ஒன்று
மருதூர் மலைக்கிராமத்தில் வானுயர்ந்த மலையையொட்டி சிறுகுடிசையில் குப்பன் எலியும் அதன் மனைவி சுப்பி எலியும் பல வருடங்களாக வாழ்ந்து வந்தனர்.
முன்பாக இளம்பிராயத்தில் மருதூர் மலைக்கிராமத்தின் வயல்வெளியில் ஏகபோகமாக தன் கூட்டத்தினருடன் வாழ்ந்துவந்த இருவரும் கூட்டத்தினரின் போக்கும், நடவடிக்கையும் பிடிக்காமல் போனமையால் அவர்களை விட்டு ஒதுங்கிவந்து வாழத்துவங்கிவிட்டனர்.
ரொம்பகாலமாகவே தனித்து வசித்துவந்தாலும் குழந்தை பாக்கியமில்லாமல் இருவரும் அடிக்கடி அதைப்பற்றியே வருத்தப்பட்டும், துக்கமுகத்துடனும் வாழ்ந்துவந்தனர்.
எப்போதேனும் சுப்பி எலியின் தம்பி மாயாண்டி மலைக்கும் அந்தப்பக்கத்திலிருந்து இவர்களை வந்து பார்த்துப்போவார். அவருக்கு புத்தூரில் தான் குடிசையிருந்தது. அவருக்கு வள்ளி என்கிற பெயருடைய மனைவியும் இருந்தாள்.
மாயாண்டி எலியார் தன் அக்காவிடம் வள்ளி எலியின் அழகைப்பற்றி பெருமையடித்துக்கொள்வார். ’புதிய மனைவியை இங்கே அழைத்து வரலாமில்லையா? நாங்களும் அவளைப்பார்த்து அவளுக்கு செய்ய வேண்டிய சீரை செய்து விடுவோமே!’ என்று சுப்பி எலி தன் தம்பியிடம் சொல்வாள்.
‘ரொம்ப தூரமெல்லாம் அவளை நடக்கவைத்து கூட்டிவர முடியாது அக்கா. அவள் முன்கோபக்காரி! அழகிருக்குமிடத்தில் ஆபத்தும் இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்பாயே.. இதோ வந்தாச்சு.. இன்னும் கொஞ்சம் தூரம் தான்.. என்றெல்லாம் சொல்லி அவளை இவ்ளோ தூரம் அழைத்துவர முடியாது என்று தெரிந்து தான் நான் மட்டுமே வருகிறேன் அக்கா!’ என்று மாயாண்டி எலி அக்காவுக்கு சமாதானம் சொல்வார்.
மருதூர் மலைக்கிராமத்துக்கு மாயாண்டி எலி வந்து இப்போது ஆறுமாத காலத்திற்கும் மேலாயிற்று. குப்பன் எலியும் சுப்பி எலியும் விநாயகரை வழிபட ஆரம்பித்திருந்தனர். இவர்கள் குடிசையிலிருந்து கிராமத்திற்கு செல்லும் பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் விநாயகர் கோவிலொன்று இருந்தது.
எதேச்சையாக விநாயகரை கவனித்த குப்பன் எலிக்கு விநாயகரின் முன்பாக எலியின் சிலையைக் கண்டதிலிருந்து விநாயகர் பக்தனாக மாறிப்போனார். அவர் மாறினதோடல்லாமல் மனைவி சுப்பி எலியையும் தள்ளாத வயதில் அழைத்துக்கொண்டு வந்து புத்திர பாக்கியம் வேண்டி விநாயகரை வழிபடச் செய்தார்.
விநாயகருக்கு வாகனமாக தன் முன்னோர் இருந்தமையால் தான் சிலையாக அவரையும் வடிவமைத்து அமரவைத்திருக்கிறார்கள் என்று குப்பன் எலி நம்பினர்.
ஒருநாள் குப்பன் எலி வீட்டுத்தேவைக்கான உணவுப்பொருட்களோடு குடிசைக்கு மலையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் இடறிய கல்லொன்றை நின்று நிதானித்துப்பார்த்தார்.
அந்தக்கல் விநாயகர் உருவத்தை அவருக்கு ஞாபகப்படுத்திற்று. குட்டியூண்டு கல்தான் அது. ஆனால் மற்ற கற்களைப்போல் அல்லாமல் நீலவர்ணத்தில் இருக்கவே தன் முதுகிலிருந்த மூட்டையை இறக்கி வைத்து அதன் முடிச்சை அவிழ்த்தார் குப்பன் எலி.
பின்பாக அந்த நீலவர்ணக்கல்லை எடுத்து மூட்டையினுள் போட்டு கட்டி முதுகில் தூக்கியவண்ணம் தன் குடிசை நோக்கி கிளம்பினார். சரியான அளவான சுமையோடு எப்போதுமே வீடு திருப்புஅவ்தை வழக்கமாக கொண்டவர் அவர். இப்போது நீலவர்ணக்கல்லும் மூட்டையில் சேர்ந்துகொண்டதால் கொஞ்சம் மூச்சுவாங்க ஆரம்பித்தது. இருந்தும் சமாளித்துக்கொண்டு நடக்கத்துவங்கினார்.
தன் குடிசைக்கு அவர் வரும் சமயத்தில் தான் ஆற்றோரத்திலிருந்து அடுப்பெரிக்க விறகுச்சுமைக்கட்டை முதுகில் சுமந்தபடி சுப்பி எலியும் வீடு வந்து சேர்ந்திருந்தது. உடல்சோர்வால் குடிசையின் வெளித்திண்ணையில் மல்லாக்க சாய்ந்து படுத்த குப்பன் எலி அந்த விநாயகர் உருவமுடன் இருக்கும் கல்லை என்ன செய்வது? என்பதுபற்றிய யோசனையில் ஆழ்ந்தார். இருள்விழும் நேரம் நெருங்கியமையால், இருவருக்குமான இரவு உணவுத்தயாரிப்பில் இறங்கியிருந்த சுப்பி எலி குடிசையினுள் அடுப்பை பற்றவைத்தாள். அப்போது குப்பன் எலி தன் மனைவியை அழைத்தார்.
”என்ன விசயம்? கால் வலிக்கிறதா? பிடித்து விடணுமா?” என்று கேட்டபடியே குடுகுடுவென ஓடி வந்த சுப்பி எலி தன் கணவன் முன்பாக நின்றாள்.
”மலையிலிருந்து இறங்கி வீட்டுக்கு வர்றப்ப எனக்கு விநாயகர் கல் கிடைச்சுது.”
”விநாயகர் கல்லா? அதை தூக்கிட்டு வரமுடியாம அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்களா? வேணும்னா நாளைக்கி காலையில ரெண்டு பேருமே போவோம் அந்த இடத்துக்கு. தொட்டல் கட்டி விநாயகரை உட்காரவச்சு குச்சிக்கம்பு ஒன்றைக்குடுத்து நான் பின்னாடி தூக்கிக்கறேன், நீங்க முன்னாடி தூக்கிக்கங்க.. நாம சேர்ந்து குடிசைக்கி கொண்டு வந்துடுவோம்”
“இல்ல, நீ சொல்றாப்ல பெருசு இல்ல அந்தக்கல். உணவு மூட்டையில் உள்ளார வச்சு கொண்டு வந்துட்டேன். அதை நீ சுடுதண்ணியில போட்டுவச்சு மிதமான சூட்டுல மூனு ஸ்பூன் அளவு குடிச்சுடு இன்னிக்கி.”
“சாமி கல்லை யாராச்சும் சுடுதண்ணியில போட்டு வச்சு குடிப்பாங்களா? எதுக்காக இப்படி சொல்றே? உனக்கு பைத்தியம் பிடிச்சுட்டுதா?” என்றாள் சுப்பி எலி.
“இல்ல, இதை நானா சொல்லலை சுப்பி. என் மனசு உன்கிட்ட சொல்லச் சொல்லுது. மறுபேச்சு பேசாமல் போய் நான் சொன்னதைச் செய்” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிப்படுத்துக்கொண்டார் குப்பன் எலி.
அதன்படியே சுப்பி எலியும் அன்று சுடுநீரில் நீலவர்ண விநாயகர் கல்லை போட்டு மூன்று ஸ்பூன் அளவு குடித்துவிட்டு உறங்கினாள். மறுநாள் அவளுக்கு கர்ப்பமான விசயம் தெரிந்தது. சீக்கிரமாக சுப்பி எலி பிரசவத்தில் ஒரு குட்டியை மட்டும் ஈன்றெடுத்தாள்.
அதில் குப்பன் எலிக்கு வருத்தம் தான் என்றாலும் கடவுளின் குழந்தை என்று தன் ஒற்றை மகனை நம்பினார். உடலெங்கும் முடிகள் ஏதுமின்றி வெண்மை நிறத்தில் கண்விழி திறக்காமல் தொட்டிலில் கிடந்த மகன் அருகிலேயே சுப்பி எலி எந்த நேரமும் அமர்ந்திருந்தாள். இதனால் சமையல் வேலையை குப்பன் எலியே குடிசையில் பார்க்கவேண்டி ஆகிற்று.
விநாயகர் கல் குடிசையின் நடுமையத்தில் முன்பைவிட பளபளப்புடன் அமர்ந்திருந்தது. தினமும் அதற்கு வீட்டினுள் பூக்கள் தூவி பூஜை நிகழ்த்தி, ‘மகன் சீரும் சிறப்புமாக எங்களுக்கும் பின்பான காலத்தில் வாழ வேண்டும்!’ என்று இருவரும் வேண்டிக்கொண்டனர்.
மகன் கண்விழித்த நாள் அன்று அவனுக்கு பெயர் சூட்டும் விழாவையும் குடிசையினுள்ளேயே அவர்கள் நிகழ்த்தினார்கள். ‘சுந்தரன் எலி’ என்று அவன் காதுப்புறமாக சுப்பன் எலி மூன்றுமுறை கூப்பிட்டு மகிழ்ந்தார். கிடுகிடுவென வளர்ந்த சுந்தரன் எலி சுறுசுறுப்பாக குடிசையின் சுற்றுப்புறமெங்கிலும் ஓட்டமாய் ஓடினான்.
இரவுநேரத்தில் குப்பன் எலியின் வயிற்றின்மீது ஏறிப்படுத்துக்கொண்டு கதைகள் சொல்லுமாறு நச்சினான். குப்பன் எலி தன் வாழ்க்கையையே கதையாக சொல்ல ஆரம்பித்தார்.
இடையில் ஒருமுறை புத்தூரிலிருந்து வந்திருந்த மாயாண்டி எலி தன் மருமகனை முதுகில் தூக்கி வைத்து சுமந்து கொண்டோடி விளையாடி மகிழ்ந்தார். தன் அக்கா சுப்பி எலியிடம் வள்ளி எலியும் ஒரு பிள்ளை மட்டுமே பெற்றதாக வருத்தப்பட்டு சொன்னார். ‘என்ன பெயர் வைத்திருக்கிறாய் என் மருமகளுக்கு?’ என்று சுப்பி எலி விசாரிக்க, ‘துளசி எலி’ என்று சொன்னார்.
“என்னங்க மருமகனே.. என் பிள்ளை துளசி எலியை நீங்க கட்டிக்கறீங்களா?” என்று மாயாண்டி மாமா சுந்தரன் எலியைக் கேட்க வெட்கம் மிகுதியில் குடிசையைச்சுற்றி ஓடியவன் அங்கிருந்த முருங்கை மரத்தில் ஏறி உச்சாணிக்கொம்பில் அமர்ந்து கொண்டு சிரித்தான்.
ஏனோ அவனுக்கு மாயாண்டி மாமாவின் முகத்திலிருந்த மீசை வசீகரித்தது. தனக்கும் அப்படி மீசை இருந்தால் அழகாக இருப்பேன் என்று எண்ணிக்கொண்டான்.
இப்படியாக வருடம் ஒன்னரை போய்விட்ட போது சுப்பி எலியும் குப்பன் எலியும் தளர்ந்தமையால் குடிசையிலேயே கிடக்க வேண்டிய நிலையும் வந்து சேர்ந்தது. உணவுத்தேவைக்காகவும், விறகுத்தேவைக்காகவும் சுந்தரன் எலி காலையில் குடிசையிலிருந்து கிளம்பிச் சென்றானென்றால் மாலையில் தான் திரும்புவது என்று வழக்கமாயிற்று.
வந்ததும் அடுப்பு பற்ற வைக்கவும் வேண்டும். வயிற்றுப்பசி என்று மட்டும் ஒன்று இல்லாவிட்டால் இத்தனை அலைச்சல் தனக்கு இருக்காதுதான் என்று சுந்தரன் எலி நினைத்தான்.
அவனுக்கு ஒருமுறை புத்தூர் சென்று மாயாண்டி மாமனையும், அத்தையையும், குறிப்பாக துளசி எலியையும் காணவேண்டுமென்ற உள்ளக்கிளர்ச்சியில் இருந்தான். சுப்பி எலியும், குப்பன் எலியும் தளர்ந்துபோய் குடிசையில் கிடக்க இப்படியெல்லாம் ஆசை தனக்கு இருக்கக்கூடாது என்றும் சுந்தரன் எலி நினைத்தான். ஆகவே புத்தூர் செல்லும் அந்த நினைப்பைத் தூக்கி குப்பையில் வீசினான்.
இப்படியாக ஒருநாள் அதிகாலையில் குடிசையிலிருந்து உணவுத் தேவைக்காக கிளம்பிய சுந்தரன் எலி மலையில் தேடலில் இருக்கையில் வானம் கருமேகங்களால் சூழ்ந்த சில நிமிடங்களில் மழை பிடித்துக்கொண்டது.
எப்போதும் பெய்யும் மழையை நன்கறிவான் சுந்தரன் எலி. ஆனால் இந்த மழையானது காற்றும், இடியோசையும், மின்னலும் கூடியதாக மிக பயங்கரமாய் இருந்தது. இடி இடிக்கையில் இவனுக்கு இருதயக்கூடே வெடித்துவிடும் போலிருந்தது.
ஏதேனும் பழைய வளை தென்பட்டால் கூட ஓடி உள்ளே சென்று கப்சிப்பென அமர்ந்துகொள்ளலாமென நினைத்தவன் வளையைத் தேடி அங்குமிங்கும் ஓட்டமாய் ஓடினான் நனைந்து கொண்டே.
குப்பன் எலி சொன்ன கதைகளின் வழியே இடியானது மரத்தின்மீது விழுந்தால் மரம் தீப்பற்றிக்கொள்ளும் என்று தெரிந்திருந்தான். அதனால் மரத்தின் மீதேறி ஏதேனும் பொந்தில் அமர்ந்து கொள்ளும் யோசனையும் அவனிடமில்லை. அடுத்ததாக வளையினுள் நுழைந்தால் ஏற்கனவே அது பாம்பின் வசிப்பிடமாக இருந்தால் அது சந்தோசமாக பிடித்து விழுங்கிவிடும் என்றும் தெரிந்திருந்தான்.
சுந்தரன் எலிக்கு குழப்பமாக இருந்ததால் அங்கும் இங்கும் மழையில் நனைந்தபடியே ஓடமட்டுமே செய்தான். இடிச்சத்தம் மட்டும் தான் அவனுக்கு பொறுக்க மாட்டாமல் இருந்தது. அதற்காகவேனும் ஒரு புதிய வளையொன்றை ஏற்பாடு செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது.
அதற்குத் தோதான இடம் தேடி அலைந்தான். வளைக்குள் தண்ணீர் புகாதவாறு இடம் வேண்டும். ஆனால் எல்லா இடங்களிலும் தண்ணீர் ஓட்டம் இருந்துகொண்டே இருக்கிறதே!
ஆனது ஆகட்டுமென வளை தோண்டும் நினைப்பையும் விட்டொழித்தவன் அருகில் நின்றிருந்த பெரிய மரத்தின் அடிப்பகுதிக்குச் சென்று அதில் சாய்ந்து அமர்ந்தவாறு தன் காதுகளை முன்னங்கால்களால் அடைத்துக்கொண்டான்.
இடி இடிப்பதையும், மின்னல் வெட்டுவதையும், காற்றையும், மழையையும் இவன் வேண்டாமெனவும், பயமாய் இருக்கிறதாகவும் சொன்னால் அவைகள் தங்கள் பணியை நிறுத்திக்கொள்ளவா போகின்றன? இயற்கையின் போக்கை யாரால் என்ன செய்துவிட முடியும்?
இப்படியான சமயத்தில் குடிசையிலிருக்கும் குப்பன் எலியையும், சுப்பி எலியையும் நினைத்தான் சுந்தரன் எலி. இந்தக்காற்றுக்கு இந்த மலையிலிருக்கும் பெரும் மரங்களெல்லாம் அஞ்சி நடுங்கி ஆடுகின்றனவே.. குடிசையின் கதியை நினைக்கவே அவனுக்கு அச்சமாய் இருந்தது. மழை விடாமல் கொட்டித்தீர்த்தது.
உடல் நனைந்து முடிகளெல்லாம் ஒட்டிப்போய் சுந்தரன் எலி தன்னையொரு நோஞ்சான் எலியாகவே பார்க்கத் துவங்கினான். ஒரு தேங்காய்ப்பூ டவல் கிடைத்தால் அதனுள் சுருண்டு படுத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவும் தொப்பலாய் நனைந்தல்லவா போய்விடும்!
ஒருவழியாய் மழை விட்டபிறகாக சுறுசுறுப்பே இல்லாமல் வெறுங்கையை வீசிக்கொண்டு சுந்தரன் எலி குடிசைக்கு செல்லும் பாதையில் திரும்பினான். பாதை முழுதும் சேறும் சகதியுமாக இருக்கவே புல்பூண்டுகள் மீது ஏறி இறங்கி அவன் குடிசை இருந்த இடத்திற்கு வருகையில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மொறமொறப்பு சப்தம் வேறு பயங்கரமாய் கேட்டது. குடிசை இருந்த இடம் வெற்றிடமாகக் காட்சியளித்தது.
அங்கு அப்படி எந்த அடையாளமும் இல்லாமல் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டிருந்தது குடிசை. சுந்தரன் எலி கண்களில் கண்ணீர் முட்ட ஓடியோடிப்பார்த்தான். மலையிலிருந்து வந்த தண்ணீர்தான் குடிசையை அடித்துப்போயிருக்க வேண்டும்.
உணவுதானிய சேமிப்பு முட்டிகளை வெள்ளம் அடித்துப்போய்விட்டது. அடுப்பு இருந்த இடத்தில் சேற்று சகதி தான் இருக்கிறது. அப்படியானால் அம்மாவும் அப்பாவும் குடிசையோடு போய்விட்டார்கள். அவ்வளவுதான். இனி எப்போதும் அவர்களை நான் பார்க்க முடியாது.
இனிமேல் இந்த இடத்தில் நானாகத்தான் தனியொருவனாக வாழ வேண்டும். இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் மீண்டும் நான் விதைகள் தூவி பயிர் வளர்த்து வாழ வேண்டும். எனக்கென்று யாருமில்லை. இனி நாளை வசிப்பதற்கு குடிசையொன்றை தனியொருவனாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் வெள்ளம் வந்தால் அதில் குடிசை அடித்துச்செல்ல முடியாதபடி தடுப்புகள் உருவாக்க வேண்டும். எப்படிப்பார்த்தாலும் புதிதாகத்தான் மீண்டும் எல்லாவற்றையும் முதலிலிருந்து துவங்க வேண்டும். இப்படியெல்லாம் நினைத்த சுந்தரன் எலி அன்று தன் நிலத்தில் இருந்த வேப்பை மரத்தின் கிளையில் ஏறி நீட்டிச்சாய்ந்துவிட்டான் பசியோடே!
விடிகாலையில் சூரிய வெளிச்சம் அடிக்கையில் தான் சுந்தரன் எலி கண் விழித்துப்பார்த்தான். தலை பாரமாக இருந்தது. தும்மல் வேறு வந்தது. அவசரமாய் மரத்திலிருந்து கீழிறங்கினான் சுந்தரன் எலி. உடலின் இன்னமும் ஈரம் காயாமலிருக்கவே வெய்யிலில் உடலைக்காட்டிய வண்ணமாக அங்குமிங்கும் நடந்தான்.
கொஞ்சம் நேரத்தில் அவன் உடலில் ஈரம் காய்ந்து புதிய மினுமினுப்புடன் காட்சியளித்தான். மீண்டும் ஒரு தும்மல் போட்டுக்கொண்டு தன்னையே ரசித்தான். புசுபுசுவென முடிகள் நன்கு காய்ந்திருக்க உடல் நடுக்கம் இப்போது முற்றிலுமில்லை.
அப்போது ‘அக்காவ்! மாமாவ்! மருமவனே!’ என்று மாயாண்டி எலியின் குரல் தூரத்தே கேட்கவே சுந்தரன் எலிக்கு வருவது மாமா தான் என்று உணர்ந்ததும் உதடு விம்மியது. யாருமில்லை இனி எனக்கு என்று நேற்றிரவு நினைத்தேனே! இதோ மாமன் இருக்கிறார். மாயாண்டி மாமா இவனைக்கண்டதும் வேகமாய் ஓடிவந்தவர் குடிசை இருந்த இடத்தைக் கண்டு சிலநிமிடம் அப்படியே ஆணியால் அடித்தது போல நின்றார். சுந்தரன் எலி அவரை நோக்கி ஓடிச்சென்றான். இருவரும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர். சுந்தரன் எலி கண்ணீர் சிந்தினான்.
“அழாதீங்க மருமவனே! புத்தூர்லயும் நேத்து நல்ல மழை தான் பெஞ்சுது. ஆனா இந்த அளவுக்கு இல்ல! நான் இருக்கேன் உங்களுக்கு. நீங்க என் கூட புத்தூருக்கே வாங்க!” என்றார் மாயாண்டி எலி. சுந்தரன் எலிக்குத்தான் குழப்பமாய் இருந்தது. அவரவர் அவரவர் இடத்தில் இருந்தால் தானே மதிப்பும் பெருமையும்.
“அங்க உங்க கூட வந்து நான் என்ன செய்வேனுங்க மாமா?”
“என்ன இப்படி கேட்டுப்போட்டீங்க மருமகனே! எல்லாரும் செய்யுறதைத்தான் அங்கயும் செய்யுறோம். அங்க உங்களுக்காக துளசி எலி காத்துட்டு இருக்கா! அவ தான் சொல்லி அனுப்பினா என்கிட்ட. போயி மாமனுக்கும் அத்தைக்கும் என்னாச்சுன்னு பார்த்துட்டு வாங்கப்பான்னு! அதான் விடிகாலையிலேயே கிளம்பி ஓட்டமா ஓடி வர்றேன். உங்களுக்கு என் கூட புத்தூர் வர விருப்பமில்லீங்களா மருமகனே?”
“அப்படியில்லீங்க மாமா.. இந்த ஒரு ஏக்கர் நிலத்துல நானே இனி விதை தூவி பயிர் செஞ்சு வாழணும்னு நேத்து முடிவு செஞ்சேன். அதே போல வெள்ளத்துல அடிச்சுட்டு போக முடியாதபடிக்கு செவுத்தை உயர்த்தி குடிசை போட்டுக்கலாம்னு யோசிச்சேன்.”
“ஓ, அப்பிடி திட்டம் போட்டீங்களா நீங்க. ஆனா ஒத்தையா எத்தனை நாளைக்கு மருமகனே நீங்க இப்பிடியே இருப்பீங்க? நிலத்தை என் பேர்ல எழுதிக்குடுத்துடுங்க மருமகனே! துளசி எலி இன்னும் ஒருவருசத்துல வயசுக்கு வந்துடுவா. அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு நான் ஒரு முடிவுல இருக்கேன். அதுவரைக்கும் புத்தூர்ல நீங்க ராஜா மாதிரி என் குடிசைல இருக்கலாம். உங்க அத்தை பதினைஞ்சு ஆடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டீடு போயி மேய்ச்சு கொண்டுவந்து பட்டீல அடைக்கிறா தினமும். கொஞ்சம் நாளா ஆடுங்களை வித்துட்டு நிம்மதியா இருக்கணும்னு சொல்லிட்டிருக்கா. எதையும் அழிக்கமுடியும் மருமகனே சீக்கிரமா. உருவாக்கத்தான் முடியாது. நீங்க வந்துட்டா ஆடுங்களை விற்க வேண்டியதில்லெ. நீங்க அதுங்களை பார்த்துக்கலாம். பட்டி பெருகும். நாம நிம்மதியா வாழலாம். துளசி உங்களுக்குத்தான்.”
“சரீங்க மாமா, நீங்க சொல்றாப்லையே பண்ணிக்கலாம்” என்றான் சுந்தரன் எலி.
“எங்கக்கா சுப்பியோட கற்பூரப்புத்தி அப்பிடியே உங்ககிட்ட இருக்குதுங்க மருமகனே! வாங்க நாம போவோம்!”
000
இரண்டு
அன்று மாமனோடு கிளம்பி புத்தூர் வந்து சேர்ந்தவன் தான் சுந்தரன் எலி. மாமன் வந்த சில நாட்களிலேயே இவனது ஒரு ஏக்கர் நிலத்தை தன் பேருக்கு எழுதி வாங்கிக்கொண்டது. அந்த சிலநாட்கள் மட்டுமே ராஜ உபச்சாரம் மாமா குடிசையில் சுந்தரன் எலிக்கு கிடைத்தது. அவ்வப்போது துளசி எலியின் கடைக்கண் பார்வையும் கிட்டியது. பதினைந்து உருப்படி ஆடுகளை அத்தை வள்ளி எலியே மேய்ச்சலுக்கு ஓட்டிப்போய் வந்தாள். பின்பாகத்தான் எல்லாமும் மாறிற்று.
குடிசையின் பின்பகுதியில் தான் ஆட்டுப்பட்டி இருந்தது. திடீரென அந்தப்பட்டியினுள் அவசரமாய் ஒரு சிறுகுடிசை முளைத்து நின்றிருந்தது. முதலாக அது எதற்காக பட்டியினுள் மாமா ஏற்பாடு செய்ய வேண்டுமென நினைத்து குழம்பினான் சுந்தரன் எலி. பின்பாக அதுதான் சுந்தரன் குடிசை என்று வள்ளி எலி அறிவித்தது. சுந்தரன் எலி பெரிதாக இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. வயதுப்பெண் இருக்கும் குடிசையில் என்னதான் மாமன் என்று இரவில் படுத்துக்கொள்ள கூச்சமாகவும் இருந்ததுதான் அதற்குக்காரணம்.
நல்ல திருநாள் ஒன்றில் மேய்ச்சல் நிலத்திற்கு ஆடுகளை ஓட்டிப்போகும் பணி சுந்தரன் எலிக்கு கிட்டியது. அத்தை அன்று தூக்குப்போசியில் மதிய உணவையும் இவனுக்கு வைத்து கையில் கொடுத்து தாட்டி அனுப்பினாள். புத்தூரில் ஏகப்பட்ட எலிக்குடும்பங்கள் ஆங்காங்கே குடிசையில் வாழ்ந்து வந்தன. மாமனின் மேய்ச்சல் நிலம் ஊரைவிட்டு ஒதுக்குப்புறத்தில் இருந்தது. பழகிய ஆடுகள் என்பதால் பெரிதாக அவைகளை விரட்ட வேண்டிய அவசியமெதுவுமில்லை சுந்தரன் எலிக்கு.
மதியநேர வெய்யலில் இவன் படுத்திருக்கும் வேப்பைமர நிழலிலேயே அவைகளும் வந்து படுத்துக்கொண்டன. பின்பாக மாலை நேரத்தில் அவைகள் கிளம்பி பொழுது விழும்வரை காட்டினுள் மேய்ந்தன. பின்பாக ஆடுகளை வளைத்து ஓட்டிக்கொண்டு மாமன் குடிசைக்குத் திரும்புவான் சுந்தரன் எலி.
இரவு உணவை மாமன் குடிசை திண்ணையிலேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு நேராக ஆட்டுப்பட்டியினுள் இருக்கும் தனக்கான குடிசைக்குள் வந்து சுருண்டு விடுவான் சுந்தரன் எலி. அவன் கனவெல்லாம் துளசி எலியை மாமன் இவனுக்கு கட்டிக்கொடுத்ததும், அவளிடம் பேசி எப்படியேனும் இந்த ஊரைவிட்டு வேறு ஊர் சென்று வாழ வேண்டும் என்று சொல்லி அழைத்துப்போய்விட வேண்டும் என்று தான். ஆடுகளை மேய்க்கத்துவங்கிய காலத்திலிருந்து துளசி எலி இவன் கண்ணுக்கே தட்டுப்பட்வேயில்லை. மாமனிடம் விசாரித்ததற்கு, ’குருகுலத்தில் கல்வி கற்க செல்கிறாள்!’ என்று சொல்லியிருந்தார்.
கல்வி என்று ஒன்று இருக்கிறதா? அது எதற்குப்பயன்படும்? என்றெல்லாம் யோசித்தான் சுந்தரன் எலி. எப்படியிருந்தாலும் அது நல்லவிசயமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வான். இதைப்பற்றி யாரிடமேனும் விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் சுந்தரன் எலி.
பின்பாக வள்ளி எலியின் மேற்பார்வையில் புதிய பணி துவங்கிற்று. புதிய வீடு கட்டும் பணி தான் அது. பின் எத்தனை நாட்கள் தான் குடிசையினுள் வாழ்வது? கட்டிடம் கட்ட மேஸ்திரி எலியானது சக வேலையாட்களுடன் வரவும் தினமும் வேலை ஜரூராக நடக்கத்துவங்கிற்று. குடிசையையொட்டி சுவர் ஒன்று சீக்கிரமாக மேலே எழும்பியது. பத்து நாட்களில் வீடு கிரகப்பிரவேச நிகழ்ச்சியும் நடந்தது.
சுந்தரன் எலி அப்போதுதான் அந்த வீட்டின் அழகை முதலாகப் பார்த்து ரசித்தான். தனக்கும் இப்படியான ஒரு வீடு வேண்டும். துளசி எலியோடு எங்கே போய் வாழ்ந்தாலும் இதே மாதிரி.. சேச்சே.. இதைவிட அழகாய் மாடியிலும் பெட்ரூம் வைத்து கட்டிவிடவேண்டும், என்று நினைத்தான். வீடு கிரகப்பிரவேச நாள் அன்று தூக்குப்போசியில் இட்லிகள் சட்டினியோடு இருந்தது. அதை ரசித்து உண்டான் சுந்தரன் எலி.
அன்று மேய்ச்சல் நிலத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கையில் ஒரு ஆண்மயில் ஒன்று தோகையை விரித்து தெற்கு மூலையில் ஆடிக்கொண்டிருந்தது. சற்று தூரத்தில் மூன்று பெண்மயில்கள் இரை பொறுக்கிக்கொண்டிருந்தன. வேப்பைமரத்தடியில் படுத்திருந்த சுந்தரன் எலி எழுந்து நிதானமான ஆடிக்கொண்டிருந்த ஆண்மயிலருகில் சென்றான்.
“யோவ் மயிலாரே! நீ ஆட்டமாடறதுக்கு என் மாமன் காடுதான் கிடைச்சுதா? தூரப்போயி பக்கத்துக்காட்டுல ஆட்டமாடு போ!” என்றான். சுந்தரன் எலியின் பேச்சைக்கேட்ட ஆண்மயிலார் தன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டார். சுந்தரன் எலியை உற்றுப்பார்த்தார்.
“ஏது பன்னாட்டு பெருசா இருக்கே எலியாரே.. மாமன் காடா? உங்கள் மாமன் காடென்றால் நான் ஆடப்பிடாதோ? என் பெயர் யாகவா மயில். என்னைப்பார்த்து யாரும் இதுநாள் வரை ஒருவார்த்தை ஒருவரும் சொன்னதே கிடையாது தெரியுமா?”
“என் பெயர் சுந்தரன் யாகவா மயிலாரே! நீங்கள் ஆடினால் உண்ணிப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் சிதறி காட்டில் விழுந்து விடும். அந்தப்பூச்சிகள் ஆடுகளின்மீது ஒட்டிக்கொண்டால் ஆடுகளுக்கு தொந்தரவு தான். ஆடுகளின் ரத்தத்தை அவைகள் உறிஞ்சிவிடும். குளம் குட்டைகளின் பக்கமாக நீங்கள் தாகத்திற்கு தண்ணீர் அருந்தத்தான் செல்கிறீர்கள். குளிப்பதற்கல்ல. தினமும் குளித்தால் உங்கள் உடலில் உண்ணிப்பூச்சிகள் இருக்காது.”
“சுந்தரன் எலி தானே உன் பெயர். இவ்வளவு அறிவார்த்தமாக பேசுகிறாயே! எதாவது குருகுலத்தில் கல்வி பயின்றாயா?”
“கல்வின்னு நீங்க சொல்றது தான் எனக்கு என்னான்னு தெரியலை யாகவா மயிலாரே. என் மாமன் மகள் துளசியும் கல்வி கற்கத்தான் செல்வதாக என் மாமன் சொல்கிறார்”
“கல்வி கற்பதில் தவறொன்றுமில்லை. அதனால் அறிவு வளரும். உன் பேச்சும் அப்படி இருந்ததால்தான் கேட்டேன். உனக்கு ஏதேனும் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா? இருந்தால் சொல். வெகு காலம் கழித்து என்னிடம் குளிக்கச் சொன்ன முதல் ஆள் நீ! நான் குளிக்க வேண்டும். அப்போது தான் என் உடலில் உள்ள சிறுபூச்சிகள் அனைத்தும் அழியும். நான் நிம்மதியாக இருப்பேன்! என் குருகுலத்தில் மூன்று பெண் மயில் துறவிகள் இருக்கிறார்கள். மூவருக்கும் மூன்று மந்திரங்கள் தெரியும். அவைகளை கற்றுக்கொள்வதில் மற்ற பெண்மயிலார்களுக்கு ஆர்வமெதுவும் இல்லை. வயிற்றுக்குத் தீனி ஒன்றே குறிக்கோள் என காடுமேடுகளில் அலைகின்றனர். ராக்காலங்களில் மயிலார்கள் ஒரே மரத்தில் ஏறி தங்கித்தூங்கி விடிந்ததும் பொறுக்கித்திங்க ஆசைகொண்டு அலைகிறார்கள். கல்வி பற்றியோ, ஏனைய எந்த விசயங்களைப்பற்றியோ தெரிந்துகொள்ள ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள்.”
“எனக்கு மந்திரங்கள் கற்றுக்கொள்ள ஆசைதான். ஆனால் ஆடுகள் நான் இல்லாவிட்டால் பத்திரமாக இருக்காதுகளே யாகவா மயிலாரே! பக்கத்து காட்டினுள் சென்று மேய்ந்துவிட்டால் அவர்கள் திட்டுவார்கள். ஆட்டின் கால்களை ஒடித்துவிடுவார்கள். இதற்காக மாமாவும் அத்தையும் கூட என்மீது சங்கடம் கொள்ளவேண்டி வந்துவிடலாமே.. அதற்காகத்தான் யோசிக்கிறேன்!” என்றான் சுந்தரன் எலி.
“நீ மூன்று நாட்கள் மட்டும் செலவிட்டால் போதும். ஒரு நாளைக்கு ஒரு மந்திரம் தான் உனக்கு கற்றுத்தரப்படும். அதோ தெரிகிறது பார் ஒரு சிறு குன்று. அதில் சிறிய குகை ஒன்றிருக்கிறது. அதுதான் என் குருகுலம். அங்கே தான் மூன்று பெண் துறவிகளும் இருக்கிறார்கள். அவர்கள் தியான நிலையிலேதான் எப்போதும் இருப்பார்கள். நீ அவர்களிடம் சென்றாயானால் கண்விழியைத் திறந்துகூட உன்னைப்பார்க்க மாட்டார்கள். நீ என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறாய் என்று அவர்களே உணர்ந்து கொள்வார்கள். நாளை நீ காலையில் வந்ததும் அந்தக்குன்றுக்குச் செல்!”
“உங்களுடைய குருகுலம் என்கிறீர்கள்.. நீங்கள் ஏன் அங்கு செல்வதில்லை? ஒருவேளை காலை நேரத்தில் மட்டும்தான் அங்கே இருப்பீரோ யாகவா மயிலாரே?”
“நான் அடிக்கடி பொய் பேசுவேன். அதை உன்னைப்போன்ற பிராணிகள் காது கொடுத்துக்கேட்டால் உள்ளம் மகிழ்வேன். குருகுலமெல்லாம் எனக்கு கிடையாது. நான் எதேச்சையாய் அங்கு சென்ற போது மூன்று பெண்மயில் துறவிகளை சந்தித்தேன். மூன்று மந்திரங்களை மூன்று நாட்கள் அங்கேயே இருந்து கற்றுக்கொண்டேன்.”
“அப்படியானால் அவற்றை நீங்களே எனக்கு கற்றுத்தர முடியுமே யாகவா மயிலாரே!”
“முதல் மந்திரம் மட்டும் தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. மற்ற இரண்டும் மறந்துவிட்டது. நான் மற்றவர்களுக்கு கற்றுத்தர முடியாது என்று தான் அந்தத் துறவிகள் அப்போது சொன்னார்கள். நீ காலையில் வா! நான் உனக்காக காத்திருக்கிறேன். உன் ஆடுகள் பதினைந்தும் எங்கும் போய்விடாது. நீ குகைக்கு சென்று திரும்ப மாலையாகிடும் வரை நான் இங்கிருக்கிறேன்.” என்று யாகவா மயிலார் சொல்லி முடித்தார்.
அடுத்தநாள் சுந்தரன் எலி மேய்ச்சல் நிலத்திற்கு வந்தபொழுது யாகவா மயிலார் காலை வெய்யிலில் அழகாக ஆட்டமாடிக்கொண்டிருந்தார். இவனைக்கண்டதும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு வேப்பை மரத்தடிக்கு வந்தார்.
“நீ என் குருகுலத்தில் மந்திரம் கற்றுக்கொள்ள தயாராய் வந்திருக்கிறாயா?”
“நான் தயாராகத்தான் வந்திருக்கிறேன். ஆடுகளை நீங்கள் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி பொழுதுக்கும் ஆடுகளுக்கு உங்கள் ஆட்டத்தை ஆடிக்காண்பித்தீர்கள் என்றால் ஒரே நாளில் எல்லா ஆடுகளுக்கும் உணிகள் பிடித்து அவைகளால் எனக்கும் பிடித்து என்னால் என் மாமாவுக்கும், அத்தைக்கும் பிடித்து அவர்களால் நான் கட்டிக்கொள்ளப்போகும் பெண்ணுக்கும் பிடித்து ஏகப்பட்ட பிரச்சனை வந்துவிடுமே யாகவா மயிலாரே!”
“இல்லை அப்படியில்லை சுந்தரன் எலியாரே! எனக்குத் தெரிந்த மந்திரம் ஒன்றுதான் ஞாபகத்தில் இருக்கிறது என்று உம்மிடம் சொன்னேனே!. அது இந்தக்காட்டை விட்டு உமது ஆடுகள் எங்கும் வெளியே சென்றுவிட முடியாதபடிக்கு செய்துவிடும். நானே பெண்மயிலார்கள் இருக்கும் காட்டுக்குச் சென்றேனென்றால் அவர்கள் அனைவரும் அந்தக்காட்டை விட்டு வேறெங்கும் பறந்து வெளியில் சென்றுவிட முடியாதபடிக்கு மந்திரம் போட்டுவிடுவேன்! பின்னர் பொழுதுக்கும் ஆட்ட பாட்டம் தான் எனக்கு!”
“ஓ, அதனால் தான் அந்த ஒரு மந்திரம் மட்டும் உங்கள் ஞாபகத்தில் இருக்கிறது! சரி அந்த மந்திரத்தை சொல்லிவிட்டு வாருங்கள் என்னுடன். ஆடுகள் தான் வெளியே போக முடியாதபடிக்கு மந்திரம் போட்டுவிடுகிறீர்களே!”
“நானும் வர வேண்டுமா?”
“மறந்துபோன மந்திரங்களை நீங்கள் மீண்டும் கற்றுக்கொண்டு வரலாமே! போக குகை இருக்கும் தூரத்தைப்பாருங்கள். நான் இன்றைய பொழுதுக்குள் திரும்பி வர முடியுமா? ஆகவே நீங்கள்தான் என்னை உங்கள் முதுகில் சுமந்து பறந்து செல்ல வேண்டும்.”
“நீ எந்தக்குருகுலத்தில் கல்வி கற்றாய்? இவ்வளவு அறிவார்த்தமாய் பேசுகிறாயே!”
“ஐயோடா! முதலில் ஆடுகளுக்கு மந்திரம் சொல்லுங்கள்!”
“ஆடுகளுக்கல்ல சுந்தரன் எலியாரே.. இந்தக்காட்டுக்கு கட்டுப்போடுவது தான் மந்திரம். காடு மந்திரத்தால் கட்டுப்போடப்படும். மந்திரம் போட்டவர் மட்டுமே உள்ளேயும் வெளியேயும் போக வர முடியும். சுந்தரன் எலியாரே.. நீங்கள் முதலில் இந்தக்காட்டை விட்டு அந்த வேலிக்கும் அந்தப்புறமாய் சென்று நில்லுங்கள்! நான் மந்திரத்தை சொல்லிவிட்டு வருகிறேன்!” என்று யாகவா மயிலார் சொல்லவும் சுந்தரன் எலி காட்டிலிருந்து வெளியேறிச் சென்றான்.
இந்த விசயமெல்லாம் மாமாவுக்கோ, அத்தைக்கோ தெரியவந்தால் பெண்ணைக் கட்டித்தரமாட்டார்களே! என்ற பயமும் அவனிடத்தில் இருந்தது. இருந்தும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடன் தான் இருந்தான் சுந்தரன் எலி.
ஒருவழியாக மந்திரத்தை சொல்லிமுடித்த யாகவா மயிலார் காட்டைவிட்டு வெளியில் வந்துசேர்ந்தார். பின்பாக சுந்தரன் எலி மயிலாரின் முதுகில் ஏறி ஒட்டிக்கொள்ள, மயிலார் வானில் ‘க்கேவ்! க்கேவ்!’ என்று குரலிட்டுக்கொண்டே பறக்கத்துவங்கினார். ஐந்து நிமிடத்தில் இருவரும் குன்றில் வந்து குகைக்கருகாமையில் இறங்கினார்கள். குகையின் வாயிலானது கோழிமுட்டை வடிவில் பெரிதாக திறந்து கிடந்தது. இருவரும் அதனுள் நடந்து சென்றார்கள். உள்ளே செல்லச் செல்ல இருளாய் இருந்தது. வெளவால் எச்சங்களின் வாசம் உள்ளே வீசிற்று. சற்று தூரத்தில் சூரிய ஒளி வட்டவடிவமாக குகையினுள் வீசிற்று. அங்கே பாறைமீது மூன்று பெண் துறவி மயிலார்கள் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார்கள்.
“முட்டாளே! மீண்டும் வந்துவிட்டாயா?” என்று ஒரு பெண் துறவி மயில் கண் திறவாமலேயே யாகவா மயிலாரை கேட்டது. யாகவா மயிலார் திடீரென தன் சிறகுகளை விரித்து நாட்டியமாடத் துவங்கினார் குகையினுள். கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தது குகை. அந்த பெண் துறவி மயில் மீண்டும் யாகவா மயிலாரை முட்டாள் என்று சொல்லவேயில்லை. ’நல்ல ஆட்டகாரன்’ என்றே சொல்லிற்று கடைசியாய் ஆட்டம் நிறைவு பெற்றதும்.
குகையிலிருந்து வெளிவருகையில் சுந்தரன் எலி மூன்று மந்திரங்களையும் ஒரே நாளில் கற்றிருந்தது. அதை அடிக்கடி பயன்படுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று பெண் மயில் துறவிகள் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அப்போதுதான் மறக்காமல் எப்போதும் மனதில் இருக்குமெனவும் சொல்லியிருந்தார்கள்.
முதலாக சுந்தரன் எலி கற்றுக்கொண்டது ஒரு இடத்தை முழுதாக மந்திரத்தால் கட்டிப்போடுவது. அடுத்ததாக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பறந்து செல்வது. மூன்றாவதாக தன்னை வேறு உருவத்திற்கு மாற்றிக்கொள்வது. ஒரு பாம்பாகவோ, கீரியாகவோ, பூனையாகவோ மாறிக்கொள்ளலாம். அது அரைமணி நேரத்திற்கு மட்டும் தான். மீண்டும் சுய உருவுக்கு வந்துவிட்டால் அன்று மீண்டும் மாற முடியாது. மீண்டும் அடுத்த நாளில் தான்.
குகையை விட்டு வெளியே வந்ததும் யாகவா மயிலார் தன் உடலை குறுக்கிக்கொண்டு சுந்தரன் எலி ஏறிக்கொள்ள அமர்ந்தார். இரண்டாவதாக கற்றுக்கொண்ட பறக்கும் மந்திரத்தை உச்சரித்த சுந்தரன் எலி வானில் சொய்ங்கென தன் மேய்ச்சல் நிலம் நோக்கி பறக்க ஆரம்பித்தான். அவனால் நம்பவே முடியவில்லை. வானில் பறப்பது அவ்வளவு அழகாய் இருந்தது. துளசியை கட்டிக்கொண்டால் அவளை முதுகில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராய் பயணம் போகலாம். மயிலார் இப்போது தான் கற்று வந்த பறக்கும் மந்திரத்தை மறந்திருந்தார். இருந்தாலும் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல பறந்தபடி சுந்தரன் எலியின் பின்னால் வந்தார்.
தன் மேய்ச்சல் நிலம் அருகில் வந்தவன் நிதானமாய் தரையிறங்கினான். யாகவா மயிலார் போட்டிருந்த காட்டுக்கட்டை இவனும் கற்றிருந்ததால் அதை அவிழ்க்கும் மந்திரத்தை உச்சரித்தான். கட்டு விலகியது கண்டு மகிழ்ச்சியடைந்தான். ஆடுகள் சுந்தரன் எலியைக் கண்டுகொள்ளவே இல்லை. அவைகள் புற்களை மேய்ந்தபடி இருந்தன. பின்னாலேயே வந்த யாகவா மயிலாருக்கு நன்றி சொன்னான் சுந்தரன் எலி.
“உங்களிடம் மட்டும் நேற்று நான் பேச்சுக்கொடுக்காமல் இருந்திருந்தால் உங்கள் குருகுலத்தில் நான் இந்த வித்தைகளை கற்கமுடியாமலே போயிருக்கும் யாகவா மயிலாரே! உங்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.” என்றான்.
“தெரிந்த விசயத்தை இன்னொருவருக்குச் சொல்வதிலோ, சொல்லிக் கொடுப்பதிலோ எந்தத் தவறுகளும் இல்லை. நான் இப்போது புறப்படுகிறேன் சுந்தரன் எலியாரே! இன்னும் சிலகாலம் நான் இந்தப்பகுதியை விட்டு வேறு இடத்திற்கு செல்லலாமென முடிவு செய்திருந்தேன். அதன்படியே செய்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றுக் கிளம்பினார்.
மூன்று
அன்று மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆடுகள் பட்டிக்கு திரும்பிய மாலை நேரத்தில் மாயாண்டி மாமா வீட்டில் பெண்கள் கூட்டமிருந்தது. துளசி எலி வயதுக்கு வந்துவிட்டாளாம். இவன் ஆடுகளை பட்டியில் ஓட்டிவிட்டு தன் குடிசையில் நுழைந்து படுத்துக்கொண்டான். அவனுக்கு கனவு காண வேண்டும் போலிருந்தது. மாமா தான் சொல்லியிருக்கிறாரே.. துளசி எலி வயதுக்கு வந்ததும் கட்டித்தருவதாய்! அதற்காகத்தானே தன் ஒரு ஏக்கரா காட்டை எழுதி வாங்கினார்? இப்போது கூட அந்தக்காட்டை விற்றுத்தானே அதில் கிட்டிய பணத்தை வைத்து புதியவீடு கட்டியிருக்கிறார்!
எப்படியும் இந்த வாரத்திலேயே மாயாண்டி மாமா தனக்கு துளசி எலியை கட்டிக்கொடுத்துவிடுவார். நினைத்துப்பார்க்கவே அவ்வளவு சந்தோசமாய் இருந்தது. புதுவீட்டில் இரவு உணவு விருந்துக்கு ஏற்பாடு நடக்கும் போலிருந்தது. சாம்பார் வாசம் ஆட்டுப்புழுக்கைகள் வாசத்தையும் மீறி பட்டியினுள் அடித்தது. துளசி எலி தனக்குத்தான் என்கிறபோது சுந்தரன் எலிக்கு பசியே இல்லை. கனவு மேல கனவாக கண்டுகொண்டு குட்டிக்குட்டித்தூக்கம் போட்டபடி இருந்தான்.
நடுச்சாமம் இருக்கையில் தான் வயிறு பசித்தது. மாமன் குடிசைப்பக்கமாகவும், வீட்டுப்பக்கமாகவும் ஒரு சப்தமுமில்லை. எல்லோரும் போய்விட்டார்கள் போல விருந்து முடிந்து. ஏன் மாமன் வந்து இரவு உணவுக்குக்கூட அழைக்கவில்லை? ‘வாங்க மருமகனே.. வந்து சாப்டுட்டு போயி படுத்துக்கங்க!’ என்று சொல்லவே இல்லையே! அத்தையாவது வந்து கூப்பிட்டிருக்கலாம். எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்னை. விழா மும்மரத்தில் என்னைப்பற்றி அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். நேரமிருந்திருக்காது.
இப்போது பசிக்கிறதே என்ன செய்வது? இப்போது சோத்துக்குண்டானை எடுத்துப்போய் திண்ணையில் அமர்ந்தால் நன்றாகவா இருக்கும்? போக அவர்களெல்லாம் வீட்டில் நிம்மதியாக அல்லவா தூங்கிக்கொண்டிருப்பார்கள். மந்திரம் கற்றுத்தந்த பெண் மயில் துறவிகள் சோறு சாப்பிடுவதற்கு ஒன்று கற்றுக்கொடுத்திருந்தாலாவது இந்த நேரம் அந்த மந்திரத்தைச் சொல்லி வயிறு நிரம்ப சாப்பிட்டிருக்கலாம்! உருமாற்றமடைந்து நான் என்ன செய்யப்போகிறேன்? பறப்பது ஒன்று தான் நல்லவிசயம். ஆடுமேய்ப்பவனுக்கு காட்டுக்கட்டு போடுவது பயனுள்ள விசயம். சோற்றுக்கு?
சுந்தரன் எலி விடியும் வரை பசியோடே ஆட்டுப்பட்டிக் குடிசையில் உருண்டு கொண்டே கிடந்தான். விடிந்ததும் ஆட்டுப்புழுக்கைகளை கூட்டி எடுத்துப்போய் குப்பை மேட்டில் கொட்டிவிட்டு முன்புறமாக குடிசைப்பக்கமாகச் சென்றான். மாயாண்டி மாமா வள்ளி எலியிடம், துளசி எலியின் திருமண விசயம் பற்றி கார சாரமாய் பேசிக்கொண்டிருந்தார். வள்ளி எலியோ வீட்டினுள்ளிருந்து கொண்டே, ‘என் தம்பி பையனுக்குத்தான் கட்டிக்குடுப்பேன் நானு துளசியை! அவனுக்கு ரெண்டு ஏக்கரா காடு இருக்குது. படிப்பிருக்குது. கல்லுவீடு இருக்குது. உங்கக்கா பையனுக்கு வேற எடத்துல பாத்து கட்டிக்குடுக்கவேண்டீது தான? நானென்ன வேண்டாம்னா சொன்னேன்!’ என்று பேசும் குரல் கேட்டது. சுந்தரன் எலி இதைக்காதில் கேட்டதுமே முக வாட்டமடைந்தான். மாயாண்டி மாமன் பேச்சு அத்தையிடம் எடுபடாது என்று தெரிந்து கொண்டான்.
அன்று காலை உணவை சாப்பிட்டு விட்டு துளசி எலியின் முகம் எங்காவது தட்டுப்படுமா என்று தேடினான். எங்கும் துளசி எலியின் நடமாட்டமே இல்லை. வீட்டுனுள்ளேயே அவள் இருக்கலாம். சுந்தரன் எலி மாமன் வீட்டுக்குள் சாப்பிடக்கூட நுழைவதில்லையே! குடிசை வீட்டின் வெளித்திண்ணையில் தானே சோறு.
அத்தை தூக்குப்போசியில் எப்போதும் போல சாப்பாடு போட்டு அனுப்பியது. மாயாண்டி மாமா மீசை தொங்கிப்போய் குடிசைத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவருக்கு மருமகப்பிள்ளை சுந்தரன் எலியின் முகம் காணவே வெட்கமாய் இருந்தது. நமக்கு விதிச்சது அவ்வளவுதான் என சுந்தரன் எலி ஆடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலம் வந்து சேர்ந்துவிட்டான்.
அன்று மதியத்திற்கும் மேல திடீரென வானம் இருண்டு கொண்டு வந்தது. சுந்தரன் எலிக்கு மீண்டும் பயம் தோன்றியது. தன் குடிசையையும், அம்மா அப்பாவையும் நாசமாக்கிய அந்த மழையோ என்னவோ? இப்படித்தான் மழை பெய்யும் நாட்களிலெல்லாம் சுந்தரன் எலி பயந்து நடுங்குகிறான்.
இடிச்சத்தம் அவனை மிரட்டுகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் சலசலவென மழை பெரும் பெரும் துளியாய் பெய்ய ஆரம்பித்த சமயத்தில் சுந்தரன் எலி சாப்பிட்டு முடித்திருந்த காலி போசிக்குள் நுழைந்து அதன் மூடியை மேலே போட்டு அடைத்துக்கொண்டான்.
ஆடுகள் மரத்தடியை நம்பிவந்து நின்று, பெரும் மழையாய்ப் போனதால் அங்கேயே நனைய ஆரம்பித்துவிட்டன. அரைமணி நேரம் பெய்த மழை கொட்டித்தீர்ந்து ஓய்ந்து நின்ற சமயம் தூக்குப்போசிக்குள் இருந்த சுந்தரன் எலி அதன் மூடியை திறந்து கொண்டு வெளியே எட்டிப்பார்த்தான். தூறல் மழைகூட இல்லை. ஆடுகள் உடலை சிலுப்பிக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் சென்றன. போசியினுள்ளிருந்து வெளிவந்த சுந்தரன் எலி போசியின் மூடியை திருப்பிப்போட்டு அதன் மீது அமர்ந்து கொண்டான்.
அப்போது காட்டுவழியே முழுக்க நனைந்த நிலையில் உடல் நடுங்க முயல் ஒன்று நிதானமாக தடியொன்றை ஊன்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அந்த முயல் பெயர் தேவமுயல் சாமி! அதற்கு பல மந்திரங்கள் தெரியும் என்றாலும் தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தான் அவைகளை பயன்படுத்துவார். அவரின் குருகுலம் இங்கிருந்து ஆற்றைத்தாண்டி அக்கரையில் இருக்கிறது. அதுவெல்லாம் சுந்தரனுக்கு தெரியாது.
“என்ன முயலாரே.. மழை பலமா? அரை உழவு பெஞ்சிருக்குமா?” என்று சுந்தரன் எலி வினவினான். குளிரில் நடுக்கமுடன் வந்துகொண்டிருந்த தேவமுயலாருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்படி இது நிகழ்ந்தது? வாய்ப்பேயில்லையே!
“என் பெயர் தேவமுயல். நான் ஆற்றின் அக்கரையில் குடிலில் வசிக்கிறேன். ஒரு மூலிகைச் செடியைத் தேடி நான் காலையிலிருந்து காடு காடாய் அலைகிறேன். அது நிச்சயம் இன்றைய பொழுதுக்குள் எனக்கு கிடைத்துவிடும். வரும் வழியில் தான் மழையில் நன்றாக மாட்டிக்கொண்டேன்!” என்றார்.
“என் பெயர் சுந்தரன் எலி தேவமுயலார் அவர்களே!”
“ஒரு விசயம் உம்மிடம் கேட்கலாமா சுந்தரன் எலியாரே!”
“கேளுங்கள். ஆடுகள் அதுபாட்டுக்கு மேய்கின்றன. உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமிருக்கிறது தேவமுயலாரே!”
“இந்தப்பெரும் மழையில் துளிகூட நனையாமல் எப்போதும் போல மழையில் நனையாதபடிக்கு இருக்கிறீரே அது எப்படி என்று தான் எனக்கு விளங்கவில்லை!”
“ஓ! அதுவா? எனக்கு மழையில் நனையாமல் இருக்க மந்திரம் தெரியும் தேவமுயலாரே! மழை என்மீது மட்டும் ஒரு சொட்டுக்கூட விழாது!”
“அதை எனக்கும் கற்றுத்தர இயலுமா தங்களால்? எனக்கும் சில மந்திரங்கள் தெரியும். ஆனால் நான் அவற்றை நல்வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன்!”
“அதுவொன்றும் பிரமாதமான விசயமில்லை தேவமுயலாரே! உங்களுக்கு கற்றுத்தருவதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் பதிலுக்கு நீங்கள் எனக்கு என்ன கற்றுத்தருவீர்கள்? இந்த உலகில் சும்மா எதுவுமே நமக்குக் கிடைப்பதில்லையே!”
“வாஸ்த்தவம் தான். இந்த உலகில் சும்மா என்று எதுவுமேயில்லை!”
“சரி முதலாக நீங்கள் எனக்கு உங்கள் மந்திரத்தை எனக்குக் கற்றுக்கொடுங்கள். பிறகு மழையில் நனையாத மந்திரத்தை நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன்!” என்றான் சுந்தரன் எலி. பின்பாக தேவமுயலார் ‘நில்’ என்று சொன்னதும் இயக்கம் நிற்கும்படியான மந்திரத்தையும் ‘நடக்கட்டும்!’ என்று சொன்னால் இயல்புக்கு இயக்கம் வருவதற்குமான மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். சுந்தரன் எலி மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நோக்கி அந்த மந்திரத்தை செலுத்தினான். ஆடுகள் அடுத்த நிமிடமே மேய்வதை நிறுத்திவிட்டு அப்படியே பொம்மைகள் போல நின்றன. சுந்தரன் எலி அதைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தான். அடுத்து, ‘நடக்கட்டும்!’ என்று சொல்லவும் ஆடுகள் பழையபடி இயல்பாய் மேயத்துவங்கின.
“உங்கள் மந்திரம் நன்றாக வேலை செய்கிறது தேவமுயலாரே! இப்போது நான் உங்களுக்கு என் மந்திரத்தை சொல்கிறேன். அதாவது மழை வருகிறது என்று தெரிந்ததுமே இதோ இந்த சோத்துப்போசி இருக்கிறதல்லவா.. அதனுள் நுழைந்து நான் மூடியை எடுத்து மூடிக்கொள்வேன். மழை நின்றதும் மூடியை தூக்கிவிட்டு வெளியில் வந்துவிடுவேன்! அவ்வளவுதான்!” என்றான்.
“அவ்வளவு தானா? இது மிக எளிமையான மந்திரமாய் இருக்கிறது. இருந்தும் இந்த மந்திரம் எனக்குப்பிடித்திருக்கிறது. நான் சென்று வருகிறேன் சுந்தரன் எலியாரே!” என்று சொன்ன தேவமுயலார் வணக்கம் ஒன்றை வைத்துவிட்டு தன் போக்கில் உடல்நடுக்கத்தோடே சென்றார்.
அன்று மாலை மாயாண்டி மாமன் வீடு வந்து சேர்ந்த ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு பார்க்கையில் மாமன் வீட்டில் முந்தின நாள் போன்றே பெண்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. புத்தூர் மண்டபத்திற்கு கிளம்பிப்போகும் அவசரத்தில் இருந்தார்கள் பக்கத்து வீட்டு ஜனங்கள் எல்லோரும். விடிகாலையில் சுபமூகூர்த்தத்தில் துளசி எலிக்கும், அத்தையின் தம்பி பையன் பழனி எலிக்கும் திருமணமாம். மாயாண்டி மாமனை அங்கே காணவில்லை. சுந்தரன் எலியைக்கண்டு கொள்ள அங்கே யாருமில்லை. அவரவர்கள் திருமண வேகத்தில் இருந்தார்கள்.
நேற்று வயதுக்கு வந்த பெண்ணுக்கு உடனடியாக மறுநாளே மாப்பிள்ளை முடிவு செய்து மூன்றாம் நாள் திருமணமா? அப்படி என்ன அவசரம் அத்தைக்கு? சுந்தரன் எலிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இருள் சூழ்ந்த நேரத்தில் எல்லோரும் கிளம்பி மண்டபத்திற்கு போய்விட்டார்கள்.
வீட்டின் கதவும் பூட்டப்பட்டுவிட்டது. மினுக்கட்டாம் பூச்சிகள் போல கலர் பல்புகள் மின்னிக்கொண்டிருந்தன. வாசலில் வாழைமரம் கட்டப்பட்டிருந்தது. இவனுக்கு திருமணத்திற்கு அழைப்புச் சொல்வார் கூட யாருமில்லை. மாமாவாச்சும் ‘என் பொண்ணு துளசி எலி கல்யாணத்துக்கு வந்துருங்க மருமகனே! இப்பிடியெல்லாம் நடக்க உன் அத்தைகாரிதான் காரணம். என்னை மன்னிச்சுடுங்க மருமகனே!’ என்று ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம். துளசி எலிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்றுகூட சுந்தரன் எலிக்குத் தெரியவில்லை.
மனசு சோகமாய் இருக்கவே பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை வெறிக்கப் பார்த்துவிட்டு பட்டிக்கே வந்து தன் சிறு குடிசையில் படுத்தான் சுந்தரன் எலி. அவனுக்கு இனி துளசி எலி பற்றியான கனவுகள் வருவதற்கு வாய்ப்பில்லை. திருமண மண்டபத்திற்குப் போகலாமா? என்றொரு யோசனையும் உதித்தது அவனுக்கு. அங்கு சென்றாலும் இவனை மதித்து ஒரு வார்த்தை பேச ஆளில்லை. ஆனால் அத்தையிடம் ஒரு வார்த்தை கேட்கலாம். ஏன் அத்தை இப்படி செஞ்சீங்க? என்று. அத்தை எதாவது பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.
நான்கு
அப்படித்தான் ஆயிற்று! முகூர்த்த நேரத்திற்கும் இரண்டுமணி நேரம் முன்பாக சுந்தரன் எலி இருளில் தனியாகவே மண்டபம் நோக்கிச் சென்றான். மண்டபம் ஊருக்கும் நடுமையத்தில் இருந்தது. யாரும் தூங்கினது மாதிரி தெரியவில்லை. மண்டபத்து வாயிலில் வரவேற்புக்கு டேபிள் போடப்பட்டிருந்தது. அதில் திராட்சை தட்டு வைக்கப்பட்டிருந்தது. சுந்தரன் எலி மண்டபத்தினுள் நுழைந்து அத்தையைத் தேடினான். அத்தை புத்தாடையில் மகிழ்ச்சியில் நின்று மாப்பிள்ளை உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள். அத்தை இவனைப்பார்த்ததுமே முறைத்துக்கொண்டு தேடி வந்தது.
“வீட்டுக்காவலுக்கு யாருமில்லே அங்கே.. பட்டியில இருபது ஆடுங்களுக்கு ஒரு பாதுகாப்பும் இல்ல. நீங்கபாட்டுக்கு இப்பிடி மண்டபத்துக்கு வந்துட்டீங்களே.. அங்க எதுனா ஒன்னுன்னா நீங்க தான் பொறுப்பு பார்த்துக்கங்க!” என்று வள்ளி எலி அத்தை இவனிடம் கோபித்துக்கொண்டார்.
“ஏனுங் அத்தை, எனக்கு என்ன கொறச்சல்? எனக்குத்தானே துளசி எலியை கட்டித்தர்றதா மாமஞ்சொல்லி கூட்டிட்டு வந்தாரு. என்னோட ஒரு ஏக்கரா காட்டையும் எழுதி வாங்கிட்டாரு. நான் தெனமும் நம்ம குடும்பத்துக்காகத் தானே உழைக்கிறேன். அதுல என்ன குறையை கண்டீங்க அத்தை?” என்று வினவினான்.
“உங்களுக்கு கல்வி அறிவு இல்ல. கையில ஒன்னுமில்ல. அறிவில்லாத ஒருத்தருக்கு எப்பிடி ஒரு தாயி தன்னோட பொண்ணை கட்டிக்குடுப்பா? வெட்டி நாயம் பேசிட்டு இருக்காம சீக்கிரம் போய் ஆடுங்களுக்கு பாதுகாப்பா இருங்க! போங்க. முகூர்த்தத்துக்கு வேற நேரமாயிட்டிருக்கு! எனக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு!” என்று வள்ளி அத்தை எலி இவனிடம் வேறு மறுபதில் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றது.
கொஞ்சம் நேரத்தில் மண்டபத்தில் மத்தளச்சத்தம் கேட்கத்துவங்கிற்று. ஐயர் எலி மணமேடையில் அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை பழனி எலியை அவரது நெருங்கிய உறவினர்கள் கூட்டி வந்து மேடையில் இருந்த நாற்காலியில் அமர வைத்தனர். பழனி எலி பார்க்க புதுமாப்பிள்ளை போலவேயிருந்தான். வயிறு பெருத்திருந்தது போலிருந்தது. இருந்தும் சுந்தரன் எலியின் மீசையை விட அழகாகவே இருந்தது. சுந்தரன் எலி அத்தையின் கண்பார்வைக்குத்தப்பி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு பதுங்கியிருந்தான் மண்டபத்தில். மாயாண்டி மாமா வரவேற்பில் நின்றிருந்தார்.
மணமகள் துளசி எலியை வள்ளி அத்தையும் சில பக்கத்துவிட்டுப் பெண்களும் மேடைக்கு அழைத்துச் சென்று அமர மாப்பிள்ளையின் அருகிலிருந்த நாற்காலியில் அமர வைத்தனர். ஐயர் எலி மந்திரம் ஓதத்துவங்கினார்.
சுந்தரன் எலி தன் மந்திரத்தை மேடையில் இருந்த அனைவருக்குமே ஏவினான். ’நில்!’ மேடையில் நின்றிருந்த அனைவருமே அப்படியே பொம்மைகள் போல நின்றனர். அத்தை மேடையிலிருந்து எங்கோ கைநீட்டியபடி நின்றது.
மாப்பிள்ளை பழனி எலி வெட்கமாய் துளசி எலியை பார்த்தவாறிருந்தான். ஐயர் எலியின் கை நீட்டியபடியிருக்க, புகையானது மேலே கிளம்பிய நிலையில் அப்படியே நின்றது. சுந்தரன் எலி நிம்மதியாய் காலியாயிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.
மண்டபமே சிறிது நேரத்தில் பரபரப்பான சூழலுக்குள் சிக்கிக்கொண்டது. திருமணத்திற்கு வந்திருந்த வசிஷ்ட்ட சாமியார் எலி இங்கு என்னதான் நடந்தது? என்று குழம்பிப்போனார். அவர் முன்பாகத்தான் மண்டபத்திற்கு வந்திருந்த முழுச்சனமும் இப்போது நின்றிருந்தது. வசிஷ்ட்ட சாமியார் எலிக்கு மந்திரங்கள் பல தெரியும். அவர் தான் ஏதோ இப்படி செய்துவிட்டாரோ? என்று சனம் அவரிடம் மன்னித்துக்கொள்ளச் சொல்லி மன்றாடிக் கேட்டுக்கொண்டிருந்தது.
மாயாண்டி மாமா சாமியார் எலியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார். தன் ஒரே செல்ல மகளின் திருமணம் தடையின்றி நடக்க உதவுமாறு வேண்டினார். சுந்தரன் எலிக்கு மாமாவை அப்படிப்பார்க்க கவலையாகத்தான் இருந்தது. அதையெல்லாம் பார்த்தால் துளசி எலி கைநழுவிப்போய்விடுவாளே!
வசிஷ்ட்ட சாமியார் தனக்கும் மேடையில் நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். போக நல்ல காரியத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் செல்லத்தான் வந்ததாய் சொன்னார். ஆனால் இதை சரியாக்கும் மந்திரம் எனக்கும் தெரியாது என்றும், ஆற்றின் மறுகரையில் வசிக்கும் எனது குருநாதரான தேவமுயல் சாமியார் ஒருவரால் மட்டுமே முடியுமென்றும் தகவல் சொன்னார்.
இதனைக்கேட்ட மாயாண்டி மாமா எலி உடனே, ’அவரைப்போய் பார்த்து இப்படியான தகவலைச் சொல்லி மண்டபத்திற்கு அவரை கூட்டி வருவோம் வாருங்கள்!’ என்று வசிஷ்ட்ட சாமியாரிடம் சொன்னார். அதற்கு சம்மதம் தெரிவித்த வசிஷ்ட்ட சாமியார் எலியும் உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து மண்டப வாயிலை நோக்கி சென்றார். அவர் பின்னாலேயே மாயாண்டி மாமாவும் சென்றார்.
வசிஷ்ட்ட சாமியாரும், மாயாண்டி மாமாவும் மண்டபத்தை விட்டு வெளியேறிய பிறகு சுந்தரன் எலி தானும் கிளம்பி மண்டபவாயிலுக்கு வந்தான். வாயிலுக்கு வந்தவன் மண்டபத்திலிருந்து யாரும் வெளியேறிப்போகா வண்ணமாக மொத்தமாய் கட்டு மந்திரம் சொல்லி முடித்தான். இதனால் திருமணத்தைக் காண வருகை தந்த ஜனம் மண்டபத்தின் வாயிலிலேயே உள்ளே செல்ல முடியாமல் நிற்க ஆரம்பித்தது.
வசிஷ்ட்ட சாமியாரும், மாயாண்டி மாமாவும் ஆற்றங்கரை நோக்கி நடையிட்டனர். இருள் இன்னும் விலகாத நிலையில் வசிஷ்ட்ட சாமியார் எலிக்கு அவசரமாய் டூ பாத்ரூம் வந்துவிடவே, மாயாண்டி எலியாரிடம் இப்படி என்று சொல்லிக்கொண்டு இருளில் அமர்ந்தார்.
சுந்தரன் எலி குகையில் பெண் துறவி மயிலார்களிடம் கற்றிருந்த வானில் பறக்கும் மந்திரத்தைப் பயன்படுத்தி மாமாவையும் வசிஷ்ட்ட சாமியாரையும் பிந்தொடர்ந்து வானில் நிதானமாக பறக்க ஆரம்பித்தான்.
வசிஷ்ட்ட சாமியார் உடல் உபாதையை முடித்துக்கொண்டு இரண்டாவது நிமிடத்தில் அருகில் கல் ஏதாவது கிட்டுமா என இருளில் தேட அங்கே ஒன்றுமில்லாமல் போகவே மாயாண்டியை கூப்பிட்டார். மாயாண்டி எலி இவர் வரட்டுமென பாதையில் தான் நின்றிருந்தார்.
’எதாவது கல்லு கிடைச்சா தூக்கிப்போடேன் மாயாண்டி.. ஆத்தங்கரை வழியா போறப்ப சுத்தம் பண்ணிக்கிறேன்!’ என்றார். மாயாண்டி மாமா எலி கீழே குனிந்து கைக்கு சிக்கிய குட்டியாட்டுக் கொம்பை எடுத்து அவருக்கு அருகாமையில் வீசினார்.
அவர் அதையெடுத்து துடைக்கப்பயன்படுத்துகையில் அவருக்கும் மேலே வானில் பறந்தபடியிருந்தசுந்தரன் எலி ‘நில்’ என்று மந்திரம் சொல்லிவிட்டான். குட்டியாட்டின் கொம்பானது அப்படியே சாமியாரின் பின்பகுதியில் ஒட்டிக்கொண்டது. என்ன இழுத்தும் வருவேனா? என்றது.
வசிஷ்ட்ட சாமியார் தன் வேட்டியை அப்படியே இழுத்து விட்டுக்கொண்டு காலை அகட்டி அகட்டி நடந்து வந்தார். சுந்தரன் எலி ஒன்றும் அறியாதவனாக அவருக்கும் நேர் மேலே பறந்தபடி வந்தான். மாயாண்டி மாமா எலியும், வசிஷ்ட்ட சாமியார் எலியும் ஆற்றில் தண்ணீர் செல்வதால் எப்படி இதைக் கடப்பது? அக்கரை சென்று தேவமுயல் சாமியாரை சந்திப்பது எனத்தெரியாமல் நின்றார்கள்.
ஆனால் மேலே பறந்தபடியிருந்த சுந்தரன் எலி, ‘நில்’ என்று சொல்லியதும் ஆற்றில் தண்ணீர் ஓட்டம் நின்றுபோனது.
மாயாண்டி மாமாவுக்கு இதெல்லாம் எப்படி நடக்கிறது? என்ற குழப்பம் இருந்தது. அவர் வசிஷ்ட்ட சாமியார் எலியிடம் விசாரித்தார். அவரோ தேவமுயல் சாமியாருக்கு ஞானக்கண் இருப்பதாகவும், அவரே இப்படி செய்திருப்பார் என்றும் கூறினார். இவர்கள் ஆற்றைகடந்து போய் சாமியாரின் குடிலை அடைந்தார்கள்.
சாமியார் இவர்களுக்கு அமர நாற்காலிகள் இரண்டைக்கொண்டு வந்து வாயிலில் போட்டார். அவர் நிஜமாகவே தன் ஞானக்கண்ணால் என்ன விசயத்திற்காக இவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருந்தார்.
வசிஷ்ட்ட சாமியார் எலி நாற்காலியில் அமரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தார். ’ஒரு கயிற்றுக்கட்டில் இருந்தால் போதுமானது தேவமுயல் சாமியே!’ என்றார். தேவமுயல் சாமியார் அவருக்கு கயிற்றுக்கட்டிலை கொண்டு வந்து கிடத்தினார். ஆட்டுக்கொம்பை நேம்பாக கயிற்றின் துளைக்குள் விட்டு அமைதியாக அமர்ந்தார் வசிஷ்ட்ட சாமியார்.
அப்போது தேவமுயல் சாமியார் வளர்த்தும் வளர்ப்பு நாய் மோப்பம் பிடித்துக்கொண்டே வந்து கட்டிலின் அடியில் நுழைந்து ஆட்டுக்கொம்பை இழுக்க ஆரம்பித்தது. வசிஷ்ட்ட சாமியார் மேலிழுக்க, நாய் கீழிழுக்க என்று நடந்தேறியது அங்கே! ‘நடக்கட்டும்’ என்று சுந்தரன் எலி சொல்லவும் நாய் கொம்பை இழுத்துக்கொண்டு ஓடிப்போனது. வசிஷ்ட்ட சாமியார் அதன்பின்னாக நிம்மதியாய் கட்டிலில் அமர்ந்தார்.
தேவமுயல் சாமியாரிடம் மாயாண்டி எலியார் எல்லா விசயங்களையும் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் அவர் வாயிலாக அறிந்துகொள்ள வேண்டுமெனத்தான் தேவமுயல் சாமியார் நினைத்தார். இறுதியாக, தன் பெண்ணின் திருமணம் எந்தவித குழப்பமும் இல்லாமல் நடைபெற வேண்டும், என்று சொல்லி முடித்து கும்பிட்டார் மாயாண்டி எலியார்.
“மாயாண்டி எலியாரே, நீங்கள் எங்காவது வாக்குத்தவறி நடந்திருக்கிறீர்களா?”
“அப்படியொன்றும் எனக்கு ஞாபகத்தில் இல்லை சுவாமி!” என்றார் மாயாண்டி எலியார்.
“வைத்தியரிடமும், சாமியார்களிடமும் நீங்கள் உண்மையை மறைத்துப் பேசவே முடியாது என்று தெரியும் தானே! உங்கள் அக்காவின் பையன் சுந்தரன் எலியாரிடம் நீங்கள் கொடுத்த வாக்கு என்னவாயிற்று? அவரின் சொத்தை விற்று அதை உங்கள் வீடு கட்டும் பணிக்கு பயன்படுத்தியிருக்கிறீர்கள். கொடுத்த வாக்கை மறந்து வேறிடத்தில் பெண்ணை கட்டிக்கொடுக்கிறீர்கள். இதுவெல்லாம் சரியா மாயாண்டி எலியாரே?”
“ஆம் சுவாமி! என்னிடமே எல்லாத்தவறுகளும் இருக்கின்றன. ஆனால் இது என் மனைவி வள்ளி எலியின் ஏற்பாடு. அதை தட்டிமறுக்க என்னாலும் முடியாமல் போயிற்று!”
’’உங்கள் அக்காவின் பையன் இப்போது கூட இங்கே தான் இருக்கிறான். நீங்கள் பேசும் வார்த்தைகளை கேட்டுக்கொண்டும் இருக்கிறான். வார்த்தை தவறியதால் தான் இத்தனை குழப்பங்களையும் உங்களின் அக்கா பையன் மண்டபத்தில் செய்திருக்கிறான். அக்கா பையன் சுந்தரன் எலிக்கே உங்கள் மகளை மணம் செய்து வைத்தால் தான் எல்லாம் இயல்புக்கு மாறும். இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது’ என முடித்துக்கொண்டார் தேவமுயல் சாமியார்.
அப்படியே செய்வதாகச்சொல்லி மாயாண்டி மாமா தேவமுயல் சாமியாரிடம் விடைபெற்று மண்டபம் திரும்பி வந்தார். தனக்கே இனி துளசி எலி என்ற சந்தோசத்தில் வானில் பறந்தபடி வந்தான் சுந்தரன் எலி.
மண்டபம் வந்து சேருகையில் ஜனங்கள் மண்டபத்தினுள் உள்ளே செல்ல வழியில்லாமல் கூட்டமாய் நிற்பதை மாயாண்டி எலியாரும், வசிஷ்ட்ட எலியாரும் கண்டனர். இது என்ன புது தொந்தரவு? என்றே மாயாண்டி எலியார் நினைத்தார். அந்தசமயத்தில் வானில் பறந்தபடி வந்திறங்கிய சுந்தரன் எலி மண்டபத்திற்கு தான் போட்டிருந்த கட்டை விலகிச் செல்ல மந்திரம் சொன்னான்.
கட்டி விலகியதும் மண்டபத்தினுள் எல்லோரும் நுழைந்தனர். மாயாண்டி மாமா தனக்கென வைத்திருந்த மற்றொரு செட் பட்டு வேட்டி சட்டையை மணமகன் அறையில் வைத்து மருமகன் சுந்தரத்திடம் கொடுத்தார். சுந்தரன் அதை அணிந்து கொண்டு மணமேடை நோக்கிச் சென்றான்.
‘நடக்கட்டும்’ என்று அவன் சொல்லவும் மேடையில் இதுவரை பொம்மைகளாய் நின்றிருந்த அனைவரும் திடீரென தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல விழித்தார்கள். வசிஷ்ட்ட சாமியார் எலி மேடையில் இருந்தவர்களுக்கு நடந்து முடிந்த விசய்ங்கள் பற்ரி விளக்கம் சொன்னார். துளசி முகத்தில் மகிழ்ச்சியை அப்போது தான் சுந்தரன் எலியும், மாயாண்டியும் கண்டார்கள்.
துளசி எலிக்கு சுந்தரன் எலி மேடையில் தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டான். அதன்பின்பாக மகிழ்வாக அவர்கள் பலகாலம் குழந்தைச்செல்வங்கள் பெற்று வாழ்ந்தார்கள்.
000
அருமையான, சிறப்பான கதை அண்ணா.