பீரங்கியிலிருந்து குண்டு போடுவதைப் போல நிறைய மாடுகள் சாணி போட்டுக் கொண்டிருந்தன. முன்னாடி செல்லும் மாடுகளை பின்னால் செல்பவை கொம்புகளால் முட்டிக் கொண்டும், தள்ளிக் கொண்டும், இடித்துக் கொண்டும் சென்றன. இன்னும் சில மாடுகள் ஒன்றை ஒன்று நாவால் நக்கிக் கொண்டும், செல்லமாக குழைந்து முட்டிக் கொண்டும் வரிசையாக மேய்ச்சலுக்கு சென்றுகொண்டிருந்தன.

    காலை 9 மணிக்கெல்லாம் வெயில் தன்னுடைய கிளைகளை பூமி எங்கும் அதிகமாக பரவ விட்டிருந்தது. மரியதாய்புரம் என்ற அந்த சிறு கிராமத்தின் கிழக்கு பக்கமாய் கிட்டத்தட்ட 150 மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு கிளம்பிவிட்டான் சின்னமாடன். அவனுடைய பெயரே இதுதான். மாடன் என்ற பெயரில் சாமி இருக்கிறபடியால் சாமியினுடைய பெயரை இவனுக்கு வைத்தாயிற்று. அவர் சாமி என்பதால் பெரிய மாடன், இவன் ஆசாமி என்பதால் சின்ன மாடன்.

      அதிகபட்சமாக அவனுக்கு 70 வயது இருக்கலாம், அந்த கால ஆள். முதுமையின் காரணமாக நடையில் கொஞ்சம் தளர்வு, முதுகில் கூன் விழுவதற்கான அறிகுறிகள், கடைவாய்ப் பற்கள் எல்லாம் விழுந்திருந்தது, உடம்பின் சதை எல்லாம் வறண்டு போய் ஒட்டிக் கொண்டிருந்தது. காதில் பீடியை செருகி வைத்திருந்தான். ஒரு காலில் ஊதா கலர் செருப்பும், மற்றதில் வெள்ளையும் அணிந்திருந்தான். நன்கு சீவிய காய்ந்துபோன பனைமட்டையை, பெரும்பாலும் உபயோகிக்காமலே கையில் வைத்திருந்தான்.

    அந்த கிராமத்திலுள்ள எல்லா மாடுகளையும் மேய்க்கும் தொழிலாளி இவன்தான். இவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் சிறுவர்கள் கூட இவனை பெயர் சொல்லிதான் அழைப்பார்கள். அந்த ஊரில் நாடார் மற்றும் தாழ்ந்த சாதியினர் ஆகிய இரு பிரிவினர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 100 நாடார் குடும்பங்களும், 20 தாழ்த்தப்பட்ட குடும்பங்களும் இருந்தன. புரட்டாசி, ஐப்பசி தவிர குற்றால சாரலின் உபயத்தால் பெரும்பாலும் மாடுகள் மேய எப்போதுமே அங்கு பச்சை இருக்கும். ‘ஆடி அருங்கோடை’ என்பார்களே, அதைப்போல ஆடி மாசம் மட்டும் மாடுகள் மேய பச்சை இல்லாததால், அவற்றை அமர்த்துவதற்கு கொஞ்சம் சிரமப்படுவான் மாடன்.

     அந்த ஊரைப் பொருத்தவரை எல்லோருடைய மாடுகளையுமே இவன்தான் மேய்த்து வருகிறான். எல்லாம் எமதர்மன் வாகனம் எருமை மாடுகள் தாம், சமீபத்தில் ஒரு சிலர் பசு மாடுகளும் வாங்கி விட்டிருந்தார்கள். பசுமாடு இந்த ஊரில் யார் வாங்குவா? வேற யாரு, பண்ணையார் குடும்பத்து ஆளுவளும், ஒரு சில வாத்திமார்வளும்தாம்.

       தினமும் மாடன் சரியாக காலை 8.30 மணிக்கு தெற்குத்தெரு பொன்னையா நாடார் மாட்டை அவுக்க ஆரம்பிப்பான். பின் ஒவ்வொன்றாக தெற்குதெரு ஆரம்பித்து நடுத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு,வேதக் கோயில் தெரு, காலனி என்று எல்லாம் முடிந்து மாடுகளை ஊருக்கு வெளியே ஓட்டிக் கொண்டு வர 9 மணி ஆகிவிடும். அந்த குறிப்பிட்ட 30 நிமிடமும் தெரு முழுக்க மாடுகளும் கண்ணுகுட்டிவளுமா நிறைந்திருக்கும்.

       ஊரின் எல்லா பக்கங்களிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தாலும், கிழக்கு பக்கமாக கொஞ்சம் அதிகமாகவே உண்டு. எனவே மாடன் பெரும்பாலான நேரங்களில் ஊரின் கிழக்குப் பக்கமாகவே இருப்பான்.

       மாடனுக்கு விடுமுறை என்பது அவன் உடம்பு சரியில்லாமல் வீட்டில் கிடந்தால்தான், மற்றபடி கடிகாரத்திற்கு அடுத்து 365 நாளும் ஓடிக் கொண்டிருப்பவன் அந்த ஊரில் அவன் தான். நம்ம என்ன சர்க்கார் உத்தியோகமா பார்க்கோம்? வாரா வாரம் லீவு போடுததுக்கு என்பான். இந்த மாடுகளை எல்லாம் ஒரு நாள் கூட பார்க்காம இருந்தா, மாடன் எதையோ பறிகொடுத்தவன் போல இருப்பான்! அவனுடைய பிள்ளைகளைவிட இந்த மாடுகளை அதிகமாக தடவிக் கொடுத்திருப்பான்.

    அவனுக்கு உடம்பு சரியில்லாத நாட்களில் அவனுடைய பிள்ளைகளில் யாரேனும் ஒருவர் மாடு மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவனுடைய மனைவி பேச்சி தினமும் அந்த ஊர் சம்சாரிவளுக்கு களைபறிக்க போய்விடுவாள். இந்த மாடு மேய்க்கும் வேலை இவனுக்கு முன்பாக இவனுடைய சின்னையா மவன் பெருமாளிடம் இருந்தது. பின் பெருமாள் கேரளா பக்கம் எஸ்டேட் வேலைக்கு சென்று விட்டதால் , இவன் அந்த பொறுப்பை ஏற்றான்.

     சின்னமாடன் பெருமாள் போல அல்ல, பழகுவதற்கு இனியவன். யாரிடமும் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டான், நாடார் ஆளுங்களோட சின்னப் பிள்ளைகளை எல்லாம் அவங்கவங்களோட அப்பா பெயரைச் சொல்லி பின்னால் ‘முதலாளி மகன்’ என்று சேர்த்துக் கொள்வான். திருவிழா போன்ற நல்ல நாட்களில் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்க மாட்டான் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான். சிலர் துணிமணி, சிலர் தேங்காய், சிலர் வத்தல் என்று இந்தப் பட்டியல் நீளும். மாதத்திற்கு ஒரு மாட்டிற்கு 20 ரூபாய் வீதம் எல்லோரிடமும் மேய்ச்சல் காசு வாங்குவான். இதில் கூட கடன் சொல்கிற பரமாத்மாக்களும் இந்த ஊரில் உண்டு. மேலும் இவை தவிர தினமும் வீடுவீடாக சென்று போதுமான அளவுக்கு சாப்பாடு வாங்குவான். அப்படி வாங்கிக் கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டில் உள்ள மாடுகள் பற்றி கூறுவான். இன்னும் இரண்டு நாள்ல பெரிய மாடு கன்று போட்டுரும், சின்ன மாடு இப்பத்தான் முடை அடித்திருக்கிறது… என்று.

    மாடனுக்கு ஒரு பெருமை என்னவென்றால், அவன் பிள்ளைகள் எதுவும் அவன் சொல் பேச்சு கேட்பதில்லை, ஆனால் இந்த மாடுகள் மிக நன்றாக அவனுடைய சொல்லுக்கு கட்டுப்படும். என்ன ஒவ்வொன்றும் விதவிதமான பாசைகள் (பா….பா, ஏ…அருக்க நில்லு, ர் ர் ர் ரிடிகும் …. ர் ர் ர் ரிடிகும், ஹா….ஹா….ஹா). இவை தவிர சில மாடுகளை மட்டையை அடிப்பது போல ஓங்கினால்தான் கட்டுப்படும். பல சமயங்களில் அவன் நினைப்பதுண்டு, மனிதனுடன் ஒப்பிடும்போது இந்த மாட்டிற்கு பேச, சிரிக்க மட்டும் தெரிவதில்லை. மாடுகளுக்கு அடுத்தபடியாக மாடன் சின்ன பிள்ளைகள் மீது ரொம்ப பிரியமாக இருப்பான். தினமும் மாடு மேய்க்கும் போது காட்டில் கிடைக்கும் இலந்த பழங்களையெல்லாம் பறித்து, இரவு சோறு எடுக்கப் போகும் நேரம், எல்லா சின்னப்பிள்ளைவ கையிலும் கொடுப்பான். நிறைய பிள்ளைகள் இதனால் அவனை ‘இலந்தபழ மாடன்’ என்றே சொல்லும் .

    இலந்தப்பழம் பறிக்கும் போது அதில் உள்ள முட்கள் பல சமயங்களில் இவனுடைய விரலில் குத்திக் காயப்படுத்தும். ஆனாலும் இவனுக்கு அந்த காயங்கள் எல்லாம், அந்த சிறு பிள்ளைகள் கையில் பழத்தை கொடுத்தவுடன் அவர்கள் படுகிற சந்தோஷத்திற்கு முன்பு ஒன்றுமில்லாமல் போய்விடும். அவன் மாடுகளை அடிக்கவே மாட்டான் . மாடு ரொம்ப வம்பு பண்ணினால் அதிகபட்சம் வாலைப் பிடித்துத் திருகுவான்.

பலசமயங்களில் அடிப்பதுபோல பனை மட்டையை ஓங்குவான், ஆனால் அடிக்க மாட்டான். சில சமயங்களில் இவனுக்கே தெரியாமல் சில மாடுகள் ஏதேனும் விளைநிலங்களில் பாய்ந்து, அந்த மாசிலை சிறிது அழித்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் கூட நிலத்துக்குச் சொந்தக்காரன் கோபத்தில் இவனை இரண்டு அடி அடித்தால் கூட வாங்கிக் கொள்வான், ஆனால் மாடுகளை அடிக்க சம்மதிக்க மாட்டான். அவனைப் பொருத்தவரை அவன் மனம் என்கிற நிலம் மாடுகளும் மாடுகள் சார்ந்த இடமும்.

    பல வேளைகளில் மாடுகள் காட்டிலேயே கன்று போட்டுவிடும். அப்படி போடுகிற கன்றுகளையும் கூட நல்ல முறையில் வீட்டிற்கு மாடன் கொண்டுவந்து சேர்த்து விடுவான். மேலும் மாடுகளுக்கு ஏதேனும் நோய் வந்தால் கறுப்பட்டியுடன் இஞ்சி, சீரகம் கலந்து இடித்து இவனே அவற்றின் வாயில் வைத்துத் திணிப்பான். புதிதாக பிறக்கும் கன்று குட்டிகளுக்கு முதல் முத்தம் அவனுடையதுதான், தாய் மாட்டுக்கு முன்பே! நிறைய வீடுகளில் கன்று ஈன்றவுடன் முதல் முறை சீமைப்பால் கோவிலுக்கும் (சாமிக்கும்), இரண்டாவது மாடனுக்கும் தான்.

    மாடனுடய பிள்ளைகள் என்றாவது மேய்ச்சலுக்குச் சென்று வந்த பின், மறுநாள் மாடன் மேய்ச்சல் முடிந்து வந்ததும் யார் முந்தின நாள் சென்றார்களோ, அவர்களுக்கு குறைந்தது ஒரு அடியாவது விழும். இந்த மாதிரி நீ இன்னார் மாட்டை அடித்திருக்கிறாய் என்று மிகச் சரியாக சொல்லி விடுவான் . இதற்கு பயந்து அவனுடைய பிள்ளைகள் மாடன் இல்லாத நாட்களில் மேய்ச்சலுக்கு செல்லவே யோசிப்பார்கள்

    காலக் கடிகாரம் கொஞ்சம் வேகமாகவே சுற்றியது. மாடனுக்கு தற்போது 75 வயது ஆகிவிட்டது, முதுமையின் காரணமாக அவனால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. வேலை என்ன? எழுந்து சரியாக நிற்கக்கூட முடியவில்லை. உடம்பு தள்ளாட்டம், கண்பார்வை குறைவு, இளைப்பு …. இன்னும் பல நோய்கள் சேர்ந்துகொண்டது. தற்போது மாடுகள் எல்லாம் நிறைய குறைந்துவிட்டன, காரணம் மேய்ச்சல் நிலங்கள் இல்லாததுதான். அதற்குக் காரணம் தற்போது அந்த ஊரைச் சுற்றிலும் நிறைய காற்றாலைகள் உண்டாகி இருந்தன, மின் உற்பத்திக்காக.

     எனவே, அந்த காற்றாலைகளுக்காக ஊரை சுற்றி உள்ள முக்கால்வாசி நிலங்களை வாங்கி அதை சுற்றி வேலி போட்டு இருந்தார்கள். அதனால் மாடுகள் மேய இடங்களே இல்லை. இன்னும் சொல்லப்போனால், மாடன் அளவுக்கு அவனுக்கு அடுத்து மாடு மேய்க்க சென்றவர்கள் இல்லை, சும்மா ஏனோதானோவென்று வேலை செய்தார்கள். 

       ஒரு காலத்தில் 150 மாடுகள் இருந்த இடத்தில் இன்று வெறும் 50 மாடுகளே இருந்தன. நிற்க!

    இன்று அதிகாலை சரியாக 3 மணிக்கு மாடன் இறந்துவிட்டான். நேற்று இரவில் இருந்தே நெஞ்சு வலிப்பதாக கூறி வந்தவன் அதிகாலை உயிரை விட்டிருந்தான். பொதுவாக தாழ்ந்த ஜாதிக்காரர்கள் வீட்டிற்கு துஷ்டி கேட்க நாடார் வீடுகளிலிருந்து அதிகமானோர் வருவதில்லை, ஆனாலும் மாடனுக்காக நிறைய பேர் வந்திருந்தார்கள்.

    சரியாக காலை 9 மணிக்கெல்லாம் மாடனை பாடையில் கட்டி தூக்கி சென்றார்கள் குருசில் புதைக்க. அவர்கள் சரியாக வடக்குத் தெரு தாண்டி சென்றதும் கீழே தெருவில் இருந்த மொத்த மாடுகளையும் புதியான் ஓட்டிச் சென்றான் இவர்களுக்கு முன்பாக. இது ஏதோ தற்செயலாக நடந்தாலும், அந்த மாடுகள் எல்லாம் வரிசையாக மாடனை வழியனுப்ப வந்திருந்ததாகவே பார்த்தவர்கள் அனைவரும் நினைத்தார்கள். மாடன் என்கிற பெயருக்கு இவன் பொருத்தமானவன் தான் என மனதிற்குள் நினைத்து கொண்டார் ஒரு பெரியவர் .

      மாடனை புதைத்துவிட்டு எல்லோரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள். ஆனாலும் அவனுடைய நினைவுகள் என்றும் புதைந்து போகாது. தற்போது மாடுகளை மேய்க்கிற புதியான் மாடுகளை மேய்த்து விட்டு அன்று மாலையில் தற்செயலாக குருசு பக்கம் மாடுகளுடன் வந்தான். இவன் கூட மாடனுக்கு ஒருவகையில் தூரத்து சொந்தம்தான்.

     அந்த குருசில் (கல்லறை தோட்டம்) எப்போதுமே நிறைய புற்களும், செடிகளும் வளர்ந்திருக்கும். ஆனாலும், நிறைய மாடுகள் மேயாமல் அவனை புதைத்திருந்த குழி அருகிலேயே நின்றன. யார் கண்டது? ஒருவேளை சின்னமாடன் அவைகளை தடவிக் கொடுக்கிறானோ? என்னவோ!!

00

எட்வின்

தென்காசி மாவட்டம், மரியதாய்புரம் என்னும் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் 1983 -ம் ஆண்டு பிறந்தவர். வாழ்க்கையில் கேட்டதையும், கண்டனவற்றையும் எழுத ஆரம்பித்திருக்கிறார். தற்போது சேலத்தில் வசிக்கிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *