1.சத்யாதித்தர் கனவு

 *****************************

சத்யாதித்தரின் உள்ளம் முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது. அவரது மதனாபுரி மாளிகை முழுவதும் விளக்குகள் எரிந்து மாளிகையைத் தாண்டியும் தெய்வீக ஒளியைக் கக்கிக் கொண்டு இருந்தன. இருந்தும் பலவிதமான யோசனைகளால் அவரது உடலும், மனமும் தளர்வடைந்து இருந்தன. மாளிகையின் மேல் பகுதியில் உள்ள உப்பரிகையில் நடந்துக்கொண்டு இருந்தார். வழக்கமான கம்பீரமான நடை கூட அன்று அயர்ச்சியால் சற்று தளர்வாக இருந்தது. 

“மதனாபுரி” 

மதனாபுரி பெயருக்கேற்றார் போல் இயற்கை நீர் வளங்களாலும், எழில் கொஞ்சும் வனங்கள் அடர்ந்த பகுதியாகவும் இருந்தது. எந்த நேரமும் மழையும், ஆறுகளும், நீரோடைகளும் தளும்பி வழிந்தன. அடர் கானகங்கள் நிறைந்த பகுதி என்பதால் மழை அடிக்கடி சாத்தியமாயிற்று. மதனாபுரி அஜயநகரப் பேரரசின் கீழ் வரும் சிற்றறரசாக இருந்தது. அதிகார மையங்கள் பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன். அதில் வருகிற ஓர் அடுக்கில் திறை செலுத்தும் சிற்றரசுத் தலைவராக சத்யாதித்தர் அதை ஆண்டுகொண்டு இருந்தார். சிற்றரசுத் தலைவராக இருந்த போதிலும் தனது நாட்டு மக்களிடையே நல்ல பெயரும், அவர்கள் தேவைகளைக் கேட்டு அறிந்து செயல்படுபவராகவும், பேரரசின் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்துபவராகவும், நல்ல விதமாக வரிகளைச் செலுத்திக் கொண்டு இருந்ததாலும் ஒருசேர மக்கள் மற்றும் பேரரசின் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கினார். 

அவருக்கு ஒரே வாரிசான இளவரசன் அஜயாதித்தன் பெயருக்கேற்ப வீர தீர பராக்கிரமங்களில் சிறந்து விளங்கினான். அவருடைய ஒரே கனவு அஜயாதித்தனை எப்படியும் பேரரசின் அரண்மனையில் ஒரு பெரிய பொறுப்பில் அமர்த்துவதாக இருந்தது. அதனால் சிறு வயதில் இருந்தே வாள் பயிற்சி, குதிரையேற்றம், மல்யுத்தம் போன்ற எல்லா விதமான கலைகளையும் கற்றுத்தேர்ச்சி பெறச்செய்து இருந்தார். தான் ஆளும் போதே அவனை அங்கே அனுப்பி விடவேண்டும் என்று ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டே இருந்தார். அதற்கு முன்னதாக அஜயாதித்தனுக்குத் திருமணம் செய்யத் திட்டமிட்டார். அஜயாதித்தனின் மனைவியாகப் போகிறவள் அனைத்துத் தகுதிகளும் கொண்ட இளவரசியாக இருக்க வேண்டுமென்பது அவரது விருப்பமாக இருந்தது. 

ஆட்சி முறை, அதன் ராஜ தந்திரங்கள், போர்ப் பயிற்சிகள் இவற்றில் சிறந்து விளங்கும் ஒரு பெண்தான் வேண்டுமென்று எண்ணினார். அப்போதுதான் அஜயாதித்தன் பேரரசின் வளர்ச்சிக்குக் கிளம்பிப் போகும் போதும், யுத்த சமயங்களில் இங்கே இல்லாத போதும் அவள் மதனாபுரியைத் திறம்பட நிர்வகிக்க முடியுமென்று நம்பினார்.  ஆனால் மதனாபுரி மக்களின் எண்ணமோ வேறாக இருந்தது. அவர்களுக்கு அஜயாதித்தன்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே பெரு விருப்பமாக இருந்தது. அவர் பேரரசின் கீழ் அவனை அனுப்பும் செய்தி எப்படியோ கசிந்து பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தவண்ணம் இருந்தது காதுகளில் செய்தியாக அவ்வப்போது விழுந்து கொண்டேதான் இருந்தது. 

வனப்பான பகுதி என்பதாலும், வளங்கள் கொழித்ததாலும், மதனாபுரியில் பெண் குடுத்தால் பேரரசின் கவன ஈர்ப்புக்குள் செல்லலாம் என்றும், அதன் மூலம் தங்கள் பகுதிகள் இன்னும் செழிப்படையலாம் என்றும், மதனாபுரி ராணியாகப் போனால் கம்பீரமாக வலம் வரலாமென்றும் பல சிற்றரசர்கள் அவரவர் தத்தம் ஆசையைக் கணக்கில் கொண்டு அஜயாதித்தனுக்குப் பெண் தர நீ நான் எனப் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். 

அஜயாதித்தனின் கட்டழகும், வசீகரமும், ஆளுமையும், மக்களிடையே கொண்ட உள்ளன்பும் மதனாபுரி மக்களைக் கட்டிப் போட்டன. சத்யாதித்தரை விட ஒரு மடங்கு அன்பு அவன் மீது கூடுதலாகி இறுதியில் அஜயாதித்தனுக்காக அவன் விஷயத்தில் அவர் எடுத்த முடிவால் சத்யாதித்தரையே கொஞ்சம் கசப்போடு பார்க்கத் துவங்கி இருந்தனர். 

2. வித்யாதினி வருகை

  ********************************

நெடு நெடுவென வளர்ந்த ஆறடி உயரம். எந்தப் பேரழகிகையும் கவர்ந்திழுத்துவிடும் துறுதுறுப்பான மயக்கும் காந்த விழிகள். நன்கு படர்ந்து திரட்சியான மார்பில் எஃகு கேடயத்தின் உறுதி தெரிந்தது. தொடர் மல்யுத்தப் பயிற்சிகளினால் கைகளில் கணுக்களும், மார்பிலிருந்து வயிறு வரை வரிக் கோடுகளும் அவன் அழகை மேலும் பறை சாற்றின. பிடரி வரையில் தொங்கும் சற்றே நீண்ட மயிர் காற்றிற்கு இசைவாக ஆடியது. ஆண்மை ஆகிருதியின் அடையாளமாக அடர்ந்த மீசை கன்னம் வரை நீண்டு கிடந்தது. தினவெடுத்த தோள்களில் திமிறிக்கொண்டு இருக்கும் வீரம், கழுத்தில் விதவிதமான காட்டுப் பூக்களின் மணம் கமழும் மாலைகள். எந்த நேரமும் இடுப்புக் கச்சையில் ஒட்டியிருக்கும் நீண்ட வாளில் இருந்து கிளம்பும் மின்னல் ஒளி அஜயாதித்தன் முகத்தில் தெறித்து மேலும் ஒளியைக் கூட்டியது. 

மதனாபுரியின் ஓர் அடர்ந்த வனப் பகுதி. நீரோடை அதிராமல் ஓடிக்கொண்டு இருந்தது. அதனடியில் கூழாங்கற்கள் பளபளவென மின்னிக்கொண்டு இருந்தன. நீரோடை இருபுறமும் செடிகள் தளதளவென வளர்ந்து பூக்களால் நறுமணம் நிரப்பியபடி அந்த இடத்தை பூலோக சொர்க்கமாக மாற்றிக்கொண்டு இருந்தன. 

ஆதவன் தன் இளஞ்சிவப்புக் கதிர்களால் பூமியைக் கலவி கொள்ளும் மாலை நேரம். இத்தனை ரம்மியமான சூழல் இருந்தும் தெளிந்த நீரோடை அருகே கலங்கிய உள்ளத்துடன் அஜயாதித்தன் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவன் மனம் இன்னதென்று புரியாத  கவலைகளால் சூழப்பட்டிருந்தது. தான் செய்வது சரியா, தவறா எல்லாம் சரியாகிவிடுமா என்று பலவாறான குழப்பத்தில் அங்கிருந்த மரத்தினடியே சாய்ந்து பழைய நினைவுகளில் மூழ்கலானான். 

பேரரசுக்குக் கட்டுப்படாத பகுதியின் ஒரு சிற்றரசில் உள்ள நகரின் பெரிய செல்வந்தர் குடும்பத்துக்கு அத்தை திருமணம் செய்து தரப்பட்டிருந்தாள். சுல்தான்கள் படையெடுப்பு நிகழ்ந்த போது சிதறி சின்னாபின்னமான குடும்பங்களில் அத்தை குடும்பமும் ஒன்றானது. வழிநெடுக கண்ட அத்தனையும் சூறையாடப்பட்டன.

அந்தக் களேபரங்களில் அத்தை கணவன் இறந்துவிட அத்தை மட்டும் எப்படியோ வீட்டிலிருந்த ஆட்களது உதவியால் தப்பிப் பிழைத்துத் தோணியேறி மதனாபுரிக்குள் வந்து விட்டாள். எப்படியும் மதனாபுரிக்குள் நுழைந்து அண்ணன் மாளிகைக்கு வந்து விட்டால் வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்பது அவள் எண்ணம். செல்வச் செழிப்பில் வாழ்ந்த அத்தை பல காலம் குழந்தை இன்றி அப்போது தான் ஒரு கருவுற்றிருந்தாள். பிள்ளையை வயிற்றில் சுமந்துகொண்டு ஓடி வந்து அண்ணன் மாளிகையை அடைந்த போது பரதேசக் கோலத்தில் இருந்தாள்.  

அப்படியோர் அதிர்ச்சியை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் முறையாக ஒரு சின்ன எரிச்சல் தோன்றியது சத்யாதித்தருக்கு. அதற்குக் காரணமும் இருந்தது. அவளுக்குப் புகலிடம் தந்து இச்சூழலில் வைத்துக்கொண்டால் ஆண் மகவாகப் பிறந்து அஜயாதித்தனைப் பேரரசுக்கு அனுப்பும் நேரம் எங்கே இங்கு அவனுக்குப் போட்டியாக உருவெடுத்ததுவிட்டால் என்ன செய்வது என்று உள்ளூர யோசித்தார். ஆனால் வழியின்றி ஊருக்காக, நாட்டுக்காக அவளை ஏற்றுக் கொண்டார். 

வித்யாதினிக்கு அண்ணனின் இந்தப் பாராமுகம் மனதுக்குச் சங்கடத்தைத் தந்தாலும் அவளுக்கு வேறு வழி தெரியாததால் எங்கேயோ செல்வதற்கு இங்கேயே இருந்து கொள்வது எவ்வளவோ மேல் என்று அவள் எதையும் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை. குழந்தைப் பேறுகாலம் நெருங்கிய நிலையில் இந்த அவலங்கள் நடந்ததால் கணவன், குடும்பம் நினைவுகள் வந்து தனிமையில் அழுதாலும், அவள் எப்படியாவது நல்ல முறையில் மகவைப் பெற்றெடுக்க வேண்டும் என்கிற உந்துதலுக்குத்தானே தள்ளப்பட்டு இருந்தாள். 

3.நிலாவதனி பிறப்பு

 *****************************

அஜயாதித்தனின் குதிரை அவனருகே வந்து அவன் கன்னங்களை வாஞ்சையுடன் நாவால் நக்கியது. அவன் ஆழ்ந்த சிந்தனையை அது கலைத்தாலும் அவன் இன்னும் அதற்குள் செல்ல விரும்பியதால் அதை அதன் பாஷையில் நகர்ந்து செல்லச் சொல்லிவிட்டு மீண்டும் மரங்களின் பாதங்களில் தஞ்சமடைந்து கண்களை மூடிக் கொண்டான். 

மகப்பேறு நாள் வித்யாதினிக்கு நெருங்க நெருங்க ஒவ்வொருவர் மனங்களும் ஒவ்வொரு விதமாக அசை போட்டுத் தின்று கொண்டிருந்தன உணர்வுகளை. திடீரென பூதம் முளைத்த கதையாக வந்த வித்யாதினி என்ன மகவைப் பெற்றெடுப்பாள் என்று வெளியே சொல்ல முடியாத சத்யாதித்தரும், ஏழு வயதே நிரம்பித் தாயை இழந்து வேறு துணையற்ற தனக்கு பொம்மை போல விளையாட ஒரு குழந்தை துணைக்கு வரப்போகும் கனவுகளுடன் அஜயாதித்தனும், அனைத்தையும் தொலைத்துவிட்டு இந்த அடைக்கல வாழ்வில் இங்கே இருப்பவர்களுக்குத் தொந்தரவாகக் குழந்தையுடன் மீதி வாழ்நாளை எப்படிக் கழிப்பது என்று வித்யாதினியும் அவரவர் மனம் போன போக்கில் சிந்தித்துக்கொண்டு இருந்தார்கள். 

அன்று மாலை மாளிகையின் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது திடீரென வித்யாதினிக்குக் கண்களை இருட்டியது. சற்று நேரத்தில் கால்கள் பின்ன இது பிரசவ காலத்தின் அறிகுறியோ என்ற சந்தேகம் தட்ட மெல்ல நடந்து வந்து தன் அறையில் இருக்கும் தேக்குக் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். 

அவளின் முனகல் சத்தம் கேட்டுத் தாதிப் பெண்கள் வந்து விட்டார்கள்.  அவர்களுக்குப் புரிந்து விட்டது. இது பிரசவ வலிதான். தலைமை மருத்துவச்சியை அழைத்து வரச் சொன்னாள் ஒருத்தி. வித்யாதினி அறையையேப் பிரசவ அறையாக மாற்றினார்கள். சத்யாதித்தருக்குத் தகவலை சொல்லச் சொன்னார்கள். இரண்டுப் பெண்கள் வேக வேகமாக சத்யாதித்தர் இருக்கும் மாளிகையை அடைந்து தகவலைச் சொன்ன போது அஜயாதித்தனும் அங்கிருந்தான். 

“ம், ஆகட்டும் விரைவாக நல்ல செய்தி சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு மனதுக்குள் பல எண்ணங்கள் அலைக்கழிக்க அதீத அமைதியில் திளைத்தார் சத்யாதித்தர். அஜயாதித்தனுக்கு உள்ளம் இருப்புக் கொள்ளவில்லை. மனம் இதைக் கேட்டதில் இருந்தே குதிக்க ஆரம்பித்தது. அதற்குள் அந்தக் குழந்தையுடன் அவன் விளையாடுவது போல, சிரிப்பது போல, பொம்மை தராமல் கோபிப்பது போல என்று விதவிதமாகக் கற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான். 

வித்யாதினிக்கு அடி வயிற்றில் பெரிய பந்து ஒன்று உள்நுழைந்து உருண்டு உருண்டு தீவிரமாக உதைப்பது போல உணர்ந்தாள். அவளுக்குத் திடீரென கணவன் நினைவு வந்து கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.

மருத்துவச்சி அருகே வந்து கட்டிலிலல் படுக்கச் சொன்னாள். பந்து இன்னும் வேகமாக உதைத்து கீழிறங்கி வருவது போல உணர்வு வரக் கண்கள் செருகத் தான் எங்கேயோ யாருமற்ற ஓர் உலகத்தின் தனி ஜீவனாக விடப்பட்ட துக்கம் தொண்டையை அடைக்க மருத்துவச்சி வந்து தலையைக் கோதினாள். 

“அம்மா, கவலை வேண்டாம். தங்கள் குழந்தை பிறந்த பிறகு அய்யா மிகவும் மகிழ்ச்சி அடைவார். அஜயாதித்தனும் தங்கள் குழந்தையும் சேர்ந்தே இருப்பார்கள் எப்போதும்” என்று கூறினாள். அதைக் கேட்டவுடன் அவளுக்கு வறட்டுப் புன்னகையுடன் நாவும் வறள மீண்டும் வேகமாக பந்து உணர்வு உதைக்க கண்கள் செருக ஓவென்று உயிரின் மொத்த சக்தியும் திரட்டிக் கத்தினாள். 

சிசுவிற்கான எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு சத்யாதித்தரும், அஜயாதித்தனும் வெளியே நின்று கொண்டிருக்க சேடிப்பெண் வேகமாக ஓடி வந்து, “வித்யாதினி அம்மாவுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது” என்றாள். 

சத்யாதித்தர் நீண்ட பெருமூச்சு விட்டார். அஜயாதித்தன் அவர் வருகைக்குக்  காத்திராது வேகமாக உள்ளே ஓடினான். 

“எங்கே,எனக்குக் குழந்தையைக் காட்டுங்கள்? “என்று வினவினான். 

மருத்துவச்சி, அழகிய கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி ஆட்டும் பொம்மை போல் ஒரு குழந்தையை அவன் கண்கள் முன் கொண்டு வந்து நீட்டினாள். 

அத்தை வித்யாதினியோ மெல்லமாகக் கண் திறந்து “தங்கங்களே” என்று அழைத்தவுடன் குழந்தையையும், அஜயாதித்தனையும் மருத்துவச்சி அவளருகே அழைத்து வந்தாள். 

‘அஜயா, இந்தப் பாப்பா உனக்குப் பிடித்து இருக்கிறதா?’

‘ஆமாம், அத்தை நான் பெயர் கூட யோசித்து விட்டேன்.’

‘அடடா! அதற்குள் யோசித்து விட்டாயா? எங்கே, சொல். பார்க்கலாம்’ என்றாள்.

அவன் அவள் முகத்தைப் பார்த்தான். தாயின்றி நிலவொளியில் அமர்ந்து இருக்கும் போது தன் மீது வாஞ்சையுடன் பரவும் வெளிச்சம் போலத் தோன்றியது. 

‘பெயரா அத்தை! “நிலாவதனி” நன்றாக இருக்கிறதா?’ என்றான். 

மரத்தின் அடியில் இருந்த அஜயாதித்தன் கண்களில் பழைய நினைவுகளால் உள்ளம் கனக்கத் தன் மார்பில் ஏதோ முகம் படருவது போலத் தோன்ற விழித்தவன், 

‘ஏய், நீயா? நிலா’ என்று அவளை இழுத்து மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டான்.  

4.மாயாஜாலம்

 **********************

‘நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படி என்ன சிந்தனையோ ஐயாவிற்கு?’

தேவலோக தேவதைகளை ஒத்த அழகும், குழந்தையின் கபடமற்ற சிரிப்போடும், வாளிப்பான உடல் வாகும், மார்போடு இழுத்துக் கட்டிய கச்சையோடும் மற்ற அங்கங்கள் தகதகவென ஜொலிக்க அவன் பிடியில் இருந்து விலகி வெட்குவது போல நடித்தாள் நிலா. 

‘உனக்கு ஒன்று தெரியுமா நிலா?!’ நான் இங்கே அமர்ந்து இருக்கையில் ஒரு மாயாஜாலம் கண்டேன். 

‘அப்படியா, என்ன அது?’ ஆர்வமானாள்.

‘இந்த நீரோடையில் காலை நனைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளேன். உனக்கே தெரியும்’ என்றான். 

‘நீங்கள் என்னிடம் ஏதோ விளையாடுவது போல் தெரிகிறது. இப்படி எல்லாம் சொல்லி என்னைத் திசை திருப்பப் பார்க்கிறீர்கள்.’ வெட்கத்தில் அவள் கண்களை கீழ் நோக்கி பார்த்தபடி சிணுங்கினாள்.

‘அட, இங்கே வா, என் அருகில் அமர்ந்துகொள். கண்டிப்பாக உனக்குத் தெரியும்.’ என்று சொல்லி அவளை இழுத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்டான். 

‘ஆஹா, பாதங்களில் தண்ணீர் பட்டவுடன் எவ்வளவு குளுமையாக இருக்கிறது. அப்படியே கண்ணயர வேண்டும் போலுள்ளது.’

‘அடிப்பாதகி! உனக்கு என்னருகில் இருக்கும் போது கண்ணயர வேண்டும் போல் தோன்றுகிறதா?’

‘தங்கள் தோள்களில் சாய்ந்து உறங்குவது வரம் அல்லவா தேவ!’

‘ஓ,நீ அப்படி வருகிறாயா?’

‘சரி, இன்னும் கொஞ்சம் அருகே வாயேன்.’

‘ம்ஹூம், மாட்டேன் நீங்கள் ஏதாவது சொல்லி என்னைக் குழப்பம் செய்வீர்கள்.’

‘ஓஹோ!அப்படியா சேதி, நானே வந்து விடுகிறேன்’ என்று சொல்லி இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டான். 

அவளுக்கு ஒரு வித மயக்கமாக இருந்தது. உண்மையில் மாயாஜாலம் போலத் தான் இருந்தது நடந்த, நடக்கிற அனைத்தும். 

சட்டென்று அவள் நினைவை மீட்டவன் ‘சரி,கண்களை மூடிக் கொள்.. ஒரு மாயாஜாலம் தெரியும் என்றேனே.!’

‘எனக்கு நம்பிக்கை இல்லை. சரி,நீங்கள் சொல்வதால் கண்களை மூடுகிறேன்’ என்று விருப்பம் அற்றவள் போல நடித்தபடிக் கண்களை மூடிக் கொண்டாள். 

தன் இடப்புறம் தழைவாக அமர்ந்து கிடந்தவளிடம் அவள் கொங்கைகள் மீது படர்ந்த படி அவளின் இடது கைகளை நன்றாக அழுத்தமாகத் தனது வலது கைகளால் இறுக்கமாகக் கோர்த்துக் கொண்டான். 

‘நிலா!’

‘ம்’

அவள் செவ்வரியோடிய இதழ்களில் அழுந்த முத்தமிட்டான். அவளின் மாயாஜால உலகம் இலேசாகத் திறக்க ஆரம்பித்தது. 

‘நிலா, இந்தக் கைகளின் ஸ்பரிசம் தெரிகிறதா?’

‘தெரிகிறது தேவ!’

‘நாம் இருவரும் மாளிகைத் தோட்டத்தில் இதே கைகளைக் கோர்த்துக் கொண்டு விளையாடுவது உனக்குத் தெரிகிறதா?’

‘ஆம், தேவ!’

இப்போது அவள் கழுத்தை நெருங்கி இருந்தன அவன் முரட்டு உதடுகள். அவன் மூச்சுக் காற்று அவள் கழுத்தில் சூடாக இறங்கிக்கொண்டு இருந்தது. 

‘ஆனால் நீங்கள் அப்போது இப்படி இல்லை’ கண்களை மூடிக் கொண்டே பேசினாள். 

‘நீ கூடத்தான் அப்போது இருந்தது போல் இப்போது இல்லை… இப்படி பளிங்குச் சிலையாக வளர்ந்து என்னை ஹிம்சிக்கிறாய்!.’

‘ச்சீ, வரவர உங்கள் பேச்சு மிகவும் மாறிவிட்டது தேவ.’

‘ஏன், இதெல்லாம் உனக்குப்  பிடிக்கவில்லையா நிலா?’

‘அப்படி எல்லாம் இல்லை”என்று இழுத்துக்கொண்டே வாகாகக் கழுத்தைத் தந்தாள் முத்தமிட.’

‘நீயும், நானும் மாளிகைத் தோட்டத்தில் எப்படி எல்லாம் விளையாடினோம் என்று யோசித்தால் சிரிப்புதான் வருகிறது.’

உண்மையில் இப்போது அவள் கண்கள் மூடிப் பழைய நினைவுகளின் மாயாஜாலக் கதவுகளைத் திறந்து விட்டன. 

5. பேரரசின் ஓலை

  **************************

உப்பரிகையில் இருள் கவ்விய மனதுடன் நடந்து  கொண்டிருந்த சத்யாதித்தர் கீழே மாளிகையின் முகப்பில் ஒரு வீரன் குதிரையில் இருந்து வந்து இறங்குவதைக் கண்டார். அவன் தன்னைப் பார்க்கத் தான் வருகிறான் என்பது புரிந்து அங்கே இருந்த காவலாளிகளிடம் அனுமதிக்கச் சொன்னார். 

அவன் குதிரை புழுதி பறக்க மதனாபுரி மாளிகை முன் வந்து சீறியபடி நின்றது.  என்னவாக இருக்கும்.. எதற்கு இவன் வருகிறான் என்ற குழப்பங்கள் தோன்றிய படி அவர் நின்றிருக்க அவன் விறுவிறுவென மாளிகையின் உப்பரிகையை அடைந்து வணங்கி நின்றான். 

‘மேன்மை தாங்கிய அஜயநகரப் பேரரசின் நன்மதிப்பைப் பெற்றவரும், மதனாபுரி அரசின் சிற்றரசருமான சத்யாதித்தருக்கு வணக்கம்!’

‘சொல்லுப்பா,நீ யார்? என்ன செய்தி? எங்கே இருந்து வருகிறாய்?’ படபடப்பு நீங்காமல் சத்யாதித்தர் கேள்விகளை அடுக்கினார்.

‘நான், நிஜந்தன்‌.’’

‘அஜயநகரப் பேரரசின் சிறப்பு ஒற்றன். மிக முக்கியமான, நம்பிக்கையான செய்திகளை என்னிடம்தான் பேரரசர் கொடுத்து அனுப்புவார்’ நான் சிறப்பு ஒற்றன் என்பது இங்கே இருக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறி அவரிடம் ஓலையைப் பவ்யமாக நீட்டினான். இதைத் தங்களிடம் சேர்க்கச் சொல்லி பேரரசின் உத்தரவு. வருகிறேன் சிற்றரசர் சத்யாதித்தரே! என்று தலைவணங்கிக் காற்றில் கலப்பது போல விறுவிறுப்பாக இறங்கி குதிரையேறிப் பறந்தான்.

குழப்பம், கவலை, பயம் என்று இனம் புரியாத உணர்வுகள் அவரை ஆட்டிப் படைக்க வேகவேகமாக மரக்குழலில் இருந்த ஓலையை விரித்து வெளியே எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். 

‘வணக்கம், சத்யாதித்தரே.!’

‘மாட்சிமை பொருந்திய அஜயநகரப் பேரரசின் அரசனான எட்டாம் தேவசிம்ம கஜராயர் எழுதுவது.!’

‘தாங்கள் நலமா!’

அஜயநகரப் பேரரசின் கீழ் இருக்கும் அனைத்துச் சிற்றரசுகளும் நலமோடுதான் இருக்கும் என்று நம்புகிறேன். மதனாபுரியின் மக்கள் உங்கள்ஆட்சியில் மிகவும் சந்தோஷம் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மதனாபுரியில் இருந்து அரசுச் செயல்பாடுகளுக்குத் தேவையான அத்தனை வரிகளும் தங்கு தடையின்றி வருவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவை அனைத்தும் எப்போதும் போல மக்களின் நன்மைக்குப் பயன்படுத்தப்படும். மதனாபுரியின் செல்வச்செழிப்பை, இயற்கை அழகுகளைக் காண நான் மீண்டும் ஒருமுறை அங்கே விஜயம் செய்ய உவகை கொள்கிறேன். அதற்கு முன்னதாக இன்னும் மூன்று திங்கள் கழித்து நம் பேரரசை விரிவுபடுத்தும் திட்டங்கள், அந்நிய சக்திகளின் படையெடுப்புகளை எப்படி முறியடிப்பது என்பது குறித்தான ஆலோசனைகளென நம் சிற்றரசர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் மந்திராலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தத்திட்டமிட்டு இருக்கிறேன். தங்கள் மகன் அஜயாதித்தனைப் பற்றி நீங்கள் சொல்லியும், மற்றவர்கள் வாயாலும் நான் நிறைய முறை கேள்விப்பட்டு இருக்கிறேன். அவனைப் போன்ற துடிப்பு மிகுந்த இளைஞர்கள் நிறைந்த சபை நமக்கு எப்போதும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தரக் கூடியது. எனவே அந்த மந்திராலோசனைக் கூட்டத்தை நடத்தும், சிற்றரசர்களை ஒன்றாக இணைத்து கவனிக்கும் பொறுப்பை அவனுக்குத் தரலாம் என்பது எனது எண்ணமாக இருக்கிறது.அதனை அவன் வழிநடத்தும் பாங்குகளை வைத்து அவனுக்கு அரசவையின் முக்கியப் பதவியை வழங்கும் எண்ணத்தில் இருக்கிறேன். தங்களுக்கும் இந்த ஆசை உண்டு என்பது என் காதுகளை எட்டியதால் இந்த வாய்ப்பை வழங்குகிறேன். அது குறித்து ஆலோசனை செய்ய தங்கள் மகனைப் பேரரசின் தலைமை அரண்மனைக்கு அனுப்பவும். 

அன்போடு பேரரசர். 

படித்து முடித்தவுடன் மயக்கம் வந்து விடும் போல இருந்தது சத்யாதித்தருக்கு. அடடா, தன் உள்ளக்கிடக்கையைப் புரிந்து எப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான மகிழ்ச்சியான செய்தியை அனுப்பி இருக்கிறார் பேரரசர். ஆனால் அவருக்கு அதை அனுபவிக்க முடியாமல் எரிச்சல்,கோபம், ஆத்திரம் என்று ஒன்று சேர  உப்பரிகையை விட்டுக் கீழிறங்கி அந்தப்புரம் நோக்கிச் சென்றார் சத்யாதித்தர். 

6. நிலாவதனி சத்தியம்

  *********************************

நிலாவதனியின் கண்களில் மாயாஜாலக் கதவுகள் ஒவ்வொரு அடுக்குகளாகத் திறந்துச் சென்று மாளிகைத் தோட்டத்தில் நடந்தவற்றை எல்லாம் அசை போட ஆரம்பித்தன. 

மாளிகையின் வலப்புறத்தில் நீண்டு பரந்து கிடந்த சிறு வனம் போல காட்சி தரும் தோட்டப் பகுதி. பவள மல்லி, முல்லை, மல்லி, கொன்றை, மகிழம்பூ என்று வகைவகையான பூக்கள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டு இருந்தன. 

தன் தாய் இறந்த பிறகு அங்கே செல்வதையே தவிர்த்து இருந்தான் அஜயாதித்தன். அத்தை வந்த பிறகு அத்தையுடன் எப்போதும் கதைகள் கேட்டு தூங்க வைக்கச்சொல்வான். நிலாவதனி பிறந்த பிறகு அத்தையால் கதைகள் சொல்லித் தூங்க வைக்க முடியவில்லை என்று அவனுக்குக் கஷ்டமாகிற்று. அதற்குப் பதிலாக நிலாவதனியின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்து அவளுடன் அதிகமாக விளையாடவும், விளையாட்டுக் காண்பிக்கவும் தொடங்கி இருந்தான் அஜயாதித்தன். அத்தையும் இரு குழந்தைகளையும் தன் குழந்தைகளாகவே பாவித்து சோறூட்டிக் கதைகள் சொல்லி மாலை வேளைகளில் தோட்டத்திற்கு அழைத்துச் செல்வாள்.

ஆண் மகவு இல்லை என்கிற சந்தோஷத்தில் சத்யாதித்தர் தன் அரசப் பணிகளில் பழைய படி கவனம் செலுத்தத் துவங்கி இருந்தார். 

குழந்தைகள் இருவரும் விடுவடுவெனவளர்ந்தார்கள். அஜயாதித்தனுக்கு மாளிகையிலேயே ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு கல்வி கற்க ஏற்பாடு செய்து இருந்தார். அவனுக்குத் தேவையான போர்ப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பதின்மத்தின் தொடக்கத்தில் இருந்தான் அஜயன். காலை வேளைகளில் பயிற்சிகள் முடிந்த பிறகு மாலையில் நிலாவதனி வராத நாட்களில் கூடத் தோட்டத்தில் சென்று உலாவுவது வழக்கம் ஆயிற்று. 

அப்படி ஒரு நாள் மாலையில் தனியே அமர்ந்து இருக்கும் போது பின்னால் இருந்து இரண்டு கைகள் திடீரெனத் தன் கண்களை மூட யார் என்று வினவிக்கொண்டே கைகளைத் தொடுகையில் கைகளால் மூடியது நிலாவதனி என்று புரிந்து கொண்டான். 

‘ஏய், நிலா என்ன செய்கிறாய்?’ கைகளை பற்றியபடி குதூகலமாக கேட்டான்.

‘அஜயா, நான் நிலா என்று எப்படித் தெரிந்தது உனக்கு?’

‘ஏய், உன்னைத் தவிர யார் இருக்கிறார்கள் இங்கு! இது பெரிய கண்டுபிடிப்பு பார்.!’

‘அஜயா அம்மாவுக்குச் சில நாட்களாக உடல் முடிவதில்லை. அதனால்தான் நம் இருவரையும் இங்கே அழைத்து வருவதில்லை. அதுதான் உனக்குக் கோபமா?’ என்றாள் மெதுவாக.

அப்படி எல்லாம் இல்லை விடு என்றான் சற்றே எரிச்சலாக அவர்கள் வராத கோபத்தில். 

‘ம்ம், உனக்கு நான் ஒன்றுகொண்டு வந்து இருக்கிறேன் என்னவென்று கேட்கமாட்டாயா?’

‘சொல், எனக்காகவா அது என்ன நிலா?’

‘நீ தான் எல்லாப் பயிற்சிகளும் பெறுகிறாயே! உனக்குக் குதிரைப் பயிற்சி கூட சொல்லித் தருகிறார்களாமே. அம்மா ஊரில் இருந்து வரும் போது ஒரே ஒரு ஒற்றைக்கொம்புக் குட்டிக்குதிரை பொம்மை எடுத்து வந்தாளாம். இது காற்றில் பறக்குமாம்.எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் எடுத்து வந்து விட்டேன்.’

‘இங்கே பார்!! இதில் ஏற்றி என்னை இந்தத் தோட்டம் முழுவதிலும் சுற்றிக் காண்பிக்கிறாயா?’ கண்கள் மலரச் சிரித்தாள். 

அஜயாதித்தன் அவள் காண்பித்த பொம்மையைப் பார்த்துக் கடகடவென்று சிரித்தான். 

‘நான் பயிற்சி பெறுவது நிஜக்குதிரை நிலா!!’ என்றவுடன் அவள் முகம் சட்டென்று சுருங்கியது. அவன் சிரித்தது அவளுக்குக் கோபமாக இருந்தது. 

‘சரி, உனக்கு வேண்டாம் என்றால் விடு. நான் இதை அம்மாப் பெட்டியில் வைத்து விடுகிறேன். நீ, சுற்றிக் காண்பிக்கவும் வேண்டாம்’ என்று பழிப்புக் காட்டினாள்.

‘அடடா, அதற்குக் கோபமா, நான் வேறு ஏதோ நினைவில் இருந்தேன்.. நீ பொம்மைக் குதிரையைக் காண்பித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது.’

‘என்ன யோசனை இளவரசர் அஜயனுக்கு?’

‘அம்மா நினைவு வந்துவிட்டது நிலா’ அவன் முகம் சட்டென்று மாறியது கண்டு அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவனைப் பெரிய மனுஷி போல் சமாதானம் செய்தாள். 

‘அஜயா, மேலே பாரேன் அம்மா நட்சத்திரமாக நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்’ என்று வானத்தைக் காட்டினாள்.

‘எனக்கு அம்மா தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் போலத் தோன்றியது நிலா வேறொன்றும் இல்லை’

‘அடடா, இதானா சேதி என் தோளில் சாய்ந்து கொள். சாய்ந்து கொண்டே மேலே பார்.அம்மா தெரிவாள்’ சொல்லிக் கொண்டே அருகில் நெருங்கி வந்து அவனைச் சாய்த்துக்கொண்டாள். 

‘நிலா!’

‘ம்’

‘இதே போல எப்போதும் என் கூடவே இருப்பாயா?’

‘ஏன், இருப்பேனே?அதனால் என்ன?’

‘நன்கு வளர்ந்து பெரிய பிள்ளை ஆனால் கூட?’

‘அட,என்ன ஆயிற்று அஜயனுக்கு இன்று?’

‘அம்மாவினைப் போல விட்டுவிட்டுப் போய் விடுவாயா நிலா?’

‘என்ன அஜயா,நீ எப்போதும் இப்படிப் பேசமாட்டாயே?’

‘சொல்!!’

‘யார் என்ன சொன்னாலும் நான் உன்னை விட்டுப் போகமாட்டேன். இது நட்சத்திர அம்மா மேல் சத்தியம்.’ கைகளை வான் நோக்கிக் காண்பித்தாள். 

அஜயனுக்கு அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அன்று இந்த உலகத்திலேயே அவனுக்கு மிகவும் பிடித்தவளாக மாறி இருந்தாள் நிலா. 

நிலா,மேலே இருக்கும் நிலவைப் பார்த்தாயா! இது போன்ற ஒரு பிரகாசம் தான் அன்றும் உனக்கு இருந்தது அதனால் தான் உனக்கு “நிலாவதனி” என்று பெயர் வைத்தேன் சோகம் மறந்து குதூகலமானான் அஜயன். 

‘தேவ!’ நெடுநேரமானது போல் அவளுக்குத் தோன்ற

‘ம்’

‘என்ன செய்கிறீர்கள்??’

‘உன் தோள்களில் சாய்ந்து கொண்டிருக்கிறேன் நிலா?’

7.சத்யாதித்தர் கோபம

 *******************************

உப்பரிகையில் இருந்து இறங்கி வந்தவர் நேரே அந்தப்புரம் சென்றார். தாதிப் பெண்கள் அனைவரையும் வெளியே செல்லுங்கள் என்று ஆணையிட்டார். 

“வித்யாதினி” என்று ஆக்ரோஷமான குரலில் அழைத்தார். 

அவள் சர்வமும் ஒடுங்கியவளாக அவர் முன் வந்து நின்றாள். ‘பார்,நன்றாகப் பார் இந்த ஓலையைப் படி’ என்று தூக்கி அவள் முகத்தினை நோக்கி வீசினார். 

‘அவளால் என்ன செய்ய முடியும்?’ அவளுக்கு இருவரும் குழந்தைகள். தனக்கோ, தன் மகளுக்கோ எந்தத் தகுதிகளும் இல்லை சொந்தம் கொண்டாட என்று புரிந்து இருந்தாலும் விதியை யார் வெல்ல முடியும்!.’ 

ஆனால் அவள்தான் இதற்கெல்லாம் மூலகர்த்தா என்பது போல அவர் கடுகடுத்த முகத்துடன் இருந்தார்.

‘அன்று வேறு கதியற்று நீ வந்து நின்ற போதே உன்னை விரட்டி இருக்க வேண்டும்.கூடப் பிறந்தவளை விரட்டிய பாவம் நேர வேண்டாம் என்று இங்கே வைத்தது தவறாகப் போயிற்று’

படபடவெனப் பொரிந்தார். மனித மனம் பதவிகளுக்காக, கனவுகளுக்காக தன் உறவுகளைக் கூட எப்படிப் பேச வைக்கிறது என்று யோசித்த வித்யாதினி அவர் பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தாள். 

அபலைகளுக்கு, அண்டி இருப்பவர்களுக்கு வெற்று ரோஷம் வந்து என்ன செய்வது? எங்கே செல்வது? வேறு வழியில்லையே, கேட்டுக் கொண்டு தானே நிற்க வேண்டும். அஜயனும்,நிலாவும் இப்படிப் பழகுவார்கள் என்று அவளும் கூட யோசிக்கவில்லையே. நாம் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைக்கிறதை யாரால் தடுக்க முடியும். எப்போதாவது அஜயனையும், நிலாவையும் மனக்கண்ணில் சேர்த்து வைத்துப் பார்த்தால் கூட அந்த யோசனையை உடனே அழித்து விடுவாள். அப்படிப்பட்டவளைப் பார்த்து அவர் கத்தும் போது தான் அவளுக்குப் படையெடுப்பின் சீரழிவில் தானும் இறந்திருக்கலாம் போலத் தோன்றியது. 

‘நான் எப்படிப்பட்ட இளவரசியைத் தேடுகிறேன், அது எதற்காக, என் கனவு என்ன எல்லாம் உனக்குத் தெரியும் தானே? இருந்தும் அவர்களுக்குப் புத்தி சொல்லாமல் நீயும் நாடகம் ஆடியிருக்கிறாய், கூடவே இருந்து துரோகம் செய்து இருக்கிறாய்?’ சுள்ளென்று வந்து விழுந்தன வார்த்தைகள் அவரிடம் இருந்து. 

‘அய்யோ, நான் அப்படி நினைத்து இருப்பேனா? ஏன் இப்படிப் பழிசுமத்துகிறீர் அண்ணா?’

‘ச்சீ,அந்த வார்த்தையைச் சொல்லாதே இனிமேல்.’

‘அன்னையற்ற குழந்தை அவன். இரு குழந்தைகளையும் ஒன்று போலல்லவா வளர்த்தேன்.’

‘நான் உங்கள் கனவுக்குத் தொந்தரவாக இருப்பேனா?’

‘ஓ, அன்னையில்லை என்று அவனுக்கு. அதனால் அன்பு செலுத்திப் பிச்சை போட்டேன் என்கிறாயா?’

‘அய்யோ,தெய்வமே என்ன சோதனை? நான் சொல்வது ஒன்று நீங்கள் புரிவது ஒன்றாக இருக்கிறது. ஏன் இப்படி சோதிக்கிறாய் கடவுளே?’

‘அம்மாவும்,மகளும் சேர்ந்து நாடகமாடி அஜயன் மனதில் விஷம் ஏற்றி இருக்கிறீர்கள்’ அவருக்குப் பேரரசரின் கடிதம் கண்ட ஆத்திரத்தில் மீண்டும் மீண்டும் சூடான வார்த்தைகளை வீசினார். 

‘வார்த்தைகள் திரும்பப் பெற முடியாதவை அண்ணா’ இனி நான் எங்கேயாவது போய் வேலை செய்தேனும் பிழைத்துக் கொள்கிறேன். அவர்கள் செய்த காரியத்துக்கு மீண்டும் மீண்டும் தாங்கள் பழி சுமத்துவது வீணென்று உங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை.’ பொரிந்து தள்ளினாள். 

‘அடடே, சத்யாதித்தன் சகோதரியை விரட்டி விட்டான் என்று நாடு தூற்ற வேண்டும் உனக்கு. ஏற்கனவே செய்து வைத்தது போதாதென்று இங்கிருந்து போய் பார்க்கும் இடமெல்லாம் என்னை ஏசும் படி செய்ய வேண்டும். நன்றாகச் செய் போ’

அதற்கு மேல் அவளால் பேசத் திராணியற்று பேசாமல் மூலையில் ஒடுங்கினாள். அவர் ஆத்திரம் தீரும் வரை கத்தி விட்டு அந்தப்புரத்தில் இருந்து வேகமாக வெளியேறினார். 

இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்வது,பேரரசர் கடிதத்திற்கு என்ன பதில் எழுதுவது இவர்கள் செய்து வைத்த காரியத்திற்கு என்று யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராய் உறங்கிப் போனார்.

8. நிலவு சுடுகிறது

  *************************

‘தேவ!’

‘சொல் நிலா!’

என் மனம் மிகவும் வேதனையில் வாடுகிறது. தங்களுக்கு என்னால் நேர்ந்து இருக்கும் சங்கடங்கள் என் மனதை மிகவும் வாட்டுகிறது. 

‘எப்போது நீ, நான் என்று பிரித்துப் பேச ஆரம்பித்தாய் நிலா?’

‘அய்யோ,தேவ ஏன் இப்படி யோசிக்கிறீர்கள் நான் சொல்வது புரியாமல்?’

‘இன்றோடு இரண்டு திங்கள் ஆகிறது நாம் மாளிகை விட்டு வந்து. உங்கள் நண்பனும், இந்த ஊர் மக்களும் எவ்வளவு நாட்கள் நமக்குப் பாதுகாப்பைத் தருவார்கள். மாமா இந்நேரம் எவ்வளவு கோபத்தில் இருப்பார். அவருடைய கோபத்திற்கு ஆளாகி நாம் சேரத்தான் வேண்டுமா?’

‘தந்தை நினைத்தால் நாம் இருக்கும் இடத்தை உடனே கண்டுபிடித்து விடலாம் நிலா!!’ ஆனால் இவ்வூர் மக்கள் நம் மீது எவ்வளவு அன்பைப் பொழிகிறார்கள். அதனால்தான் தந்தையின் முடிவு பிடிக்காமல் நம்மை இங்கே இருப்பது தெரியாமல் கவசமாகக் காத்து நிற்கிறார்கள். 

‘இல்லை, நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறேன் தேவ.!’

‘என்ன நிலா? ’

‘தங்களை விட்டுச் சென்றுவிடலாம் என்று யோசிக்கிறேன். எங்கேனும் என்னைப் படகில் ஏற்றி விடுங்கள். அம்மாவைப் போலவே இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலைக்குப் போய் வாழ்ந்து கொள்கிறேன்.’

‘என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்ததை மறந்து விட்டாயா நிலா? ‘

‘என்ன செய்வது, அற்ப மானுடரால் அதையெல்லாம் காக்கவா முடிகிறது. அது ஏதோவோர் உணர்வு உந்தலில் தெரியாமல் செய்தது என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.’ 

‘அப்படி என்றால் உனக்கு என் மீது அன்பு இல்லையா? நான் உன் தேவன் இல்லையா? இப்படிப் பொய்யன்பு கொண்டவளுக்காகத்தான் நான் இத்தனைப் பாடுபடுகிறேனா? என்னை விட்டு நீங்கி என் நினைவுகள் இன்றி உன்னால் இருக்க முடியுமா?’ கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் அஜயன். 

‘ஏன் இப்படி என்னைக் கேள்விகள் கேட்டு குழப்பம் செய்து வதைக்கிறீர்கள்?’

‘சொல்லடி கண்மணி?’அவளை நெருங்கி வந்து அவள் கண்களில் தன்னைத் தேடினான்.கண்கள் கலங்கி இருந்ததால் அவனைக் காணாது மனம் கூம்பியது. 

‘இருக்க முடியாதுதான். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை?’ சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் கண்களைச் சந்திக்கத் தைரியமற்று திடீரெனக் கட்டிக்கொண்டாள்.

‘இல்லை, இல்லை நான் போகமாட்டேன் போகமாட்டேன் உங்களை விட்டு ஒரு நாளும் போகமாட்டேன். என்னால் உங்களை விட்டு ஒருக்கணம் கூட பிரிந்து இருக்க இயலாது.என் நெஞ்சம் முழுவதும் உறைந்து கிடக்கும் தேவன் நீங்கள். இனி அப்படிப் பேச மாட்டேன்.’

‘அடியே, கள்ளி நிலா!! இத்தனை அன்பை வைத்துக் கொண்டுப் பிறகு ஏன் சஞ்சலம் கொள்கிறாய்?’ பட்டென்று அவளை மடியில் இழுத்துப்போட்டுக் கொண்டான். 

‘அது சரி, நீ மாளிகையில் இருந்த போது பெரியவளான பிறகு ஏன் அடிக்கடி என்னைச் சந்திப்பதை நிறுத்தினாய்?’ கேட்டுக் கொண்டே அவள் உச்சந்தலையில் இருந்து சுட்டு விரலால் கோலமிட்டு இதழுக்கு நகர்ந்து இருந்தான். 

சுடும் நெருப்பு போல அவள் தேகம் அவன் மடியில் கொதித்துக் கொண்டு இருந்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டாள். 

‘எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இந்தக் கொடிய நேரத்தில் என்னக் கேள்வி இது?’

‘சொல்லேன்? ‘

தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே நாம் சேர்ந்தே இருந்தாலும் அப்போது பார்த்த அஜயன் வேறு. அதன் பிறகு உங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனம் சொல்ல முடியாத கிலேசம் கொண்டது.

‘ஆஹா,என்ன கிலேசம் தோன்றியது?’

‘ம்ஹூம், சொல்ல மாட்டேன்!’

‘நான் சொல்லட்டுமா?என்னைப் பார்த்தவுடன் நான் நிலா என்று கத்தக் கத்த ஓடுவாய். என்னை வந்து கட்டிக் கொள்ள வேண்டும், முத்தமிட வேண்டும் என்றெல்லாம் தோன்றியதால் தானே?’

‘ச்சீய்,தங்களுக்கு இங்கிதமே இல்லை.’

‘உண்மையைச் சொல்லடி, என் தங்கமே.!’

‘அய்யா, அஜயாதித்தரே! தாங்கள் என்னை அழைத்து வந்து வாள் பயிற்சி கொடுக்கும் அழகு இது தானா?’

‘ஆமாம்,இப்போது கூட பயிற்சி தான் தருகிறேன். ஆனால் உன்னிடம்தான் முன்னேற்றம் இல்லை. உன் மேல் உயிரையே வைத்திருப்பவனுக்கு ஒரு முத்தமாவது தர வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லை?’

‘அய்யோ, இது வம்பாகத்தான் முடியும் போலிருக்கிறது. வந்த வேலையை விட்டுவிட்டுத் தாங்கள் வேறு வேலையில் ஈடுபடுகிறீர்கள், நிலவு சுடுகிறது பெண்ணே என்று கதைசொல்ல ஆரம்பிப்பீர்கள்!’

‘விருட்டென்று அவனை விலக்கி எழுந்து கொண்டாள். சரி, நம்மைக் காணவில்லை என்றால் பதட்டமாகத் தேடுவார்கள். வாருங்கள் ஊருக்குள் செல்லலாம்.’

அங்கே இன்னொரு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது புரியாமல் தத்தம் குதிரைகளில் ஏறினார்கள்.

9. சத்யாதித்தர் ஓலை

  ******************************

கிராமத்தில் இருவரும் நுழைந்த போது மக்கள் எல்லாரும் ஆங்காங்கே பேசிக்கொண்டு இருந்தார்கள். அஜயனின் சிறு வயதுத் தோழன் முகிலன் மட்டும் வேக வேகமாக ஓடிவந்தான். அவன் அஜயன் சிறுபிள்ளையாக இருந்தபோது தோட்டவேலை செய்தவரின் மகன். அவனுடைய சிறுவயதுத் தோழன். தங்களின் எண்ணம் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதால் அவன் முகிலன் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தான். 

‘என்ன முகிலா? ஏன் இவ்வளவு பதட்டமாக ஓடி வருகிறாய்?’

‘இளவரசே, தங்கள் தந்தைக்குத் தாங்கள் இருவரும் இங்கே இருப்பது எப்படியோ தெரிந்து விட்டது. மிகவும் கோபமடைந்த தங்கள் தந்தை ஒற்றனிடம் ஓலை அனுப்பி இருக்கிறார். !’ இந்தாருங்கள் என்று பவ்யமாக நீட்டினான். 

அஜயனுக்கு அந்த ஓலையில் என்ன இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. 

அன்பு மகன் அஜயனுக்கு, 

நீயும், நிலாவும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் நான் இங்கே நலம் இல்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். நானாகக் கிளம்பி வந்தால் தேவையற்ற சலசலப்பு உண்டாகும். என்ன காரியம் செய்து இருக்கிறாய் அஜயா? தாயில்லாத குழந்தை என்று கொஞ்சம் அசட்டையாக இருந்ததற்கு தக்க மரியாதை கொடுத்து இருக்கிறாய்.? உனக்காக நான் எல்லாவற்றிலும் சிறந்த இளவரசியைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டு இருக்கையில் அந்தப் பாவி நிலா உன்னை மயக்கி இழுத்துச் சென்றிருக்கிறாள். நீங்கள் இருவரும் சென்றதை வெளியே தெரியாமல் எத்தனை நாட்கள் மறைக்க முடியும். பேரரசரிடமிருந்து உன் பணிக்கான ஓலை வந்து இருக்கிறது.அவர் உன்னை அனுப்பச் சொல்லி இருக்கிறார். ஒரு வளமான எதிர்காலம் உனக்குக் காத்திருக்கையில் இப்படி அவளை இழுத்துக்கொண்டு போய் என்னை அவமானப்படுத்தி இருக்கிறாய்? இன்னும் மூன்று திங்கள் கழித்து மந்திராலோசனைக் கூட்டம் துவங்குகிறது. அதற்கான ஒருங்கிணைக்கும் பணியைத் தான் பேரரசர் உனக்கு ஒதுக்கி இருக்கிறார். என் கனவு நிறைவேறப்போகிறது. உனக்காக சக்ளாபுரத்து இளவரசியைப் பார்த்து வைத்து இருக்கிறேன். அவள்தான் உனக்கு ஏற்றவள். விரைவில் கிளம்பி வா. முக்கியமாக நிலாவை அங்கேயே விட்டு விட்டு வா. இல்லையேல் தந்தையின் வேறு முகத்தைப் பார்க்க நேரிடும். மகனையும் அந்த கிராமத்து மக்களையும் மதனாபுரியில் இருந்து தள்ளி வைத்தான் சத்யாதித்தன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக்கி விடாதே.’ 

மிகவும் காத்திரமான வரிகளுடன் கடிதம் முடிந்திருந்தது. 

அவன் படித்ததைக் கேட்டுக்கொண்டு இருந்த முகிலன், நிலா இருவரின் கண்களிலும் கண்ணீர்த் துளிகள் நிற்காமல் வந்தவண்ணம் இருந்தன. 

‘இதற்காகத் தான் நான் சொன்னேன். கேட்டீர்களா தேவ!’ ஆற்றாமையாகவும், சற்று கோபமாகவும் வெளிப்பட்டன வார்த்தைகள் நிலாவிடமிருந்து. 

‘சற்று பொறு நிலா!’ எனக்குக் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது என்று ஓரமாக இருந்த பெரிய கல்லின் மீது அமர்ந்துகொண்டான். சிறுது நேரம் சாய்ந்தே கிடந்தவன் திடீரென எழுந்தான். 

‘முகிலா, நான் விரைவில் வருகிறேன் என்று தந்தைக்குப் பதில் ஓலை அனுப்பு.’

இப்படி ஒரு பதிலைச் சொல்வான் என்று எதிர்பாராத முகிலனும், நிலாவும் குழப்பம் மேலிட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

10. ஒற்றைக் கொம்புக்குதிரை

   ******************************************

நிலா அஜயன் பரிசளித்த அவளது ஒற்றைக்கொம்புக் குதிரையுடன் அந்த ஊரை ஒட்டிய வனத்தின் நீரோடைப் பகுதியில் அமர்ந்து இருந்தாள். 

அஜயன் வேறு கிளம்பிச் செல்லப் போகிறான். இனிதான் எங்கே செல்வது? அம்மா என்ன ஆனாள். அஜயன் ஏன் இப்படி ஒரு முடிவைத் திடீரென்று எடுத்தான். தந்தை சொன்ன சக்ளாபுரத்து இளவரசியை மணந்து கொள்ளப் போகிறானா?, நம்மை எங்கே அனுப்பப் போகிறான்? இப்படிப் பலவாறான குழப்பங்களில் ஆழ்ந்து குதிரையிடம் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தாள். 

சற்று நேரத்தில் திடீரென குளம்படிச் சத்தம் கேட்டது. அது அஜயனின் குதிரை என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. வரட்டும், வந்தால் பேசக் கூடாது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு புல்வெளியில் படுத்துக் கொண்டாள்.

இங்கே வந்ததில் இருந்து விதவிதமான காட்டுப் பூக்களைப் பறித்துக்கட்டி அவனுக்குத் தருவது வழக்கம். இன்று அவன் மீதிருந்த கோபத்தில் கட்டிய மாலைகளை அவன் வரும்முன் நீரோடையில் விட்டுவிட எண்ணினாள். 

அதற்குள் பல சிந்தனைகள் ஆட்கொள்ள அவன் வந்து விட்டு இருந்தான். குதிரை கனைத்தபடி அவனை இறக்கி விட்டது. அவள் அருகில் வந்து புல்வெளியில் தானும் படுத்துக் கொண்டான் அஜயன்.

‘நிலா’ அவள் பேசவில்லை. அவளை நெருங்கி முகவாயைத் திருப்பினான். 

‘பேச மாட்டாயா நிலா.’

‘சக்ளாபுரத்து இளவரசி தான் இருக்கிறாளே இனிமேல் தாங்கள் அவளிடம் பேசிக் கொள்ளலாம்.’

‘இனிமேலும் தாமதிக்க முடியாது. மதனாபுரி சென்றே ஆகவேண்டும். அதனால்தான் அப்படி ஒரு முடிவெடுத்தேன்.’

‘ஓ, தாராளமாக எடுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது?  நான் யார் அதைத் தடுக்க’ சுரீரென்று வந்து விழுந்தது வார்த்தைகள் அவளிடம் இருந்து. 

அவள் முகத்தைப் பார்த்தான். இவ்வளவு நேரம் தனிமையில் அழுதிருக்க வேண்டும். கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. 

‘என் மீது கோபமா உனக்கு?’

‘அது தான் சொல்லிவிட்டேனே. நான் யார் கோபம் கொள்ளவும், கொஞ்சிக் குலாவவும்.’

‘சரி, தினமும் காட்டு மாலைகளை எனக்குக் கழுத்தில் போட்டு விடுவாயே, எழுந்து எனக்குப் போட்டு விடு.’

அவள் எதுவுமே பேசாமல் ஒருக்களித்துக் கிடந்தாள். 

‘என் தேவி நீ தானடி, ஏன் உனக்குப் புரியவில்லை. ஏன் இப்படி அன்பைக் கொடுத்தும், பறித்தும் வாட்டி வதைக்கிறாய். எதற்காக என்னைக் குழந்தையில் இருந்தே அப்படி அன்பைப் பொழிந்து தொலைத்தாய். இப்போது ஏன் இப்படி பேசாமல் என்னைக் கொல்கிறாய்! உனக்காகத்தானே அத்தனையும் விட்டு விட்டு உன்னோடு வந்து இருக்கிறேன்.’

‘ஓ, அன்பைப் பிச்சையிடுகிறீர்கள்? ‘

‘அப்படி இல்லைத் தங்கமே.’

என்ன நினைத்தாளோ தெரியவில்லை. விறுவிறுவென எழுந்தாள்.  ஓரமாகக் கிடந்த வில்லை எடுத்தாள். காட்டு மாலைகளை அம்புகளுடன் இணைத்துப் பூட்டினாள். தூரத்தில் இருந்த தெய்வச் சிலையைக் குறிவைத்து எய்தாள். அம்மன் கழுத்தில் அழகாக மாலை போய் விழுந்தது. அஜயன் ஆச்சரியமாகப் பார்க்கத் துவங்கி இருந்தான். எதற்காக இப்படிச் செய்கிறாள் என்கிற குழப்பம் வேறு. 

‘தேவ,எழுந்து கொள்ளுங்கள்’ என்றாள். அஜயன் அவசர அவசரமாக எழுந்தான். 

‘தங்கள் வாளை எடுங்கள்! ‘

‘வாருங்கள்,என்னோடு சமர் புரியுங்கள்!’ அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் வாளை விறுவிறுவென்று சுழற்றினாள். 

‘டண் டண்’ என்று இருவரும் சமரிடும் ஒலிகள் கானகமெங்கும் கேட்டது. இருவரும் மூச்சிரைத்தார்களே ஒழிய முடிக்கவில்லை. அத்தனை நெளிவு சுளிவுகளையும் அவள் பயன்படுத்தும் விதம் கண்டு பூரித்தான் விஜயன். 

திடீரென சமரை நிறுத்துவோம் என்று அறிவித்தாள்.உங்கள் குதிரையை விட்டு இறங்குங்கள் என்று கத்தினாள். உங்கள் உயிருக்கு பரிசாகத் தந்த இந்த ஒற்றைக் கொம்பு குதிரையில் என்னோடு ஏறுங்கள் என்றாள்.

அவன் ஏறியதும் இரண்டு முன்னங்கால்கள் ஆவேசமாகத் தூக்க அந்த வனம் முழுவதும் படுவேகமாகப் பறந்து சுற்றிச்சுற்றி வந்தாள். பின்புறம் இருந்த அவள் முடிக்கற்றைகள் அவிழ்ந்து அவன் பரந்த மார்பில் சுற்றிக்கொண்டு. 

‘எதற்கு இப்படிச் செய்கிறாய் நிலா?’

“ஹா ஹா ஹா” வெடிச்சிரிப்பை உதிர்த்தாள்.

அவளுக்குச் சித்தப்பிரமைப் பிடித்தது போலத்தோன்றியது அவனுக்கு. ஒற்றைக் கொம்புக் குதிரையில் காதலனை ஏற்றிக்கொண்டு புழுதி பறக்க வனமெங்கும் சுற்றினாள் என்று வரலாறு பேசட்டும். சிறுவயதில் தங்களிடம் கேட்டேன் அல்லவா. இப்போது பாருங்கள் எப்படிப் புழுதி பறக்கப் பிடரி மயிர் தெறிக்க இந்தக் குதிரை எப்படி சுற்றுகிறது பாருங்கள். திடீரென இறங்குங்கள் என்றாள். என்னோடு மல்யுத்தம் செய்யலாம் வாருங்கள் என்றாள். இருவரும் தயாரானார்கள். 

அவன் சொல்லித் தந்த அத்தனை உத்திகளையும் பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அவனுக்கு ஆச்சரியம் தந்தாள். இருவரும் கட்டி சமரிட்டு உருண்டார்கள். அந்த வனம் முழுவதும் புழுதி பறந்தது. திடீரெனப் பறந்து வந்து அவன் தொடைகளில் கால்களை வைத்து ஏறிச் சாய்த்தாள். அவனைக் கீழே தள்ளி அவன் முகத்தருகே வந்து மார்போடு அணைத்து விழுந்தாள். கண நேரத்தில் தனது உடைவாளை உருவினாள். நேராக அவனை அணைத்த வண்ணம் அவன் கழுத்தைக் குறி வைத்தாள். 

‘அடிப்பாவி,நிலா என்ன செய்கிறாய்?’ என்று கத்த ஆரம்பித்தான் அஜயன். சற்றே உக்கிரம் குறைந்து நிதானம் வந்தவளாய் வாளை எடுத்துத் தள்ளி வீசி எறிந்தாள்.

அவனை இன்னும் நெருங்கி அந்தக் காந்தக் கண்களை உற்றுப் பார்த்தாள். மூக்கின் மீது தனது விரலை நகர்த்தியவள் இதழில் ஆழமாக அவன் எதிர்பாராத வண்ணம் தன் இதழை வைத்து அழுந்தப்பதித்து முத்தமிட்டாள். மெல்ல உதடுகளைத் தானே விடுவித்தவள்

‘இந்த வீரம் போதுமா அஜயாதித்தரே தங்கள் மதனாபுரிக்கு.’ இப்படி ஒரு தாண்டவத்தை எதிர்பாராத அஜயன் கூக்குரலிட்டான். 

ஆஹா, நிலா நான் கற்றுத்தந்த பயிற்சிகளை இத்தனை நாளும் எவ்வளவு அற்புதமாகக் கற்றுக்கொண்டு விட்டாய். கற்றவனிடமே அத்தனை யுத்தங்களையும் பரீட்சித்துத் தேர்வாகி விட்டாய். துள்ளிக் குதித்து எழுந்தான். கூடவே முத்த யுத்தத்திலும் ஜெயித்து விட்டாய். 

‘எவ்வளவு கோபம் உனக்கு.? நான் உன்னையும் அழைத்துக்கொண்டு செல்லத்தான் நினைத்து இருக்கிறேன். நான் வருகிறேன் என்று தானே ஓலை எழுதச்சொன்னேன். நீ வரமாட்டாய் என்று சொல்லவில்லையே, அதுகூடப் புரியாமல் எப்படி ஒரு தாண்டவம் ஆடி விட்டாய்.?’

இது தெரிந்தால் தினமும் உன்னைக் கோபப்படுத்தி இருப்பேனே என்று சிரித்துக் கொண்டே அவளைக் கைக்கொடுத்து எழுப்பினான். குதிரைகள் ஏதோ புரிந்தனவாய் கனைத்துக் கொண்டன. 

‘வா, நாளையே கிளம்புவோம் மதனாபுரிக்கு’ என்றவனிடம் பழிப்புக் காண்பித்துக் கொண்டு தனது ஒற்றைக் கொம்புக் குதிரையில் ஏறினாள்.

மதனாபுரிக்கு நிலவு வரும் நேரமாகியிருந்தது. 

000

சுபி

கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *