அரிதாரம் பூசிக்கொள்கிறேன்
00
முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து
பல வருடம் ஆச்சு
பள,பளவென ஜொலித்த
கன்னங்கள் ஏனோ
காணாமல் போச்சு
ஒரு நாள் புன்னகைக்கும்
பூக்களின் தற்காலிக
சந்தோஷம் கூட
இப்போதெல்லாம் தொலைந்து போச்சு
பசிக்கும் வயிறுக்கு
ருசியில்லாமல் ஏதோவொன்றை
கடமைக்காக கொடுக்கிறேன்
நினைக்கும் போது வர வேண்டும் தூக்கம் -அதுவே
என் இரவின் ஏக்கம்
சாதி,மதம்,மொழியை வைத்து
தினம்,தினம்
ஒரு புளித்து போன அரசியல் பார்த்து
சலித்து போன
என் வாழ்க்கை பரவாயில்லை போலிருக்கிறது
நோய்க்கு பயந்து
முகமூடிக்குள் வாழ்க்கை
மூன்று வருடமாய் தொடர்வது
தொடர்கதையாய் ஆகி விடுமா என்று
காலத்தை பார்த்து கேட்டேன்
நோயை நீங்களே உருவாக்கி
மாயை ஏற்படுத்தி
மருந்தையும் தருகிறீர்கள் .
மனிதர்கள்தான் இவ்வுலகின்
கொடூரமான மிருகங்கள்
உயிரற்ற காகித பணத்திற்கு
உயிருள்ள மனிதர்களை
பிணமாக்க கூட அஞ்ச மாட்டீர்கள்
காதல் தோல்வி,அவமானம்,வேலை
பொறுப்பு,அலைச்சல்,சம்பளம் என
குடும்பத்துக்காக
சுயம் தொலைத்து
வாழும் மானிடா
உன் வாழ்க்கையே கேள்வி குறியாய் இருக்கும் போது
எதற்கு பேசுகிறாய்
உலக அரசியல்?
கண்ணை மூடிக்கொள்
வாய் திறக்காதே
காதை பொத்திக் கொள்
மனசாட்சியை தொலைத்து விட்டோ இல்லை
அடமானம் வைத்து விட்டோ
மற்ற மனிதர்களை போல்
நீயும் அரிதாரம் பூசிக்கொள் என்றது ..
000
அவ சும்மா இருக்கா?!
00
அதிகாலை கூவும் சேவல் கூட
அவள் எழுந்த பிறகு தான் விழித்தது
கிழக்கே உதிக்கும் சூரியன் கூட
அவள் குளிக்கும் நீரின்
ஒலிக்கும் அலாரத்தில் தான்
கண் விழிக்கும் .
அவளுக்கு பிடித்த உணவை விட
அவளுடைய அவனுக்கு பிடித்த
உணவை தான் பெரும்பாலும் சமைப்பாள்
அதிகாலை
அவ,அவசரமாய்
அடுப்பில் சுட்டுக் கொண்டாலும்
சில நேரங்களில் தவறி
கத்தியில் வெட்டும் பட்டு கொள்ளும் போது கூட
அவ சுறு சுறுப்பில் குறைவில்லை
வேலைக்கு நேரமாச்சுன்னு
புருஷன் லேட்டா எழுந்து சொன்னாலும்
அவனை ஒரு நாளும்
சாப்பிடாமல் வேலைக்கு போக விட்டதில்லை
அவன் வாசல் தாண்டும்
இடைவெளியில் கூட
மதிய சாப்பாட்டை
அவன் கைகளில் பொதிந்திடுவாள்
சிடு,சிடுவென சலித்து கொண்டே
அவன் கிளம்பும் நேரத்திலும்
சிரித்த முகத்துடன் வழியனுப்புவாள்
சிண்டு,வாண்டுகளை தயார் செய்து
உணவு கொடுத்து ,
பள்ளிக்கு அனுப்பி
கிடைக்கும் சொற்ப நேரத்தில்
அரைகுறை மீந்ததை உண்டிடுவாள்
நகரும் நேரம்
அவள் ஓய்வு நேரத்தில் மட்டும்
வேகமாய் ஓடிடுமே
மீண்டும் மாலை வர
வேலை முடிந்து வரும்
கணவனுக்கு சிற்றுண்டி
இரவு உணவு என்று
எல்லாம் ஓய்ந்த பிறகு
கை,கால் கழுவி
அசதியில்
அப்படான்னு அவள் கிடக்கும் போது
அவனது கை
அவள் மீது காமத்தோடு படும்
இன்னைக்கு அது வேண்டாங்கன்னு சொன்னால்
அவன் மனம் புண்படுமோ என்று
உள்ளன்போடு தன்னையே பரிசளிப்பாள் ..
எல்லாம் கிடைத்த கணவன்
நிம்மதியாய் உறங்குவான்
அவள் மட்டும்
விடிந்த பிறகு எப்படி உறங்குவது?
தாய்,சகோதரி,மனைவி,மகள் என
எப்போதும் ஆணின் வெற்றிக்கு பக்கபலமாய் இருப்பவள் பெண்
ஏதோ ஒரு நண்பன்
உன் மனைவி என்ன செய்கிறாள் என்று கேட்ட கேள்விக்கு
அவ வேலைக்கு எல்லாம் போகலை
வீட்ல சும்மா தான் இருக்கா என்றான்
எல்லாம் அனுபவித்த கணவன் ???
000
லி .நௌஷாத் அலி (புனைப்பெயர் லி .நௌஷாத் கான் ) என்கிற நான் முது நிலை மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவன் .கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவன், வந்தாரை வாழ வைக்கும் வந்தவாசியில் வளர்ந்தவன்.
இதுவரை கவிதை -கதை என என்னுடைய படைப்புகள் நூற்றுக்கும் மேற்பட்டவை பல தினசரி நாளிதழிலும் ,வார இதழ்களிலும் ,மாத இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது .
கவிதை -கதை என இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.