தேவாலயத்தின் தூய அமைதியை இரண்டாகப் பிளந்தது அந்த பெண்ணின் குரல். அப்பத்தை உயர்த்திப் பிடித்திருந்த பாதிரியார் ஆரோக்கியம் திடுக்கிட்டார். கிறிஸ்துவின் திரு உடலை தெண்டனிட்டு வணங்கிக் கொண்டிருந்த திருச்சமூகமும் திடுக்கிட்டது. திருச்சிலுவைநாதரின் கிரீடத்திற்கு மேலே குனுகிக் கொண்டிருந்த கோவில் புறாக்களும் அதிர்ச்சியில் மேலெழுந்து பறந்தன. பெண்கள் பகுதியிலிருந்து வெடித்துக் கிளம்பிய அந்த குரலுக்குக் காரணமானவள், தனது மேலாடை நழுவிக் கிடக்கும் பிரக்ஞைகூட இல்லாதவளாக கண்கள் செருகி உணர்வற்றுக்கிடந்தாள். தண்ணீருக்காக இரண்டொருவர் வெளியில் ஓடினர். பாடலட்டைகளையும் வேத வசன தாள்களையும் எடுத்துவந்து காற்று விசிறினர் சிலர். தண்ணீரை முகத்தில் தெளித்ததும் தன்னுணர்வு பெற்றவளை தூணில் சாய்ந்தவண்ணம் கால் நீட்டி அமர வைத்தனர், அவளோ திருப்பலி பீடத்துக்கு நேரெதிரே கால் நீட்டுவது அவசங்கை என்பதால், சங்கோஜத்துடன் பிரார்த்தனை முக்காடை இறுக்கிக் கொண்டு தன்னை வெறிப்பவர்களைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து அமர்ந்தாள். தடங்கலாகியிருந்த பலிபூசை மீண்டும் துவங்கியது.

“அப்பிடி சங்கு கிழிய கத்தறாப் போல என்ன ஆவேசம் உனக்கு… சொல்லுத்தா என்னதான் ஆச்சுது உனக்கு? அதும் எழுந்தேற்றம் காட்டுற வேளையில!”

திருப்பலி முடிந்து பீடத்தினின்று கீழிறங்கி வந்த பாதிரியார் அவளை வினவினார்.

“ஃபாதர்…சாரி ஃபாதர்…நா எனக்கு…”

மென்று விழுங்கிக் கொண்டிருந்தவளை,கேள்வியுடன் பார்த்தார் பாதிரியார் ஆரோக்கியம்.

“ஃபாதர்…இது  விஷயம் வேற மாதிரில்லா. கொஞ்சம் இங்குட்டு வாங்க!”

பாதிரியை கையோடு பற்றி அங்கிருந்து அழைத்துச் சென்ற கோவில் பணியாளன் பிராஞ்சி, கோவில்முற்றத்தில் அவரை நிறுத்தி விவரம் சொன்னான்.

“அந்த பிள்ளைக்கு சித்தம் கலங்கிப் போயிட்டு சாமி!”

“எல… என்னடே சொல்லுத”

“ஆமா…சாமி! இது யாருன்னு உங்களுக்கு லெக்கு தெரிதா? நம்ம சிங்கி இருதயராசன் இருக்காம்லா. அவன்ட ஒரே மக நான்சியாக்கும். இந்த புள்ள கருக்கலஞ்சு போன நாள்லேர்ந்து இப்பிடித்தான் கோட்டி பண்ணிகிட்டு திரியுது”

“இயேசுவே ஸ்தோத்திரம்…அது எப்ப நடந்துச்சு. இந்த பிள்ளைட கல்யாணத்தன்னைக்கு, ஊரையே அந்த தெற தெறச்சு எடுத்தானே இருதயம்…”

“ஆமா சாமி! மகன்டா அம்புட்டு பிரியம் அவனுக்கு… தாயில்லாப்புள்ள வேற. இவட ஆத்தா போயி சேர்ந்ததுக்கு அப்புறம், ஒத்தையில கைப்புள்ளைய வெச்சுக்கிட்டு ரவ்வும் பகலுமா பேயி புடிச்சமாறி கிடந்து அவன் உழச்சு உருவாக்குன செல்வத்துக்கும்,கெட்டி வெச்சிருக்க கோட்டைக்கும் இவதான் ஒத்த வாரிசு. அப்படியாப்பட்ட மகராசிக்கித்தான் இன்னிக்கி இப்படியொரு நெலம”

பிராஞ்சி மேலும் சொல்ல ஆரம்பித்தார் .

இருதயராஜனுக்கு நான்சி ஒரே மகள். பள்ளிக்கூடத்தின் வாசலைக் கூட மிதிக்காதவர் கடின உழைப்பின் காரணமாக இன்று செல்வந்தராக இருந்தாலும், ஆரம்ப நாள்களில் தான் பட்ட கஷ்டத்தை நினைத்து தன் மகளை ஒரு மேசைக்காரனுக்குத்தான் மணம் முடித்துக்கொடுப்பது என்று தனக்குள் சங்கல்பம் செய்திருந்தார். மகளை அதுவரை எதற்காகவும் பிரிந்தேயிராத அவர்,அவளை நன்கு படிக்கவைத்து விட வேண்டும் என்கிற வெறியில் தூத்துக்குடிக்கு அனுப்பி படிக்க வைத்தார். ஒரே சாதியாக இருப்பினும், கடலுக்கு செல்லாமல் பூர்வீக சொத்துடன், படிப்பும் வேலையும் கொண்ட மேசைக்காரர்கள் இனம் ஊரில் மிகக் குறைவு. மேசைக்காரர்களும் கடலோடிகளும் கலப்பதென்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருந்தது. நான்ஸி படிப்பை முடித்து விட்டு ஊரோடு திரும்பி விட்ட பிறகு மணப்பாடு, உவரி,தூத்துக்குடி என்று அசலில் இருந்து கார் வைத்துக்கொண்டு பிள்ளை வீட்டார் வந்தாலும், இவர் வெளியூர் சம்மந்தங்களுக்கு துளியும் இசையவில்லை. நிறைய பிரயாசைகளுக்குப் பின்,கப்பலுக்கு செல்லும் மாப்பிள்ளையாகப் பார்த்து, கேட்ட சிறுதனத்திற்கு மேலேயே கொடுத்து ஊரிலேயே மாடி வீடும் காரும் வைத்திருக்கும் மேசைக்காரர்கள் வீட்டில் திருமணம் செய்து கொடுத்தார். நான்ஸி அவளது புகுந்த வீட்டில் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தாள். இருதயராஜனின் சம்மந்தக்காரர்கள் அவரது பணத்தோடு சம்மந்தம் செய்து கொண்டார்களேயன்றி அவருடன் அல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆகவே,மகள் வீட்டுக்குச் செல்லுவதை இயன்றவரை தவிர்க்கவே செய்வார். உள்ளூரில் மணமுடித்துக் கொடுத்திருந்தாலும்,தகப்பனின் வீடு தினமும் சென்று பார்க்க முடியாத தூரத்தில் ஆகிவிட்டிருந்தது நான்ஸிக்கு

இதற்காகவே,தினமும் காலையில் அதிகாலைத் திருப்பலிக்கு வந்து விடுவாள் நான்ஸி. திருப்பலி முடிந்ததும் ஆண்கள் பகுதியிலிருந்து வெளிவரும் இருதயராஜனும்,பெண்கள் பகுதியிலிருந்து வெளிவரும் நான்ஸியும் தூரத்திலிருந்தே பார்த்துக்கொள்வர். அவளின் சிறிய புன்னகையுடன்தான் தனது நாளைத்தொடங்குவார் அம்மனிதர். ஒரு நெடிய பயணத்துக்கு உலகைச் சுற்றி வர கிளம்பும் நாவாயை, கொடியசைத்து துவக்கி வைப்பது போல இருக்கும் அவளது சிறு தலையசைப்பு.

அதிகாலைத் திருப்பலி முடிந்ததும் அருகில் இருக்கிற கல்லறை வளாகத்திற்கு சென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற குடும்பத்தின் கல்லறைகள் அனைத்தின் முன்னும் நின்று பிரார்த்தனை செய்து விட்டுத் தான் வருவாள் நான்சி. இப்படியாக அவள் தகப்பனுக்கு தான் காட்சியளிக்கும் நேரத்தை நீட்டித்துக் கொண்டிருப்பாள். கூடவே, இப்போது கணவன் வீட்டாரின் பூர்வீக கல்லறைகளுக்கும் சேர்த்து ஜெபிக்க வேண்டியிருக்கிறதே அவளுக்கு.

நான்ஸி மென்மனம் படைத்தவள். கல்லறைகளை வெறும் மண் என்று நினைக்காமல் அவற்றின் மீது தவறியும் கால் பட்டுவிடாமல், நீத்தாருக்குத் தரும் மரியாதையுடன் கவனமாக சென்று வருவாள். மழை நாள்களில் கல்லறைகளில் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும். மண் இறங்குவதால் உள்ளே  வெற்றிடம் ஏற்பட்டு,மேல்மண் கூடுபோல தோற்றமளித்து ஏமாற்றி விடும். அதன்மீது காலை வைக்கும்போது மண்  சரிந்து கால் உள்ளே இறங்கிவிடும் அபாயம் உண்டு. கட்டை மதில் சுவரின் பின்னிருந்து மகளை அழகுபார்த்துக் கொண்டிருந்த தந்தையின் மீதிருந்த கவனத்தின் காரணமாக, முன்தினம் பெய்த மழையில் பொதுமியிருந்த பழையகல்லறை ஒன்றின் மீது நான்ஸி காலை வைத்து விட அவளது கால் முட்டி வரையில் கல்லறையின் உள்ளே இறங்கி விட்டிருந்தது.

திடுமென நிகழ்ந்துவிட்ட இந்த விபரீதத்தில், பிடரி மயிர் சிலிர்த்த பயத்தில் அலறித் துடித்து விட்டாள் நான்ஸி. மகளைக்காக்க இருதயராஜன் ஓடி வருவதற்குள், அருகில் நின்று ஜெபித்துக்கொண்டிருந்த சிலர் அவளைத் தோளோடு பற்றித்தூக்க நான்சியின் கால், வெளியே வந்தது. அந்த அதிர்ச்சியில், நாள் பிந்தியிருந்த அவளுக்கு அங்கேயே உதிரப்போக்கும் கண்டது.

அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நான்ஸி மிகவும் பயந்து போனாள். அன்றிலிருந்து பிரமை பிடித்தவள் போல இருந்து வந்தாள். பிள்ளைக் கனவுகளில் இருந்தவளின் ஆசையெல்லாம், அலை அடித்த மண்கோபுரம் போல சட்டென்று சரிந்து போனது. ஆற்றவும் தேற்றவுமான கணவன் பொருள் தேடி கப்பலுக்கு சென்று விட்டபடியால்,உள்ளே குமிழிட்டு கொதிக்கிற உணர்வுகளை பகிர யாருமின்றி அனுதினமும் தனக்குள்ளே குமைந்தாள்.

இருதயராஜன் இடி விழுந்த பாய்மரக் கலமாக முற்றாக சிதைந்து உருக்குலைந்து போனார். தனது மகள் காலை நுழைத்த கல்லறை சந்தா குரூஸின் கல்லறை என்பதைக் கண்டத்திலிருந்து அவரது மனம் நிம்மதியின்றி அலைக்கழிந்தது. சந்தா குரூஸ் சில வருடங்களுக்கு முன்பு தான் இறந்துவிட்டிருந்தார். உயிரோடு இருந்தவரையில், இருதயராஜனின் ஒரே வியாபார எதிரி அந்த பிராந்தியத்தில் அவர் மட்டும்தான்.இருவரும் மீன்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருந்ததால், அவர்களுக்கிடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு பனிச்சுவர் என்றும் இருந்தது. இருதயராஜன் கடவுளுக்கு பயந்தமனிதர் என்றால்,சந்தா குரூஸ் ஏவல், பில்லி சூனியங்களை நம்புபவர்.

     பாலக்காட்டு மாந்திரீகனை மாதத்துக்கு ஒரு முறை வரவழைத்து, பண்டகசாலையின் உள்ளில், ஊரடங்கிய பொழுதுகளில் கருங்குட்டிச் சாத்தனுக்கு உயிர்ப்பலி இடுவார் சந்தா குரூஸ். அதன்பின், மாந்திரீகனிடம் வாங்கிய வசியமையையும், சொம்பு நீரையும் பூஜை அறையில் வைத்து வணங்குவார். இவை எதுவும் ஊராருக்கு தெரிந்தாலும், அவரை பகைத்துக்கொள்ள அஞ்சி எதுவும் தெரியாததைப்போல காண்பித்துக் கொள்வர்.

ஒரே நேரத்தில் கடலுக்குள் கிளம்பிய படகுகள் அனைத்தும் திரும்பும்போது மீன்பாடு இல்லாமல் வெற்றாக வருகிற நேரத்தில் , சந்தாகுரூஸின் படகுகளில் மட்டும் பணியாள்கள் நிற்க இடமில்லாமல் மீன்கள் தாமாக வந்து மோதி மோதி விழுவதை பார்த்ததாக கதைகள் உண்டு. மீன்களை வாங்க வருகிற வியாபாரிகள் அவருக்கு மட்டும் இரண்டு மடங்கு பணத்தைத் தந்து கொள்முதல் செய்து செல்வர். குழம்புக்கு மீன் வேண்டுமென்று அவரது மனைவி கேட்டபோது, அவர் மரத்திலிருந்து பழத்தைப் பறிப்பது போன்று அனாயாசமாக கடல் நீரில் இடது கையால் துழாவி ஒரு பெரிய மீனை பிடித்து வந்ததாக ஒரு புரளி, அவ்வூரின் குழந்தைகளுக்கு உணவூட்டும் கதைகளில் இன்னும் இருக்கிறது. உண்மையில்,அவர் தனது ஆன்மாவை சாத்தானிடம் விற்று விட்டார். அதனால்தான்,அனுதினமும் கோயிலுக்கு சென்று, அப்பம் உட்கொண்டு பரிசுத்தவாதியாக தன்முன் நடமாடும் இருதயராஜனைக் கண்டாலே கடுகடுத்துக் குமைவார் சந்தா குரூஸ்.

தனக்கு அழிவே இல்லை என்று இறுமாந்திருந்த அவருக்கும்,ஒருநாள் மரணம் வந்து சேர்ந்தது… பண்டகசாலையில் வலைக் கழிவுகளின் இடையே குப்புற விழுந்து மரித்துக் கிடந்தார். தனது மரணத்தை தன்னாலே நம்ப முடியவில்லை என்பதைப்  போன்று நிலைகுத்தியிருந்தன அவரது விழிகள். பயங்கரம் ஒன்றைப் பார்த்தது போன்ற அதிர்ச்சியில் நாக்கு வாயிலிருந்து வெளிவந்து தொண்டைக் குழி வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது. காதுகளில் கருஞ்சிவப்பு நிற இரத்தம் வழிந்து உறைந்திருந்தது. சாத்தானை தொழுததால், அதுவே அவரது உயிரை காவு வாங்கிற்று என்று ஊருக்குள் வெகுநாள்களாக அவரது மரணத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்பேர்பட்டவரின் கல்லறைக்குள்தான் நான்ஸி காலை நுழைத்திருக்கிறாள். அவளுக்கு என்னென்ன ஆக்கினைகளை கொண்டு வந்து சேர்க்குமோ சந்தா குரூஸின் அடங்காது அலையும் ஆன்மா என்று ஊர் மொத்தமும் பரிதவித்தது.

அனைவரும் பயந்தது போலவே,நான்ஸி சில நாள்களில் சித்த பிரமை பிடித்தவள் போலவே நடந்து கொள்ள ஆரம்பித்தாள். கறிகூட்டி குழம்பு வைத்தாள் என்றால் உப்புக்கு பதில் சீனியைப் போட்டுவிடுவாள். தேநீரில் உப்பைக் கலந்து விடுவாள். துவைத்து காயவைத்து மாடியிலிருந்து எடுத்து வந்து மடித்து அடுக்கி வைத்த துணிகளை அரங்கில் கொண்டு அடுக்காமல் மறுபடியும் தண்ணீரில் அமிழ்த்தி வைத்து விடுவாள். மாமியாரின் பிரியத்துக்குரிய செடிகளின் வேரில் வெந்நீர் விட்டு ஒவ்வொன்றாக கருகச் செய்தாள். அவளது மாமனார் ஆண்டுகளாக சேகரித்து வந்த பல ஜாதி புறாக்களின் மொத்த மதிப்பு மட்டும் லட்சம் பெறும். அவற்றின் கூண்டுக் கதவுகளைத் திறந்து பறக்க விட்டாள். பறந்து செல்லாமல்,விசுவாசமாக அங்கேயே பழியாய் கிடந்த சில நாட்டியப்புறாக்களை எட்டிப் பிடித்துக்கொண்டு புழக்கடைக்கு கொண்டு சென்றாள் நான்ஸி.

“என்ன ஆனம்மா…கொழம்பு தெருமுக்குக்கு மணக்கு!”,என்றவரிடம் எதுவும் சொல்லாமல் ஒரு கோணல் சிரிப்பு மட்டும் சிரித்தாள் நான்ஸி. வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு விட்டு மதியத் தூக்கத்தையும் முடித்துக் கொண்டு வந்தவர், தன் வழக்கம்போல புறாக்களை நாடிச் சென்றார். அன்று அவர் அழுத அழுகையைச் சொல்லி மாளாது. அன்றோடு இருதயராஜனின் வீட்டுக்கு வந்து அடைந்தவள்தான் நான்ஸி… அதன்பிறகு,எவ்வளவோ சமாதானப் பேச்சு வார்த்தைகளை நிகழ்த்தி பார்த்து விட்டார் இருதயராஜன். ஒன்றும் பலனில்லை…வாழ வேண்டிய பிள்ளை வற்றாமல் வதங்காமல் வீட்டின் மூலையோடு முடங்கிவிட்டதென்கிற கவலையில் துரும்பாய் ஆகி விட்டார் அவர்.

இருதயராஜனின் வீட்டு வாசலை திறந்தால் கடல் தெரியும். விளக்கு வைத்தபிறகு மணிக்கணக்கில் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருப்பாள் நான்ஸி.. அமாவாசை,பௌர்ணமி நாள்களில் அவளது பித்து முற்றி விடும். உடலைத் துணியைப்போல முறுக்கிக் கொண்டு மண்ணில் விழுந்து புரண்டு கண்ணில் காணாத எதையோ ஒன்றை நோக்கி பற்களை நற நற வென்று நொறுக்குவாள்.. ஆடைகளை, தலைமுடியை மற்றும் அவளைப் பிணைத்திருக்கும் எல்லாவற்றையும் அவிழ்த்து விட்டு கடலை நோக்கி ஓடிச் சென்றுவிட முனைவாள். அம்மாதிரி நாள்களில் இருதயராஜன் துவண்டு போய் விடுவார்.

மகளின் பித்து தெளிய பிராந்தியத்தின் எல்லா புனிதத் தலங்களுக்கும்  அவளைக் கூட்டிச்சென்றார் இருதயராஜன். மணப்பாடு வரைக்கும் கால்நடையாகவே அழைத்துச் சென்று சவேரியாரின் புதுமைக்கிணற்றில் குளிக்கச் செய்தார். புளியம்பட்டி அந்தோணியார் கோவிலுக்கு மிதிவண்டியில் யாத்திரையாக செல்லுபவர்களுடன் இணைந்து,தான் செல்லும் மிதிவண்டியில் மகளை பின்னுக்கு அமர வைத்துக்கொண்டு பல மைல் தூரம் அலுக்காமல் சென்று அசனவிருந்தில் கைநனைத்து வருவார். ஒருமுறை, ஆலந்தலையில் அற்புதங்கள் நடக்கிறதென்று யாரோ சொல்லக் கேட்டு அங்கும் கிளம்பிவிட்டார். கோவிலின் நடுவில் செவ்வக வடிவில் அமைந்திருக்கிற சொஸ்தமடையும் மண் தொட்டியில் தன் மகளை அவர் அமர்த்திய போது நான்சி கேட்டாள்,” யப்பா….உங்கள இந்த பாடு படுத்துறதுக்கு பதிலா நான் செத்துப் போயிறலாம்!என்னையும் அம்மாட குழியிலயே ஒண்ணா பொதச்சிருங்க”,என்று கதறிய போது உடைந்து ஓலமிட்டு அழுதார். “ஏ திருஇருதய ராசாவே! உமக்கு கண்ணில்லையா… என்ட பொன்னுமக வாழ்க்க இப்படி சீரழிஞ்சு சிந்தோலப்பட்டுப்போச்சே!”

அன்று நெடுநேரம் தகப்பனும் மகளும் கோவில் மண்ணில் கண்ணீர் துளிகள் உருள அழுது புலம்பிக் கொண்டு கிடந்தனர். அதன் பின் தேவாலயங்களுக்கு நான்ஸியை அழைத்துச் செல்வதை நிறுத்திவிட்டார் இருதயராஜன். இருப்பினும்,வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்தினார். மாற்று மதங்களிலும் தன் மகளை சுகப்படுத்துவதற்கான முயற்சிகளை, காதும் காதும் வைத்தது போல மேற்கொண்டு கொண்டுதான் இருந்தார். காயல்பட்டணத்திலிருந்து தொப்பி போட்ட சாச்சா வந்து புகை போட்டுச் செல்வது வாடிக்கையாகி போனது. கடைசி முயற்சியாக, கேரளத்திலிருந்து  மாந்திரீகனைக் வரவழைத்தார் இருதயராஜன். நான்ஸியை, தான் வரைந்த சக்கரத்தில் அமர்த்தி வசிய பூஜை செய்த பின் அவன் இருதயராஜனிடம் சொல்லிய விஷயத்தை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

“நின்ட மகளோட ஒற்றச் செருப்பு அவனோட நெஞ்சில் உண்டு. அது உள்ளிடத்தோளம் அவன் நின்ட மகள போகான் அனுமதிக்கில்லா”

அவன் சென்ற பிறகு நான்ஸியிடம் இது பற்றிக் கேட்டறிந்தவர் அசந்தே போனார்.

“ஆமா..அப்பா!அன்னிக்கி ஒத்தக்கால் செருப்போட தான் வீட்டுக்கு வந்தேன்!”

“இத நீ மொதயே சொல்லியிருந்திருக்கலாமே என்ட தங்கமே!”

இதன் பிறகுதான், இருதயராஜன் கல்லறையைத் தோண்டி அதனுள் புதைந்து கிடக்கும் தன் மகளின் செருப்பை எடுத்து வந்துவிட முடிவு செய்தார். அந்த கணமே அதைச் செய்து விட அவரது கை பரபரத்தது. ஆனாலும்,அவர் அமைதி காத்தார். அவ்வளவு எளிதாக ஒருவரின் மூடின கல்லறையை அனுமதியின்றி அவ்வூரில் யாராலும் தோண்டி விட இயலாது. கல்லறைத் தோட்டத்தை அவ்வூரார் சகல பந்தோபாஸ்துக்களுடன் பராமரித்து வருகின்றனர். சவ அடக்கம் முடிந்த அன்றே பளிங்குச் சிலுவை நாட்டி விட மாட்டார்கள். தற்காலிகமாக மரச்சிலுவை தான் அனைவருக்கும்…ஒரு வருடம் கழித்த பிறகே பளிங்கு சிலுவை நாட்டுவார்கள். இல்லாவிடில் பெட்டி மக்கி மேல்மட்ட மண் இறங்கும்போது பளிங்கு சரிந்து அனைத்தும் வீணாகி விடும். அந்த பளிங்கு சிலுவைகளின் நீள அகலங்கள் கூட பங்கு பாதிரியாரின் அனுமதிபெற்ற பிறகே முடிவு செய்யப்படும். கல் நாட்டுவதற்கே இத்தனை முஸ்தீபுகள் என்னும்போது கல்லறையைத் தோண்டி உள்ளில் புதைந்து கிடக்கும் தன் மகளின் செருப்பை எடுத்து வர வேண்டுமென்பது இருதயராஜனுக்கு கனத்த காரியமாகப் பட்டது. இதை யாரிடம் சொன்னாலும் விஷயம் பாழாகிவிடும். எனவே,தானே இதைச் செய்து விடுவது என்று முடிவு செய்தார் இருதய ராஜன்.

இதற்குள் நான்ஸியின் நிலைமை முன்னிலும் மோசமானது.ஒரு நாள், வீட்டில் முடிந்து வைத்திருந்த மீன் வலைகளையெல்லாம் ஒரு கத்திரிக்கோல் கொண்டு நறுக்கிப் போட்டு விட்டாள். அனைத்தும் அப்போதுதான் முடிந்து வைத்திருந்த பல ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள புதிய வலைகள்… மற்றொருநாள்,பண்டகசாலையில் அயல் மாநிலங்களுக்கு உயிருடன் ஏற்றுமதி செய்வதற்காக பெரிய தொட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வந்த சிங்கிகள் ஒரே இரவில் செத்து மிதந்தன. தொட்டியில் சுத்திகரிப்பு மோட்டார்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததுடன் தொட்டி நீரில் மண்ணெண்னையின் பிசுபிசுப்பு இருப்பதையும் பணியாள்கள் கண்டு சொன்னார்கள். பல ஆயிரம் பெறுமானம் கொண்ட சிங்கிகள் செத்து மிதப்பதைக் கண்டு மனம் வெதும்பிய இருதயராஜன் இதைச் செய்தது யாராக இருக்குமென்று மனதுக்குள் குமுறிக் கொண்டே கண்காணிப்பு காமெராவின் பதிவுகளை ஆராய்ந்த போது அதில் தனது மகள் நான்ஸிதான் இப்படிச் செய்வது  என்று கண்டதும் மேல்துண்டால் வாயை மூடிக் கொண்டு விம்ம ஆரம்பித்தார். பின்னர் எதையோ நினைத்துக்கொண்டவராய் உள்ளே மகளின் அறைக்கு சென்று பார்க்க, மகள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தார்.

அன்றிரவே கல்லறைத் தோட்டத்துக்கு புறப்பட்டு விட்டார் இருதயராஜன். இந்த விஷயத்துக்கு அவர் யாரையும் தன்னோடு கூட்டு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை…கல்லறைத் தோட்டத்தின் வாசல் தாழிடப்பட்டிருந்தது. தனது நெஞ்சு உயரத்துக்கு இருந்த கட்டை மதில் சுவரின் மீது தாவி ஏறினார் இருதயராஜன்..மூச்சு வாங்கியது அவருக்கு. ஒருகாலத்தில்,தனது இளம்வயதில், கடற்கரையில் கால்களை அகட்டி நின்று அலைகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வள்ளங்களை ஒற்றையாளாக வலித்து இழுத்த தன் கைகளை,தான் பாடுபட்டு சம்பாதித்த செல்வம் மென்மையாக்கி வைத்திருக்கிறதைக் கண்டு பெருமூச்சு விட்டார் இருதயராஜன்.

இருளில் அவருக்கு எதுவும் சரியாக புலப் படவில்லை. நிலவொளியில் குத்துமதிப்பாக நடந்து சென்று சந்தாகுரூஸின்  கல்லறையை நெருங்கினார். கையிலிருந்த கடப்பாரை கல்லறையில் மோதிய நொடியில்,. எங்கோ ஒரு மயில் அகோரமாக அலறியது. அதோடு,கடப்பாரையை  விட்டு விட்டு கண் மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தார் இருதய ராஜன்.

கட்டை மதில் சுவரை தாண்டிக் குதித்தவர் நிலை தடுமாறி கீழே விழப்போன நேரத்தில் தாங்கிப் பிடித்தது ஒரு வெள்ளுடை உருவம். பயத்தில் அவ்வுருவத்தின் மீதே அலறிச் சாய்ந்தார் இருதயராஜன்.

அன்று திருப்பலியின் முடிவில் பங்குத் தந்தை வாசித்த அறிக்கையை ஒட்டி பொது மக்களின் பகுதியில் பலவிதமாய் சலசலப்பு எழுந்தது.

“அது எப்புடி…காலம் காலமா நம்ம பாரம்பரியமா காத்துட்டு வர்ற நம்ம பூட்டன்,பூட்டி,அம்மை,சியான்மார் கல்லறைகளை எல்லாம் ஒரே நாள்ல இடிப்பாங்க? சாமிக்கி மர கிர கழண்டு போச்சுதாலே…”

பிராஞ்சியிடம் விவாதத்தை ஆரம்பித்தான் ஒருவன்.

“சாமி சொன்னத ஒழுங்கா கவனிக்காம பாதி பூசையில ஓட்டல் கடைக்கி டீ குடிக்க போன பயலாம் வாய் பேசறான் பாருலே!”

“சரி நீர்தான் சொல்லுமே… என்னத்துக்கு கல்லறைகள இடிக்காவளாம்?”

” கல்லறைய விரிச்சுக்கிட்டே போயி என்னத்துக்குல…இருக்க மனுசர் மக்க சீவிக்க இடமெல்லாம அல்லாடும்போது இம்புட்டு பெரிய பெரிய பளிங்குகளை அவனவன் பந்தாவுக்கு நட்டி வெச்சுக்கிட்டு மெப்புக்கு மாவிடிச்ச கததான்”

“பளிங்கு வைக்காம பின்ன… அதுதானவே மரியாத!”

“செத்த உடலுக்கு சிங்காரம் எதுக்குவே? இனி எல்லாருக்கும் ஒரே மாதிரியான மரச்சிலுவதான். எம் பாட்டன் குழி,என் அப்பன் குழின்னுல்லாம் இனி ஒரு பயலும் ஒரு குறிப்பிட்ட எடத்த  பட்டா போட்டுக்கிட முடியாது. அஞ்சு வருசஞ்சென்டு அந்த இடத்தில வேற ஆளை பொதைக்கலாம் பாத்துக்க. அஞ்சு வருசங்கறது பொதச்சது மக்குறதுக்கு எடுத்துக்குற டைம்!”

“நின்டு அழ ஒரு நெனப்புக்குக்கூட எதுவும் இருக்காதாவே “

“இருக்கும்போது கவனிக்காம விட்டுட்டு, செத்தப்புறம் போயி மால போட்டு மரியாத பண்ணி எதுக்குங்கறேன்? வேணும்னா,கல்லறையோட வெளிச்சுவர்ல படங்களை பொறிச்சு வெச்சுக்கிடலாம். அவ்வளவு தான்”

“அப்பம் இப்ப இருக்க எல்லா கல்லறையும் இடிச்சிருவாங்களா?”

“ஆமா…எல்லா கோட்டையும் அழிச்சுட்டு மொத இருந்து போட வேண்டியது தான்”

“ஆனாலும் இத என் மனசு ஏக்க மாட்டிக்கு மக்கா”

“இது ஒண்ணும் புது நடைமுற இல்லடே! கன்யாமரிலல்லாம் இதுபோல அஞ்சாறு வருஷம் முன்னுக்கே பண்ணிட்டாங்க!”

இருதயராஜன் கூப்பிய கையை இறக்கத்தோன்றாமல், பீடத்தில் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த பாதிரியார் ஆரோக்கியத்தை நன்றியுடன் நோக்கிக் கொண்டிருந்தார்.

அன்று மாலையே கல்லறைத் திடலை சமப்படுத்திச்சீரமைக்கும் வாகனங்கள் வந்து,பழைய கல்லறைகளை இடித்து சமப்படுத்தின. எஞ்சிய விதவிதமான பளிங்குகளும்,சிலுவைகளையும் வீணாக்காமல் புதிதாக கட்டுமானம் நிகழ்ந்து கொண்டிருந்த அவ்வூரின் தூண்டில்வளைவில் கொட்டும்படி ஆணையிட்டார் பாதிரியார் ஆரோக்கியம்.

நான்ஸிக்கு இப்போதெல்லாம் கடல் பார்த்து அமர நேரம் இருப்பதில்லை. கப்பலிலிருந்து திரும்பி விட்டிருந்த அவளது கணவன் கைநிறைய  சாக்கலேட்டுகளும், சென்ட்டு பாட்டில்களுமாக அவளைப் பார்க்க வந்திருந்தான். அவனுக்கு,அவளே தன் கையால் தேநீர் தயாரித்துத் தந்தாள். இம்முறை அவள் தயாரித்த தேநீர் உப்புக் கரிக்கவில்லை.

00

தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியன் பட்டணம் என்கிற கடலோர கிராமத்தைச் சார்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின்.அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்குகிற இவரது கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இவரின் முதல் கவிதைத்தொகுப்பு “தப்பரும்பு” வாசகசாலை பதிப்பகத்தின் வெளியீடாக, 2022- ஆம் ஆண்டு வெளியானது.இப்புத்தகம் SAR நினைவு இலக்கிய விருதைப்பெற்றது.இவரது இரண்டாவது புத்தகம் ” கெத்சமனி” என்கிற சிறுகதைத் தொகுப்பு ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் எழுத்து பிரசுரம் வெளியீடாக 2024 சென்னை புத்தகக் காட்சியில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *