மாடு வெட்டி கூறுப்போட்டுக் கொண்டிருந்த இடத்தை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த வேடிக்கு கோவம் குப் குப் என்று தொண்டைக்குள் வந்து போனது. துடைப்பத்தை அப்படியே போட்டு விட்டு நடை ஓட்டமாய் விட்டிற்கு ஓடினான். வேடியின் தாய் குத்துகாலிட்டு உட்கார்ந்தபடி பார்வதியை பார்த்து திட்டிக்கொண்டிருந்தாள். பார்வதி வாசலை ஒட்டி போட்டிருந்த மூங்கில் தட்டியில் தலை வைத்து சாய்த்தபடி பறிக் கொடுத்தவளின் சாயலில் உட்கார்ந்திருந்தாள். ஓடி போய் தாயின் முதுகில் ஒரு எத்து எத்தினான் வேடி. அவள் குப்புற பிரண்டு போய் விழுந்தாள். பார்வதிக்கு திக்கென்றிருந்தது. ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து அதை நினைத்து சந்தோஷப்பட்டாள். முதல் முறையாக வேடியை எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லாமல் கண் உயர்த்தி பார்த்தாள். ஆனால் அதையெல்லாம் கவனிக்காத மாதிரி அவளை கடந்து உள்ளே போனான்.
பார்வதி தாலிக்கட்டிக்கொண்டு இந்த வீட்டுக்கு வரும்பொழுது ஊரே தெருவில் கூடி நின்று அவன் கை பிடித்து நடந்து போகும் படி கேலி செய்தபோது அவன் கை உதறி அழுதபடி ஓடி போய் கதவை சாத்திக்கொண்டவள் தான் அதற்கு பிறகான இந்த மூன்று வருடத்தில் அவள் மனக்கதவின் தாழ்ப்பாள் இப்பொழுதான் லேசாக அசைய ஆரம்பித்திருக்கிறது
எழவு வீட்டில் பாட்டு பாடுகிற ராஜேந்திரன் கொண்டு வந்த மாப்பிள்ளைதான் இந்த வேடி. எழவுக்கு சேதி சொல்கிறவனாகவும்,எச்சில் சாராயத்துக்கு சவக்குழி வேட்டுகிறனாகவும்,ஒப்பாரி பாட்டுக்கு ஆடுகிறவனாகவும், மாடு வெட்டி கூறு போடுகிற நாட்களில் சின்னத்தன் தாத்தாவுக்கு உதவி செய்கிறவனாகவும் பணம் சம்பாதிக்கிற எந்த கூறும் தெரியாதவேலை செய்துக்கொண்டிருந்தான் வேடி
அவன் அப்படி ஆனதுதற்கு காரணம் தாயின் செல்லமும்,அவன் உடலின் தோற்றமும் தான் என்று பக்கத்து வீட்டு கிழவி சொல்லி கேட்டிருக்கிறாள் பார்வதி
நெடு நெடுன்னு வளர்ந்திருந்தும் வேடியின் கைகால்கள் சூம்பி போய் கிடந்தது வறண்ட காலத்தில் ரவுண்டு கிணற்றில் தண்ணி பார்க்கிற மாதிரி கன்னக்குழுக்குள் ஒட்டி கிடந்தது கண்கள். அவன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் அடி வயிற்றிலிருந்து எழுந்து வருகிற கத்தலாகத்தான் இருக்கும். பாதி சொற்கள் தொண்டைக்குள்ளையே முக்கி பிசிரி உதறலாக வரும் பொழுது எதிரில் இருப்பவர்கள் தான் ஒரு மாதிரி யூகித்து புரிந்துக்கொள்ள வேண்டும். அவன் பேசுவது அவனது தாயுக்கும், சின்னத்தன் தாத்தனுக்கும் மட்டும் தான் சரியாக புரியும். ஆனால் .ஊரே தன்னை அருவெறுத்து ஒதுக்கினாலும் அவன் யாரையும் அப்படி நினைத்ததில்லை. அதற்கு காரணாமாய் சின்னத்தன் தாத்தன் வெறுப்பில்லாமல் அவன் மீது வைத்திருக்கும் வாஞ்சைதான். முதலிரவில் பார்வதி ஒதுக்கி தள்ளிய போது கூட அவள் மீது எந்த வெறுப்பும் இல்லாமல் கூட இருக்க ஆரம்பித்தான்
எப்போதாவது உடல் பற்றி காமம் ஊறும் நேரத்தில் மட்டும் அவள் உடல் மீதான் நினைவுகளில் சுயமைதுனம் இட்டு தீர்த்துக்கொள்வான், பிறகு கசப்பான வார்த்தைகளில் காரி துப்புவான். அதை நினைத்து குற்றணர்வு அடைவான்
பார்வதி பத்தாம் வகுப்பு விடுமுறையில் தான் இந்த கல்யாணம் ஏற்பாடானது. அம்மாவின் தீராத காச நோயும் அப்பாவின் கையாலாகாதனமும் வீட்டின் ஆண் சம்பாத்தியம் இல்லாமல் சின்ன செலவுக்கு கூட மூன்று அக்காக்களை நம்பிருந்தாள். அது தான் இவனிடம் சேர்த்திருக்கிறது பெரிய படிப்பு படித்து பெரிய வண்டியில் வேலைக்கும் போகும் மாப்பிள்ளையை கட்டிக்கொள்ள வேண்டும் என்ற கனவையெல்லாம் சுக்கு நூறாக்கி தினமும் வயிற்று பாட்டுக்காக மாமியார்காரியோடு தினம் தினம் கழணி காட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறாள். உழைத்த களைப்பில் உடலோடு நாட்களும் கனவுகளும் காணாமல் போயிருந்தது பார்வதிக்கு
ஒரு நாள் காலை இவை எல்லாவற்றையும் பிரட்டி போட்ட மாதிரி அவளில் இருந்த ஆசைகள் துயிலெழ ஆரம்பித்தது. குளித்து முடித்து விட்டு மாற்றுத்துணியை பெட்டிக்குள் தேடிய பொழுதுதான் அந்த சதுரக்கண்ணாடி கிடைத்தது. அது அவள் ருதுவான சடங்குக்காக யாரோ வாங்கி தந்தது அதை எடுத்து முகத்தை பார்த்தாள்
அதில் தன முகம் அந்த சதுரத்துக்குள் கரு விழி முகமாக சிரித்தது. சந்தன சோப்பில் உருண்டுகொண்டிருந்த நீர் முத்துக்கள் அவள் கரிய முகத்தின் வனப்பை இன்னும் கூட்டியிருந்தது. அவள் அதரங்களில் வெடித்து பரவியிருக்கும் கோடுகளை லேசாக தடவி பார்த்தால் அது ஈரம் ஊறிய வெது வேதுப்பின் பிறந்த பன்றிக்குட்டியின் பரிசம் போல இருந்தது. அவள்; லேசாக கண்ணாடியை கிழே இறக்கினால் தொண்டைக்குழிகள் வெளிச்சத்தில் மினுங்கிக்கொண்டிருந்தது. அதன் குழி மேடுகள் மேலும் கிழும் ஏறி இறங்கியிருந்தது. அதன் எதிர் சிதறலாய் பின் கழுத்தின் பூனை ரோமங்கள் மேலே ஓடிய காற்றாடியின் வேகத்தில் சிலிர்ந்தது. இதுவரை கண்டுணராத பாதைகளில் உணர்வுகளில் ஏற ஆரம்பித்தால் அவள் மார்பு கச்சைகளுக்கு மேலே பார்த்த போது தோளில் நிறமாறிய தடங்கள் கருப்பு வளையங்களாக ஆபரணமிட்டிருந்தது. அந்நொடி தன்னிலை மறந்து பாவாடையில் இறுகி பிடித்திருந்த கை தளர்ந்ததும் மலையிலிருந்து குதிக்கும் ஈர மூட்டை போல தொப்பொன்று அது கிழே விழுந்தது. தன் பால்யத்தில் பார்த்த பிறையாத்தா கோயில் சிலை போல நின்றிருந்த உடலை மறுபடியும் ஒரு முறை தன உருவில் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த கண்ணாடியின் மாய உருவம் அலையாட அவள் சொக்கி கிழே விழுந்தாள்.
இருட்டும் நேரம் ஒடைக்கரையோரம் செம்மஞ்ச்சசாலையில் தனியாக பார்வதி நடந்து வந்துக்கொண்டிருந்தாள். சாலையின் இரண்டு பக்கமும் பனை மரங்கள் நெட்டு குத்தி அவளை பயமுறுத்தியது. அடிக்கடி அம்மா சொல்லும் கதைகளில் பூச்சாண்டி வந்து தூக்கி பூடுவான். அது அவளுக்கு நினைவுக்கு வந்ததும் இன்னும் அவளுக்குள் கிலியிட்டது. வண்டி தடம் போன தடத்தில் கால் வைத்தபடி ஓட யாரோ ஒரு கை பனை மர சாரிலிருந்து இழுத்தது. திட்டு திட்டான திட்டான இருட்டில் அவன் கண்கள் மட்டும் ரத்த நிறத்தில் தெரிந்தது. கிலியில் உடல் நடுங்கி நிற்க அவன் அவளுடைய ஒவ்வொரு அங்கங்களையும் தடவியபடியே இருந்தான். கண்கள் மங்கி சரிந்து விழுந்தாள். உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் அம்மாவின் மடியில் காலையில் உடல் கொதிக்க குப்புறப் படுத்துகிடந்தாள். அதன் பிறகு அவள் உடலை அவளே பார்க்க அச்சப்பட்டாள்.
வெளியில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்து துணி மாற்றிக்கொண்டாள். ஆனால் அவளுக்குள் அச்சித்திரம் பச்சமரத்து ஆணி போல அப்படியே இருந்தது.
வெளியில் ஒருவன் நின்றிருந்தான். அவன் கண்கள் ரத்த நிறத்தில் இருந்தது.
-வேடி எங்க? ஊருல ஒரு சாவு விழுந்திருக்கு. அவன்தா குழி வெட்டி வந்து ஆடனும், என்று பேசிக்கொண்டே கிட்டே நெருங்குவதை உணர்ந்ததும் கதவை தாளிட்டு வெளியே அனுப்பினாள்
சின்ன வயதில் பிரையாத்தா கோயில் களத்து மேட்டுக்கு போகும் போது தனித்திருக்கும் சிலைகளில் வைக்கோல் பரப்பிகிடக்கும். ஒட்டு துணி கூட இல்லாமல் வானத்தையே ஆடையாக போட்டு கம்பீரமாக நின்றிருப்பதை பார்த்திருக்கிறாள் பார்வதி. இருட்டுன பிறகு எல்லோரும் களத்து மேட்டிலிருந்து போன போது இவள் மட்டும் அச்சிலையை தடவி பார்த்திருக்கிறாள். அதில் உள்ளூர மாடு அறுத்த பிறகும் தசை துடிக்கிற மாதிரி உஷ்ணம் இருக்கும். அவன் போன பிறகும் அந்த உஷ்ணம் அவளுக்குள் அப்படியே தான் இருந்தது.
வேடியை தேடி சாவு வீட்டுக்கு போயிருந்தாள். சவக்குழி வெட்டி வந்த வேர்வை ஒழுக ஒப்பாரி பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தான் வேடி. அவனுடைய ஒவ்வொரு அசைவும் கழுத்து நெரித்து கொலை செய்து பிணமாக கிடக்கும் அந்த பெண்ணின் உக்கிர தாண்டவம் போல ஆடிக்கொண்டிருந்தான்
அவன் ஆட்டத்தின் உக்கிரம் துடி என பெருகி தூசு பறக்க படுகள புழுதி அந்த இடம் முழுக்க எழுந்தாடியது.
சட்டென பார்வதி அவ்வாட்டத்தில் நுழைந்தாள்.
யாரோ, ’கோழி எடுத்து வந்து அவங்கிட்ட பலிக்கு கொடுப்பா’ என்றதும்
பார்வதியின் கனன்று எரியும் கண்கள் யாரையோ தேடியது. பிணத்து தலை மாட்டில் நின்றுக்கொண்டிருக்கும் இரண்டு பேரின் குரல் வலை கிழிபட்டு தொங்கியது.
00

மாரி.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும், கடந்த பத்து வருடமாக இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்” சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும், ஊர் பொது கிணறு புணரமைப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார். அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார். தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார். அப்பா மாரிமுத்து. அம்மா ஜெகநாதம்மாள். மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.