தூவானம்
———————-
மழைபெய்து ஓய்ந்திருந்தது
கருத்தமேகங்கள் செம்மையாய் ஓடிக்கொண்டிருந்தன ஓடையில்
,
மேய்ச்சலுக்கு மேலேறிய ஆடுகள் குன்றினின்று கீழிறங்கிக்கொண்டிருந்தன
,
வாய்க்கால் நீரில் உடல்நனைய மகிழ்வாய்
மண்வெட்டி அலசினான் சம்சாரி
,
பள்ளிக்கூடத்தினின்று வீடு திரும்பும் பிள்ளைக்காடுகள் மரக்கிளை பற்றி உலுக்க
மறுமழை பொழிந்தது
,
பேருந்து சன்னலோரம்
அமர்ந்த யுவனொருவன் மீது
சாரல் தெறிக்க
தன் காதலியின் அலைபேசி புகைப்படம்கண்டு பிராந்தனைப்போல புன்னகைத்து அவள் எண்ணுக்கு அழைப்புவிடுக்கத்துவங்கினான்
,
மீண்டும் தூறத்துவங்கிற்று.
00
மலைக் கோவில்
————————————–
மாநகரத்தில் இருந்து
மாநகரத்திற்கு
,
கிராமங்களின் வழியே
விரைகிறது ரயில்
,
ஓடும் நதியில்
முங்குநீச்சலிட்டு
,
உழவுக்காட்டில்
உலாவி
,
ஆடோட்டிகளோடு
கதைபேசியபடியே
,
மலைக்கோவிலுக்கு
போய்க்கொண்டிருக்கிறது
,
கான்க்ரீட் காட்டில்
உழன்று திரியும்
நகரத்தானிகிய
கிராமத்தானின் மனசு
00
இரவுக்கொடை
——————————-
மறுகால் பாயும்
கண்மாயில்
பானைப்பறி
,
அறுவடை
களத்தில்
இராப்படுக்கை
,
பாலணைய
நிலவொளியில்
பெரியாம்பளையின்
வெள்ளைக்காரன்
காலத்து
களவுக்கதை
,
துவங்கிவிட்டது
எங்கள்
இரவுக்கொடை
00
அரண்மனைக்குத் திரும்பும்
சித்தார்த்தன்
——————————————–
“மனைவியை
குழந்தையை
மறந்து பிரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி….. !
தங்கம்
மன்னிக்கக்கூடாதடி! “
,
எங்கோ இழவு வீட்டில் ஒலிக்கும்
சி. எஸ். ஜெயராமனின் குரல்
பளார்…….
பளாரென்று….
செவியில் அறைகிறது
,
தன் யசோதரை மற்றும் இராகுலனின் பிரிவுத்துயர் கொந்தளிக்க
,
அவசர அவசரமாக
தன் அரண்மனைக்கு திரும்புகிறான்
நவீன சித்தார்த்தன்
,
பார் வசதி கொண்ட
மதுபானக்கடை எண்:
2343 லிருந்து
1848 ஐ துறந்து.
00
தும்பிகளின் இசைக்குறிப்பு
இசைக் கலைஞனின்
கரங்களைப்போல
மேலும் கீழும்
சிறகடிக்கும் தும்பிகள்
,
காற்றில்
எழுதுகின்றன
கார்காலக்குறிப்புகளை
00
தீபக்கோலம்
அதிகாலை வாசலில்
அகல்விளக்கு
கோலமிடுகிறாள்
ஒருத்தி
பிறகென்ன?
சூரியன் வந்து இனி
சுடரேற்றுவான்
00


