வீடே விழாக்கோலம் போல கலகலத்துக்கொண்டிருந்தது.

     கடந்த இரண்டு முறை இதே போல இவர்கள் கூடிய போது இத்தனை சிறப்பாக இருக்கவில்லை. மருத்துவம் கைவிரித்த பெரியவர் எப்போது மண்டையை போடுவார் என்ற அளவிலே ஒரு தினுசான துக்கத்தை அனுஷ்டித்தனர். இழுத்து கொண்டிருக்கிறது என்று ரங்கபாஷ்யம் கூறும்போதெல்லாம் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். இந்த முறை அதுபோல இல்லை.

     நான்கு அக்கா மற்றும் மூன்று அண்ணன்கள். பாஷ்யத்தின் அம்மா எப்போதோ தவறி விட்டாள். பாஷ்யம் பத்தாவதாக பிறந்தவன். மீதம் உள்ள இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. முதல் குழந்தைக்கும் அதாவது இவனது மூத்த அக்காவுக்கும் இவனுக்கும் உள்ள வயது வித்தியாசம் முப்பது. இவனுடைய வயசு தற்போது முப்பத்தெட்டாதலால் வாசகர்கள் இவனது மூத்த அக்காவின் வயது அறுபத்தெட்டு என்பதையும் இறக்கும் தருவாயில் இவரது தந்தையின் வயதை தொன்னூறு என்பதையும் எந்தவொரு மின்னணு சாதனங்கள் இன்றியும் கணித்திருக்கலாம்.

     பாஷ்யத்துக்கு பத்து வயது இருக்கும்போதே இவனது அம்மா இறந்துவிட்டாள். அதன்பிறகு இவனை வளர்த்தது எல்லாம் இவனது அக்காக்கள் தான். ஒவ்வொருத்தராக திருமணம் ஆகி வெளியேற அடுத்த அக்கவை பிடித்துக்கொள்வான். ஒரு கட்டத்தில் விவரம் புரிந்தவுடன் தனியே தூங்க ஆரம்பித்துவிட்டான். இவன் எந்த நிலைமையில் இருக்கிறான் என்று அக்கறையாக கூட இவனது அப்பா கண்டுகொண்டதில்லை. அதனாலெல்லாம் இவனது அப்பா மீது இவன் வருத்தமாக இருக்கிறானா என்றால் இம்மியளவும் மரியாதை குறைவின்றி தான் நடத்துகிறான். சொல்லப்போனால் ஒவ்வொருத்தரும் திருமணம் மற்றும் வேலை விஷயமாக ஜாகை மாறி விட இவன் மட்டுமே இவரை அந்திம காலம் ஏன்னு இவர்கள் கணித்து கூடியிருக்கும் இத்தருணம் வரை கவனித்து கொண்டிருக்கிறான்.

     அவனது அப்பாவுக்கு முதல் குழந்தை மேல் இருந்த பிரியம் பாஷ்யம் பிறந்தபோது இல்லை. வதவதவென்ற குழந்தை பெற்றெடுத்தலும் அதன் பின் பின்னிரவு போன்ற அகால நேரங்களில் கேட்கும் இவரது குழந்தையின் அழுகுரலும் அவரை களைப்படையச்செய்திருந்தன. இதுமட்டுமில்லாது திருமணமாகி சென்ற பெண் பிள்ளைகளின் குழந்தைகள் என இவருக்கு ஒரு வகை சலிப்பையே கொடுத்தன. ஆனாலும் ஒரு குறையில்லாது மக்கமார்களை வளர்த்தவர் தான்.

     பாஷ்யத்தின் அப்பா ஒரு காலத்தில் திடகாத்திரமாக இருந்தவர். கொல்லையிலிருந்த ஆட்டுரலை நகர்த்த பாஷ்யம் தன அண்ணனை அழைக்க உள்ளே போயிருந்த கண நேரத்தில் இவரே அதை ஒரு மூச்சாக தூக்கி வைத்தவர். அந்த ஓட்டம் அவர் கீழே விழும்வரைக்கும் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு படியிறங்கியவர் அதிலிருந்த தண்ணீரை கவனிக்கவில்லை. க்ஷண நேரத்தில் எல்லாம் நிகழ்ந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். தண்ணீர், உணவு, உடம்பு துடைத்துவிடுதல், மூத்திரம் என் சகலமும் படுக்கையில் என்றாகிவிட்டார். பாஷ்யம் தான் பார்த்து கொண்டிருந்த வேளையில் விடுப்பு கேட்டு சமாளித்து கொண்டிருந்தான். பிறகு நிர்வாகத்தின் கெடுபிடியில் அதையும் விடவேண்டிதாயிற்று. VAO ஆக வேலை பார்க்கும் மனைவி மற்றும் அவனது அப்பாவின் தயவில் குடும்பத்தை ஒருவாறு ஒட்டிக்கொண்டிருந்தான்.

     பாஷ்யமின் இரண்டு குழந்தைகளில் மூத்தவளான தேஜஸ்வினிக்கு கடந்த இரண்டு நாட்களாக கொண்டாட்டமாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு அத்தை குடும்பம், லக்சம்பர்கிலிருந்து பெரியப்பா குடும்பம் மற்றும் இந்தியாவின் முக்கிய தலைநகரங்களிலிருந்து வந்த இவளது சொந்தக்காரங்கள் எல்லாம் சேர்ந்து முன்னமே சொன்னது போல ஓஹோவென்றிருந்தது.

தேஜஸ்வினிக்கு அத்தை  தான் என்றாலும் வயது மிகுதியாக இருப்பதால் அத்தை என்று சொல்லாமல் குழம்பி பாட்டி என்றாள். தன்னை அத்தை என்று கூப்பிடுமாறு அத்தனை முறை அவள் தேஜுவிடம் மன்றாடியது மற்ற அனைவருக்கும் கலகலப்பாய் இருந்தது.

பாஷ்யத்தின் இரண்டாவது அக்காதான் இந்த பேச்சை ஆரம்பித்து வைத்தாள்.

“ரங்கா, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அப்பாவுக்கும் கஷ்டம் தானே. எவ்வளவு நாள் தான் படுத்த படுக்கையா இருப்பாரு?”

“அதுக்கு என்னக்கா பண்ண சொல்ற?”

“இல்லடா. நம்ம ஊர்ல இருக்கறவங்கள கூப்டு செய்வாங்களே. அது மாதிரி செஞ்சிடலாம் டா”

“இல்லை புரியலைக்கா. நேராவே சொல்லேன்”.

“அதான் இந்த காலையிலேயே எந்திச்சி தலைல நல்ல எண்ணெலாம் தேய்ச்சிவிட்டுட்டு இரண்டு மூணு இளநீர் கொடுப்பங்கள்ள. அது மாதிரி”

“அக்கா. உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? அப்பாவை கொல்ல சொல்றியா?. அவரு என்ன தூக்கி கொஞ்சினதுகூட இல்லேன்னாலும் நான் தான் அவரை கடைசி காலத்துல பாத்துட்ருக்கேன்”

“நாங்க யாருமே இல்லேனு சொல்லலியே பாஷ்யம். அவங்க அவங்களுக்கு அவங்க சூழல் அந்த மாதிரி. என்ன கல்யாணம் பண்ணிட்டு பிறந்த வீட்டுல இருக்க சொல்றியா?”

“உன்னைய சொல்லல. அண்ணனுங்களுக்கெல்லாம் என்ன?. அவங்க பத்துக்கலாம்ல. என்னால முடியலன்னு நான் சொல்லல. ஆனா நம்மள அவரு ஒரு குறையும் இல்லாம தான் பாத்துக்கிட்டாரு. நாம அத திருப்பி செய்யணும்ல. எனக்கு அதான் ஆதங்கம்”

அக்காள்கள் இரண்டு பேர் அவனது அண்ணனை பார்த்தனர். அவர்களிருவரும் அமைதியாக இருந்தனர்.

“அண்ணனுக்கு வேலை அப்டி இருந்துச்சுப்பா. அதனால போய்ட்டாங்க. இங்கே இருந்தா நாலு காசு பாக்க முடியுமா?”

“நாலு காசு பாக்குறதுக்கு நாம பரதேசம் போறது ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆனா கூட போய் வச்சிக்கிலாம்ல. அது ஏன் பண்ணல. அவரு ஏன் மூஞ்ச மட்டும் எவ்ளோ நாள் பாதித்திருப்பாரு?”

இப்பொழுது பாஷ்யத்தின் மூத்த அண்ணன் வாய் திறந்தான்.

“பாஷ்யம். நீ சொல்றது எல்லாமே சரி தான். அதுல எதையுமே நான் மறுக்கவும் இல்லை. ஆனா வாழ்க்கைல எல்லாருக்குமே எல்லாமே அமைஞ்சிடாது. எனக்கு நல்ல வேலை அமைஞ்சது. அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனா அப்பாவை அங்க கூட்டிட்டு போற மாதிரி சூழல் அமையல. இதுக்கு மேல நீ புரிஞ்சுப்பேனு நினைக்கிறன்” என்றார்.

“ஆனா ஊனா ஏதாவது காரணம் சொல்லிடுங்க.”

“இல்லைடா. அப்பா மேல பாசம் இல்லாமையா நாங்க வந்து பாத்துட்டு பாத்துட்டு போவோம்?”

“ஆங். நல்ல வந்தீங்க. வருஷத்துக்கு ஒரு தடவ. இது என்ன திருப்பதி கோவிலா. சோறு போட்டு வளர்த்த அப்பா.”

“நாங்க யாருமே மறுக்கலேயே”

“ஓ. அப்போ நீங்க எல்லாம் சேர்ந்துதான் முடிவு பண்ணிருக்கீங்க. எல்லாம் கூடி பேசிட்டீங்க”

“இல்ல பாஷ்யம். நேத்து சாயந்தரம் தான் முடிவு பண்ணினோம்”.

“ஓ. முடிவே பண்ணிட்டீங்களா? அப்போ சரி. அப்புறம் எண்ட கேட்டுட்டு.”

“நீ கோவப்படாத பாஷ்யம். அது அவருக்கு மட்டும் இல்லை. உனக்கும் ஒரு ரிலீப் தான.”

“நான் எப்போ உங்ககிட்ட சொன்னேன். என்னால அப்பாவை பாத்துக்க முடியாதுனு?. நீங்க வந்து போயிருந்தா எனக்கு இந்த நினைப்பே இருக்காது. அங்க பாரு மொத அக்கா ஆஸ்திரிலேயா போயிட்டா. அம்மா சாவுக்கு கூட வர முடில. பிளைட் டிக்கட் கிடைக்கலன்னு சொல்லிட்டா. ரெண்டாவது அக்கா யூரோப்னு சொல்றா. சரி அதன் பரவால்லன்னு பார்த்தா இந்தியாக்குள்ள இருக்குற உங்களுக்கு என்ன ஆச்சு. கேட்ட மாமாவுக்கு லீவு கிடைக்கல. பிள்ளைக்கு ஸ்கூலுனு உக்காந்திருக்கீங்க”.

“சூழ்நிலை அப்போ அப்பிடி இருந்துச்சு டா பாஷ்யம்”

“நீங்க கொலைன்னு முடிவு பண்ணிட்டீங்க. நான் என்ன பேசணும்?”

“அது எப்படிடா கொலைன்னு சொல்ல முடியும்? வயசாயிடுச்சு.  அவருக்கும் எதுவும் பண்ண முடியல. எப்பிடி ஓடியாடிட்ருந்தவரு. அந்த மாதிரி இருந்தவங்களுக்கு தான் முடங்கிக்கிடக்குறது பிடிக்காதுடா பாஷ்யம். புரிஞ்சிக்க. கௌரவமா வாழணும்னு தான் நினைப்பாங்க. அவரு எந்த காலத்திலேயும் யார்ட்டயும் எதுவுமே எதிர்ப்பார்த்ததில்லை. அவரைப்போய் இப்டி முழுக்க முழுக்க படுத்த படுக்கையாக்கி வச்சிருந்தா எப்படியிருக்கும்? நம்ம கையும் காலும் நமக்கு வேலை செய்றா வரைக்கும்தாண்டா நமக்கு மரியாதை. அதுக்குள்ள போயிடனும். அவருரொம்ப கௌரவம் வாழ்ந்தவர்டா. யோசிச்சுப்பாரு.”

“எல்லாம் சரி தான்க்கா. நாம சின்ன வயசா இருக்கும்போது நமக்கு நம்ம அம்மா அப்பா பீ மூத்திரம் அள்ளிபோடலையா. இப்போ அது நம்ம கடமை. நீயேதான் உன் பேர பிள்ளைகளுக்கு செய்யுற. நான் அப்பாவுக்கு செய்யுறேன். அவரு இருக்குற வரைக்கு அப்பிடியே இருந்துட்டு போகட்டும்.”

“இங்க பாரு பாஷ்யம். நமக்கு நம்ம பெத்தவங்க செய்றதுக்கும் நாம் நம்ம பெத்தவங்களுக்கு செய்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. குழந்தையா இருக்கும்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனா பெரியவங்களுக்கு அப்பிடி இல்லை. நம்ம பிள்ளை கஷ்டப்படுதேன்னு தான் தோணும். தவிர நம்மகிட்ட அவங்களுக்குனு ஒரு பிம்பம் இருக்கு. அது இந்தமாதிரி செய்றதையெல்லாம் சகிச்சிக்க விடாது. அவரால இப்போ பேச முடியல. ஒரு வேளை பேச மட்டும் முடிஞ்சுதுனா அவரே இந்த முடிவை தான் நம்மகிட்ட சொல்லிருப்பாரு. இதுக்கு மேல உன் இஷ்டம். பாத்துக்கோ.” என்று பெருமூச்செறிந்தாள்.

எல்லோரும் ஒரு முடிவாகத்தான் வந்திருப்பார்கள் போல. இதில் தனித்து இருப்பது தான் மட்டும் தான் என்று ரங்கபாஷ்யத்திற்கு தோன்றியது. இருபக்கத்தின் நியாயங்கள் அவனுக்கு தெளிவில்லாத ஒரு ப்ரக்ஞயை தந்துகொண்டிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் தனது அப்பாவின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

குழந்தைகள் இந்த சங்கடங்கள் ஏதும் தெரியாமல் அல்லது புரியாமல் விளையாண்டு கொண்டிருந்தார்கள். ஒரு வகையில் குழந்தையை இருப்பது வரம். தோளில் இருக்கும் சுமை தெரியாது. தலையை திருப்பி கொண்டான். எவ்வளவு தேஜஸான முகம். தற்போது சூம்பிபோய் வாடியிருந்தது. தானும் அந்த நிலையை அடைய வேண்டியிருக்கும் என்று தோன்றியது. அதற்குள் இறைவனடி சேர்ந்துவிட வேண்டும் என்று அவனையுமறியாமல் வேண்டிக்கொண்டான். இந்த எண்ணமே அவனுக்கு முரணாகத்தெரிந்தது. தனக்கு என்று வரும்போது தான் வகுத்துக்கொண்ட நியாயம் வேறாக இருப்பது அவனுக்கு புலப்பட்டது. இயற்கையின்  வரமும் சாபமும் இதுதான். சிறுவயதில் பார்த்த விளையாட்டு பொம்மைகள் வயதான பின்பு அதே உவகையை அளிப்பதில்லை. காட்சிகள் மாறாமல் அதன் கற்பிதங்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன. சூழ்நிலைக்குத்தகுந்தவாறு நியதிகளை தங்களை தகவமைத்துக்கொள்கின்றன. ஒரு வகையில் உலகத்தின் சமநிலை இதில் அடங்கியிருக்கிறது என்று அவனுக்கு தோன்றியது. எண்ணைகளை கட்டுப்படுத்தி தனது அப்பாவின் முகத்தை மீண்டும் பார்த்தான். அவரது பார்வை எங்கோ வெறித்து கொண்டிருந்தது.

அடுத்த நாளிற்கான தலைக்கூத்தல் முன்னிட்டு அன்று இரவு ஏற்பாடுகள் மும்முரமாயிருந்தன. அக்காக்கள் இருவரும் பட்டியலிட்டு தர அண்ணன்கள் வெளியே சென்று இளநீர், எண்ணெய் போன்றவற்றை வாங்கி வந்தனர். அதுமட்டுமில்லாது தவசுப்பிள்ளைக்கு தகவல் தரப்பட்டது. இத்தனை பேர் இன்னன்ன சாப்பாடு, பந்தல், ஊர் பெரியவர்கள், கோடித்துணி என கனஜோராக நடந்து கொண்டிருந்தன.

பாஷ்யம் எல்லாவற்றையும் வெறித்து பார்தது கொண்டிருந்தான். அவனுக்கருகில் தேஜஸ்வினி வந்தாள்.

“அப்பா, என்ன பன்றாங்க? நாளைக்கு தாத்தா ஊருக்கு போறாருனு சொன்னாங்க”

“யாரு சொன்னா?”

“அந்த பாட்டி” என்று பாஷ்யத்தின் மூத்த அக்காவை காய் காட்டியது குழந்தை.

“எனக்கு தெரில தேஜு. தாத்தாவுக்கு இங்க ரொம்ப கஷ்டமா இருக்குதுனு சொல்றாங்க. அதான் அவங்க எல்லாம் சேந்து ஒரு ஊருக்கு அனுப்பி வைக்கிறாங்க”

“அங்க போனா தாத்தாக்கு கஷ்டம் இருக்காதா?”

“ஆமா. அங்க எந்த வழியும் தெரியாது”

“அப்போ. தாத்தா அங்க போறது தான் கரெக்ட்” சொல்லிவிட்டு வெடுக்கென்று ஓடிவிட்டாள்.

சாப்பிட வருமாறு அவனது அக்கா அழைத்தாள். இவன் ஒருமுறை ஏறிட்டு பார்த்து வேண்டாம் என்று மறுத்துவிட்டான். பெற்றவரை நாளை கொல்லப்போகிறோம் என்பதை இவர்கள் எவ்வாறு அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக மாற்றிவிட்டார்கள் என்று அவனுக்கு அதிர்ச்சியாய் தெரிந்தது. மீண்டும் வாய் திறந்தால் ஏப்பைக்கு சப்பையான ஆலசோனைகளை இந்த தற்குறிகள் நியாயப்படுத்துவார்கள். மூன்று நாட்களுக்கு மேல் ஆபிஸ் லீவ் எடுப்பதும் நான்கு நாட்களுக்கு மேல் பள்ளிக்கு விடுப்பு எடுப்பது அசௌகரியம் என்பதால் ஒருவரின் வாழ்க்கைக்கே முடிவு கட்டுபவர்களை என்னவென்று அழைப்பது எனப்புரியவில்லை. அன்றிரவு பாஷ்யம் அப்பாவுக்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டான். வெறுமையான எண்ணங்கள் அவனது மனதை ஆக்கிரமிக்க மனச்சோர்வு கொண்டு அப்பாவின் கட்டிலில் தலைசாய்த்து படுத்துகொண்டான்.

     எத்தனை மணிக்கு தூங்கினான் என்று பாஷ்யத்திற்கே தெரியவில்லை. முழித்து பார்த்தபோது அவனது அப்பாவின் கை இவனது கையை இருக்க பற்றியிருந்தது. கையை விடுவிக்க முயற்சிசெய்து தோற்றான். கையை பிடித்தவாறே எழுந்து அப்பாவின் முகத்தை பார்த்தவன் கண் மூடியிருப்பதை கண்டான். இருகரம் பற்றி அவரது தோளை உலுக்கினான். மூக்கின் அருகே கை வைத்து நெஞ்சில் முகம் காத்து கொடுத்து பார்த்தவன் “ஓ” வென்று கதறினான்.

     இவனது அலறலை கேட்டு அக்காதான் முதலில் வந்தாள். அவளுக்கு புரிந்தது. ஒவ்வொருவராக எழுப்பி விவரத்தை சொல்லி அப்பாவின் கட்டிலருகே வந்து உட்கார்ந்துகொண்டனர். இரு அக்காக்கள் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர். வீடு களேபரமாகியது. குழந்தைகள் எல்லோரையும் எழுப்பி மாடி ரூமிற்கு அனுப்பினார். அவைகள் பாதி புரிந்தும் புரியாமலும் ஜன்னல் ரேழிகள் வழி உற்று பார்த்துக்கொண்டிருந்தன. வீட்டிற்கு அருகிலிருப்பவர்கள் வர ஆரம்பித்தனர். அடுப்பு பற்ற வைத்து காபி போடப்பட்டது. வாசலில் நாற்காலிகள் போடப்பட்டு ஆண்கள் எல்லோரும் கை கட்டி உட்கார்ந்துகொண்டனர். கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் இறந்துபோன அப்பாவை பற்றி பேச ஆரம்பித்திருந்தனர். அவரின் ஞாபகங்கள் ஆசை போடப்பட்டன. சில அசைகள் அவனது அப்பா உயிரோடிருக்கும்போதே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ‘Be a Witness’ என்பது போல எல்லாவற்றையும் சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தான்.

     சடங்குகள் முடிந்து அவரது சடலம் வெளியே எடுத்துவரப்பட்டது. அவனது அண்ணகளுடன் அப்பாவை மீள பயணத்திற்கு வழியனுப்பி வைக்க கிளம்பினான். தார் சாலையில் வெறுங்காலில் கால் சுட்டது. அப்பா அருகில் இருந்தார் நிழலில் நட என்று கூறியிருப்பாரோ என்று அவனுக்கு ஒரு முறை தோன்றியது. இதுபோன்ற பல எண்ணங்கள் வழி நெடுகிலும் கடல் அலை போல் ஓயாமல் எழும்பி வர ஆனால் அவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது அவரது உடலை கிடத்தி சிதைக்கு தீ வைத்து திரும்பி பார்க்காமல் நடந்தனர்.

பம்ப் செட்டில் குளித்து ஈர வெள்ளை வேட்டியை உடலில் போர்த்திக்கொண்டு மெதுவாய் வீடு வந்து சேர்ந்தனர்.

     வீட்டிற்கு வந்த பாஷ்யம் என்ன நினைத்தானோ தெரியவில்லை. நேராக அவனது மூத்த அக்காவின் அருகில் போய் நின்றான்.

“பாத்தியா அக்கா. அப்பாதான் ஜெயிச்சிருக்கார். உங்கள எல்லாம் கொலைகாரனாக்காம அவரே போய் சேந்துட்டாரு. நீ சொன்னது சரி தான். புள்ளைங்க கஷ்டப்படக்கூடாதுனு பெத்தவங்க தான் நினைக்குறாங்க” என்றான்.

00

ஸ்ரீருத் (1986)

இயற்பெயர் முத்துசுப்பிரமணியன். சங்கரசுப்பு மற்றும் சுந்தரியின் தனையனாக செங்கோட்டையில் பிறந்து, திருநெல்வேலி தூய யோவான் பள்ளியில் கல்வி கற்று, திருநெல்வேலி அரசுப்பொறியியல் கல்லூரியில் கட்டுமானத்துறையிலும் மற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கல்லூரியில் முதுகலை அறிவியல் தேர்ச்சி பெற்று தற்போது பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

ஸ்ரீருத் என்னும் புனைப்பெயரில் வலைப்பூ மற்றும் மின் இதழ்களில் கதை, கட்டுரை, விமர்சனம் என ஊடாடும் இவரின் முதல் இரண்டு புத்தகங்கள் ஜீவா படைப்பகம் மூலமாக ‘ஆச்சி’ (சிறுகதை) மற்றும் ‘இத்யாதிகள்’ (கட்டுரை தொகுப்பு). தனது விருப்பத்திற்குறிய அல்புனைவு வகையில் மூன்றாவது புத்தகமாக ‘ராமும் அம்ஜத்கானும் மற்றும் இன்ன பிறவும் ‘ என்று கோதை பதிப்பகம் மூலம் தொகுத்திருக்கிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *