யாகூபு ஊரிலிருந்தபோது வசித்து வந்த வீடே எல்லாவற்றிற்கும் போதுமானதுதான். அது மண்சுவர்களால் எழுப்பப்பட்ட எளிமையான ஓட்டுவீடு என்றாலும், யாகூபின் தந்தை காலத்தில் வசதி குறைந்த வீடென்றெல்லாம் சொல்லி விட முடியாது. அதை கட்டியவரும் அவரே.

தெருவிலிருந்துப் பார்த்தால் தலைவாசலின் இருபுறங்களிலும் சிமெண்ட்டில் கட்டப்பட்ட வழவழப்பான ஒட்டுத்திண்ணைகள், வருவோர் போவோர் அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாக நீண்ட சிம்மாசனம் போல ஓங்கி நிற்கும்.

ஓரளவு குறைந்த வேலைப்பாடுகளோடு இழைக்கப்பட்ட சற்று சொரசொரப்பான மரக்கதவைத் திறந்தால் இடது புறம், வீட்டுக்குழியின் (அறையின்) சுவரையொட்டி வெட்டி உபயோகிக்கும் வண்ணான் சோப்பு போல மிகவும் குறுகிய ஒட்டுத் திண்ணையொன்று கிப்லா (தொழும் திசை) பக்கமாக ஓடிக்கொண்டிருக்கும்.

அது முடியும் இடத்திருந்து வீட்டுக்குழியின் வாசல் வரை அகலமான பெரிய கட்டில் போன்று வாரத்தில் பெரிய திண்ணையொன்று இழுக்கப்பட்டிருக்கும். இன்னோர் புறம், அதாவது வாசலிலிருந்து வலது புறத்தில் சற்று உயர்ந்த கூடமும், அதிலிருந்து படி போல் சற்று இறங்கியது மாதிரி மற்றுமொரு திண்ணையும் அந்த வீட்டிற்கு மற்றொரு அழகைக் கூட்டியிருக்கும். அங்கே சிறியதும் பெரியதுமாக நெற்குதிர்கள் சுவற்றோடு ஒட்டியது மாதிரி நிற்க வைக்கப்பட்டிருக்கும். அந்த திண்ணை முழுக்க நெல் மற்றும் மண் சுவரின் பிரத்யேக வாசனைகள் குழுமியிருக்கும்.

வீட்டுக்குழி மற்றும் கூடத்திற்கும், இரு புற திண்ணைகளுக்கு இடையி்லும் பத்திருபது பெயர்கள் வந்தாலும் விஸ்தாரமாக நடந்து செல்ல அதே பளிங்கு சிமெண்ட் தரையிலான நடைபாதையுமுண்டு. வாசலிலிருந்தும் முற்றத்திலிருந்தும் அந்த நடைப்பாதையைப் பார்த்தால் அகலமான ஆற்று வாய்க்கால் போன்று தோற்றமளிக்கும்.

முற்றத்தில் ஒரு முருங்கை மரமிருந்தது. அதனருகே வடித்த, புழங்கிய கழுநீர் ஊற்ற ஒரு குழுதாடியும், மண் குடமுமிருக்கும். ஆடு, மாடுகள் வளர்க்காத வீடு என்றாலும், அரிசி கலைந்த நீர், சோறு வடிச்சநீர் மற்றும் அரிந்தும், சீவியும் ஒதுங்கிய கறி கழிவுகளை அவைகளில் நிறைத்துவிட்டால், அக்கம்பக்கத்து வீட்டு வாயில்லா சீவன்களுக்கு உதவும்.

கழுநீர் நிறைந்து வழியும்வரை யாரும் வராவிட்டால் முற்றத்திலிருந்தோ கொல்லைப் புறத்திலிருந்தோ யாகூபு உம்மா குரல்தான் கொடுக்க வேண்டும். அப்படியும் எடுக்க யாரும் வராவிட்டால் அந்த கழுநீர் போல் சம்பந்தப்பட்ட வீட்டார் மீது கோபம் பொங்கிப் பொங்கி வழியுமே தவிர, அதை வாட்டையில் கவிழ்த்துவிட்டு வேலையைப் பார்க்க அவருக்கு மனசு வராது. முடியாத சமயத்தில் தென்னங்கன்றுகளுக்கும் ஊற்றிவிடுவது வழக்கம். முற்றத்தில் செலவு தண்ணீர்க் குடங்களும் அவசரத்திற்கு புழங்க, கை கால் கழுவ ஒன்றிரெண்டு என வைக்கப்பட்டிருக்கும்.

முற்றத்தை வளைத்தாற்போல ஒட்டு வாரத்திண்ணைகள் கொண்ட சுற்றுச் சுவரின் ஓட்டுக்கூரை செவ்வக ‘ப’ வடிவிலிருக்கும். அதன் நீண்ட தாழ்வாரத்தில் இடைவெளிகள் விட்டு விட்டு கழுவிக் கவிழ்க்கப்பட்ட ஏனங்களும் காலி குடங்களும், மேலும் நிரப்பட்டு மூடப்பட்ட செலவுதண்ணீர், நல்லத்தண்ணீர் செப்புக் குடங்களும் புழக்கத்திற்கு தகுந்தாற்போல தத்தம் இடங்களில் சீர்படுத்தப்பட்டிருக்கும்.

அதே வாரத்தில்தான் வசதிக்கேற்ப ஏதுவாய் அமர்ந்து அரைக்கவும் ஆட்டவும் அம்மி மற்றும் ஆட்டுக்கல்லும் இருத்தப்பட்டிருக்கும். முற்றத்தின் வலது புறம், அதாவது வடக்கு மூலையில் அடுப்பாங்கரையும், நேர் தெற்கு மூலையில், தூள்பாழும், கொல்லைக்கு செல்லும் வாசலும் அடுத்தடுத்து அமைந்து வீட்டின் உட்புறத்திற்கு ஒரு முழு வடிவைக் கொடுத்துவிடும்.

அந்த வீடேக் குளுகுளுவென இருந்தாலும் கொல்லைவாசலைத் திறந்தால், கோழி தனது றெக்கைகளை அடித்துக் கொள்வதை போல திரண்டு வீசும் காற்றின் வேகத்தில் முற்றத்தின் சிலுசிலுப்பு இன்னும் கூட கூடிவிடும். கொல்லை வாசலுக்கு வெளிப்புறமாக இறங்கும் ஓட்டுதாழ்வாரத்தில் ஒரு ஒட்டுத்திண்ணையுமுண்டு. அதில் அமர்ந்துதான் யாகூபின் உம்மா கொல்லைக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட வேலைகளை செய்வார். பொழுதின் பகுதி நேரங்கள் பெரும்பாலும் அவருக்கு அங்கேயேதான் கழியும்.

கொல்லையைக் கூட்டி, பெறுக்கி, நறுவிசாகப் பராமரிப்பது மட்டுமல்ல, விழும் கீற்றுகளை, மட்டைகளை ஒன்று விடாமல் சேகரிப்பார், அவைகளை எல்லாம் கொல்லை வேலி வழியாகக் கொண்டுச் சென்று பள்ளிவாசல் குளத்தில் கடலில் மூழ்கிய வத்தைகளை போல நன்றாக ஊறவைத்துவிடுவார். பிறகு படல் வழியாக நிழலுள்ள இடம் வரை ஒன்றொன்றாய் இழுத்து வந்து, ஓய்வு நேரங்களிலோ, முழு நேரமாகவோ அமர்ந்து முடைய தொடங்கி விடுவார்.

பெரும்பாலும் கொல்லையைச் சுற்றியுள்ள வேலியை அடைக்க அவைகளையே உபயோகிக்கவும் செய்வார்; மீதமுள்ளதை விற்றுக் காசாக்குவார். அதேபோல் பனையோலைப் பெட்டிகள், குட்டான்கள் என்று கண்களை கவரும் விதத்தில் சிறு சிறு நுட்பமான வேலைப்பாடுகளோடு அழகழகாய் முடைந்து விற்பார். அதுபோன்ற ஜோலிகளுக்காகவே பிரத்யேகமான பீச்சுவா கத்தியொன்று எப்போதும் அவரிடத்திலிருக்கும்.

அதே நேரத்தில் அவருக்கு வீட்டுளுள்ளும் செய்யக்கூடிய இது போன்று லாபம் தரும் மற்ற மற்ற பொழுதுப்போக்குச் செயல்களும் இருந்ததுண்டு. புளிக் குத்துவது, வண்ண வண்ணமாய் கண்ணைப் பறிக்கும், தேர்ந்த தையல்களோடு சுறுக்கு பைகள் உண்டாக்கி விற்பது, சுறுக்கு பைகளுக்கான உபகரணங்களைப் பார்த்தாலே சிறிய தையல்கடை போல காட்சியளிக்கும்.

அவர் தைத்து விற்கும் சுறுக்கு பைகளை கையில் வாங்கிப் பார்த்தால், அடடா பட்டுத்தூளியை போல மிருதுவில் நம் விரல்கள் மயங்கிவிடும். வாங்குபவர் உள்ளே கால் ரூபாய் வைத்திருந்தாலும் பத்து ரூபாய்க்குரிய மதிப்பு தரும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அதுபோல காசுக்கட்டியும் (வெற்றிலை சிவக்க உபயோகிப்பது) செய்து விற்பதும் வழக்கம். இதெல்லாம் சிறியச் சிறிய வருமானம் என்றாலும் தேங்காய்கள் விற்பதில் சற்று அதிகமாகவேக் கிடைக்கும். அதனாலேயே என்னவோ பெரிதாக வீட்டு செலவுகளுக்கென யாரையும் சார்ந்து வாழ கிட்டத்தட்ட கடைசி வரைக்கும் அவருக்கு அவசியம் இருந்திருக்கவில்லை.

யாகூபின் உம்மா மட்டுமல்ல, ஊர்ப்பக்கம் பல பெண்கள் மேற்சொன்னதைப் போன்று தங்களுக்கிருந்த திறமைகள், குடும்பத்தின் வசதி வாய்ப்புகளைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் சிறியச் சிறிய வருமானங்களை ஈட்டி வந்தார்கள். இதில் பாலுக்கு தேங்காய் என்று அவர்களுக்குள் பற்பல பண்ட மாற்று சங்கதிகளும் நடக்கும்.

விவரிக்க மிகவும் எளிமையான வாழ்க்கை முறை போலத் தோன்றினாலும், அந்த வீட்டிலிருந்த காலக்கட்டங்களில் அவனளவில் ஒரு மாளிகை வாசத்தைத்தான் யாகூபு உணர்ந்திருந்தான். ஒற்றை மகன் என்பதால் அதுவே நிறைவாகவும் இருந்திருக்கலாம். அதனாலோ என்னவோ அதை இடித்துவிட்டு, காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றிக் கட்ட எந்தவொரு முயற்சியையும் தனது வாலிபத்திலோ, குடும்பம் பிள்ளைகள் என வந்தப்பின்னரோ எடுக்கவே அவனுக்குத் தோணவில்லை அல்லது அதையவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு தனது உம்மாவின் அதீத பாசமும், பொறுமையுமுமே போதுமானதாக இருந்தது. ஆகவே ஊர் அல்லது குடும்ப வழக்கத்தின்படி அங்கங்கு தெரிந்தவர், அறிந்தவர் கடைகளில் வேலைப் பார்த்து வந்தான்.

திருமணத்தையடுத்து, எதிலும் முறையான தர்த்தீப்பை சரிவரப் பேணாமல் அடுத்தடுத்து நண்பர்களோடு கூட்டு வியாபாரங்களென விளையாட்டு போல தொடங்கி, முடைப்பட்டுவிட்டதில் வீட்டைத் தவிர அதுவரை தகப்பன் கட்டிக்காத்து வைத்துப் போயிருந்த அத்தனை சொத்துக்களையும் ஒன்றொன்றாய் இழக்க வேண்டியதாயிற்று.

இன்னோர் புறம் குழந்தைகளும் அடுத்தடுத்துப் பிறந்து வளர்ந்து கொண்டும் வந்தார்கள். கடைசியில் குடும்பத் தொழிலான மளிகைக்கடையொன்றை பட்டீஸ்வரம் பக்கம் தனியாளாய் தொடங்க அப்போதுதான் பொறுப்புடன் லாபம் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

அதை முழுமனதாகத் தொடர்ந்திருக்கலாம், ஆனால் அப்போது ஊரில் பாதிபேர் வெளிநாட்டு வாழ்க்கைக்கும், பகட்டான வசதிக்கும் பிலாய் கொண்டு ஓட அல்லது குடும்பத்தினரால் விரட்டியடிக்கப்பட அதில் ஒருவனாய் இவனும் சிக்கிக்கொண்டதிலிருந்து விதி அவனது வாழ்க்கையில் விளையாட தொடங்கியது.

பயணம் இந்தா வருகிறது… அந்தா வருகிறது… என்று ஏஜெண்டு ஆசை வார்த்தைகளைக் காட்டி நாட்களை இழுத்துவிட்டுக் கொண்டிருந்ததில், நன்றாக ஓடிக்கொண்டிருந்த கடையை விற்று, ஏஜெண்டிற்குக் கொடுக்க வேண்டி கையில் வைத்திருந்த காசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரம்பித்தது.

அந்த நாட்களில் அல்லல்களோடு அல்லலாக கையிருப்பெல்லாம் அவன் விட்டுக் கொண்டிருந்த சொல்லொண்ணாப் பெருமூச்சுகளாய்… காற்றில் தூவிய உதிரப்பொடியாய்… படிந்த இடம் தெரியவில்லை!

மேலும் சூழலை சமாளிக்க பட்டுக்கோட்டை மளிகைக்கடையொன்றில் மீண்டும் பொட்டலம், ரோக்கா (பில்) என்று சம்பளத்திற்கு அமர வைத்து சிரிக்க வைத்தது அவனது புள்ளை குட்டிக்காரன் வாழ்க்கை.

காத்திருப்பும், மன உளைச்சல்களும் அதிகரிக்கவே, மீண்டும் மளிகைக்கடையையேத் துவங்கி விடலாம் என்று நினைத்தபோதுதான்… விசா ரெடி என்று ஏஜெண்டிற்கும் இவனுக்கும் இடையிலிருந்த இடைத்தரகரான அந்த உறவினரிடமிருந்து தகவல் வந்தது.

வாழ வைக்க ஆயிரம் உறவுகள் இருந்தாலும் சீரழிக்க நிற்கும் ஒரு உறவிடம்தான் உதவியென்று வழிந்து நிற்போம் என்பது விதியின் சூட்சமம். அவரைப் பற்றி சிறு குறிப்பு என்றால்… இது ஒரு உப கதை… வைத்திருந்த கடை மூலமாக யாகூபு சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த முதல் சேமிப்பைப் பற்றிய கதை…

குறிப்பிட்ட உறவுக்காரர், அவருடைய அவசரத் தேவைக்கு நிலமொன்றை யாகூபிடம் கைமாற்றி விடுவதாக சில ஆயிரங்களை வாங்கியிருந்தார். காரியம் கைகூடும்போது இன்னொரு சரிபாதித் தொகையைக் கொடுக்க வேண்டும் என்பது இருவருக்குமான ஒப்பந்தம் அல்லது பேச்சு வார்த்தை.

ஆனால் உடனே காசு கிடைத்த ஜோரில் அந்த பெரிய மனுசன் ஜாம் ஜாமென தன் வீட்டுத் தேவையை ஊர் மெச்ச முடித்தாரே தவிர, வாக்குக் கொடுத்தபடி நிலத்தை கைமாற்றி விட முன்வரவில்லை! மேலும் குறிப்பிட்ட நிலம் அவருடையதுதானா என்ற ஐயப்பாடு பின்பிறகில் யாகூப்பிற்க்கு பிறந்ததெல்லாம் அவன் நின்ற நிலைக்கு எந்த வகையிலும் உபயோகமில்லாதது.

தான் வெளிநாடு செல்ல வேண்டும் பணத்தையாவது திருப்பித் தாருங்கள் எனக் கேட்டபோதுதான், “அதற்கென்ன நானே உனக்கு விசா ஏற்பாடு செய்து தருகிறேன், நமக்கு தெரிந்த ஏஜென்ட் ஒருத்தன் இருக்கிறான்… சவுதியில் மாதம் பத்தாயிரம் சம்பளமாம், பேசிடலாமா?” என்ற கேள்விக்கு 1994ல் அவனும் மாட்டேன் என்றா சொல்ல முடியும்?

ஆனால் பயணம் வந்த நேரம் கையில் சுத்தமாக காசில்லையே..! வேறு வழியில்லாமல் கூடுதல் தொகைக்கு மனைவியின் நகைகளை அடகில் வைத்தான். இரு வருட காத்திருப்பிற்கு பிறகு ஒருவழியாக 1996ல் சவுதிக்கு விமானம் ஏறியாயிற்று. அங்கேச் சென்ற பிறகுதான் தெரிந்தது இடைத்தரகர் சொன்ன சம்பளத்தை விட மூன்று மடங்கு குறைவு என்பது!

சொல்லப்போனால் அந்த சம்பளத்தை அவன் உள்ளூரிலேயே சம்பாதித்துக் கொண்டிருந்தான். எதற்காக நன்றாக நடந்துக்கொண்டிருந்த கடையை விற்றிருக்க வேண்டும்? இந்தா பயணம், அந்தா பயணம் என்று இரண்டு வருடங்கள் அலைந்திருக்க வேண்டும்? காசையெல்லாம் கரைத்திருக்க வேண்டும்?

இந்த சொற்ப சம்பளத்தை உள்ளூரிலேயே சம்பாத்திருக்கலாமே..! என்ற மன உளைச்சல்களும் ஏமாற்றங்களும் ஒரு புறம் என்றால், கணிசமான தொகையை வாங்கிக்கொண்டு அந்த இடைத்தரகர் செய்த பெரும் நம்பிக்கை துரோகம் மறுபுறம் ஜீரணிக்க முடியாத வேதனையை எண்ணி எண்ணி மாய்ந்து, கசப்பு மருந்தை போல மென்று விழுங்கிக் கொண்டிருந்தான்.

கடைசி நேரத்தில் வேறு வழிகள் தெரியாது மனைவியின் நகைகளை அடகு வைத்துவிட்டு வந்தது பெரும்பாரமாக சதா அவனை வருத்திக்கொண்டிருந்தது. அதை மீட்க கூடிய சந்தர்ப்பம் அமையுமா என்பதே ஆயிரம் ரியால் கேள்வி! பிள்ளைகள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கண்காணா தேசத்திலிருந்தாலும் மற்றவர்கள் போல, பெற்றவள் உட்பட மனைவி மக்கள் யாரிடமும் போனுக்கென செலவழித்து ஒரு வார்த்தை கூட மனம்விட்டு பேச முடியாத சூழல்.

இங்கே அவன் வந்த பிறகு பழைய நாட்கள் போல அன்புள்ள மச்சான் என்று மனைவி கடிதங்கள் எழுதுவதில்லை, மூத்தவன் வளர்ந்துவிட்டதால் அவன் மூலமே முக்கியமான தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டு வந்தது.

நலம் விசாரிப்புகளைத் தவிர்த்து மகிழ்வூட்டி வந்த வார்த்தைகள் என்றால் ‘ஸலாம்’, ‘வஸ்ஸலாம்’ எனும் ஆரம்பம் மற்றும் கடிதத்தின் இறுதியில் எழுதும் முகமன்கள் மட்டும்தான். இதில் பெருநாள் பொழுதுகளுக்கான காசோலைகளோடு வரும் கடிதங்களைச் சேர்க்க இயலாது.

எப்போதாவது இடையிடையே தனது கோரிக்கைகளை மகன்காரன் ஆசையுடன் எழுதி அனுப்புவான். அவன் அப்படி கேட்டு அனுப்பியதில் தவறேதும் இல்லைதான்; எல்லா இடங்களில் நடக்கும் எதார்த்தங்கள்தானே. அப்போது அவனுடைய வயதும் பதினைந்தைத் தாண்டியிருந்ததே!

வெளிநாட்டிலிருக்கும் தனது வாப்பா/அத்தா அனுப்பியவை என்று தனது மகனையொத்த மற்ற பிள்ளைகள் ஆசையாசையாய் காட்டும்போது, அவனுக்கும் கேட்கத் தோணாதா என்ன? ஆனாலும் இருந்து வந்த நெருக்கடிகளில் கேட்டவைகளில் ஒன்றிரெண்டே அந்த வெளிநாட்டிலிருந்த ஏழைத் தகப்பனால் தனது அன்பு மகனுக்கு அனுப்பி வைக்க முடிந்தது.

இப்போது இத்தனையையும் நினைத்துப் பார்க்க காரணம்… கடைசியாக வந்த கடிதத்தில் எப்படியாவது வீடு கட்ட ஏற்பாடு செய்யும்படி அந்த ஆசை மகன் கோரிக்கை வைத்திருக்கிறான். தான் தற்போதிருக்கும் சூழ்நிலையில் தன்னால் என்ன செய்ய முடியும் என யாகூபு ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.

யாகூபு வெளிநாடு வந்த நாளிலிருந்தே பக்கத்து வீட்டின் தண்ணீர் புழக்கத்தால் மண்சுவர் அரித்துக்கொண்டு குழி விழுந்து வந்ததை அவனுடைய மனைவி மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறாள்தான். இவன் கூட ஊரில் இருந்த சமயங்களில் சில நேரம் கவனித்திருக்கிறான்.

இரண்டு மூன்று குடும்பங்கள் அந்த பெரிய வீட்டில் தனித்தனி அடுப்பெரித்து வாழ்ந்து வந்தன. சமையல் என்று இல்லை, சிறுநீர் கழிப்பது, துணித்துவைப்பது என எல்லா புழக்க நீரும் அந்த சுவரிலேயே பட்டு, ஒதுங்கி, சுவற்றையொட்டிய தூழ்ப்பால் வழியே தெரு பக்கம் வெளியேறும்.

அதனால் எப்போதுமே வெளியில் கூட இவர்கள் வீட்டிற்கு வரும் பாதையில் நொதநொத என்று சேறும் பாசியுமாக வெய்யில் இல்லாத காலங்களில் நாறவும் செய்யும். ஆனாலும் எதையும் கேட்க முடியாது, காரணம் இவனும் சரி இவனுடைய உம்மாவும் சரி அந்த வீட்டிலுள்ளவர்களோடு நல்ல இணக்கத்தோடேயே தொண்டுத் தொட்ட பழக்கத்தைப் பேணி வந்தனர்.

அதற்காகவாவது அவர்கள் புழங்கிய நீரையெல்லாம் அவர்களது கொல்லை புறத்திலோ அல்லது வேறு பாதையிலோ மடை மாற்றி விட்டிருக்கலாம். ஆனால் இவர்களது கனிவான சுபாவத்தை அந்த வீட்டு ஆட்கள் தங்களுக்கு சாதகமாகவே உபயோகித்துக்கொண்டு வந்தார்கள்.

இவனுடைய உம்மாவின் மறைவிற்கு பிறகு பேசி பார்த்து, கூச்சலிட்டு அலுத்துப் போன இவனது மனைவி பஞ்சாயத்து வரை மகன் மூலம் மனுக் கொடுத்துப் பார்த்தாள். சுவரின் அடிப்பகுதி நாளுக்கு குழி விழுந்துக் கொண்டு வந்ததே தவிர, சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த வீட்டுக்காரர்களும் மாறவும் இல்லை.

அந்த சுவர் கிட்டதட்ட விழுந்து விடும் அபாயத்தை நாளுக்கு நாள் எட்டிக் கொண்டு வரவே அவனது மனைவி, பிள்ளைகளோடு தனது பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

வழக்கம்போல் அந்த கடிதத்தையும் இவனது மூத்த மகன்தான் எழுதியிருந்தான். தனது வாப்புச்சி (தந்தையின் தாய்) தனது கடைசிக் காலத்தில் பேரனிடம் வைத்த ஒரே ஒரு கோரிக்கை, எந்த சூழலிலும் நீங்கள் இந்த வீட்டை விட்டுச் செல்ல கூடாது என்பதுதான்.

ஆனாலும் அவனும் என்ன செய்வான். சுவர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு போகவே, வேறு வழியின்றி அந்த முடிவிற்கு அவனும் கூட சம்மதிக்க வேண்டியதாயிற்று. இருக்கும் நேரத்தில் சட்டென சுவர் எந்த பக்கம் சாய்ந்துவிட்டாலும் நிலைமையை அது மோசமாக்கி விடாதா?

அதற்காகதான் உம்மாவும் மகனும் யாகூபிற்கு அப்படியொரு அனுமதி கடிதத்தை எழுதியிருந்தார்கள். இன்னொரு விசயம், தனது பிறந்த வீடே ஆனாலும் அங்கேயே இருக்க யாகூபின் மனைவிக்கும் பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த வீடு கட்டும் பேச்சு கூட இப்போது பலமாய் எழுந்துள்ளது.

மனைவியும் மகனும் அவரவர் சவுகரியத்திற்கோ சங்கடத்திற்கோப் பேசினாலும் சவுதித் தொழிலாளி யாகூபுவிற்கோ இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு ஐயாயிரம் அனுப்புவதே பெரும்பாடாக இருந்து வந்தது.

அவதி அவதியாய் அறுபதாயிரத்திற்கு நகைகளை அடகு வைத்து போனவன், அந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் பத்தாயிரத்திற்கே திருப்ப முடிந்திருந்தது. இதற்கிடையில் அவசர நேரங்களுக்கும், பிள்ளைகளின் திடீர் மருத்துவச் செலவுகளுக்கும் அவன் அனுப்பும் சிறுவாட்டு காசு போதாமல், மீட்ட நகைகளையும் கூட சிறுக சிறுக திரும்பவும் வைக்க நேரிட்டுவிட்டதை நினைத்து கணக்கு வழக்குப் பார்த்து வந்தவள் இதற்கெல்லாம் ஒரு விடிவு வராதா என்று கலங்கித்தான் போனாள்!

மேலும் வருசத்துக்கு ஒரு முறையோ இரண்டு வருசத்துக்கு ஒரு முறையோ இக்கமாவுக்கென (பணி அனுமதி) இவன் செலவு செய்ய வேண்டிய தவணை வேறு வந்துவிடும். கேம்பில் தரும் உணவு சரியில்லாமல் போகவே, தனியாக வேண்டியதை சமைத்து சாப்பிட வேண்டிய சூழல். அதற்கும் கூட மனைவி மகனிடம் அனுமதி கேட்டுத்தான் செலவு செய்தான். இதில் எதை சேமித்து அனுப்ப?

இதுவரை சேமித்ததுதான் என்ன? அப்படியே தானே உதிர்ந்து விழுந்த அணில் கடித்தப் பழங்களாய் மண்ணை ஊதிப் பொறுக்கிப் பொறுக்கி பாதுகாத்தாலும், மகனை படிக்க வைத்தேத் தீருவேன் என்று ராங்கிக்காரி தனியார் கல்லூரியில் வேறு சேர்த்துவிட்டுவிட்டாள்!

ஆறுமாதத்திற்கு ஒருமுறை பீஸ் மட்டுமே ஐயாயிரம் வந்துவிடுகிறது. அது தவிர அந்த கட்டணம், இந்த கட்டணம் என்று மகன் வந்து நிற்கும்போது தன்னிடமிருந்து இருக்கும் காசையோ, இல்லாத பட்சத்தில் கடன் வாங்கியோ அல்லது மேலும் அடகு வைத்தோ அவள் புரட்டி கொடுக்க வேண்டியாதாகியிருந்தது.

போதாத குறைக்கு மாசத்திற்கு நூறு முறை அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடுவதிலேயே சின்ன பிள்ளைகளுக்காகும் செலவுகளில் ஒரு தொகை சென்றுவிடுகிறது!

ஏதோ தேங்காய் விற்பதிலும், அவனது மாமனார் மாமியாரின் சிறு சிறு பங்களிப்புகளாலும்தான் பிள்ளைகளின் பாடுகளை ஓரளவு சமாளிக்க முடிந்தது. ஒரு காலத்தில் மளிகைக் கடை முதலாளியாகவே அறியப்பட்ட தனது மாமனார், மருமகன் சம்பாதிக்க வெளிநாடு சென்றுவிட்ட நிம்மதி பெருமூச்சில் கடையை கொடுத்துவிட்டு உழைத்தது போதுமென ஊரைப் பார்த்து வர, பின் விளைந்த நெருக்கடிகளைப் பார்த்தும் ஓய்வெடுக்கத் துணிவாரா? தன் விதியை நொந்தபடி இந்த வயதிலும் வேறு வேறு கடைகளில் வேலைப்பார்த்து மகள் மற்றும் பேரப் பிள்ளைகளின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து வருவதை கேள்விப்பட்டு அவன் மனம் குறுகவேச் செய்தது. எப்போதுதான் தனது குடும்பத்தை தானே காப்பாற்ற முடியும் என்று யாகூபு தனது ஆதங்கங்களை வெளியில் சொல்ல முடியாமல் நினைவு வரும் நேரங்களில் மருகிக் கொண்டிருந்தான்.

வெளிநாடு வந்தது பெருந்தவறோ என்று புலம்பி வருந்தாத நாளில்லை! எப்படி இருந்தாலும் மனைவியின் நகைகளை அவளிடம் திருப்பி கொடுத்துவிட்டுதான் ஊரை பார்க்கச் செல்வது என்ற தீர்மானத்தில் உறுதியாகவே இருந்தான். ஆனால்  அந்த சூழ்நிலைதான் இதுவரை அமையப்பெறவில்லை.

வரும்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்த மூத்தவன் இப்போது காலேஜ் முடிக்க போகிறானாம். என்ன படிக்கிறான் ஏது படிக்கிறான் என்றால் ஏதேதோ சொல்கிறான் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை, அவன் இஷ்டத்திற்கு ஏதோ படிக்கட்டுமென இவனும் விட்டுவிட்டான். நன்றாக படிக்கிறான் என்று பெற்றவள் மட்டும் அவ்வப்போது பீற்றிக்கொள்கிறாள். எப்படி படிக்கிறானோ யார் கண்டா நல்லா படிக்கிறான் என்று கடிதங்களை எழுதியனுப்புவதே அவன்தானே!

இருந்த பிரச்சனைகளுக்கு மேல் இன்னொரு அடுக்காக இந்த வீட்டுச்சுவர் பிரச்சினை வந்து நிற்கிறது. சில சமயம் அவர்கள் வீட்டு பக்கம் விழுந்து விட்டால், நமக்கு மேலும் தொந்தரவுகள் வரலாம் என மனைவி அச்சப்பட்டு அறிவுறுத்தவே, மனசே கேட்காமல் வீட்டை இடித்து விடு என்றான். அந்த சொல்லை சொன்னபோது அவன் மனமும் இடிந்திருக்கும்தான்!

எத்தனை எத்தனை நினைவுகள் இந்த வீட்டைச் சுற்றி! இந்த வீட்டில்தான் ராணி போல அவனது தாய், பதினோரு வயதில் மணமாகி வந்ததிலிருந்து தனது எழுபது, எண்பது வயது வரை வாழ்ந்தாள்! அவ்வளவு காலங்களில் தனது ஒற்றை மகனை வெளிநாடு அனுப்பி வைத்துவிட்டு வாடிய அவளது கடைசி இரண்டு வருடங்களும் அடக்கம்!

அவனுடைய பிள்ளைகள் கூட இதை வாப்புச்சி வீடு என்றுதானே அழைக்கின்றன! சொல்லப்போனால் அவன் வந்து இரண்டு வருடங்களிலேயே அவனுடைய உம்மா மவுத்தாகிவிட்டபோது அந்த வீடும் கூட தனது நாட்களை அதுவரை எண்ணிக்கொண்டிருந்திருக்கிறது போலும்!

மற்ற வீடுகளை போலவே அவனது வீடும் எல்லா சுகதுக்கங்களையும் கண்டிருக்கிறது என்றாலும் எல்லாமே சராசரிக்கு மீறியதாகவே நிகழ்ந்திருக்கின்றன. பாதகங்கள் இல்லாமல் நடந்த ஓரிரு சுபசெய்திகளும் காலம் சென்று வந்த சந்தோசங்களை போலவே கடந்துச் சென்றிருக்கின்றன. இந்த வீடும் கூட தனது முதல் வாரிசான இவனைக் கண்டதும் கூட இருபத்தி இரண்டு வருடங்களுக்கு பின்னர்தான்!

அதுவரை இவனைப் பெற்றவள் பட்ட அத்துணை பாடுகளையும் கண்ணீரையும் அங்கிருந்த ஒவ்வொரு சுவரும், தூணும், தென்னைமரமும், கோழியும் அந்த தென்னைலிருந்து ஒட்டாமல் விழுந்த குறும்பைகளும் சொல்லும்! இவனது பிஞ்சு விரல்களும், பாதங்களும் தொட்டபோதுதான் அந்த வீட்டிற்கே உயிர் வந்தது போலிருந்தது, அதன் முகத்திற்கு ஒளிப் பிறந்தது போலிருந்தது!

அதுவரை அவளுக்கு மலடி என்ற மோன வாழ்க்கை உள்ளளவில் பெரும் பிரளயங்களாக ஒவ்வொரு நாளும் கழிந்து வந்ததாலும், இறைவன் மீதான நம்பிக்கையை அவள் விடவேயில்லை! கிட்டத்தட்ட இறைத்தூதர் ஜக்கரியாவிற்கு கிடைத்த நற்செய்தி போலத்தான் இவனை சூல் கொண்டிருந்த, பேறு காலமும்!

ஜக்கரியா தனது மகனுக்கு இறைக்கட்டளையின்படி யஹ்யா என்று பெயர் சூட்டினார் என்றால், இவனது தந்தை யாகூப் என பெயர் வைத்தார்!

அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை, நபிகளிலேயே இறைத்தூதர் யாகூப்பிறகுதான் இறைவன் அதிக குழந்தைகளை நாடியிருந்தான். அந்த பாக்கியம் போல் தனது மகனுக்கும் நிறைய குழந்தைகள் கிட்ட வேண்டும் என்பதற்கு வைத்த பெயரே அதற்கான பிரார்த்தனையுமானது!

தாயின் அதீத பாசமும், தந்தையின் உரிய கண்டிப்பும் கலந்தே அவனது பால்யமும் கடந்துப்போனது என்றாலும் அவன் சுகவாசியாகவே வலம் வந்தான். துலுக்கனுக்கு எதுக்கு படிப்பு? அரசாங்க வேலையா பாக்கப் போறான்? என்ற பொதுப்புத்தியால் ஆறாம் வகுப்போடு நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவனது ஏட்டுக்கல்வி ஒரு முடிவிற்கும் வந்தது. கூடவே காலங்கள் கடந்து தந்தையான அவனது தந்தையும் உடற்தளர்வை எட்டியிருந்தார்.

அதிலிருந்து சவுதிக்கு வரும் வரை மளிகைக்கடையும், சுருளும், அரிசி – பருப்பு வாசமும், அழுக்கு பனியனும்தான். அதில் இளையவன் முதல் முதலாளி வரை என அத்தனை படி நிலைகளையும் கண்டாயிற்று.

இடையில் தாய்மாமன் மகளேயே திருமணம் செய்து, அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் வரை அதே மலட்டுக்குடும்பம் என்ற சொந்த பந்தங்களின் பேச்சுகளையும் கடந்து, இதோ இவனுக்கு இப்போது வீடு கட்டுமாறு அறிவுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறானே… அவனையும் தவமிருந்துப் பெற்று அந்த வாய்களை மூட முடிந்திருந்தாலும், அடுத்தது ‘ஒற்றைப்பிள்ளை குடும்பம்’ என மீண்டும் அவர்களிடமிருந்து வேறொரு பல்லவி காதுகளில் விழா ஆரம்பிக்க, சுகவாசியான இவன், ஒற்றை மகனுக்கு எதற்கு இவ்வளவு சொத்து என்று நண்பர்களோடான கூட்டுத் தொழில் என்ற பெயரில் ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான்.

ஆனால் முழு விதியையும் எழுதிய இறைவன்தானே அறிவான் அடுத்தடுத்து நடக்கவிருப்பதையும். எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரு அழகிய மகள் பிறந்தாள்! இறைவனின் பேரருள் மீண்டும் அந்த வீட்டை நிறைத்தது போலவே, இரு வீட்டார் முகத்திலும் ஏக பிரகாசம்!

போதும் என்று இவன் முடிவு செய்திருந்தாலும், இறைவன் கொடுக்க, யார் தடுக்க முடியும்? அடுத்து இளையவனும், இரண்டாவது மகளும் பிறக்கவே, போதும் என்ற மனநிலைக்கு எல்லோரும் வந்திருந்தாலும், இறைவன் கடைசி வரை தான் நாடுவதை நாடியே தீருவான். ஐந்தாவது குழந்தைக்கான சுபச்செய்தியோடு இந்த சவுதிக்கு விமானம் ஏறியவன்தான்… வந்து நான்கைந்து வருடங்களாகிவிட்டன! இன்னும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல ஒரு வழிப் பிறக்கவில்லை! இவன் பெற்ற கடைசி மகளை இன்னும் கண்ணில் காணவில்லை! கையில் எடுத்து கொஞ்சவில்லை!

அந்த நீண்ட காத்திருப்பிற்கும் தவிப்பிற்குமான முழு முதற் காரணமாக மனைவியின் நகைகளை மீட்டுக்கொடுத்துவிட்டுதான் ஊர் மண்ணில் கால் வைப்பதென்ற வைராக்கியமும் நிய்யத்தும்(வேண்டுதலும்)தான். ஆனால் அது எப்போது நடக்கும் என்றுதான் தெரியவில்லை!

அவனுக்கு இந்த பாலைவனச்சூட்டில் எத்தனை நாள்தான் வழி தவறி வந்த ஆடாய் விழித்து நிற்பது எனப் புரியவில்லை. ஏற்கனவே மூத்தவனை பட்டப் படிப்பு படிக்க வைக்கவே அத்தனை போராட்டம்… இதில் மேற்படிப்பிலும் வேறு சேர்க்க இருக்கிறாளாம்..!

ஒரு தாயாய் அவளுடைய அந்த ஆசையும் கனவும் ஒரு விதத்தில் நியாயமே என்றாலும் வீட்டில் பொட்டு நகை கூட இல்லை என்று ஒரு பக்கம் புலம்பிக் கொண்டே மேலும் ஒரு நெருக்கடியில் தன்னை உட்படுத்திக் கொண்டாள். காலம் செல்ல செல்ல தனது கணவன் மீதான நம்பிக்கையை இழக்க தொடங்கியிருந்தாள். அதன் தொடர்ச்சியாக மூன்று பெண்மக்களை பற்றிய கவலைகளால் அவளது தாயாரின் பூர்வீக சொத்தை கிடைத்த தொகைக்கு விற்று வைத்திருந்த நகைகளை மீட்டாள்.

கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் கழித்து அத்தனை நகைகளையும் ஆவு ஆவு என்று போட்டுக்கொண்டு அவள் கண்ணாடியை பார்த்தபோது, நகைகள்தான் மின்னின..! இத்தனை வருடங்களாய் தனியொருத்தியாய் பிள்ளைகளை ஆளாக்குவதிலும், கடன் கண்ணிகளுக்கு அலைந்துத் திரிந்ததிலும் அவளது பழைய பொலிவெல்லாம் சூட்டில் வதங்கிய மலர் போல் வண்ணமிழந்திருந்தது!

ஒரு காலத்தில் அவளுக்கு அவளுக்கேவென ஆசை ஆசையாக அவளது பெற்றோர்கள் செய்துப் போட்டு, அழகுப் பார்த்த நகைகளெல்லாம், அன்று ஏதோ அடுத்த வீட்டில் கடன் வாங்கி அணிந்துக் கொண்டது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியது. அவள் முகத்தை அவளாலேயேப் பார்க்க முடியாமல், அவசர அவசரமாக நகைகளை கழட்டி வைத்துவிட்டாள்!

அதுவும் விசித்திரமாகவே இருந்தது, இருக்கும் இருப்பையும் போடும் நகைகளையும் வைத்து எடை போடும் உலகம்தானே இது. தன்னையும் சரி, பெற்ற பெண்பிள்ளைகளையும் சரி வெறும் கழுத்து காதுகளோடு பார்ப்பதே அவ்வளவு வலியாக இருக்கும். அதற்காகவே இந்த ஐந்தாறு வருடங்களில் கவரிங் நகைகளுக்காகவே ஒரு செலவு செய்திருப்பாள். ஆனாலும் திருப்பிய நகைகளை திரும்பி அணிந்து பார்த்தபோது அத்தனை நெருடல்!

ஏனென்றால் வெளிநாடு சென்ற கணவனின் மனைவி என்றுதான் பேர், அதற்கான அடையாளம் மருந்திற்கு கூட அந்த வீட்டில் புலப்படாது. ‘தேத்தண்ணிக்கு செலவழிக்கிற காசுதானாம்ல உன் மாப்பிள்ளை சம்பாரிக்கிறானாம்!’ என்று வசதி பெற்றவர்கள் பேசும்போது அவளை கோபமும், தன்னிரக்கமும் சட்டென ஆட்கொண்டுவிடும்! அவளுக்கும் உடன் பிறந்தவர்களென யாரும் இல்லை என்பதால் தனியொருத்தியாய் எல்லா அல்லல்களையும் தொடர்ந்து எதிர்கொண்டிருந்ததில், அவளது முகமும் உடலும் கிழவி போல் ஆகிவிட்டிருந்தது. இந்நிலையில் அவளும்தான் என்ன செய்வாள்!

தாய்வீட்டு சொத்தை விற்று நகைகளை திருப்பியவள். ஒழுங்காக பத்திரப்படுத்தவாவது நினைத்தாளா? மகனை மேலும் படிக்க வைக்கிறேன் என்று மறுபடியும் பேங்க் லாக்கரில் ஏற்றிவிட்டாள்! அதுவே இவனது இயலாமையை மேலும் கூட்டிவிட்டது!

முன்பாவது ஆறுமாதத்திற்கு ஒரு முறை காலேஜ் பீஸ் ஐயாயிரம் வந்தது, இப்போது மாசத்துக்கே ஹாஸ்டல் செலவுக்கு மட்டும் இரண்டாயிரம் ஆகிறது! மற்ற விபரங்களை கேட்டால் தலைச் சுற்ற கூடுமென உன் இஷ்டமென அவள் போக்கிற்கு மௌனமாக விட்டுவிட்டான்.

இப்போது அடுத்த கோரிக்கை, வீடு கட்டணுமாம். இதை அடுத்த கோரிக்கை என்பதை விட, வெறும் கோரிக்கை என்றே தட்டைப்படுத்தலாம். ஏனென்றால் இதுவரை கேட்ட எந்த கோரிக்கையைதான் இவன் நிறைவேற்றியிருக்கிறான்?

அதனாலேயே சரி வீடு கட்ட ஏற்பாடு செய் என சம்மதம் சொல்லி அவள் மனதில் பால் வார்க்க முயற்சி செய்தான். இந்த பெண்களுக்கு ஒரு புத்தியுண்டு. இதுபோன்ற எதற்கும் பட்டென்று சரி என்று சொல்லிவிட்டால், சம்பந்தப்பட்ட ஆணிடம் மறைமுக சேமிப்பு இருக்கும் போல என்று புது மனக்கணக்கு போட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆனால்.. அவனும் ஏதோ ஆசையிலும் ஆற்றாமையிலும் சரி என்று சொன்னானே தவிர அதற்கான எந்த முகாந்திரமும் அவன் கையிலில்லை. இதை அறியாத அவனது மனைவி வீட்டை இடித்துவிட்டு, மேற்கொண்ட வேலைகளை தொடங்க ஆட்களை திரட்டத்  தொடங்கினாள்.

ஓடுகளையும் ரீப்பைகளையும் விற்றதில் தற்சமயம் செலவுக்கு கொஞ்சம் காசு கிடைத்தது. அடுத்து என்ன? என்பது போல் வானத்தை பார்த்தபடி அந்த மண்சுவர்கள் நின்றிருக்க, அதையும் கீழ்ப்படிய சொன்னது காலத்தின் விதி. பிள்ளைகள் முதல் கடைசி காலத்தில் பாட்டியார் வரை தவழ்ந்த அந்த வழவழப்பான சிமெண்ட் திண்ணைகளும் சில்லு சில்லாக உடைக்கப்பட்டு, சல்லி விலைக்கு வண்டிகளில் ஏற்றி வழியனுப்பப்பட்டன.

இடிக்கப்பட்டு, வீடு இருந்த சுவடே தெரியாமல் எல்லாவற்றையும் சமன் செய்துவிட்டாலும், தரையையொத்த அஸ்த்திவாரத்தின் உச்சிகள் மட்டும் நடக்கும் வேளைகளில், எப்போது என்னை உயர்த்தப் போகிறீர்கள் என போவோரின் வருவோரின் கால்களை தட்டிக்கொண்டு இருந்தன.

கொஞ்சமும் தாமதிக்காமல், விருப்பங்களையும் தேவைகளையும் சொல்ல சொல்ல தெரிந்த மேஸ்த்திரி ஒருவர் வீட்டிற்கான எளிமையான வரைபடத்தை ஒன்றை உருவாக்கி தந்தார்.

கடிதத்தோடு அதையும் அனுப்பி வைக்க, அதிக பட்சமாக எழுபத்தி ஐந்தாயிரம்தான் என்னால் புரட்ட முடியும் என்று யாகூபு பதில் போட்டிருந்தான். அப்படி பதில் போட்டிருந்தாலும் எப்படி அனுப்ப போகிறான் என்பது அவனுக்கே புரியாத வழியாக இருந்தது.

முதலில் ஒரு முப்பதாயிரம் வர, பக்கத்து வீட்டால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவனது மனைவி, முதல் வேலையாக தடுப்புச் சுவரை எடுக்க பணத்தை செலவழிக்க தொடங்கினாள். ஆனால் வீடு இடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அவர்களால் பாதிப்பிற்குள்ளான மண் சுவரே என்பதால்… அவர்கள் மீதிருந்த அளவுக்கு அதிகமான கசப்போ என்னவோ, அவர்கள் வாசமே நெருங்காத வண்ணம் தடுப்புச்சுவரை சிறை மதில் போல் மிக உயரமானதாகவும், தடிமனாகவும் கட்டச் சொன்னாள்.

கணவனால் ஒருவேளை மேலும் பணம் ஏதும் புரட்ட முடியவில்லை என்றால், அதிலிருந்து ஒரு தாழ்வாரமிருக்கி குடி புகுந்து விட திட்டம். அதற்காகவே சுவற்றையொட்டி பொருட்களை வைத்துக்கொள்ள அதன் அடிப்பகுதியை சற்று நீண்ட மேடையை போல் கட்டச் சொன்னாள். அந்த வேலைக்கே அவன் அனுப்பியிருந்த காசோடு வெளியிருந்து மேலும் ஐந்தாயிரம் போட வேண்டியதாக இருந்தது.

முடித்த வேலையையும் அதற்கான செலவு விபரங்களையும் மகன் மூலம் எழுதி அனுப்பியவள்தான், அதற்கு பின் யாகூபிடமிருந்து வீட்டை பற்றி எந்த தகவலும் வரவில்லை. சில காலம் சுவர் நன்றாக காயும்வரை தினமும் தண்ணீர் ஊற்றி காத்து வந்ததுதான் மிச்சம்! அவளுக்கு புரிந்துவிட்டது இனி மேற்கொண்டு நடக்க போகிற காரியம் என எதுவும் இல்லை என்று.

செலவுக்கு வரும் தொகை கூட தாமதமாக வந்தததையடுத்து, அவனுடைய இயலாத சூழ்நிலையை நன்றாகவே புரிந்துகொண்டாள் என்றாலும் ஆற்றாமையில் அவன் மீது கோபங்களும் கொண்டாள். புது வீடு வெறும் கனவாகவேப் போய் விடுமோ என சில காலம் வருத்தப்பட்டு வந்தவள், ஒரு நிலைக்கு அப்புறம் அந்த நம்பிக்கை முற்றிலும் பட்டு போன மரமாகவும் மாறிப்போனாள்.

அவள் ஆத்திரமும் அவசரமுமாக எழுப்பிய அந்த மதில் மட்டும் காணும் நேரங்களில் அந்த இடத்திற்கு தேவையற்ற கம்பீரம் போல பார்க்க பார்க்க கை சேதமாகவே உம்மாவுக்கும் மகனுக்கும் காட்சியளித்தது!

திட்டமிட்டபடி தாழவாரத்தில் ஓட்டுக்கொட்டகை இழுத்தும் குடியேற முடியவில்லை. அவள் தாய்வீட்டில் அதற்கு அனுமதிக்கவில்லை. காலம் செல்ல செல்ல அஸ்த்திவாரத்தின் அடையாளங்கள் கூட மண்ணோடு மண்ணாக மறைந்தேப் போனது! எதையும் இனிமேல் யோசிக்கவும், அதற்காக திரியவும் அவளுக்கு சீவனும் இல்லை!

பிள்ளைகளின் தேவைகளுக்கு தனது பெற்றோர்களோடு அவளும் அவசர ஆத்திரத்திற்கு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தபோது, ஏன் மகனை அப்படி படிக்க வைக்கிறாய், இந்த நிலை உங்களுக்கு தேவைதானா? கடைக்கு அனுப்பினாலும் வீட்டு செலவுக்கு ஆகுமே… என்று வந்தவர் போனவர்கள் எல்லாம் அறிவுரைகள் சொன்னாலும், கவலைகளில் கிழவி வேசம் போட்டாளே தவிர, மகன் விசயத்தில் உறுதியாகவே இருந்தாள்.

மூன்று பெண்மக்களை வைத்துக்கொண்டு இப்படி மகனுக்கு செலவு செய்து படிக்க வைத்ததை சிலர் மகா குருட்டுத்தனம் அவளை அசைத்துப் பார்த்தார்கள். சிலர், இவ்வளவு சிரமப்பட்டு படிக்க வைக்கிறாய் இனி உன் கஷ்டமெல்லாம் மாறிடும் என நம்பிக்கையும் கொடுத்தார்கள்.

ஆனாலும் அவன் படித்து முடித்த பிறகு, தனது செலவு போக முதல் சம்பளமென நீட்டியது வெறும் நூற்றிஐம்பது ரூபாய்தான்! எந்த கேள்வியும் கேட்காமல் சந்தோசத்தோடு வாங்கிக்கொண்டு மகனை வாழ்த்தினாள். காரணம் தன் பிள்ளை பசி பட்டினியோடு கிடந்தது காசு கொடுக்காதவரை அவளுக்கு நிம்மதிதான்.

அதற்காகவே அவனுக்கு உடனே அடுத்த வேலையும் கிடைத்து, பிறகு அவன் வாங்கிய சம்பளம் ஓரளவு குடும்ப செலவிற்கு உதவினாலும், அதை கொண்டு கடன் ஏதும் அடைக்க முடியவில்லை! வைத்த நகைகளும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் நோட்டீஸ் ஏதும் வந்துவிட்டால் திருப்பி வைக்க நாலு பேரை கெஞ்சியலைய வேண்டியிருக்குமே.. என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் யாகூபும் முடித்து கொண்டு வரப்போவதாக கடிதம் எழுதியிருந்தான்.

அவனுக்கு இனி மகன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை பிறந்திருந்தாலும், வைத்து சென்ற நகைகள் இன்னும் பேங்க்கிலேயே சுழன்றுக் கொண்டுக் கிடப்பதைத்தான் அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஊருக்குச் சென்றால் மனைவியிடம் எப்படி முகம் காட்டுவது என்ற தயக்கங்களும் வேறு!

இந்த ஆறு ஆறரை வருடமும் அந்த ஒரு விஷயத்திற்காகதானே உயிரை பிடித்துக் கொண்டு அங்கேயே கிடந்தான்! கடைசி வரை அது நடக்காமலேயே போனது ஆற்றிக்கொள்ள முடியாத இயலாமையாக இருந்தது. பழைய கடன்கள் வேறு நாளுக்கு நாள் கழுத்தை நெரித்துக்கொண்டு வரவே, பேசாமல் மனையை விற்றாவது எல்லாவற்றையும் சரிசெய்து கொள்ளலாமா என கட்டியவள் கேட்க, மறுப்பில்லாத ஒரு மௌனத்தை பதிலாக கொடுத்தான்…

ஆறேழு வருட மூட்டை முடிச்சிகளோடு ஒரு நல்ல நாள் பார்த்து எப்படியோ ஊருக்கும் வந்து சேர்ந்துவிட்டான்! அவனுக்கு விமானத்திலிருந்து ஊரைப் பார்க்க, தூக்கி தூக்கிப்போட்டு, போட்டு பிடித்து விளையாடிய அன்னையின் கரங்கள் மண்ணிலிருந்து எழுந்து வந்து தன்னை ஏந்திக் கொள்ள வருவது போலிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்த மண்ணை மிதித்த போது, புவியின் ஈர்ப்பு விசை சற்று குறைந்துவிட்டது போலிருந்தது. அவனை வரவேற்கவோ, தாயை இழந்து வந்தவனை தேற்றி, தாங்கியபடி வீடு வரை ஆதரவாக அழைத்துச் செல்லவோ அவனுக்கென யாருமேயில்லை! இனி யார் வேண்டும் அதுதான் மூத்தவன் வளர்ந்துவிட்டானே என்று அவன் வெறுமினே நினைத்துக்கொள்ளதான் முடியும், நடக்கும் என எதிர்பார்க்க முடியாது!

கொண்டு வந்த பெட்டிகளோடு திருச்சியிலிருந்து தானே பேரூந்து பேருந்தாக மாறி மாறி, ஊரை நெருங்கி கொண்டிருந்தபோது அவன் நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் நொறுங்கி நொறுங்கி சரிந்துக் கொண்டிருந்தது.

தனது தாயில்லாத அந்த ஊரை நினைத்துப் பார்க்க அவனால் முடியவேயில்லை! இப்படி சுக்குநூறாக உடைந்து வருபவனை பார்த்து யாராவது ஓடோடி வந்து யாகூபு.! யாகூபு.! இவனுடைய விம்மல்கள் அடங்குவரை அணைத்துக்கொண்டு இவனுடைய துக்கத்தில் பங்கேற்றுக்கொண்டால் சற்று நேரம் போதும் போலிருந்தது. ஆனால் வாழ்க்கை முழுக்க இவன் தனி மரமாகத்தான் கடக்க வேண்டும் என்றால் யாரால்தான் மாற்ற முடியும்!

அதுவும் இவன் இப்போது வீடென நுழைய இருப்பது தனது தாய் பிறந்த வீடு என்றாலும், தற்சமயம் அவனைப் பொறுத்தவரை அது மாமனார்-மாமியார் வீடுதான். உரிமைகள் இருந்தும் இல்லாதவன் போல் மருகினான்.  இருந்தாலும் தனது மனைவி மக்களுக்காக மனதை திடப்படுத்திக்கொண்டு அந்த வீட்டின் மெல்லத் கதவைத்தட்டினான்…

இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் எத்தனை முறை இந்த வாசலில் கால் வைத்திருப்பான்? காலே வைக்க கூடாது என்றிருந்த அவனது பிடியை இந்த காலம்தான் எவ்வளவு தளர்த்திவிட்டது! வாலிபமெல்லாம் போய் அரைக்கிழவனாக நுழைந்தாலும் அவனுடைய மனைவி இன்முகத்தோடேயே வரவேற்றாள்.

அது ஒரு பின்னந்தி நேரம், மூத்த மகளும், இளைய மகனும் வாப்பாவை தெரிந்துகொண்டாலும் மற்ற பிள்ளைகளுக்கு பெற்றவள்தான் வந்திருப்பது யார் என்று புரிய வைத்தாள். மூன்றாவது மகளைப் பார்த்து, தனது தாயின் ஜாடையிருப்பதாக கூறி முத்தமிட்டு கொஞ்ச நேரம் பெருமைப்பட்டு நெகிழ்ந்துக் கொண்டான்.

இரண்டாவது மகளை பெற்றவள் வாப்பாக்கிட்ட போ! என்று சொன்னவுடனே, வாப்பா என்று வந்து கைகளால் கால்களை தன் உயரத்திற்குத் தழுவிக் கொண்டாள். அப்பன்காரனுக்கு அவளை மடியில் படுக்க வைத்து உச்சந்தலையை தடவிக் கொடுக்க வேண்டும் போலிருந்தது. தலையை வருடிவிட்டு, நெடுநாள் காத்திருப்புகளில் மட்டுமே அணைக்கட்டி வைத்திருந்த பெருமூச்சுகளை மட்டுமே அவனால் அந்நேரம் வெளிப்படுத்த முடிந்தது!

பெரியவன் காலையில் வந்துவிடுவானாம் என்று அவனது மனைவி சொல்ல, ஒரு பெருமித புன்னகையைப் படர விட்டான். உள்ளே வந்து நுழைந்ததிலிருந்து உள்ளேயும் வெளியேயும் ஒரே புழுக்கமாகவே இருந்தது. பெட்டிகள் எதுவும் கொண்டு வராமலிருந்தால் நேரடியாக தனது வீடிருந்த இடத்திற்கே போயிருப்பான்!

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அங்கேதான் செல்ல வேண்டும் என்று மனம் ஏங்கிக்கொண்டிருந்ததில் சரியாக தூங்க முடியவில்லை, அவனுக்கு தூக்கமும் வரவில்லை.

சுபுஹு தொழுகைக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டான். வழியில், ஒரு சந்தில்தான் இடிக்கப்பட்டுவிட்ட அவனது வீடும் இருந்தது. அதை பார்க்கும் வல்லமை அச்சமயம் இல்லை. எந்திரமாக, தொழுதுவிட்டு வந்துவிடலாம் என்று அந்த சந்தை மறைத்துக்கொண்டிருந்த ஓலையால் அடைக்கப்பட்ட வேலியின் மீது மட்டும் ஏக்க பார்வைகளை வீசியபடி பள்ளியை நோக்கி விரைந்து நடந்தான். கொஞ்சம் தளர்ந்தாலும் கண்ணீர் பீறிட்டுவிடும்!

பள்ளியில் இருந்தவர்களில் சிலர் இவனை கண்டு சந்தோசப்பட்டனர், சிலர் இவனுடைய இழப்புகளை குறிப்பிட்டு வேதனைப்பட்டனர். தொழுகை முடிந்து தனது தாயாரின் அடக்க ஸ்தலத்திற்கு சென்றான். பாதை செல்ல செல்ல பெருக்கெடுத்த அழுகையும் கண்ணீரும் மடைகள் உடைந்த வெள்ளம் போல் கால் வரை கூடச்  சொட்டியிருக்கலாம்.

தவமாய் தவமிருந்துப் பெற்று, அருமை அருமையா வளர்த்தவளை கடைசி நேரங்களில் பக்கத்திலிருந்துப் பார்க்க முடியாத தனது விதியை நினைத்து குலுங்கி குலுங்கி அழுதான். அவள் மரணித்த நாளிலிருந்து ‘எங்கும்மா கடைசியா என்ன சொல்லிச்சு? என்ன சொல்லிச்சு? என்று கடிதங்களில் உறவினர்கள் அத்தனை பேரையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

அதற்கான விடை, அவன் யாருடைய வாய் மூலமாவது கேட்டு விட துடித்த அவளது கடைசி குரல் கடைசி வரை யார் மூலமேனும் கிடைத்ததா இல்லையா என்பது கதைச் சொல்லியான எனக்கும் தெரியவில்லை!

தனது ஒட்டு மொத்த ஏக்கங்களையும் தேக்கங்களையும் கொண்டு அவளுக்காக நீண்டதொரு பிரார்த்தனை செய்தான். நெஞ்சம் குமுறி, குமுறி வெடித்து அழுதது! விடிந்தும் விடியாத அந்த காலையும் அவன் அங்கிருந்து விடைபெறும் வரை குடைப்பிடித்துக்கொண்டு நின்றதோ என்னவோ.. மனமிளகி சருகாய் வெளியே வந்தபோதுதான் வெயிலே வந்தது.

குளத்தில் கை, கால், மூஞ்சியைக் கழுவி விட்டு படித்துறைக்கட்டையில் அமர்ந்தபடி கொஞ்ச நேரம் ஆழமாக நடந்த யாவற்றையும் அசைப்போட்டுப் பார்த்தான். நீண்ட நேரம் ஏதேதோ சிந்தனைகளிலும், யோசனைகளிலும் தோய்ந்திருந்தான். ஓரளவு சமநிலைக்கு வந்தவுடன் அங்கிருந்து புறப்படலானான்.

வழியில் அறிந்தவர், தெரிந்தவர்கள் எதிர்பட்டும் விசாரித்துக்கொண்டும் இருந்ததால் தனது வீடிருந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை. அப்படியே இப்போது சென்றாலும் யார் எதையும் பற்றியும் பேச்சுக் கொடுக்கத் தொடங்கிவிட்டால் மீண்டும் உடைந்து போக கூடுமென்று மனைவி பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கே கனத்த மனதோடு வந்துச் சேர்ந்தான்.

மூத்தவன் வந்திருக்கும் குரல் கேட்கவே, கதவை திறந்தவுடன் ஸலாம் கூறியபடி அவனே இவனை நோக்கி வரலானான். இருவரும் நெடு நாளைக்குப் பிறகு அருகிலகிலமர்ந்து தேத்தண்ணிக் குடித்தார்கள். மகனிடம் தற்போது பார்த்து வரும் வேலையை பற்றி விசாரித்தான்.

செலவழித்த காசிற்கு சம்பளம் குறைவுதான் என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு, ஒரு புன்முறுவலோடு மற்ற பேச்சுகளுக்கு மாறினான். இன்னும் ஓட வேண்டிய தூரமும் இருப்பதை விளங்கிக்கொண்டான். வரும்போது ஒரு முப்பத்தைந்தாயிரம் கொண்டு வந்திருந்தான். அதை வைத்து ஏதாவது சிறியதாய் ஒரு கடையை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவனது திட்டம்.

அவனது மனைவியோ அவனது வசதிக்கேற்ப சில மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, மறுபடியும் பயணம் சென்றால்தான் குமர்களை கரையேற்ற தோதுபடும் என்று அவன் வருவதையொட்டி, மனதிற்குள் யோசித்து வைத்திருந்ததை முதல் நாளே சொல்லிவிட்டாள். இவனும் வந்த உடனே கடை வைக்கும் எண்ணத்தைப் பகிர்ந்திருக்க கூடாதோ என்னவோ!

இல்லாவிடில் ஒருவேளை தாமதித்து கூட அவள் தனது யோசனையை சொல்லியிருக்கலாம். வெளிநாட்டு வாழ்க்கையை நினைத்தாலே இவனுக்குள் ஒரு வெறுமை வந்துவிடுகிறது. அதைப்பற்றி மேலும் சிந்திக்காமல், சரி நான் நம்ம இடத்தை பார்த்து வருகிறேன் என்று மகனோடு புறப்பட்டான்.

இருவரும் ஒன்றாக வாட்டையில் (தெருவில்) செல்வதே ஒரு அபூர்வம்தான். யாகூபு தனது மகனின் கையைப் பற்றிக்கொண்டு நடக்க ஆசைப்பட்டான். மகனோ தலையை தொங்கப்போட்டுக் கொண்டே வந்தான். தனது வாப்பா இப்படி தோற்றுப்போய் வந்திருப்பதை நினைத்து, நடந்ததையெல்லாம் அசைப்போட்டபடி மகன், பொருந்தியும் பொருந்தாமலும் கூட தகப்பனோடு நடந்து வந்தான்.

இடையிடையே தகப்பன்காரன்தான் பிள்ளையிடம் ஏதாவது பேச்சுக்கொடுத்துக் அந்த மௌனத்தை அவ்வப்போது கலைக்க முயற்சி செய்தான். மகனுக்கு தன்னுடைய ஏமாற்றங்களுக்கு முன் தகப்பனின் ஏக்கங்கள் எல்லாம் துளி கூட எட்டவேயில்லை!

தான் அல்லும் பகலும் அரும்பாடுப்பட்டு படிக்க வைத்தையெல்லாம் பிள்ளை நினைத்து பார்ப்பானா? என்று தனக்குள் கேட்டுக்கொண்டு, தன்னை, தன்னுடைய தியாகங்களை இங்கே யாராவது நினைத்துப் பார்ப்பார்களா? அங்கீகரிப்பார்களா? என்னை ஏற்றுக் கொள்வார்களா? என்று பெற்ற பிள்ளையிடமும் மற்றவர்களிடமும் ஏதோ கைவிடப்பட்டுவிட்டவன் போல ஒரு ஆதரவிற்கு மன்றாடிக் கொண்டிருந்தது யாகூபின் உள்மனம்.

இதோ இடம் வந்துவிட்டது! இதை விற்க போகும் காலமும் சீக்கிரமே வந்துவிடும்! ஆம் முன்பொரு காலத்தில் அவன் தகப்பனின் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட அந்த வீடு இப்போது வெறும் மனையாகி, விற்பனை இடமாகவும் மாறிவிட்டது! இங்கிருந்து தன்னுடைய தாயையும், வீட்டையும், அத்தனை நினைவுகளையும் யார் தூக்கிச்சென்றுவிட்டார்கள் என்று அந்த பொட்டலைக் கண்டு துடிதுடித்துப் போனான் தன்னை ஒரு அநாதை என்று உணர ஆரம்பித்த யாகூபு.

தென்னங்கீற்றுகளை கொண்டு அடைக்கப்பட்டிருந்த அந்த வேலியை காணும்போது தனது தாயின் நினைவு வந்தது. பொழுதானால் அவள் அக்கபக்கத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும் அந்த ஒட்டுத்திண்ணைகள் எங்கே? சிறுவனாக இருந்தபோது அச்சமயங்களில், அவ்வப்போது உம்மா, உம்மா..! என்று அவள் மடியில் வந்து விழுந்து, குழைந்து, கட்டிக்கொள்வானே… அந்த நினைவுகள் எல்லாம் இனி வெறும் கானல்தானா! படலைத் திறந்துகொண்டு உள்ளே போனார்கள். ஆறேழு வருடங்கள் கழித்து இப்போதுதான் உண்மையான தாய் மண்ணையே அவன் மிதிப்பது போலிருந்தது!

நினைவுகளால், தான் வாழ்ந்த வீட்டையும் வாழ்க்கையையும் மீளுருவாக்கம் செய்தபடி ஒவ்வொரு எல்லைகளையும் பார்க்கிறான், வீட்டுக்குழி (அறை) இருந்த இடம் வசந்தமான பல நிகழ்வுகளை நினைவூட்டுகிறது! அதன் மண்வாசமே அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்! பிரிமனைகளில் மண்பானைகளும், மற்ற மற்ற பண்டுப் பாத்திரங்களும் செங்குத்துகளாய் அடுக்கப்பட்டிருக்கும்! பார்க்க வளைவுகளில் சிலை அழகிகள் போல அழகழகாய் காட்சி தரும்!

அரசி, பனியம், அதிரசத்திலிருந்து அவ்வப்போது எடுத்து தின்னும் ரஸ்தாளிப் பழங்கள் வரை ஒவ்வொரு பானைக்குள்ளும், குதிருக்குள்ளும் ஏதாவது நிரம்பியிருக்கும்! அந்த சின்ன இடத்திலும் ஒரு பீரோ இருக்கும், அதன் எஜமானி அவனது மனைவி மட்டுமே. என்ன வைக்கிறாள் என்ன எடுக்கிறாள் என்று படைத்த அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும்! இவர்களது மஞ்சம் என்று அந்த அறையிலிருந்த மிச்ச சொச்ச இடம். அதில்தான் பதினெட்டு வருட குடும்ப வாழ்க்கை!

அதற்கடுத்த திண்ணையைப் பார்க்கிறான்… தனது தந்தையின் ஞாபகம் வந்துப்போகிறது. மூத்தவனை இங்கே வைத்துதான், அவன் பிறந்ததிலிருந்து ஆறு மாத காலம் வரை அவனை கொஞ்சி சீராட்டியயதெல்லாம். அவரது இறுதி நாட்களில் ஒருநாள் மடியில் பேரனை ஏந்திக்கொண்டு அழுத அழுகையை அவன் மனைவிப் பூரித்து சொல்லக் கேட்டிருக்கிறான்.

இந்த வாய்க்கால் போன்ற நடை பாதையில்தான் பெரியவள், பெருநாளைக்கு எடுத்துக் கொடுத்த மஞ்சள் சுடிதார் போட்டுக் கொண்டு, ரெட்டை ஜடையுடன் வாசலுக்கும் முற்றத்திற்குமாக பைங்கிளியாய் ஓடித் திரிந்தது!

கூடத்தில்தான் அவனது தாய் படுப்பாள். தொழுவாள். அந்த கூடத்திலிருந்த பத்தாயமும் குதிர்களும் எங்கே சென்றுவிட்டன? சுவற்றில் மக்கா, மதீனா படங்கள் எங்கே? கடிகாரம் எங்கே? அட சுவர்கள் எங்கே? அவன் பார்வை ஈரக் கண்களோடு ஒவ்வொன்றிற்காய் அலைமோதுகின்றன! சின்னவன் தவழ்ந்து, இடறி விழுந்தது இங்கேதான்!

இன்னொரு திண்ணைக்கு அடுப்படிக்கும் மழைத்தண்ணீரை சேமிக்க ஏதுவாய் நீண்ட தகரம் ஒன்று அரைவட்டத்தில் வளைக்கப்பட்டிருக்கும். அதை பிடித்து வைத்துவிட்டால் ஒரு வாரத்திற்கு நல்லத்தண்ணிக்கு பங்களாத் தோப்பு, கன்னித் தோப்பு என எந்த கொல்லைகளும் போக தேவையில்லை! அதெல்லாம் இப்போது எங்கே?

அடுப்படி.. தாய், மனைவி, வாப்பா, குழந்தைகள் என எல்லோரும் வந்துப்போகிறார்கள்..! இவன் தோசை மற்றும் இடியப்பங்கள் தின்னும் வேகத்தை பார்த்து எத்தனையோ முறை அவனது மனைவிக் கேலி செய்திருக்கிறாள். அதோ அந்த அம்மி கல்லில்தான் இவனது உம்மா தேங்காய், செலவு சாமான் எல்லாம் மை போல் அரைத்துக் கொடுப்பாள்.

அதுவும் அவள் பருமாவில் கிண்டும் கழியில் தேங்காப்பூவையும் சீனியையும் போட்டு சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்! அதிலும் அவள் லச்சட்டை கீரையை நீள வாக்கில் அவள் பொடி போல் நறுக்கிப்போட்டு செய்யும் தேங்காய் புட்டிற்கு எதுவும் ஈடாகக் கூடுமா?

அவனது தாய் உண்டாக்கும் ஒவ்வொன்றும் அவ்வளவு ருசியாக இருக்குமே! ஒரு பெருநாளில் தாய், மனைவி, குழந்தைகளுக்கும் இவனே சமைத்தும் தந்திருக்கிறான். எல்லாம் அவன் கண்களில் ஒவ்வொரு இடத்தையும் காண காண நிழலாடிக் கொண்டிருந்தன. அன்று பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு ஃபோட்டோகிராபரை வரவழைத்து நிறைய புகைப்படங்கள் கூட எடுத்தார்களே! அவைகளைத்தானே பொக்கிஷம் போல ஒவ்வொரு நாளும் சவுதியில் தொட்டுப் பார்த்து முத்தமிட்டான்!

கொல்லைக்குள் சென்றால் அத்தனை குளிர்ச்சி..! ரவ்வும் பொழுதும் அவனது தாய் இங்கேயேதான் கிடப்பாள். வேலி அடைத்துக்கொண்டும், மட்டைகளை வெட்டிக்கொண்டும், குப்பையைக் கூட்டிக் குவித்து கொண்டும், அள்ளி அகற்றிக்கொண்டும், கொல்லையை வீட்டு முற்றத்தைப் போல் பராமரித்துக் கொண்டும்… இப்படி ஏதாவது ஒரு வேலையை இங்கே சதா செய்த வண்ணம்தானே அல்லும் பகலுமாய் திரிவாள்!

ஒரு இடத்தை காட்டி ‘இங்கதானே வாப்புச்சி பனங்கொட்டையை பதிச்சி வைக்கும்?’ என்று அப்பங்காரன் கேட்டபோது, மகன்காரனும் ஆமாம் என்று தலையாட்டினான். அவனுக்கும் இதுபோல் பல நினைவுகளுண்டு. அந்த பனங்கொட்டைகள் கிழங்கானாவுடன் வாப்புச்சியோடு சேர்ந்துப் பிடுங்குவதும், தேன் கொட்டைகள் வெட்டி சாப்பிடுவதும் என்று அவனும் அந்த இடம் சார்ந்த நினைவுகளை அசைப்போட்டான்.

கடைசியாக அந்த மதில்.. அவனது எத்தனையோ நாள் உழைப்பையும் கனவையும் வெறும் கல்லாக்கி வானத்திற்கும் பூமிக்கும் எழுப்பப்பட்ட வேண்டாத தடுப்பாகத்தான் தெரிந்தது!

ரொம்ப நேரம் அதே நினைவுகளோடும், ஏக்கங்களோடும், தவிப்புகளோடும் அங்கே அதிக நிற்க முடியவில்லை, வெயில் வேறு ஏறிக்கொண்டேச் சென்றது. ‘சரி, வா! கிளம்புவோம்!’ என்று மகனை கூட்டிக்கொண்டு படலை சாத்தி, பூட்டினான். அப்படி பூட்டிவிட்டாலும் அவனால் அந்த வாசலை எளிதில் கடந்து வர முடியவில்லை, வாசலில் தனது தாய் நின்றுக்கொண்டு இவர்களையேப் பார்த்துக்கொண்டிருப்பதுப் போல் தோன்றியது.

அது மகன்காரனுக்குப் புரிந்திருக்கக் கூடும் போல, ‘வாப்புச்சி அப்பப்ப சொல்லும் வாப்பா.. நான் மவுத்தான பின்னாடி, உங்க உம்மா வூட்டோட போயிறாதீயன்னு.. அந்த சுவரு மட்டும் நல்லா இருந்திருந்தா வாப்புச்சி வீட்டை இடிச்சிருக்க மாட்டோம்ல..!’ மகன் சொல்ல சொல்ல யாக்கூப்பின் கண்கள் மீண்டும் நீர்கோர்த்துக் கொண்டன. அவனைக் கட்டிக் கொண்டு மனதின் கனமெல்லாம் குறையும் வரை குமுறிக் குமுறி அழ வேண்டும் போலிருந்தது. தகப்பனாச்சே..! அடக்கிக் கொண்டான்.

 “பரவால்ல வாப்பா!” என்று மகனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அங்கிருந்து விறுவிறுன்னு நடக்கலானான்.

***

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி புக்ஸ், விகடன் தளங்களிலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

One thought on “யாகூபு வீடு

  1. சிறப்பு. நல்ல கதை
    வாழ்த்துகள் இத்ரீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *