சோமு
மாமல்லன் கேதவர்மன் என்ற மன்னர் ஒரு காலத்தில் சிவகேசவபுரி நாட்டை ஆண்டு வந்தார். அவரை பராக்கிரம மாமல்லன் என்றும், புஜபல சிம்மன் என்று பட்டப் பெயர் கூறி மற்ற நாட்டு மன்னர்கள் அழைக்கும் அளவுக்கு அவரது புகழ் பல தேசங்களிலும் பரவியிருந்தது. மல்யுத்தம் முதல் யானையேற்றம் குதிரையேற்றம் விற்போட்டி கம்பம் எறிதல் ஈட்டி பாய்ச்சுதல் என்று பல வித்தைகளிலும் கை தேர்ந்தவராக இருந்தார்.
அவரை எந்த போட்டியிலும் வெல்வது கடினம் என்பது நாடறிந்த உண்மையாக இருந்தது.
இத்தனை மிகச் சிறந்த போட்டிகளில் வெற்றி பெறும் திறமை கொண்டிருந்தபோதும் சிறிது மமதையும் அவரிடம் குடிகொண்டிருந்தது.
ஒருநாள் அரசவையில் மாமல்லன் கேதவர்மன் அரச காரியங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஜீவநகரம் என்ற நாட்டின் இளவரசன் மதிபாலன் அரசரை காண விரும்புவதாக சேவகன் அறிவித்தான். இதை கேட்டு மன்னர் காரணம் எதுவாக இருக்கும் என்று யூகித்தான். புரியவில்லை! சரி வரச்சொல்! என்று ஆணையிட்டு விட்டு மற்றவர்களை அனுப்பிவிட்டு இளவரசன் வருகைக்காக. காத்திருந்தான். அப்போது, இரண்டுபேர் தூக்கக் கூடிய பல்லக்குடன் பராக் கூறிக்கொண்டு ஜீவநகரைச் சேர்ந்து சேவகர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் பல்லக்கை இறக்கி வைத்தும் யாரும் பல்லக்கிலிருந்து வெளிவரவில்லை.
மன்னர் வியப்புடன், ”ஓ! சேவகா! இளவரசரை வரச் சொல் என்ன தயக்கம்! இது என் அரண்மனை!’ என்றார்.
சேவகன், ”மன்னா! இளவரசர் தாங்கள், வாருங்கள் மதிப்பிற்குரிய இளவரசே! என்று அழைத்தால்தான் வருவார். பல்லக்கிலிருந்து தங்கள் அரியணை வரை பட்டு விரிப்பொன்றும் விரித்து வைக்கவேண்டும்” என்று கூறினான்.
மன்னன் திகைப்பும், வியப்பும் அடைந்து “என்னுடைய அரண்மனையில் கவுரவிப்பது என் பொருப்புத்தான் ஆனால் உங்கள் இளவரசர் இறங்கி வருவதற்கு பட்டு விரிப்பு ஒன்று வேண்டுமோ? சரி… சரி… இதோ! ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிவிட்டு, தமது ஏவலர்களை ஏவி அழகான பட்டு. விரிப்பு ஒன்றை தரையில் விரித்து விடச் சொன்னான்.
மாமல்லன் அரசவையில் படைத் தளபதி தனாபதி என்பவன் இருந்தான். முரடன் பல போர்களில் ஈடுபட்டு காப்பு எய்திய கடும் போர் வீரன். அவனும் மிகவும் வியப்புடன் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.
பல்லக்கு தூக்கிகள் பல்லக்கை கீழே வைத்ததும் பல்லக்கையே அனைவரும் கவனித்தனர்.
பல்லக்குத் தூக்கிகளின் தலைவன், “ஆஜான பாகு…ராஜ் குல, குலத்துங்க திலகர் மாவீரர், வீரதீரசூர சூராதி சூர சூர மார்த்தாண்ட சக்கரவாலக் கோட்டை சம்ராட் சிவகைலாயர் புதல்வர் ஜீலநகர் இளவரசர் மாகனம் மதிபாலர் வருகிறார்! வருகிறார்!” என்று கட்டியம் கூறினான்.
அனைவரது கண்களும் அகல விரிந்தன. இத்தகைய வீரனை இனி என்று காண்போம். இத்தனை பட்டங்களை பெற்ற ஒரு இளவரசர் மன்னர் மாமல்ல நேதவர்மரை எதற்காக சந்திக்க வந்திருக்கிறார் என்று வியப்புடன் நோக்கின.
திரையை விலக்கி மயில்இறகுகளால் ஆன விசிறிகளால் விசிறவும், தூரிகைகளால் தூபம் போடவும், மலர் கூடைகளில் கொண்டு வந்திருந்த ரோஜா இதழ்களை கம்பள விரிப்பில் தூவி விடவும், “இதோ! எங்கள் இளவரசர் வருகிறார்” என்று கூறினான் காவலன்.
அடுத்து பல்லக்கின் உள்ளிருந்து பட்டுச் சொக்காயும் பலபலக்கும் கீழாடையும் இடையிலே வாளும் தலையிலே வண்ணக் குல்லாயும் குஞ்சலம் அசைந்தாட ஒரு இளம் குரங்குக் குட்டி கீழே குதித்தது. இங்குமங்கும் பார்த்த. வணக்கம் கூறியது. மன்னரைப் பார்த்து, வணக்கம் காட்டியது. பல்லிளித்து “ஈ” யென பலிச்சம் காட்டுவது போல் உதடுகளை நீக்கி பற்களை காட்டிவிட்டு இடையிலே தொங்கவிடப்பட்டிருந்த இடைவாளை உருவி தன் தோளில் சாய்த்துக்கொண்டு ஒரு கோமாளியைப்போல குதித்துக் கொண்டு குடுகுடுவென் மன்னரை நோக்கி ஓடியது.
படைத்தளபதிக்கு சொல்லொனாத கோபம். “மடையர்களே! இது என்ன வினையாட்டு மண்டபமா? குரங்காட்டும் மந்தையா? என்ன துணிச்சல் இருந்தால் மன்னர் யாரென்று தெரிந்திருந்தால் இத்தனை கேலிக்குரிய வேலை செய்வீர்களா? இதோ உங்களுடன் பேசிப் பலன் இல்லை. இது யாருடை தூண்டுதல் ஏன் இவ்விதம் அரசவையை அவாதித்தீர்கள் என்பதை கண்டறிகிறேன் என்று கூறி பளபளக்கும் பட்டாக் கத்தியை சுழற்றிக்கொண்டு பல்லக்கு தூக்கிகளின் தலைவனை பிடித்து இழுத்தான்.
அதே சமயம் மன்னர் தடுத்தார். ”தளபதி தனாபதி கொஞ்சம் பொறுமையாக இருங்கள்! குரங்கு ஏதோ சாடை புரிகிறது” என்று கூறி விட்டு பட்டுச் சொக்காய் குரங்கை பாங்காக எடுத்து மேடையில் நிறுத்தினார். அதற்குள் பல்லக்குத் தலைவன், ”மன்னர் பெருமானே இதோ! இங்கு குரங்கின் உருவத்துடன் நிற்பவர்தான் எங்கள் இளவரசர். இவர் கொடியவன் ஒருவனால் காட்டில் வேட்டையாடும் பொழுது கடுமையான சாபமடைந்து இந்த நிலைக்கு ஆளானார். சாபவிமோசனம் பெறும் பொருட்டுத்தான் இங்கு வந்தார்? ஆதலால் எங்கள் மீது எந்த தவறும் இல்லை. ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள். தாங்களே ஒரு நல்வழி காட்டவேண்டுமென்பதற்காகத் தான் நேரில் வந்தோம்” என்றான் இதமாக. மன்னர் “அப்படியா? என்று குரங்கைப் பார்த்துக் கேட்டதும், குரங்குக் குட்டியும் ஆமாம்! ஆமாம்! என்பது போல் தலையை ஆட்டிக்கொண்டு பல்லிளித்தது.
மன்னர் சந்தேகக் கண்களுடன் “பல்லக்குத் தலைவனே! இந்த குரங்குதான் இளவரசர் என்பது பற்றி சந்தேகம். அதற்கு விளக்கம் என்ன?” என்றார்.
உடனே பல்லக்குத் தலைவன், ”மன்னர் பெருமானே இங்கு நாங்கள் கொண்டு வந்துள்ள பொருள்கள் அனைத்தும் இளவரசர் உபயோகிக்கும் பொருள்கள். அதில் முக்கியமாக அம்பு எய்வதில் இளவரசர் மதிபாலர் வல்லவர். எய்யும் அம்பு ஒரே சமயத்தில் மூன்று பொருள்களை தைத்து துளைத்துச் செல்லும் என்பது எல்லோரும் எல்லோரும் அறிந்தது. இளவரசர் குரங்கு வடிவத்தில் இருந்தாலும் அவருடைய பராக்கிரமங்கள் அழிந்து விடவில்லை. அவரையே நிரூபித்துக் காட்டச் செய்கிறோம்: மன்னர் அவர்களுக்கு ஜீவநகர் படைத்தளபதியும் மதிமந்திரியும் எழுதித் தந்துள்ள அரச முத்திரை பொறித்த ராஜ அத்தாட்சிப் பத்திரமும். கொண்டுவந்திருக்கிறோம்’. இதோ என்று கூறி எடுத்துக் காட்டினான்.
மன்னர் மாமல்லன் பார்வையிட்டார். ’எங்கே அம்பு எய்தி காட்டச் சொல்லுங்கள்! அத்தோடு என்னுடன் மல்யுத்தப் போட்டியில் ஈடுபடுவாரா உங்கள் இளவரசர் என்பதை கேட்டுச் சொல்லுங்கள்” என்றார் நகைத்தபடி!
குரங்குக் குட்டி (இளவரசர்) தன் புஜத்தையும், துடைகளையும் தட்டிக்காட்டி ’இம் சம்மதம்’ என்று கூறிடும் முறையில் செய்கைகள் செய்தது. அடுத்து வில்லேந்தி அரச மண்டபத்தின் மையத்தில் வந்து நின்றதும், படைத்தளபதி தானாபதி மான்கொம்பை கிழக்கேயும் பலாப்பழத்தை தெற்கேயும், பெரிய மாங்கனியை மேற்கேயும் வைத்தான். உயரமான மேடை போன்ற இடங்களில், “மன்னர் பெருமான் வடக்கே. ஏதேனும் பொருளை வையுங்கள். இந்த நான்கில் மூன்று பொருள்களை இளவரசரின் அம்பு துளைத்துச் செல்லும் ஒரே சமயத்தில் ஒரே ஒரு முறை தான் அம்பு எய்வார்கள்! என்று கம்பீரமாகக் கூறினான் பல்லக்குத் தூக்கி.
மன்னர் சிரித்து விட்டு, ’அப்படியா? எங்கே படைத்தளபதி அவர்களே; நீங்களே வடக்கே நில்லுங்கள். அவர் எய்யும் அம்பை தடுத்து விடுங்கள். எப்படி மூன்று பொருள்களை ஒரேசமயத்தில் துளைக்கமுடியும்? பார்க்கலாம்?’ என்று கூறினார். அதேபோல் படைத் தளபதி தனாபதி வடக்கே நிறுத்தும் பொருளுக்கு பதிலாக உடை வாளை உருவிக் கொண்டு தயாராக நின்றிருந்தான்.
குரங்கு வடிவ இளவரசன் உடனே அம்பாரித் தூரிகையிலிருந்து ஒரு கூரான அம்பை எடுத்து வில்லில் பூட்டி முதலில் தளபதி தனாபதியை நோக்கி எய்தான். இதை எதிர்பாராவிட்டாலும். தளபதி. உடனே உடை வாளால் அம்பைத் தடுத்தான்.
அதே சமயம் தனாபதியின் வாளில் பட்டுத் தெறித்துப்பாய்ந்த அம்பு: மாங்கனியைத் துளைத்து கிழக்கே பாலபழத்தையும் துளைத்து அடுத்துப் பாய்ந்து மான்கொம்பை கிழித்தது. அரசர் வியப்புடன், ’இவர்தான் இளவசர் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இளவரசரைப் பற்றிக்கூறிய பல்லக்குத் தூக்கியின் சொல்லை நம்புகிறேன். என்னால் என்ன செய்ய முடியுமென்பதைக் கூறினால் நான் அடுத்து என்ன செய்வது என்பதைக் கூறுகிறேன்! உறுதிதான்” என்றார்.
இளவரசர் பல்லக்குத் தூக்கியின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டு காதுகளில் ஏதோ கூறினார். உடனே பல்லக்குத் தூக்கி, ’மன்னர் பெருமானே தான் கூறப்போதைக் கேட்டு கோபத்தில் என் தலையையோ இளவரசர் சிரத்தையோ கொய்து விடவேண்டாம் சொல்லட்டுமா? தங்கள் உறுதியைக் கொண்டுதான் நான் சொல்வேன்!” என்று அழுத்தமாகக் கூறினான்.
அரசர் சிரித்துக் கொண்டே, ”அப்படியே ஆகட்டும். உங்களை ஒன்றும் செய்து விடமாட்டேன், “என்று உறுதிதந்தார் மன்னர்: பலைக்குத் தூக்கி கூறினான்.
”மன்னர் பெருமானே இளவரசர் மதிபாலருக்கு- தங்கள் இளவரசி எழில் ராணியை மணமுடித்துத் தரவேண்டும். அவர்கள் மூலம் பிறக்கும் சிசுவை, காளி கோவிலிலுக்கு தானம் வழங்கிகிடவேண்டும். அந்த சிசு காளிபுத்திரன் என்ற பெயர் பெறுவான்.” என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே தளபதி தனாபதி வாளுடன் பாய்ந்தார்.
அதேசமயம் குரங்கு வடிவ இளவரசர். தனாபதியின் கரத்திற்குதாவி உடை வாளை கீழே தட்டிவிட்டு விட்டார். இதைக் கண்ணுற்ற மன்னர், ’தனாபதி சற்று பொறுமையாக இருக்க வேண்டும். பல்லக்குத் தூக்கிக்கு நான் தான் உறுதி தந்திருக்கிறேன். உயிருக்கும் உத்திரவாதம் கொடுத்திருக்கிறேன். அதனால் பொறுமையாக கூறுவதை கவனியுங்கள். மீண்டும் இதே முறையில் நடக்கவேண்டாமென எச்சரிக்கிறேன’ என்று கூறினார்.
’குரங்குப் பயலுக்கு! எழில் ராணி இளவரசி வேண்டுமோ!’ என்று கர்ஜித்து விட்டு தனாபதி அமர்ந்தார்.
மன்னர் விரக்தியுடன் இவைகளை சாலரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் இளவரசியை சாடையாக நோக்கினார்.
அவள் தன் ’தந்தை சொல்லை காக்கவேண்டுமென்று’ தான் சம்மதிப்பதாக சாடையில் கூறினாள்.
அதையும் குரங்கு வடிவ இளவரசன் கவனித்தான். உடனே, ஒரே தாவில் தூணுக்கும், தொங்கும் திரைச் சீலைக்குமாக தாவினான். அடுத்து இளவரசியின் அருகில் சென்று ஆவலுடன் பார்த்தான். பின்னர் மீண்டும் தோட்டத்தின் பக்கமான தாவிச்சென்று அழகிய மலர்களை பறித்துக் கொண்டு வந்து இளவரசியின் முன்வைத்து விட்டு பற்களை காட்டி சிரித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு அரசவைக்கு வந்தான்.
இதற்குள், பல்லக்குத் தூக்கியின் முடிவான புதிய விளக்கத்தை கேட்டுத் திகைத்த மக்களும் அரசவை பெரியவர்களும் புலவர்களும் உள்பட பலரும், இதில் ஏதோ, சூது இருக்கிறது.. பழக்கப்பட்ட குரங்கைவைத்து வேடிக்கை காட்டலாம் ஆனால் அதைக் கொண்டு விபரீதமாக இளவரசியையே குரங்குக்கு மணமுடிக்க முயல்வது பெரும் தவறாகும். இதற்கு தக்க தண்டனை சிரத்தை கொய்து வீதியில் பொது மேடையில் வைத்து காரி உமிழ வேண்டுவதுதான் மன்னா! இதற்கு சம்மதிக்க வேண்டாம்! என்று இரைந்தனர்.
சிலர் “பல்லக்குத் தூக்கி ஒரு சூதுக்காரன் – அவன் நாட்டை துண்டாட-யாருடைய தூண்டுதலின் மூலம் இளவரசியை கொண்டு குரங்கின் பெயரால் காரியம் சாதிக்க முயல்கிறான். மன்னர் அவனைக் கொல்ல வேண்டும்” என்றும் பலத்து இரைந்தனர்.
ஆனால் மன்னர்! ”மக்களும் மற்றவர்களும் பொருத்தருள வேண்டும். இளவரசியின விதி அப்படி இருந்தால் அதைத் தடுக்க யாராலும் இயலாது. வேறு வழியில்லை வாக்கை கொடுத்து விட்டேன்! இதற்கு சம்மதிக்கிறேன். இனி பல்லக்குத் தூக்கிக்கோ! இளவரசர் மதிபாலருக்கோ உயிர் சேதமோ? உடல் சேதமோ? ஏற்படுத்தியவர்கள் யாராயிருந்தாலும் அரசவை சிறைக் கூடத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று எச்சரித்தார்.
இதைக் கேட்டதும் கசமுசவென்று முன்கல் ஒளியும் அடங்கியது, அரசர் எழுந்தார், ‘இளவரசர் பாலருக்கும் எனது மகள் எழில் ராணிக்கும் வரும் பவுர்ணமி அன்று திருமணம் நடைபெறும்’ என்று கூறிவிட்டு அரசவையை கலைத்துவிட்டு சென்றார்.
பவுர்ணமி அன்று பலநாட்டு மக்களும், உன்நாட்டு மக்களும், “குரங்குக்கும் மனிதப் பெண்ணுக்கும் திருமணமாம்: என்று வியப்புடன் அரசவையில் கல்யாண மண்டபத்தில் கூடிவிட்டார்கள்.
மன்னன் அமைதிப்படுத்திவிட்டு தானே முன்னின்று இருவரின் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தார்.
ஆண்டுகள் பலவும் பலரது எதிர்ப்புக்கு இடையே எழுந்தது, கடத்தது, முடிந்தது.
இளவரசி எழில்ராணி அழகே உருவான ஆண் குழந்தைக்குத் தாயானாள். ஆனால் குழந்தைக்கு வால் மட்டும் குரங்குக் குட்டியைப் போன்று சிறியதாக இருந்தது.
மக்கள் அதிசயக் குழந்தையை “பார்த்து பார்த்து வியப்பாக” கூறினார்கள்.
குழந்தையின் பிறந்தநாள் விழாவென்று பல்லக்குத் தூக்கி ’அரசே சிறுவனை காளிபுத்திரனாக கோவிலில் தானம் வழங்குவதாக கூறி இருக்கிறோம். அதற்குச் சம்மதம் அளிக்க வேண்டுமென்று’க் கேட்டுக் கொண்டான்.
மன்னர் வேறுவழியின்றி சிறுவனை தானம் வழங்கவும் அனுமதித்தார்.
இளவரசன் மதிபாலனுக்கு பிறந்த குழந்தைக்கு ”காளி புத்திரன்” என்று பெயர் சூட்டினார்கள்.
தானம் அளிக்கப்பட்ட சிறுவன் அரசகுல மரபில் வாழ இயலாமல் காளிகோவிலில் அனாதை போல் வளர்ந்தான்.
மன்னர் தினமும் அவனுடைய வளர்ச்சியில் அக்கரை கொண்டு தூதுவர் மூலம் விபரம் கேட்டுக் கொண்டு வந்தார். பொழுது ஒரு வண்ணமும் வளர்ந்து வந்தான்.
இந்நிலையில் ஒருநாள் கபாலி தேசிகன் என்னும் கபாலிகர்களைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவன் அரசவைக்கு வந்தான். அவனை மன்னர் உபசரித்தார்.
மன்னரின் நிலையை அறிந்து கொண்டு அதை நிவர்த்தித்துத் தருவதாக உடனே உறுதி தந்தான்.
மன்னரும் சம்மதித்தார்.
கபாலிகர்களின் தலைவனான கபாலிநேசிகன் ”தனிமையில் அமர்ந்து மண்டை ஓட்டு பூசை நடத்துவேன். அதில் முழுப் பயன் கிடைத்தால்தான் தங்கள் பேரனையும், மருமகனையும் காக்க முடியுமென்று கருதலாம். அல்லது ஆயிரத்து ஒரு மண்டை ஓடுகளைக் கொண்டு, தாமதமின்றி பூசை முடிக்க வேண்டுமென்றும் கூறினான். அப்போதுதான் தேசிகனின் இஷ்டதெய்வம் மனமிரங்கி அவனுடைய வேண்டுகோளை ஏற்று காளிகோவிலில் வளரும் இளவரசனை காக்க முடியும். இல்லையேல் அவனது பதினெட்டாம் பிராயத்தில் அவனை காளியின் பாதத்தில் கபாலிகர்கள் பழியிட்டு அவனுடைய குருதியை குரங்கு வடிவ இளவரசரின் மீது பூசினால்தான் இளவரசர் மீண்டும் மனித உருவம் அடைவார்” என்று கூறினான்.
மன்னர் திகைத்து “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி எத்தனை பொன்னும் பொருளும் செலவானாலும் சரி! அதை பற்றிய கவலை ஏதுமில்லை. உடனே தக்க முறையில் பூசையைத் துவக்குங்கள்” என்று கூறினார்.
இதையே சாதகமாக்கிக் கொண்ட கபாலிகர்கள் கூட்டமே காளிகோவிலை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. எப்படியும் “பூஜையின் பலனாக இளவரசன் பிழைத்து எழுவான்” என்று நம்பினார்.
இளவரசி, எழில் ராணி! பெற்ற மகனை அரசபோகத்தில் வளர்வதை விடுத்து காளி கோவிலில் அனாதைபோல் வாழ்வதைக் கண்டு புத்திரசோகத்தில் வீழ்ந்தார். இளவரசன் மதிபாலன் ‘தன்னை குரங்குக் குட்டியாக சபித்த மாமுனிவர். மண்டல தேவர்’ என்பவரை பூசித்தான். எனக்கு இனி, எந்த மனித வடிவமும் வேண்டாம் இப்படியே இருந்து விடுகிறேன். என் செல்வன் இளவரசன் இதற்காக பலியாக வேண்டாம்” என்று வேண்டினான்.
மாமுனிவர் நிதரிசணமாகத் தோன்றினார். ’மதிபாலா உன் அசந்தையால் என் தவத்தை முன்னொரு நாள் கலைத்தாய்! மூன்று திசைகளையும் காக்கும் வில்வித்தையை கற்று தேர்ந்தவன் என்பதால் என்னை ஏதோ சனியாசி என்று நினைத்து ஏலனப்படுத்தி… பறவைகளின் மீது அம்பு எய்தி இரண்டு பறவைகளின் அன்புப் பறவைக் குஞ்சினை அடித்து வீழ்த்தி அந்த ரத்தத்தினால் என் தவக்கோலத்தில் கலங்கப்படுத்தினாய்.
அதேசமயம் புத்திர சோகத்தால் இரண்டு பறவைகளையும் பாடிவிட்டு விட்டாய்! இத்தகைய கொடிய பாவத்தைச் செய்தும் நீ சிறிதும் அஞ்சாமலும் என்னிடம் மன்னிப்புக் கோராமலும் என்னை அவமானப்படுத்தினாய். மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவனென்று! இல்லையா? பார்த்தாயா! உன் புதல்வன் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன் கல்லிலும், முள்ளிலும், கட்டாந்தரையிலும் விழுந்து புரண்டு வாடுவதை! பனியிலும் வெய்யலிலும் காளிகோவிலே கதி யென்று விழுந்து கிடப்பதை. உன் உருவம் உன் குணத்தைப் போலவே அமைந்து வாடுகிறாய். இனியாவது. மன்னிப்புக் கேள்! செய்தது குற்றமென்று!, என் தவத்தை கலைத்து ஆராது கோபத்திற்கு ஆளாகி குரங்கு வடிவமடைந்த உன்னை மன்னித்து அருள் புரிகிறேன்.’ என்றார்.
ஆனால் மதிபாலன் “முனிவர் பெருமானே. இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் முடிந்தன. இளம் பிராயத்தில் விளையாட்டு குணத்தில் என் அம்பு எய்யும் திறனை சோதிக்க அம்பு எய்தேன். எதிர்பாராது விழவும், வானில் வட்டமிட்டு வந்த பறவை ஒய்வெடுக்க மரக்கிளையில் அமரவும் சரியாக இருந்தது. அதனால் அது எதிர்பாராமல் அம்பு தைத்து குறுதிவடிய விழுந்தது. தாங்கள் மிகப்பெரிய பாம்புப்புற்றுக்குள் தவம் புரிவதையும் நான் அறியேன், நான் முனிவனோ சோதிடனோ அல்ல! எதையும் முன் கூட்டி அறிய! அதனால் தற்செயலாக குறுதி வடிய விழுந்த பறவை தங்கள் மீது விழவும் அதன் குருதியில் தங்கள் நனைந்து தவம் கலைந்தது. நான் மனதார எதையுமே திட்டமிட்டு செய்தேனில்லை. என் மீது தவறும் இல்லை. எதிர் பாராதபடி எல்லாமே தற்செயலாக நடந்த போது, நான் எதற்காக மன்னிப்பு பெறவேண்டும்! மாமுனிவர் இதை உணரவேண்டும் அதனால் தான் இப்படியே காலமுழுவதும் இருந்து விடுகிறேன். என்னை இவ்விதமே விடும்படி வேண்டிக் கொள்வதுடன் என் செல்வனை மீண்டும் அரண்மணையில் வாழ இடம் அமைக்கவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று விளக்கமாகக் கூறினான்.
முனிவர் ‘பார்த்தாயா! இன்னும் உன் அகந்தை அழியவில்லை. குற்றத்தை தெரிந்தோ -தெரியாமலோ பிறருக்கு ஊரு விளைவிக்கும்படி செய்துவிட்டு மழுப்பி மறைக்கிறாய்! மன்னிப்புகேள்! சகலத்தையும் மறந்து இறந்த பறவையை உயிர்பிக்கிறேன். அதனால் புத்திர தோஷம் நீங்கும்! குற்றம் மறந்து அருள்புரிகிறேன். அதனால் உன் குரங்கு குட்டி வடிவம் மாறும்’ என்று கூறினார் உறுதியாக. இளவரசன், ”குற்றமே இல்லாதபோது எனக்காகவோ என் செல்வனுக்காகவோ! குற்றத்தை ஒப்புக் கொள்ளமாட்டேன்” என்றான் மதிபாலன்.
இளவரசனின் உறுதியை பாராட்டியபோதும் மாமுனிவர் ”உன்னால் மாதாபிதா பாபம் மக்கள் தலையிலே” என்பது போல தன் பாவமன்றி உன் பரவத்தையும் உன் செல்வன் சுமக்கிறான். அதனால் அவனை விடுவிக்கவே நான் விரும்புகிறேன்’ என்று கூறினார்! அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று இளவரசன் மதிபாலன் கேட்டபின், மாமுனிவர்! ’உன்செல்வனை நான் தனியில் சந்திக்க ஏற்பாடு செய். அவனுக்கு வரவிருக்கும் பேராபத்தை தடுத்தாக வேண்டும்” என்றார்.
மதிபாலன் ’அப்படியெனில் வரும் அமாவாசையன்று காளிகோவிலின் பின்புறம் உள்ள புன்னை மரத்தடியில் நீங்கள் -சந்திக்கலாம்! ஆமாம் ஏன் தனிமையில் ரகசியமாகச் சந்திக்க வேண்டுமெ’ன்று கேட்டான்.
“மதிபாலனே! உமது மகனை பற்றிய ரகசியத்தை அவனிடம் தான் கூறவேண்டும். அவனுக்கு உள்ள ஆபத்தை அவன் தான் தடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான்” என்று உறுதியாகச் சொன்னார்.
பின்னர் மதியாலன் சம்மதித்து, விடைபெற்றான்.
அமாவாசை இரவில் காளிகோவிலில் இளவரசனை சந்தித்த மாமுனிவர் மண்டலதேவர், ’உன்னை வைத்து கபாலிகர்கள் வயிறு வளர்க்கிறார்கள் மன்னரின் பெரும் செல்வத்தை கூட்டமா சேர்ந்து கொண்டு திட்டமிட்டுத் தின்று தீர்க்கிறார்கன் உன்னை பதினெட்டாம் வயதில் காளியின் முன் சாப விமோசனம் செய்வதாகக்கூறி, பலியிட்டுவிடப்போகிறார்கள். இதை உணர்ந்து நான் சொல்கின்றபடி நடந்தால் உன்னையும் மமதை பிடித்த இளவரசன் மதிபாலனும் உன்தந்தையையும் காக்கமுடியும்” என்றார்.
காளி கோவிலில் வளர்ந்த இளவரசன் காளிபுத்திரன் சம்மதித்து வணங்கி எழுந்தான். உடனே முனிவர் மந்திரவாளையும். ஒரு மண்டை ஓட்டையும் கையில் கொடுத்து சில மந்திரங்களையும சொல்லிக் கொடுத்து மண்டை ஓட்டை அணல் இருக்கும் இடத்தில் வைக்கக் கூடாது’ என்று எச்சரித்தார். சில முறைகளையும், காளி கோவிலில் கபாலிகர்கள் காளிபுத்திரனை வைத்துக்கொண்டு பூஜை நடத்தும் விதத்தையும் தப்பிக்கவேண்டிய வழிமுறைகளையும் ரகசியமாகக் கூறிவிட்டு மறைந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கபாலிகர் தலைவன் அரசவைக்கு வந்தான். மன்னர் கபாலி தேசிகனைக் கண்டதும் திகைத்தார். காரணம் அவர்கள் இளவரசின் மதிபாலன் சுயஉருவம் பெற காளிபுத்திரனை பலியிட்டு விடுவார்கள் அதன் குருதியை மதிபாலன் மீது தெளித்து மறு உருவம் தருவார்கள்! என்பது தெரியும்.
தன் பேரனை பலியிட, தானே எவ்விதம் சம்மதிப்பது. அதனால் பெரிதும் கவலை கொண்டார். அதே சமயம் கபாலி தேசிகனை வேறுவழியில் பூசைகள் மூலமும் முடிந்தால் காப்பதாக கூறி இருந்தாரே அதுபற்றி கூற வந்திருப்பாரோ.. என்று நப்பாசையுடன்,
”கபாலி தேசிகரே தாங்கள் வந்த காரணம் என்ன?” என்று மெதுவாகக் கேட்டார்.
”மன்னர் பெருமானே! எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சிகள் அனைத்தும் வீணாயின. அதனால் இப்போது இளவரசின் காளிபுத்திரனுக்கு 18 ஆண்டுகளாகிறது. இனி தாமதிப்பது இயலாது. ஆகவே இதுவரை ஆயிரம் மண்டை ஓடுகளைக் கொண்டு சக்திபூசை செய்து விட்டோம் இனி தாமதிப்பது இயலாது… ஆயிரத்து ஓராவது மண்டை ஓடு இளவரசன் காளிபுத்திரனின் தலையை காளியின் முன் பலியிட்டுத் தான் எடுத்து கபால பூசை நடத்த வேண்டும்! உங்கள் அனுமதியுடன் பூசை நடத்த வகை செய்ய வேண்டுமென்றான்” இதமாக கபாலிதேசிகன்
அதே சமயம் இந்த உரையாடலை குரங்கு வடிவில் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த மதிபாலன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மனம் பெரிதும் வாடியது. இனி எவ்விதம் தடுக்கவோ மறுக்கவோ இயலாது: அதனால், தானே மடிவது என்ற முடிவுடன் அரண்மனை அத்தானி மண்டபத்தில் ஏறிச் சென்றான்.
தான் உயிருடன் மறுபடியும் அரசகுமாரன் வடிவம் பெறத்தானே இந்தக் கொடிய முயற்சிகள். தானே இல்லை யென்றால் இனியார் இதற்காக பலியிடும் பூசையில் காளி புத்திரனை “கலபலி” இடுவார்கள் என்றெண்ணி கண்ணீருடன்- அத்தானி மேல் மண்டபத்தின் உச்சியை அடைந்தான்.
அங்கே! ஒரு சிறிய இடைவெளிப் பொந்து இருந்தது. அதில் இரண்டு கிளிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. உயரமான கூடாகையால் அங்கு எந்த ஆபத்தும் இன்றி சுகமாக அவைகள் வாழ்ந்தன. அவைகளுக்கு சிறிய ஆண் கிளிக் குஞ்சு ஒன்று பொரித்திருந்தது. கிளிகள்- இரண்டும் அன்று இரைதேடி சென்றிருப்ததால் கிளிக்குஞ்சி மட்டும் தனித்து இருந்தது. இதை அறிந்து கொண்ட, ஒரு பறவைகளை அடித்துத் தினனும் செங்கோட்டாள் என்னும் பறவை கிளிக் குஞ்சைக் ‘கொத்திக் கொண்டு செல்ல பெரிதும் முயன்று கொண்டிருந்தது, கிளிக்குஞ்சு பயத்துடன் ஓ!!'”கிரே!! கிரே! என்று இரைந்து கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தது. செங்கோட்டானும் விடவில்லை. இறகுகளை பிய்த்து எடுத்து சித்திரவதை செய்து கொண்டிருந்தது. இதைக் கண்ட மதிபாலன் குரங்குக் குட்டி வடிவில் பாய்ந்தான்.
”கொடிய செங்கோட்டான்” வசமாக சிக்கிக் கொண்டது. குரங்குப் பிடியாக பிடித்து கழுத்தை முறித்து எறித்தான். நல்லவேளையாக பொந்தைவிட்டு வெளிவந்து கிளிக்குஞ்சு பறக்கத் தெரியாமல் சிறிய சிறகுகளையும் இழந்து படபடவென சிறகடித்துக் கொண்டிருந்தது. அதே சுமயம் குரங்குகுட்டி வடிவில் இருந்த இளவரசன் லாவகமாக கிளிக் குஞ்சைப் பிடித்து கூட்டில் வைத்து காயங்களை இதமாக தடவிக் கொடுததான். அப்போது இரையுடன் திரும்பி வந்த கிளிகள் இரண்டும் பயங்கரமாக ஏதோ நிகழ்ந்து விட்டதோ? என்று சிதறிக் கிடந்த சிறகுகளைக் கண்டு பதறின. ஆனால் கிளிக்குஞ்சு தன் பெற்றோர்களான கிளிகளிடம் தன்னை குரங்கு வடிவ இளவரசன் உயிரைக் காத்ததையும், வல்லூறுக் கழுகு “செங்கோட்டான்” குரங்கின் பிடியில் சிக்கி இறந்ததையும் விளக்கிக் கூறினதும் அன்புடன் குரங்குக்கு தங்களின் நன்றியைக் கூறிக்கொண்டு தங்களில் ஏகபுதல்வனான கிளிக்குஞ்சை உயிர்காத்து அளித்தார்கள். நல்வரம் நலகியது. ’குரங்கு வடிவத்தில் இருக்கும் இளவரசர் அவர்களே, உங்களை பிடித்த கொடுமையான சாபம் முன்னர் ஒரு ஜோடி பறவைகளின் அன்புப் பறவைக் குஞ்சனை அம்பு எய்தி அடித்து வீழ்ந்தியதால் ஏற்பட்டது அதனை நிவர்த்திக்கவே இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது? இனி உம்மை ‘புத்திர நித்திர சத்திர’கதி’ செய்த பாவம் நீங்கியது. அதனால் இனி முனிவரின் தவத்தை கலைத்து அதனால் சாபத்திற்கு இலக்கானதற்கு பரிகாரம் தேடினாலே போதும்” என்றது வாழ்த்துக் கூறிய கிளிகள்.
குரங்கு வடிவ இளவரசனுக்கு தான் கண்ட கிளிகள் சாதாரணமானவை என்று நம்பவே இல்லை. அதனால் ”அன்புடன் என் சாபத்தை நிவர்த்தித்த கிளித் தம்பதிகளே நீங்கள் யார்?” என்றான் இளவரசன். உடனே கிளிகள் ”முன்னர் உங்கள் அம்புக்கு பலியான பறவைதான் இப்போது நீங்கள் காத்து உயிரளித்த பறவையாகும். ஒரு சிறிய தவறினால் அன்று அம்புக்குறிக்கு இலக்காணோம். புத்திர சோகத்தால் உமக்கு இட்ட சாபத்தினால் உமக்கு இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்தன.
எங்கள் அன்புப் பறவையை இழந்ததினால் சோகத்தின் எல்லையில் தீக்குளித்து இறந்து மீண்டும் இப்பூவுலகிற்கு தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் பிறந்தோம். செங்கோட்டான் வல்லூறு சாதாரணமானவனல்ல ஒரு ராட்சசன் தான் அவன் தன் பழி வாங்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே இப்போது வல்லூறாக வந்தான். உன்னால் அழிந்தான். எங்கள் மகிழ்ச்சிக்கு பாத்திரமான உன்னை வாழ்த்துகிறோம். இனி உன் புதல்வனை காளி கோவிலில் கலபலி இட்டு இரத்த அபிஷேகம் செய்துதான் உன் சாபம் நீங்க வேண்டியது இல்லை.
முனிவரை சந்தித்து நடப்பதைக் கூறினால் அவரும் வழி அமைப்பார்! நாங்கள் பறந்து சென்று உடன் தகவல் கொடுத்து விடுகின்றோம். நன்றி இளவரசே இனி தாங்கள் தற்கொலை எண்ணத்தை விடுத்து உமது அரண்மனைக்கு செல்லலாம். முனிவர் சாபம் நீங்கினால் எழில் வடிவம் பெறுவீர்! என்று கூறி நன்றிப் பெருக்குடன் பறந்து சென்றன.
இளவரசனும் அரண்மனையை அடைந்தான். யாரிடமும் ஏதும் கூறிடவில்லை.
கலபலி இடும் நாள் வந்ததும் கபாலதேசிகன் மன்னர் கேதவர்மரிடம் பேரன் காளிபுத்திரனை உண்மையைக் கூறாமல் அழைத்துச் சென்றான்.
காளிபுரத்திரனுக்கு மாமுனிவர் முன்னரே ரசசியத்தையும் கூறி மந்திரவாளும் அதிசய மணடை ஓட்டையும் அளித்ததை மறைவாக தன் நீண்ட அங்கிகளுக்குள் மறைத்துக் கொண்டு கபாள தேசிகனுடன் புறப்பட்டான்.
அவன் முறைப்படி பூசைசெய்து பிரம்மாண்டமான சிலையின் முன் மண்டியிட்டு வணக்கம் செலுத்தும்படி காளிபுத்திரனை கூறினான். ஆனால் காளிபுத்திரன் கபாளதேசிகன் நிஷ்டையில் ஆழ்ந்து வணங்கி எழுமுன் அங்கு தன் அதிய மண்டை ஓட்டை வைத்து விட்டு மறைந்து கொண்டான்.
பாவம் கபாளதேசிகன் நிஷ்டை முடிந்து எழுந்தபோது அதிசய மண்டை ஓட்டிலிருந்து விஷநாகம் எழுந்து படமெடுத்து தன்னை குறிபார்த்து நிற்பது கண்டு மனம் குழம்பி மந்திரத்தை மாற்றி ஜெபித்ததால், கபாளதேசிகன் மரணமடைந்தான். அதேசமயம் தோன்றிய மாமுனிவர் சம்பவம் தெரிந்து ‘விரைந்து வந்த இளவரசரின் சாபம் நீக்கி எழில் வடிவம் தந்தார். பறவைகள் கூறிய விபரத்தை கண்டு உண்மை உணர்ந்த மாமுனிவர் சாபம் நீக்கி அனைவரையும் வாழ்த்தினார்.
இளவரசன் காளிபுத்திரனை அரியணையில் ஏற்றினார். அப்போது தான் கூறினான் “மண்டை ஓட்டின் மர்மம் இது தான்’ இது ‘மெழுகு கொண்டு தயாரித்த பாம்புப் பெட்டி தான் என்றும் கபால தேசிகனை குழப்புவதற்கு செய்த முனிவரின் யோசனை என்பதையும் விளக்கினான். புத்திரன் பல ஆண்டுகள் நல்லாட்சி செய்து வாழ்ந்து வந்தான்.
000