அன்று இரவு எப்போதும்போலதான் தொலைக்காட்சி சேனலை மாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘காலத்தை வென்றவன்’ என்ற தலைப்பில் ஒரு புகழ்மிக்க கவிஞனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லிக்கொண்டிருந்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்-அந்த கவிஞன் எட்டாவது பிள்ளையாக பிறந்திருக்கிறான் அவனுடைய பெற்றோர்களுக்கு என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சொன்னதுமே எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஏனென்றால் நானும் என் குடும்பத்தில் எட்டாவது பிள்ளை. இது ஒன்று போதாதா எனக்கு. அன்றிலிருந்து நானும் ஒரு பெரிய கவிஞனாகிவிடுவேன் என்ற குருட்டாசை எனக்குள் தோன்றிவிட்டது.
அன்றிலிருந்து எது கிடைத்தாலும் படிக்கத் தவறுவதில்லை. காமக்கதையிலிருந்து கவிதை,நாவல்,காவியக்கதைவரை என படிப்புத் தொடர்ந்தது. எதுவும் புரியாவிட்டாலும் தொடர்ந்து படிப்பேன். கடைக்கு மிக்சர் பொட்டலம் வாங்கப்போனாலும்,மிக்சர் சுருட்டித்தந்த பேப்பரையும் படிக்கத்தவறுவதில்லை.
அப்போதிலிருந்து நானும் எதை எதையோ கிறுக்கி தெரிந்த நாலுபேரிடம் காமிப்பேன்- அவர்களும் பழக்கத்துக்காக படித்துவிட்டு கருத்துச் சொல்வார்கள். அவர்களின் கருத்து எல்லாம் “உன் கவிதை ரொம்பவும் சுமார்..” என்றுதான்..
அவதாரம்
உலகத்தில் அதர்மம் தலைதூக்கும்போது அவதரிப்பேன்
என்று சொன்ன கிருஷ்ணனே
நீ தயவு செய்து அவதரித்துவிடாதே
என் சொல்லையும் மீறி
இந்த பூமியில் நீ அவதரித்தால்
உன்னை கள்ளத்தனமாக நாடுவிட்டு
நாடு வந்த அகதியென்றோ
அல்லது குண்டு
வைக்க வந்த தீவீரவாதியென்றோ
அல்லது ஏதாவது
சந்தேகக் கேஸிலோ
பிடித்துச் சிறையில்
அடைத்துவிடுவார்கள்.
கிருஷ்ணா மீண்டும் சொல்கிறேன்
உன் அவதாரம் வேண்டாம்.
0
மரம்
ஓ.. மனிதா
பணத்தை சேமிக்காதே
மரத்தை சேமி
அப்போதுதான்
நிலைக்கும் பூமி
,
மனிதா
அழுக்கடைந்த
உன் நகத்தை வெட்டுவதை
விட்டுவிட்டு
உயிருக்கு ஆதாரமான
மரத்தை வெட்டுவது
உன் தலைமுறைக்கு
நீயே
சவப்பெட்டி செய்வதற்குச் சமம்
0
துன்பம்
துன்பம் வரும் வாழ்க்கையில்
ஆயிரம்-அது தும்மல் போல
சில நொடியில் விலகிப்போயிடும்
இதைப் புரிந்து கொண்டால்
இதயம் அமைதியாகிடும்.
இதுதான் அவர்கள் சுமாரென்று சொன்ன கவிதைகள். இன்னும் நான் எழுதிய கவிதைகள் பல இருந்தாலும், போட்டிக்கு அனுப்பிய கவிதைகளில் முதன்முதல் தேர்வானது மேலே உள்ள ‘மரம்’ பற்றிய கவிதைதான். கவிதை தேர்வான நாளை இப்போது நினைத்தால் கூட மேலெல்லாம் புல்லரிக்கிறது.
ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய கவிதைப்போட்டியில் முதற்சுற்றில் என் கவிதையை தேர்ந்தெடுத்தது தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்.
பெயரை வெளிப்படையாக சொல்லாமல் மறைமுகமாக சொல்கிறேன். முடிந்தால் அந்த பாடலாசிரியரை கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.
அவர் பெயரில்’ நிலா’ சேர்ந்து வரும்.
அன்று என்றும்போல பதினொன்று மணி வரைக்கும் புளியந்தோப்பில் கிரிக்கெட் விளையாடிட்டு.. ரோட்டுக்கடையில் உள்ள தேநீர்கடையில் தேநீரும், இனிப்புவடையும் சாப்பிட்டுவிட்டு.. பெருமாள் கோவில் பின்புறம் உள்ள நூலகத்துக்கு சென்றேன். அவசரம், அவசரமாக நாளிதழ்கள், வாரஇதழ்கள் படித்துவிட்டு,வீட்டில் படிப்பதற்கு நான் சேர்ந்திருந்த நூலக உறுப்பினர் சந்தாவில் கவிஞர் வைரமுத்து கவிதைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டிற்குப் போனேன்.
வீட்டிற்குள் நுழைந்தவுடனே தொலைக்காட்சியை ஆன் செய்து ரிமோட்டை எடுத்து வேகமாக கவிதைபோட்டி நடக்கும் ஒரு தனியார் சேனலுக்கு மாற்றினேன். அப்போதுதான் அந்த தனியார் சேனலில் கவிதைப் போட்டி நிகழ்ச்சி ஆரம்பமானது. என் கண்கள் ஏதோ
காணாததை கண்டதுபோல பார்க்க ஆரம்பித்தது .
சில நிமிஷங்களில் போட்டியில் தேர்வான கவிஞரின் பெயரையும் ஊரையும் வாசிக்கத் துவங்கினார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் .
நானும் தேர்வாகிவிடுவானா என்ற ஐயம் எனக்குள்ளிருந்தது…! தேர்வான பலபெயர்கள் மத்தியில் என் பெயரையும் நிகழ்ச்சித்தொகுப்பாளர் சொன்னதும் எனக்கு இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது. என் உடம்பெல்லாம் பதட்டமாகி இரத்தம் சூடானது.
அடுப்படிக்குள் ஏதோ வேலையிலிருந்த அம்மாவைப் பார்த்து “எம்மா கவிதைப்போட்டியில எம்பேரையும் சொல்றாங்க.. சொல்றாங்க..” என்றேன் தன்னிலை மறந்து.
அம்மா எனக்கென்னனு எதிலும் ஈடுபாடு இல்லாது மாதிரியிருந்தாள். திரும்பவும் “வேமா வாம்மா வேமா வாம்மா “என்று என் ஆவி போகுமளவு சந்தோஷத்தில் கத்தினேன்.
அவள் வந்து நின்றதும், என் பெயரைத் தாண்டி தேர்வான வேறொரு பெயரை சொல்லிக்கொண்டிருந்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.
“இப்பத்தான்மா எம்பேரை சொன்னாங்க” என்றேன். அவள் முகத்தில் சந்தோஷம் துளியளவு இல்லை. ஏன்டா என்னபோட்டு பாடாய்படுத்துற ஏன்டா கிறுக்கா..! என்ற முகபாவனையில் முகத்தை வைத்திருந்தாள்.
நான் கல்லூரி படித்துவிட்டு ஏதாவது கம்பெனி வேலைக்கோ அல்லது அரசு வேலைக்கோ செல்வதைத்தான் அம்மா எதிர்பார்த்தாள். இப்படி கவிதை எழுதிக்கொண்டு புத்தகம் கையுமாய் சினிமாவில் உதவி இயக்குனராய் சேர்வதற்கு முயற்சி செய்துகொண்டு,ஊர்சுற்றி தெரிவதை அவள் சுத்தமாக விரும்பவில்லை.
ஆனாலும் என் முதல் கவிதைப்புத்தகத்தை அம்மாவுக்குதான் சமர்ப்பணம் செய்யணும் என்று மனது நினைத்தது. என் புனைபெயரில் அம்மா பெயரை இணைத்துதான் ‘அமிர்தரசன்’ என்று வைத்துக்கொண்டேன்.
அம்மாவையாவது ஒருவழியில் சேர்த்திரலாம். அப்பாவை சுத்தமாக சேர்க்க முடியாது.
நான் வீட்டுக்குள்ளேயிருந்தேனென்றால் -அவர் வேகமாக வீட்டுக்குள் வந்ததுமே உடனே எதிர்க்கட்சிக்காரர்களைப்போல வெளிநடப்பு செய்திடுவார்.
அவர் வீட்டுக்குள்ளேயிருந்தார் என்றால் -நான் வேகமாக வீட்டிலிருந்து வெளிநடப்பு செய்திடுவேன்.
அப்படியே இரண்டுபேரும் வீட்டுக்குள்ளிருப்பது உறங்கும் நேரம் மட்டும்தான்.
அப்பாவும் நானும் அதிகமாக பேசிக்கொண்டதில்லை. அப்படியே பேசிக்கொண்டாலும் மாறி மாறி திட்டிக்கொள்வதாத்தான் இருக்கும்.
வீட்டுக்கு வந்து என்னை வைவதற்கு பதிலாக அம்மாவைப்போட்டு வெளத்தில் வசவாய் வைவார். இந்த மாதிரிப்புள்ளய பெறுவதற்கா முத்துமாரி கோவில்ல போயி கரும்புல தொட்டிகட்டிப் போட்டேன் வேண்டிக்கிட்டேனு பொலம்பா பொலம்புவார். நான் படித்துவிட்டு உருப்படியான வேலைக்கு போகலேனு -அவருக்கு எப்போதுமே என்மேல் கடுப்பு .
அப்பாவுக்காவது ஏதாவது ஒரு கவிதை போட்டியில் ஜெயிக்கவேண்டும். அவர் முன்னாடி நான் அறிவாளி என்று நிரூபிக்கவேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. அந்த முயற்சியில்தான் கண்ணுக்கு படுகிற எல்லாம் போட்டியிலும் ஏதாவது கவிதையை எழுதி அனுப்பிவிடுவேன்.
அதன் விளைவுதான் அன்று மரம் பற்றி எழுதின கவிதை முதல்சுற்றில் தேர்வானது.
தேர்வானதைப் பற்றி அம்மா கண்டேகொள்ளவில்லை. நான் வெற்றிபெற்றதை அம்மாவே கண்டுகொள்ளாதபோது-எனக்கு அந்த வெற்றி ஒரு தோல்வியாத்தான் தெரிந்தது.
அதற்குப்பிறகு பழக்கமானவர்களிடம் போய் சொல்வோமென்று
சாயங்காலம் எப்போதும் எல்லோரும் கூடுமிடமான தெப்பத்து சுவர் பக்கத்தில் முதல் ஆளாய்போய் நின்று காத்திருந்தேன்.
கொஞ்சநேரத்தில் எல்லோரும் வந்ததுக்குப்பிறகு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தேன் ஆர்வத்துடன்.
“அட போடா ஓம்பேரு ரேஷன் கார்டுல வந்துச்சுனு சொன்னா நம்பலாம் .கவிதப்போட்டியில தேர்வாகி வந்துச்சுன்னு சொன்னா எப்படி நம்புவது..! சும்மா ரெண்டுநாளு நூலகத்துல ஒட்காந்து நீ படிச்சாப்புல கவித எழுத வந்துருமோ..” என்றான் நக்கலாக மாணிக்கம்.
“ஏய் உண்மைதான்டா நான் சொல்றது” என்றேன் நான்.
“நீ எட்டாம் வகுப்புலே மொத வருஷம் தேர்வாகாம ரெண்டு வருஷம் படிச்சவன். நீ கவிதப் போட்டியில தேர்வாகிட்டேன்னு சொன்னா எப்படிடா நம்புறது” என்றான் மணி.
“சரி நீங்க நம்பலேன போங்கடா.. நீங்க நம்பிட்டாப்புல எங்க வீட்டுக்கு அரிசி பருப்பு ஒரு கிலோ கூடயா வந்தறப்போகுது” என்றேன் வெறுப்பாக.
“பெரிய கவிஞர் கண்ணதாசன்.. இவர் கவிதை எழுதுனாருனு..” என்று கேலி பண்ணினான் முத்து.
அதுக்குப்பிறகு அவங்கெகிட்ட எப்படிச் சொல்லி நம்பவைப்பது என்று யோசித்தபோது அடுத்தவாரம் இரண்டாவது சுற்றுக்கு கவிதை அனுப்பவேண்டியிருந்தது. அனுப்பிய கவிதை இரண்டாவது சுற்றில் தேர்வாகிவிட்டால் சந்தோஷம். தேர்வாகவில்லையென்றால் என்று யோசித்தபோது பயமாகயிருந்தது.
அடுத்தவாரம் வியாழக்கிழமை இந்த கவிதைப்போட்டி நிகழ்ச்சி டி.வி.யில் போடும்போது -இப்ப வாய் பேசுற எவனையாவது ஒருத்தன பார்க்க வைக்கணும். அந்த இரண்டாவது சுற்றுல நம்ம பேரு வந்துச்சுனா.. அப்புறம் இருக்குது,இவங்களுக்கு வேடிக்கைனு நெனச்சுக்கிட்டே “ஏய் அடுத்தவாரம் கவிதைப்போட்டி டி. வி. யில போடுறப்ப சொல்றேன். அப்ப வந்து பாருங்க” என்றேன் வீரப்பாக-
ஆனாலும் மனதுக்குள் பயமிருந்தது. இரண்டாவது சுற்றுக்கு அனுப்புகிற கவிதை தேர்வாகிவிடுமா.. என்ன தைரியத்தில இவங்கிட்ட இப்படி சொல் நழுவாமல் சொன்னேனென்று.
சிலநொடிகளில் “ஏன் அடுத்தவாரம் வரைக்கும் பொறுக்க.. ஒனக்குதான் கவிதை எழுத வரும்ல.. இப்பயே கவிதை ஏதாவது எழுது.. இல்லேனா வாயால சொல்லு” என்றான் தெனாவெட்டாக மாணிக்கம் .
அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.
ஏதோ வீராப்பில் “என்ன கவிதை சொல்ல.. எத வச்சு சொல்ல” என்றேன் வேகமாக நான்.
எத வச்சு கவிதை எழுத சொல்லி எப்படி இவன கவுக்கலாம் என்ற யோசித்து நாலாபுறமும் சுற்றிப்பார்த்தான் மாணிக்கம். அவன்கூடவே மணியும், முத்துவும் ஆர்வமாக சுற்றிப்பார்த்தார்கள்.
இறுதியாக அவர்கள் பார்வை தெப்பத்தின் வடக்குப்பக்கம் நின்றது. மழை பெய்யாததால் தெப்பத்தின் உள்ளேயிருந்த களிமண் சுக்கா காய்ந்து உடைபட்ட கண்ணாடிபோல் விரிசல்விரிசலாய் இருந்தது.
ஊர் கழிவுத்தண்ணீர் வடக்கு தெப்பத்து சுவரோரம் இறங்குவதால் அங்கே மட்டும் கொஞ்சம் புற்கள் முளைத்திருந்தன.
அதனை இரண்டு பசுமாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. மூன்று காக்காகள் உன்னி பிடுங்கிக்கொண்டிருந்தன பசுமாடுகளின் முதுகில்.
தெப்பத்து சுவரைத்தாண்டி கும்மலாக முளைத்துக்கிடக்கும் வேலிச்செடியருகே வேலாண்டி கற்றாழை பிடிங்கிக்கொண்டிருந்தான் தன் தலையில் தேய்ப்பதற்கு-அவனுக்கு இளம்வயதிலே முடி கொட்டிவிட்டதால் உடற்சூட்டை குறைத்தால் எப்படியாவது இருக்கிற கொஞ்ச முடியை காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
ஒருவாட்டி திருச்செந்தூருக்கு நண்பர்களோடு வேலாண்டி டூர் போயிருந்தான். அப்போது சோசியம் பார்த்தான் கிளிச்சோசியக்காரனிடம். அவனுக்கு கிளி எடுத்த சீட்டில் திருப்பதிசாமி வந்திருந்தது.
திருப்பதி படம் வந்ததைப் பார்த்துவிட்டு “உங்களுக்கு இனி கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது” என்றான் சோசியக்காரன்.
வேலாண்டி தலையைப் பார்த்துக்கொண்டே “இருக்குது நாலுமுடி இது கொட்டுச்சுன்னா சுத்த வலுக்கையாகிடும் “என்றான் நக்கலாக பிச்சைமுத்து. அவன் அப்படிச் சொன்னதும் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். சோசிக்காரன்” தம்பி நான் பணம் கொட்டோ கொட்டும்னு சொன்னேன். நீங்க என்னடானா தலமுடிய சொல்றீங்க….”என்றார் வேகமாக. அதற்கு “சரிண்ணே.. சரிண்ணே.. “என்றான் ஒன்னுமே தெரியாது மாதிரி பிச்சைமுத்து.
தலையில மூளையக்கூட எடுத்திடு அதுக்குப் பதிலா தயவுசெய்து எனக்கு
முடியக் கொடு கடவுளேனு அடிக்கடி புலம்புவது வேலாண்டியின் பழக்கம்.
வேலாண்டி கற்றாழை பிடுங்குவதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கம் படக்குனு தெப்பத்தின் கிழக்குப்பக்கம் பார்த்தான் .
கிழக்குபக்கம் புளியமரத்துக்கு கிழே சிறுசிறுகுழந்தைகள் ஏதேதோ விளையாடிக்கொண்டு கல்லால் புளியங்காய் எறிந்துகொண்டிருந்தார்கள்.
மாணிக்கம் மீண்டும் வேலாண்டி கற்றாழை பிடுங்குவதைப் பார்த்தான்.
கிழக்குப்பக்கம் குழந்தைகளைப் பார்த்தான். சிலநொடி ஏதேதோ யோசித்தான். கவிதை எழுத எனக்கு என்ன தலைப்பு கொடுக்கப்போறான்னு பதட்டத்துடன் இருந்தேன்.
நாங்கள் உட்காந்திருந்த தெப்பத்து சுவரையொட்டி ஊர் முகப்பு பாதை போனது. அந்தப் பாதையில் போய்க்கொண்டிருந்த ஒருவர் செல்போனில் யாரோடோ பேசிக்கொண்டே கோபத்தில் “என் மயித்துக்கு சமம் அவன்” என்று சொல்லிக்கொண்டே போனார். இதையும் மாணிக்கம் உற்றுக் கவனித்தான்.
“வடக்குப்பக்கம் ஒருவன் தலமயித்துக்காக அரும்பாடுபட்டு கற்றாழை பிடுங்கிக்கொண்டிருக்கிறான். நம்ம பக்கம் பாதையில போகிறவர் கோபத்தில ‘என் மயித்துக்கு சமம் அவன்னு’ மயித்த அவ்வளவு இழிவா பேசிக்கிட்டு போறாரு பாரு.. “என்று முத்து, மணியிடம் -மாணிக்கமிடமும் சொல்லி வாயமூடல..
படாரென்று “கவித எழுத தலைப்பு ‘மயிர்னே’ கொடுத்திடலாம் என்றான் முத்து. அதற்கு யோசிக்காமல் சரி என்றார்கள் மாணிக்கமும்-மணியும்.
என்னடா மயிர்னு தலைப்பு கொடுத்திட்டாங்கே ..நாம ஏதாவது வேற தலைப்பு கொடுப்பாங்கேன்னு பாத்தா.. நம்ம எதிர்பார்க்காத தலைப்ப கொடுத்திட்டாங்கே.. மயிர வச்சு எப்படி கவித ஆரம்பிக்க.. என்று என் மனம் குழம்பிக்கொண்டிருந்தபோது.
“ஹலோ.. இளம் கவிஞரே மயிர வச்ச ஏதாவது கவித சொல்லுங்க…” என்றான் நக்கலாக மாணிக்கம்.
நானும் அவசரம் அவசரமாக பதற்றத்தில்
‘மயிர் -அது அழகுக்கு உயிர்’
என்று ஆரம்பித்தேன் கவிதையை. அதற்குப்பிறகு எவ்வளவு யோசித்தும் கவிதை வரவில்லை.
மாணிக்கம் நக்கலாக ‘மயிர் -அது அழகுக்கு உயிர் கடையில இருக்கு தயிர்” என்றான். அதுக்கு மணியும், முத்துவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு என்னை கூசச் செய்தது.
“எனக்கு திடீரெனு கவித வரல. பேனா பேப்பரு இருந்துச்சுனா யோசிச்சு கொஞ்ச நேரத்துல வேமா எழுதிருவேன்” என்றேன் தயங்கிய குரலில். அப்போது என் உடலெங்கும் வியர்வை வரத்தொடங்கியது.
“ஆமா.. பேனா பேப்பர புடிச்சுடாப்லனா வைரமுத்து, வாலி மாதிரி கவித உடனே எழுதித் தள்ளிருவாரு” என்றான் மணி.
“அதெல்லாம் கொஞ்சநேரததில எழுதிருவேன்” என்றேன் கண்ணில் நீர் கசிய.
“அட வேலைய பாத்திட்டுப்போடா.. கவித எழுதுறாராம் கவித. இவரு கவித டி. வி. யில தேர்வாச்சாம்…” என்றான் நக்கலாக முத்து.
அவர்கள் பேசுவதை பார்த்துவிட்டு எனக்கே என்மேல் வெறுப்பு வந்தது. இவங்க முன்னாடி திடீரெனு கவித யோசிச்சு சொல்லமுடியலயேனு கோபம் வந்தது. இவங்க இப்படி பேசுனதுக்காவது நாம மயிரப் பத்தி சிறப்பா கவித எழுதாம விடக்கூடாது என்று மனதினுள் நினைத்துக்கொண்டேன்.
“இன்னும் கொஞ்சநேரம் பொறுங்க கவித யோசிச்சு சொல்றேன்” என்றேன் நான்.
“கொஞ்சநேரம் என்ன.. ஒரு மாசம்கூட பொறுக்குறோம்.. அப்பனாச்சும் கவித சொல்றயானு பாப்போம்”என்றான் முத்து.
“ஒருமாசம்ல வேணாம் நாளைக்கு காலைல சொல்றேன்” என்றேன்.
“சரி ,கவிஞரே..! நாளைக்கு காலையிலே ஒங்க கவிதைக்கு நாங்க காத்திருக்கோம்” என்றான் மாணிக்கம்.
“ஏய்.. வீட்ல போயி வேற யாராவது எழுதுன கவிதயை காப்பி அடிச்சிட்டு வந்துடாத ‘என்றான் மணி.
எனக்கு கோபம் கோவில்காளைக்கு வருவதுபோல வந்தது.
“வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு “அடுத்தவன் கவிதைய எழுதுறதாயிருந்தா.. நான் எதுக்கு ஒங்கிட்ட தொண்டத்தண்ணிய இப்படி வத்தடிச்சுக்கிட்டு இருக்கப்போறேன்” என்றேன்.
“சரிப்பா. சரிப்பா” என்றான் நய்யாண்டியாய் மாணிக்கம்.
நமக்குள் இருக்கும் திறமையை நமக்கு அருகில் இருப்பவன் எப்போதும் ஏதாவது ஏளனம் செய்வது இயல்புதான் என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
“சரி நாளைக்குப் பார்க்கலாம்” என்று நானொரு திசையில் போக. அவெங்கெ மூன்றுபேரும் ஒரே திசையில் போனார்கள்.
2
அன்று இரவுபூராவும் மயிரைப்பற்றி கவிதை எழுதவேண்டுமென்று தூங்கவேயில்லை. தூக்கத்தை சிந்தி சிந்தியாவது கவிதையை உருவாக்கிவிடனுமென்று வைராக்கியம் மனதிலிருந்தது. தூக்கமாத்திரை போட்டாக்கூட தூக்கம் வந்திருக்காது அந்தளவுக்கு அவெங்கெ மூன்று பேரும் என்னை படுத்திய இழிவு என் மனசில பதிந்திருந்தது.
எப்படி கவிதை எழுதவேண்டுமென்று எனக்குப் பிடித்த கவிஞர்களான பாரதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வைரமுத்து, வாலி போன்றவர்களின் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்தேன்.
இறுதியாக மயிர் எது எதுக்கு பயன்படுகிறது அது அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம்வரை எவ்வாறு வரலாற்றில் பதிவாகியிருக்கிறது என்பதை மனதில் குறுக்குமறுக்காக ஓட்டிப்பார்த்தேன். அப்படியிருந்தும் கவிதை மனசுக்கு பிடிபடவில்லை.
மணி பத்தானது, பதினொன்னானது, பன்னிரெண்டானது, ஒன்னானது. எனக்கு கவிதை வரவில்லை என்பதால் அந்த குளிரும் இரவும் வெப்பமாக தெரிந்தது.
ஒன்னுக்கு நெருக்குவது போலிருந்தது. லைட்டை போட்டு கதவை திறந்தேன். வாசலில் பாயில் படுத்திருந்த அம்மாவின் தலைமுடி அவிழ்ந்து லைட் வெளிச்சத்தில் கலைந்து குறுக்குமறுக்காக நீண்டு கிடந்தது .
அந்த கோலத்தில் அம்மாவைப் பார்க்கும்போது சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னனிடம் கோபத்தில் நீதி கேட்க வரும் கண்ணகியை ஞாபகப்படுத்தியது.
அம்மாவின் முடியில் கண்ணகியைப் பார்த்த அந்த ஒற்றை நொடியில் கவிதை கணக்குவழக்குத் தெரியாமல் வரத்தொடங்கியது.
எந்த அம்மா நான் எழுதுவதை வெறுத்ததோ -அந்த அம்மாவின் தலைமயிரிலிருந்தே எனக்கு கவிதை எழுதுவதற்கான ஆரம்பப் புள்ளி உருவானது. இதை எப்போது நினைத்தாலும் ஆச்சரியம்தான்.
கவிதையை ரெண்டு மணிக்கெல்லாம் எழுதி முடித்துவிட்டேன். மனதெங்கும் அவ்வளவு நிறைவான சந்தோஷம்.
அன்றைய சூரியன் உதயமாக முன்னே எனக்கு மட்டுமே இரவு விடிந்திருந்தது . .
விடிந்தபிறகு எவ்வளவு சீக்கிரமாக குளிக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக குளித்துமுடித்தேன். குளிக்கும்போது கண்களெல்லாம் திகுதிகுன எரிந்தன. இரவெல்லாம் சரியாக தூங்காததால்.
இருப்பதிலே நல்ல சட்டை, கைலியை அணிந்து சாப்பிட உட்கார்ந்தேன். அப்பா எப்பவும் போலவே என்னை ஜாடைமாடையாக வையத்துவங்கினார்.
எனக்கு அப்போது சாப்பிட மனமில்லை. உட்கார்ந்தவன் எழுந்தேன். எழுதிய கவிதையை மேல் சட்டை பையில் எடுத்துவைத்தேன். அம்மா எப்பையும்போல “எடேய் சாப்பிட்டுப்போடா “என்றாள் உண்மையான அக்கறையுடன். நான் அவள் சொல்வதை காதில் வாங்கவில்லை.
வீட்டிலிருந்த கோபம் தெருவுக்கு வந்து எட்டு வைக்க எட்டு வைக்க குறைந்தது. கவிதை இருக்கும் சட்டை பையை ஒருவாட்டி தொட்டுப் பார்த்ததும் கோபம் சுத்தமாக இல்லாமல் போனது.
காலைப்பொழுதில் ஊர்க்காரர்கள் பெரும்பாலும் வந்தமரும் தெப்பத்து தெற்கு சுவரோரமுள்ள புங்கமரத்தின் நிழலில் போய் அமர்ந்தேன் .
.
தெப்பத்துக்குள் சின்ன பையன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலநொடிகளில் பாதையில் முத்து வந்துகொண்டிருந்தான் -அவன்கூடவே சுந்தரம் அண்ணன் வந்துகொண்டிருந்தார்.
முத்து என்னருகில் வந்ததும் சிரித்தான். நானும் பதிலுக்கு சிரித்துக்கொண்டேன்- உண்மையிலே முத்து சிரிப்பு கூமுட்டையாய் இருந்தது.
சுந்தரம் அண்ணன் “என்னடா இன்னைக்கு சீக்கரமா வந்து உட்கார்ந்திட்ட” என்றார்.
“சும்மாதான்னே” என்றேன்.
“சும்மாலாம் இல்லண்ணே” என்று நேற்று நடந்த விஷயத்தை சொன்னான் முத்து.
“ஓ.. அதுக்குதான் தம்பி இப்பவே வந்துட்டானா..”என்றார். நான் அதற்கு சிரித்துக்கொண்டேன்.
“பள்ளிக்கூடத்து புள்ளைக தம்பிட்ட கட்டுரை, கவிதை,கிவிதையெல்லாம் எழுதி வாங்கிட்டுப்போறத பாத்திருக்கேன்.-அதெல்லாம் தம்பி கவித நல்ல எழுதுவுயான்” என்றார் சுந்தரம் அண்ணன்.
அவர் அப்படிச் சொல்லும்போது கூச்சம் கலந்த சந்தோஷம் வந்தது.
கொஞ்சநேரத்தில் நான் எதிர்பார்த்த மாணிக்கமும்-மணியும், வந்தார்கள். அவர்கள் வருகையினால் முத்து முகத்தில் கூடுதலாய் சந்தோஷம் வந்தது.
“என்ன கவிஞரே எப்ப வந்திங்க.. மயிரப் பத்தி கவித எழுதிட்டிங்களா..? இல்ல இன்னும் ரெண்டுநாளு டைம் வேணுமா..? என்று எகடாசியாக கேட்டான் மணி .
“அதெல்லாம் நம்ம தம்பி கவிதை எழுதியிருப்பாரு” என்றார் சுந்தரம் அண்ணன்.
“ஒங்க தம்பி இன்னியா வரைக்குமா கவித எழுதாம இருப்பாரு.. அவர்தான் பெறக்கறப்பயே அம்மான்னு கத்தமா.. கவிதனு சொல்லி கத்துனாறாமே .அவர் பெறப்பலேயே கவிஞன்ல” என்றான் நக்கலாய் மாணிக்கம்.
இவங்கெ இன்னும் எவ்வளவுக்கு எவ்வளவு பேசணுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பேசட்டும்; அதுக்குப்பிறகு நம்ம எழுதுன கவிதையை எடுத்து காட்டுவோம் .நேத்து மாதிரி இவெங்கெ முன்னாடி இன்னைக்கு அசிங்கப்பட்டு நிற்கத் தேவையில்லை. இவங்கெ பேச்சுக்கெல்லாம் நம்ம கவித பதில் சொல்லட்டுமென்று தெனாவெட்டாக இருந்தேன் நான்.
“என்னப்பா பேசுறதெல்லாம் பேசிட்டிங்களா.. இல்ல இன்னும் ஏதாவது மிச்சம்.. சொச்சம் இருக்கா” என்றேன் மிகத் தெம்பான குரலில்.
“ஏய் எடுடா என்னத்த எழுதிருக்குன்னு பாப்போம்” என்றான் நக்கலாக மாணிக்கம்.
நான் சட்டைப்பையிலிருந்து சட்டுனு எடுத்து நீட்டினேன் கவிதை பேப்பரை.
படிக்க ஆரம்பித்த சிலநொடியிலே சுந்தரம் அண்ணன் “நான் அப்பவே சொன்னேன்ல.. தம்பி நல்லா எழுதுவான்னு..” என்று பேச்சை ஆரம்பித்தார் சந்தோஷமாக.
எல்லாத்தையும் படித்து முடித்துவிட்டு கடைசியாக “சத்தியமா இது நீ எழுதனது இல்ல.. யாரு எழுதனதையோ காப்பி அடிச்சிருக்கு..” என்றார்கள் மூவரும் மாறி மாறி.
“சரி நீங்க அப்படியே நெனச்சிங்க” என்றேன்.
“நம்ம தம்பி காப்பி அடிக்கிற ஆளில்ல.” என்றார் சுந்தரம் அண்ணன்.
“இல்லண்ணே .சத்தியம்மா இந்தக் கவிதை இவன் எழுதினதில்ல…” என்றார்கள் மூவரும் உரத்த குரலில்.
“நீங்க என்ன சொன்னாலும் பரவாயில்ல.. ஒங்ககூட போட்ட போட்டியால நான் ஏதோ கொஞ்சம் நல்லா எழுதிட்டேன். அவ்வளவுதான்” என்று பேச்சை முடித்தேன்.
என்ன சொன்னாலும் அவெங்கெ மூவரும் சொன்னதையே சொன்னார்கள்.
நான் எதுவும் காதில் வாங்காமல் நின்றிருந்தேன்.
நான் கொடுத்த பேப்பரை அவர்களிடமிருந்து படக்குனு வாங்கினேன்.
“தம்பி நீ உண்மையிலே பெரியா கர்த்தாதான்டா (படைப்பாளன்)” என்றார் சுந்தரம் அண்ணன்.
எனக்கு அவர் அப்படிச் சொல்லும்போது சந்தோஷமாக இருந்தது. அதே நேரத்தில் கூச்சமாகவும் இருந்தது.
“எண்ணே.. இவன் கர்த்தா இல்ல காப்பி கவிஞர்” என்றான் மாணிக்கம். அதற்கு மணியும், முத்தும் சிரித்தார்கள்.
“நீங்க என்ன வேணாலும் சொல்லிக்கிங்க.. ஒங்ககூட போட்ட போட்டியால நான் ஏதோ கொஞ்சம் நல்லா எழுதிருக்கேன்.” என்று சொல்லிவிட்டு .. சுந்தரம் அண்ணனிடம் “சரிண்ணே…கெளம்புறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
மூவரும் “காப்பிக்கவிஞரே…” என்று சத்தம்போட்டு சொன்னார்கள். .
‘மழைக்கால இரவில் தெருவிளக்கு வெளிச்சத்தை முட்டிமுட்டி மோதிப் பார்க்கும் ஈசல்களைப்போலதான் சிலர் வந்து சிலர் வாழ்க்கையின் வெளிச்சத்தை முட்டிமோதிப்பார்க்கிறார்கள். கடைசிவரை முட்டிமோதி முட்டிமோதி வெளிச்சத்தை மடிய வைக்கமுடியாத ஈசலாவே மடிந்து போகிறார்கள் அவர்கள். அந்தமாதிரி ஈசல் குணம்கொண்டவங்கதான் இந்த மூவரும் என்று நினைத்துக்கொண்டு வந்தேன்.
கொஞ்சதூரம் வந்ததும் கவிதையை படிப்பதற்காக ஆவலாக பிரித்தேன்.

மயிர் புராணம்
மற்றவர்மீது கோபப்பட்டவுடனே
“போடா மயிரு” என்று
ஒருதடவையாவது
திட்டியிருப்போம்
அனைவரும்
எப்போதாவது
மயிர் என்பது
அவ்வளவு கீழ்மையானதா..?
மனிதனின்
வயதை அறிவுறுத்தும்
கருவி மயிர் அல்லவா..
தலைமயிரின்
ஷாம்புக்கும்
தலை மயிரின் டையிக்கும்
கோடிக்கணக்கில்
வியாபாரம்
உண்டு உலகில்.
தலையில் இருந்தால்
கூந்தல்..
கன்னத்தில் இருந்தால்
தாடி..
மூக்குக்கீழே இருந்தால்
மீசை..
மயிருக்குதான் இருக்கும் இடத்தைப்பொறுத்து
எத்தனைபெயர்.
சிவனின் மயிர்கொண்டையில்
இருந்துதான்
கங்கை உருவானதென்று
புராணக்கதை உண்டு.
சிலப்பதிகாரத்தில் பாண்டியமன்னனிடம்
நீதி கேட்க கண்ணகி கோபத்துடன்
வந்ததை சொல்ல மறைமுகமாக
தலைவிரிகோலத்தில் கண்ணகி வந்தாள்
என்று சொல்வதுண்டு.
மனிதன்
தெய்வத்திற்கு
அதிகம் காணிக்கையாய்
கொடுத்தது
மயிரத்தான்.
அப்போ மயிர்
புனிதமானதுதானே..
தன்மேல் மற்றவர் கண்பட்டுவிடக்கூடாது
என்பதற்காக
மயிரைத்திரித்து
கண்திஷ்டிப்பொருளாக
காலில் கட்டுவார்கள்.
தலைமயிரை கோதிவிடுவது
ரஜினி ஸ்டைலின் ஒரு
அங்கம்தானே..
ரஜினி சூப்பர்ஸ்டார் ஆனது
அங்கேதானே..
பெண்கள் தலைமயிரை
சுருட்டினால்
கொண்டை..
தலைமயிரை பின்னினால்
ஜடை..
தலைமயிரை அவிழத்துவிட்டால்
பேஷன்.
பெண்கள்
தலைமயிரின் தோழிதானே
பூக்கள்..
புயலுக்கு வேரோடு
புடுங்கி விழுந்த மரங்கள்
பார்த்ததுண்டு ..
எங்கேயாவது புயலுக்கு
வேரோடு புடுங்கி விழுந்த
மயிர்கள் பார்த்ததுண்டா..
மயிர் வலிமையானது..
மரம் வலிமையானதா..
தாகூருக்கு
தாடி அடையாளம்..
பாரதிக்கு மீசை
அடையாளம்..
புத்தருக்கு தலைகொண்டை அடையாளம்.
போட்டியில் தோத்தால்
என் மீசைமயிரை
எடுத்துக்கறேன் என்று
சவால்விடும்போது
மயிர் பந்தயப்பொருள் ஆகிறது.
உச்ச சண்டையில் எதிரியின் எதிரே மீசைமயிரைத்
திருக்குவது வீரத்தின்
அடையாளத்தை குறிக்கிறது.
உறவுக்காரர்கள்
வீட்டில்
உணவருந்தும்போது….
உணவில் மயிர் தென்பாட்டால்
அந்த வீட்டு உறவு நீடிக்கும் என்கிற சம்பிரதாயம் உண்டு.
பெற்றோர்கள்
இறந்தால்
இறுதிச்சடங்கில்
தலைமயிரை எடுக்கும்போது
அது நமது கலாச்சாரத்தின் குறியீடாகிறது.
காதலிக்கும்போது
நாம் அதிகம் அக்கறைபடுவது
நம் தலைமயிரை அலங்கரிப்பதில்தான்.
சிகை அலங்கார நிலையங்களில்
தலையாதது தலைமயிர்தான்.
காதலிப்பவர்களுக்கு
தலைமயிர் எப்போதும் தவப்பயிர்தான்.
நீரில் மூழ்கியவரை
எளிதாக பாரமில்லாமல்
தூக்க தலைமயிரைத்தான்
பிடிக்கவேண்டும்.
மனிதர்கள்
மானத்திற்காக
ஒரு முடி உதிர்ந்தாலும்
உயிர்வாழாதென்று
கவரிமானை சொல்வதுண்டு.
முடி
கேசம்
மயிர்
சிகை
கூந்தல்
எத்தனை புனைபெயர்கள்
மயித்துக்கு
உதிர்ந்தால் மீட்க முடியாதது
நேரம்
ஆரோக்கியம்
ஒழுக்கம்
மட்டுமல்ல
தலைமயிரும்தான்.
அது மனிதவாழ்வில்
தவப்பயிர்தான்.
கவிதையை படித்து முடித்ததும் இது நானா எழுதினேன் என்று எனக்கே ஆச்சரியம்.
கொஞ்ச நாள் கழித்து சுந்தரம் அண்ணன் என்னைப் பார்த்தபோது வெகுவாக பாராட்டினார். “மயிரப் பத்தி நீ எழுதுன கவிதையைப் படிச்சப்பிறகுதான் தெரியுது, மயிர்ல அத்தன விஷயமிருக்குன்னு “என்று வியந்து சொன்னார்.
******************
பேச்சுவாக்கில் என் மயிர்க்கவிதை, தலமயித்தை இழந்து வாடிக்கொண்டு கையில் கற்றாழையுடன் தெரியும் வேலாண்டி காதுக்கு போனதும் ரொம்ப சந்தோஷப்பட்டான். “எனக்குப்பிறகு மயித்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது நீதான்டா’’ என்று சொன்னான். அப்படிச் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வந்துருச்சு.
அதற்குப்பிறகு ஊரில் பள்ளிப்பிள்ளைகள், காலேஜ் பயில்பவர்கள் கட்டுரை, கவிதை, பேச்சு சம்பந்தப்பட்ட போட்டிகளுக்கு என்னிடம் எழுதி வாங்கிச் செல்லுமளவுக்கு ஆகிவிட்டேன்.
நான் எழுதிக் கொடுத்தது எப்போதாவது அவர்களுக்கு போட்டிகளில் பரிசு வாங்கித் தந்துவிட்டால் என்னிடம் வந்து சொல்வார்கள். அப்பொது எனக்கு சந்தோஷம் தாங்கமுடியாது.
ஊரில் கல்யாணம் காதுகுத்து, சடங்கு என எது நடந்தாலும் வைக்கப்படும் பெரும்பாலான ப்ளக்ஸ் பேனர்களில் என் வாழ்த்துக்கவிதை இடம்பெறாமல் இருக்காது.
ஊரில் காதலிக்கிற பல பையன்கள் காதலிக்காக காதல் கவிதை கேட்டு வருவார்கள். அதற்கு வேகமாக எழுதித்தருவேன். என் காதலிக்காக நான் எழுதிய கவிதையையே சில பேருக்கு எழுதித் தந்துடுவேன்.
எப்போதோ என் இரண்டாவது காதலிக்காக எழுதிய கவிதை இப்போதும் மனசில் அழியாமல் இருக்கிறது.
நீண்ட நாளுக்குப் பிறகு பழைய காதலிகளை திருவிழாவில் அவர்களின் கணவர்களுடன் பார்க்க நேர்ந்தது.
திருமண வாழ்க்கையால் பெரும்பாலும் அவர்கள் மாறியிருந்தார்கள் அவர்களை நினைத்து ஏதாவது எழுதணும் என்று போதையில் எதை எதையோ கிறுக்கினேன்.
அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது. இப்போதும் மனதில் வந்துபோகிறது அது.
முன்னால் காதலிகளே..
உங்களுக்கு திருமணம்
முடிந்ததால்
ஒன்னு உண்டாயிருக்கிறீர்கள்
அல்லது குண்டாகியிருக்கிறீர்கள்
என் பழைய நினைவில்
எப்போதும் நீங்கள்
பூச்செண்டாகவே
இருக்கிறீர்கள்.
இந்த நக்கல் கவிதையை வாட்ஸ்ப்-ல் ஸ்டேட்டஸ் எழுதிய அன்றைக்கு போதையில் வைத்துவிட்டேன். அந்தக் கவிதையை படித்துவிட்டு சிலபேர் சிரித்தாப்லயிருக்கிற பொம்மை படத்தை அனுப்பியிருந்தார்கள்.
என் நண்பனோட அக்கா மட்டும் ’ஏன்டா பெண்கள இப்படி கேவலப்படுத்துற.. மொதல்ல அந்த ஸ்டேட்டஸ் அழிடா’னு வசவாய் வைய ஆரம்பித்ததும்.. நான் உடனே அந்த ஸ்டேட்டஸை அழித்துவிட்டு அந்த அக்காவிடம் ஏதோ போதையில நடந்துருச்சுக்கானு மன்னிப்பு கேட்டேன்.
**********************************
எங்க ஊரில் ஐந்துவரை மட்டுமே பள்ளிக்கூடமிருக்குது. அதற்குமேல் படிக்க பக்கத்து ஊர்களான மலைப்பட்டி, கடம்பன்குளம்தான் செல்ல வேண்டும்.
அப்படி கடம்பன்குளத்துக்கு படிக்கப்போன சொரிமுத்து அண்ணன் மகன் சங்கர் அடிக்கடி கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள என்னிடம்தான் எழுதி வாங்கிச்செல்வான்.
அவன் கலந்துகொண்ட போட்டிகளில் பெரும்பாலும் பரிசு வாங்கிவிடுவான். அதனால என்னவோ அவன்மேல் மற்ற பையன்களுக்கு ஒருவித மதிப்பிருந்தது.
போட்டிகளுக்கு உனக்கு யாரு இந்தமாதிரி கவிதையெல்லாம் எழுதித்தர்றது என்று கூடப்படிக்கிற பையன்கள் கேட்டுள்ளனர்.
அப்போது அவன் எங்க ஊர்ல ஒரு அண்ணன் பயங்கரமா எழுதுவாருனு என்னைப்பத்தி அளந்து விட்ருக்கான்.
அவன் அப்படி சொன்னதைக் கேட்டு நாங்க கேட்டா கவித, கிவித எழுதித்தருவாரா..? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவன் அதெல்லாம் எழுதித்தருவாருனு சொல்லிருக்கான். ஒருநாளு அவர பார்க்க வரணும் என்று சொல்லியுள்ளனர் அவர்கள். அதற்கு சங்கர் வாங்கணு சொல்லி பேச்சை முடித்திருக்கான்.
அந்தக்கூட்டத்தில் பாபு என்கிற பையன் மட்டும் கண்டிப்பா ஒருநாளு அவரப் பார்க்க வாரேன்னு அழுத்தமா திரும்பதிரும்ப சொல்லிருக்கான்.
அதைவந்து சங்கர் என்னிடம் வந்து சொன்னதும் எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
அதுக்குப்பிறகு அடிக்கடி பாபு என்கிற பையன் மட்டும் என்னைப்பற்றி அதிகமாக விசாரிப்பதை சங்கர் என்னிடம் வந்து சொன்னான்.
“பாபுக்கு ஏதாவது கவித, கிவித தேவைப்பட்டா சொல்லச்சொல்லு எழுதித்தாரேன்னு” சங்கர்கிட்ட சொன்னேன். அதற்கு சங்கர் ’சரி’ என்றான்.
நம் முகம் பாராமலே நம்மீது அதிக பாசம்கொள்ளும் முகங்களை சம்பாதிப்பது எவ்வளவு பெரும் பாக்கியம்-அந்தப் பாக்கியத்தைக் கொடுத்த என் எழுத்தை நினைத்து நானே மெச்சிக்கொண்டேன்.
சங்கர் ஒருநாள் திடீரென வந்து “எண்ணே கிரிக்கெட் மேட்ச்க்கு வர்றயா” என்றான்.”யாருகூடடா மேட்ச் “என்றேன் நான்.
“நம்ம ஊர்க்கும் -கடம்பன்குளத்துக்கும் மேட்ச்ண்ணா” என்றான்.
சிறிதுநேரம் யோசித்தேன்.
“என்னணே யோசிக்கிற..” என்றான் சங்கர்.
“இல்ல…” என்று இழுத்தேன்.
“மேட்ச்க்கு பாபு வாரயாண்ணே கடம்பன்குளத்து டீமோட சேர்ந்து..நீ மேட்ச்க்கு வந்தேன்னா விளையாடினது மாதிரியும் இருக்கும். பாபுவ சந்திச்சது மாதிரியும் இருக்கும் “என்றான் சங்கர்
பாபு மேட்ச்க்கு வாரான்னு சொன்னதுமே மேட்ச்க்கு போகலாமென்று முடிவெடுத்தேன்.
என் முகத்தைப் பாராமலே என் எழுத்தைப் பார்த்து இரசித்தவனை சந்திக்க மனம் ஆவலாய் இருந்தது-ஆனால் அவன் எதிரணியில் இருப்பது கொஞ்சம் பயமாகத்தானிருந்தது.
அவன் முன்னாடி போய் நாளை விளையாடும்போது முட்டை ரன்னிலோ அல்லது பவுலிங் போடும்போது சொதப்பியோ விடக்கூடாது என்று மனம் கொஞ்சம் அச்சம் கொண்டது.
நம் எழுத்தை இரசித்தவன் முன்னாடி கிரிக்கெட்டிலும் வீரனாய் ஜொலிக்கவேண்டும் என்ற வெறி மனசுக்குள் வந்தது.
இந்த மாதிரி மேட்ச்ல நல்ல விளையாடணும் என்று உறுதியோடு போன பலநாட்கள் சொதப்பியுள்ளேன்- அதுமாதிரி இந்தவாட்டி நடந்திடக்கூடாது என்று மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டேன்.
மேட்ச்னா எப்படி விளையாடணும் என்று யோசித்ததுமே பழனிச்சாமி அண்ணன்தான் ஞாபகத்திற்கு வந்தார்.
எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் இருந்ததால் ஆறாம் வகுப்பு சேர்த்துவிடுவதற்கு அம்மா என்னை கடம்பன்குளம் அழைத்துச் சென்றாள்.
எங்கள் ஊரிலிருந்து அரைக்கிலோமீட்டர் தூரத்தில் பசும்பொன்புரம் என்ற சின்ன ஊரையொட்டி பெரிய கம்மாயிருந்தது-அந்தக் கம்மாயைக் கடந்து கிழக்குப்புறம் கரையேறினால் கடம்பன்குளம் வந்துவிடும்.
மழைக்காலங்களில் கம்மாய் பெருகிவிட்டால் பசும்பொன்புரத்திலிருந்து விருதுநகரை நோக்கிப் போகும் சாலையில் ஒருகிலோமீட்டர் தூரம் சென்று வலதுபுறம் கட்டாகி கடம்பன்குளம் போகவேண்டியிருக்கும்.
மழைக்காலங்களில் சாலையைச் சுற்றி செல்லவேண்டும் என்பதாலேயே ஆறாம் வகுப்புபோகும் பெரும்பாலான பள்ளிக்கூடத்து குழந்தைகள் சைக்கிள் ஓட்டிப் பழக ஆரம்பித்துவிடுவார்கள்.
மலைப்பட்டியில் சின்ன சின்ன குழந்தைகள் ஓட்டிப் பழகுவதற்கேற்ப குட்டிகுட்டி வாடகைச் சைக்கிள் கொடுக்கும் கடைகள் உண்டு.
ஒரு நாளைக்கு வாடகை இருபது ரூபாய். ஞாயிற்றுக்கிழமைகள் வெல்லனையாப் போய் சைக்கிள் எடுத்து பழக ஆரம்பித்து விடுவார்கள் பெரும்பாலான குழந்தைகள்.
ஞாயிற்றுக்கிழமை முடிவதற்குள் தக்கிமுக்கி சைக்கிள் கொஞ்சம் பழகிவிடுவார்கள். சைக்கிள் பழகும் ஆர்வத்தில் கீழேமேலே விழந்து கை கால்முட்டிகளில் ஒரப்புண் ஆக்கியிருப்பார்கள்.
இப்படியாக சைக்கிள் பழகி பள்ளிக்கூடம் போவதற்கு பெற்றோர்களிடம் முரண்டு பிடித்து சைக்கிள் வாங்கிவிடுவார்கள் குழந்தைகள்.
சைக்கிள் வாங்கி கொடுத்துவிட்டால் போதும் வீடு தங்கமாட்டார்கள் குழந்தைகள். பேலப்போனாலும் மோளப்போனாலும் சைக்கிளோடுதான் போவார்கள்.
சைக்கிளை புதுப்பெண்ணைப்போல எப்போதும் சிங்காரித்துக் கொண்டேயிருப்பார்கள்.
சைக்கிளில் வீல் செயினை மறைக்கும் கவர்களில் தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் படங்களை சோத்துப்பருக்கையால் ஒட்டி வைப்பார்கள்.
அம்மா என்னை கடம்பன்குளம் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடணும் என்று பேச்செடுத்ததுமே எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கும்படி அம்மாகிட்ட சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.
அம்மா ’இன்னும் சைக்கிளே பழகல.. அதுக்குள்ள சைக்கிள் கேட்குறான் பாரு’ என்று சொன்னதுமே.. நான் ’அதெல்லாம் சைக்கிள் பழகிருவேன்’ என்றேன் வேகமாக
அம்மாவும் கொஞ்சநாளு கழிச்சு சைக்கிள் வாங்கித்தாரேன் என்று சொன்னதும் எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
அன்று கடம்பன்குளம் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு அம்மா என்னை அழைத்துச்சென்றபோது பசும்பொன்புரம் ஒட்டிய அந்த பெரிய கண்மாய் வழியே செல்லும் மாட்டுவண்டிப்பாதையில் அழைத்துச் சென்றாள்.
சில பள்ளிக்கூடத்துபிள்ளைகள் எங்கள் முன்னாடியும் பின்னாடியும் நடந்து வந்தார்கள். சிலபேர் சைக்களில் வந்தார்கள்.
பசும்பொன்புரம் பக்கத்திலிருந்து சைக்கிளில் வரும்பிள்ளைகள் கம்மாக்கரை வந்ததுமே தக்கிமுக்கி வேகமாக மிதித்து கரையின் உச்சியில் ஏற்றி கம்மாய்க்குள் இறங்கும்போது கால்களால் சைக்களின் பெடலை மிதிக்காமலே சந்தோஷமாக சள்ளுனு வேகமாக இறங்கினார்கள்.
அதைப் பார்த்ததுமே சைக்கிள் வாங்கி நாமளும் இந்தமாதிரி கம்மாக்கரை உச்சியிலிருந்து சள்ளுனு ஓட்டணும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒத்தப்பொட்டு தண்ணியில்லாத கம்மாயின் நடுமையத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவர் வீசிய பந்தினை எதிர்கொண்ட பேட்ஸ்மென் அடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார். பந்து வீசியவரை பாராட்டி ரொம்பப்பேர் கைதட்டினார்கள்.
அம்மாவுடன் நடந்துகொண்டே கிரிக்கெட்டை கவனித்துக்கொண்டே வந்தேன். கொஞ்சம் உற்றுப்பார்த்தேன் பந்து வீசியவர் பழனிச்சாமி அண்ணன்.
அவர் வீசுகின்ற ஒவ்வொரு பந்துக்கும் கைதட்டுகள் வந்துகொண்டிருந்தன.
கடம்பன்குளம் பள்ளிக்கூடத்தில் சேர்ந்த கொஞ்ச நாளில் நானும் கிரிக்கெட் பார்க்க பழகிக்கொண்டேன்.
பள்ளிக்கூடம் அருகே உள்ள பஞ்சாயத்து டி. வி. யில் கிரிக்கெட் ஓடுகிறது என்றால் எங்கேயும் இல்லாத கூட்டமெல்லாம் வந்துவிடும்.
ஒன்னுக்குப்போறேன், ரெண்டுக்குப்போறேன் என்று வாத்தியார்களிடம் பொய்சொல்லிவிட்டு அப்பைக்கப்ப கிரிக்கெட் ஸ்கோரைப் போய் பார்த்துக்கொள்வது எங்களுக்கு வழக்கமாகிப்போச்சு.
ஒருவாட்டி இப்படித்தான் பள்ளிக்கூட இன்டர்வெல் நேரத்தில் ஒன்னுக்கு இருக்கப்போயி கடையில் இந்தியாவுக்கும் -இங்கிலாந்துக்கும் நடந்த மேட்ச்ச என் நண்பர்களோட பார்க்கலாச்சு.
இங்கிலாந்து முதல் பேட்டிங் பிடித்து பெரிய ஸ்கோர் அடித்திருந்தார்கள். இரண்டாவது பேட்டிங்க பிடித்த இந்தியா விக்கெட்டை சீரான இடைவெளியில் இழந்திருந்தாலும், ஸ்கோரை கொஞ்சம் அடித்து வைத்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சம் கிரிக்கெட் தெரிந்திருந்தாலும் அப்போதுதான் எனக்கு கிரிக்கெட் பார்ப்பது கொஞ்சம் முழுமையாக பிடிபட்டது.
இந்திய இடதுகை ஆட்டக்காரர் ஒருவர் இறங்கி இறங்கி சிக்சர் விளாசிக்கொண்டிருந்தார்.
அவர் அடிப்பதைப்பார்த்து எல்லோரும் கைதட்டினார்கள். நானும் என்னையறியாமல் கைதட்டினேன். அவர் பேரு என்ன என்று விசாரித்து பார்த்தபோது சவுரவ் கங்குலி என்றார்கள்.
அவர் அடிக்கும் சிக்சர்கள் மிக உயரத்தில் போய் விழுந்தது. அந்த சிக்சர்மூலம் அன்றுமுதல் அவருக்கு நான் இரசிகனாகிப் போனேன்.
அன்றுமுதல் வாய்நுமுற கங்குலிப்பேச்சுதான். யாராவது கங்குலியை குறைசொல்ல ஆரம்பித்துவிட்டால் எனக்கு அவர் எதிரி ஆகிப் போவார்.
அம்மா பள்ளிக்கூடம் போவதற்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்ததுமே வீல் ஜெயின் கவரில் கங்குலி ஸ்டிக்கரைத்தான் ஒட்டினேன். அதுமாதிரி வீட்டு கதவுகளில் கங்குலி ஸ்டிக்கரைத்தான் வளைத்து வளைத்து ஒட்டினேன்.
அதேமாதிரி கடம்பன்குளம் பள்ளிக்கூடத்தில் யாராவது கங்குலி இரசிகர் இருந்தால் எனக்கு நட்பாக்கிக்கொண்டேன்.
அதற்குப்பிறகு காடுமேடு தோப்புகளில் கிரிக்கெட்தான் எந்த நேரமும். நாளைக்கு பள்ளிக்கூடத்தில் முழுஆண்டுத்தேர்வு பரீட்சைனாக்கூட கிரிக்கெட் விளையாண்டுக்கிட்டுதான் இருந்தேன்.
எந்த ஊர்ல மேட்ச் நடந்தாலும் என்னை விளையாட கையோடு அழைத்துச்செல்வார். அவர் லெவலுக்கு விளையாடாட்டாலும் அவர் பாராட்டும்படி பவுலிங்கிலோ.. பேட்டிங்கிலோ கொஞ்சம் கலக்கிடுவேன்.
பழனிச்சாமி அண்ணன் போன்ற குருவிடம் என்னதான் பாராட்டைப் பெற்றாலும்-என் எழுத்தை இரசித்த பாபுவின் முன்னால் சிறப்பாக விளையாடணும்னு மனது அதிகம் விரும்பியது.
***********************
நான் படிக்கும்போது விளையாண்ட அதே தண்ணியில்லாத கம்மாய்தான் இப்போதும் கிரவுண்ட். பவுலிங் வீசிப் பார்த்தேன். பேட்டிங் பிடித்துப் பார்த்தேன்.
.
கடம்பன்குளம் டீம் வருவதைப் பார்த்ததும் “அதில் யாருடா பாபு என்றேன்” சங்கரிடம். “அந்த செவப்புச்சட்ட போட்ருக்கான்ல அவன்தான்” என்றான்.
நான் பாபு நெருங்கி வரவர எங்க ஊரு பசங்களை பந்துவீசவிட்டு பேட் பிடித்துக்கொண்டிருந்தேன். பாபு வரும் திசை நோக்கி பந்தை தூக்கி அடித்தேன் வம்புக்கினே. பந்து உயரப் பறப்பதை அண்ணாந்து பார்த்துக்கொண்டே வந்தான் பாபு.
பாபு வந்ததும் இவர்தான் “கவித எழுதுற அண்ணன்” என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தான் சங்கர்.
“எண்ணே கவிதை சூப்பரா எழுதுறிங்க” என்றான் பாபு உணர்ச்சிவசப்பட்டு வேகமாக.
அதற்கு கூச்சப்பட்டு சிரித்துக்கொண்டே “தேங்ஸ்டா தம்பி” என்றேன்.
சிறிதுநேரம் அமைதி நிலவியது. அதற்குள் டாஸ் போடப்பட்டது. எங்க அணி டாஸ் ஜெயித்து பேட்டிங் என்று முடிவானது. .
“சரிண்ணே “என்று பீல்டிங் பண்ண கிளம்பினான் பாபு. அவன் போவதையே பார்த்தேன். பாபு முன்னாடி நன்றாக விளையாடணும் என்று மனதில் அழுத்தமாக ஓடியது.
எங்க டீம் ஓப்பனர்கள் முத்துவேலும், ஞானகுருவும் இறங்கினார்கள்.
போன வேகத்தில் ஞானகுரு அவுட் ஆகி வெளியேறினான் இரண்டு ரன்னில். ஒன்டவுன் வேலு இறங்கினான். மூன்றாவது ஓவரில் முத்துவேல் ஐந்து ரன்னில் வெளியேறினான். நான் இறங்கினேன் ரொம்பவும் பதட்டத்துடன். என் மனதில் பூறாவும் பாபு இருந்தான். அவனுக்காகவாவது சிறப்பா விளையாடணும் என்று மனதிலோடியது.
நான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டு ஆகிவிட்டேன். ஏன்டா விளையாட வந்தோம்னு எனக்கு தோணுச்சு. பாபுவின் முன்னாடி கோவிலுக்கு பலிகொடுக்கும்போது அரைகுறையாக வெட்டப்பட்ட ஆட்டுத்தலைபோல மூஞ்சியை தொங்கப்போட்டு வந்தேன்.
பத்து ஓவர் முடிவில் எங்க டீம் நாப்பத்தி நாலு ரன் அடித்தது. எதிர் டீம் எட்டாவது ஓவரில் அந்த ரன்னை சேஸ் பண்ணிவிட்டார்கள்.
பாபுவின் முன்னாடி எப்படி எப்படியோ விளையாடணும்னு நினைத்து கடைசியில் இப்படியாகிப்போச்சே என்று மனதிலோடியது .
கடைசியில் கிளம்பும்போது பாபுவிடம் “நல்லாபடிக்கணும்டா “என்றேன்.
அதற்கு அவன்” சரிண்ணே” என்று தலையாட்டினான்.
“நானும் கடம்பன்குளத்திலதான் படித்தேன் தெரியுமா “என்றேன்.
“தெரியாதுண்ணா” என்றான் பாபு.
“சங்கர் இதை ஓங்கிட்ட சொல்லலயா” என்றேன்.
“சொல்லல “என்றான் பாபு.
பக்கத்திலிருந்த சங்கரை நான் திரும்பிப் பார்த்தேன். “சொல்லல அண்ணா” என்றான்.
“சொல்லலயா.. சரி அதைவிடு.. கடம்பன்குளத்துல நீ யாரு மகன்..? என்று பாபுவிடம் கேட்டேன் வேகமாக.
“ஆர்ட்ஸ்ட் செல்வம் மகன்னே..” என்றான் பாபு.
“ஏய் ஆர்ட்டிஸ்ட் செல்வம் அண்ணன் மகனாட நீயி” என்றேன் வாயைப் பிளந்தேன் ஆச்சரியமாக.
அதற்கு ஆமா என்று தலையாட்டிக்கொண்டே “ஒங்களுக்குத் தெரியுமாண்ணே எங்க அப்பாவ” என்றான் பாபு.
“தெரியுமாவா.. ஒங்கப்பாதான்டா எங்க ஊருல ரொம்ப ஆர்ட்ஸ்ட் வேல பார்க்க வருவாரு.. பிரபு, கார்த்திக், ரஜினி. இப்படி ஏகப்பட்ட நடிகர்களின் படங்களை வரஞ்சிருக்காரு ரசிகர் மன்றங்களுக்கு.
நான் சொல்வதை ஆச்சரியமாக கேட்டுக்கொண்டே நின்றான் பாபு.
“இப்ப என்னடா பண்ணுறாரு அப்பா “என்றேன்.
“அவர் நிமிந்தாள், சித்தாள் வேலைக்கிப் போறார்ண்ணே.. “என்றான் பாபு.
எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்ட இப்படி சித்தாள் வேலைக்குப் போக வச்சுருச்சு காலம் என்று மனதிலோடியது.
“ஒங்கப்பா தொழில்லா ஆஹோ, ஓஹோன்னு இருந்தப்ப எங்க ஊரு பெருமாள் கோவிலுக்கு படம் கிடம் வரைய வர்றப்ப நான் வேடிக்கை பார்க்கப் போவேன். அவ்வளவு அழகா வரையுவாரு. டீ குடிக்கிற நேரம் வந்துச்சுனுபோதும்.. கையில வடை, கிடை இருந்துச்சுனா, பக்கத்தில ஏதாவது சின்னப்புள்ளைக இருந்துச்சுனா போதும் டப்னு கையில கொடுத்துருவாரு.. நானே எத்தன தடவ ஒங்கப்பாகிட்ட வாங்கித்தின்னுருக்கேனு தெரியுமா” என்று ஏக்கத்தோடு சொன்னேன்.
“நீ அவருக்கு எத்தானவது புள்ளடா” என்றேன் பாபுவைப் பார்த்து.
“நாலாவது ண்ணா”
“சரிடா நல்லா படிக்கணும”
“ம்..சரிண்ணே.. “
“இந்த ப்ளக்ஸ் பேனர் வந்ததுனாலதான் ஒங்கப்பா தொழில் நலிஞ்சி வேற வேலைக்கு போற லெவலுக்கு ஆகிப்போச்சு பாரு” என்றேன்.
சிறிதுநேரம் அமைதி நிலவியது.
“சரிடா நல்ல படி.. கவித கவித தேவைப்பட்டச்சுனா சங்கர்கிட்ட சொல்லிவிடு எழுதித்தாரேன்…சரியா.. “
“சரிண்ணே”
‘வர்ற சித்திரை திருவிழாவுக்கு எங்க ஊருக்கு வா.. “
“வாரேண்ணே”
“சரி பார்ப்போம்டா.. ஊருக்கு பார்த்துப்போ”
“சரிண்ணே” என்று கிளம்பிப்போனான்.
வரும் வழியெல்லாம் ஆர்டிஸ்ட் செல்வம் அண்ணன் நினைப்பாகவேயிருந்தது. எவ்வளவு பெரிய ஓவியன்.. இப்ப… ? என்ற நினைப்போடியது.
ஆர்ட்டிஸ்ட் செல்வம் அண்ணன் ஓவியத்தை நான் இரசித்தேன். இப்போது நான் எழுதும் எழுத்தை அவரது மகன் பாபு இரசிக்கிறான். இதையெல்லாம் நினைத்தால் பெரும் அதிசியமாகத்தான் இருக்கிறது.
செல்வம் அண்ணன் வாழ்க்கையை கவிதையாக எழுதலாமா..? இல்லை இல்லை அவர் வாழ்வை பெரும் கதையாகவே எழுதலாம்.. அவ்வளவு இருக்கு..!
நாம முன்னப்பின்ன கதை எழுதிப் பழக்கமில்ல -ஆனாலும் அப்பைக்கப்ப சிறுகதை படித்துள்ளோம் அதுபோதும் நமக்கு கதை எழதிப்பார்ப்பதற்கு.
இதுவரை கதை எழுதிப் பழக்கமில்ல ..ஆர்ட்டிஸ்ட் செல்வம் அண்ணனை வைத்து எழுதவதுதான் நாம எழுதப்போகும் முதல்கதை… கதை எழுதுவதற்கு இதுவொரு கன்னிமுயற்சி அவ்வளவுதான்..!
செல்வம் அண்ணன் போன்றவர்களின் வாழ்க்கையை எழுதாமல் நாமபாட்டுக்கு மயிரப்பத்தி கவிதை எழுதறோம்.. பெண்கள் உண்டாயிருக்கிறார்கள்.. குண்டாயிருக்கிறார்கள்..கவிதை எழுதறோம் .. ச்சீ இதெல்லாம் என்ன பழக்கம் என நானே கேள்விகேட்டுக்கொண்டேன்.
ஏதேதோ செல்வம் அண்ணன் நினைப்புகளிடையே முதன்முதலாக கவிதையிலிருந்து நகர்ந்து கதை எழுதத்தொடங்கினேன். பல முயற்சிகளுக்குப் பிறகு கதையை எழுதிமுடித்தேன் .
கதையை ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கைக்கு அனுப்பினேன். அது பிரசுரமாகாமல் திரும்பி வந்தது. மீண்டும் வேறோரு பத்திரிக்கைக்கு அனுப்பினேன்-அங்கேயும் பிரசுரமாகவில்லை. அப்போது எனக்குள்ளே ஒருபயம் வந்தது. ஒருவேளை எனக்கு கதை எழுதத்தெரியவில்லைபோல என்று எனக்கே என்மேல் வெறுப்பு வந்தது.
இதற்கிடையில் காலேஜ் படித்துவிட்டு வேலைக்கு போகாமல் இப்படித் தெரியுறேனென்று -அப்பாவுக்கும் எனக்கும் கசப்பு வந்தது. அதனாலே இடையிடேயே கட்டிட வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். படித்த வேலைக்குப் போகாமல் இப்படி கட்டிட வேலைக்குப் போகிறானென்று அப்பாவுக்கு மீண்டும் கோபம் வந்தது.
கதை பிரசுரமாகத வேதனையும் -அப்பா என்மேல் கொண்ட கசப்பும் என் மனதை நாளுக்குநாள் அழுத்தியது
இதற்கிடையில் ஒருநாள் தற்செயலாக நூலகத்தில் புதுமைப்பித்தனின் சொந்த வாழ்க்கை அனுபவக்கட்டுரையை படிக்க நேர்ந்தது -அந்த கட்டுரையில் அவரின் ஆரம்பகால சிறுகதைகள் பல பத்திரிக்கைகளில் நிராகரிக்கப்பட்டவை என்று அவர் எழுதியிருந்தார். அதைப் படித்தவுடனே எனக்குள் தன்னம்பிக்கை வந்தது. அவ்வளவு பெரிய எழுத்து மேதையின் கதையே ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நம்ம கதையெல்லாம்’ ப்பூ எம்மாம்முட்டு’ என்று எனக்குள்ளே பேசிக்கொண்டேன்.
புதுமைப்பித்தனை படித்த சந்தோஷத்தில் அடுத்த கதை எழுதலாம் என்ற நினைப்போடியது
முதல் கதையை எழுதிய எனக்கு அடுத்த கதையை எழுதுவதற்கு நீண்டநாள் பிடித்தது.
******************************
அடுத்த கதைக்கு எந்த ஒரு கருவும் கிடைக்காமல் மனதுக்கு வெறுப்பாய் இருந்தது. அந்த நேரத்தில் தமிழில் மகத்தான எழுத்தாளர்களான வண்ணநிலவன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், கி. ராஜநாராயணனன், கந்தர்வன் ஆகியோர்களின் கதைகளை படிக்க நேர்ந்தது.
அவர்களின் கதைகளை படிக்க ‘யப்பா’ என்னம்மா எழுதியிருக்கிறார்கள் என்று அசந்துபோனேன்.
அவர்களின் கதையை அசைபோட்டபடியே ஊர்சுற்றத் தொடங்கினேன்.
எனக்கு ஊர் சுற்றவது அவ்வளவு பிடிக்கும். எப்போதுமே காலையில் எட்டரைக்குள் சாப்பிட்டுவிட்டு வீட்டைவிட்டு கிளம்பி ரோட்டுக்கடையில் உள்ள தேநீர்க்கடையில் தேநீர் குடித்துவிட்டு, சிறிதுநேரம் செய்தித்தாள் படித்துவிட்டு விருதுநகர் போவதற்கு பேருந்தை எதிர்பார்த்து நிற்பேன்.
ஒன்பது மணிக்கு விருதுநகர் செல்வதற்கு அரசுப்பேருந்து இருந்தாலும் அதில் செல்லமாட்டேன். அதற்கு அடுத்து ஒன்பது இருபதுக்கு வரும் தனியார் பேருந்தில்தான் செல்வேன். அந்தப் பேருந்தில் பெரும்பாலும் இசைஞானி இளையராஜா பாட்டுதான் ஒலிபரப்பப்படும் . நான் பெரும்பாலும் அந்தப் பேருந்தில் செல்வதற்கு இளையராஜாதான் காரணம்.
இசைஞானி இளையராஜா என்றால் அவ்வளவு பிடிக்கும்.. எனக்கு இசைஞானி பாட்டு கேட்காமல் இதுவரை பொழுது விடிந்ததுமில்லை… பொழுது அடைந்ததுமில்லை.
இசைஞானியே
உன் இசைதான்
என் வாழ்க்கைக்கு
இரை
இறை
என்று கவிதையெல்லாம் எழுதியுள்ளேன்.
நான் எப்போதும் ஏதாவது ஊருக்குப்போனால் ஒரே பேருந்தில் ஒரேயடியாக போகாமல் இடையிடையே வரும் நிறுத்தங்களில் இறங்கி தேநீர் அருந்திவிட்டு அப்படியே அடுத்தடுத்த பேருந்தில்தான் போவேன்.
ஏதாவது சோலி, அவசரமென்றால்தான் ஒரே பேருந்தில் எவ்வளவு சீக்கரமாக செல்லமுடியுமோ அவ்வளவு சீக்கிரமா போவேன். மத்தபடி சோலி இல்லையென்றால் எங்கேயும் மெத்தனமாகத்தான் போவேன்.
எப்போதுமே பெரும்பாலும் நான் செல்லும் விருதுநகர் பேருந்தில் சில வேலைகளால் அன்று போகமுடியாமல் போனது. அடுத்து பேருந்து பத்துபத்து மணிக்கு வந்தது. அந்த பஸ்ஸில் போகவா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே நின்ற நான் திடீரென்று பஸ் கிளம்பும்போது திடுதிடுனு ஓடிப்போயி ஏறிக்கொண்டேன். பேருந்தில் ஏறியதும் விருதுநகருக்கு டிக்கெட் எடுக்க நினைத்தவன் பட்டென்று பாலவநத்தம் குரங்கு ஸ்டாப்பிற்கு டிக்கெட் எடுத்தேன்.
பஸ்ஸில் ஏறியதும் எப்போதும் ஜன்னோலர சீட் கிடைக்கிறதா என்று பார்ப்பேன். அப்படி சீட் கிடைத்தால் அன்று என் பயணம் ஆசீர்வதிக்கப்பட்டது என்று நினைத்துக்கோள்வேன். எனக்கு எந்த ஒரு பதவி சீட்டையும்விட, பேருந்தில் ஜன்னலோர கிடைக்கும் சீட்டுலதான் ஆர்வம் அதிகம்.
அந்த ஜன்னலோரம் சீட்டுக்கும், எனக்கும் பால்ய பருவத்திலிருந்து அதிக தொடர்புண்டு.
எனக்கு சின்ன வயசில் பஸ் சேராது. அதனால் என்னவோ பஸ்ஸில் எங்கே போனாலும் கொஞ்ச நேரத்தில் வாந்தி எடுத்துவிடுவேன்.
அதனால் அம்மா பஸ்ஸில் எங்கே போனாலும் கூடப்போக பயப்படுவேன்.
ஒருநாள் எங்க மாமா ஊர் ஆடிப் பொங்கலுக்கு அம்மா கூட பஸ்ஸில் போகும்போது கூட்ட நெரிசலில் வேர்த்து விறுவிறுத்து குமட்டிக்கொண்டு வந்தது. அதைப்பார்த்து எங்கம்மா “என்னடா வாந்தி வருதா “என்று கேட்டாள். நான் ஆமா என்று தலையசைத்தேன்.
ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருக்கும் ஒருவரைப்பார்த்து “கொஞ்சம் விலகிக்கிங்க எம்மகன் வாந்தி வருதுங்கிறான்.. இந்த ஜன்னல்வழியா வாந்தி எடுக்கட்டும் “என்றாள்.
அவர் டப்பென்று விலகுவதற்கும், நான் நகர்ந்து சென்று ஜன்னல் வழியா வாந்தி எடுப்பதற்கும் சரியாக இருந்தது.
அப்படியே ஜன்னல் வழியே வாந்தி எடுத்து கண்ணுமுன்னு தெரியாமல் கிரங்கிப் போய்விட்டேன்.
எனக்கு பக்கத்தில் நின்றிருந்த எங்க ஊருக்கார ஒரு மாமா “என்ன மாப்ள…மாசம இருக்கிறப் பொண்ணு மாதிரி இப்படி பொலுக்கு பொலுக்குனு வாந்தி இப்படி எடுக்குற..” என்று கேலி பண்ணினார்.
அதிக வாந்தி எடுத்து அசதியாக இருந்த எனக்கு அவரின் கேலிப்பேச்சு எரிச்சலை தந்தது. ஜன்னல் வழிய வந்த காற்றால் கொஞ்சம் புத்துணர்ச்சி எனக்குள் வர ஆரம்பித்தது .
அதற்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாந்தி குறைந்து பயணம் சிறப்பாக இருந்தது. அதற்குப்பிறகு எங்குபோனாலும் ஜன்னலோர சீட் கிடைத்தால் வாந்தி எடுப்பது குறைந்தது.
அதற்குப்பிறகு கொஞ்சநாளில் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்தால் வாந்தியே வருவதில்லை என்று பழக்கமானது. அப்படியே அதற்குப் பிறகு பேருந்து வாந்தி எடுக்காமல் செல்வது பழக்கமானது.
கவிதை எழுதப் பழக்கம் வந்தபிறகு சிலநேரம் பேருந்து பயணத்தில் ஜன்னலருகே உட்கார்ந்தால் கவிதை கொட்டிக்கொண்டு வரும். அதுவும் இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டு ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்துவிட்டால் போதும்.. அதற்குப்பிறகு சொல்லவா வேணும்.
பாலவநத்தம் குரங்கு ஸ்டாப் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கினேன். இறங்கியதுமே அந்த ஸ்டாப்பில் இருந்த அரசமர நிழல் வரவேற்க வந்துநின்ற உறவினர் முகம்போல அவ்வளவு குளிர்ச்சியாயிருந்தது.
தலையை கையால் வாரிவிட்டு, முகத்தை இரண்டு கையால் துடைத்தேன். மரத்திலிருந்து பழுப்புநிற இலையொன்று என் தலையில் வந்து விழுந்தது.
மரத்தை அண்ணாந்து பார்த்தேன் பழுப்புநிற, பச்சைநிற இலைகளுக்கிடையே புகுந்து வந்த சூரிய ஒளி கண்ணை கூசச் செய்தது.
டப்பென்று கண்ணை மூடினேன் வெறும் குரங்குகளாய் தெரிந்தன மரத்தின் கிளைகளில்.
கண்ணைத்திறந்து மரத்தைப் பார்த்தேன் குரங்குகளற்று வெறிச்சோடி கிடந்தது.
இந்த மரத்திலெல்லாம் நாம சின்னப்பிள்ளையா இருக்கும்போது எவ்வளவு குரங்குகள் இருந்தன.
நாம சின்னப்பிள்ளையா இருக்கும்போது காய்ச்சல், கீய்ச்சல் வந்துச்சினா அப்பா பாலவநத்தம்தான் ஊசிபோட தூக்கிட்டு வருவாரு. இந்த குரங்கு ஸ்டாப்லதான் இறங்குவார்.
பேருந்திலிருந்து இறங்கும்போதே மரத்தில எவ்வளவு குரங்குகள் இருக்கும். கையில யாராவது ஏதாவது வாங்கிட்டுப்போனா குரங்குக்கு கொஞ்சம் போட்டுப்போவாங்க..
நானே எத்தனதடவ வடையை குரங்குக்கு தூக்கிப்போட்ருக்கேன். மரத்திலிருந்து பேருந்து மேற்கூரையில் அவ்வளவு சாதாரணமா தவ்வி விளையாடும் குரங்கைப் பார்த்து எவ்வளவு தடவ கையைத் தட்டிருக்கேன்.
இப்ப பாரு ஒத்த குரங்குக்கூட காணோம். அத்தன குரங்கையும் கடைகள் பெருக பெருக அடித்து விரட்டிவிட்டார்கள் கடைக்காரர்கள்.
இப்ப குரங்குகள் இல்லேனாலும்.. அந்த ஸ்டாப்புக்கு குரங்கு ஸ்டாப் என்றாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டே, அந்த ஸ்டாப் ஓரம் தேநீர்க்கடையில் தேநீர் குடிக்க கிளம்பினேன்.
தேநீர் கடையை எதிர்த்து உள்ள பெருமாள் கோவிலின் அருகே மிகப்பெரிய ‘அனுமார்’ சிலையை புதிதாக வைத்திருந்தனர். அதைப் பார்த்ததும் எனக்கு மனிதர்களை நினைத்து சிரிப்புதான் வந்தது.
தேநீர் அருந்திவிட்டு விருதுநகர் பேருந்தை எதிர்பார்த்து நின்றிருந்தேன். அருப்புக்கோட்டை செல்லும் பேருந்தில் “வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்” என்ற இளையராஜா பாட்டு ஒலித்துக்கொண்டு வரவும் விருதுநகர் பேருந்துக்குப் பதிலாக, அருப்புக்கோட்டை பேருந்தில் ஏறிவிட்டேன்.
நம்மள மாதிரி கிறுக்கன் உலகத்திலே இருக்கமாட்டாண்டா.. இளையராஜா பாட்டு ஓடுது என்ற காரணத்துக்காக விருதுநகருக்கு போறதவிட்டுட்டு சம்பந்தமில்லாத அருப்புக்கோட்டைக்கைப்போற பேருந்தில மாறி ஏறிட்டு வாரோம்..” என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன். இந்தமாதிரி கிறுக்கத்தனமா இருக்கிறதனாலதான் நான் ஏதோ கதை, கவிதை எழுதுறேன்போல என்று நினைத்துக்கொண்டேன்.
சராசரி மனிதனினுக்கும், கலைஞனுக்கும் என்ன வேறுபாடு
சராசரி மனிதன் ஓவ்வொரு நாளையும் எப்படியாவது பணமாக்கிவிட நினைப்பவன்… ! கலைஞன் ஒவ்வொரு நாளையும் எப்படியாவது படைப்புகளாக்க நினைப்பவன்…! சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் பிழைக்கிறான்.. கலைஞன் ஒவ்வொரு நாளும் வாழுகிறான். சராசரி மனிதனினுக்கு பொருளியல் தெரியும் அழகியல் தெரியாது.. கலைஞனுக்கு அழகியல் தெரியும் பொருளியல் தெரியாது.. இப்படி ஏதேதோ சிந்தனை ஓடியது -என் கிறுக்கத்தனத்தை சமாளிப்பதற்காக எனக்குள்ளே.
பேருந்தில் ஏறியதுமே இளையராஜா பாட்டைக் கேட்டுக்கொண்டே, ஜன்னலோர சீட் கிடைக்கிறதா என்று வரிசையாக பார்த்தேன். கடைசியிலிருந்து மூன்றாவதை சீட்டைப் பார்த்ததுமே மனசு பக்கென்றது.
ராஜேஸ்வரி மாதிரியிருக்கு என்று உற்றுப்பார்த்தேன். மாதிரியேயில்ல.. அவளேதான் என்று முடிவு பண்ணிக்கொண்டு அவளருகே போனேன்.
எட்டு, ஒன்பது படிக்கும்போது ஒரு தலையாய் காதலித்தபுள்ளய இப்பொழுது எத்தன வருஷம் கழிச்சுப் பார்க்கிறேன். நான்தான் அவளைக் காதலித்தேன் ;ஆனால் அவள் முருகேசனைக் காதலித்தாள்.
ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவளின் அருகே போய் “ராஜேஸ்வரி’ என்று மெல்லிய குரலில் அழைத்தேன்.
அவள் சட்டுனு திரும்பிப் பார்த்து என்னைப் பார்த்த ஆச்சரியத்தில் “ஏய் பாண்டி” என்றாள்.
சிறிதுநேரம் இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் உதடுபிரியாமல் பார்த்து சிரித்தோம்.
பிறகு “எத்தனை வருஷமாச்சு ஒன்னப்பார்த்து.. இப்பத்தான் படிச்சுமுடிச்சுத மாதிரியிருக்கு. அதுக்குள்ள எத்தனை வருஷமாச்சு பாரு” என்றாள். அதற்கு நான் சிரித்துக்கொண்டேன்.
“நல்லாயிருக்கியா..” என்றேன்.
“ம் நல்லாயிருக்கேன்” என்றாள்.
“நீயி”
“ம் நல்லாயிருக்கேன் ” என்றேன்.
பிறகு இருவரும் வீட்டுவிசாரிப்புகள் வேலை பற்றி பேசிக்கொண்டு இருக்கையிலே, ராஜேஸ்வரி தனக்கு திருமணமானதையும் ,பத்து வருஷம் குழந்தை இல்லாததையும் சொன்னாள். அப்போது அவளுக்கு கண்கலங்கியிருந்து.
பிறகு இப்ப ஆஸ்பத்திரிக்கு செக்கப்புக்கு வந்ததாகவும்.. இன்று குழந்தை உறுதி ஆகியிருப்பதாகவும் சொன்னாள்.
எனக்கு அவள் கண்கலங்கினது ஒரு மாதிரியாகயிருந்தாலும்.. அவள் நீண்ட வருஷத்திற்கு பிறகு தாய்மையடைந்தது சந்தோஷமாகயிருந்தது.
நீண்ட பேச்சுகளுக்கிடையே பள்ளியில் படித்த யார்யாரையோ கேட்டுவிட்டு இறுதியாக -தன் பள்ளிக்காதலன் முருகேசனைப் பற்றி இராஜேஸ்வரி கேட்டாள்.
அவனைப்பற்றிக் கேட்டதுமே நான் அவனை நீண்ட வருஷங்களாக பார்க்கவில்லை என்று பொய் சொன்னேன்.
முருகேசனை கொஞ்ச நாளைக்கு முன்னால் வேறொரு வடிவமாக.. வோறொரு உயிராக பார்த்தேன். அவனை அப்படி பார்ப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கே பெரும் அதிர்ச்சியாகயிருநதது.
அதை ராஜேஸ்வரியிடம் சொன்னால் அதிர்ச்சியாகிவிடுவாள். அதனால்தான் அவனைப் பார்க்கவில்லையென்று பொய் சொல்லிவிட்டேன்.
பிறகு ஏதேதோ பேச்சுக்களுக்கிடையே புளியம்பட்டி வந்ததும் “சரி நான் இறங்கவேண்டிய இடம் வந்துருச்சு’ன்னு வேகமா சீட்டிலிருந்து எழுந்து, அதே சீட்டில் உட்காரு என்றாள்.
நான் அவள் உட்கார்ந்த இடத்திலயே உட்கார்ந்ததும் ஏதோ இனம் புரியாத சந்தோஷம். “சரி பார்ப்போம்’னு சொல்லிட்டு ஸ்டாப் வந்ததும் படபடவெனு இறங்கி ஜன்னல் வழியே டாட்டா காட்டினாள். நானும் டாட்டா காட்டினேன். பஸ் நகர்ந்தது. என் கண்ணில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது.

அவள் போனதும் கண்ணை மூடினேன். இராஜேஸ்வரியை நான் பஸ்ஸில் சந்தித்ததிற்குப் பதிலாக இப்போது வேறொரு வடிவமாக -அதாவது திருநங்கையாக இருக்கின்ற அவளின் முன்னால் காதலன் முருகேசன் சந்தித்திருந்தால் இராஜேஸ்வரியின் மனநிலை எப்படியிருக்கும் என்று யோசித்தேன்.. உடனே அடுத்தக் கதைக்கான கரு தோன்றிற்று. கதை தோன்றியதுமே மனதில் ஏகப்பட்ட சந்தோஷமாகயிருந்தது. ஜன்னல் வழியே வந்த காற்று முகத்தில் மோதுவது இதமாகயிருந்தது. அதைவிட பேருந்தில் ஒலிப்பராகிக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா பாட்டு கதை தோன்றிய சந்தோஷத்தில் ரொம்ப இதமாகயிருந்தது.
********************************
வீட்டுக்கு வந்ததும் பேப்பர் பேனாவோடு இரண்டாவது கதையை எழுத உட்கார்ந்தேன்
அப்போது என் அப்பா என்ன கோபத்திலிருந்தாரோ தெரியவில்லை -திடீரென்று அந்த கோபத்தையெல்லாம் என்மீது அப்படியே
இறக்கிவிட்டார் .
இத்தனை நாள் ஜாடைமாடையாய் அம்மாவை வைபவர் போல என்னை வைபவர்-இன்று நேரடியாகவே என்னை வைதார்.
“இப்படியே வேலவெட்டிக்குப் போகாம ஊரச்சித்திக்கிட்டு தெரிஞ்சா சோத்துக்கு ஊம்புவயா …? பெரிய கதை எழுதுறானாம் கதை.. ஊரில இல்லாத கதை… அவன் அவன் படிச்சிட்டு வேலை வெட்டிக்கி போயிக்கிட்டு இருக்காங்கே.. நீ என்னடானா தண்டச்சோறு தின்னுக்கிட்டு தெரியுற…” என்று ஆவேசமாக திட்டினார்.
பேப்பர் பேனாவை அப்படியே போட்டுவிட்டு நான் பதிலுக்கு ஏதோ சொல்ல ஏதோ வாயைத் திறந்தேன். வார்த்தைக்குப் பதிலா கண்ணீர்தான் வந்தது.
“ஏன்ங்கா ஒங்களுக்கு கிறுக்குகிறக்குப் பிடிச்சிருச்சா.. ஏன் அவனப்போட்டு இப்படி வையிறிங்க.. அவன்னா நாளைக்கு வேலைக்குப் போகாமலா போயிறப்போறான்..?’ என்று அம்மா அப்பாவை வெளமெடுத்து வைதது.
“நாளைக்கு வேலைக்கு நொட்டுறயான்.. நொட்டமாட்டாம.. எல்லாம் என் தலையெழுத்து…ப்ச் நாம பெத்தது மல்லிகப்பூவுன்னு நெனச்சா.. இப்படி அரளிப்பூவா போச்சே” என்று தலைதலையில் அடித்தார்.
நான் கதை எழுதுவதைப் அப்படியே போட்டுவிட்டு கோபத்தில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து விறுவிறுவென்று நடந்தேன். அம்மா “எலேய் எலேய் எங்கடா போற” என்று பின்னாடியே ஓடி வந்தாள்.
“இப்ப எதுக்கு பின்னாடியே ஓடி வர்ற “என்றேன் தளதளத்த குரலில்.
“வாடா வீட்டுக்கு” என்றாள் அம்மா.
“போம்மா வீட்டுக்கு ..நான் வாரேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன்.
“ஒங்க ரெண்டுபேரு சண்டையில் என் உசுறுதான் போகப்போகது” என்று கண்கசிந்து நின்றாள் அம்மா.
மீண்டும் நான் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தேன். நடக்க நடக்க அப்பா சொன்னது ஞாபகத்தில் வந்துகொண்டே இருந்தது. எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“நான் பெத்தது மல்லிகப்பூவா ஆகும்முன்னு நெனச்சா.. இப்படி அரளிப்பூவா போச்சே “என்று அப்பா சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.
இனிமேலும் வேலைக்குப்போகாம வீட்லயிருந்தா அதைவிட கேவலம் எதுவுமில்லை. இனிமே படிச்சதுக்கு ஏதாவது வேலைக்கு கிளம்புவோம் சென்னை கோயம்புத்தூருக்கு பக்கம்…
இனிமே கதை எழுதுறது, கவிதை எழுதுறது நமக்கு வேண்டாம் என்று முடிவுபண்ணி ஏதேதோ குழப்பத்துக்கிடையே கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன்.
அப்போது தற்செயலாக வானத்தைப் பார்த்தேன். அப்போது நிலா பாதி வடிவில் வானத்தில் தெரிந்தது. அதை பார்த்ததும் வெட்டிப்போட்ட நகம்போல நிலா இருக்குல்ல என்று உவமை படுத்தி பார்த்தது என் மனது. அந்த நொடியில் அந்த நொடியில் எனக்குள் ஏதோ பரவசம். நான் கதை, கவிதை எழுதுவதை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடமுடியாது என மீண்டும் உணர்ந்தேன்.
அப்போது அப்பா மீண்டும் ஞாபகத்துக்கு வந்தார். அவர் சொன்ன மல்லிகப்பூ, அரளிப்பூ ஞாபகம் வந்தது.
அந்த ஞாபகம் வந்த ஒற்றை நொடியில் சட்டென்று என் மனதில் “மல்லிகப்பூவாகவோ, அரளிப்பூவாகவோ இருப்பது முக்கியமில்லை. பூப்பதுதான் முக்கியம்.” என்ற என்றோ படித்து ஓஷோவின் சிந்தனை வந்தது எனக்குள் தரிசனமாக. அந்த சிந்தனை வந்த ஒற்றை நொடியில் என் மனது கணக்கில்லாமல் சந்தோஷத்தில் பூக்கத்தொடங்கியது. .
00

க. செல்லப்பாண்டி
செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.