ஜான், அப்பாவிடம் போன வாரமே சொல்லியிருந்தான் . எப்படியாவது தனக்கு ஒரு ரூபாய் தந்து விட வேண்டுமென்றும், அதைவைத்து பெல்சி சைக்கிள் கடையிலிருந்து, வாடகைக்கு சைக்கிள் எடுத்து பழகப்போவதாக கூறியிருந்தான். ஏற்கெனவே இருமுறைகள் அவர் அடுத்த வாரம், அடுத்த வாரம் என்று கூறி இவனை ஏமாற்றியிருந்தார் . இவனும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். ஆனால் என்றைக்குப் பக்கத்துக்கு வீட்டு சுரேஷ் சைக்கிள் மிதித்தானோ, அன்றைக்கே முடிவு பண்ணி விட்டான். இந்த மே மாத லீவில் எப்படியும் சைக்கிள் பழகி விட வேண்டுமென்று. அதுவுமில்லாமல் அண்ணன் வேறு இவனை அடிக்கடி “சைக்கிள் மிதிக்கத் தெரியாத பெயல்” என்று குறை கூறிக் கொணடே இருந்ததால் எப்படியாவது சைக்கிள் பழகி விட வேண்டுமென்று துடித்தான் .
சைக்கிள் மிதிப்பவர்களுக்கு மிக அதிகக் கவனம் தேவை என்று அடிக்கடி ஜெயபால் சித்தப்பா சொல்லிக் கொண்டேயிருப்பார். முன்னாடி மட்டும் பார்க்க வேண்டும், சைடில் திரும்பக் கூடாது, முக்கியமாக பின்னாடி திரும்பக் கூடாது, பயப்படக் கூடாது என்று கூறிக் கொண்டிருப்பார். அவர்தான் போன மே மாத லீவில் இவன் அண்ணனுக்கு சைக்கிள் மிதிக்கக் கற்றுக் கொடுத்தார். அதனால் தானும் அவரிடமே கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் அண்ணன் கூறினான், ஏலே அந்த ஆளு நல்லாதான் சொல்லிக் கொடுக்கான். ஆனா சொல்லிக் கொடுக்கிற சாக்குல நல்லா முதுகுல அடியும் போடுதான் என்று! பின்ன சைக்கிள் பழகுறதுனா சும்மாவா ?
எப்படியோ ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரில் படிச்சாச்சு. அடுத்த வருஷம் எப்படிப்பார்த்தாலும், அப்பா ஆசிர்வாதபுரத்தில்தான் இவனைச் சேர்த்து விடுவார். அவருக்கு என்னவோ அந்தஊர் பிடித்த அளவுக்கு, பக்கத்துக்கு ஊரான பனையூர் பிடிக்கவில்லை. அதுவுமில்லாம இவன் அங்க போனா, அவரோட சொந்தக்காரங்க வீட்டில்தான் போய் பொழுதைப் போக்குவான், ஸ்கூல்-க்கு ஒழுங்காப் போக மாட்டான் என்று அவர் நினைத்தார்.
போன வாரம் ஷண்முகா தியேட்டரில் போய் ஊமை விழிகள் படம் பார்க்கும்போது, படத்தைக் கூட பார்க்க விடாம இந்த ராமு பெய அவன் சைக்கிள் மிதிப்பதைப் பற்றியே சொல்லிக்கொண்டிருந்தான் . இவனுக்குன்னா பயங்கர கோவமாயிருந்தது. தலைவர் படத்தைக் கூட இந்த சவத்து மூதி ஒழுங்காப் பார்க்க விட மாட்டிக்கான?, என்ன பண்ணுறது! படம் பார்க்க “டிக்கெட் போட்டு கூப்பிட்டு வந்தது அவன்தான் , வாடகை சைக்கிள்ள ஊரில இருந்து இவனை வச்சு ஓட்டிக்கிட்டு வந்ததும் அவன்தான். வயசுல வேற ஒரு வருஷம் மூத்தவன், ஏதோ ஒன்றாம் கிளாஸ் இரண்டு வருஷம் படிச்சதனால இவனோட பிரெண்டாயிட்டான் “.
காட்டுல வேற இந்த வருஷம் சரியான ‘பல்லாரி’ (பெரிய வெங்காயம்). ஆனா களைதான் அதிகமா இருந்தது. இவனுடைய அண்ணனுக்கு லீவுல மாடு மேய்க்கவே டைம் சரியா இருக்கும். அதனால அப்பா இவனை லீவுல தினமும் காட்டுல களை எடுக்கிற பசலிகளை ‘(பயிர்களுக்கிடையில் வளரும் ஒரு விதமான களை)’ மட்டும் பெட்டியில் அள்ளி மேட்டுக் கிணத்துல தட்ட வரணும்னு சொல்லியிருந்தார். அந்த பசலியை மட்டும் வயலில போட்டா அவ்வளவுதான்!, அது சிலந்தி வலை மாதிரி படர்ந்து மொத்தப் பயிரையும் கெடுத்துப்புடும். அதனால அதை வேரோட வெட்டி கிணத்துக்குள்ள தட்டிருவாங்க. அதுக்காகவே காட்டில் அங்கங்க இருக்கிற தண்ணி இல்லாத மேட்டுக் கிணறுகளை உபயோகப்படுத்துவாங்க!.
ஒருவழியா, வியாழக்கிழமையோட ஸ்கூல் முடிஞ்சுது. ராஜா பெயலும், கண்ணன் பெயலும் சேர்ந்து எல்லார் மேலயும் மைய உதறிப்புட்டானுவ. வருஷா வருஷம் பரீட்சை எழுத மை உபயோகிக்கிறாங்களோ இல்லையோ அடுத்தவன் சட்டையில் மட்டும் மை ஊத்திருவாங்க. ரமேஷோட சட்டை புல்லா முன்னாடியும் பின்னாடியும் தோசை அளவுக்கு மைய ஊத்திப்புட்டானுவ!. இவனுக்கு பயங்கர சந்தோஷம்.
நாளையிலயிருந்து காட்டுக்குப் போவலாம். காலையில் , எப்படியும் ஐந்து மணிக்கு எழுந்திரலாம், அப்படியே எழும்பாட்டியும் இந்த மாடுகளை பால்கறக்க அப்பா பண்ணைக்கு ஓட்டிட்டுப் போற சத்தத்துல முழிப்பு வந்துரும். முழிச்ச உடனேயே தாத்தா கடுங்காபி போட்டு ரெடியா வைத்திருப்பார். பிறகு ஆறு மணிக்கெல்லாம் அப்பா அல்லது சித்தப்பா கூட கருத்த காளையையும், வெள்ளை காளையையும் எழுப்பி வண்டில பூட்டி காட்டுக்குப் போயிறலாம். பின்னாடியே தாத்தா பால் மாடுவ எல்லாத்தையும் ஓட்டிக்கிட்டு வருவார் .
மாட்டு வண்டில போவும்போது இவனுக்கு மாடுகள் வாலை தூக்கி அடிக்கும்போதுதான் ரொம்ப பயமா இருக்கும். அது வேணுமின்னே அப்படி பண்ணுதுன்னு நினைச்சான். பிறகு அப்பாதான் சொன்னார்,” ஏல நமக்கு உடம்புல ஊருனுச்சுன்னா, அல்லது கொசு கடிச்சுதுன்னா கையால அடிக்கிறோம்லா, அது மாதிரிதான் அது வாலால அடிக்குதுன்னு”. ஊரை தாண்டி பெரிய விளை பக்கத்துல போகும்போது தினமும் இவன்தான் வண்டியை ஓட்டுவான். தான் ஓட்டும்போது அதுக தன்னை ஏமாற்றும் என்று நினைப்பான், ஆனாலும் அதுக எப்படி சரியான பாதையிலே போகுதுன்னு இவனுக்கு ஆச்சரியமாயிருக்கும், ‘எப்படி நம்ம ஓட்டாமலேயே அதுக சரியாய் போகுது’? அப்பாதான் சொல்வார், அதுவா தினமும் இதே வழியாதன போவுது! அதுக்குத் தெரியாதா? பாத தவறி போக அது என்ன ‘மனுஷ ஜென்மமா’ என்று?
முன்னாடியெல்லாம் இவனுக்கு ரொம்ப பெருமையா இருக்கும். ஏன்னா, இவன் வகுப்பிலேயே இவங்க வீட்டுல மட்டும்தான் மாட்டுவண்டி இருந்தது. லீவு நாளில் மாட்டுவண்டில காட்டுக்கு கூட்டிட்டுப்போவான்னு சொல்லியே நிறைய நண்பர்கள் இருந்தாங்க . என்றைக்கு ராஜ் மாமா சைக்கிள்கடை போட்டு, வாடகைக்கு வண்டிய விட்டாரோ அன்னியிலே இருந்தே எந்தப் பெயலுவளும் இவனை சீண்ட மாட்டானுவ. காசிருந்தா சைக்கிள் மிதிப்பாங்க, இல்லன்னா மத்தவங்க சைக்கிள் விடுறதை வேடிக்கை பார்ப்பாங்க. இதுக்காகவே எல்லாப் பெயல்வளும் ஊருக்கு வடக்கே கருத்தையா களத்துல கூடிருவாங்க.
அப்பா இவனை களை பறிக்க கூப்பிட்டதுமே இவன்,’ சைக்கிள் பழக எனக்கு காசு வேணும், காசு தந்தா வருவேன். இல்லன்னா வரமாட்டேன்” என்றான். இவனுக்கு அப்பா அடித்து விடுவாரோ என உள்ளூர பயமிருந்தாலும் சைக்கிள் இவனை அப்படி பேச வைத்தது! அவர் இதுவரை இவனை அடித்ததில்லை, பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார்.
அடுத்த நாள் இரண்டு ரூபாய் கொடுத்ததும், இவன் நேரே சைக்கிள் கடைக்கு ஓடினான். உடனே ராஜ் மாமா, ‘மருமகனே உமக்கு எதுக்குய்யா சைக்கிள்’! உங்க அப்பா வண்டிய எடுத்து மிதிக்க வேண்டியதுதானா – என்று?. அட, போங்க மாமா, ‘அண்ணன் வண்டி பழகி ஒரு வருஷம் ஆவுது. அவனே அடிக்கடி எங்கயாச்சும் போய் மோதிட்டு வந்திருதான்னுட்டு அப்பா அவனுக்கே சைக்கிள் கொடுக்கிறதில்லை , பிறகு எனக்கு எப்படி மாமா தரும்’?.
அமுல் பெய ஒருவழியா ஒன்பது மணிக்கு சிகப்பு பெயிண்ட் அடிச்ச சைக்கிளை டைம் முடிஞ்சு கொண்டு வந்து விட்டான். உடனே மாமாவிடம் துட்டு கொடுத்துட்டு, சைக்கிளை உருட்டிட்டு வந்தான். இதுக்கு முன்னாடியே நேரம் கிடைக்கும்போதெல்லாம் பீட்டர் சித்தப்பா சைக்கிளை வாங்கி உருட்டியதுண்டு. பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் சைக்கிளை உருட்டினான். கரெக்டா வேப்ப மரத்தடியில் ஜெயபால் சித்தப்பா, அவங்க நண்பர்கள் கூட பேசிக்கிட்டு இருந்தாங்க. இவனைப் பார்த்ததும் எந்திரிச்சி வந்து ஏல, மொத மொத சைக்கிள் விட போற, சிலுவை போட்டுக்கொள் (பிதா,சுதன், பரிசுத்த ஆவி) என்றார். இவன் உடனே, எனக்கா? சைக்கிளுக்கா? சித்தப்பா, என்றான். ஏல சைக்கிளுக்கு எதுக்குல? உனக்குதாம்லா என்றார் .
சைக்கிளை இடது பக்கம் முன்கையால் பிரேக்கையும், பின் கையால் கேரியரையும் பிடித்துக்கொண்டு இவனை சைக்கிளில் ஏறச் சொன்னார். முதல் இரண்டு முறை ஒரு காலை பெடலில் வைத்துக் கொண்டு இன்னொரு காலை தூக்கவும், பின்பு பயந்துபோய் கீழே இறக்கவுமாக இருந்தான. சித்தப்பா முதுவுல ஒரு அடி போட்டு ஏறுல எங்க அண்ணன் மவனே, சாவமாட்ட!, உன்னைய கீழ விழ விட்டுருவனோ என்றார். ஒருவழியா கம்பிக்கு மேலே காலை தூக்கி போட்டுட்டு, அது மேலேயே உட்கார்ந்தான். உம்! பெடல் இரண்டையும் மிதி என்றார் , இவனும் மிதித்தான். ஏலே இடது பக்கமா சாயாத, நட்டுக்க (நேராக ) கம்பில உட்காரு என்று முதுகில் ஒரு அடி போட்டார்.
அப்படியும் இடது பக்கமே சாய்ந்தான். பிறகு மறுபடியும் முதுகில் அடி விழுந்தது. இப்போது சித்தப்பா பின்னாடி கேரியரை மட்டும் இரண்டு கையால் பிடிச்சிக்கிட்டு உம், மிதி, மிதி என்றார். இவனும் மிதித்தான் . ஏதாவது ஒரு பக்கமா உடம்பை அப்படியே வளைத்தான். அப்படி வளைக்கும்போதேல்லாம் ஏல ! நாயி உடம்பை வளைக்காதே, சாயாதே, நேரே உட்காரு, பயப்படாதே! உன்னைய கீழ விழ விட மாட்டேன் என்றார் .
பின்னாடி கேரியரை பிடிச்சிக்கிட்டு மிதி, மிதி என்று கூறும் போதெல்லாம் இவன், சித்தப்பா சைக்கிளை விட்டுடாதீங்க, விட்டுடாதீங்க என்று பயந்து கொண்டே பின்னாடி லேசாகத் திரும்பி திரும்பி பார்த்தவாறு கூறினான். இவன் கவனம் முழுக்க அவர் சைக்கிளை விட்டு விடுவாரோ என்பதில்தான் இருந்தது. ஏல!, பின்னாடி திரும்பாத முன்னாடி மட்டும் பாரு, ரோட்டைப் பார்த்து சைக்கிள் மிதி என்றார் .
ஆம்! அப்படித்தான். விடாம நல்ல மிதில, மிதில என்றார் . எல்லாம் கொஞ்ச நேரந்தான். பிறகு சைக்கிள் மீதிருந்த பிடியை விட்டு விட்டார் . பொத்தென்று இடது பக்கமாக விழுந்தான். ரோட்டுல கிடந்த கல் காலிலும், கையிலும் குத்தி சிராய்த்து விட்டிருந்தது, லேசாக ரத்தம் கசிந்தது. “யம்மோ !யம்மோ! சித்தப்பா வலிக்குது! நீங்க என்னைய ஏமாத்திட்டிய, என்னைய வேணுமின்னே கீழ விழ வச்சிட்டிய” என்றான் .
ஏல, அழுவாத! என்ன சைக்கிள் பழகுறது ரொம்ப லேசுன்னு நினைச்சியோடே?. இந்தா, இந்த தழும்ப பாரு என்றார். அவரோட நெற்றிலயும், முழங்கால்லயும் இரண்டு தழும்பு இருந்தது. இதெல்லாம் நான் சைக்கிள் மிதித்து பழகும் போது வந்தது. பயப்படாத! எந்திரிச்சு மிதி , இனிமே சைக்கிளை விட மாட்டேன்னார். இது நடந்து சில நாட்களில் இவனும் சில அடிகளெல்லாம் பட்டு, ஒரு வழியா சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டான். பிறகு ஒன்பதாம் கிளாஸ் போகும்போது அப்பா ஒருவழியாக, இவனுக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்தார்.
அந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த நாள் இருக்கே, அன்னிக்குத்தான் உண்மையிலே திருநாள் போலே இருந்தது. ஏன்னா இவன் கடந்த மூன்று வருசமும் தினமும் எட்டு கிலோமீட்டர் (போக – 4, வர – 4 ) நடந்து போய்தான் படித்துக் கொண்டிருந்தான். சில சமயம் லேட் ஆனா அழுதுகிட்டே ஸ்கூல்க்கு ஓடுவான் .
இவன் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். எவ்வளவோ குட்டிக்கரணம் அடித்தும் ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகி விட்டான். பின் அம்மா அவனை டுடோரியல் அனுப்பி படிக்கச் சொல்லியும் பாஸாகவில்லை. அதனால் அப்பா எப்படியாவது இவனை படிக்க வைத்து விட வேண்டுமென்ற வைராக்கியத்தில் புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். தினமும் ஸ்கூல் முடிஞ்சதும் சைக்கிள்-ல போட்டி போட்டுத்தான் இவனும், இவன் நண்பர்களும் வருவாங்க. அதுவும் பொம்பளை பிள்ளைகளை கண்டுட்டா போதும். இரண்டு கையையும் விட்டுட்டே வண்டி ஓட்டுவாங்க!.
இப்படி, ஸ்கூல் முடிக்கிற வரை சைக்கிளைத்தான் உபயோகித்தான். பிறகு டிகிரி படிக்கிறதுக்காக கோயம்புத்தூர் வந்து கல்லூரி விடுதியிலே தங்கியதால் அதற்கும், இவனுக்கும் இடையில் இருந்த பிணைப்பு சிதைந்து போனது. இப்பவெல்லாம் சைக்கிள் யாரு உபயோகப்படுத்துறாங்க? சொல்லுங்க பார்ப்போம்?. ஜெயபால் சித்தப்பா பையன், வாடியூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். இப்பவே அவரோட பைக்கை வீட்டுல சும்மா இருக்க விடுறது இல்ல. ‘வாடகை சைக்கிள் நிலையத்தின்’ மூலமாக சம்பாதித்த பணத்தில்தான், மாமா மூத்த மகளுக்கு நகையே வாங்கினார். இன்றைக்கு அவரும் சைக்கிள் கடையை மூடிவிட்டு வேறு வேலைக்குச் சென்று விட்டார்!
இவன் அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக இன்று இந்த அளவு இவன் படித்ததற்குக் காரணம் சைக்கிள்தான். ஏனென்றால் அப்போதெல்லாம் இப்ப உள்ளது போல, பஸ் வசதியே கிடையாது. ஒரு நாளில் ஒரு ஊருக்கு ஒரு முறை மட்டுமே வந்து போகும் பேருந்தால் என்ன நன்மை ஏற்பட்டு விடும்?. இவன் ஐந்தாம் கிளாஸ் செட்டுல முப்பது பேர் படிச்சாங்க. அதுல மொத்தத்துலே ஐந்து பேர் மட்டும்தான் (ஆண்-3, பெண்-2 ) ஸ்கூல் படிப்பை முடித்தார்கள். ஆண்களை விடுங்க, இவன் செட்டுல படிச்ச பெண்கள் தொடர்ந்து மேலே படிக்காததற்கு ஒரே காரணம் போக்குவரத்து வசதியின்மைதான் .
காலமாற்றத்தினாலும்., முதுமையினாலும் மாட்டுவண்டி ஒட்டிய அப்பா இன்று ஸ்கூட்டர் வைத்திருக்கிறார். சைக்கிள் ஒட்டிய இவன் பைக் வைத்திருக்கிறான். கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்தான் . நள்ளிரவில்தான் வீடு போய் சேர்ந்தான். அன்று இரவு நல்ல மழை . காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்காக புழக்கடை பக்கம் சென்றான் .
அங்கே இவன் பழைய சைக்கிளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அது கண்ணீர் சிந்துவது போல இவனுக்குத் தோன்றியது!
000

எட்வின்
தென்காசி மாவட்டம், மரியதாய்புரம் என்னும் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் 1983 -ம் ஆண்டு பிறந்தவர். வாழ்க்கையில் கேட்டதையும், கண்டனவற்றையும் எழுத ஆரம்பித்திருக்கிறார். தற்போது சேலத்தில் வசிக்கிறார்.