நேரம் நெருங்க நெருங்க அவனது ஐம்புலன்களும் வழக்கத்தைவிட முண்டியடித்துக்கொண்டு அசுர வேகத்தில் இயங்கத் தொடங்கின. காலையில் நடந்த சம்பவம் அவன் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கியிருந்தாலும், ஏதோவொன்று அவனுக்குச் சின்னதாய் நம்பிக்கையூட்டிக்கொண்டே இருந்தது. முதலில் தங்கச்சி பாப்பாவைக் குளிப்பாட்டிவிட வேண்டும். அவள் மூக்கு ஒழுகிக்கொண்டு அழுக்காக இருந்தால் அவன் அம்மாவுக்குக் கோபம் வந்து விடும். அம்மா வருவதற்கு முன் ‘குட்டிக்கூரா’ பவுடரை அப்பி பாப்பாவை மணக்கச் செய்துவிட வேண்டும். வெள்ளைப் பூப்போட்ட சின்ன கவுனை மாட்டிவிட்டுவிட்டால் வேலை முடிந்தது. பெரிய தங்கை சமத்து. அதிகமாகத் தொந்தரவு செய்ய மாட்டாள். கொடுத்ததைச் சாப்பிட்டுவிட்டு விளையாட ஆரம்பித்து விடுவாள். அவள் தலைமுடியைக் கொஞ்சம் வாரிவிட்டு, அழுக்குச் சட்டையை மாற்றிவிட்டுவிட்டால் போதும். தங்கைகள் அழுக்காக இருந்தால் வீடு இரண்டாகிப் போகும். தூங்கும் வரை அம்மாவின் வசைமொழி தொடரும்.

“புறம்போக்கு நிலத்துல வாழ்ந்தாலும் மானத்தோட வாழணும். யாருகிட்டயும் கையேந்தக் கூடாது. சுத்தபத்தமா இருக்கணும்… புரியுதாடா? மத்தவங்க கேவலமா நினைக்கிற மாதிரி நடந்துக்கக் கூடாது,” சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தலையில் தட்டி, அம்மா சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக்கொள்வான்.

மானத்தோட வாழ வேண்டுமாம். அப்படியென்றால்? அர்த்தம் புரியாமல் பல நாள்கள் குழம்பியிருக்கிறான். அதை அடிக்கடி கேட்கும்போது வெறுத்திருக்கிறான். ஒருமுறை பொறுக்க முடியாமல் அம்மாவிடம் கேட்டுத் தலையில் கொட்டு வாங்கியதுதான் மிச்சம்.

ஏழு வயது பையன் சூரியா. சுருட்டை முடி. உயரமும் இல்லாமல் குட்டையும் இல்லாமல் நடுத்தர உயரம். அம்மாவைப் போல கருத்த மேனி. சிறிய கண்கள். அதைப் பெருங்குறையாக யாரும் சொன்னதில்லை. சிரித்தால் அவ்வளவு அழகு.

“டேய் சூரியா, உன்னோட பல்லு அழகா இருக்குடா. என் பல்ல பாரேன், கொடூரமா இருக்கு,” பக்கத்து வீட்டுப் பிரபாவின் புகழாரம் அவனைப் பலமுறை பெருமைப்பட வைத்துள்ளது.

மொத்தத்தில் இலட்சணமான பையனாக அவனைப் படைத்திருந்தான் ஆண்டவன். அழகு வயிற்றை நிறைத்துவிடுமா என்ன! தினமும் அரை வயிறு சாப்பாடுதான். பெரும்பாலான நேரங்களில் ரசத்தை நம்பி வாழும் குடும்பம். மிளகும் பூண்டும் போதும். வகை வகையான காய்கறிகள் தேவையில்லை. கொடுப்பினை இருந்தால் இரசத்தோடு அப்பளமும் கைகோர்த்துக்கொள்ளும். இல்லையென்றால் அதுவும் கிடையாது. மாதத்தில் ஒரு முறை மீன் பொரியலோ கறியோ கிடைத்துவிடும். ஒரு சில மாதங்களில் விடுபட்டுப் போவதுண்டு. கோழிக்கறி எப்பொழுதாவது வீட்டை மணக்கச் செய்யும். இரண்டு மூன்று துண்டுகளுக்கு மேல் கிடைப்பது கஷ்டம்தான். அரை கிலோகூட தேராத கோழி இறைச்சியைச் சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டிச் சமைத்து அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யும் அவன் அம்மாவின் சாமர்த்தியம் யாருக்கும் வராது.

சூரியாவுக்குக் கோழியென்றால் அலாதி விருப்பம். எலும்புத்துண்டையும்கூட விட்டு வைக்காத தீவிர கோழிப்பிரியன். விலாப்பகுதியில் இருக்கும் சின்ன சின்ன எலும்புகளை மென்று, சாரைச் சப்பி உள்ளிழுத்து அது தொண்டைக்குழியை நனைக்கும்போது ஏற்படும் இன்பத்தை அணுஅணுவாக இரசிப்பவன். சொல்லப்போனால் கோழி இறைச்சி என்ற சொல்லைக் கேட்டாலே கிரங்கிப்போகும் ரகம். அம்மாவின் கைப்பக்குவம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். வீட்டில் அவன்தான் மூத்த பிள்ளை என்பதால் பல வேளைகளில் கிடைக்கும் சில கோழித்துண்டுகளிலும் துண்டு விழுந்தபோது வாடிப் போயிருகிறான்.

“சூரியா, திவ்யா பாப்பா பாவம்டா. அந்தச் சின்ன துண்ட மட்டும் அதுக்குத் தரீயா, பாவமா பாக்குது பாரு…” அம்மா கேட்டு இதுவரை அவன் மறுத்ததில்லை. அவனது மிகச் சுருங்கிய வயிறு பெரிதாய் எதையும் தின்று ருசித்ததில்லை.

இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அண்ணனாக அவன் பல வேளைகளில் பலவற்றை இழந்திருக்கிறான். அதை நினைத்து உள்ளுக்குள்ளே அழுதிருக்கிறான். அம்மாவிடம் கேட்கும் தைரியம் வந்ததில்லை. தன் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள பிரபாவைத் தவிர வேறு யாருமில்லை. இப்பொழுதெல்லாம் எதைப்பற்றியும் அவ்வளவாக அலட்டிக்கொள்வது கிடையாது. அதிகமாக எதிர்பார்ப்பதும் கிடையாது. ஆனால், இந்த ஒரு  விஷயத்தில் மட்டும் விடாப்பிடியாக இருக்கிறான். அது அவனுக்கும் நன்றாகத் தெரியும். அவன் அப்பா இருந்திருந்தால் கேட்டது கிடைத்திருக்குமோ என்னவோ. முகம் மறந்துபோன அப்பா மீது கொஞ்சமாகக் கோபம் தலை தூக்கியது. அம்மாவை விட்டுவிட்டு அப்பா வேறு யாரையோ திருமணம் செய்துகொண்ட செய்தி பிரபாவின் பாட்டியின் மூலம்  தெரிந்துகொண்டான். கேட்டதோடு சரி, அதைப்பற்றி அவன் அதிகமாக யோசித்ததில்லை. மூத்த மகனாக சின்ன வயதிலேயே பெரிய பாரத்தைத் தோளில் சுமக்க முடியாமல் திணறிப் போயிருக்கிறான்.

ஏழு வயதாகியும் இன்னும் பள்ளியின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. பக்கத்து வீட்டு பிரபா பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபோது இவனும் அடம்பிடிக்கத்தான் செய்தான்.

“இங்க பாருடா சூரியா, அம்மா வெறும் வீட்டு வேலதான் செய்றேன். உங்க மூனு பேரு சாப்பாட்டுச் செலவ பாக்கணும். இதுல உங்க அப்பா அவரோட கடன என் தலையில கட்டிட்டுப் போயிட்டாரு. முதல்ல அந்தக் கடன அடைக்கணும். அடுத்த வருஷம் எப்படியாவது உன்ன ஸ்கூலுக்கு அனுப்பிடுறேன்,” கண்களைக் கசக்கிய அம்மாவிடம் வேறேதும் பேச மனம் வராததால் அமைதியாக இருந்து விட்டான்.

அவன் அப்பாவைப் பற்றி அவனுக்கு அவ்வளவாக நினைவில்லை. அம்மா மட்டும்தான் கோபம் வரும்போதெல்லாம் அப்பாவை நினைவுபடுத்துவார். சம்பந்தமில்லாமல் அவரை அவனோடு தொடர்புபடுத்துவார்.

“ஒழுங்கா நடந்துக்கோ சூரியா. உன் அப்பா மாதிரி ஊர் சுத்தாத. நான் வேலைக்குப் போனதும் ஒழுங்கா வீட்டு வேலைய பாரு. தங்கச்சிங்களுக்குச் சாப்பாடு ஊட்டு. இல்ல தோல உரிச்சிடுவேன்… கவனம்,” பத்திரக்காளியாக அம்மா ஆவேசப்படும்போது அவன் அரண்டு போயிருக்கிறான்.

இருந்தாலும் இன்று காலையில் அவனுக்குள் அப்படியொரு தைரியம். காலையிலேயே எழுந்துகொண்டான். பல்லைத் துலக்கக்கூட பொறுமையில்லாமல் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டான். தலைமுடியை படிய வாரினான். குட்டிக்கூரா பவுடரைக் கொஞ்சமாக உள்ளங்கையில் கொட்டினான். இரு கைகளிலும் பரவலாகத் தேய்த்து  முகத்தில் பூசிவிட்டுக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான்.

“சுத்தமாக இருந்தாதான் அம்மாவுக்குப் பிடிக்கும்…” தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். அம்மாவின் கண்ணில்படும்படி சம்பந்தமில்லாமல் அங்கும் இங்கும் நடமாடினான். அம்மா கேட்காமலேயே  குடிப்பதற்காக நசுங்கியிருந்த போத்தலில் தண்ணீரை நிரப்பினான். அம்மாவிடம் அக்கறையுடன் கொடுத்தான்.

“அங்க வை. கிளம்பறப்ப எடுத்துக்கிறேன்…”

அம்மாவின் சொல்லைத் தட்டாமல் நல்ல பிள்ளையாய்ப் போத்தலை மேசைமேல் வைத்தான். அது ஒத்துழைக்க மறுத்தது. வைத்த அடுத்த நொடி சரியாக நிற்காமல் போத்தல் வேரறுந்த கொடி போல கீழே விழ, அவனுக்கு எரிச்சல் வந்தது. சில முயற்சிகளுக்குப் பிறகு பின்வாங்கியவன் அந்தப் போத்தலை வலது கையிலேயே பயில்வான் போல ஏந்தி நின்றான். ஒன்றரை லிட்டரை தண்ணீர்ப் போத்தல் அவன் சின்னஞ்சிறிய கைக்குப் பெரும் பாரமாகத் தோன்றியது. அடிக்கடி கைமாற்றிப் பிடித்துக்கொண்டான். அம்மா தயாராகி வெளியே வந்தவுடன் கதவோரம் தொங்கிக்கொண்டிருந்த கருப்புக் கைப்பையை ஓடிச்சென்று எடுத்தான். அம்மாவின் கைகளில் கொடுத்தான். போத்தலையும் அம்மாவிடம் தாரை வார்த்தபோது அப்பாடா என்றிருந்தது அவனுக்கு. என்றுமில்லாமல் இன்று அவனது விசித்திரமான செய்கைகள் அவனுக்கே சிரிப்பை உண்டாக்கின. அவசர அவசரமாகக் கிளம்பி வாசலை நோக்கி நடந்த அம்மாவை முந்திக்கொண்டு வாசற்கதவோரம் சென்றான். அசட்டுச் சிரிப்போடு நின்றான். அம்மாவை அடிக்கொருதரம் பார்த்தான். அம்மாவுக்கு ஏறிட்டுப்பார்க்கக்கூட நேரமில்லாமல் போனது. காலுக்குள் நுழைய மறுத்த காலணிகளோடு போராடிக்கொண்டிருந்த அம்மாவை நெருங்கினான்.

“அம்மா, நேத்து சொன்னத மறந்திடாதீங்க,” கைகளைப் பிடித்து நினைவுறுத்தினான் அவன். அவன் கண்களில் டன் கணக்கில் ஏக்கம். நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பிள்ளைகளுக்குச் சமைத்துவைத்துவிட்டு வேலைக்குக் கிளம்பியவள் முகத்தில் அவசரத்தைத் தவிர வேறேதும் தெளிவாக வெளிப்படவில்லை. மறுவார்த்தை பேசாமல் நடையைக் கட்டிய அம்மாவை விரக்தியோடு பார்த்தான். அம்மாவின் உருவம் மறையும்வரை பார்த்தான். அம்மா ஒரு முறை திரும்பிப் பார்த்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பான்.

ஏமாற்றம் அவன் இதயத்தை நைந்துபோகச் செய்திருக்க வேண்டும். புருவங்கள் இரண்டும் சுருங்கின. கண்கள் சிவந்தன. கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தோடியது. மூக்கில் சளி ஒழுகச் தொடங்கியது. சட்டையின் நுனியைப் பிடித்திழுத்து இரண்டையும் சேர்த்துத் துடைத்துக் கொண்டான். மூக்கிலிருந்த சளி கன்னத்தில் ஒட்டிக்கொண்டது.

“இந்த அம்மா ரொம்ப மோசம். என் மேல கொஞ்சங்கூட பாசமில்ல. எல்லா வேலையும் நான்தான் செய்யணும். ஆனா,  எது கேட்டாலும்  கிடைக்காது. செத்தாலும் இனி இந்த அம்மாகிட்ட எதுவுமே கேட்கக்கூடாது!” அம்மாவை மனத்திற்குள்ளேயே திட்டித் தீர்த்தான்.  வீட்டின் மூலையில் உட்கார்ந்து கொண்டான். கோபத்தில் மூக்கு புடைத்திருந்தது.  அப்பா இருந்திருந்தால் அவன் ஆசை என்றோ நிறைவேறியிருக்குமென்ற புதிய அனுமானிப்பு மூளைக்குள் குடைச்சலைத் தந்தது.

            காரணமேயில்லாமல் பிரபாவைப் பற்றிய நினைவு தொந்தரவு செய்யத் தொடங்கியது. பிரபா அவனைப் போல மூத்தப் பிள்ளை இல்லை. வீடு சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. தங்கைகளைக் குளிப்பாட்டிச் சோறு ஊட்டும் பொறுப்பு அவனுடையது இல்லை. எல்லாம் அவன் அம்மா பார்த்துக் கொள்கிறார். அவன் அப்பா வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். பக்கத்திலிருக்கும் தமிழ்ப்பள்ளியில் படிக்கிறான். ஏழு வயதாகும் இவன் வீட்டில் கிடக்கிறான். புறப்போக்கு நிலத்தில் வாழ்க்கையை ஓட்டினாலும் பிரபா இவனைப் போல துன்பப்படுவதாகத் தெரியவில்லை. இரண்டு கேட்டால் ஒன்றாவது கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறான். சூரியாவிற்குள் கொஞ்சமாய்ப் பொறாமை எட்டிப் பார்த்தது. சமயங்களில் இதனாலேயே  பிரபாவின் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்க்க நினைத்திருக்கிறான். ஆனால், அவனையும் விட்டால் நண்பனெனச் சொல்லிக்கொள்ள வேறு யார் இருக்கிறார்கள்.

            ஒரு நாள் அவன் வீட்டிற்குச் செல்லாவிட்டாலும் மனம் உடைந்துபோகும். குடும்பத்தோடு அவன் எங்காவது சென்றுவிட்டால் போதும், மனம் தவித்துப்போகும். அடிக்கடி அவன் வீட்டிற்கு ஓடிச்சென்று அவன் வந்துவிட்டானா என ஏக்கத்துடன் பார்ப்பான். வரவில்லையென்றால் சோர்ந்து போய்விடுவான்.  பிரபா வீடு திரும்பிய அடுத்த கணம் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்கி வழியும். சோர்ந்திருந்த முகம் பிரகாசம் கொள்ளும்.

சூரியா, வீட்டில் இல்லையென்றால் பிரபாவின் வீட்டில்தான் இருப்பானென அவன் அம்மாவுக்கும் தெரியும். அவர்களின் நட்புக்கு அவன் அம்மா இதுநாள்வரை தடையாக இருந்ததில்லை. எழுதப்படாத கட்டளை ஒன்று மட்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.  பிரபா வீட்டிற்குப் போகலாம், விளையாடலாம். பிரபாவை வீட்டிற்குக் கூட்டியும் வரலாம். ஆனால், எவ்வளவு பசியென்றாலும் உணவு கேட்டுப் பிரபாவின் வீட்டில்  நிற்கக்கூடாது.

அன்று பிரபா வீட்டிற்குப் போகாமலேயே இருந்திருக்கலாமெனத் தோன்றியது. போனது அவன் தவறுதான். வேண்டுமென்றா போனான்? எப்பொழுதும்போல கொஞ்ச நேரம் விளையாடச் சென்றான். அவ்வளவுதான். இன்று அதற்காக அதிகம் வருத்தப்படுகிறான். பிரபா அப்பாவின் மேலும் சம்பந்தமேயில்லாமல் கோபம் வந்தது. அவர் வற்புறுத்தாமல் இருந்திருந்தால் இன்று அவனுக்கு இந்த வேதனை வந்திருக்காது. தடுப்புப்பலகை பக்கம் திரும்பினான். முன்னந்தலையை வேண்டுமென்றே அதில் முட்டிக் கொண்டான். வலி தாங்க முடியவில்லை. வலித்த இடத்தைத் தேய்த்துவிட்டான். தொடர்ந்து முட்டினால் வலி தாங்க முடியாதென்பதால் அவசரமாகத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு திரும்பி உட்கார்ந்தான். இன்று மட்டும் அம்மா சொன்னதைச் செய்யாவிட்டால் என்ன செய்ய வேண்டுமெனத் தீவிரமாக யோசித்தான். மூளை ஒத்துழைக்க மறுத்தது.

நாசி ஆயாம். நினைக்கவே சுகமாய் இருந்தது. பிரபா வீட்டில் சாப்பிட்ட நான்கு ஐந்து வாய்கூட இல்லாத நாசி ஆயாமின் சுவை இன்னும் நாவில் ஒட்டிக்கொண்டிருந்தது. அவன் அப்பாவிற்கு லாட்டரி சீட்டில் சுளையாக ஐந்நூறு ரிங்கிட் பணம் கிடைத்ததாம். பிரபாவின் அம்மாவிடம் ஆனந்தமாய், ஆர்ப்பாட்டமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தபோது அவன் காதுகளிலும் விழுந்தது. வீட்டிலிருக்கும் மூவருக்கும் நாசி ஆயாம் வாங்கிக் கொடுத்துச் சந்தோசத்தைப் பகிர நினைத்திருக்கிறார். அவர்கள் சந்தோசத்திற்கு நந்திபோல அவன் அங்குச் சென்று விட்டான். வேறு வழியில்லாமல் அவனுக்கும் கொஞ்சம் நாசி ஆயாம் சிறிய தட்டில் கொடுக்கப்பட்டது. முதலில் வேண்டாமெனக் கொஞ்சம் பிகு செய்தவனைப்  பிரபா வற்புறுத்தினான்

“வேணான்டா, எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா ஏசுவாங்க,” அரை மனத்தோடு சொன்னவனை முறைத்துப் பார்த்தான் பிரபா.

“டேய், ரொம்பத்தான்… ஒழுங்கா சாப்பிடு…” தட்டை அவன் பக்கம் நகர்த்தியவனைப் பார்த்தான். நாசி ஆயாமை ஒரு பிடி பிடிக்கத் தயாராகியிருந்தான் பிரபா. தன்னருகில் தவம் கிடக்கும் தட்டைப் பார்த்தான் சூரியா. ஒரு வெள்ளரித் துண்டு. இரண்டு மினுமிக்கும் கோழித் துண்டுகள். சாரலாய்த் தெளிக்கப்பட்ட கிச்சாப், இளம் மஞ்சள் நிறத்திலான சோறு. நாசி ஆயாமின் மணம் அவன் நாசிக்குள் அழையா விருந்தாளியாய்ச் செல்ல, கட்டுப்பாட்டை இழந்தான். கண் இமைக்கும் நேரத்தில் நாசி ஆயாம் வேட்டை நிறைவடைந்தது.

“டேய் சூரியா… என்னடா இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டுட்டே…” தட்டை எட்டிப்பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவனை ஓரக்கண்ணால் பார்த்தான்.

“அப்பா… இவனப் பாருங்களேன். சோசுகூட ஊத்திக்கல. இவனுக்கு நாசி ஆயாமே சாப்பிடத் தெரியலப்பா…” குடும்பமே சிரித்தது.

அவன் கவனமெல்லாம் முத்துச் சிதறல்கள் போல விரல்களில் பிடிவாதமாக ஒட்டியிருந்த பருக்கைகள் மீதிருந்தது.  இடது கை விரல்களால் ஒவ்வொன்றாக எடுத்து வாய்க்குள் போட்டான். அம்மா பார்த்திருந்தால் முதுகு வீங்கிப் போயிருக்கும்.

“கழுவுற கையில போயி சாப்பிடுவீயா? இன்னொரு தரம் பாத்தேன் சூடு போட்டிருவேன்… கவனம்…” வசைமொழியோடு அன்றொரு நாள் முதுகில் விழுந்த அடியை அவனால் ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.

ஆனால், இந்த நாசி ஆயாம்  அந்த வலியையும் மறக்கச் செய்துவிட்டது. இறுதிப் பருக்கை தொண்டைக்குழியைத் தாண்டிச் சென்றபோது மனமேனோ கனத்தது. விரல்களில் காய்ந்திருந்த கிச்சாப்பை நாக்கால் நக்கிச் சுவைத்தவனிடத்தில் ஏக்கப் பெருமூச்சு.

பிரபாவின் தட்டின்மேல் பார்வை பதிந்தது. சோறு முழுவதுமாகத் தீர்ந்து போயிருந்தது. இரண்டு கோழித்துண்டுகள் சீண்டப்படாமல் இருந்தன. வாயில் எச்சில் ஊறத் தொடங்கியது. வெட்கத்தைவிட்டு அதில் ஒன்றைக் கேட்டுவிட மனம் துடித்தது.

“பிரபா…”

“என்னடா…”

“ஒன்னுமில்லடா…”

“சொல்லுடா….. என்ன வேணும்?” கோழித்துண்டுகளைச் சுவைக்கத் தொடங்கியிருந்த பிரபாவின் வார்த்தைகளில் சலிப்பு எட்டிப் பார்த்தது.

இதுவரை இப்படியொரு சுவையில் கோழி இறைச்சியைச் சுவைத்திடாதவன். முதல் முறை சாப்பிட்டதும் கிரங்கிப்போனான். மனம் மயங்கிப் போனான். இன்னொரு  கோழித்துண்டு கிடைத்தால் பூரிப்பால் வானத்தைத் தொட்டு வருவான். மீண்டும் ஏக்கத்தோடு பிரபாவின் தட்டைப் பார்த்தான். இரண்டு துண்டுகளில் ஒன்று காணாமல் போயிருந்தது. இரண்டாவது துண்டும் காணாமல் போவதற்குமுன் கேட்டுவிட வாயெடுத்தான்.

“புறம்போக்கு நிலத்துல வாழ்ந்தாலும் மானத்தோட வாழணும். யாருகிட்டயும் கையேந்தக் கூடாது, மத்தவங்க கேவலமா நினைக்கிற மாதிரி நடந்துக்கக் கூடாது,” அம்மா அடிக்கடி அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் வார்த்தைகள் அவனைத் தடுத்து நிறுத்தின. எண்ணத்தைக் கைவிட்டான் சூரியா. மனம் மாறும்முன் இடத்தைக் காலி செய்தான்.

நாசி ஆயாமின் சுவை நாக்கிலும் மனத்திலும் நிரந்தரமாக ஒட்டிக்கொள்ள அன்று அம்மாவைத் தொந்தரவு செய்யத் தொடங்கியவன்தான், இன்று வரை முயற்சியைக் கைவிடவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டன. ஏதேதோ சாக்குப்போக்குகள் வரிசைகட்டி நின்றன.  அவற்றையெல்லாம் அவன் மனம் ஏற்க மறுத்தது. என்றாவது ஒரு நாள் அம்மா மனமிரங்குவாரென முழுமையாக நம்பினான். இதுவரை அந்த நம்பிக்கை உயிர் பெறவில்லை. இனியும் நிறைவேறுமா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

“சாமி…. இன்னைக்கு எங்க அம்மா நாசி ஆயாம் வாங்கிட்டு வரணும். நாசி ஆயாம் ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா? நான் பாவம்தானே. இன்னைக்கு மட்டும் நாசி ஆயாம் கிடைச்சதுனா, தினமும் உனக்குச் சூடம் ஏத்துறேன், சரியா!“ பலகையில் ஆணி அடித்துத் தொங்கவிடப்பட்ட படத்திலிருந்த ஐயா சாமியை மனதார வேண்டிக் கொண்டான். இரண்டு மூன்று  சூடங்களையும் ஏற்றிவைத்துக் கண்களை மூடி ஐயா சாமிக்கு மட்டுமே புரியும்படி ஏதேதோ முணுமுணுத்தான். கண்களைத் திறந்து ஐயா சாமியின் கால்களைப் பவ்வியமாகத் தொட்டுக் கும்பிட்டான். ஐயா சாமியின் முகத்தைப் பார்த்தான். பெரிதாய் முறுக்கியிருந்த மீசை அச்சுறுத்தியது. கையிலிருந்த நீண்ட கத்தி பயத்தைக் கூட்டியது. ஓடிப்போய் மீண்டும் மூலையில் உட்கார்ந்துகொண்டான். பலகையில் நீட்டிக்கொண்டிருந்த ஆணியொன்று  கருணையே இல்லாமல் அவன் முதுகைப் பதம்பார்த்தது. சின்ன விரல்களால் முதுகைத் தேய்த்துவிட்டுவிட்டு வாசற்கதவைப் பார்த்தான்.

ஆறு மணிக்கெல்லாம் அம்மா வந்து விடுவார். அவசரமாக எழுந்தான். மீண்டும் ஒருமுறை வீட்டைச்  சுத்தமாகக்  கூட்டிப் பெருக்கினான். ஆயுள்காலம் குறைந்து தன்  சிகையலங்காரத்தை இழந்துகொண்டிருந்த துடைப்பத்தைக் கதவின் பின்னால் மாட்டி விட்டான். தங்கைகளை அழகு பொம்மைகளாக பலகையோரம் அமரச் செய்தான். சின்னவளின் மூக்கில் வழிந்த சலியை வெளுப்பேறியிருந்த துண்டால் துடைத்துவிட்டான். அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனத்தை அடக்கி அமைதிப்படுத்த முயன்றான். அது அடங்க மறுத்தது. மனமெல்லாம் ஆர்ப்பரிப்பு. நாசி ஆயாம் முழுவதுமாக அவன் மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. வாசற்படியில் போய் உட்கார்ந்து கொண்டான். அங்கு உட்கார்ந்தால்தான் அம்மா தூரத்தில் வரும்போதே தெரிந்து விடும். ஓடிச் சென்று அம்மாவின் கைப்பையைத் தூக்கி வரலாம். அதைவிட முக்கியம், அம்மா கையில் ஏதாவது கொண்டு வருகிறாரா எனக் கண்டுபிடித்து விடலாம். வந்து உட்கார்ந்த அடுத்த நொடியே கால்களில் ஜப்பான் சிலிப்பர் புகலிடம் பெற்றுக்கொண்டது. ஒரு நிமிடங்கூட தாமதித்துவிடக் கூடாதென்பதில் தெளிவாக இருந்தான்.

சென்ற மாதம் அம்மா இரண்டு ரிங்கிட் கடையில் வாங்கி வந்த சுவர் கடிகாரத்தை அடிக்கொருதரம் திரும்பிப் பார்த்துக்கொண்டான். கடிகார முள்களுக்கு என்ன வந்ததோ ஏது வந்ததோ தெரியவில்லை. அவன் எண்ணத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்காமல் பின் வாங்கிக்கொண்டன. அம்மா வந்தால் கடிகாரத்தை மாற்றச் சொல்ல வேண்டுமெனத் தன் மனத்திற்கு உத்தரவிட்டுக்கொண்டான்.

“அம்மா, இன்னைக்குன்னு பார்த்து ஏன் இவ்வளவு லேட்டு. சீக்கிரம்மா… இன்னைக்கு மட்டும் நீங்க நாசி ஆயாம் வாங்கிட்டு வரல நான் என்ன பண்ணுவேண்னு எனக்கே தெரியாது…”  பீறிட்டுக்கொண்டு வந்த கண்ணீரை அடக்க முயன்று தோற்றுப்போனான். அண்ணனின் அழுகை தங்கைகளைப் பாதித்திருக்க வேண்டும். பெரியவள் எழுந்து வந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள். அவனையே உற்றுப் பார்த்தாள். இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கி வந்தாள். அவன் கண்ணீரைத் தன் பிஞ்சு விரல்களால் துடைத்து விட்டாள். அறிந்தோ அறியாமலோ அவனுக்கு ஆறுதலாக இருந்தவளைத் தன் மடியில் சாய்த்துப் படுக்கச்செய்தான். அவளும் அமைதியாகப் படுத்துக்கொண்டாள். சின்னவளின் விசும்பல் அவன் காதுகளை எட்டாமல் இல்லை. பெரிய அழுகையாக மாறும்போது பார்த்துக்கொள்ளலாமென இருந்து விட்டான்.

தூரத்தில் அம்மாவின் உருவத்தைக் கண்டதும் மனம் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது. மடியில் கிடந்த தங்கையை அவசரமாக எழுப்பி உட்கார வைத்தான். கண்கள் மூடித் திறப்பதற்குள் அம்மாவின் அருகில் இருந்தான். அம்மாவின் வலது கையில் சிவப்புப் பிலாஸ்டிக் பையைக் கண்டதும் கண்கள் பெரிதாய் விரிந்தன. முகத்தில் பல கோடி சூரிய பிரகாசம். அம்மாவின் கைப்பையைக் கேட்டு வாங்கி தோளில் மாட்டிக்கொண்டான். காலில் உரசி இம்சை செய்த கைப்பையைப் பற்றி அவனுக்குக் கொஞ்சமும் கவலையில்லை. அம்மாவின் இடது கையைக் கெட்டியாகப் பிடித்தவன் அம்மாவின் நடைக்கு ஈடுகொடுத்து நடக்க முயன்றான். அவன் பார்வை அடுத்த கையிலிருந்த சிவப்புப் பையைவிட்டு நகர மறுத்தது.

“சூரியா… இந்தா நீ கேட்ட நாசி ஆயாம். இப்ப சந்தோசமா? போ… போயி தங்கச்சிங்களுக்குக் கொஞ்சம் கொடுத்திட்டு நீயும் சாப்பிடு…” அதற்குமேல் அம்மா பேசிய எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. வேகமாக அடுப்பங்கரைக்குச் சென்றான். மூன்று கண்ணாடி மங்குகளை எடுத்து வந்தான். கோல்கேட் வாங்கும்போது கிடைத்த நீல நிறக் கண்ணாடி மங்குகள் இன்று தங்கத் தட்டுகளாகக் காட்சி தந்தன. முதல் தட்டில் கொஞ்சமாய் நாசி ஆயாமைக் கொட்டும்போது அம்மாவின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.

“எங்கள வேணான்னு விட்டுட்டுப் போயிட்டு இப்ப எந்த மூஞ்ச வச்சுகிட்டு வந்தீங்க?” அம்மாவின் குரல் ஓங்கியது. அனல் தகிக்கும் வார்த்தைகள் அவனைப் பயமுறுத்தின.

வேகமாக வரவேற்பறைக்கு ஓடினான். அம்மாவின் அருகில் தாடி மீசையோடு ஒருவர். அடையாளம் தெரியவில்லை. பார்க்கவே பயமாய் இருக்க, அம்மாவின் பக்கத்தில் போய்ப் பதற்றத்தோடு நின்றுகொண்டான். தங்கைகளும் ஓடிவந்து அவர்களோடு ஒட்டிக் கொண்டனர்.

“கல்பனா, உனக்குப் பண்ண துரோகத்துக்கு இப்ப யாரும் இல்லாத அனாதையா இருக்கிறேன். இருக்க இடம் இல்ல.  நல்ல சாப்பாடு இல்ல. உன்ன விட்டா எனக்கு வேற கதியில்ல கல்பனா. என்னை மன்னிச்சிடு… மன்னிச்சிடு கல்பனா… மன்னிச்சிடு,” குழந்தை போல தேம்பி அழுதவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தலையை நிமிர்த்தி அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். கழுத்து வலித்தது. மீண்டும் தலையைக் குனித்துக் கொண்டான்.

“ஒரு நல்ல புருஷனா நீங்க இருந்ததில்ல. உங்க கடன எல்லாம் என் மேல போட்டுட்டு அம்போன்னு விட்டுட்டுப் போனவருதான நீங்க. உங்கள எப்படி நம்பறது?” அம்மாவின் குரல் தழுதழுத்தது.

அவர் யாரென அவனுக்குப் புரிந்துபோனது.

“உன் காலுல விழறேன் கல்பனா? என்னைக் கை விட்டுடாத…”

காலில் விழப் போனவரைத் தடுத்து நிறுத்திய அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். அடுத்த கணம் அம்மாவை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டான். தங்கைகளும்கூட அரண்டு போயிருந்தனர். அம்மாவைவிட்டு ஒரு செண்டிமீட்டர்கூட நகராமல் நின்றனர்.

“சூரியா… போயி உங்க அப்பாவுக்குச் சோறு போட்டு எடுத்திட்டு வா… முதல்ல சாப்பிடட்டும். அப்புறம் மத்ததெல்லாம் பேசிக்கலாம்.” அம்மா சொன்ன வார்த்தைகள் அவன் இதயத்தை அறுத்தெடுத்தன. 

வெகுநாள்களுக்குப் பிறகு வந்த அப்பா, பெரிய காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த நாசி ஆயாம்… மனம் அல்லல்பட்டது. அப்பா தரையில் அமர்ந்து நாசி ஆயாமில் கை வைத்தபோது அவர் கண்களில் கண்ணீர். அவன் கண்களிலும்தான். அந்த நாசி ஆயாமிலிருந்து கொஞ்சமாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கதவோரம் கால்கள் கடுக்கக் காத்திருக்கிறான்.

++

எழுத்தாளர் உமாதேவி வீராசாமி. இவர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்.  எழுதுவதில் ஆர்வம் கோண்டு தொடர்ந்து குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள் என எழுதி வருகின்றார். இதுவரையில் ‘அப்பாவின் கைக்கடிகாரம்’ என்ற குறுங்கதைத் தொகுப்பை வெளியீடு செய்துள்ளார். ‘கலவரக்கோடுகள்’  என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கான பணியில் இருக்கிறார். இவரின் பெரும்பாலான சிறுகதைகள் குடும்ப பின்னணியை மாறுபட்ட கண்ணோட்டத்தை அணுகும் வகையில் அமைந்திருக்கும்

மற்ற பதிவுகள்
Sorry no related post found

One thought on “நாசி ஆயாம்

  1. நாசி ஆயாம் கதையின் முடிவில் வாசகனுக்கு ஒரு இடைவெளியை விடப்பட்டிருக்கிறது. சாதாரணமாக அந்தப் பையனுக்கான உணவு ஓடுகாலி அப்பனுக்குச் சேர்ந்துவிடுகிறது. அந்தப் பையனுக்குப்போய்ச் சேரவில்லையே பாவம் என்று வாசகன் ஏங்கும் கட்டத்துக்கு அப்பால் அந்தக் கணவனுக்கு, மகனுக்கான உணவு கைமாறிவிடுகிறது. அப்படி கொடுக்கப்படும் உணவை அப்பன்காரன் மறுக்கவில்லை. அந்த இடம் சொல்லப்படவும் இல்லை. சொல்லப்படவேண்டிய அவசியமும் இல்லை.ஆனால் ஒரு மோசமான சமிக்ஞையை இங்கே வாசகனுக்கு காட்டிச்செல்கிறார் உமா. இதுகாறும் பொறுப்பில்லாமல் இருந்த கணவன் தன் பிள்ளைக்கான உணவு தனக்கு கொடுக்கப்ப்டுகிற்தே என்ற குற்ற உணர்வில்லாமல் இருக்கிறான். இப்படிப்பட்டவன் திருந்துவானா என்ற சமிக்ஞையே அது. நல்ல கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *