் சென்று வந்தோம். அந்த அளவுக்கு சுத்தமில்லாமல் இருந்தது.
எங்களுடன் படித்த ஈஸ்வரியின் வீடும் அங்கு தான் இருந்தது. ஒரு முறை, விடுமுறை நாளில், ஈஸ்வரியும் அவளுடைய நண்பிகளும் சேர்ந்து எங்கள் காட்டுக்கு வந்து விட்டார்கள். தாத்தா என்னை அழைத்து, ‘ஒன்னோட நண்பர்கள் வந்திருக்காங்க’ என்றார். நான் ஓடிப்போய் அத்தையிருந்த உள்ளறையில் ஒளிந்து கொண்டேன். அவர்கள் செல்லும் வரை, வெளியே வரவில்லை.
பள்ளியைத் தாண்டி, வலதுபுறம், பாட்டியின் கயிற்றுக் கட்டிலில் திண்பண்டங்கள் கிடைக்கும். கோணப் புளியங்காய், எலந்தவடை மிகவும் பிடித்தவை. பக்கத்து பெட்டிக் கடையில், சோடாக்கலர், கொடலு அப்பளம் (ஐந்து விரல்களுக்கும் ஐந்து), கல்கோணா, தேன் மிட்டாய் அவ்வளவு சுவை. அம்மா கொடுக்கும் நாலணாவுக்கு தினமும் ஏதாவது வாங்கித் தின்போம்.
பள்ளிக்கருகில் ஒரு மாரியம்மன் கோவில் இருந்தது. தாண்டினால் பாய்க்கடை. பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கியதற்கு, சாக்லேட் பாய் கடையில் தான் வாங்கினேன். பிறகு தான் தெரிந்தது எல்லாம் மணல் கலந்த சாக்லேட் என்று.
சேகர் எப்படியும் முதல் ஐந்து ரேங்க்குள் வந்து விடுவான். ஆனால் வியாபாரத்தில் இவ்வளவு பெரிய ஆளாக வருவான் என நினைக்கவில்லை.
கணேசனுக்கு படிப்பு சரியாக வராததால், தோட்ட வேலையைப் பார்த்துக் கொண்டான். சுரேஷ் பன்னிரண்டு வரை படித்ததாக நினைவு. கணேசனும் சேகரும் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்று விட, சுரேஷ் மட்டும் காட்டில் அப்பா, அம்மாவுடன் தங்கி விட்டான்.
“பழைய பஸ் ஸ்டாண்ட் எல்லாம் இறங்குங்க” என்ற நடத்துனரின் குரலால் நினைவிலிருந்து மீண்டு வந்து பேருந்திலிருந்து இறங்கி, அயோத்தியாபட்டினம் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
பதினைந்து நிமிடங்களில் அயோத்தியாபட்டிணம். அழகான ஒரு ராமர் கோவில் உள்ளது. வருடம் ஒரு முறை அப்பா, அம்மாவுக்கு திதி கும்பிடும் போது, அண்ணன் வீட்டிற்குக் குடும்பத்தோடு வருவது வழக்கம். இப்போது பல கடைகள் வந்த விட்டன. செல்வம் என்ற பெயரில் ஒரு நல்ல சைவ உணவகம் உள்ளது. அவரே மலையடிவாரத்தில் செல்வம் ரிசார்ட் என்ற பெயரில் ரிசார்ட் நடத்துகிறார். மெயின் ரோட்டில் செல்வம் சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. பணக்காரர்களுக்கு எப்படியோ பணத்தைப் பெருக்கும் மந்திரம் தெரிந்திருக்கிறது.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் மின் கம்பத்தினருகே வலது புறம் திரும்பி மேலும் ஒரு நூறடி நடந்தால் அண்ணன் வீடு. ஐந்து வருடங்களுக்கு முன்பு சதுர அடி நூறு ரூபாய்க்கு விற்ற நிலம் இன்று ஆயிரத்து ஐநூறுக்குக் கிடைப்பதில்லை.
அண்ணன் கிளம்பத் தயாராக இருந்தான். அவன் வீட்டுக்கு முன்புறம் கல்யாண மண்டபத்தின் நீண்ட பின்புற தடுப்புச் சுவர். வாகனங்கள் நிறுத்த மிகப்பெரிய பார்க்கிங் ஏரியா. ஒரு முறை, தம்பி ராஜா சிங்கப்பூரிலிருந்து வந்த போது, எல்லோரும் கிரிக்கெட் ஆடிய ஞாபகம்.
நடந்து மண்டபத்தை அடைந்தோம். சரியான கூட்டம்.
வரவேற்பு மேஜையில் கற்கண்டு, சந்தனம், ரோஜாக்கள். சேகரின் அப்பா ராமசாமி, அம்மா ஆகியோர் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். “வா கண்ணா, வா சந்துரு. சேகரு இங்க எங்கேயோ இருப்பான்” என எங்களை ராமசாமி வரவேற்றார். சேகரின் தம்பி சுரேஷ் எங்களை வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றான். மணமக்களை வாழ்த்தி விட்டு, கொண்டு வந்த மொய்க் கவர்களைக் கொடுத்து விட்டுக் கீழிறங்கி சாப்பாட்டு அறைக்குச் சென்றோம்.
சரியான கும்பல். ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு வரிசையில் காத்திருக்கும் நபர்கள். அத்துடன், சரவண பவன் ஹோட்டலில் சாப்பிடுபவரின் பின்புறம் நிற்பது போலப் பலர் நின்றிருந்தனர்.
“கண்ணா, நல்லாருக்கியா?” எனக் குரல் கேட்கத் திரும்பினால், பள்ளி நண்பன் செந்தில். “நல்லா இருக்கிறேன். முருகன், வடிவுக்கரசியெல்லாம் நல்லா இருக்கிறாங்களா?” என்றேன். “முருகன் இப்ப பெரிய ஆளாயிட்டான்.அவனோட நெலத்தில தான் இப்ப ஒரு ஹோட்டலிருக்குது. நல்ல வெலக்கி வித்துட்டான். வடிவுக்கரசி ஸ்விட்சர்லாந்தில இருக்காங்க. போன வருஷம் கூட வந்திருந்தாங்க” என்றான். இருவரும் பள்ளித் தோழர்கள். வடிவுக்கரசி செந்திலுக்கு முறைப் பெண். முருகனுக்கும் ஒரு வகையில் சொந்தம். இருவருக்கும் கொடுக்காமல், வடிவுக்கரசியின் அப்பா, பாரின் மாப்பிள்ளையைப் புடிச்சிட்டாரு.
செந்தில் சரியான வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தான். அவன் மனைவி முன்னால் அதைக் கோட்டு சங்கடப் படுத்த விரும்பவில்லை. முன்பு வீட்டிலேயே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்து விற்றுக் கொண்டிருந்தான். இப்போது சேலத்தில் ஏதோ கம்பெனியில் கம்யூட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கிறான் எனக் கேள்விப்பட்டேன்.
சுரேஷின் தயவில் எப்படியோ சாப்பிட இடம் கிடைத்தது. அருமையான டிபன் வகைகள். இட்லி, சிறிய ஆணியன் தோசை, முந்திரி கேக், அல்வா, வெஜிடபிள் பிரியாணி, ரைத்தா, இரண்டு வகை சட்னிகள், சாம்பார், சிறிய மெது வடை, பாயசம், வாட்டர் பாட்டில்.
செந்திலுடன் வெளிவந்ததும், சின்னம்மாவின் பெரிய மகன் மணி, பெருமாளண்ணனின் மகன் குமார், கரண்டுகார முத்துவின் பெரிய மகன் இந்திரன் எல்லோரையும் பார்த்தோம். ராமசாமி அண்ணனும் வந்து சேர, வட்ட வடிவில் எல்லோரும் உட்கார்ந்தோம். “அண்ணா, நேரமாயிடுச்சி, கெளம்பனும்” என்றேன்.
“ஏன் கண்ணா இப்படி ஓடிக்கிட்டே இருக்கீங்க. எத்தனை வருஷம் ஆச்சு பார்த்து. அம்மா செத்தன்னைக்குப் பார்த்தது. அப்பப்போ வர புடிக்க இருந்தாதான நாலு பேத்தத் தெரியும். காட்ட இப்படி வித்திட்டீங்களே. இப்ப ஏக்கர் முப்பது லட்சம் வரையிலும் போவுது. ஒங்க காட்ட தனித்தனியாப் பிரிச்சிட்டானுங்க. ஏதோ ரிசார்ட்டுங்கறானுங்க. யார் யாரோ வர்றாங்க. முன்னாலெல்லாம் யார் ஊருக்குள்ள வந்தாலும் அடையாளம் தெரியும். இப்ப யாரு வர்றாங்க போறாங்கன்னேத் தெரியலை. ராத்திரியில நெருப்பப் பத்து வைச்சிக்கிட்டு சுத்தி ஆடுறானுங்களாம். ராத்திரி பூரா ஒரே சத்தமாம். ஒங்க பக்கத்துக் காட்டுக்காரன் மன்னாரு தான் சொன்னான். என்னமோ போப்பா” என நீளமாகப் பேசி முடித்தார் ராமசாமி.
என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற நான்,”என்னண்ணா பண்றது, எல்லாம் நம்ம கையிலயா இருக்குது. ஏதோ அப்பத்திய அவசரம். எல்லாருக்கும் கடன் இருந்திச்சி” என்றேன். கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தயாராயிருந்தது.
“முடிஞ்சா எப்படியாவது திரும்ப வாங்கிப் போட்டுருங்கப்பா” என்றார். “முயற்சி பண்றேண்ணா” என்றேன். சந்துருவும்,”ஏதோ கெட்ட நேரம். கை வுட்டுப் போயிடுச்சி. நல்ல நேரம் வராமயா போயிடும்?” என்றான் தன் பங்குக்கு. அவன் முகமும் வெளிறிப்போய், அழுது விடுவான் போலிருந்தது.
“சரிண்ணா, கெளம்பறம்” என்று சொல்லி வெளியே வந்தோம். அப்போது தான், சேகரைப் பார்த்தோம். “கண்ணா, சாப்பிட்டிங்களா?” என்றான். “சாப்புட்டம் சேகரு. பொண்ணு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வரனும் சேகர்” என்றேன். “சரி கண்ணா” என்றான் சேகர். அதற்குள் சுரேஷ் தனது மகளை அறிமுகம் செய்து வைத்தான். “அண்ணா, என்னோட பொண்ணு. பாவை என்ஜினியரிங் காலேஜ்ல மூணாவது வருஷம் கம்ப்யூட்டர் படிக்கறா. ஹாஸ்டல்ல தங்கி இருக்கறா” என்றான். “ரொம்ப சந்தோஷம் சுரேசு. சரி, சேகரு, நேரமாயிடுச்சி. கெளம்பறம்” என்றேன். விடைபெற்று வெளியே வந்தோம்.
மனசு கனத்துப் போயிருந்தது.
“சரி, சந்துரு, நான் கெளம்பறன் நேரமாயிடுச்சி. கால் பண்றேன்” என்றபடியே புதுப் பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். இருபது நிமிடங்களில் புதிய பேருந்து நிலையம். உடனே தாரமங்கலம் வழியாக ஜலகண்டாபுரம் செல்லும் பேருந்து கிடைத்தது. எப்போது வீடு வரும் என்றிருந்தது. சரியான தலை வலி.
வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவி கேட்டாள்;”ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? என்னாச்சி?”. “ஒண்ணுமில்ல. லைட்டாத் தலை வலி” என்றேன். “டிபன் பலமா?” என்றாள். “நல்ல டேஸ்ட்டு. சரி, கொஞ்சம் பால்” என்றேன். பாலைக் குடித்து விட்டு படுத்தவனுக்குச் சுத்தமாகத் தூக்கம் வரவில்லை.
காட்டை விற்றுப் பெரிய தவறு செய்து விட்டோமா? குத்தகைக்கு விட்டிருக்கலாமோ? இப்போது காட்டைச் சென்று பார்க்கவும் தயக்கமாக இருக்கிறது. நினைக்க நினைக்க மனசு கனமாகி, கண்களிலிருந்து கண்ணீர் ஒரு கோடாக கன்னங்களில் வழிய ஆரம்பித்தது.
-வளரும்

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.