“உற்றுப் பார் “. .
என்னை நான் நேசிப்பதை விட
உன்னால் தான்
அதிகம்
நேசிக்கப்படுகிறேன்
–
நான் விழித்திருக்கையில்
மட்டுமல்ல
தூங்கும் போதும்
துல்லியமாக கவனிக்கிறாய்
–
என் விழிகளையும்
என் செவிகளையும்
என் நாசி துவாரங்களையும்
என் வாயையும்
நிழலாய் தொடருகிறாய்
–
உன் தேடலுக்கு
போதுமானதாக இருக்கிறது நிமிடத்தில் மலர்ந்து
நிமிடத்தில் உதிர்கிற
நிமிட சந்தோசம்
–
அதை என்னிலிருந்து
பெறுவதற்காகவே
என் பின்னே வருகிறாய்
–
பரம இரகசியமாக
என்னை எட்டிப்பார்க்கும்
பல பொழுதுகளில்
ஒரு பொழுதிலாவது
சக மனிதா
உன்னை நீ உற்றுப் பார்
அதிர்ந்து விடுவாய்
–
மௌனமாக வெளிப்படும்
உன்னை சூழ்ந்திருக்கும்
பல புன்னகைகள்.
++
ஐ.தர்மசிங்
நான் ” இலையளவு நிழல்” ” புன்னகையின் நிறங்கள்” ஆகிய இரு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.