யூரி அலேஷா

மந்திரவாதிகளின் காலம் போய்விட்டது. பார்க்கப் போனால் எந்தக் காலத்திலுமே அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்ததாகச் சொல்லுவது எல்லாம் மிகவும் சின்னக் குழந்தைகளுக்கான கற்பனைகளும் கதைகளுமே. வேடிக்கை பார்ப்பவர்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றுவது சில தந்திர வித்தைக்காரர்களுக்கு முடிந்திருக்கும். இந்தத் தந்திர வித்தைக் காரர்களை மாயக்காரர்களாகவும் மந்திரவாதிகளாகவும் அவர்கள் எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள், அவ்வளவுதான்.

அந்த மாதிரி ஒரு மருத்துவர் இருந்தார். கஸ்பார் அர்னேரி என்று பெயர். வெகுளிமனிதனும், சந்தைகளிலும் திருவிழாக் கூட்டங்களிலும் வெட்டியாகப் பொழுது போக்குபவனும், அரைகுரையாகப் படித்த மாணவனும் அவரைக்கூட மந்திரவாதி என்றே மதித்திருப்பார்கள். உண்மையில் இந்த மருத்துவர் வியப்பு ஊட்டும் செயல்களைச் செய்தார். அவை அற்புதங்களே போல இருந்தன. ஆனால், மட்டு மீறிய நம்பிக்கை உள்ள மக்களை ஏமாற்றித் திரியும் மந்திரவாதிகளுக்கும் போலிப் பண்டிதர்களுக்கும் அவருக்கும் பொதுவான தன்மை எதுவுமே இருக்க வில்லை.

மருத்துவர் கஸ்பார் அர்னேரி விஞ்ஞானி. அவர் சுமார் நூறு கலைகளைக் கற்றிருந்தார். என்ன ஆனாலும் கஸ்பார் அர்னேரியைக் காட்டிலும் ஆழ்ந்த அறிவும் கலைஞானமும் உள்ளவர் ஒருவரும் நாட்டில் இருக்கவில்லை என்பது நிச்சயம்.

அவருடைய கலைத்தேர்ச்சி அரைவை இயந்திரக்காரனுக்கும், படை வீரனுக்கும், மாதர்களுக்கும், மந்திரிகளுக்கும் – மொத்தத்தில் எல்லோருக்கும் -தெரிந்திருந்தது. பள்ளிச் சிறுவர்கள் கூட அவரைப் பற்றி ஒரு பாட்டு பாடி வந்தார்கள். அதன் பல்லவி இப்படி வரும்:

தரையிலிருந்து விண்ணில் பறக்கவும்

நரியின் வாலை எட்டிப் பிடிக்கவும்

கல்லை ஆவியாகச் செய்யவும்

வல்லவர் மருத்துவர் கஸ்பார்.

கோடையில் ஒரு நாள் பருவநிலை மிகவும் நன்றாய் இருந்த போது, சில வகைப் புற்களையும் வண்டுகளையும் சேகரிப்பதற்காக நீண்ட தூரம் உலாவப் போவது என்று மருத்துவர் கஸ்பார் அர்னேரி தீர்மானித்தார்.

மருத்துவர் கஸ்பார் இளமையைக் கடந்து விட்டவர் ஆனதால் மழைக்கும் காற்றுக்கும் அஞ்சினார். வீட்டுக்கு வெளியே போனபோது கழுத்தைச் சுற்றிக் கனத்த மப்ளரைக் கட்டிக் கொண்டார், தூசி விழாமல் இருப்பதற்காகக் கண்ணாடி மாட்டிக் கொண்டார். கால் இடறி விடாமல் இருப்பதற்காகக் கைத்தடியை எடுத்துக் கொண்டார். மொத்தத்தில், பெரிய முன்னேற்பாடுகளோடு உலாவக் கிளம்பினார்.

அன்றையப் பகல் அற்புதமாய் இருந்தது. வெயில் பளிச்சென்று அடித்துக் கொண்டிருந்தது. பச்சைப் பசேலென்று தளதளத்த புல்லைப் பார்த்ததும் வாய் இனித்தது. டாண்டெலியன் மலர்கள் காற்றில் பறந்தன, பட்சிகள் சீழ்க்கை அடித்தன. இளங்காற்று மெல்லிய நடன உடை போல இதமாக வீசிற்று.

“இது நல்லது, ஆனாலும் மழைக் கோட்டை எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் கோடை காலப் பருவநிலை ஏமாற்றி விடும். மழை பெய்யலாம்’ என்று சொல்லிக் கொண்டார் மருத்துவர்.

வீட்டில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு, கண்ணாடியைத் தூசி போக ஊதி மாட்டிக் கொண்டார் மருத்துவர். பிறகு தம்முடைய பச்சைத் தோல் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

மிகவும் கவர்ச்சியான இடங்கள் ஊருக்கு வெளியே, மூன்று தடியர்களின் அரண்மனை இருந்த இடத்தில் இருந்தன. மருத்துவர் அந்த இடங்களுக்கு அடிக்கடி போவது வழக்கம். மூன்று தடியர்களின் அரண்மனை பிரமாண்டமான பூங்காவின் நடுவில் இருந்தது. ஆழமான அகழ்கள் பூங்காவைச் சூழ்ந்திருந்தன. அகழ்களுக்குக் குறுக்கே கரிய இரும்புப் பாலங்கள் அமைந்திருந்தன. அரண்மனைக் காவலர்கள் பாலங்களைக் காத்துக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் இறகுகள் செருகிய கறுப்பு மெழுகுத் துணித் தொப்பிகள் அணிந்த காவல் படை வீரர்கள் இவர்கள். பூங்காவைச் சுற்றிலும் தொடுவானம் வரையில் பரந்திருந்தன புல் வெளிகள். அவற்றின் நடுநடுவே பூச்செடிகளும் சோலைகளும் குளங்களும் இருந்தன. எல்லாவற்றிலும் அதிக அக்கறைக்கு உரிய புல் வகைகள் அங்கே வளர்ந்தன. எல்லாவற்றிலும் அழகான வண்டுகள் அங்கே ரீங்காரம் செய்தன, எல்லாவற்றையும் விட இனிமையான பட்சிகள் பாடின.

‘ஆனால் அவ்வளவு தூரம் நடந்து போக எனக்கு முடியாது. நகர மதில் வரை நடந்து போய் அங்கே வண்டி வைத்துக் கொண்டு அரண்மனைப் பூங்காவுக்குப் போகிறேன்” என்று எண்ணிக் கொண்டார் மருத்துவர்.

நகர மதிலின் பக்கத்தில் ஆட்கள் வழக்கத்தை விட அதிகமாக நெரிந்தார்கள்.

“இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையா என்ன? இல்லையே, செவ்வாய்க் கிழமை ஆயிற்றே” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் மருத்துவர்.

இன்னும் கிட்டத்தில் போனார்.

சதுக்கம் முழுவதையும் அடைத்துக் கொண்டு கூடி இருந்தார்கள் மக்கள். பச்சைக் கைம் முனைகள் உள்ள சாம்பல் நிறக் கம்பளி மேல் சட்டைகள் அணிந்த கம்மியர்களையும், களிமண் நிற முகங்கள் கொண்ட மாலுமிகளையும், கவர்ச்சியான நிறங்களில் மார்புச் சட்டைகள் போட்டிருந்த செல்வச் செழிப்புள்ள குடிகளையும், ரோஜாச் செடிகள் போன்ற ஸ்கர்ட்டுகள் அணிந்த அவர்களுடைய மனைவிகளையும், சாடிகளும், தாம்பாளங்களும், குளிர்பதனப் பெட்டிகளும் சூட்டடுப்புக்களும் வைத்துக் கொண்டிருந்த விற்பனையாளர்களையும் கண்டார் மருத்துவர். இவர்கள் தவிர, துண்டுத் துணிப் போர்வையால் தைத்தவர்கள் போலப் பச்சையும் மஞ்சளும் கலப்பு நிறங்களுமாகக் காணப்பட்ட திறந்த வெளி நடிகர்களும் குதூகலம் உள்ள செம்பழுப்பு நாய்களின் வால்களை இழுத்துக் கொண்டிருந்த சின்னஞ் சிறுவர்களும் அங்கே இருந்தார்கள்.

எல்லோரும் நகர வாயில் கதவுகளுக்கு முன்னால் நெரிந்தார்கள். வீடு அளவு உயரமாய் இருந்த பிரமாண்டமான கதவுகள் அடைத்துப் பூட்டப்பட்டிருந்தன.

“கதவுகள் பூட்டப்பட்டிருப்பது ஏன்?” என்று வியந்தார் மருத்துவர்.

கூட்டம் இரைந்தது. எல்லோரும் உரக்கப் பேசினார்கள், கத்தினார்கள், திட்டினார்கள், ஆனால் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

கொழுத்த சாம்பல் நிறப் பூனையைக் கையில் வைத்திருந்த இளமாது ஒருத்தியின் பக்கத்தில் போனார் மருத்துவர்.

“இங்கே என்ன நடக்கிறது என்று தயை செய்து சொல்லுங்களேன்! இவ்வளவு நிறையப் பேர் ஏன் கூடி இருக்கிறார்கள், அவர்களுடைய கிளர்ச்சிக்கு என்ன காரணம், நகர வாயில் கதவுகள் ஏன் மூடப்பட்டு இருக்கின்றன?” என்று கேட்டார்.

 “காவல் படையினர் ஆட்களை நகரத்திலிருந்து வெளியேற விட மாட்டோம் என்கிறார்கள்…”

”ஏனாம்?”

“ஏற்கெனவே நகரத்திலிருந்து வெளியேறி மூன்று தடியர்களின் அரண்மனைக்குப் போயிருக்கும் ஆட்களுக்கு இவர்கள் உதவக் கூடாது என்பதற்காக…”

‘“எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அம்மா, தயவு செய்து என்னை மன்னியுங்கள்…”

“மூன்று தடியர்களின் அரண்மனையைத் தாக்கிக் கைப்பற்றுவதற்காகக் கருமான் புரோஸ் பெரோவும் கழைக்கூத்தாடி திபூலும் மக்களை இன்று நடத்திப் போயிருக்கிறார்களே, அது உங்களுக்குத் தெரியாதா என்ன?..’’

“கருமான் புரோஸ்பெரோவா?..”

“ஆமாம், பெரியவரே… மதில் உயரமானது, மறுபக்கம் காவல் படைத் துப்பாக்கி வீரர்கள் பதுங்கி இருக்கிறார்கள். நகரத்திலிருந்து ஒருவரும் வெளியேறவில்லை. கருமான் புரோஸ் பெரோவோடு போனவர்களை அரண்மனைக் காவல் படையினர் சுட்டுக் கொன்று விடுவார்கள்.”

மெய்யாகவே வெகு தொலைவில் சில குண்டுகள் வெடித்த ஓசை கேட்டது.

மாது கொழுத்த பூனையை நழுவ விட்டாள். பிசைந்த மாவு போலச் சொத்தென்று விழுந்தது பூனை. கூட்டம் முழங்கிற்று.

‘அப்படியானால் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியை நான் கவனிக்காமல் விட்டு விட்டேன் என்று ஆகிறது. ஒரு மாதம் முழுவதும் நான் அறையிலிருந்து வெளியேறவில்லைதான். பூட்டிய அறையில் வேலை செய்து கொண்டிருந்தேன். வெளிநடப்பு எதையுமே நான் தெரிந்து கொள்ள வில்லை…” என்று எண்ணமிட்டார் மருத்துவர்.

அந்தச் சமயத்தில் இன்னும் தூரத்தில் குண்டுகளை வெடித்தது பீரங்கி. வெடி முழக்கம் பந்து போலத் துள்ளிக் காற்றில் உருண்டது. மருத்துவர் திகில் அடைந்து சில அடிகள் பின்னே நகர்ந்தார். கூட்டம் முழுவதுமே திடுக்கிட்டுத் துள்ளிப் பின்னால் சரிந்தது. குழந்தைகள் அழத் தொடங்கின, புறாக்கள் இறக்கைகளைப் படபடவென்று அடித்து நாலா பக்கமும் பறந்தன, நாய்கள் குந்தி ஊளையிடத் தலைப்பட்டன.

பீரங்கி வெடிகளின் கடுமையான முழக்கம் கேட்கலாயிற்று. நினைத்தே பார்க்க முடியாத அளவு பெருத்த தடதடப்பு அதிர்ந்தது. கூட்டம் வாயில் கதவுகளை நெருக்கி அழுத்திக் கொண்டு ஆரவாரித்தது:

‘புரோஸ்பெரோ! புரோஸ்பெரோ!”

“மூன்று தடியர்கள் ஒழிக!”

மருத்துவர் கஸ்பார் ஒரேயடியாகக் குழப்பம் அடைந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை அடையாளம் தெரிந்து கொண்டார்கள், ஏனென்றால் பலருக்கு அவருடைய முகம் பழக்கமாய் இருந்தது. அவரிடம் பாதுகாப்பை நாடுபவர்கள் போலச் சிலர் அவரை நோக்கிப் பாய்ந்தார்கள். மருத்துவரோ, தாமே அழாக் குறையாகத் தவித்தார்.

“அங்கே என்ன நடக்கிறது? வாயில் கதவுகளுக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வது எப்படி? ஒருவேளை மக்கள் வெற்றி பெறலாம்; அல்லது, ஒருவேளை இதற்குள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்! ”

அப்போது ஒரு பத்துப் பெயர் ஒரு புறம் ஓடினார்கள். அங்கே மூன்று குறுகிய சந்துகள் சதுக்கத்திலிருந்து பிரிந்து போயிருந்தன. உயரமான பழைய கோபுரம் உள்ள கட்டிடம் மூலையில் இருந்தது. மற்றவர்களோடு கோபுரத்தில் ஏறுவது என்று மருத்துவர் முடிவு செய்தார். கீழே, குளியறை போலக் காணப்பட்ட சலவைச் சாலை இருந்தது. நிலவறையில் இருப்பது மாதிரி அங்கே இருட்டாக இருந்தது. சுழல் படிக்கட்டு மேலே இட்டுச் சென்றது. குறுகிய சன்னல்கள் வழியே வெளிச்சம் வந்தது. ஆனால் அது மிகவும் குறைவாய் இருந்ததால் எல்லோரும் மெதுவாக, வெகு சிரமத்துடன் ஏறினார்கள். போதாக் குறைக்குப் படிக்கட்டு இடிந்து சிதைந்திருந்தது, அழிகள் முறிந்திருந்தன. மேல் மாடி போய்ச் சேர்வதற்கு மருத்துவர் கஸ்பார் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை எண்ணிப் பார்ப்பது கடினம் அல்ல. இருபதாவது படியிலிருந்தே அவரது கத்தல் இருட்டில் கேட்டது:

“ஐயோ! என் நெஞ்சு வெடித்து விடும் போல் இருக்கிறது. என் ஒரு செருப்பின் குதி கழன்று விழுந்து விட்டது!”

சதுக்கத்தில் இருந்த போதே, பத்தாவது பீரங்கி வெடிக்குப் பிறகு மருத்துவரின் மழைக் கோட்டு நழுவி விழுந்து விட்டது.

கல் அழிகள் சூழ்ந்த மேடை கோபுரத்தின் உச்சியில் இருந்தது. அங்கிருந்து சுற்றிலும் குறைந்தது ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. காட்சி காணத் தக்கதுதான், என்றாலும் அதைக் கண்டு களிக்க நேரம் இல்லை. சண்டை நடந்து கொண்டிருந்த திக்கிலேயே எல்லோரும் பார்வையைச் செலுத்தினார்கள்.

“என்னிடம் தொலை நோக்கி இருக்கிறது. எட்டு கண்ணாடிகள் வைத்த தொலை நோக்கியை நான் எப்போதும் எடுத்துப் போவது வழக்கம். இதோ” என்று வார்ப் பொத்தானைக் கழற்றினார் மருத்துவர்.

தொலை நோக்கி கைக்குக் கை மாறிக் கொண்டு போயிற்று.

பசுமையான வெளியில் ஏராளமான ஆட்களை மருத்துவர் கஸ்பார் கண்டார். அவர்கள் நகரத்துக்கு ஓடி வந்து கொண்டிருந்தார்கள். தப்பி வந்து கொண்டிருந்தார்கள். பல நிறக் கொடிகள் போலத் தொலைவில் காணப்பட்டார்கள் ஆட்கள். குதிரைகள் மேல் இருந்த காவல் படையினர் மக்களை விரட்டினார்கள்.

இவை எல்லாம் திரைப்படக் காட்சி போல் இருந்ததாக மருத்துவர் கஸ்பார் நினைத்தார். பளிச்சென்று வெயில் அடித்தது, பசுமை பளபளத்தது. குண்டுகள் பஞ்சுத் துண்டுகள் போல வெடித்தன. தழல் நொடிப் போது பளிச்சிட்டு மறைந்தது. யாரோ கண்ணாடியில் சூரிய பிம்பத்தைக் கூட்டத்தின் மேல் படும்படித் திருப்பியது போல இருந்தது அந்தக் காட்சி. குதிரைகள் எம்பிக் குதித்தன, பின்னங் கால்களில் நின்றன, பம்பரமாய்ச் சுழன்றன. பூங்காவும் அரண்மனையும் வெண்புகையால் மூடப்பட்டிருந்தது.

‘ஓடி வருகிறார்கள்!”

”ஆட்கள் ஓடி வருகிறார்கள்… மக்கள் தோற்று விட்டார்கள்!”

ஓடி வந்தவர்கள் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். கும்பல் கும்பலாக ஆட்கள் வழியில் விழுந்தார்கள். பசுந்தரையில் பல நிறத் துணித் துண்டுகள் சிதறுவது போலக் காணப் பட்டது.

குண்டு சதுக்கத்துக்கு மேலாகச் சீழ்க்கை அடித்துப் பாய்ந்தது.

ஒருவன் பயந்து போய்த் தொலைநோக்கியைத் தவற விட்டான். குண்டு வெடித்தது. கோபுரத்தின் உச்சியில் இருந்தவர்கள் எல்லோரும் கோபுரத்துக்கு உள்ளே போவதற்காகத் திரும்பிக் கீழே பாய்ந்தார்கள்.

ஒரு கொல்லனுடைய தோல் முன் தாங்கி ஒரு கொக்கியில் மாட்டிக் கொண்டது. அவன் திரும்பினான், பயங்கரமான எதையோ பார்த்து, சதுக்கம் முழுவதிலும் கேட்கும்படி வீரிட்டான்:

“ஓடுங்கள்! கருமான் புரோஸ்பெரோவைப் படையினர் பிடித்து விட்டார்கள்! இதோ அவர்கள் நகரில் புகுந்து விடுவார்கள்!”

சதுக்கத்தில் பெருங் குழப்பம ஏற்பட்டது. கூட்டம் வாயிலிலிருந்து பின்வாங்கி, சந்துகளுக்குப் பாய்ந்து ஓடியது. பீரங்கி வெடிகளால் எல்லோரும் செவிடுகள் ஆகி விட்டார்கள். மருத்துவர் கஸ்பாரும் இன்னும் இரண்டு நபர்களும் கோபுரத்தின் மூன்றாம் மாடியில் தங்கி விட்டார்கள். பருத்த சுவற்றில் இருந்த குறுகிய சன்னல் திறப்பின் வழியாக அவர்கள் வெளியே பார்த்தார்கள்.

ஒருவர் தான் சரியாகப் பார்க்க முடிந்தது. மற்றவர்கள் ஒரு கண்ணால் பார்த்தார்கள். மருத்துவரும் ஒரு கண்ணால் பார்த்தார், ஆனால் ஒரு கண்ணுக்குக் கூடக் காட்சி பயங்கரமாய் இருந்தது.

பிரமாண்டமான இரும்புக் கதவுகள் விரியத் திறந்தன. ஒரு முந்நூறு ஆட்கள் ஒரே நேரத்தில் வாயிலுக்குள் பாய்ந்தார்கள். பச்சைக் கைம்முனைகள் உள்ள சாம்பல் நிறக் கம்பளிச் சட்டைகள் அணிந்த கம்மியர்கள் அவர்கள். இரத்தம் பெருக்கியபடி அவர்கள் விழுந்தார்கள். காவல் படையினர் குதிரைகளை அவர்களுடைய தலைகளில் விரட்டிச் சென்றார்கள். காவல் படையினர் வாட்களால் வெட்டினார்கள், துப்பாக்கிகளால் சுட்டார்கள். மஞ்சள் இறகுகள் விரிந்தன, கறுப்பு மெழுகுத் துணித் தொப்பிகள் பளிச்சிட்டன. குதிரைகள் சிவந்த வாய்களைத் திறந்தன, கண்களை உருட்டி விழித்தன, நுரையைச் சிந்தின.

“பாருங்கள்! பாருங்கள்! புரோஸ்பெரோ!” என்று கத்தினார் மருத்துவர்.

கருமான் புரோஸ்பெரோ சுருக்கு மாட்டி இழுத்து வரப்பட்டான். அவன் நடந்தான், விழுந்தான், மறுபடி எழுந்தான். அவனுடைய செம்பழுப்புத் தலைமயிர் சிடுக்காகி இருந்தது. முகத்தில் இரத்தம் கசிந்தது, கழுத்தில் பருத்த சுருக்கு மாட்டி இருந்தது.

“புரோஸ்பெரோ! கைதி ஆகி விட்டான்!” என்று கத்தினார் மருத்துவர்.

அந்த நேரத்தில் சலவைச் சாலையைக் குண்டு தாக்கியது, கோபுரம் சாய்ந்தது, ஆடிற்று, சாய்ந்த நிலையில் ஒரு வினாடி நின்றது, பின்பு தகர்ந்து சரிந்தது. மருத்துவர் குப்புற விழுந்தார். அவருடைய மறு செருப்பின் குதியும் கைத்தடியும் பெட்டியும் மூக்குக் கண்ணாடியும் நழுவி விழுந்து விட்டன.

மருத்துவர் நல்லபடியாக விழுந்தார். அவர் மண்டையை உடைத்துக் கொள்ளவில்லை, அவருடைய கால்களும் முழுதாக இருந்தன. ஆனால் இதற்கு எவ்வித அர்த்தமும் கிடையாது. குண்டினால் தாக்கப்பட்ட கோபுரத்தோடு நல்லபடியாக விழுவது கூட நிரம்ப விரும்பத்தக்கது அல்ல. அதிலும், மருத்துவர் கஸ்பார் போல இளமையைக் கடந்து விட்டவரும் அனேகமாக முதியவரும் ஆன மனிதருக்கோ, இது கொஞ்சங்கூட இனியது அல்ல. என்ன ஆனாலும், வெறும் அச்சம் காரணமாகவே மருத்துவர் உணர்வு இழந்தார். அவருக்கு நினைவு தெளிந்த போது மாலை ஆகி விட்டிருந்தது. மருத்துவர் சுற்றிலும் பார்த்தார். “எவ்வளவு சங்கடம்! மூக்குக் கண்ணாடி உடைந்து விட்டது. கண்ணாடி இல்லாமல் நான் பார்க்கும் போது கூர்மையான பார்வை உள்ளவன் கண்ணாடி மாட்டிக் கொண்டால் எப்படிப்பார்ப்பானோ அப்படித் தான் பார்க்கிறேன் போல் இருக்கிறது. இது மிகவும் பிடிக்காத சேதி” என்று சொல்லிக் கொண்டார்.

பிறகு பிய்ந்து போன செருப்புக் குதிகளைப் பற்றி முணுமுணுத்தார்:

“ஏற்கெனவே நான் உயரம் அல்ல. இப்போதோ, ஓர் அங்குலம் கட்டை ஆகிவிடுவேன். அல்லது, ஒருவேளை இரண்டு அங்குலமோ, ஏன் என்றால், பிய்ந்து போனவை இரண்டு குதிகள் ஆயிற்றே? இல்லை, ஓர் அங்குலம் மட்டுந்தான்…”

சல்லிக் கற்களின் குவியல் மேல் கிடந்தார் அவர். அனேகமாகக் கோபுரம் முழுவதும் இடிந்து விழுந்திருந்தது. சுவற்றின் நீளமான, குறுகிய துண்டு எலும்பு போலத் துருத்திக் கொண்டிருந்தது. வெகு தொலைவில் வாத்தியங்கள் இசைத்துக் கொண்டிருந்தன. குதூகலமான வால்ட்ஸ் நடன மெட்டு காற்றோடு பறந்து போய் மறைந்து விட்டது, திரும்பவில்லை. மருத்துவர் தலையை நிமிர்த்தினார். முறிந்த கறுப்பு உத்திரக் கட்டைகள் மேலே வெவ்வேறு பக்கங்களிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன. பசுமையான மாலை வானத்தில் விண்மீன்கள் மினு மினுத்தன.

“எங்கே வாத்தியம் வாசிக்கிறார்கள்?’ என்று வியந்தார் மருத்துவர்.

மழைக்கோட்டு இல்லாததால் குளிர்ந்தது. சதுக்கத்தில் ஒரு குரல் கூடக் கேட்கவில்லை. மருத்துவர் முக்கி முனகிக் கொண்டு ஒன்றன் மேல் ஒன்றாக விழுந்து கிடந்த கற்களுக்கு நடுவே எழுந்தார். வழியில் ஒருவனுடைய பெரிய பூட்சில் அவருடைய கால் மாட்டிக் கொண்டது. ஒரு கருமான் உத்திரத்தின் குறுக்கே நீட்டிப் படுத்து, வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். மருத்துவர் அவனைக் கொஞ்சம் அசைத்தார். ஆனால் அவன் எழுந்திருப்பதாய் இல்லை. இறந்து போயிருந்தான்.

இறந்தவனுக்கு மரியாதை காட்டுவதற்காகத் தொப்பியைக் கழற்றக் கையைத் தூக்கினார் மருத்துவர்.

“என் தொப்பியும் காணாமல் போய் விட்டது. எங்கே தான் போவது நான்?”

அவர் சதுக்கத்திலிருந்து வெளியேறினார். வழியில் ஆட்கள் கிடந்தார்கள். மருத்துவர் ஒவ்வொருவரையும் தாழக் குனிந்து பார்த்தார். அவர்களுடைய விரியத் திறந்த விழிகளில் நட்சத்திரங்கள் பிரதிபலிக்கக் கண்டார். உள்ளங்கையால் அவர்களுடைய நெற்றிகளைத் தொட்டுப் பார்த்தார். அவை மிகவும் குளிர்ந்து இரத்தத்தால் நனைந்திருந்தன. இரவில் இரத்தம் கறுப்பாகத் தெரிந்தது.

“ஓகோ, அப்படியா! ஆக, மக்கள் தோற்று விட்டதாகத் தெரிகிறது… இனி என்ன தான் நடக்கும்?” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டார் மருத்துவர்.

ஓர் அரை மணி நேரத்தில் அவர் ஆள் நடமாட்டம் உள்ள இடங்களை அடைந்தார். நிரம்பக் களைத்துப் போயிருந்தார். அவருக்குப் பசியும் தாகமுமாக இருந்தது. இங்கே நகரம் வழக்கம் போலக் காட்சி அளித்தது.

நீண்ட நடைக்குப் பின் இளைப்பாறியபடி நாற்சந்தியில் நின்று கொண்டு மருத்துவர் எண்ணமிட்டார்: ‘என்ன ஆச்சரியம்! பல நிற விளக்குகள் எரிகின்றன, வண்டிகள் விரைகின்றன, கண்ணாடிக் கதவுகள் கிணுகிணுக்கின்றன. அரை வட்டச் சன்னல்கள் பொன் ஒளி வீசுகின்றன. அங்கே தூண்களை ஒட்டினாற்போல ஆண், பெண் இணைகள் தோன்றித்தோன்றி மறைகின்றன. குதூகலமான கூட்ட நடனம் நடந்து கொண்டிருக்கிறது. கறுப்பு நீருக்கு மேலே சீன வண்ண விளக்குகள் சுழல்கின்றன. மனிதர்கள் நேற்று வாழ்ந்தது போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று காலை நடந்தது என்ன என்பது இவர்களுக்குத் தெரியாதா என்ன? குண்டுகள் வெடித்ததும் முனகல்களும் இவர்கள் காதுகளில் படவில்லையா என்ன? மக்கள் தலைவன், கருமான் புரோஸ்பெரோ` கைதி ஆகி விட்டான் என்பது இவர்களுக்குத் தெரியாதோ? ஒருவேளை ஒன்றுமே நடக்கவில்லையோ? நான் தான் பயங்கரமான கனவு கண்டேனோ ஒருவேளை?”

மூன்று விளக்குகள் எரிந்து கொண்டிருந்த கம்பம் இருந்த மூலையில் நடைபாதை ஓரமாக வாடகை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. பூக்காரிகள் ரோஜா மலர்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். வண்டிக்காரர்கள் பூக்காரிகளோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘அவனைச் சுருக்கு மாட்டி ஊர் நெடுக இழுத்துப் போனார்கள். பாவம், அவன்!’

“இப்போது அவனை இரும்புக் கூண்டில் வைத்திருக்கிறார்கள். கூண்டு மூன்று தடியர்களின் அரண்மனையில் இருக்கிறது” என்றான் ரிப்பன் கட்டிய இள நீலப் பட்டுத் தொப்பி அணிந்த பருத்த வண்டிக்காரன் ஒருவன்.

அப்போது ஒரு சீமாட்டி ரோஜா வாங்குவதற்காகப் பெண்ணுடன் பூக்காரிகளிடம் வந்தாள்.

“யாரைக் கூண்டில் வைத்திருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.

“கருமான் புரோஸ்பெரோவை. காவல் படையினர் அவனைக் கைது செய்து விட்டார்கள்.’’

“நல்லதுதான், ஆண்டவன் காப்பாற்றினான்!” என்றாள் சீமாட்டி.

பெண் சிணுங்கினாள்.

“நீ எதற்காக அழுகிறாய், அசடே?” என்று ஆச்சரியப்பட்டாள் சீமாட்டி. ‘கருமான் புரோஸ்பெரோ மேல் இரக்கப்படுகிறாயா? அவன் மேல் இரக்கப்பட வேண்டாம். அவன் நமக்குத் தீங்கு செய்யப் பார்த்தான். இதோ பார், எவ்வளவு அழகான ரோஜாக்கள்…”

கைப்பான தண்ணீரும் இலைகளும் நிறைந்த தாம்பாளங்களில் அன்னங்கள் போல மெதுவாக நீந்திக் கொண்டிருந்தன பெரிய ரோஜா மலர்கள்.

”இந்தா, மூன்று ரோஜாப் பூக்கள் உனக்கு. அழுவதற்குக் காரணமே கிடையாது. அவர்கள் கலகக்காரர்கள். அவர்களை இரும்புக் கூண்டுகளில் அடைக்காவிட்டால் அவர்கள் நம்முடைய வீடுகளையும் உடைகளையும் ரோஜாப் பூக்களையும் பறித்துக் கொண்டு நம்மைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விடுவார்கள்.”

அந்தச் சமயத்தில் அருகாக ஓடினான் ஒரு பையன். நட்சத்திரங்கள் தைத்த சீமாட்டியின் மழைக்கோட்டை அவன் முதலில் பிடித்து இழுத்தான், பெண்ணின் பின்னலை இழுத்தான். “பரவாயில்லை, சீமாட்டியாரே! கருமான் புரோஸ்பெரோ கூண்டில் இருக்கிறான், ஆனால் கழைக்கூத்தாடி திபூல் வெளியே சுதந்திரமாய் இருக்கிறான்!” என்று கத்தினான்.

‘அட துடுக்கா!”

சீமாட்டி காலைத் தொப்பென்று அடித்தவள் கைப்பையைத் தவற விட்டு விட்டாள். பூக்காரிகள் கலீரென்று சிரிக்கத் தொடங்கினார்கள். பருத்த வண்டிக்காரன் இந்த அமளியைப் பயன்படுத்திக் கொண்டு, தன் வண்டியில் ஏறிப் போகும்படிச் சீமாட்டிக்கு யோசனை சொன்னான்.

சீமாட்டியும் பெண்ணும் வண்டியில் ஏறிப் போய் விட்டார்கள்.

“டேய் துடியா, பொறு!” என்று பையனைக் கூவி அழைத்தாள் பூக்காரி. ‘இங்கே வாயேன்! சொல்லு உனக்குத் தெரிந்ததை…

இரண்டு வண்டிக்காரர்கள் முன் இருக்கைகளிலிருந்து இறங்கி, ஐந்து தோள் மூடிகள் வைத்த மேல் கோட்டுக்களில் சிக்கித் தடுமாறியபடிப் பூக்காரிகளின் பக்கத்தில் வந்தார்கள். “ஆகா, சாட்டை என்றால் இதுதான் சாட்டை! சாட்டை மன்னன்!” என்று வண்டிக்காரன் வீசி ஆட்டிய நீளச் சவுக்கைப் பார்த்து எண்ணிக் கொண்டான் பையன். அந்த மாதிரிச்சாட்டை தனக்கு இருக்க வேண்டும் என்று பையன் நிரம்ப ஆசைப்பட்டான், ஆனால் பல காரணங்களால் அந்த ஆசை நிறைவேறக் கூடாததாக இருந்தது.

‘அப்படியானால் நீ என்ன சொல்லுகிறாய்? சர்க்கஸ்காரன் திபூல் பிடிபடவில்லை என்கிறாயா?” என்று கட்டைக் குரலில் கேட்டான் வண்டிக்காரன்.

“எல்லாரும் அப்படிச் சொல்லுகிறார்கள். நான் துறைமுகத்துக்குப் போயிருந்தேன்…”

“காவல் படையினர் அவனைக் கொன்று விடவில்லையா?” என்று தானும் கட்டைக் குரலில் கேட்டான் இன்னொரு வண்டிக்காரன்.

“இல்லை, பெரியவரே… அழகு ராணீ, ஒரு ரோஜாப் பூ எனக்குப் பரிசாகத் தாயேன்!”

“பொறுடா, அசடே. முதலில் சேதி சொல்லு…’

‘ஆகட்டும். வந்து, அதாவது, இப்படியாக்கும்… அவன் கொல்லப்பட்டான்

என்றே முதலில் எல்லோரும் நினைத்தார்கள். பிறகு இறந்தவர்களுக்கு நடுவே அவனைத் தேடினார்கள். அவனோ, கிடைக்கவில்லை.”

“ஒருவேளை அவனை அகழில் தள்ளி இருப்பார்களோ?” என்று கேட்டான் வண்டிக்காரன். ஒரு பிச்சைக்காரன் இந்தப் பேச்சில் குறுக்கிட்டான்.

“யாரை அகழில்? சர்க்கஸ்காரன் திபூல் ஒன்றும் பூனை அல்ல, அகழில் தள்ளி மூழ்கடிப்பதற்கு. சர்க்கஸ்காரன் திபூல் உயிரோடு இருக்கிறான். அவனுக்குத் தப்பி ஓட வாய்த்து விட்டது” என்றான் பிச்சைக்காரன்.

“புளுகுகிறாய், ஒட்டைப் பயலே!” என்றான் வண்டிக்காரன்.

“சர்க்கஸ்காரன் திபூல் உயிரோடு இருக்கிறானாம்!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூவினார்கள் பூக்காரிகள்.

பையன் ரோஜாப் பூவைச் சட்டென உருவிக் கொண்டு ஓட்டம் எடுத்தான். ஈரப் பூவிலிருந்து நீர்த் துளிகள் மருத்துவர் மேல் சொட்டின. கண்ணீர் போலக் கைத்த துளிகளை மருத்துவர் முகத்திலிருந்து துடைத்துக் கொண்டார். பின்பு, பிச்சைக்காரன் சொல்வதை உற்றுக் கேட்பதற்காக இன்னும் கிட்டே போனார்.

அப்போது ஒரு நிகழ்ச்சி காரணமாகப் பேச்சு தடைப்பட்டது. வீதியில் அசாதாரணமான ஊர்வலம் ஒன்று வந்தது. இரண்டு குதிரை வீரர்கள் தீவட்டிகளுடன் முன்னே வந்தார்கள். நெருப்புத் தாடிகள் போல விரிந்தன தீவட்டிச் சுவாலைகள். அரசின் சின்னம் பொறித்த கறுப்பு வண்டி அவற்றின் பின்னே மெதுவாக நகர்ந்தது.

எல்லாவற்றுக்கும் பின்னால் நடந்தார்கள் தச்சர்கள். அவர்கள் நூறு பெயர் இருந்தார்கள்.

அவர்கள் சட்டைக் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு, வேலைக்குத் தயாராக முன்தாங்கி மாட்டிக் கொண்டு, ரம்பங்களையும், இழைப்புளிகளையும், பெட்டிகளையும் இடுக்கியபடி நடந்தார்கள். ஊர்வலத்தின் இரண்டு பக்கங்களிலும் குதிரைகள் மேல் வந்தார்கள் காவல் படையினர். பாய்ந்து ஓடப் பார்த்த குதிரைகளை இழுத்து அடக்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

‘“என்ன இது? என்ன இது?” என்று கிளர்ச்சி பொங்கக் கேட்டார்கள் வழிப்போக்கர்கள். சின்னம் பொறித்த கறுப்பு வண்டியில் மூன்று தடியர்களின் ஆலோசனைக் குழு அதிகாரி உட்கார்ந்திருந்தான். பூக்காரிகள் பயந்து போனார்கள். உள்ளங்கைகளைக் கன்னங்கள் வரை உயர்த்தியபடி அதிகாரியின் தலையைப் பார்த்தார்கள். வண்டியின் கண்ணாடிக் கதவு வழியே அது தெரிந்தது. வீதியில் விளக்குகள் பளிச்சென்று ஒளி பரப்பின. பொய் மயிர்த் தொப்பி அணிந்த கறுப்புத் தலை உயிர் இல்லாதது போல ஆடிற்று. வண்டியில் பறவை உட்கார்ந்திருப்பது போல் இருந்தது.

‘“விலகுங்கள்!” என்று கத்தினார்கள் காவல் படையினர்.

“தச்சர்கள் எங்கே போகிறார்கள்?” என்று காவல் படை அதிகாரியிடம் கேட்டாள் சின்னப் பூக்காரி.

காவல் படை அதிகாரி நேரே அவள் முகத்தைப் பார்த்து வெறிக் கூச்சல் போடவே, மாறு காற்று அடித்தது போல அவளுடைய தலைமயிர் பறந்தது.

‘தலைகளை வெட்டுவதற்கான மேடைகள் கட்டப் போகிறார்கள் தச்சர்கள்! புரிந்ததா? தச்சர்கள் பத்து வெட்டு மேடைகள் கட்டுவார்கள்!”

“அப்படியா?’”

பூக்காரி தாம்பாளத்தை நழுவ விட்டாள். தண்ணீருடன் ரோஜாப் பூக்கள் சாறுடன் வெந்த பழங்கள் போலக் கொட்டின.

“அவர்கள் வெட்டு மேடைகள் கட்டப் போகிறார்கள்!” என்று அருவருப்போடு திருப்பிச் சொன்னார் மருத்துவர் கஸ்பார்.

காவல் படையினன் திரும்பி, பூட்சுகள் மாதிரி முறுக்கிய மீசைகளின் அடியில் பற்கள் தெரியும்படித் திறந்து காட்டி, “வெட்டு மேடைகள்! எல்லாக் கலகக்காரர்களுக்கும் வெட்டு மேடைகள்! எல்லார் தலைகளும் வெட்டப்படும்! மூன்று தடியர்களின் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்யத் துணிபவர்கள் எல்லோருடைய தலைகளும் துண்டாகி விடும்!” என்று கூச்சல் போட்டான்.

மருத்துவரின் தலை சுற்றியது. மூர்ச்சை போட்டு விழுந்து விடுவார் என்று அவருக்குத் தோன்றியது.

“இன்றைக்கு நான் அளவு கடந்து நிறைய அனுபவித்து விட்டேன். தவிர எனக்குக் கடும் பசியாகவும் களைப்பாகவும் இருக்கிறது. சட்டுப் புட்டென்று வீடு போய்ச் சேர வேண்டும்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் மருத்துவர்.

உண்மையாகவே மருத்துவருக்கு இளைப்பாற நேரம் வந்து விட்டது. நிகழ்ந்தவை, கண்டவை, கேட்டவை எல்லாவற்றாலும் ஒரேயடியாகக் கிளர்ச்சி அடைந்திருந்ததால், இடிந்த கோபுரத்தோடு தாமும் சரிந்து விழுந்ததையும், தொப்பியும், மழைக்கோட்டும், கைத்தடியும், செருப்புக் குதிகளும் தவறிவிட்டதையும் கூட அவர் பொருட்படுத்தவில்லை. மூக்குக் கண்ணாடி போனதுதான் எல்லாவற்றிலும் மோசமாக இருந்தது.

அவர் வண்டி வைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.

000

-வளரும்

மொழிபெயர்ப்பாளர் : பூ.சோமசுந்தரம்

எமது நன்றிகள் – ராதுகா பதிப்பகம், மாஸ்கோ

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *