நத்தைகளைப் பற்றியதல்ல
எனது பிரச்சனை
ஊர்ந்து செல்லும் பிராணிகளை அறுவறுக்கும் ஒருவனுக்கு நத்தைகளைப் பற்றிய சிந்தனைகள் எழுவதற்காக சாத்தியமுமில்லை
மழை ஓய்ந்த பொழுதுகளில்
வெட்டியெடுத்த சதைத் துண்டுகளைப் போல் ஓடுகளுடன் ஊர்ந்து கொண்டிருக்கும் அந்த சுவாரஸ்யமற்ற பிராணிகளை இதற்குமுன் நான் கவனித்தும் பார்த்ததில்லை.
துயரந்தரும் இரவு வானத்தில் தன்னந்தனியாக துருத்திக் கொண்டிருக்கும்
நட்சத்திரப் புள்ளியைப் போல்
அந்த நத்தை எனக்குள் நுழைந்தது.
கருவிழிகளின் மீது வளர்ந்த வெண்மைப் படலம் குருட்டுத்தனமான எண்ணங்களின் ஊற்றுக் கண்களாகிறது.
தலையசைப்பில் இருக்கும் கிறுத்தனத்தில்
சுயநினைவைக் குழைக்கும் மயக்கங்கள் பிறக்கின்றன.
பிசுபிசுத்து அசையும் நத்தையின் நீர்மையான உடலத்தின்
மாமிசக் கூறுகளை
தலைக்குள் உணரத் தொடங்கினேன்.
அசைபோடும் மிருகங்களின் முட்டாள்தனத்துடன் கண்ணாடிகளில் விழுகின்ற எனது வெண்ணிற பிம்பத்தில் நத்தைத்தன்மை இருப்பதாகப் படுகிறது.
உயிரின் புள்ளியைக் கிழித்துக்கொண்டு எனக்குள் நுழைந்த அந்த நத்தை மூளையின் திரவக்கூளத்தில் முன்னும்பின்னுமாக அசைந்து கொண்டிருக்கிறது .
பெண்ணின் நாக்காக நெழியும்
அதன் ஊனுடல்
ஒரு நூறு நத்தைகளாக பிய்ந்து
உடலை நிறைத்தன.
கழுத்துக்கும் முதுகுக்குமாக
ரத்தம் உரிஞ்சும் அட்டைகளைப் போல் உணர்துளைகளால் அவை
வலுவலுத்தன.
எச்சில்
நத்தைகளாகவே உள்ளிறங்கியது.
மலம்
நத்தைகளாகவே வெளிவந்தது.
வெக்கையிலும் உடல்
நத்தைகளையே வியர்த்தது.
எண்ணங்களை நத்தைகளாக்கி நடுக்மெடுக்கும் நரம்புகளுக்கு கதகதப்பூட்ட
கழுத்தை நெறிக்கும் சுகத்தில்
மூழ்கத் தொடங்கிறேன்.
வேகவைத்த ஓட்டிலிருந்து கூர்குச்சிகளால் ஆவிபரக்க நத்தைகளைக் கிண்டி வாய்க்குள் திணிக்கும்
யப்பானிய பெண்ணை
காதலிக்கத் தொடங்கினேன்.
எச்சிற்சாறு வழிய
நத்தைகளை மென்றுகொண்டே
குவிந்த உதடுகளை
அளவாய் சுழித்து
யப்பானிய மொழியில் அவள் பேசும் வனப்பை கண்கொட்டாமல் பார்த்துக்கிடப்பேன்.
நத்தையின் சுவையோடு அவள் தரும் முத்தங்கள் கருணையை சுரந்தன தாய்மடியாக.
தொண்டைக்குள் சிக்கிய நத்தையின் சூழ்ச்சியில்
முத்தங்களோடு அவளும் செத்தாள். தாய்மடியற்ற வெறுமையில் நைந்து மிச்சமிருந்த மனிதத் தன்மையும் மெதுமெதுவாக அழிந்துமுடிந்தது.
நூலில் தொங்கும் நத்தைகளையெல்லாம்
சுவற்றில் அடித்துக்
கொலை செய்கின்ற
குரூரமான ஆசைகளுக்கு
என்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்தேன்.
பொட்டுப் பொட்டாக படிந்த
ரத்தக்கரை கொண்ட சுவர்களுக்குள் எனது எஞ்சிய வாழ்வைக்
கழித்து வருகிறேன்.
அந்தரத்தில் விசிறிய
நத்தையின் ஓலங்கள்
செவிப்பறை அதிர இரைந்துகொண்டிருக்க
மோதித் தெரித்த ரத்தத்தினாலே முற்றாய் நனைந்த
முகத்தின் விம்பம்
கண்ணாடிக்குள்ளே சிரிப்பதில் இருந்து ஒன்று மட்டும் நிச்சயமானது நத்தைகளைப் பற்றியதல்ல
எனது பிரச்சனை
00
எனது பெயர் கி. தினேஷ் கண்ணன், இலக்கற்ற பயணங்களை விரும்புபவன். இலக்கியத்திலும் சினிமாவிலும் நாட்டம் உண்டு. கூதிர் இதழில் கண்ணிவெடிகளின் தேசம், ஐந்தாவது முத்திரை ஆகிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தீனன் என்ற பெயரில் இதுவே முதல் கவிதை. ஊர் இராஜபாளையம். தற்சமயம் இதழியல் துறையில் இயங்கி வருகிறேன்.