மு. ஆனந்தன் எழுதிய “கைரதி 377 “ சிறுகதை தொகுப்பு விமர்சனம்

               ‘யுகங்களின் புளிப்பு நாவுகள் என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகில் கவிஞராக  பிரவேசித்த. வழக்குரைஞர் மு. ஆனந்தன் இப்போது கைரதி 377′  என்கிற தலைப்பில் ‘மாறிய பாலினரின் மாறாத வலிகள் என 11 சிறுகதைகள் கொண்ட  தன் முதல் சிறுகதைத் தொகுப்பில் பதிவு செய்து ஒரு சிறந்த எழுத்தாளராகவும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார்.  .

      உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் எனச் சிறப்பிக்கும் தமிழ்ச்சமூகம், ஆணும் பெண்ணுமாகப் பிறந்தவர்களில் ஆணாகவோ பெண்ணாகவோ மனதால் உடல் மாற்றம் அடைந்தவர்களை தூற்றும் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது… மாறாத ஒரு வடு அல்லது வலி இது.

       அலி, , உஷ், ஒம்போது, பேடி அரவாணி என இவர்களுக்கு பல  கேலிப்பெயர்கள். தமிழக அரசு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாளை திருநங்கையர் தினமாக அறிவித்தது. மூன்றாம் பாலினத்தவருக்கான எத்தனை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கை வலிமிக்கதுதான் ! திருநங்கைகளை ஏற்க மறுக்கும் நம் சமூகம் திருநர்களை மட்டும் விட்டுவிடவா போகின்றது..?

     . திருநங்கை, திருநம்பிகளின்  பிரச்சனைகளை கதைகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் நிலையில் ஒரே தொகுப்பில் அதுவும் தன் முதல் தொகுப்பிலேயே  சமூகத்தால் புறக்கணிக்கப்படும் இந்த மூன்றாம் பாலினத்தவர்கள் அவமானப்படுத்தப்படும் போதும், வீட்டை விட்டு வெளியேற்றும் போதும், வெளியேறும் போதும் இப்படி பல வழிகளிலும் பாதிக்கப்படும் போதும் உண்டாகும் வலிகளை அவர்களின் வேதனைகளை மன உணர்வை ஒட்டு மொத்தமாக இந்தத் தொகுப்பில் உள்ள 11 சிறுகதைகளில் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் மு.ஆனந்தன்

      . மாறிய பாலினத்தவர்களை கதைக்கருவாகக் கொண்டு இந்த  சிறுகதைகளில்  திருநங்கைகளாக,  திருநம்பிகளாக மாற்றம் கொண்டவர்களின் வாழ்க்கைச் சூழல்கள், வாழ்வியல் சிக்கல்கள், மன அழுத்தங்கள் எனப் பல்வேறு சிக்கல்களை அவர்களின் துயரங்களை கொடுமைகளை தன் எழுத்தின் வழியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் தோழர் மு.ஆனந்தன். . . 

.       தொகுப்பின் முதல் கதையான “ஓலையக்கா லாக்கப்“ என்ற கதை ஒரு பெரும் அதிர்ச்சியையையும் இதயத்தைக் கனக்கவும் செய்கிறது! ஆங்கிலேயர் காலத்தில் குற்றப் பரம்பரைச் சட்டபடி அலிகள் என்று சொல்லப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் பெண் உடைகளை அணியக் கூடாது.

       200 ஆண்டுகளுக்கு முன் மைசூர் சாம்ராஜ்யத்தில் அரசனின் படைவீரர்களிடம் சிக்கிக்கொண்ட இளம் பெண்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள சுள்ளிகளில் தீ வைத்து அதில் இறங்கி உயிரை நீத்ததன் நினைவாக ஓலையக்கா நோன்பு கொண்டாடப்படுகிறது. அப்படி கொண்டாடப்படும் அந்த ஓலையக்கா நோன்பில் பெண்கள் பாட்டுப்பாடி கும்மியடிக்கும் கூட்டத்தில் பெண்ணுணர்வு மிக்க ஆணான காளிச்சாமி என்கிற கைரதியும் கலந்து கொள்கிறான்.

      ஊரார் இதை எதிர்க்கிறார்கள். அப்போது ஊரின் முக்கியஸ்தரான காக்காமுள்ளு வேலிக்காரர் அரவான் கதையைச் சொல்லி அலிகளோட பெருமையைக் கூறி சம்மதிக்க வைக்கிறார்..

      ஆனால் கும்மியாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கைரதியை அடையாளம் கண்டு சட்டப்படி அலிகள் பெண் உடைகளை அணியக்கூடாது என்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். சுதந்திரத்திற்குப் பின் நடக்கும் இச்சம்பவத்திற்கு ஆங்கிலேயரின் சட்டம் செல்லாது என்று எடுத்துக்கூறியும் கேட்கவில்லை. லாக்கப்பில் நிர்வாணப்படுத்தி மானப்பங்ம் செய்ய காவலர்கள் முயல்கின்றனர். “மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஓலையக்காளாக மாறினாள் கைரதி. தன் மீது தீ பற்ற வைத்துக் கொள்ள சுள்ளிகளைத் தேடினாள். சுற்றிலும் “சு……. களாக இருந்தது” .என்று.கதை அதிர்ச்சியாக முடிகிறது.

      ‘நஸ்ரியா ஒரு வேஷக்காரி’. ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது, அதற்காக கிடந்து துடிப்பது போல் ஒரு பெண் ஆணாக மாற விரும்புவதை, துடிப்பதை வலியுடன் கூறும் கதை.

       அவள் பெண்ணாக பிறந்து இருந்தாலும் சிறுவயதிலிருந்தே அவள் தன்னை ஒரு ஆணாகவே  கருதி ஆண் செய்யும் வேலைகளையே செய்ய துடிக்கிறாள். செய்கிறாள் ! ஓர் ஆணாகவே உடை அணிந்து கொள்ள விரும்புகிறாள். இதற்காக உம்மாவிடமிருந்து திட்டும் அடியும் வாங்குகிறாள். ஆனாலும் அவள் மனம் அவளை ஆணாகவே உணர்த்துகிறது ! ஆணாக இருந்து பெண்ணாக விரும்புவருக்கு ஆண் குறி ஓர் இடைஞ்சல் போல் பெண்ணாக இருந்து ஆணாக விரும்புவருக்கு மார்பு ஒரு பெரும் இடைஞ்சல். நஸ்ரியா வீட்டில் பெண்ணாகவும் வெளியில் ஆணாகவும் இருக்கிறார். அவருக்கு உதவி புரிகிறார் ஒரு திருநங்கை.

       வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் நஸ்ரியாவாக சென்றவள் புல்லட்டில் மொஹமது நஸ்ருதீனாக பறக்கிறான்.. ஒரு முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒரு திருநம்பி வருவதாக எழுதப்பட்டுள்ள கதை இது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மதம் ஏது..? ஆனாலும் இங்கே ஒரு தகவலையும் சொல்லியாக வேண்டும். இஸ்லாமிய சமூகத்தின் பொதுவெளியில் மூன்றாம் பாலினத்தவர்களை யாரும் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்துவதில்லை அவர்களுக்கு உரிய மரியாதையும் வேலை வாய்ப்பும் கொடுக்கின்றனர். மிகச்சிறப்பான முறையில் பிரியாணி சமைக்கும் பிரியாணி மாஸ்டர்களாக அவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். 

       இஸ்லாமிய சமூகம் பற்றிய கதை கூறல் முறையும் சிறப்பாகவே இவரிடம் வெளிப்பட்டிருக்கிறது. மு.ஆனந்தன். அவர்கள் இஸ்லாமிய சமூகம் பற்றியும் இனி தொடர்ந்து கதைகள் எழுத வேண்டும்.   

        திருநங்கைக்கான ஆசையென்பது பெண்களைப் போல் இருக்க வேண்டும், பெண்களைப் போல் வாழ வேண்டும் என்றே விரும்புவர். உள்ளாடை முதல் மேலாடை வரை அப்படியே பின்பற்றுவர். பூவைப்பது, பொட்டு வைப்பதிலும் மாற்றம் இருக்காது. நாப்கினைப் பயன்படுத்திப் பார்ப்பதிலும் அவர்களுக்கு அப்படியோர் ஆனந்தம். “கூடுதலாய் ஒரு நாப்கின்”  என்ற கதையின் மூலம் சொல்லப்படும் இந்த தகவல் ஒரு புதிய தகவலாகப்படுகிறது  ஒரு திருநங்கை தான் சமையல்காரியாக வீட்டு வேலை செய்யும் வீட்டுப்பெண்ணின் மகள் பூர்வீகா வாங்கி வைத்திருந்த நாப்கினை தெரியாமல் எடுத்து பயன்படுத்துகிறாள். இதை தெரிந்துக்கொண்ட அவள் நாப்கினை பயன்படுத்தும் போது கைரதி அடைந்த மகிழ்வைக் கண்டு தனக்கு வாங்கும் போது ‘ கூடுதலாய் ஒரு நாப்கின்’ வாங்கி வைத்து விடுகிறாள். கைரதியும் தெரியாமல் எடுத்து பயன்படுத்தி வருவதைக் கண்டும்காணாமல் இருந்து விடுகிறாள் பூர்விகா. .

       ஒரு திருநங்கை அரசு உதவி பெறுவதற்காக திருநங்கை என்னும் சான்றிதழ் பெற அவர் படும் அவமானங்களைக் காட்டுகிறது ஜாட்ளா‘ என்ற சிறுகதை. 

       ஜாட்ளா என்னும் திருநங்கையை அவர்கள் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. முறைப்படி அங்கீகரிக்கிறது. திருநங்கைதான் என மனம் சொல்வதால் ஆண் உறுப்பை நீக்க வேண்டும் என்கிறாள். ஆனால் நாயக் ஆணுறுப்பை நீக்குவதால் ஏற்பட்ட பிரச்சினைகளை எடுத்துக்கூறி நீக்காவிட்டாலும் திருநங்கைதான் என்கிறாள். ஆனாலும் அரசு உதவி பெற திருநங்கை சான்றுக்காக மாவட்ட ஆட்சியர் முதல் மருத்துவமனை வரை அலைக்கழிக்கப்படுகிறாள். இறுதியில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆணுறுப்பைத் தட்டி பார்க்கும் போது அவளுக்கு  கோபம் வந்துவிடுகிறது. “என் மனசுக்குத் தெரியாதா நா ஆம்பளையா  இல்ல பொம்பளயான்னு…! நா பொம்பளைன்னு யாருக்கு நீரூபிக்கோணும்.?”   என்று கத்திக்கொண்டே வெளியேறிவிடுகிறாள் ஜாட்ளா. திடீரென்று அவள் சேலையை இடுப்புக்கு மேலே தூக்கிக் காட்டி, ”வாங்கடா..வாங்க ! எல்லோரும் வந்து அவுத்துப் பாருங்கடா..!” என்று கத்த எல்லோரும் அதிரிச்சியுடன் அலறி ஓடுகிறார்கள். அந்த அதிர்ச்சி மட்டுமல்ல அவரின் வேதனையும் நம்மை தொற்றிக்கொள்கிறது. சமூகம் எப்போதும் இப்படித்தான் மாறவே மாறாது என்பதை வலியுறுத்தும் எழுத்து.        .

377ஆம் பிரிவின் கீழ் கைரதி’ கதையில் “ஓலையக்கா லாக்கப்” கதையில் கடைசி வரியில் வந்த அந்த ‘ சு…..’ கள் என்ன செய்தன என்பதை புரியச் செய்துள்ளார்.!

         ஓட்டலில் வேலை செய்து விட்டு இரவில் வெளியே படுத்திருந்த ஒரு கைரதியை காவல்துறையினர் பிடித்து வந்து லாக்கப்பில் வைத்து அவளின் பின்புறம் வழியாக பலாத்காரம் செய்து காயப்படுத்தி கிழித்து மருத்துவச் சான்றிதழ் பெற்று இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டார் என குற்றம் சாட்டி தண்டனையும் பெற்றுத் தருகின்றனர் காவல் துறையினர்.. காவல் துறைக்கு மருத்துவ துறையும் உதவி. காவல் துறை செய்த காரியத்தால் கைரதியால் கூண்டில் கூட நிற்கமுடியாத ஒரு மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.    .

         ஓட்டலில் பாத்திரம் கழுவி வயிற்றைக் கழுவினாலும் திருநங்கைகளைக் காவல் துறையினர் நிம்மதியாக வாழவிடுதில்லை என காவல் துறையைக் குற்றம் சாட்டுகிறார் வழக்குரைஞரும் கதை ஆசிரியருமான மு. ஆனந்தன். “மீண்டும் சப் இன்ஸ்பெக்டர் தீரத்துடன் செயல்படத் தொடங்கினார். இந்த முறை சிரமம் இருக்கவில்லை. மற்ற போலீஸ்காரர்களும் நிர்வாண சீருடையை அணிந்தார்கள். கட்டுப்பாட்டுடன் என ஒரு எள்ளலுடன் ஒருவர் பின் ஒருவராக இயங்கினார்கள்” என காவல் துறையின் ‘இந்த அதிதீரச் செயலை’  அட்டகாசமாக சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்..  

       இயற்கை உபாதையைக் கழிக்க திருநங்கைகள் படும் ஒரு பெரும் அவஸ்தையைக் கூறும் கதை ‘ அடையாளங்களின் அவஸ்தை‘. பொது இடங்களில் ஆண்,  பெண்ணுக்குக் கழிவறைகள் உள்ளன. திருநங்கையர்களுக்கு எங்கும் இல்லை. விழுப்புரம் வந்திறங்கியதிலிருந்தே உபாதையைக் கழிக்க ஒரு அறையாவது எடுத்து  கழிக்கலாம் என்றால் அறை  தர மறுக்கிறார்கள்.  எப்படியோ ஒரு விடுதியில் அறை கிடைக்க மலம் கழிக்கிறாள் கைரதி.  நிம்மதியாக உணருகிறாள். ஆனால் ‘ நிராகரிப்பின் வலி மட்டும் அமைதியாக அமைதியாக உள்ளே தங்கி விட்டது’  என்று சொல்லி  நடப்பு நிதர்சனத்தை அந்த வலியை இந்த கதையில் உணர்த்துகிறார்.  .

        சமூகம் மாறிய பாலினத்தவரை அங்கீகரிக்கவில்லை, ஏற்கவில்லை என பொதுவான குற்றச்சாட்டு இருந்தாலும் பெற்றோரை முதல் குற்றவாளியாக்குகிறார். இரண்டாவது குற்றவாளி காவல் துறை. ஆங்கிலேயர் காலத்து காவல்துறையாகவே இன்னும் இருக்கிறது என்கிறார். ஒவ்வொரு கதையை எழுதுவதற்கும் ஒரு நிகழ்வு அவருக்கு காரணமாக இருந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்வையும் வைத்து சிறப்பான சிறுகதையாக்கியுள்ளார்.

       “ஆண் குழந்தை பொறந்த சந்தோஷத்தில் அவன் குஞ்சைத் தொட்டு முத்தம் கொடுத்து வளர்த்தேன். இப்பக் குஞ்ச அறுத்துக்கிட்டு வந்து நிக்கறானே”  என்ற “மாத்தாரணி கிளினிக்” கதையில் வரும் வரிகளைப் போல் உறுப்பு  அறுத்து பாலுறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்துகொண்ட திருநங்கைகளின் செய்திகளும்,  மார்பகங்களை அறுத்து ஆணுறுப்பு பொருத்தப்பட்ட திருநம்பிகளின்  செய்திகளும் இனி எக்காலத்திற்கும் கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருகதையும் அவர்கள் வாழ்கையில் எதிர்கொள்ளும் ஒவ்வொருவித வலியை துயரத்தை அவலத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் தோழர் மு.ஆனந்தன்.  

  .       உச்சநீதி மன்றம் மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்தும் ஜவஹர்லால் பல்கலைக் கழகம் ஆண், பெண் இரண்டு பாலினத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. கைரதி கிருஷ்ணன் மாணவர்களைத் திரட்டி நிர்வாகத்திற்கு எதிராக போராடி வெற்றி பெறுகிறான். ஆனால் கைரதி கிருஷ்ணன் படிப்பை முடித்து வெளியில் சென்றவுடன் பல்கலைக் கழகம் படிவத்தில் ‘ இதரர்கள்’ ( Others) என மாற்றி விடுகிறது. மூன்றாம் பாலினத்தவரை இதரர்கள் என்பது அதாவது மற்றவர்கள் என்பது அவமானப்படுத்தும் செயலாகும். மேலும் கைரதி கிருஷ்ணனை” நீங்கள் அலியா, ஹிஜராவா, இல்லை யூனக்கா?” என்னும் கேள்விக்கு “நான் ஒரு இன்டெர்செக்ஸ். தமிழில் இடைப்பாலினம்” என்கிறார். அதாவது இரண்டு உறுப்புகளுடன் இருப்பவர். இதே போல் இருனர், திரினர், பாலிலி எனவும் பாலினங்கள் உள்ளன என்கிறார் மு.ஆனந்தன். .

        1884ஆம் ஆண்டில் ஒரு திருமண வீட்டில் கைரதி என்ற திருநங்கையை இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டார் என சிறையிலடைத்தது பிரிட்டிஷ் இந்திய காவல் துறை. அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து விடுதலையும் பெற்றுள்ளார். திருநங்கைகளுக்காக முதன் முதலாக சங்கம் அமைத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மனு அளித்த தலைவியின் பெயரும் கைரதி. வரலாற்றில் இடம் பெற்ற இந்த கைரதி என்னும் திருநங்கைகள் நினைவாகவே இந்த தொகுப்புக்கு கைரதி377 என்று பெயர் வைத்ததற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். மு.ஆனந்தன். 

         377 என்பது சட்டப்பிரிவு. இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டால் அந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுவர். எனவே இச்சிறுகதைத் தொகுப்பிற்கான தலைப்பாக ‘ கைரதி 377′ என வைத்துள்ளார். மேலும்  இந்த தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளிலும் திருநங்கைகளுக்கு, திருநம்பிகளுக்கு, மாறிய பாலினருக்கு கைரதி என்ற பெயரையே சூட்டி ஒரு பொதுப்பெயரை உருவாக்கியுள்ளார் தோழர் மு.ஆனந்தன்..

        எவ்வளவு படித்திருந்தாலும் திருநங்கைகளை ‘ஒம்போதுகளாகத்தான் இந்த சமூகம் இழிவுபடுத்துகிறது என்கிறார் ஒரு கதையில். இந்த தொகுப்பு சொல்லும் செய்தியும் அதுதான். இந்த பார்வை மாறவேண்டும் என்கிறார் தன் முன்னுரையில் அழகியபெரியவன். மாற்றுவோம். இதுபோன்ற கதைகளை வாசிக்கும்போது அந்த மாற்றம் உருவாகும். அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு இது.  .       

                          ********************************

கைரதி 377 – (மாறிய பாலினரின் மாறாத வலிகள்) சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர்மு ஆனந்தன்

வெளியீடுபாரதி புத்தகாலயம்

பக்கம் 120 – விலை 120

நூலினைப் பெற – மு.ஆனந்தன் 9443049987


ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.                                                                                    

இயற்பெயர் . H. நஸீர்.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றவர்..

       இதுவரை வார , மாத இதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும் 120 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஐந்து குறுநாவல்களும், இரண்டு நாவல் தொடர்களும் அவ்வப்போது கவிதைகளும், இஸ்லாமிய இதழ்களில் தொடர் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *