ஸ்ரீராமின் ஐந்து கதைகள் – வாசகபார்வை

கல்சிலம்பம்

சாதரணமாக சிலம்பம் – சிலம்பாட்டம் என்னவென்று அறிந்திருக்கிறோம். நீளமான கம்பை சுற்றி விளையாடும் ஆட்டம். பண்டைய காலத்தில் வீரவிளையாட்டாக இருந்த தமிழர் தற்காப்பு கலை. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி பக்கம் இன்னமும் பழக்கத்தில் உள்ளது. கோவில் கொடைகளில் சிலம்பாட்டத்தைக் காணலாம். இப்பொழுதெல்லாம் கராத்தே, டகுண்டோ என குழந்தைகளை அனுப்பும் பலர் சிலம்பம், களரி, வாட்பயிற்சி என்று அனுப்புவதில்லை. கல் வைத்து சிலம்பம் ஆடப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் கல்சிலம்பம் என்னும் வார்த்தையே புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. நிஜமாக அப்படி ஒன்று இருக்குமா என்ற யோசனையை அகற்றமுடிய வில்லை.

ஒவ்வொரு கதையிலும் ஆசிரியர் எத்தனை மெனக்கிட்டிருக்கிறார் என்பது வாசிக்க வாசிக்க புரிகிறது. கதையின் முதல் பகுதியை எழுதுங்கள் அதன் பின்னர் கதை தானே தன்னை எழுதிக்கொள்ளும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.  எத்தனை உண்மை என்று உணர்ந்தும் உள்ளேன். ஸ்ரீராம் அவர்கள், தான் எழுதப்போகும் கதையின் கருவிற்கு தேவையான தரவுகளை தேடிப்பிடித்து அறிந்துகொண்டு எழுதுகிறாரா இல்லை இத்தனை அறிந்து வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. என்ன சாரம்சமாய் இருந்தாலும் கதை அதன் பாட்டுக்கு வளைந்து, நெளிந்து, தெளிவாக செல்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் அவரின் ஐந்து கதைகளை ஒருங்கே வாசிக்கப்பெற்றேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருப்பொருள், ஒவ்வொரு தொழிலை சார்ந்து எழுதப்பட்டுள்ளது. பெயருக்கு ஒரு வார்த்தையாக சொல்லிப் போகாமல் அதனைக் குறித்த தெளிவோடு எழுதியிருக்கிறார்.  இப்படி உணர்ந்து எழுதப்படும் கதைகளே மனதை தொடும், நம்மை ஈர்க்கும்.  ஆற்றின் போக்கில் அடித்து செல்லப்படும் சருகு போல அல்லாமல் நீந்திக் களிக்கும் மீனைப் போல உற்சாகமாய் வாசிக்க முடிகிறது.

மனிதனுக்கு மறதி அருமருந்து தான். ஆனால் வாழ்க்கையில் நடக்கும் போதாத சம்பவங்கள் ஏனோ மறப்பதேயில்லை. துரோகித்திருந்தாலும், துரோகிக்கப்பட்டு இருந்தாலும் வாழும் காலம் வரை நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. அப்படியான குற்றவுணர்ச்சியின் பக்கங்களை பின்னோக்கிப் புரட்டிப் பார்க்கையில் எதிர்படும் சிறு கல்லானது  கல்சிலம்பில் புகுந்து,  குற்றங்கள் பெருகவும், குற்றவுணர்ச்சிகள் குறையவுமான சரிசம வாய்ப்புகளை தரவல்லது. எதிராளியின் தன்மையும் சேர்ந்தே இதனை தீர்மானிக்கிறது.

சிறுவயது அறியாமையில் கொலை செய்ய புறப்படும் சிறுவனுக்கும், வளர்ந்த வாலிபன் கொலை செய்ய முற்படாமல் இருப்பதுக்குமான முரண்களின் நாண்பிடித்து செல்லும் கதை சொல்லும் நீதி மன்னிப்பு, பிராயாசித்தமென  விளங்கப்படுகிறது. குற்றவுணர்வுகளில் இருந்து விடுபடுவது கூட்டை விட்டு பறக்கும் பறவையின் சுதந்திரத்தைக் காட்டிலும் அலாதியானது. அதனை பற்றிக் கொண்டு வாழ்தல் சாவதை காட்டிலும் கொடியது. இந்த உணர்ச்சி இருக்கும் வரை தானே மனிதம். வித்தியாசமான நாடன் கதை எனச் சொல்லலாம். மொழி மிக அழகாக கைகூடுகிறது ஆசிரியருக்கு. கல்சிலம்பம் சுழற்றி சுழற்றி , மேலும் , கீழுமாய் தாவிப்பறக்கும் கற்களின் மாய விளையாட்டு.

காலவியூகம்

இந்தக்கதைக்காக சிற்பகலை குறித்து நிறைய வாசித்திருக்கக் கூடும் ஆசிரியர். கதைக்கு தேவையான தகவல்களை திறம்பட கையாள்கிறார். தன்னை ஆளாக்கிய மனிதனுக்கு தான் செய்வது சரியெனப்பட்டாலும், செய்துவிட்ட துரோகமானது இடைவிடாத உளிச்சத்தம் போல காலமெல்லாம் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். முற்றுப்பெறாத சிலையின் பின் ஒளிரும் சாபத்தின் விமோசனம் தேடி அலையும் சேதுசிற்பியின் மனநிலை தான் காலவியூகத்துக்குள் சிக்கித் தவிக்கிறது. முந்தைய கதைக்கும் இதற்குமான ஒற்றுமை குற்றவுணர்ச்சி. முன்னதில் உயிர்கொலை, இதில் மனக்கொலை. நம்பிக்கை வைத்தவரை துரோகித்தது ஒன்று, பிறருக்கு கிடைக்கவேண்டிய புகழைக் கூச்சமில்லாமல் தன் தோளில் வாங்கிக் கொள்ளும் போக்கு. பின்னது இன்றைய காலக்கட்டத்தில் நிறைய இடங்களில் பார்க்கலாம். உதவியாக என்று எல்லாம் செய்து முடிப்போம், எங்கேயும் அதற்கான பாராட்டு நமக்கு கிட்டாத வகையில் உதவி பெற்றோர் கவனமாய் நடந்து கொள்வார்கள். இவர்கள் இப்படித்தான் என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். முன்பெல்லாம் இது பெரிய குற்றமென தோன்றும். இப்பொழுது இது தான் உலகம் என சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது.  காலத்தின் கோலத்தில் இது ஒரு புள்ளி.

வியூகத்திற்குள் சுழலும் காலத்தினை புரிந்துக்கொள்ள யத்தனிக்க வேண்டி இருக்கிறது, முதலும் முடிவும் கொஞ்சமாக நம்மை சுற்ற வைக்கிறது. சேதுசிற்பியின் குற்றவுணர்ச்சி ஒருவகை, பேசாச்சாமியின் குற்றவுணர்ச்சி வேறு வகை. தவறிழைக்க நினைத்து அது ஒரு கோணலும் இல்லாமல் இடப்பட்ட கம்பிகோலமாய் சிரிக்க, தன்னிலை உணர்ந்து துயரத்தின் உச்சத்தில் தன்னை ஞானியாக பாவித்துக்கொள்ளும் போக்கு. மனம் ஒன்றி செய்யாத, கெடுக்க நினைத்த காரியத்தின் வெற்றியை ருசிக்க மனமிராது தானே. அது வெற்றி அடைவதாலேயே  குற்றவுணர்ச்சி இன்னும் அதிகரிக்கும். கதை நன்றாக இருக்கிறது.

பெரியவர் அளிக்கும் மன்னிப்பு, சாரதா மற்றும் அவள் அம்மாவின் ரோஷம் பிடிவாதம், சேதுசிற்பியின் துரோகம், நாட்டியக்காரியின் இயலாமை, அவள் மகனின் குரோதம் என பயணிக்கும் கதையில் மனித உணர்வுகளின் ஒளிக்கலவையைத் தான் உணர்கிறேன்.

உருவிலிக் கண்ணி

தலைப்பே ஆராயக்கூடிய அளவில் வித்தியாசமாக இருக்கிறது. உருவமற்ற வலை என்றே புரிந்து கொள்கிறேன் தலைப்பை.  யாருக்கோ வீசும் வலையில் யாரோ சிக்கிவிடக்கூடும், அப்படி சிக்கிக்கொள்வதே அவரை மீட்கும் பட்சத்தில் வலை உருவில்லாத மீட்பாகிறது. பூனைக்குட்டிக்கு இறங்கும் மனது சமயத்தில் மனித உயிருக்கு இறங்குவதில்லை. பிரியமாய் வளர்க்கும் நாயின் உயிருக்காக எடுக்கப்பட்ட மனித உயிர்கள் விளக்குவது பாசத்தையா? ஆங்காரத்தையா? வெறியையா? எப்படி அக்கொலைகளை நியாயப்படுத்த இயலும்?  எல்லாமும் ஒரே மனிதனின் உள்ளே தான் இருக்கிறது, எது வெளிப்படுகிறது எந்த உணர்ச்சி வெல்கிறது என்பதில் தான் வாழ்வின் விதி தீர்மானமாகிறது.

துளசியின் மனதடுமாற்றம் வெகு இயல்பானது தானே. வளர்ந்த, வாழ்ந்த சூழ்நிலை ஒருவழியில் இட்டுச் சென்றாலும் பிறவி குணம்  இயற்கை. இரண்டிற்கும் இடையே அவள் தவிப்பும், குழப்பமும், தயக்கமும் அவளை சுழற்றிக் கொண்டே இருக்கிறது. ஆணவக் கொலைகள் எல்லாமே அந்த நிமிட தடுமாற்றம், ஆத்திரத்தால் தானே நடக்கிறது. கொஞ்சம் நிதானித்தால் எல்லாம் சரியாகக்கூடும். மாற்றங்கள் ஒவ்வொருவர் மனதிலும் உருவாக வேண்டும். படித்தாலும் சாதி புரையோடியிருக்கும் சமூகத்தில் தான் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். தானாய் போய் கிணற்றில் விழும் சாதியை யாரேனும் வாளியில் ஏற்றி வெளியே கொண்டுவந்த வண்ணம் இருக்கிறார்கள். முழுவதுமாய் சேந்துக்கிணற்றில் இட்டு அடைத்து வைக்கும் காலம் கனியட்டும். மற்றபடிக்கு பூனைக்குட்டிகள் எங்கேயாவது சந்தோஷமாய் வாழட்டும்.

நல்ல சொல்லாட்சி கதை நெடுகிலும். வார்த்தை பிரயோகம் வர்ணனைகள், இட விவரணைகள் எல்லாமே வெகு லாவகமாய் கைவருகிறது ஆசிரியருக்கு. நிறைய புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ள முடிந்தது.

 நீலவானம்

நீலவானத்தின் கீழ் என்னவெல்லாமோ நடக்கிறது. வாழ்க்கை செழிப்பதையும், வாடுவதையும் பார்த்தவண்ணம் நீலவானம் அமைதியாக நகர்கிறது. மெளனசாட்சியாய் சொல்லாமல் வளர்ந்த காதலை கண்ணுற்ற வானம் கையாலாகாமல் கண்ணீரை பெருக்கி கலங்கித் தெளிகிறது இது தான் விதி என்பது போல.  ஒரு நல்ல நாவலாய் வரக்கூடிய வகையில் இருக்கும் சிறுகதை நீலவானம். கிராமங்களில் எப்பொழுதுமே எழுதப்படாத சட்டமாய் பெண்ணைக் கட்டும் முதல் உரிமை மாமன் மகன் அத்தை மகனுக்கே உண்டு. கதையில் சொல்லப்பட்டது போல உரிமைப்பட்டவர்களுக்கு ஜாதகம் பார்ப்பதில்லை. தட்டிக்கழிக்கும் வகையிலேயே பின்னாட்களில் ஜாதகம் பார்க்கப்பட்டது. அத்தைப் பெண்ணைக் கண்டால் கையும் காலும் சும்மா இருக்காது என்று ஒரு சொலவடை உண்டும். முறைப்பெண்ணை கிண்டலும் கேலியுமாய் பேசுவதற்கும், முடியை பிடித்து விளையாடுவதும், கிள்ளுவதுமாய் அந்த பிராயத்தின் அவர்கள் தான் முதல் ஈர்ப்பாய் இருப்பார்கள். சிலருக்கு திருமணம் கைகூடும், சொத்து, வேலை, குடும்ப தகராறு முதலிய பல்வேறு காரணங்களால் சிலர் சேராமல் போய்விடுவார்கள். அப்பொழுதும் கிண்டலுக்கும் , கேலிக்கும் குறைவிருக்காது. சேர்ந்து வாழாத வாழ்க்கையை வெற்றுப் பேச்சில் நிறைத்துக்கொள்ளும் ஆதங்கமாகக் கூட இருக்கலாம். எங்கள் பக்கத்தில் இன்னமும் முறைப்பையனின் அனுமதி பெற்றே பெண்ணை அசலில் கொடுக்கிறார்கள். பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக இப்பொழுது அப்படியான நெருங்கிய உறவு திருமணங்கள் அருகிவிட்ட போதும், இன்றும் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானதை அறிவிக்கவோ, திருமணத்திற்கு அழைக்கவோ பெண்ணின் அப்பா / அண்ணன் முறைமாப்பிள்ளைக்கு சுருள் வைத்துக் கொடுக்கின்றனர். வெற்றிலைப்பாக்கும், காசும் வைத்து கொடுத்து வெத்தலையும் பாக்கும் உமக்கு, பொண்ணு அவுகளுக்கு என்று பெண்ணை விட்டுத்தர சொல்லி கேட்கும் முறையாக இப்பழக்கம் கையாளப்படுகிறது. பையன் அந்தப் பெண்ணைக் காட்டிலும் சின்ன வயதாக இருந்தாலும் இதனை திருநெல்வேலிப் பக்கம் கடைப்பிடிக்கின்றனர்.

ஒவ்வொருவர் வாழ்விலும் முதல் காதல் மனதை விட்டு அகலாமல் பசுமையாய் அப்படியே அங்கேயே நிற்கும். சிலர் வாழ்க்கை ஓட்டத்தில் அதனை மனதிற்குள் பூட்டி வைத்துக் கடந்து விடுகின்றனர்.  சிலர் மறக்கவும் முடியாமல் புதிய வாழ்க்கைக்குள் பொருந்தவும் முடியாமல் தவிக்கின்றனர். திருமணம் ஆகி குழந்தை குட்டி என சந்தோஷமாக வாழ்பவரும் தன் முதல் காதலை பற்றி பகிர்கையில் அத்தனை குதூகலிக்கிறார். சேராமல் போனாலும் காதலை சொன்ன நாள், காதலியின் பிறந்தநாள் என்று காதலை கொண்டாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.பாலு போன்ற ஒருசிலர் அந்த நினைவுகளுடனே வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து கடக்கின்றனர். இனம்புரியா வலியை தரும் கதை இது.

பால்யத்தை நினைவுபடுத்தும் தட்டான்களும், கொக்குகளும் நம் மனதிலும் பறக்கின்றன. கொக்கு பூப்போட்டதென விரல்நக வெள்ளை கண்டு துள்ளி குதித்த நாட்களை பாலு நிர்மலா வாயிலாக மீண்டும் ஒருமுறை உணர்ந்து பார்க்க முடிந்தது. ஒற்றைவரியை மட்டும் பிடித்துக்கொண்டு நடக்காமல் கதைக்கு தேவையான விடயங்களை அளவாகவும், அழகாகவும் சேர்த்து சொல்லிப் போகிறார். ஸ்ரீராம் அவர்களின் கதைகளின் எண்ணற்ற பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கடம்ப மரம், செண்பக மரம், பூவரசம், மந்தாரை சருகுகள் என சுகந்தம் பரவிக் கிடக்கிறது. கொக்குகள், ஆள்காட்டி, செங்காடை என வயல்வெளி சார்ந்த பறவைகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மாதங்களையும், வருடங்களையும், காலங்களையும் சொல்லிச் செல்லும் போக்கு வித்தியாசமாகவும், மிகமுக்கிய சரித்திரத்தை வாசிக்கும் பிரமையையும் கொடுக்கிறது.

ராமாயண சீதை போல காப்பற்றப்படாமல் போகும் நிர்மலாவின் நினைவுகளை தாங்கி பாலு மிச்ச வாழ்க்கையை வாழ்ந்து விடக்கூடும் பொண்டாட்டியை பறிகொடுத்தவனின் சோகத்தோடு. கனமென உணரமுடியாத கனத்த கதை.

திருத் துருத்தி நடனம்

எல்லா தலைப்புகளையும் போல ஒரு வித்தியாசமான தலைப்பு. பிறந்த கன்று இறந்து விட்டால் இப்படி மாட்டை ஏமாற்ற வைக்கோல் கன்று செய்து வைத்து பால் கறப்பார்கள். ஆனால் அதன் பெயர் துருத்தி என்று இந்தக் கதையில் தான் தெரிந்தது. அதன் உருவாக்கம் நன்றாக விளக்கப்பட்டு உள்ளது. சிறுவயதில் தொழுவத்தில் கண்ட வைக்கோல் கன்றின் சிறுமுகம் ஞாபகத்தில் ஆடுகிறது.  உயிரற்ற அந்த கன்றினை காண எப்படியோ இருக்கும். குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கும் பொம்மை போல மாட்டிற்கு வைக்கோல் கன்றினை கொடுத்து ஏமாற்றுவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கன்று தேவைப்படாது, மாடு புரிந்துக்கொள்ளும்.

நெடுங்கதையாக நீளும் இந்த கதையில் சாபத்தின் வீரியமாய் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமோ என்று தோன்றியது. பேச்சுவழக்கில் உள்ள பல சொற்களை அறியமுடிந்தது. தொழுவத்தை தான் கட்டுதரை என்று கூறுகிறார் என புரிகிறது. ஊர் ஊருக்கு ஒரு சொல்வழக்கு இருக்கும் இல்லையா, இது நான் அறியாத சொல்.

ரேக்ளா ரேசில் நம் மனமும் வேகம் பிடித்து ஓடுகிறது. வீம்பு வந்தால் எதுவும் எப்படியும் மாறிவிடும் என்பதற்கு உதாரணம் விசுவின் பந்தயம். விதி யாரை விட்டது. வடிவின் விதியும் அப்படித்தான் போலும். பனம்பாளை கழுத்துடையவள் பதவிசாய் தான் வாழ்வாள் போலிருக்கிறது. மாடுகள் சார்ந்த விடயங்களான முடையடிப்பது, காயடிப்பது, துருத்தி, ரேஸ், சீம்பால் என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். சிறப்பு. எல்லா தகவல்களையும் கூகுள் செய்து எழுதிவிட முடியாது. சிலவற்றை உணர்ந்தாலே விளக்கிச் சொல்ல இயலும். புனைவுகள் இருந்தாலும் நிஜம் இல்லாத புனைவு நெஞ்சில் நிற்பது இல்லை.

முந்தைய கதையில் ராமாயணத்தைக் கையாண்டது போல அரிச்சந்திர புராணத்தை குறியீடாக பயன்படுத்தி கதை செலுத்தப்பட்ட விதமும் அழகு. அதற்கும் பாட்டுகள் எல்லாம் எடுத்து, சேர்த்து, எழுதி நல்ல ஒரு வடிவத்தை கொடுத்திருக்கிறார். ஆசை யாரை விட்டது என்பது போல விசு ஆசைப்பட்டாலும் அது வெறும்பகல் கனவாகவே போகிறது. வடிவின் மாற்றத்தை உணரும் கணவனின் செயலென உணர்த்தப்படும் இடமே வடிவின் போக்குக்கான முன்னெடுப்பு. வயதான பின் பெற்றோரே வேண்டாதவராகிவிடும் காலத்தில் எருதுகளை என்ன செய்வார்கள்? வளர்ப்பு மிருகங்களிடம் வைக்கும் பிரியம் எத்தனைக்கெத்தனை மகிழ்ச்சி அளிக்கிறதோ அத்தனை சங்கடத்தையும் கொடுக்கும். வளர்த்த மாட்டை அடிமாடாக கொடுக்க யாருக்குமே மனம் வராது. சிறிய பொறி கூட அழகான கதையாக மிளிர மொழிநடையும், கதை சொல்லும் போக்கும், தெறிவுகளும் துணை செய்யும்.

எல்லா கதைகளுமெ குறை சொல்ல வழியில்லாத வகையில் அருமையாக இருந்தது. துருத்தியில் ஆரம்பித்து துருத்தியுடனே முடிகிறது நீளமான இந்தக் கதை. ஆம் நீளம் தான் – நெடுங்கதை. 54 பக்கங்கள். வண்டிமாடுகளுக்கு லாடம் அடிப்பார்கள் அதைப் பற்றியும் கூட சேர்த்திருக்கலாம். பெரிய காளை மாட்டினை சரித்து படுக்க வைத்து காலில் லாடம் அடிப்பதை வேடிக்கை பார்க்க சிறுவர் சிறுமியர் பட்டாளம் தயாராய் நிற்கும். இப்பொழுது எல்லாம் காண்பதற்கரிய காட்சியாகிவிட்டது.  இன்னும் நிறைய கதைகளை இதே சொல்திண்மையோடு படைக்க வாழ்த்துக்கள்.

++

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசிப்பவர். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

தமிழ் இலக்கியம் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும்  உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள்,

நாவல் என்று பலவகை முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *