மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் – 2

தயாஜி

கடலென்னும் வசீகர மீன் தொட்டி’

கவிதை  வாசித்தல் என்பது  அப்போதைய மனநிலையைத்  தன்நிலை மறக்கச் செய்யும் வழிமுறை. வைரம் தன் மீது படும் ஒளியை ஒவ்வொரு திசைக்கும் அதற்கு ஏற்றார் போல தன் ஒளியைப் பாய்ச்சி அந்த வடிவத்தை தனதாக்கி கொள்வது  போலதான், கவிதைகள் வாசிக்கும் பொழுது அது ஒவ்வொருவருக்குள்ளும் அவரின் அனுபவத்தின் மீது தன் ஒளியைப் பாய்ச்சுகிறது. அவ்வொளி அங்கிருந்து இன்னொரு இடத்திற்கும் பரிணமித்துச் செல்கிறது. அதுவே நாம் பெற்ற அனுபவத்தில் இருந்து இதுவரை நாம் பெறாத அனுபவத்தை நமக்கு உணரவும் செய்கிறது.

அதனால்தான் நான் வாசித்த கவிதையிலும் நீங்கள் வாசித்த கவிதையிலும் இருவேறு  அனுபவங்களும் பயணங்களும் நமக்கு அமைந்திருக்கும். அது கவிதையின் வித்தையா அல்லது நம் மனநிலையில் வெளிப்பாடா என்பது நாம் இருவரும் உரையாடி  தேடிக் கண்டறிய வேண்டிய ஒன்று. கவிதையை வாசிக்கும் மனநிலைக்கு ஒப்பானதுதான் அதனை வரிசைப்படுத்தி எழுதுவதும்.  வாசிக்கும்  போது கண்ட திறப்பும், அதனை எழுதும் போது காணும் திறப்பும் சமயங்களில் வெவ்வேறாக இருக்கும். ஆனால் அது சென்றடையும் இடம் ஒன்றாக இருக்கும்.

சமீபத்தில் வாசித்து முடித்த கவிதை தொகுப்பு ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’. கவிஞர் சுபா செந்தில்குமார் எழுதியுள்ளார். தலைப்பைப் போலவே உள்ளிருக்கும் கவிதைகளும் வசீகரிக்கவேச் செய்தன.

இவர் இதுவரையில் சிங்கப்பூர் இலக்கிய விருது (தகுதிச்சுற்று 2020), சிங்கப்பூர் தங்கமுனை விருது 2019 & 2015, வாசகசாலை தமிழ் இலக்கிய விருது 2020 போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

சுபா செந்தில்குமார் சென்னையில் ஜூலை 14, 1979 அன்று ஆர்.கிருஷ்ணமூர்த்தி – கே.இந்துமதி இணையருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார். சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருபுவனம். கும்பகோணம் புனித வளனார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியை முடித்தார். வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பியலில் பட்டயப்படிப்பை முடித்தார்.

மென்பொருள் பொறியாளரான செந்தில்குமார் நடராஜனை 1999-ல் மணந்தார். ஸ்வேதா, ஸ்ரீஷா என இரு மகள்கள்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சி பெற்ற பின் சென்னையில் ஓராண்டு பணிபுரிந்தார். தற்போது இன்போனிடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் மாணவர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும் இருக்கிறார். 2008-ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். (நன்றி தமிழ்விக்கி)

இந்தக் கவிதைத் தொகுப்பைக் கையில் எடுத்தவுடன் அதன் தலைப்பில் கொஞ்ச நேரம் மனதை அலையவிட்டேன். கடலை எப்படி மீன் தொட்டியாக்குவது? மீன் தொட்டியை எப்படி வசீகரிக்க வைப்பது? கடல் ஏன் மீன் தொட்டியாக மாறவேண்டும்? அதை ஏன் வசீகரிக்க வேண்டும்? இந்தக் கவிஞர், உண்மையில் கடலை கண்ணாடி மீன் தொட்டியில் பார்க்கிறாரா   அல்லது  கண்ணாடி மீன்  தொட்டியைக் கடலாகப் பார்க்கிறாரா? என என்னை நானே கேள்விகளால் நிரப்பிக்கொண்டிருந்தேன். பின் நானுமே அக்கடலின்   வசீகரத்தை உணர அந்த மீன் தொட்டிக்குள் குதிக்கவும்  செய்தேன்.

‘திறந்தே கிடக்கும் வீடுகள்’, ‘கடலைச் சேராத  நதிகள்’, ‘இதுவும் இனிதெனக் கடத்தல்’, ‘பெருங்களிற்றுப் பயணம்’, ‘கூடுதாய் ஒரு வால்’, ‘ஆதி நிலத்தின் மிச்சங்கள’, ‘கதவுகளின் குரல்கள்’ என  ஏழு முதன்மை தலைப்புகளில் மொத்தம் 64 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏழு கவிதைத் தொகுப்புகளை வாசித்தது போன்ற வெவ்வேறான அனுபவத்தை இக்கவிதைத் தொகுப்பு கொடுக்கின்றது. சில இடங்களில் முதன்மைத் தலைப்புகளுக்கு ஏற்றதாய்க் கவிதைகள் ஒரே நேர்க்கோட்டில் செல்கின்றன. சில   இடங்களில்  வழி மாறியதாய் பாவணைக் காட்டி  மீண்டும் அதன் வழிக்கு வந்து நிற்கின்றன அவை.

       அம்மாவை இழந்த அப்பாவைச் சொல்கிறது ‘மனமுதிர் காலம்’ (ப-13). அம்மாக்களை இழந்த  நாட்களை அப்பாக்கள் கழிப்பது மிகவும் துயரமானது. மீண்டும் அவர்கள் குழந்தையாகின்றார்களாக  மனம் உடைந்து பித்து பிடித்துவிடுகின்றதா  என்கிற கேள்வி எழவைக்கும் அவர்களின் நகரும் நாட்களை ஆழமாக கவிதையில் பதிவு செய்துள்ளார் கவிஞர். கவிதை முடிவில் பூரான் கடித்துவிட்டதால் திண்டு திண்டாய் தெரியும் அப்பாவின் கால்களில் அம்மாதான் பூத்திருப்பதாக அப்பா சொல்லிச் சிரிப்பதை வேறெப்படிச் சொல்வது.

துளசி மாடத்தில் குஞ்சு பொரித்திருந்த

தாய்ப்பூரான் கடித்துவிட்டதாய்த்

தளர்ந்துபோன சிரிப்போடு

என்னை வாட்சப்பில் அழைத்திருந்தார்.

ஆமாம்

அவர் சொன்ன அத்தனையும் உண்மைதான்.

அன்று அப்பாவின் கால்களில்

திண்டு திண்டாய்ச் சிவந்த இதழ்களோடு

அம்மாதான் பூத்திருந்தாள்

       கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, அவர்களின் இயல்பு குணம் மாறாது. இதனை மீண்டும் நினைக்க வைக்கும் கவிதை, ‘ஊற்றுக்கண்ணில் வழியும் ஈரம்’ (ப-14). தன் அப்பா  ஊற்றுக்கண்ணைக் கண்டெடுத்தக் கதையை கிணற்று நீர்  எடுக்கவரும் எல்லோரிடமும்  சொல்லும் அம்மா இன்று தண்ணீர் சுமந்து வரும் அரசாங்கக் குழாய்க்காக காத்திருக்கின்றார். அப்போதும் அவர்  வெயிலில் ஓய்வெடுக்கும் ஊழியர்களின் தாகத்தை இளநீர் கொடுத்து தீர்க்கின்றார்.  தான் யார் என்று முழுமையாக உணர்ந்தவர்கள்  எல்லா நேரத்திலும் அவர்களாகவே இருப்பார்கள். இக்கவிதையில் வரும் அம்மாவை அப்படியாகத்தான் பார்க்கின்றேன். தான் இழந்துவிட்டது குறித்த வருத்தம் இருந்தாலும், இதுநாள் வரை தான் வைத்திருந்ததின் பெருமிதத்தை அதிகமாகவே அம்மா சுமந்துக் கொண்டிருக்கின்றார்.

 பரிட்சயம் இல்லாத ஆட்டுக்குட்டி போல

 தபால்காரரிடம் முகம் உயர்த்தும் என்னிடம்….’

என்கிற வரி ‘விலாசம் தொலைந்த வீடுகள்’ (ப-16) என்கிற கவிதையில் வருகின்றது. வார்த்தைகள் ஒரே பாய்ச்சலாக காட்சிகளாவதாக நான் உணர்ந்தேன்.  இங்கு  மட்டுமல்ல  தொகுப்பில் பல இடங்களில் வார்த்தைகள் சில அடிகளில் காட்சிகளாக  பரிணாமம்  பெற்று கண்முன்னே நிழலாடுகின்றன. இக்கவிதை  வீடு என்பது பிறருக்கு என்னவாக தெரிகின்றது என ஆரம்பமாகின்றது. ஒரு வீடு  யாருக்கு எப்படியாக இருக்கிறது என்பது சாதாரணம்தான். ஆனால் அதனை கவிதையாக்கி, அக்கவிதையை  இன்னொரு  இடத்திற்கு கவிஞர் எடுத்துச் செல்கிறார்.

‘பொன்மஞ்சள் வாசம்’ என்னும் கவிதை (ப-17) அம்மாவை இழந்த அப்பாவைச் சொல்கிறது. அம்மா இருக்கும் வரை வீட்டில் யாராக இருந்தார் என்பது அவர் இல்லாத போதுதானே எல்லோருக்கும் தெரிகிறது. 

அம்மா இருந்திருந்தால்

அடுக்களையையே வெறித்துக் கொண்டிருப்பவரிடம்

நிச்சயம் சொல்லியிருப்பாள்

பண்டிகை நாளில்

வீட்டிற்கு வருபவர்கள் தட்டில்

ஒரு பிடி சர்க்கரையையாவது

அள்ளிப்போடும் பக்குவத்தை..’

என முடிக்கும் கவிதையில்; அம்மா சர்க்கரை போடுவதைக் கற்றுக்கொடுக்காமல் சக்கரையைப் போடும் பக்குவத்தை சொல்லிக்கொடுப்பதாக கவிஞர் எழுதியிருப்பது இந்தக் கவிதையை அவ்வளவு எளிதாக நாம் கடந்து போவதற்காக அல்லவே.

       எல்லோரும் ஒரு காட்சியைப் பார்க்கிறார்கள். ஆனால் பார்ப்பவர் யாராக இருந்துப் பார்க்கிறார் என்பதைப் பொறுத்து அக்காட்சி தன்னை விரிவு செய்துக் கொள்கிறது. அல்லது தன்னை சுருக்கிக் கொள்கிறது. இன்னும் சில அப்படியா இல்லாமல் போகிறது.

 ‘தினசரி’ (ப-18) என்னும் கவிதையில் வீடுகளுக்கு நாளிதழ் போடும் சிறுவனைப் பேசுகின்றது. எத்தனை வகையான மனிதர்கள் எத்தனை வகையாக அச்சிறுவனை அணுகுகின்றார்கள் என சொல்லும் கவிதையில் நாம் இதில் யாராக இருக்கின்றோம் என்கிற கேள்வியைக் கேட்கிறது.

சில வீடுகளுக்கு நகர்ந்தவாறே வீசிச்செல்கிறான்

அந்த வீடுகள் பூட்டியே இருக்கின்றன.

சில வீடுகளில் சார் பேப்பர் என்று குரலெழுப்புகிறான்

அந்த வீடுகள் எப்போதாவது பதில் சொல்கிறன்.

சில வீடுகளிடம் ஏதும் பேசாமல் செருகிச் செல்கிறான்

அந்த வீடுகள் மௌனம் கலைப்பதேயில்லை.

சில வீடுகளை ரசித்துச் செல்கிறான்

அந்த வீடுகள் அவனிடம் புன்னகை செய்கின்றன.

சில வீடுகளில் மட்டுமே நின்று கேட்கிறான்

அக்கா தண்ணி குடுக்கா”’

அந்த வீடுகளும் அவனிடம் கேட்கத் தவறுவதில்லை

வேலைய முடிச்சிட்டு ஒழுங்கா ஸ்கூலுக்குப் போறியாடா?”

இந்தக் கவிதையில் நாம் எந்த விட்டில் வாழ்கிறோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம்.

‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’ என்னும் தலைப்பிலான கவிதை பக்கம் 20-ல் உள்ளது.  இங்கு வசீகரமானதாக இருப்பது கடலா அல்லது மீன்  தொட்டியா என்கிற எனது தொடக்கக் கேள்விக்கு பதில் சொல்லும் கவிதை. இரு வேறு தேசத்தில் வசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கையை அந்த வசீகர மீன் தொட்டியாக கவிஞர் சொல்லியுள்ளது வசீகரிக்கச் செய்யும் அதே வேலையில் வருந்தவும் வைக்கின்றது.

இக்கவிதை ‘கடலைச் சேராத நதிகள்’  என்கிற முதன்மைத் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.  அவ்வாறே ‘நீலம் பூத்த நதி’, ‘பொருள்வயிற் பிரிதல்’, ‘சரளைக் கற்கள் விளையும் வயல்’, போன்ற கவிதைகள் புலம் பெயர்ந்து, நாடுவிட்டு நாடு சென்றவர்கள், சொந்த நிலத்தை காப்ரெட் கரங்களுக்கு தாரை வார்த்தவர்களைப் பேசுகிறது. 

பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு

உதிர்ந்த வழுக்கையுடன் திரும்புபவனை

நரைத்த தலையோடு

வரவேற்கக் காத்திருக்கிறாள்.

பாதிகளால் நிரம்புகிறது

கறுப்புவெள்ளை வாழ்க்கை..”

என முடியும் ‘பொருள்வயிற் பிரிதல்’ கவிதை, பொருளாதாரம் பிடுங்கிக்கொண்ட தம்பதிகளின் இளமையைக் காட்டுகிறது. நல்லவேளையாக அவர்களிடம் காதல் இருப்பது நமக்கும் ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது.

 தன்னைப் போன்றே  துன்பத்தில் துவண்டிருக்கும் மனிதனைக் காணும் இன்னொரு மனிதன் என்ன செய்வான். நாம் என்ன செய்வோம். இக்கேள்வியை எழவைக்கும் கவிதையாக ‘பியானோ என்பதொரு நீண்ட சவப்பெட்டி’(ப-31).    பியானோ எப்படி சவப்பெட்டியாகிறது  என்பதுதான் கவிதை. ஆனால்  அதனிலும்  இசை வாசிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்தான். நம் மனம் வாசிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

இந்த வாழ்க்கையை எப்படி புரிந்துக் கொள்வது. இங்கு எது நியாயம் எது  அநியாயம் என யார் முடிவெடுக்கின்றார்கள். இக்கேள்விக்கு என்ன பதில் கொடுத்தாலும் அதற்கு ஈடாக  இன்னொரு கேள்வியை நம்மால் கேட்க முடியும். ‘மழைக்கரம்’ (பக்கம்-45) என்னும் கவிதை இப்படியாக வருகிறது;

ஆதரிக்கப்படாத

சாலை ஓவியமொன்றை

தன் நிறமற்ற விரல்கள் நீட்டி

வழித்துச் சேகரிக்கிறது மழை

சாலை ஓவியத்தை அழித்ததற்காக மழை மீது கோவம் வருகின்றது. ஆதரிக்கப்படாத சாலை ஓவியம் தானே என சமாதானம் ஆகிறது. மழை நீருக்கு நிறமில்லாததால்தான்  ஓவியத்தின் அருமை தெரியவில்லை என சொல்லலாம். ஆனால் தனக்கு நிறமில்லாவிட்டாலும் சாலை ஓவியத்தை வழித்து தன்னகத்தே சேகரிக்கும் மழையை எப்படி திட்டுவது. இப்படி பல கேள்விகளையும் பல பதில்களையும் சுழற்கின்னம் போல சுற்றி வர வைக்கிறது கவிதை. இதில் எந்த ஒரு வார்த்தையை எடுத்தாலும் கவிதை அதன் இயல்பை இழந்துவிடும் என்பதுதான் இக்கவிதை தரும் ஆச்சர்யம். 

‘வளர்சிதை’ (ப-55) பாலியல் வன்கொடுமைக்கு பலியான மகளைச் சொல்லும் கவிதை. கண்களைக் கலங்க வைக்கிறது. 

 பிணவறையைச் சுற்றும் ஆல்கஹால் நொடிக்கு

முகம் திருப்பாமல் தன்னைத் தருகிறது

அரைகுறையாய் எரியூட்டப்பட்ட உடல்..

 என தொடங்கும் கவிதையில் காபி கூட சூடா குடிக்கமாட்டா சார்’’ என்னும் வரி வருகிறது. சட்டென நம்மையும் அழவைத்துவிடுகிறார் கவிஞர்.

‘பேராண்மையின் பலன்’ (ப-54) என்னும் கவிதை சமகால சமூக அவலத்தைப் பேசுகின்றது. ‘பொன்னகரம்’ சிறுகதையின் கடைசி வரிகளின் வருவது போல; ஆண்மை ஆண் என் பீத்திக்கொள்கிறாயே இதுதானடா  உன் பேராண்மையின் பலன் என்பதுபோல முகத்தில் அறைகிறது.

 ‘வேறு வழி இல்லை. காலம் முழுக்க இச்சுமையை நான்தான் சுமக்க வேண்டும்’ என சொல்லி  ஏதோ ஒன்றை தன் வாழ்நாள் முழுக்க சுமப்பவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? அவர்களால் அதிலிருந்து மீளவே முடியாது. அப்படியான மனிதர்கள் பற்றி கவிதையாக ‘உயிர்த்தெழல்’ (ப-60) என்கிற கவிதையைப் பார்க்கின்றேன்.

சிலுவை சுமப்பவர்க்கெல்லாம்

சாத்தியமில்லை

மூன்றாம் நாள்

உயிர்த்தெழல்

இக்கவிதை நம்பிக்கையை சிதைக்கின்றதா அல்லது உயிர்த்தெழுந்து மீண்டும் வதைபடுவதை  விட உயிர்த்தெழாமல் இருந்துவிடு என அன்பு செய்கிறதா? அல்லது கருணைதான் இவ்வுலகில் விலை அதிகம் கேட்கிறது என சொல்கிறதா என்ற  கேள்விகள் இக்கவிதையின் ஆயுளை நிச்சயம் நீளச்செய்யும்.

இன்னும் பல கவிதைகள், அதன் வழி பல பார்வைகளுக்கு வழி சொல்லும் அனுபவங்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. மீண்டும் மீண்டும் வாசித்து வெவ்வேறான அனுபவங்களைப் பெறலாம்.

சொல்லப்போனால்  கவிஞரின் கவிதைகளில், ஒரு கவிதை மூன்று கவிதைகளாக பிரிந்து பின் பிரிந்த மூன்றும் ஒரு கோட்டில் வந்து சேர்கின்றது. சில கவிதைகளில் வேண்டுமென்றே கவிஞர் நம்மை குழப்புகின்றாரா என தோன்றுகிறது. அதற்கு    பதில் மறுவாசிப்பிலோ  அல்லது  அதற்கான  உரையாடல்  வழியாகவோ நமக்கு கிடைக்கலாம்.  சில இடங்களில் வழிந்து சில சம்பங்களைச் சேர்த்திருப்பது போல தோன்றினாலும் கவிதை தரும் அனுபவத்தில் அவ்வரிகள் காணாமல் போய்விடுகின்றன.

 இம்மாத ‘மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் பகுதி 2-ல்’, சிங்கப்பூர் எழுத்தாளர் சுபா செந்தில்குமாரின் ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’ கவிதைத் தொகுப்பைக் குறித்து தெரிந்து கொண்டோம். யாவரும் பப்ளிஷர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். நீங்களும் இக்கவிதைத் தொகுப்பை வாங்கி வாசித்து அனுபவிக்க வேண்டும்; நாம் உரையாட வேண்டும்.

மீண்டும் அடுத்த மாத ‘ மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகத்தில்’ நாம் சந்திக்கலாம்

00

எழுத்தாளர் தயாஜி குறிப்புகள்

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். 

            ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *