பூனைகளை வரையும் சிறுவன்

(ஜப்பானிய சிறுவர் கதை)

     விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனான ஜோஜீ, எப்போதும் பூனைகளை வரைந்து கொண்டிருந்தான்.

     அவனது அண்ணன், அவர்களின் தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளைச் செய்வான். தங்கை, தாய்க்கு ஒத்தாசையாக வீட்டு வேலைகளைச் செய்வாள். ஆனால் ஜோஜீ, விவசாயப் பணிகளிலோ வீட்டு வேலைகளிலோ ஈடுபடாமல், பூனைகளை வரைவதிலேயே நேரத்தை செலவழித்து வந்தான்.

     அவன் வேறு விலங்குகள், பிராணிகள், பறவைகள், தாவரங்கள், மலர்கள், இயற்கைக் காட்சிகள், மனித உருவங்கள், நிலக்காட்சி போன்ற எதையும் வரைவதில்லை. எப்போதும் பூனைகளை மட்டுமே!

     குட்டிப் பூனை, பெரிய பூனை, மெலிந்த பூனை, கொழுத்த பூனை, வெள்ளைப் பூனை, கருப்புப் பூனை, சாம்பல் நிறப் பூனை, வெள்ளையும் கருப்பும் கலந்த பூனை, சயாமி பூனை, பெர்ஷியன் பூனை, ஜப்பானிய பூனை, காட்டுப் பூனை என விதவிதமாக பூனைகளை வரைந்துகொண்டிருந்தான்.

     பூனைகள், பூனைகள், பூனைகள்!

     அவற்றை வரைவது தவிர அவனுக்கு வேறு எதிலும் விருப்பமோ, ஆர்வமோ இல்லை.

     “ஜோஜீ,… நீ இப்படியே இருந்தால் எப்படி எங்களைப் போல ஒரு விவசாயியாக ஆவாய்? பூனைகளை வரைவதை நிறுத்திவிட்டு, உருப்படியான வேறு வேலைகளைப் பார்! உனது அண்ணன், தங்கை போல நீயும் எங்களுக்கு உதவியாக இரு” என்று அவனது பெற்றோர் கூறுவர்.

     அப்போது அவன், “அப்படியே செய்கிறேன். இனிமேல் பூனைகளை வரைய மாட்டேன்” என்று சொல்வான். தனது தாய் தந்தையருக்கு உதவியாக விவசாயப் பணிகளிலும், வீட்டு வேலையிலும் ஈடுபடுவான். ஆனால், அவர்களின் விவசாயப் பண்ணையிலோ வீட்டிலோ பூனையைப் பார்த்தால், உடனே தனது வாக்குறுதியை மறந்து, மீண்டும் ஒரு பூனையை வரையத் தொடங்கிவிடுவான்.

     பல முறை பெற்றோர் கண்டித்தும், அவனது இந்த குணத்தை மாற்ற அவனாலேயே இயலவில்லை. எனவே, அவனை ஒரு பூசாரியாக ஆக்குவதற்காக ஷின்டோ மடாலயத்தில் சேர்த்துவிடலாம் என பெற்றோர் முடிவு செய்தனர்.

     அவனது தந்தை அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஷின்டோ மடாலயத்திற்கு அவனைக் கூட்டிச் சென்றார். அங்குள்ள தலைமை குருவிடம் அவனைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்து, “இவனை எப்படியாவது நல்வழிப்படுத்தி, ஒரு பூசாரியாக ஆக்கிவிடுங்கள்” என்று பணிந்து வணங்கிக் கேட்டுக்கொண்டார்.

    “கவலைப்படாதீர்கள். அவனை நாங்கள் நல்வழிப்படுத்தி, எங்களைப் போலவே பூசாரியாக ஆகிவிடுவோம்.” உறுதியளித்தார் தலைமை குரு.

     ஜோஜீ, மடாலயத்தில் சேர்க்கப்பட்டான். தந்தை, நம்பிக்கையோடு திரும்பிச் சென்றார்.

*******

     அப்போதும் அவனிடம் ஓவியம் வரைவதற்கான பொருட்கள் யாவும் இருந்தன.

     சீன மரபு ஓவியமான சுமி – ஈ (sumi – e) என்னும் ஓவிய வகைதான் ஜப்பான், கொரியா, மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மரபு ஓவியமாக வழக்கத்தில் உள்ளது. இது, நீர் வண்ண வகையைச் சேர்ந்தது. ஓவியம் வரைவதற்கான பிரத்தியேகத் தாளான, அரிசித் தாள் (rice paper) எனப்படும் ஸுவான் தாளில் (xuan paper) கருப்பு மையை அடிப்படையாகக் கொண்டு சுமி – ஈ ஓவியங்கள் வரையப்படும். இதில் சில சமயம் சிறிதளவு அல்லது கூடுதல் வண்ணங்கள் சேர்க்கப்படுவதும் உண்டு. ஆனால், பொதுவாக சுமி – ஈ ஓவியம், கருப்பு மையை மட்டுமே பயன்படுத்தி வரையப்படுவது ஆகும்.

     இந்த மை, வழக்கம் போல நீர்மமாகவும் கிடைக்கும். அல்லது மைக் குச்சி அல்லது கட்டி வடிவத்திலும் கிடைக்கும். வேண்டும்போது கல்வத்தில் நீரூற்றி சந்தனம் அரைப்பது போல மைக் கட்டியால் உரைத்து, மை தயாரித்துக்கொள்ளலாம். பழங்காலத்தில் இந்த முறைதான் வழக்கத்தில் இருந்தது.

     ஜோஜீயும் அவ்வாறே மைக் குச்சியை கல்வத்தில் உரைத்து, மை தயாரித்து, பூனைகளை வரைந்துகொண்டிருந்தான்.

     மடாலயத்தில் சேர்ந்த பிறகும் அவனால் பூனைகளை வரையும் பழக்கத்தை நிறுத்த இயலவில்லை. மீண்டும் அவன் ஏராளமாக பூனைகளை வரைந்துகொண்டிருந்தான். குட்டிப் பூனை, நடுத்தர வயதுப் பூனை, பெரிய பூனை, பால் குடிக்கும் பூனை, மரமேறும் பூனை, எலி பிடிக்கும் பூனை, மீனைக் கவ்வியிருக்கும் பூனை, நாயுடன் சண்டையிடும் பூனை, மேஜையிலிருந்து தாவும் பூனை, நாற்காலியில் அமர்ந்திருக்கும் பூனை, ஜன்னலுக்கு வெளியிலிருந்து எட்டிப் பார்க்கும் பூனை, பந்து விளையாடிக்கொண்டிருக்கும் பூனைக் குட்டிகள், தவளையை சீண்டிக்கொண்டிருக்கும் பூனை என, பூனைகளை வகை வகையாக வரைந்துகொண்டிருந்தான்.

     அதைக் கண்ட மடாலய குரு, “இங்கே நீ பூனைகளை வரைவதற்காக வரவில்லை. நல்ல முறையில் படித்து, கோவில் பூசாரியாக ஆவதற்காக வந்திருக்கிறாய். அது மட்டுமல்ல; வேறு எந்த வேலையும் செய்யாமல் எப்போதும் பூனைகளை வரைந்துகொண்டிருக்கிறாய் என்பதால்தான், உனது தந்தையார் உனது அந்தக் கெட்ட பழக்கத்தைத் திருத்த முடியாமல், இங்கே கொண்டு வந்து சேர்த்தியிருக்கிறார். எனவே, ஒழுங்காக பாடங்களைப் படிக்கவும், நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் செய். இனி மேல் நீ வரைவே கூடாது” என்று கட்டளை இட்டார்.

   அவனும் அவரிடம் குனிந்து வணங்கி, “அப்படியே செய்கிறேன், குருவே! இனிமேல் பூனைகளை வரையமாட்டேன்” என உறுதியளித்தான்.

     ஆனால், அவனால் அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலவில்லை. மடாலயத்தில் ஒரு பூனையைப் பார்த்ததும் அவனது கைகள் பரபரத்து, மீண்டும் பூனைகளை வரையத் தொடங்கிவிட்டான்.

      அவனைப் பல முறை கண்டித்தும் கேட்காததால், “இனி உன்னை வைத்து இங்கே சமாளிக்க இயலாது. நீ உன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிடு” என்று தலைமை குரு சொல்லிவிட்டார்.

     அவனும் தனது வரை பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

*********

     வீட்டுக்கு திரும்பிச் சென்றால் தந்தை அடிப்பார் என்று அவன் பயந்தான். எனவே, வேறு ஏதாவது மடாலயத்திற்குச் சென்று, அங்கே சேர்ந்துவிடலாம் என முடிவெடுத்தான்.

     பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மடாலயம் ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றான்.

     அந்ந வளாகம் முழுக்கவே மனிதர்கள் யாரும் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. சிறிது காலம் முன்பு கைவிடப்பட்டதன் அடையாளமாக குப்பை கூளங்கள் நிறைந்திருந்தன. ஆளில்லாத மடாலயத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோமே என ஏமாற்றமாயிற்று.

     கதவு சாத்தி இருந்தது. ஆனால், பூட்டு இல்லாததால் தள்ளிப் பார்த்தான். திறந்துகொண்டது.

     உள்ளே சென்றான். பெரிய கூடத்தில் அவன் கண்ட காட்சி, அவனை மிகவும் குதூகலப்படுத்தியது. ஓவியம் வரைவதற்கான அரிசித் தாள்கள் ஒட்டப்பட்ட சட்டகங்கள் அங்கே நாற்புறமும் நிறைய இருந்தன.

      ஜோஜீ உற்சாகத்தோடு தூரிகை மற்றும் மையை எடுத்து வரையத் தொடங்கினான்.

     குட்டிப் பூனை, தாய்ப் பூனை, தாயிடம் பால் குடித்துக்கொண்டிருக்கும், பூனைக் குட்டிகள், குட்டிகளுக்கு பதுங்கவும் பாயவும் கற்றுத் தருகிற பூனை, தன் உடலை நக்கி சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும் பூனை, மதில் மேல் பூனை, கூரை மீது பூனை, தியானத்தில் ஆழ்ந்திருப்பது போல கண்களை மூடி அமர்ந்திருக்கும் பூனை, படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் பூனை, உடலை நீட்டி நின்று சோம்பல் முறிக்கும் பூனை, கூன் விழுந்தது போல் முதுகை உயர்த்தி வளைத்து சீறும் பூனை,…

     பூனைகள், பூனைகள், பூனைகள்!

     இங்கே அவனைக் கண்டிக்க யாரும் இல்லாததால் மிக உற்சாகத்தோடு, பசி – தாகம் பற்றிய எண்ணம் இன்றி, அங்கிருந்த சட்டகங்கள் முழுதிலும் பூனைகளை வரைந்தான்.

       இறுதியாக, முழு நீள சட்டகம் ஒன்று இருந்தது. அது சுமார் 4 அடி உயரமும், 7 அடி நீளமும் இருக்கும். அதில் அவன் அந்த சட்டத்தை அடைத்துக் கொள்ளும் விதமாக ஒரு பிரம்மாண்டமான பூனையை வரைந்தான்.

     அதை வரைந்து முடித்த பிறகு மிகவும் களைப்பாக இருந்தது. ஆனால், அந்தக் கூடத்தில் படுத்து உறங்குவதற்கு சௌகரியம் எதுவுமில்லை. அடுத்த அறைகளில் படுக்கை ஏதேனும் இருக்கிறதா என்று சென்று பார்த்தான். தடுப்புக்கு அப்பால் கட்டிலும் மெத்தையும் இருந்தன. மூலையில் இருந்த விளக்குமாறால் ஒட்டடை, தூசி முதலியவற்றை சுத்தப்படுத்திவிட்டு, மெத்தையில் படுத்துக்கொண்டான். சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கம்.

     ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தபோது, சுற்றிலும் கும்மிருட்டு. நள்ளிரவு நேரம் ஆகியிருக்கலாம். தடுப்புக்கு அப்பால் கூடத்திலிருந்துதான் ‘கர்ர்ர்ர்… கர்ர்ர்ர்ர்…’ என ஏதோ ஒரு மிருகம் உறுமும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. புலியோ, கரடியோ என்னவோ!

     இருளாக இருந்ததாலும், கிலியில் கை கால் உதறியதாலும், அது என்ன என சென்று பார்க்கவில்லை. அது எதுவாயினும், நிச்சயமாக கொடிய மிருகமாகவே இருக்கும். அதனால்தான் இங்கே யாரும் தங்குவது இல்லை என்று புரிந்துகொண்டான்.

     அந்த மிருகம், தான் இங்கே இருப்பதை மோப்பம் பிடித்து வந்துவிடுமோ, தன்னைக் கொன்று தின்றுவிடுமோ என்ற பயத்தில் உடல் நடுங்கியது.

     அப்போது காதைக் கிழிக்கும் விதமான மிய்யாவ் ஒலியும் கேட்டது. பூனை இவ்வளவு பலமாக சத்தம் போடுமா என்று வியந்தான். ஒருவேளை, பெரிய ரக காட்டுப் பூனையாக இருக்குமோ?

     முன்பு உறுமிக்கொண்டிருந்த மிருகத்திற்கும், பூனைக்கும் இடையே சண்டை நடப்பது போன்ற சத்தங்கள் கேட்டன. ஜோஜீ அஞ்சி நடுங்கி, கூனிக் குறுகி படுத்துக்கொண்டான். சற்று நேரத்தில் சத்தம் ஓய்ந்துவிட்டது. என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

     விடிகிற வரை உறக்கமே இல்லாமல் இருளுக்குள் கொட்டக் கொட்ட விழித்தபடி படுத்திருந்தான்.

      பொழுது புலர்ந்ததும், மெதுவாக எழுந்து, மனதை திடப்படுத்திக்கொண்டு, தடுப்பிலிருந்து எட்டிப் பார்த்தான். அங்கே கண்ட காட்சி அவனை மலைக்க வைத்தது. மாடு அளவுக்குப் பெரிதாக உள்ள ராட்சத எலி ஒன்று, ரத்தக்களறியாக இறந்து கிடந்தது. இரவில் முதலில் வந்த கொடூர மிருகம் இதுதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

     அப்படியானால், இதனுடன் சண்டையிட்ட பூனைதான் இதைக் கொன்றிருக்க வேண்டும். ஆனால், ஒரு பூனை எப்படி இவ்வளவு பெரிய ராட்சத எலியைக் கொல்ல முடியும் என யோசித்துக் குழம்பினான்.

     அப்போதுதான் அவன் வரைந்திருந்த அந்தப் பெரிய அளவிலான பூனை ஓவியம் அவனது கவனத்தில் பட்டது. இடது புறம் தலையும், வலது புறம் வாலும் இருக்கிறபடியாகத்தான் அந்தப் பூனையை அவன் வரைந்திருந்தான். அது இப்போது வலதுபுறம் தலையும், இடது புறம் வாலுமாக திசை மாறி நின்றிருந்தது. அதோடு, அதன் வாயில் ரத்தக் கறையும் படிந்திருந்தது. தான் வரைந்த அந்தப் பெரிய பூனை ஓவியம்தான் உயிர்பெற்று வந்து, ராட்சத எலியோடு சண்டையிட்டு, அதைக் கொன்றிருக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது.

     தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய அந்தப் பூனைக்கு நன்றி கூறிய ஜோஜீ, “இனிமேல் யார் தடுத்தாலும் பூனைகளை வரைவதை நான் நிறுத்த மாட்டேன்!” என்றும் சொல்லிக்கொண்டான்.

*********

     அவன் அந்த கிராமத்துக்குள் சென்று, நடந்த விபரங்களைத் தெரிவித்தான். அவன் வரைந்த பூனை ஓவியம் உயிரோடு வந்து, அந்த கிராமத்து மக்களுக்கும், அந்த மடத்தில் இருந்தவர்களுக்கும் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த ராட்சத எலியைக் கொன்றுவிட்ட செய்தி, ஊர் முழுக்க பரவியது. மக்கள் கூட்டம் அவனோடு வந்து, கொல்லப்பட்ட ராட்சத எலியையும், அதைக் கொன்ற ஓவியப் பூனையையும் பார்த்துவிட்டு, அவனைப் பாராட்டிச் சென்றனர்.

     ஜோஜீ பின்னாளில் விவசாயியாகவோ பூசாரியாகவோ ஆகவில்லை. அவன் ஓவியனாக ஆகி, பூனை ஜோஜீ என ஜப்பான் முழுக்க பிரபலமடைந்தான்.

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். இந்த ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *