நீங்கள் கிருமியைத் தின்றவரா?
இல்லையே
நானொரு பாடகி
அப்படியென்றல்
கிருமிகள்
உலகெங்கும் இசைக்கும்
கீதத்தை கேட்டவர் என்ற குற்றத்திற்காக
நீங்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டியவர்
நீங்கள் கிருமியைத் தின்றவரா?
இல்லை
நான் சவப்பெட்டி விற்க வந்தவன்
மூளையில் புழுக்கள் நெளிவதே தெரிகின்றன
ஆதலால் உங்களை தனிச்சிறையில் அடைக்கின்றோம்
தனிமை சுமையாகட்டும்
நீங்களும் கிருமியைத் தின்று விட்டீர்களா?
இல்லையே
நான் மண் தின்னவன்
இதோ பாருங்கள்
என் வாயில்
நீங்கள் கட்ட இருக்கும் கோயில் தெரியும்.
எங்கும் புழுக்கள் நெளிகின்றன
கிருமிகளிடம் மரியாதையாக இருங்கள்
சிறியவற்றை மதியுங்கள்
அவைகள்
வலைப்பின்னலை
துண்டித்து விடும்
நீங்கள்தான் கிருமியைத் தின்றவரா?
இல்லை
நான் மரணத்தை தொடுபவன்
இல்லையில்லை
நாங்கள்
சாவை விற்கும் வியாபாரிகள்.
மன்னா
மண் தின்றவர்களை மட்டுமே கண்டறிந்துள்ளோம்
கிருமியைத் தின்றதை யாருமே பார்க்கவில்லையாம்
மண் தின்றதை மட்டும்
எப்படி கண்டறிந்தீர்கள்
அந்த நவீனத்தை சொல்லுங்கள்
இல்லை மன்னா
தின்று விட்டு
இவர்கள் அனைவரும்
கையைத் தட்டினார்கள்.
இப்போது யார் தலையில் புழுக்கள் நெளிகின்றன.
***
மஞ்சள் வண்ணம் நிறைந்த மலரின் மகரந்த பூந்தாது பூசப்பட்ட
முத்துச்சிப்பி மேட்டில் படுத்துறங்குகிறேன்.
மின்னல் வெட்டில் சிப்பிக்குள்
மழைத்துளி இறங்கும் ஓசை
கேட்கிறது.
அமீபா உடல் பிளந்து நெளியும்
ஆசை கொண்டது.
நான் என்ன செய்ய
காமம் ஆதியானதின் இயல்பு
தனித்த இறகின் இரத்த பிசுக்கில்
உன் வாசம்
அம்மா
எனது வானம் கருப்பு
உதிர்த்தல் பழகச் சொல்லும் வாழ்க்கையில் மனம் முழுதும் மண்ணழுக்கு
இரவுக்குள் அகல விழித்துப் பார்
அம்மாவின் கருவறைத் தெரியும் அதிலிருந்த நட்சத்திரமும்
***

துவாரகா சாமிநாதன்
கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.