அத்தனை ஜன்னல்கள் இருந்தும் துளிக்காற்றுக்கூட நடுவில் நிற்பவர்களின் முகத்தில் படவில்லை. ஏற்கனவே கசகசவென இருப்பவர்களின் உடம்போடு உடம்பு நெருக்கி உரசியபடி வருவதால், கூடுதலான எரிச்சல் எல்லோர் முகத்திலும் தெரிந்தது. அழுதழுது தூங்கிப்போன குழந்தையை நெடுநேரம் தூக்கிக்கொண்டு நிற்பவளை இடித்துக்கொண்டு இறங்கியதில், தோளில் சாய்ந்திருந்த குழந்தை லேசாக முண்டியது.
முதுகை தட்டிக்கொடுக்க முடியாதபடி இன்னொரு கை இருக்கையில் உள்ள கம்பியைப் பிடித்திருந்ததால், குழந்தையை தூக்கியுள்ள கையை தொட்டில் ஆட்டுவதைப்போல் மேலும் கீழும் ஆட்டினாள். அப்படியே திரும்பி மெதுவாக கழுத்தை பின்னோக்கி இழுத்து ஓரக்கண்ணில் குழந்தை விழித்துவிட்டதாவென நோட்டமிட்டாள். குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தது. கண்ணீர் காய்ந்து இமை முடிகள் ஒன்றோடொன்று ஒட்டியிருந்தன.
எதர்ச்சையாக குழந்தையின் கழுத்தை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள். கழுத்தில் போட்டிருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. கம்பியை விட்டுவிட்டு பதற்றத்தோடு வேகவேகமாக கழுத்தைச் சுற்றி தடவி டி சர்ட்டின்னுள் கையை நுழைத்து தேடினாள். கிடைக்கவில்லை.
“குழந்த கழுத்துல போட்டுருந்த செயின யாரோ திருடிட்டாங்க” என்று சத்தம்போட்டாள்.
அவள் சொன்னதைத் தெளிவாகக் கேட்ட அத்தனைபேரும், அடுத்த நொடி அனிச்சையாக பாக்கெட்டில் வைத்திருந்த பர்சையும், அணிந்திருந்த நகைகளையும் ஒருநிமிசம் தொட்டுப் பார்த்துக்கொண்டார்கள்.
சட்டெனத் திரும்பி தனக்கு பின்னால் நின்றிருந்தவர்களை பார்த்தாள். படிய தலைவாரி மேற்சட்டையை சொருகி அவளின் கழுத்திற்குள் வெகுநேரமாக பெரும் மூச்சு விட்டுக்கொண்டிருந்த முப்பத்தியேழு வயது மதிக்கத்தக்கவன். அவள் பார்க்கிறாள் என்றதும் அதுவரை அவளுடைய அடிமுதுகில் படுத்திருந்த தனது புடைத்த தொப்பையை உள்ளிழுக்க முயற்சித்தான்.
அவளுக்கு இடதுபுறம் குழந்தைக்கு பக்கத்தில் பாதி புருவத்தோடு சேர்ந்து கீழே இறங்கும் தழும்புடன், செம்பட்டைத் தலையோடு, கொஞ்சம் ஒல்லியாக, கருத்த தோலும் குழிவிழுந்த சிவந்த கண்களுமாய் வெளுத்துப்போன வேட்டி சட்டையோடு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்றான்.
அவளின் வலதுபுறம் இரண்டு கல்லூரி இளைஞர்களும், அவளின் இடது கையின் முன்பக்கத்தில் நெற்றியில் பெரிய குங்கும பொட்டுடன் உடல் பருமனானதொரு பெண்ணும்தான் அவளைச் சுற்றி நின்றிருந்தார்கள்.
இரண்டு மூன்று வினாடிக்குள் எல்லோரையும் பார்த்தவளின் பார்வை, அந்த தழும்பு முகத்தோடு, குழிவிழுந்த சிவந்த கண்களுமாய் இருப்பவனின் முன் நிலைக்கொண்டது. அவளோடு சேர்ந்து எல்லோரும் அவனையே பார்த்தனர். அவன் எதுவும் தெரியாதவன்போல அவளைப் பார்த்தான்.
அவனை முறைத்தவாறு சட்டென்று “செயினை கொடுங்க” என்றாள். அவன் கண்களை விரித்து திறுதிறுவென எந்த செயின் என்பதுபோல நின்றான்.
“உங்களதான் செயின கொடுங்க”.
“எம்மா நான் ஒன்னும் எடுக்கலம்மா. நான்பாட்டுக்கு செவனேன்னு நிக்கிறேன். என்னையபோயி சொல்றியேம்மா” என்றான்.
அவளுக்கு உதவுவதாக எண்ணிய அவளின் கழுத்திற்குள் பெரும் மூச்சுவிட்டவன் “எடுத்திருந்தியன்னா கொடுத்துடுயா” என்றான்.
“வண்டிய நிப்பாட்டுங்கப்பா” என குரல் எழுந்தது. ஓட்டுனரின் காதில் விழவில்லைபோல. சீரான வேகத்தில் அவர் பேருந்தை இயக்கிக்கொண்டிருந்தார்.
தாளை நான்காக மடித்து சிறிய அலுமினிய தகட்டில் வைத்து மும்முரமாக குறுக்குக்கோடு போட்டுக்கொண்டிருந்த நடத்துனரிடம் “வண்டிய நிப்பாட்டச் சொல்லுங்க. செயின் களவு போச்சாம்” என்றதும், உடனே அவர் விரலில் மோதிரம்போல மாட்டி தொங்கிக்கொண்டிருந்த விசிலை தொண்டை இறுக ஊதினார்.
ஓட்டுனர் எழுந்து பிரேக்கின் மேல் நின்று சலித்துக்கொண்டு “என்னப்பா” என்றார்.
“வண்டிய ஓரங்கட்டுங்கண்ண. எவனோ செயின களவாண்டுட்டானாம்” என்றபடி எல்லோரையும் நெருக்கி விலக்கி உள்ளே நுழைந்து நடுப்பகுதிக்குச் சென்றார். அதற்குள் பெண்களில் சிலர் “இதுக்குன்னே கூட்டமா உள்ள வண்டில ஏற வேண்டியது. திருட்டு நாய செருப்பாலயே அடிக்கனும்” என்றும் “கொழந்த கழுத்துலேர்ந்து அறுத்துருக்கான் பாரு. இவனுக்கெல்லாம் புள்ளக்குட்டிங்க இருக்காதாவென” ஆளாளுக்கு திட்டுவது கேட்டது.
அருகில் நின்ற கல்லூரி இளைஞன் “செயின கொடுய்யா” என்றான்.
“நான் எடுக்கல தம்பி” என்று இருகைகளையும் விரித்து காட்டினான். கைகள் காப்புக் காய்த்திருந்தது. அவனுடைய இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஆகிருக்க வேண்டும். நகத்தினுள் ரத்தம் கட்டி முக்கால்வாசி நகம் கருப்பாகி விரல் சற்று வீங்கி இருந்தது.
“சுத்தி இத்தன பேரு நிக்கும்போது ஒன்ன மட்டும் சொல்றாங்கன்னா. சும்மா சொல்லுவாங்க. ஒனுங்கு மரியாதையா கொடுத்துடு. இல்லன்னா மூஞ்சி மொகரைய பேத்துடுவேன்” என்று மற்றொரு இளைஞன் அவனுடைய முகத்துக்கு முன் விரலை நீட்டி எச்சரித்தான்.
தனது இடது கையின்மேல் அடித்து “சத்தியமா நான் எடுக்கலங்க. வேணும்னா பாருங்க” என்று தனது மேற்சட்டைப் பைனுள் கையைவிட்டு உள் துணியை வெளியே எடுத்துக் காட்டினான். பாக்கெட்டின் உள்தையலில் மண் துகள்கள் ஒட்டியிருந்ததேத் தவிற வேறொன்றும் இல்லை.
“ஒனுங்கா கேட்டா இவனுக்கு சரிபட்டு வராது” என்ற அந்த இளைஞன் பாதிக் கன்னத்தோடு சேர்த்து கழுத்தில் பலமாக ஒன்றுவிட்டான்.
அடிவாங்கிய வேகத்தில் நிலை தடுமாறிவன் இருகைகளாலும் அடி விழுந்த இடத்தை மூடிக்கொண்டான். அவனுடைய மூச்சு இரண்டு நொடிகள் நின்று “ம்மா…” என்ற சொல் தொண்டையில் அழுந்தி வெளியே வந்தது.
அடுத்தடுத்து பிடரி முதுகு என அடி விழுந்தது. நடத்துனர் “விடுங்க விடுங்க” என தடுத்தவர், அவனிடம் “ எடுத்திருந்தா கொடுத்துடு. தேவ இல்லாம அடி வாங்கி சாவாத” என்றார்.
அவ்வளவு அடி வாங்கியும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை.
“திருட்டு நாய மூஞ்ச பாத்தாலே தெரியிது அவன்தான் எடுத்திருப்பான்னு. பேசாம போலிஸ் ஸ்டேசனுக்கு வண்டி வுடுங்க. அவங்க பாத்துக்குவாங்க” என்றார் ஒருவர்.
“ஏற்கனவே பத்து நிமிசம் வண்டி லேட்டா போகுது. இதுல இதுவேற” என்று முணங்கியபடி நடத்துனர் ஓட்டுனரிடம் “அண்ண வண்டிய ராமநாதன் ஹாஸ்பிட்டல் ரவுண்டானவுல ரைட்டுல வளச்சி, மேம்பாலம் ரூட்ல சவுத் போலிஸ் ஸ்டேசன் இருக்குல, அங்க வுடுங்க” என்று குரல் கொடுத்தார்.
போக தாமதமாகும் என்று நினைத்த ஒருசிலர் “எங்கள இங்கயே எறக்கிவிட்டுருங்க: என்றனர். நடத்துனர் சம்மதிக்காமல் “அந்த ஆளு எடுக்கலன்னு சொல்றாரு. வேற யாராவது எடுத்துருந்தா என்ன பண்றது. எதா இருந்தாலும் ஸ்டேசனுக்கு போயிட்டுதான் போகனும். அதுவரைக்கும் வண்டில இருந்து யாரைம் எறக்கிவிட முடியாது” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
“எவனோ திருடுனத்துக்கு எங்க வேலையயெல்லாம் விட்டுட்டு தேவையில்லாம அலையிறதா” என்று கூட்டத்தில் குரல் வந்தது. ஒருசிலர் வாய்க்குள்ளேயே அவனைத்திட்டி தீர்த்து நொந்துக்கொண்டார்கள்.
ஓரங்கட்டி நின்ற பேருந்து கிளம்பும்போது படிகளில் தொங்கியபடி வந்த பள்ளி மாணவர்கள் ஒன்றிரெண்டுபேர் ஏறாமல் நின்றுக்கொண்டனர். அதைப் பார்த்த ஒருவர் “பசங்க ஏறாம நின்னுன்னுகிட்டானுங்க” என்றார்.
“அவனுங்க பஸ் ஸ்டாண்டுலேர்ந்து படில தொங்கிக்கிட்டுதான் வரானுங்க. வுடுங்க” என கூட்டத்திலிருந்து பதில் வந்தது.
அவனுக்கு கூடுதலாக வேர்த்தது. அவனுடைய சிவந்த கண்கள் கலங்கியிருந்தது. “என் பொண்டாட்டி புள்ளமேல சத்தியமா எடுக்கலங்க” என்று மீண்டும் சத்தியம் செய்தான். அவன் சொல்லுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை.
அவ்வளவு கூட்டத்திலும் அவன் தப்பிவிடுவான் என்று நம்பிய அந்த கல்லூரி மாணவன், அவனுடைய சட்டை காலரை இறுக முறுக்கிப் பிடித்திருந்தான். அவனுக்கு தொண்டை இறுகியது. உடனே தன்னுடைய இரு கைகளாலும் பிடித்திருந்தவனின் கையை தளர்த்த முயற்சி செய்தான். முடியாமல்போக ஓர் இடத்தில் நிற்க முடியாமல் உடலை நெளிந்தான்.
உடலோடு உடல் நெருக்கிக்கொண்டு வந்த பேருந்தில் இப்போது, கோவிலின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வர இருக்கும் காலியிடத்தைப்போல், அவனைச் சுற்றியொரு இடைவெளி உண்டாகியிருந்தது.
சாலையோரத்தில் இருந்த காவல் நிலையத்தின் முன் பேருந்து நின்றது. ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கினார்கள். பழக்கத்தில் நடத்துனர் “சீக்கிரம் எறங்குங்க” என்று குரல்கொடுத்து இறக்கினார்.
காவல்நிலையத்தின் மதில் சுவற்றுக்கு அருகில் பேசிக்கொண்டு நின்ற மூன்று காவலர்களில் ஒருவர் மற்றவரிடம் “என்னங்க பிரச்சனை பஸ்சோட வர்றாங்க”.
“திருட்டா இருக்கும். இல்லன்னா பொம்பளைய ஒரசிருப்பானுங்க. வேற எதுக்கு பஸ்சோட வரபோறாங்க” என்று பேசிக்கொண்டிருந்தவர்களிடம் சென்ற ஓட்டுனர் “வணக்கம் சார்” என்று ஆரம்பித்து நடந்ததை சொன்னதும் அவர்கள் பேருந்தின் அருகில் வந்தார்கள்.
சிலர் இறங்கிய பிறகு பிடித்து வைத்திருந்த அந்த நபரை இறக்கினார்கள்.
அவனைப் பிடித்திருந்தவனிடம் “சட்டய விடுப்பா”. திருடியதாக சொல்லப்படவனை “நீ இந்தப்பக்கம் வா” என அவனுடைய மணிக்கட்டைப் பிடித்து அருகில் அழைத்துக்கொண்ட காவலர். “திருட்டுக்கொடுத்தது யாரு” எனக் கேட்டவாறு கூட்டத்தைப் பார்த்தார்.
“கொஞ்சம் வழியவிட்டு அந்தம்மாவ முன்னாடி வர சொல்லுங்க” என்றார் நடத்துனர். குழந்தையுடன் அவள் முன்னே வந்தாள். “சரி எல்லாரும் உள்ள போங்க” என்றார் மற்றொரு காவலர்.
அவன் கையைப் பிடித்திருந்த காவலர் அந்த அம்மாவையும் கூடவே நடத்துனர் மற்றும் ஓட்டுனரை மட்டும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். மற்ற பயணிகள் அனைவரையும் வாசலின் முன்னிருந்த பெரிய இடத்தில் நிற்க வைத்தார்கள். அங்கே ஒரு பெரிய மாமரமும் வேப்ப மரமும் இருந்தது.
உள்ளே மதில் சுவற்றையொட்டி வலதுப்பக்கம் ஒரு பழையை தூசுப்படிந்த ஆட்டோ நின்றது. அதன் சக்கரங்களின் காற்று இறங்கி டயர் மடிந்து கிழிந்து மண்ணில் லேசாகப் புதைந்திருந்தது. அதன் மேற்கூரையில் திட்டுத் திட்டாக பறவைகளின் எச்சங்களும் சருகுகளும் கிடந்தது. பக்கத்திலேயே இரண்டு இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தது. இடது பக்கம் ஒரு ஜீப்பும் நான்கு இருசக்கர வாகனமும் ஒரு மிதிவண்டியும் நின்றிருந்தது.
வெளியே நிற்பவர்களை இரு காவலர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் “ஆளு பாக்க ஒரு மார்க்கமாதான் இருக்கான். விசாரிக்கிற முறையில விசாரிச்சா உண்மைய ஓத்துக்குவான் பாரு” என்று சகப்பயணியிடம் சொன்னார்.
நாற்காலியில் உட்கார்ந்து தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த காவல் ஆய்வாளர் அவர்களைப் பார்த்ததும் அழைப்பைத் துண்டித்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு நின்ற பெண்ணை எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொல்லி “என்ன விசயம் சொல்லுங்க” என்றார்.
“குழந்த கழுத்துல இருந்த செயின இவரு திருடிட்டாரு சார்” என பக்கத்தில் நின்றவனை நோக்கி கையை காட்டினாள்.
காவல் ஆய்வாளர் அவனைப் பார்த்து “என்னய்யா” என்றார்.
தாழ்ந்த குரலில் “நான் எடுக்கல சார்” என தலையை ஆட்டினான்.
அருகிலிருந்த காவலர் “சத்தமா சொல்லு” என்று அவனின் தோள்பட்டையை கையால் தட்டினார். உடனே கொஞ்சம் சத்தமாக “நான் எடுக்கல சார்” என்றான்.
“நீ எடுக்கலன்னா அவங்க ஏன் ஒன்னைய சொல்றாங்க” என அதட்டல்தோனியில் கேட்டு, நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தார் காவல் ஆய்வாளர்.
“தெரியலங்க சார்” என்றபோது அவனின் கைகள் தானாக இல்லை என்பதாய் சைகை காட்டியது.
“ஒன் பேரென்னயா”
“மாரிமுத்து சார்”.
“வீடு எங்க இருக்கு”.
“புது பஸ் ஸ்டாண்டுக்கு பின்னாடி ஒத்தயடி பாதையில நேரா போனம்னா எடதுப் பக்கத்துல ஒரு எறக்கம் இருக்கு சார். அந்த எறக்கத்துலதான் வூடு”.
“எறக்கத்துலன்னா. தெரு பேரச் சொல்லுயா” என்றார் பக்கத்தில் இருந்த காவலர்.
அவர் பதில் சொல்வதற்குள் “கலைஞர் நகரா” என்றார் காவல் ஆய்வாளர்.
“அதுக்கு பக்கத்துலதான் சார்”.
புரிந்துக்கொண்டார் போல “ம்” என்பதாய் தலையாட்டிய காவல் ஆய்வாளர். அந்த பெண்ணிடம் “இல்லன்னு சொல்றாரேம்மா. எடுக்கும்போது பாத்திங்களா”.
“இல்ல சார்”.
“அப்பறம் எப்படி அவருதான் எடுத்தாருன்னு சொல்றிங்க”.
“என் பின்னாடி நின்னவங்கள்ல இவருதான் பாக்க ஒருமாதிரி இருந்தாரு”.
“ஒரு மாதிரின்னா”.
சற்றுத் தயங்கி “இல்ல திருடுற ஆள் மாதிரி இருந்தாரு சார்” என்றாள்.
உடனே மாரிமுத்து திரும்பி அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்து “உண்மையில நான் எடுக்கலம்மா” என்றான்.
“நீ பேசாத. அதான் சார் பேசிக்கிட்டு இருக்காங்கள்ல சும்மா இரு” என்றார் அருகில் இருந்த காவலர்.
“அப்ப சந்தேகம்தான் படுறீங்க. கண்டிப்பா அவருதான் எடுத்தாருன்னு தெரியாது அப்படிதான” என்றார் காவல் ஆய்வாளர்.
மீண்டும் அந்த பெண் “அவருதான் எடுத்துருக்கனும் சார்” என்று உறுதியாக சொன்னாள்.
“சரி உங்களுக்கு பக்கத்துல நின்ன வேற யாராவது பாத்தாங்களா”.
“தெரியல சார்”.
யோசித்தவர் நின்றுக்கொண்டிருந்த காவலரிடம் “அண்ண மத்த யாரும் பாத்தாங்களான்னு கேளுங்க. அப்படியே இவங்க பக்கத்துல நின்ன ஆளுங்களையும் நல்லா செக் பண்ணுங்க. எல்லார்கிட்டேயும் பேரு அட்ரஸ் எழுதி வாங்கிடுங்க”.
“சரிங்க சார்” என்று சென்றவர் அறைக்குள் இருந்த பெண் காவலர்களிடம் “எம்மா பிரியா சாந்தி ரெண்டுபேரும் வாங்க” என அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். பயணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களை வரிசையாக நிற்கச் சொல்லி சோதனை செய்தார்கள்.
“நீங்க எந்த ஸ்டாப்ல ஏறுனிங்கம்மா”.
“மேரிஸ் கார்னர் சார்”.
“நீங்க பஸ் ஏறும்போது பாப்பா கழுத்துல செயின் இருந்திச்சா”.
“ம்… இருந்துச்சிங்க சார்”.
“நல்லா தெரியுமா”.
“ம்… தெரியும் சார்”.
மாரி முத்துவிடம் “நீ எங்கயா ஏறுன” என்றார்.
“பழய பஸ் ஸ்டாண்டு சார்”.
அவனைக் கவனித்துப் பார்த்த காவல் ஆய்வாளர் “என்னய்யா ரவுடிப்பயலாட்டம் முகம் கையெல்லாம் தழும்பு. எங்கய்யா வேல செய்ற”.
அவர் அப்படி கேட்டதும் அவனும் தன் கைகளில் இருந்த தழும்புகளை ஒருகணம் பார்த்துவிட்டு “கீழ வாசல்ல பழைய இரும்புக் கடையில சார்” என்றான்.
“ம்…” என தலையாட்டினார்.
“கண்டக்டர் சார். மேரிஸ் கார்னருக்கு அப்புறம் வண்டி எத்துன ஸ்டாப்ல நின்னுச்சி”.
நின்ற இடத்திலிருந்து சற்று முன்னாடி வந்த நடத்துனர் “வினோதகன் ஹாஸ்பிட்டல்ல நின்னுச்சி சார்”.
“அங்க யாரும் இறங்குனாங்களா”.
“ஒரு வயசானவரும் அவரோட பொண்டாட்டியும் எறங்குனாங்க. வேற யாரும் எறங்கல சார்”.
“மணி அண்ண” என்று அழைத்தார். வேலை ஓய்வுப்பெறப்போகும் வயதுடைய ஒருவர் வேகமாக உள்ளே வந்து “எஸ் சார்” என்றார்.
“இவர பின்னாடி அழச்சிட்டுப்போயி செக் பண்ணி பாருங்க” என்றதும் தன்னை அடிக்கத்தான் போகிறார்கள் என்று பயந்த மாரிமுத்து “சார் உண்மையிலே நான் திருடல சார்” என கைகூப்பி கும்பிட்டு கெஞ்ச ஆரம்பித்தான்.
“சும்மா செக் பண்ணத்தான்யா போ”.
“சத்தியமா எடுக்கல சார்”.
“அட அடிக்கவெல்லாம் மாட்டாங்கய்யா. பயப்படாம போ”.
“சார்… சார்…”
“என்ன போமாட்டேங்குற. அப்ப நீதான் எடுத்தியா”.
“இல்ல சார்… இல்ல சார்…”
காவல் ஆய்வாளரின் கெண்டைகாலில் கொசு கடித்திருக்க வேண்டும். சற்றுக் குனிந்து அடித்தவர் லேசாக சொரிந்துக்கொண்டு அந்த எரிச்சலோடு “யோவ் போயான்னா என்ன” என்று எழுந்தார்.
அவரின் கணீர் குரலும், எழுந்தபோது நாற்காலி பின்னால் இழுபடும் சத்தத்தையும் கேட்டு தோளில் படுத்திருந்த குழந்தை சட்டென்று தலையைத் தூக்கியது. அவள் சாய்த்து முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
தயங்கி நின்றவரின் கையைப் பிடித்து இழுத்தவாறு “சும்மா வாப்பா” என மணி அழைத்துச் சென்றார்.
வெளியிலிருந்து வந்த காவலர் “எல்லாரையும் செக் பண்ணி டீடைல்ஸெல்லாம் வாங்கியாச்சி சார். அப்புறம் அந்த ஏலம் விட போற பைக்க தூக்கிட்டுப்போக டி.எஸ்.பி ஆபிஸ்ல இருந்து வண்டி வந்துருக்கு சார்” என்றார்.
“ஆயுதப்படை கிரவுண்டுலதான ஏலம்”.
“ஆமங்க சார்”.
“சரி… சரி… என்னன்னு பார்த்து ஏத்திவிடுங்க. அந்தாளு சொன்ன வீட்டு ஏரியா மெடிகல் காலேஜ் போலிஸ் ஸ்டேசனுக்கு கீழதான வருது”.
“ஆமாங்க சார்”.
“சரி அங்கயும் அப்படியே தமிழ் யுனிவர்சிட்டி போலிஸ் ஸ்டேசன்லேயும் அந்தாளு மேல எதாவது கம்ளைண்டு இருக்கான்னு கேளுங்க. அவன் சொன்ன அட்ரஸ்லதான் அவனோட வீடு இருக்கான்னு செக் பண்ணி சொல்ல சொல்லுங்க”.
“ம்… சரிங்க சார்” என சென்றார்.
“இவங்க ரெண்டுபேரும் மட்டும் இருக்கட்டும். நீங்க மத்தவங்கள கூட்டிக்கிட்டு கிளம்புங்க”.
“ரொம்ப தேங்ஸ் சார்” என அங்கிருந்து கிளம்பிய ஓட்டுனரும் நடத்துனரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு வெளியே சென்றார்கள்.
பின்பக்க அறையில் பெரிய நீண்ட மேசையும், அதன் இரு பக்கங்களிலும் எதிர் எதிரே நாற்காலிகள் கிடந்தது. அதற்குப் பக்கத்தில் இடுப்புயர மேசை மின்விசிறியும், நாலைந்து மர அலமாரிகளும், அதன் மேல் கட்டுக்கட்டாக தாள்களும் கட்டி அடுக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் லத்திகளும் பிரம்பாலான பாதுகாப்பு தடுப்புகளும் (stone guard) குவித்திருந்தது.
சட்டையை மட்டும் அவிழ்த்துவிட்டு வேஷ்டியோட தயங்கி தயங்கி நின்ற மாரிமுத்துவிடம் “அந்தம்மா பொதுவா செயின காணம்னு சொன்னா பரவாயில்ல. ஆனா நீதான் திருடிருப்பன்னு சந்தேகப்படுது. வேற வழியில்ல கழட்டு”.
அப்போது மற்றொரு காவலாளி உள்ளே வந்து இன்னமும் துணியை அவிழ்க்காததைப் பார்த்ததும் “என்னண்ண செல மாதிரி நிக்கிறான். பாத்துக்கிட்டு இருக்கீங்க. சும்மா நேரத்தக் கடத்தாம கழட்டுயா. இங்க என்ன பொம்பளைங்களா இருக்காங்க வெட்கப்பட” என்று அவனுடைய வேஷ்டியை உருவ இடுப்பில் கை வைத்தார்.
உடனே “எப்பா எப்பா இரு. அவுப்பாரு” என சக காவலரை தடுத்துவிட்டு மாரிமுத்துவிடம் “சொன்னா கேளு. அவுத்துக் காட்டிட்டு போயிக்கிட்டே இரு” என்றார் மணி.
“அண்ண இப்படி கெஞ்சினா வேலைக்கு ஆகாது. ரெண்டு போட்டாதான் சரிபட்டு வருவான் போல”.
“அதெல்லாம் வேணாம்பா” என்றவர், “சீக்கிரம். அப்புறம் நான் ஒன்னும் பண்ண முடியாது” என மாரிமுத்துவை எச்சரித்தார்.
கண்ணீரோடு மெதுவாக வேஷ்டிய அவிழ்த்தான். உள்ளே சிவப்புநிற உள்ளாடை அணிந்திருந்தான். உள்ளாடையின் இடுப்பு பகுதி துணி கிழிந்து வெள்ளை எலாஸ்டிக் பட்டை வெளியே தெரிந்தது.
“இதுக்கு வேற தனியா சொல்லனுமா”. என அதட்டிய இளம்வயது காவலர் எழுந்துச் சென்று மூலையில் கிடந்த லத்தி ஒன்றை எடுத்து வந்தார்.
எதிரே நின்றிருந்த இரு காவலர்களும் மாரிமுத்துவின் கண்களுக்கு கலங்கிய உருவமாகத் தெரிந்தார்கள். கண்ணீர் நின்றபாடில்லை. உள்ளாடையை அவிழ்த்து கைகளால் பிறப்புருப்பை பொத்திக்கொண்டான். கால்கள் இரண்டும் நெருக்கி ஒட்டிருந்தது. அவமானமும் வெட்கமும் உயிரின் ஒவ்வொரு அணுவையும் பிய்த்து தின்றுக்கொண்டிருந்தது.
“கைய எடு. ரெண்டு காலையும் அகட்டு” என லத்தியால் கைகளை எடுத்துவிட்டார். வியர்வை கோடுப்போட்டாப்போல் மாரிமுத்துவின் அடித்தொடையிலிருந்து கெண்டைக்காலுக்கு இறங்கிக்கொண்டிருந்தது.
அந்த அம்மாவின் பையில் இருந்த அலைப்பேசிக்கு அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினாள்.
………….
போலிஸ் ஸ்டேசன்ல.
…………..
பாப்பா போட்டுருந்த செயின் களவுப் போச்சிங்க.
………………
………………
அவளின் முகம் வெளிறியது. மேற்கொண்டு எதுவும் பேசாமல் உடனே எழுந்து வெளியேச் சென்றாள்.
“பாத்தாச்சி ஒன்னுமில்ல சார்” என காவல் ஆய்வாளரிடம் மணி சொன்னார்.
மாரிமுத்து யாருடைய முகத்தையும் பார்க்காமல் தரையையே பார்த்துக்கொண்டு நின்றான்.
“அப்படியா” என்றவர் மாரிமுத்துவிடம் “நாளைக்கு எதும் கூப்பிட்டா வரனும்” என்றார். அவன் சரியென்பதாய் தலையை மட்டும் ஆட்டினான்.
“எங்க அந்த அம்மா” என்றார் காவல் ஆய்வாளர்.
மணி வெளியே சென்று அந்தம்மாவை அழைத்து வந்தார்.
அவள் உள்ளே வந்ததும் வச்சக்கண் வாங்காமல் மாரி முத்துவையேப் பார்த்தாள்.
“எம்மா இங்க பாருங்க. உங்களதான்” என அவளின் பார்வையை தன் பக்கம் திருப்பிய காவல் ஆய்வாளர் “அவர செக் பண்ணி பார்த்தாச்சி. அவருகிட்ட இல்ல. ரைட்டர்கிட்ட ஒரு கம்ளைண்ட் எழுதிக் கொடுத்துட்டுப்போங்க. நகை கெடச்சதும் நாங்க கூப்புட்றோம்” என்றார். அவளும் தலையை மட்டும் ஆட்டினாள். மணி அவளை ரைட்டரிடம் அழைத்துச் சென்றார்.
மாரிமுத்துவை போகச் சொன்னார்கள்.
அவன் வெளியே செல்வதை அந்தப் பெண் பார்த்தாள்.
அப்போது வாக்கி டாக்கியின் இரைச்சல் சத்தத்தோடு அதன் வழியே யாரோ பேசிக்கொள்வதும் கேட்டுக்கொண்டிருந்தது.
ரிஸ்வான் ராஜா
சொந்த ஊர் முத்துப்பேட்டை. துபாயில் தபால் நிலையத்தில் வேலை செய்கிறார். தேர்ந்த வாசகர்.