ஓர் ஊருல ஒர் உழவர் வாழ்ந்துட்டு வந்தாரு அவர் பேரு நன்னன். ரொம்ப நல்லவர். தன்னோட நிலத்தில் விளையுற எல்லா பொருளையும் தனக்குனு வச்சுக்க நினைக்காம எல்லாருக்கும் கொடுத்து உதவுவார்.

இவரோட நல்ல மனதுக்கு இவர் தோட்டத்துல வற்றாத ஒரு கிணறு இருந்துச்சி. ஊருல இருக்கற மத்தவங்க கிணறுங்க வற்றிப்போனாலும் இவர் தோட்டத்துக் கிணறு மட்டும் வற்றவே வற்றாது. மழை, கோடை என எல்லாக் காலத்திலேயும் தண்ணீர் நிரம்பியே இருக்கும்.

இவர் ஊரைச் சுற்றியுள்ள மற்ற ஊர்லே எல்லாம் கோடைக்காலத்துல தண்ணீரே இருக்காது. எல்லா ஊர்க்காரங்களும் இவர் கிணற்றுலதான் தண்ணீரே எடுத்துட்டுப் போவாங்க. ஒரு நாள்கூட அவங்கள்ட ‘இது என் கிணறு நீங்க ஏன் தண்ணீர் எடுக்கறீங்க?’ எனக் கேட்டதே இல்லை.  தண்ணீரை எடுத்துக் கொண்டு செல்லும் போது எதிரே பார்க்க நேர்ந்தாக்கூட அவர்களைப் பார்த்துச் சிரிப்பாரே தவிர ஒரு நாளும் ஏன் என் கிணறுல தண்ணி எடுக்கறீங்க? எனக் கேட்டதே இல்ல. அப்படி கேட்கவும் மாட்டார்.

நன்னனோட அப்பா மரணபடுக்கையில இருந்தர் அப்போ. “நன்னா நன்னா இங்க வாப்பா” என முணுமுணுத்துக் கொண்டிருந்தாரு. இந்த முணுமுணுப்பைக் கேட்ட நன்னன் தன் தந்தையின் அருகே போய் “அப்பா அப்பா என்ன சொல்லவர்றீங்க சொல்லுங்கப்பா.  நான் தான் நன்னன் வந்துருக்கேன்பா கண்விழிச்சுப் பாருங்கப்பா” தன் தந்தையின் மார்பில் கைவைத்துச் சொன்னான். அப்போது நன்னனின் தந்தை கண்விழித்துப்பார்த்து “நன்னா நன்னா வந்துட்டியாப்பா. நான் சொல்றத கொஞ்சம் கேளுப்பா”

“சொல்லுங்கப்பா நான் உங்க பக்கத்துலதான்பா இருக்கேன். சொல்லுங்கப்பா”

“நன்னா நன்னா கிட்டத்துல வாப்பா”என அழைத்தவர் அவன் காதருகில் முணுமுணுக்கத் தொடங்குகிறார்.

நன்னனின் தந்தையும் தாயும் ஒரு சிறு குழந்தையுடன் நடந்தே வருகிறார்கள். அவர்களின் முகமெல்லாம் வாடி சோர்வுற்று இருக்கு. அவர்கள் நல்ல உணவும் நீரும் சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிறது என்பதை ஒட்டிய வயிறும் குழிந்த கண்களும் பார்ப்பவர் அனைவருக்குமே காட்டிக்கொடுத்துவிடும். ஒருவர் கையை ஒருவர் இறுக்கமா பிடிச்சுக்கிட்டு நடந்து வறாங்க.

நண்பகல் வெயில் உச்சில இருந்து நெருப்ப கொட்டிக்கிட்டு இருக்கு. நாளுக்கு நாள் வெயில் குறையாம அதிகமாகிட்டே இருக்கு “ஐயோ அப்பா அம்மா எனக்கு உடலெல்லாம் சுடுதே அய்யோ” என்று மரம் ஒன்று சூரியனைப் பார்த்து அழுதுகொண்டிருந்திச்சி. சூரியனுக்கு அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்க நேரமே இல்லை. ஒரு அழுகை இரண்டழுகையா?

சூரியன் காது கொடுத்துக் கேட்க. பெரும் காடே அழுகிறது. ஆறுகள் எல்லாம் வறண்டு மண் புழுதியைக் கோபமாக வீசி சூரியனை மறைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அந்த மண் புழுதியெல்லாம் இவர்கள் மீதும் படிய தளர்ந்த உடலோடு தள்ளாடி தள்ளாடி நடந்துகொண்டே இருக்கிறார்கள். நீர் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள். உடலில் வியர்வைகள் எல்லாம் அடங்கிப்போனதன் அறிகுறியாக உடல் முழுதும் வியரவைத் துப்பிய எச்சிலாக உப்பு பூத்துக் கிடக்கிறது.

“அடே மனித கூட்டங்களா? முட்டாள்களே? இன்னுமா நீங்க உயிரோட இருக்கீங்க. உங்களாலதான் நான் இத்தனை கோபமா எரிகிறேன். உங்களுக்கு மட்டுமல்ல பெருந்தாகம் எனக்கும் தான். முட்டாள்களே இந்தப் பூமியை, வானத்தை, வனத்தை, நீர்நிலையை எல்லாவற்றையும் இப்படிக் குப்பை மேடாக்கி நாசம் செய்ததன் விளைவுதான் இன்றைக்கு அனுபவிக்கிறீர்கள் ஓடுங்கள் ஓடுங்கள் என் கண்ணிலிருந்து மறையும் தூரம் ஓடிவிடுங்கள்” எனச் சத்தமிட்டுக் கத்தியது சூரியன்.

யார் இப்படிச் சத்தம் எழுப்புவதென்றே தெரியாமல் மேலும் கீழும் பார்த்துவிட்டு “சூரியனே நீயா பேசுவது?” சூரியனை நோக்கி கைகூப்பித்தொழுதனர். அச்சத்தில் விரைந்து நடந்தனர். மிக தூரத்தில் ஒருவர் வருவதைப் பார்த்தனர். அவரை நோக்கி நடந்து சென்றனர். அவரை நெருங்க நெருங்கதான் தெரிந்தது அவர் சராசரி மனிதர் இல்லை என்பது. நீண்ட தாடியும் கந்தல் உடையும் அணிந்து பார்க்கவே அச்சமூட்டும் தோற்றத்தில் இருந்தார். கைகூப்பித் தொழுதனர். அவர் அவர்கள் தூக்கி வைத்திருந்த குழந்தையைப் பார்க்கிறார். கொடிய வெய்யிலில் குழந்தையின் முகம் வாடிச் சோர்ந்து கிடப்பதைப் பார்த்த அவர் “போ போ மேற்கு புறமா போ ஒரு வேப்பமரம் வரும் போபோ” என அவர்கள் ஏதும் கேட்காமலேயே வழிகாட்டினார் அந்த இடத்தில் தான் இப்போது நீர்வற்றாமல் இருக்கின்ற அந்தக் கிணறு இருந்தது.

அங்கேயே தங்கி அவர்கள் பராமரித்த கிணறும் நிலமும்தான் இவைகள்.

“நன்னா உனக்குத் தாகத்தின் கொடுமை புரியும். தண்ணீர் என்பது தனிப்பட்ட உரிமையல்ல. எல்லா உயிர்க்குமான உடைமை அது” என அறிவுரையைக் கூறி முடித்த நன்னனின் தந்தை கண்மூடிவிட்டார்.

++

மகா.இராஜராஜசோழன்,

தமிழாசிரியர்.

குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர்.

பிறந்த ஊர் – சிதம்பரநாதபுரம்

வட்டம் – சீர்காழி

மாவட்டம் – மயிலாடுதுறை.

கல்வி – இளங்கலை அறிவியல் , இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ், ஆய்வியல் நிறைஞர், இளங்கலைக் கல்வியல் கல்வி, பட்டயத் திருக்குறள்.

எழுத்துப்பணி

இந்து தமிழ் திசை நாளிதழ், அருஞ்சொல் இணைய இதழ், கீற்று இணைய இதழ், பொம்மி மாத இதழ் போன்றவற்றில் படைப்புகள் வெளிவந்துள்ளன.

நூல்கள்

1.   தாகத்தோடு பயணிக்கும் நதி – கவிதை நூல்

2.   சார் இது பேய் இது நீங்க – கட்டுரைத்தொகுதி  (அச்சாக்கப் பணியில்)

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *