பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல்

அயர்ந்து உறங்கி விட்ட

கடவுள்

பயணச்சீட்டு பரிசோதகரிடம் வசமாக

மாட்டிக்கொண்டார்

தாம் இன்ன மதத்துக்கான கடவுளெனவும்

இவை இவை தமது வாழ்வைப்பாடும்

இதிகாசங்களெனவும்

இவையே என்னைத் துதிப்பவர் மேன்மையுறுவதற்கான

மந்திரங்கள் எனவும்

தம்மைப்பற்றிய பராக்கிரமங்களை

கூறிக் கொண்டே இருந்தார்

ஆய்வு அதிகாரியோ மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ரூ 500 அபராதத் தொகையை வசூலித்து விடுவதில் குறியாக இருக்க

பொறுமை இழந்த கடவுள் தாம்

இதுவரை சபிக்காத துருவேறிய

சாபமொன்றை எடுத்து உரத்த குரலில் சபிக்கத்தொடங்க

கோபமுற்ற அதிகாரியோ

தண்ணியடிச்சுட்டு உளறாதே

ஒழுங்கா டிக்கெட் காசக்குடு

இல்லன்னா அபராதம் கட்டு

என வலுத்த குரலில் கத்த

செய்வதறியாது திகைத்த கடவுள்

இந்த பேருந்தை

இந்த சாலையை

இதற்குள்ளிருக்கும் அனைவரையும்

மாயமாக்குகிறேன் என சினந்துகூற

பேருந்திலிருக்கும் அனைவரும்

சிரிக்கத் தொடங்கினர்

இப்போது கடவுள் அழத் தொடங்கினார்

பணமுடையோர் தமக்கு தந்து உதவுமாறு

கெஞ்சத் தொடங்கினார்..

 எவரும் அவரது மன்றாட்டை கேட்காததுபோல்

நடித்தபடி தூங்கத் தொடங்கினர்…

பணமில்லாத அவரை காட்டு வழியில்

நடத்துனரும் ஆய்வு அதிகாரியும்

இறக்கி விட்டு விட

அருகில் உள்ள நகரத்திற்கான

பேருந்து நிறுத்தத்தில்

தம்மிடம் டிக்கெட் கேட்காத

அடுத்த பேருந்திற்காக

காத்திருக்கும் கடவுளை

தயவு செய்து ஏற்றிக் கொள்ளுங்கள்

இடைநில்லாப் பேருந்து

ஓட்டுநர்களே!

த.விஜயராஜ்

சோழன் மாளிகை கும்பகோணத்தில் பிறந்தவரான இவர் நீலகிரியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2011-ல் ‘தேவதைகளின் மூதாய்’ என்கிற இவரது கவிதைத்தொகுப்பை அகரம் வெளியிட்டுள்லது. 2021-ல் ‘யானைகளைக் கண்டிராத ஃபிளமிங்கோக்கள்’ சூழலியல் கவிதை நூலை வாசகசாலை வெளியிட்டுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *