வன் இப்போது எனக்கு நண்பன் ஆகிவிட்டிருந்தான்.

நண்பர்கள் எல்லாம் பிறக்கும் போதிலிருந்தே நண்பர்களாகி விடுகிறார்களா என்ன? வளர, வளர நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

அதேபோல் வளர, வளர நண்பர்கள் விலகியும் போகிறார்கள். அப்படித்தான் எனக்குக் கிடைத்த நண்பர்களில் பலர் இப்போது எந்தத் தொடர்புமே இல்லாமல் இருக்கிறார்கள். புதுப்புது நண்பர்கள் பழகக் கிடைக்கிறார்கள்.

இப்போது பழைய புத்தகக் கடையை வைத்திருக்கும் இந்தப் பழனி எனக்கு நண்பன்.

என்னை விட ஒன்றிரண்டு வயது சிறியவன் தான். ஆனாலும் ‘டா ‘ போட்டுப் பேசுகிறான். நண்பன் தானே அதுவும் பெரிதாய் ஒன்றும் வயது வித்தியாசம் இல்லையே? 

எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் அலாதி பிரியம். புத்தகங்கள் வாசிக்கும் அனுபவத்தில் சில கதைகள் கூட எழுத ஆரம்பித்துவிட்டேன். பழனி வைத்திருக்கும் கடைக்குக் கொஞ்ச நாளாகத்தான் நான் வருகிறேன்.

ஒருமுறை இந்த வழியாகப் பேருந்தில் போகும்போது தான் இந்தப் பழைய புத்தகக் கடையைப் பார்த்தேன். 

அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். நேராக இவன் கடைக்கு வந்தேன். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து வியந்துபோனேன்.

சில புத்தகங்கள் புதியதாகவே இருந்தது. எப்படித்தான் பழைய விலைக்கு விற்கிறார்களோ தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன். அன்று முண்டா பனியனும், லுங்கியும் அணிந்திருந்த பழனி, ” வாங்க சார் என்ன வேணும்? “என்றான்.

எந்த முன் ஏற்பாடும் இல்லாமல் வெற்று மனதுடன் தான் சென்று இருந்தேன். அங்கே எந்தப் புத்தகம் எனக்குப் பிடிக்கிறதோ அதை வாங்கலாம் என்ற முடிவு எனக்கு. பழைய புத்தகக் கடைகளில் நாம் வாங்க நினைக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. 

அவன் கேட்ட கேள்விக்கு, “இருங்க நானே பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு நோட்டம் விட்டேன்.

சில நேரங்களில் பொக்கிஷம் போல் சில புத்தகங்கள் நம் கண்களுக்குத் தென்பட்டுவிடும். அப்போது கிடைக்கும் மகிழ்ச்சியை எந்த அளவியினாலும் அளந்துவிட முடியாது. 

எழுத்தாளர் ராஜேஷ் குமார், சுபா போன்றோரின் பாக்கெட் நாவல்களைக் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். அதில் சில புத்தகங்களில் மேலட்டை இருப்பதில்லை. அதை அவ்வளவாய் நான் பொருட்படுத்துவதும் இல்லை.

சரி போதும் என்று பழனியிடம் பணம் கொடுத்துவிட்டுத் திரும்புகையில்,

“படிச்சிட்டுத் திருப்பி கொடுத்தீங்கன்னா இப்ப கொடுத்த விலையில் பாதி விலைக்கு வாங்கிக்குவேன்” என்றான்.

“இது புதுசா இருக்கே” என்று நினைத்துக் கொண்ட நான், என் கையில் இருக்கும் இந்த புத்தகங்கள் எத்தனையாவது முறையாக விற்கப்படுகிறதோ தெரியவில்லையே? ” என்றும் நினைத்துக் கொண்டேன்.

“சரி, உன் பெயர் என்ன?”என்றேன்.

“பழனி “என்றான். சரிந்து விழுந்த சில புத்தகங்களை எடுத்து அடுக்கிவைத்துக் கொண்டே. 

அதன் பிறகு அடிக்கடி அவன் கடைக்குச் சென்றேன். அவன் கூறியது போல் பழைய புத்தகத்தையே பழைய விலையிலும் பாதி விலைக்கு விற்கவும் சென்றேன். அந்த பணத்திற்கு வேறு புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.

என்னை ‘ரெகுலர் கஸ்டமர்’ ஆக்கிவிட்ட சந்தோசம் தாங்காமல் ஒரு முறை, “டீ குடிக்கிறியா?” என்றான். அவன் உரிமையில் அழைக்கும் போதே என்னுடன் நட்பு ரீதியில் நெருங்கி விட்டான் என்று நானும் உணர்ந்து கொண்டேன்.

“சரி வாங்கிட்டு வா” என்று அவனை அனுப்பிவிட்டு புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“டேய் தம்பி ” என்று ஒரு குரல் கேட்கவும் “என்ன?” என்பது போல் திரும்பினேன்.

சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். ஒல்லியான தேகம், தடிமனான கண்ணாடி, பற்கள் இல்லாத பொக்கை வாய், கொஞ்சம் நரைத்த தாடி, தலை முழுக்க பஞ்சு போல் வெண்மையான தலைமுடி. “ஒருவேளை பிச்சை கேட்கிறாரோ?” என்று நினைத்து, 

“என்ன வேணும்?” என்றேன். 

“பாலகுமாரன் எழுதிய இரும்புக்குதிரைகள் இருக்கா?” என்றார் கம்பீரமாக.

“இருக்குதான்னு தெரியல. பையன் டீ வாங்கப் போயிருக்கான். இப்ப வந்துருவான். உட்காருங்க.”என்று சொல்லிவிட்டு அங்கிருந்த மர ஸ்டூலை அவரிடம் நகர்த்தினேன்.

” இருக்கட்டும்” என்று கைகளால் ஜாடை காட்டித் தடுத்து விட்டு கம்பீரமாய் தாடியைத் தடவியபடியே மற்ற புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

நான் அவர் கேட்ட புத்தகம் இருக்கிறதா? என்று தேடிக் கொண்டிருந்தேன்.

“எம்பையனுங்க இந்த வருஷம் தீபாவளிக்கு ஊருக்கு வரானுங்க”என்றார் சத்தமாக.

நான் யாரிடம் பேசுகிறார் என்று அவரைப் பார்த்த போது அவர் என்னிடம் தான் பேசி இருக்கிறார்.” சரிங்க”என்று ஒரு சிரிப்பை உதிர்த்தேன்.

“ஏஞ்சல் விஸ்வநாதன் எம்பேரு”என்றார்.

“வித்தியாசமா இருக்கே?” என்றேன்.

“என்னைத் தெரியலையா உனக்கு?” என்றார்.

“இல்லைங்க நான் பக்கத்து ஊரு” என்றேன்.

“நான் ஒரு எழுத்தாளன்” என்றார் அதே கம்பீரத்துடன்.

“அப்படிங்களா?” என்றேன் வியப்போடு நான். 

“அந்தப் பழனிப்பய சொல்லலையா?” என்றார்.

“இல்லைங்க” என்று நான் சொன்ன போது பழனி டீ யுடன் வந்தான்.

“ஏன்டா, இரும்புக்குதிரை இருக்குதா?” என்றார் அவனிடம்.

“அதெல்லாம் இல்ல” என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு அவர் முகத்தைக் கூட பார்க்காமல் என்னிடம் வந்தவன், 

“இந்தா டீ “என்று எனக்கு ஒரு டீயை கொடுத்துவிட்டு அந்த மர ஸ்டூலை இழுத்துப் போட்டு உட்கார்ந்து டீயை ருசிக்க ஆரம்பித்தான்.

“ஐயா டீ சாப்பிடுறீங்களா?” என்றேன் நான்.

“நான் டீ, காபி குடிக்கிறது இல்ல தம்பி.  நீ என்னோட புஸ்தகம் எல்லாம் படிச்சு இருக்கியா? ” என்றார்.

நான் “இல்ல ” என்பது போல் தலையாட்டினேன்.

“பதினாறு நாவல்கள், ஆறு சிறுகதை தொகுப்புகள் எழுதி இருக்கேன்” என்றார் வெள்ளை மீசையைத் தடவியபடி.

“அதுல ஏஞ்சல்னு ஒரு புத்தகம். அதுக்கு தமிழ்நாடு கவர்மெண்ட் எனக்கு விருது கொடுத்திருக்கு. அப்போ இருந்து என்னைய ‘ஏஞ்சல் விஸ்வநாதன்’ னுதான் எல்லாரும் கூப்பிடுவாங்க” என்றார் பெருமிதத்துடன். 

“பையனுங்க பேரம்பேத்திங்க எல்லாம் பம்பாய்ல செட்டில் ஆயிட்டாங்க. பெரிய பெரிய வேலையில் இருக்கானுங்க. நானும் வருசா வருசம் கூப்பிட்டுக்கிட்டேதான் இருக்கேன். வரவே முடியல அவங்களால. இந்த வருசம் எப்படியும் வந்துடுவோம்னு சொல்லி இருக்காங்க. அந்த அளவுக்கு அவங்க பிஸியா இருக்காங்க. 

இந்த அப்பனை தனியாக விட்டுட்டுப் போனோமே என்ன ஆனான். என்ன பண்றான்னு ஒரு விசாரணை இல்ல” என்றார்.

எனக்குப் பாவமாய் இருந்தது.  

“அந்தப் புத்தகம் வந்தா சொல்றேன். நீங்க போங்க” என்றான் பழனி. அவரும் திரும்பி நடந்தார்.

“இந்த வயசுலயும் புத்தகம் படிக்கிறார் பாரேன்” என்றேன் நான் ஆச்சரியமாக.

 “அட, அந்த ஆளு ஒரு லூசு டா “என்றான் பழனி. எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“என்னடா சொல்ற?” 

“தனியா இருக்காருல்ல அதான் புத்தி பேதலிச்சுருச்சு. ஒரு காலத்துல பெரிய எழுத்தாளராக இருந்திருப்பார் போல. இப்ப பசங்க எல்லாம் தனியா விட்டுட்டு போயிட்டானுங்க. ஒவ்வொரு தீபாவளிக்கும் அவனுங்க வருவானுங்க வருவானுங்கன்னு இந்தப் பெருசு காத்துக் கிடக்குது. அவனுங்க எங்க வரப்போறானுங்க?” என்றான் சாதாரணமாக.

எனக்குத்தான் என்னவோ போல் இருந்தது. 

“அவர் வீடு எது?” கேட்டேன்.

“அந்த நாலாவது வீடு தான்” என்று கை காட்டினான். அவர் மெதுவாக தள்ளாடியபடி அந்த வீட்டின் கேட்டை திறந்து உள்ளே போய்க் கொண்டிருந்தார்.

அதன் பிறகு அடிக்கடி நான் பழனியின் கடைக்குப் போகும் போதெல்லாம் அவரும் எதேச்சையாக வருவார். என்னிடம் அவராகவே நிறைய விஷயங்கள் பேசுவார். பழனி ஏதும் கண்டுகொள்ள மாட்டான். 

நான் வேறொரு கடையில் பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள் வாங்கி வந்து அந்தப் பெரியவரிடம் நீட்டினேன். கண்கள் கலங்க அவர் வாங்கிக் கொண்டு, “எவ்வளவு? “என்றார்.

“சும்மா படிங்க பெரியவரே” என்றேன்.

“இந்தாடா”என்று ஒரு பழைய ஐம்பது ரூபாய்த் தாளை வலுக்கட்டாயமாக என்னிடம் திணித்தார். 

“நானும் கதை எழுதுவேன்” என்று அவரிடம் சொன்னதும் எனக்கு நிறைய அறிவுரைகளும், எழுதுவதற்கான குறிப்புகளும் கொடுத்தார். 

“இவரையாடா லூசுன்னு சொன்ன?” என்று நான் பழனியை முறைத்தேன்.

“நல்ல நல்ல புத்தகத்தை எல்லாம் கொண்டு வந்து இந்தப் பழைய புத்தக கடையில் வித்துடுறாங்க. எனக்கு மனசே கேட்காது. அதான் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கிப்பேன் ” என்றார் ஒருநாள். 

இப்படியே அவருக்கும் எனக்கும் ஒரு தொடர்பு உருவாகிவிட்டிருந்தது. அவரும் அவர் வயசு தோழனிடம் பழகுவதைப் போல என்னிடம் பழகிவிட்டார். எனக்கு இன்னொரு நண்பர்.

நான் இரண்டு மாதம் ட்ரைனிங்கிற்காக சென்னைக்குப் போய்விட்டு தீபாவளிக்கு இரண்டு நாள்கள் இருக்கும்பொழுது தான் ஊருக்குத் திரும்பினேன்.

அவர் சொல்லிக் கொடுத்த முறைப்படி ஒரு கதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருந்தேன். எதிர்ப்பாராத விதமாக எனக்கு முதல் பரிசு கிடைத்ததற்கான அறிவிப்பு வந்திருந்தது. அந்த அறிவிப்பை அவரிடம் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கச் சென்றேன்.

பழனியின் கடையில் பழனி இல்லை. கடை திறந்து இருந்தது. டீ குடிக்கப் போயிருப்பான். அவன் வரட்டும் என்று காத்திருந்தேன்.

அவன் கடையில் எடைக்குப் போடப்பட்ட சில புத்தகங்கள் தென்பட்டன. எடுத்துப் பார்க்கையில் அவைகள் எல்லாம் ‘ஏஞ்சல் விஸ்வநாதன்’ எழுதிய புத்தகங்கள். எனக்கு பகீரென்று இருந்தது.

அவைகளை எடுத்து அடுக்கிக் கொண்டே அவர் வீட்டைப் பார்த்தேன். அவரது மகன்கள் வந்திருப்பதற்கான அடையாளங்கள்.

“பரவாயில்லையே இந்த வருட தீபாவளிக்கு அவர் சொன்னது போல் பிள்ளைகள் வந்து விட்டார்கள் போல” என்று எண்ணிக் கொண்டேன்.

பிறகுதான் கவனித்தேன். அவர் வீட்டின் முன் சாமியானாப் பந்தல். 

என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருகியது. தூரத்தில் பழனி வந்துகொண்டிருந்தான்.

000

செந்தில்குமார் அமிர்தலிங்கம் 

நான் திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன்.

செந்தில்குமார் அமிர்தலிங்கம் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதிவருகிறேன்.

திருச்சி வானொலியில் எனது கவிதைகள் தொடர்பான அரைமணி நேர நிகழ்ச்சியை நானே தொகுத்து வழங்கியுள்ளேன்.

பசுந்தளிர் அம்மாவுக்குப் பிடித்த பாடல் வானவில் எனும் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

One thought on “பழசு

  1. இயல்பாக எழுதி உள்ளார். மனதுக்கு நெருக்கமான உருக்கமான சுருக்கமான கதை. கதையல்ல. ஊர்தோறும் இப்படி ஒருவராவது உண்டு. இனி நாம் பார்த்தால் தவற விடாமல் பழக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *