–பாவெல் பாஷோவ்
கொகவான்யா என்ற கிழவர் எங்கள் கிராமத்தில் வசித்தார். அவருக்குச் சொந்தக் குடும்பம் என்று எவருமில்லை. ஆகவே யாரேனும் ஓர் அநாதையைத் தத்தெடுத்து தன் வீட்டில் வளர்க்க நினைத்தார்.
யாரேனும் அது போலத் தெரியுமா என்று அயலவர்களை அவர் வினவியபோது சொன்னார்கள்: “கிளின்கா என்னும் இடத்தில் கிரிகோரியுடைய குழந்தைகள் அநாதைகளாகி அதிக காலம் ஆகவில்லை. கண்காணி மூத்த சிறுமிகளைப் பண்ணையைச் சேர்ந்த தையல் பகுதிக்கு அனுப்பினான். ஆனால் ஆறு வயதுச் சிறுமியை யாருமே வேண்டவில்லை. ஆகவே அவளை நீங்கள் குழந்தையாக எடுத்துக் கொள்ளலாம்.”
அதற்கு கொகவான்யா சொன்னார்: “சிறுமி என்றால் எனக்கு வசதிக் குறைவாக இருக்கும். பையன் என்றால் பரவாயில்லை. எனது தொழிலை அவனுக்குக் கற்றுக்கொடுப்பேன். பெரியவனாகின்ற போது எனக்கு உதவி செய்வான். ஆனால் சிறுமியை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? அவளுக்கு என்ன கற்றுக்கொடுக்க முடியும்?”
பிறகு அவர் அது பற்றி திரும்பவும் எண்ணிப் பார்த்தார். “கிரிகோரியையும் அவனது மனைவியையும் எனக்குத் தெரியும்” என்றார். “அவர்கள் ஆர்வமுள்ள தொழிலாளர்கள், மகிழ்ச்சியான ஆட்கள். அவர்களைப் போலவே சிறுமி இருந்தால் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும். அவளை அழைத்துக்கொள்வேன். ஒருவேளை அவள் வராமல் இருப்பாளோ?’
“உம், அவளது வாழ்க்கை அவ்வளவு மோசமாக இருக்கிறது” என்று அண்டை அயலவர்கள் அவரிடம் சொன்னார்கள். “கிரிகோரியினுடைய வீட்டை யாரோ ஏழைக்குக் கொடுத்து, அந்தக் குழந்தை பெரியவளாகின்ற வரை பார்த்துக்கொள்ளுமாறு கண்காணி விட்டு விட்டான். ஆனால் அவனுக்கே சொந்தமாகப் பன்னிரண்டு பேர் உள்ளனர். அவர்களது வயிற்றுக்கே போதுமானது இல்லை. ஆகவே அவன் மனைவியோ அநாதைச் சிறுமியைத் தொந்தரவு செய்கிறாள், ஒவ்வொரு ரொட்டித் துண்டுக்கும் ஏசுகிறாள். அவள் சிறுமி தான், ஆனால் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள். அதற்காக அவள் வருந்துகிறாள். அவள் அதை விட்டு வெளியேறாது எப்படி இருப்பாள்? அவளை இணங்கச் செய்யுங்கள், உங்களிடத்துக்கு நிச்சயமாக வருவாள்.”
“ஆமாம், அது உண்மைதான்” என்றார் கொகவான்யா. “நான் அவளை இணங்கச் செய்வேன்.”
அடுத்த விடுமுறை நாளில் அந்த அநாதைச் சிறுமி வசித்த இடத்திற்குச் சென்றார். பெரியவர்களாலும் சிறுவர்களாலும் அந்த வீடு நிரம்பி வழிவதைக் கண்டார்.
சிறுமி ஒருத்தி அடுப்பருகே அமர்ந்திருந்தாள். ஒரு பழுப்பு நிறப் பூனை அவள் அருகே இருந்தது. சிறுமியும் சிறியவளாக இருந்தாள், பூனையும் சிறியதாக, மிகவும் மெலிந்து இருந்தது, சேறு படிந்தும் காணப்பட்டது. அதை யாரேனும் வீட்டிற்குள் நுழையவிட்டால் மிகவும் அதிசயந்தான். சிறுமி அதைத் தடவிக்கொடுக்க, அது எழுப்பிய ‘பர்’ என்ற ஓசை குடிசை முழுக்கக் கேட்டது. கொகவான்யா அந்தச் சிறுமியைப் பார்த்து, ‘அது கிரிகோரியினுடைய பரிசா?” என்று கேட்டார்.
“எனக்கே அவள் சுமையாக இருக்கும் போது” என்றாள் வீட்டுக்காரி, “அழுக்குப் பிடித்த அந்தப் பிராணியையும் வீட்டுக்குள் கொண்டு வருகிறாள். எங்களால் அதைத் துரத்த முடியவில்லை. அது எங்களது எல்லாக் குழந்தைகளையும் பிறாண்டுகிறது. மேலும் அதற்கு உணவளிக்க வேண்டியிருக்கிறது!”
“உங்கள் குழந்தைகள் கொஞ்சுவது இல்லை, பிரியமாக இருக்கலாமே” என்றார் கொகவான்யா. “பாருங்க, அவளுடைய கைகளில் இருந்து பூனை உறுமுகிறது.” பிறகு அவர் சிறுமியைப் பார்த்து, “சரி, தர்யோன்கா, என்னுடன் வந்து வசிப்பது பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
சிறுமி ஆச்சரியப்பட்டாள்.
“தாத்தா, என் பெயர் தர்யோன்கா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவள் கேட்டாள். “தானே தெரிந்துவிட்டது” என்றார். “இது பற்றி நான் ஒன்றும் நினைக்கவில்லை. எப்படியோ தெரிந்து கொண்டேன்.”
“ஆனால் நீங்கள் யார்?” என்று சிறுமி கேட்டாள்.
(தர்யோன்கா – பரிசு எனப் பொருள்படும். மொ-ர்).
‘நான் ஒருவகையில் வேடுவன்” என்றார் கொகவான்யா. ‘கோடைக் காலத்தில் தங்கத்திற்காக மண் அரிப்பேன், குளிர்காலத்தில் வெள்ளாட்டைத் தேடிக் காட்டிற்குச் செல்வேன். ஆனால் அதை நான் பார்த்ததே இல்லை.”
“பார்த்தால் அதைச் சுடுவீர்களா?”
“மாட்டேன்” என்றார் கொகவான்யா. “சாதாரண வெள்ளாடுகளைத் தான் சுடுவேன், ஆனால் அந்த ஒன்றைச் சுட மாட்டேன். அதனுடைய வலது முன்னங் காலை எங்கே மிதிக்கிறது என்பதைப் பார்க்க விரும்புகிறேன்.”
“எதற்காக?”
“வந்து என்னுடன் வசி. அதைப் பற்றி எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்றார் கொகவான்யா.
வெள்ளாட்டைப் பற்றிக் கேட்க சிறுமி மிகவும் விரும்பினாள், அவர் உற்சாகமும், அன்பும் கொண்ட கிழவர் என்பதைக் கண்டாள். ஆகவே, “நான் வருகிறேன். ஆனால் எனது பூனையையும் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பெயர் முறுமுறுப்பாள். அது எவ்வளவு நல்லது பாருங்கள்” என்று அவள் சொன்னாள்.
“உண்மைதான்” என்றார் கொகவான்யா. “இது போலப் பாடக்கூடிய பூனையை முட்டாள் மட்டுமே எடுக்காது செல்வான். ஓர் இசைக் கருவி போல அது நமது வீட்டில் இருக்கட்டும்.”
வீட்டுக்காரி அவர்களுடைய பேச்சைக் கேட்டாள்.
அநாதைச் சிறுமி தன்னை விட்டுப் போகிறாள் என்பதை அறிய மிகுந்த அளவு மகிழ்ச்சி அடைந்தாள். தர்யோன்காவினுடைய பொருள்களை அவசரமாக ஒன்று சேர்க்கத் தொடங்கினாள். அந்தக் கிழவனுக்கு மறு சிந்தனை ஏற்பட்டு விடுமோ என்று பயந்தாள்.
இதெல்லாம் பூனைக்குத் தெரியும் என்பது போலக் காணப்பட்டது. அவர்களது கால்களுக்கு நேராகத் தேய்த்துக்கொண்டும் முறுமுறுத்துக் கொண்டும் இருந்தது: “ச-ரி! நினைப்பது ச-ரி!’
ஆகவே கொகவான்யா அநாதைச் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரோ உயரமாகவும் தாடி வைத்தும் இருந்தார், அவளோ சப்பை மூக்குக் கொண்ட சின்னஞ்சிறு சிறுமி. நெடுகிலும் பூனையை இழுத்துக்கொண்டே அவர்கள் தெருவில் சென்றார்கள்.
இவ்வாறுதான் கொகவான்யா கிழவர், அநாதைச் சிறுமி தர்யோன்கா, பூனை முறுமுறுப்பாள் ஆகிய மூவருமாக ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். நாள்கள் சென்றன. அவர்கள் பணக்காரர்கள் ஆகவில்லை, ஆனால் அவர்களிடத்தில் போதுமானது இருந்தது. ஒவ்வொருவருக்கும் வேலை இருந்தது.
காலையில் கிழவர் வேலைக்குச் சென்றார். தர்யோன்கா வீட்டைப் பெருக்கி, சூப்பும் கூழும் தயாரித்தாள். பூனை முறுமுறுப்பாளோ சுண்டெலிகளை வேட்டையாடியது. மாலையில் அவர்கள் எல்லாரும் வீட்டில் ஒன்றுகூடி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
கிழவர் கதைகள் சொல்வதில் வல்லவர். அவற்றைக் கேட்க தர்யோன்கா விரும்பினாள். பூனை முறுமுறுப்பாளோ படுத்துக் கொண்டு உறுமும்: “சரி! சொன்னது சரி!”
ஆனால் ஒவ்வொரு கதைக்குப் பிறகும் தர்யோன்கா கிழவரிடம் நினைவூட்டுவாள்; “இப்போது வெள்ளாட்டைப் பற்றிச் சொல்லுங்கள், தாத்தா. அது எப்படி இருக்கிறது?”
ஆரம்பத்தில் கிழவர் அவளைத் தவிர்ப்பதற்கு முயன்றார், பிறகு அவளிடம் அது பற்றிச் சொன்னார்:
“அது மிகவும் தனிமாதிரி வெள்ளாடு. அதனது வலது முன்னங்காலில் வெள்ளிக் குளம்பு உண்டு. வெள்ளிக் குளம்பால் அது மிதிக்கின்ற போது அங்கே ஓர் இரத்தினக் கல்லை விட்டுச் செல்வது போலத் தெரிகிறது. ஒரு முறை மிதித்தால் ஓர் இரத்தினக் கல், இரண்டு முறை மிதித்தால் இரண்டு, முன்னங்காலால் பல முறை மிதித்தால் அங்கே ஒரு பெரும் குவியலே இருக்கும்.”
அவளிடம் சொன்னதற்காக வருத்தப்பட்டார், ஏனெனில் அதன் பின்னர் வெள்ளாட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் தர்யோன்காவால் பேச முடியவில்லை. ‘தாத்தா, அது பெரிய வெள்ளாடா?”
கிழவர் அவளிடம் அது மேசையை விட உயரமானது இல்லை என்று கூறினார். மெலிந்த கால்களும் சின்ன, அழகிய தலையும் கொண்டது.
ஆனால் தர்யோன்கா “அதற்குக் கொம்புகள் உண்டா, தாத்தா?” என்று கேட்டாள்.
“ஆமாம். அழகிய கொம்புகள் உண்டு. சாதாரண வெள்ளாடுகளுக்கு இரண்டு கிளைக் கொம்புகள் இருக்கும். இதற்கோ ஐந்து கிளைகளுடன் கலைமானின் கொம்புகள் உண்டு.’
‘அது எந்த உயிர்களைச் சாப்பிடுகிறது, தாத்தா?”
“இல்லை. அது எதையும் சாப்பிடாது. புல்லையும் இலைகளையுமே தின்கிறது. குளிர்காலத்தில் வைக்கோலைக் கொஞ்சம்.”
”அதனுடைய நிறம் என்ன?”
“கோடைக்காலத்தில் இங்குள்ள பூனைபோல பழுப்பு நிறமாகவும். குளிர்காலத்தில் சாம்பல் நிறமாகவும் இருக்கிறது.”
இலையுதிர் காலம் வரவும் கொகவான்யா காட்டுக்குச் செல்லத் தயாராக இருந்தார். வெள்ளாடுகள் எங்கே மேய்கின்றன என்பதைப் பார்க்க விரும்பினார். ஆனால் தர்யோன்கா கெஞ்சவும் முறையிடவும் தொடங்கினாள்; ”என்னையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள், தாத்தா தொலைவில் இருந்தால் கூட அந்த வெள்ளாட்டை ஒருவேளை நான் பார்க்கலாமே.”
‘நீண்ட தொலைவிலிருந்து நீ அதைக் காண முடியாது” என்று தெரிவித்தார் அவர், “இலையுதிர் காலத்தில் எல்லா வெள்ளாடுகளுக்கும் கொம்புகள் உண்டு. எத்தனைக் கிளைக் கொம்புகள் உண்டு என்பதைப் பார்க்க முடியாது. ஆனால் குளிர்காலத்திலோ அது வித்தியாசமானது சாதாரண வெள்ளாடுகளுக்குக் குளிர் காலத்தில் கொம்புகள் இருக்காது. ஆனால் வெள்ளிக்குளம்பு ஆட்டிற்கு எப்போதும் உண்டு. ஆகவே தொலைவில் இருந்தாலும் அதைப் பார்க்க முடியும்.”
இந்த வார்த்தைகளுடன் அவளை அமைதிப்படுத்த அவரால் முடிந்தது. தர்யோன்கா வீட்டிலே தங்கிவிட்டாள், கொகவான்யா காட்டிற்குச் சென்றார். ஐந்து நாளுக்குப் பிறகு அவர் திரும்பி வந்தார்.
“இந்த ஆண்டு தெற்குக் காட்டில் ஏராளமான வெள்ளாடுகள் மேய்கின்றன” என்றார். “குளிர்காலம் வரும் போது நான் அங்குதான் போவேன்.’
“ஆனால் குளிர்காலத்தில் காட்டில் எப்படித் தூங்குவீர்கள்?” எனக் கேட்டாள் தர்யோன்கா.
“அங்கே சிறிய குடிசை ஒன்று வைத்திருக்கிறேன். அறுவடைக்காக நாம் போகும் வெட்டவெளிப் பக்கம்” என்றார்.
“சன்னலும் அடுப்பும் கொண்ட நல்ல குடிசை. அங்கே நான் நன்றாக இருக்கிறேன்.”
தர்யோன்கா திரும்பவும் கேட்கத் தொடங்கினாள்: “வெள்ளிக் குளம்பும் அங்கே மேயுமா?”
“யாருக்குத் தெரியும். மேயலாம்.”
சிறுமி மீண்டும் கெஞ்சவும் முறையிடவும் தொடங்கினாள்: “என்னையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள், தாத்தா. நான் குடிசையில் தங்கிக்கொள்வேன். ஒருவேளை வெள்ளிக் குளம்பு அருகே வந்தால் நான் பார்ப்பேன்.”
முதலில் கிழவர் அதைக் கேட்க விரும்பவில்லை. “என்ன! சின்னஞ் சிறுமியை குளிர்காலத்தில் காட்டிற்குள்ளாகக் கூட்டிச் செல்வதா? பனிச் சறுக்குக் கட்டையில் போக வேண்டி இருக்கும். எப்படிப் போவதென்று உனக்குத் தெரியாது. பனியில் மூழ்கிப் போவாய். உன்னுடன் நான் என்ன செய்யலாம்? நீ விறைத்துப் போவாய்!’ ஆனால் தர்யோன்கா அத்துடன் விடவில்லை.
தொடர்ந்து கெஞ்சினாள்: “என்னையும் கூட்டிச் செல்லுங்கள், தாத்தா! ஓரளவுக்குப் பனியில் என்னால் சறுக்கிச் செல்ல முடியும்.”
கொகவான்யா இந்த முறையில் பேசினாலும், கடைசியில் தனக்குத்தானே எண்ணினார்: ‘இவளை நான் கூட்டிப் போனால்தான் என்ன? ஒரு முறை வந்தால் மீண்டும் கேட்க மாட்டாள்.”
‘சரி, உன்னைக் கூட்டிப் போகிறேன். ஆனால் காட்டை அடைந்ததும் அழ ஆரம்பிக்கவோ, வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொல்லவோ கூடாது” என்று சொன்னார்.
குளிர்காலம் உண்மையாக வந்ததுமே, கைச் சறுக்கு வண்டி ஒன்றில், இரண்டு ரஸ்க் மூட்டைகளையும் வேட்டைக்கான சாமான்களையும் தனக்குத் தேவைப்படும் வேறு சில பொருள்களையும் ஏற்றினார். தர்யோன்கா கூட தனக்காகச் சிறு பொட்டலம் கட்டிக்கொண்டாள். தனது பொம்மைக்குச் சட்டை தைக்கக் கொஞ்சம் கிழிந்த துணிகள், நூல் சிட்டம், ஊணி ஆகியவற்றை எடுத்துக் கொண்டாள். பிறகு கயிறு ஒன்றையும் வைத்துக் கொண்டாள்.
‘இதனால் வெள்ளிக் குளம்பை என்னால் பிடிக்கக் கூடுமா?” என்று நினைத்தாள்.
பூனையை விட்டுச் செல்ல வருத்தப்பட்டாள். ஆனால் அதனால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதைத் தடவிக் கொடுத்தாள், அதனோடு பேசி எல்லாவற்றையும் பற்றி விளக்கினாள்;
“தாத்தாவும் நானும் காட்டிற்குப் போகிறோம். முறுமுறுப்பாள், நீ இங்கேயே தங்கி இருந்து எல்லா எலிகளையும் பிடிக்க வேண்டும். நாங்கள் வெள்ளிக் குளம்பைப் பார்த்த பிறகு மீண்டும் வீடு திரும்புவோம். அதைப் பற்றி உனக்குச் சொல்வேன்.”
தனது தந்திரக் கண்களுடன் பார்த்த பூனை ‘பர்’ என்று உறுமியது, ”ச-ரி! சொல்வது ச-ரி!”
ஆகவே கொகவான்யாவும் தர்யோன்காவும் புறப்பட்டார்கள். அண்டை வீட்டார் அனைவரும் வியப்புடன் உற்று நோக்கினார்கள். “கிழவன் தனது புத்தியை இழந்து விட்டான்! இந்த மாதிரியான சிறுமியைக் குளிர்காலத்தில் காட்டுக்குக் கூட்டிச் செல்கிறான்!”
கொகவான்யாவும் தர்யோன்காவும் கடைசி வீடுகளைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, ஏதோ கொடிய விலங்கு வந்துவிட்டது போல எல்லா நாய்களும் குரைக்கவும் ஊளையிடவும் செய்து பெரும் கலவரமும் குழப்பமும் செய்வதைக் கேட்டார்கள். சுற்றிலும் பார்த்த போது பூனை முறுமுறுப்பாள் நடுத்தெருவில் நாய்களினின்றும் தற்காத்துக்கொண்டு ஓடிவந்தது. முறுமுறுப்பாள் இப்போது பெரிதாகவும் தடியாகவும் இருந்ததால், அதனோடு சண்டையிட முயலும் நாய் எங்குமே இல்லை.
தர்யோன்கா அதைப் பிடித்து, திரும்பவும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பினாள். முறுமுறுப்பாளைப் பிடிக்க முயன்றாள். அதுவோ காட்டுக்குள்ளாக ஓடி நொடிப் பொழுதில் ஒரு பைன் மரத்தின் மீது ஏறிக் கொண்டது. முடிந்தால் அதைக் கீழே இறக்கிக் கொள்ளலாம்!
தர்யோன்கா கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தாள், ஆனால் பூனையைக் கீழே இறக்க முடியவில்லை. அவர்களால் என்ன செய்ய முடியும்? தொடர்ந்து போக வேண்டியதாயிற்று. அவர்கள் சுற்றிலும் பார்த்த போது, முறுமுறுப்பாள் அவர்களுக்கு அருகே ஒரு புறமாக ஓடி வந்தது. இப்படித் தான் அவர்கள் இறுதியாகக் குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் மூவரும் அங்கே வசித்தார்கள். தர்யோன்கா அதை விரும்பினாள். “இங்கே அருமையாக இருக்கிறது” என்றாள். கொகவான்யாவும் ஒப்புக் கொண்டார். ‘ஆகா, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். முறுமுறுப்பாளோ அடுப்படி அருகே பந்து மாதிரி சுருண்டு படுத்து உரக்க உறுமியது: “ச-ரி! சொன்னது சரி!”
அந்தக் குளிர்காலத்தில் நிறைய வெள்ளாடுகள் வந்தன. ஆனால் சாதாரணமானவை. ஒவ்வொரு நாளும் ஒன்றோ இரண்டோ கிழவர் வீட்டிற்குக் கொண்டு வந்தார். தோல்கள் குவிந்து விட்டன, இறைச்சி உப்பிடப்பட்டது- கை சறுக்கு வண்டியில் எடுத்துப் போக முடியாத அளவுக்கு அதிகம் இருந்தன. ஒரு குதிரை கொண்டு வருவதற்காக தான் வீட்டிற்குப் போக வேண்டியிருக்கும் என்பதை கொகவான்யா உணர்ந்தார். ஆனால் தர்யோன்காவையும் பூனையையும் காட்டில் எப்படித் தனியே விட்டுச் செல்ல முடியும்? தர்யோன்காவோ காட்டில் இருந்து பழகிப் போய் விட்டாள். எனவே அவளே சொன்னாள்:
“தாத்தா, குதிரை கொண்டு வருவதற்காக நீங்கள் ஏன் கிராமத்திற்குப் போகக் கூடாது? உப்பிட்ட இறைச்சியை நாம் வீட்டிற்குக் கொண்டு போயாக வேண்டும்.” கொகவான்யா வியப்புற்றார்.
“இந்தச் சிறிய மண்டையில் எத்தனை அறிவு! பெரிய பெண் போல அறிவுடன் இருக்கிறாய். தானாகவே இது பற்றிச் சிந்தித்திருக்கிறாய். ஆனால் தனியே இருக்க நீ பயப்பட மாட்டாயா?”
“நான் ஏன் பயப்படுகிறேன்?” என்றாள். “குடிசை உறுதியானது என்று நீங்கள் தானே சொன்னீர்கள். ஓநாய்கள் உள்ளே வர முடியாது. மேலும் முறுமுறுப்பாள் என்னுடன் இருக்கிறது. நான் பயப்பட மாட்டேன். ஆனால் சீக்கிரமாகத் திரும்பி வந்து விடுங்கள்!”
கொகவான்யா புறப்பட்டுச் சென்றார். தர்யோன்கா முறுமுறுப்பாளுடன் தங்கி விட்டாள். கொகவான்யா வெள்ளாடுகளை வேட்டையாடச் சென்ற போது பகல் நேரத்தில் தனிமையில் இருக்கப் பழகிப் போய்விட்டாள். எனினும் இரவு நெருங்கவும் அவள் பயப்படத் தொடங்கினாள். ஆனால் பூனை வசதியாகவும் அமைதியாகவும் படுத்திருப்பதைக் கண்டாள். இது தர்யோன்காவுக்கு தெம்பு அளித்தது. சன்னலருகே அமர்ந்து வெட்ட வெளியை நோக்கிப் பார்த்தாள். அங்கே ஏதோ சிறு பந்து போல காட்டை விட்டுத் துள்ளியது. அது நெருங்கி வந்த போது அது வெள்ளாடு என்பதைக் கண்டாள். அதற்கு மெலிவான கால்களும் சின்ன, ஒல்லியான தலை யும் கொம்புகளில் ஐந்து கிளைகளும் இருந்தன.
தர்யோன்கா உடனே வெளியே ஓடினாள், ஆனால் அங்கே எதையுமே காணவில்லை. அவள் குடிசைக்குத் திரும்பினாள். “நான் கனவுதான் கண்டிருக்க வேண்டும்” என்றாள். ‘அது எனது கற்பனைதான்.”
முறுமுறுப்பாள் உறுமியது: “ச-ரி! சொல்வது ச-ரி!” தர்யோன்கா பூனையைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு படுக்கச் சென்றாள், காலை வரை அயர்ந்து தூங்கினாள்.
மற்றொரு நாள் சென்றது. கொகவான்யா திரும்பவில்லை. தர்யோன்கா களைப்பையும் தனிமையையும் உணர்ந்தாள், ஆனால் அவள் அழவில்லை. பதிலாக பூனையைத் தடவிக் கொடுத்தாள்.
“சோர்வடைய வேண்டாம், முறுமுறுப்பாள். தாத்தா நாளைக்கு நிச்சயமாக வருவார்” என்றாள்.
முறுமுறுப்பாள் தனது வழக்கமான பாடலைப் பாடியது: “ச-ரி! சொல்வது சரி!”
திரும்பவும் தர்யோன்கா சன்னலருகே அமர்ந்து நட்சத்திரங்களை நோக்கினாள். படுக்கைக்குச் செல்ல வேண்டும் என அவள் நினைத்தபோது திடீரென்று குடிசையின் சுவருக்குப் பின்புறம் தடதடவெனக் கேட்டது. அவள் நடுக்குற்று எழுந்தாள், மற்றொரு சுவரின் பக்கம் தடதடவெனக் கேட்டது, பிறகு சன்னல் பக்கம் திரும்பவும் கேட்டது, பிறகு கதவுப் பக்கம், கடைசியில் கூரை மீது. அது பலமாக இல்லை, எதோ விரைவான, லேசான காலடிகளைப் போல ஒலித்தது.
தர்யோன்கா சிந்திக்கலானாள்: “ஒருவேளை நேற்று வந்த வெள்ளாடே திரும்பவும் வந்திருக்குமா?”
அதைப் பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆசைப்பட்டாள். அச்சத்தால் கூட அவளை வீட்டில் தடுத்து நிறுத்த முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு உற்றுப்பார்த்தாள். அங்கே வெள்ளாடு மிகவும் அண்மையில் நின்றது. மிதிப்பதற்காகத் தனது முன்காலை உயர்த்தியது, அதில் வெள்ளிக் குளம்பு மின்னியது, கொம்புகளில் ஐந்து கிளைகள் இருந்தன. தர்யோன்காவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதோ வளர்ப்பு ஆடு போல அதை ‘பே… பே’ என்று அழைத்தாள்.
இதைக் கண்டு வெள்ளாடு சிரித்தது! பிறகு திரும்பி வெட்டவெளியின் ஊடாக ஓடியது.
தர்யோன்கா குடிசைக்குள்ளாகச் சென்று அது பற்றி எல்லாவற்றையும் பூனையிடம் சொன்னாள்.
“நான் வெள்ளிக் குளம்பைப் பார்த்தேன். அதனது கொம்புகளையும் குளம்பையும் பார்த்தேன். காலை மிதித்து இரத்தினக் கற்களை விட்டுச் செல்வதை மட்டுமே நான் பார்க்கவில்லை. அடுத்த முறை அது எனக்குக் காட்டும்.”
முறுமுறுப்பாள் தனது வழக்கமான பாட்டைப் பாடி யது: “ச-ரி! சொல்வது ச-ரி!”
மூன்றாம் நாளும் கடந்தது, இன்னமும் கொகவான்யா வரவில்லை. தர்யோன்காவினுடைய முகத்தில் கவலை சூழ்ந்தது. சற்று அழவும் செய்தாள். பூனையிடம் பேச விரும்பினாள், ஆனால் அதைக் காணோம். அப்போது தர்யோன்கா உண்மையாகவே நடுக்குற்று பூனையைத் தேடி வெளியே ஓடினாள்.
அன்று முழு நிலா வெளிச்சத்தைப் பாய்ச்சியதால், வெகு தூரம் வரை பார்க்க முடிந்தது. தர்யோன்கா சுற்றிலும் பார்த்தாள்: பூனை ஒரு வெள்ளாட்டிற்கு முன்னே வெட்டவெளியில் உட்கார்ந்திருந்தது. பூனை தனது தலையை ஆட்டிக் கொண்டிருந்தது, போலவே வெள்ளாடும் செய்தது. அவை பேசிக்கொள்வது போல இருந்தது. பிறகு அவை வெட்டவெளியில் ஓடத் தொடங்கின.
வெள்ளாடு இங்கும் அங்கும் ஓடியது, பிறகு நின்று குளம்பால் மிதித்தது. நீண்ட நேரத்திற்கு அவை வெட்ட வெளியில் ஓடித்திரிந்து, தொலைவில் மறைந்து போயின. பிறகு அவை திரும்பவும் குடிசையை நோக்கி வந்தன.
இதோ வெள்ளாடு கூரையின் மீது தாவியது, தனது வெள்ளிக் குளம்பால் மிதிக்கத் தொடங்கியது. ஒளிக் சுற்றைகள் போல இரத்தினக் கற்கள் அதன் குளம்பிலிருந்து பறந்தன, சிவப்பு, பச்சை, இள நீலம், கரும் பச்சை நிறங்களில் – ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு வண்ணத்திலும்.
அந்த நேரத்தில் கொசுவான்யா திரும்பினார். தனது குடிசையை அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. எல்லா வண்ணங்களிலும் மின்னவும் பளிச்சிடவும் செய்த இரத்தினக் கற்களால் அது மூடப்பட்டு இருந்தது. அங்கே உச்சி மீது வெள்ளாடு நின்று, தனது வெள்ளிக் குளம்பால் மிதித்துக்கொண்டே இருந்தது. இரத்தினக் கற்கள் தொடர்ச்சியாக உருண்டு கீழே விழுந்து கொண்டிருந்தன.
திடீரென்று முறுமுறுப்பாளும் அங்கே தாவி வெள்ளாட்டுக்கு அருகே நின்று பலமாக ‘மியாவ்’ என்று சுத்தியது. இதோ – அங்கே பூனையும் இல்லை, வெள்ளிக் குளம்பும் இல்லை.
கொசுவான்யா அரைத் தொப்பி நிறைய இரத்தினங்களை வாரினார், ஆனால் தர்யோன்கா அவரிடம் கெஞ்சினாள்; “அவற்றைத் தொட வேண்டாம், தாத்தா! நாளை அதை மறுபடியும் பார்க்கலாம்.”
கொகவான்யா அவள் சொன்னது போலவே செய்தார். பனி பலமாக ஆனால் விடியலுக்கு முன்னரே விழுந்து எல்லாவற்றையும் மூடிவிட்டது. அதன் பிறகு அவர்கள் பனியை விலக்கினார்கள், எனினும் எதையும் காண முடியவில்லை. ஆனால் அது அவ்வளவு மட்டமாகப் போய் விடவில்லை. கொகவான்யா தனது குல்லாயில் சேகரித்திருந்தது அவர்களுக்குப் போதும்.
ஆக, எல்லாமே நல்லபடியாக முடிந்தன, ஆனால் பூனைக்காக அவர்கள் வருந்தினார்கள். அது திரும்பக் காணப்படவே இல்லை. வெள்ளிக் குளம்பும் திரும்பவே காணோம். ஒரு முறை வந்தது, அவ்வளவுதான்.
ஆனால் அதன் பிறகு வெள்ளாடு ஓடித்திரிந்த வெட்ட வெளியில் மக்கள் இரத்தினக் கற்களைக் காணத் தொடங்கினார்கள். அவற்றில் பெரும்பாலானவை பச்சையாகவே இருந்தன. பச்சை மணிகள் என்று மக்கள் அவற்றை அழைத்தார்கள். நீங்கள் எப்போதாவது அவற்றைப் பார்த்திருக்கிறீர்களா?
000
மொழிபெயர்ப்பு : நா. முகமது செரீபு
00
பாவெல் பஷோவ் (1879 – 1950) ஐரோப்பா வுக்கும் ஆசியாவுக்கும் எல்லையாக அமைந்துள்ள யூரல் மலைப்பகுதி மக்களுடைய வாய்மொழி நாட்டுப் புறக் கதைகளைச் சேகரிப்பதிலும் ஆராய்வதிலும் பல ஆண்டுகளைச் செலவிட்டார்.
புராணங்கள், பழங்கதைகள், நம்பிக்கைகள் இவற்றை அடியொற்றி தனது மூல நூல்களை பஷோவ் படைத்தார். மக்களுடைய எதார்த்தமான வாழ்க்கையுடன் கற்பனைப் பின்னிக் கலந்தது. அவருடைய கதைகளில் பல்வேறு விதமான நாட்டுப்புறக் கதைப் பாத்திரங்களை நாம் பார்க்கிறோம்: செம்பு மலை எசமானி; நல்ல மனிதர்களுக்குப் பரிசுகளை வழங்கவும் தீயவர்களைத் தண்டிக்கவும் செய்கிற பயங்கரமான தங்கப்பாம்பு போலொஸ்; அன்பான இயல்பு கொண்ட மக்களுக்கு இரத்தினக் கற்களை வழங்குகின்ற வெள்ளிக்குளம்பு வெள்ளாடு, இப்படி.
இத்தகைய புராணக் கதாநாயகர்களுடன் சாதாரண மக்களும் சேர்ந்து வருகிறார்கள், அவர்களில் திறமைமிக்க தொழிலாளர்கள் இருக்கிறார்கள். யூரல் மலைப்பகுதியின் மந்திர உலகத்துடன் அவர்கள் நட்புமுறையிலான உறவு கொண்டிருக்கிறார்கள், எல்லாவகையான கைத் தொழில்களை அறிந்தவர்களாக, அழகிய உலகைப் படைப்பவர்களாக இருக்கிறார்கள். ருஷ்ய நாடோடிக் கதைகளில் வழக்கமாக இடம் பெறுவது போலவே அன்பும் தந்நலமும் அற்ற அழகிய பெண்களால் இந்தக் கதைகளில் வருபவர்களும் காப்பாற்றப்படுகிறார்கள்.
00
எமது நன்றிகள் : ராதுகா பதிப்பகம், மாஸ்கோ- 1989.