மாரி கிருஷ்ணமூர்த்தி
காற்றடித்த காலையில் இழுத்தி போர்த்திய போர்வைக்குள் குளிர் ஊசியை போல இறங்கிக்கொண்டிருந்தது. மார்கழி மாத குளிரில் அவள் பெரியவன் வீட்டில் இருக்கத்தான் ஆசைப்பட்டாள். மாத முறை இப்பொழுது நடுவனின் வீட்டில் விட்டிருக்கிறது. அவள் அந்த மாத கணக்குமுறையை எண்ணிக்கொண்டிருந்தாள். மார்கழி அமாவசை போனால் பெரியவன் வந்து கூட்டி போவதாக சொன்னான். என்ற நினைப்பு வந்ததும் கொஞ்சம் அவளுக்கு ஆசுவாசமானது. நடுலவன் அவ்வளவு மோசமெல்லாம் இல்லை ஆனால் அவன் வீடு கொல்லையில் இருப்பதால் குளிர் அதிகமாக இருப்பதாக உணர்ந்தாள். இத்தனைக்கும் நான்கு மருமகளில் கொஞ்சம் கருணையோடு பார்த்துக்கொள்ளுபவள் பார்வதிதான். இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுப்பி டீ கூட கொடுப்பாள். சின்னவன் வீட்டிலெல்லாம் ஒன்பது மணிக்குதான் எழுந்தே வெளியே வருவார்கள். போர்வையை இழுத்து போர்த்தியபடி எழுந்து உட்கார நினைத்தாள். ஆனால் கால் ஏனோ நெல்லு மூட்டை மாதிரி கனத்து இருக்க இடது காலை மடக்கி வைத்து எழுந்து உட்கார்ந்தாள்.
ஜன்னலுக்கு வெளியே இருந்த முருங்கை மரம் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் மூடியிருக்க அவளுக்கு அடிவயிற்றில் முட்டிக்கொண்டு வர பக்கத்தில் இருந்த பீ டப்பாவை எடுக்க சிரமப்பட்டாள். கைத்தடியில் கொஞ்ச கொஞ்சமாக நகர்த்தி பிட்டத்தில் வைத்து முக்கி பார்த்தவளுக்கு வயிறு வலி மட்டும் அப்படியே இருந்தது. ஆனால் வெளிக்கு வரவேயில்லை என்று தெரிந்ததும் ஒரு ஆசுவாசம் கிடைத்தது. இல்லையென்றால் இந்த நாத்ததுக்கு பேரனிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.
பனி கொஞ்ச கொஞ்சமாக விலக மலை அடிவாரம் லேசாக தெரிய ஆரம்பித்தது. கொச்சுனி துணி கட்டியதிலிருந்து இந்த ஊர விட்டு எங்கும் போனவள் இல்லை. சுகவனம்.பதினாறு வயதில் இதே ஊரிலே பொறந்து வளர்ந்து தாலி கட்டி ஐந்து வருடத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றடுத்து கொடுத்த ஆறாவது மாசம் கணவன் போன பிறகு இந்த பங்குனி வந்தால் என்பது தொடுகிற சுகவனம் யார் உதவியும் இல்லாமல்தான் வாழ்ந்துக்கொண்டிருந்தாள்.
சிறை மீட்டாள் கோயில் திருவிழாவுக்கு போய் வந்த நாளில்தான் வரப்பில் கால் இடற இடுப்பெலும்பில் சின்னதாய் விரிசல் விட்டு படுத்த படுக்கையானாள்
கோட்டை கட்டி ஆண்ட நாட்டுக்கும் பக்கத்து நாட்டுக்கும் ஏரி நீர் பிரிவினை சண்டை வர ஊரே போர் கோலமான நாளில் தாலி கட்டி இரண்டாவது நாள் போருக்கு போக ஆயத்தமானான் ஆநீரன். சண்டையில் வீரர்கள் சிறை பிடித்து வைக்க ஊருக்குள் புகுந்த பக்கத்து நாட்டுக்காரர்கள் பெண்களை சிறை எடுக்க துணிச்சலோடு சண்டையிட்டு தன் கணவனை சிறை மீட்டு வந்தாள் ஆநிரையாள். அவளை வரவேற்க யானை கொண்டு அரசன் காத்திருந்தான் என பாட்டி சிறைமீட்டாள் கதை சொன்னது ஞாபகம் வர அவளுக்கு நெஞ்செலும்பில் தெம்பு கூடியது.
கணவன் விட்டுப்போன அறுபது செண்ட் நிலத்தில் உழைத்து நான்கு பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து அந்நிலத்தை பங்கிடும் போது சுற்றிலும் நகரம் விரிய ஆரம்பிக்க வருடத்து வருடம் நிலத்தின் மதிப்பு ஏறவும் மூன்று பிள்ளைகள் கொல்லையிலே வீடு கட்டி வந்து விட்டார்கள். ஊரில் மூத்தவன் மட்டும் இருக்க அவளுக்கு ஊரோட சனத்தை பார்க்க அந்த ஒரு மாதம் தான் கிடைக்கும் என்று நினைத்த போதே ஊரில் வாழ்ந்த பழைய வீடும் .அதில் உலவிய மனிதர்களும் ஞாபகம் வர அதை கொஞ்சம் அசை போட ஆரம்பித்தாள்
வீட்டு பின் வாசலை எட்டி வைத்தால் புயலை தோட்டத்தில் நடுவில் இருக்கும் இலுப்பை மரம் தான் அவளின் முதல் ஞாபகமாக தங்கியிருந்தது. அடுத்து சிறைமீட்டாள் கோயிலில் ஆடு வெட்டிய நாள் இப்படி துண்டு துண்டாக ஊர் ஞாபகம் வர சின்னயனின் முகத்தில் நினைவுகள் நின்றது.
குளிர் வாட்டி கிடந்த இதே மாதிரி ஒரு நாளில் தான் அந்த இலுப்பை மரத்தருகே சின்னயனை முதன் முதலில் பார்த்தது. இருக்கி கிடந்த இடுப்பு வனப்பில் கட்டியியிருந்த கொச்சு துணி பத்தாமால் பிட்டம் வெளித்தெரிந்து அதன் பின் பக்கம் பிதுங்கியிருக்க அருவாளோடு பொயல அருக்க பெருவாத்தாளோடு நின்றிருந்த உருவம் இன்னும் அவள் ஞாபகத்தில் இன்று நடந்தது போல் இருந்தது ஆச்சரியம் அளித்தது.
பருவ வயதில் பெருவத்தாளின் பெருத்த முலைகளின் உரசி வரும் புயலையை வாங்க கிட்டங்கியில் ஆண்கள் வரிசையில் காத்துக் கிடப்பார்கள் என்று அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறாள்
அதன் ஆண் உருவமாய் சின்னயன் தெரிந்தான் அவளுக்கு.
அந்த நிலத்துக்கு வேலியாய் கரடு முள் இருந்தாலும் தட்டான் பாறை தான் எல்லைகல். அங்குதான் இளவட்டத்திலிருந்து பெருசுகள் வரை இரவு முழுக்க ஊர் கதை பேசுவார்கள். பாறைக்கு மே புறம் காலனியும்,கீழ் புறம் ஊரும் இருக்க அதுக்கிடையே அப்பனின் ஒரு ஏக்கர் செம்மண் நிலம்தான் இரண்டுக்கும் இடையே பிரிவாய் இருந்தது.
மரத்தேலியிருக்கும் புயல கொடிகளில் ஒவ்வொரு இலையையும் அறுத்து வந்து பின் வாசலில் இருக்கும் கொட்டாயில் காய போட்டு விட்டு சோத்துக்கு நின்ற போது யாருக்கும் தெரியாமல் சீனி கிழங்கை அவனிடம் கொடுத்த போது லேசாக அவன் கையை தொட்டது ஞாபகம் வர கையை பார்த்தாள். உடல்காயங்களில் இருக்கும் தழும்புகள் போல காப்புகளுக்கிடையில் அவனுடைய ஞாபக ரேகைகள் அழிந்து இருப்பது போல தெரிந்தது.
முக்கால் மரக்கா நெல்லுக்காக கழனிக்காட்டுக்கும்,கொல்லைக்கும் ஓடிய கால்கள் மரப்பட்டையில் இருக்கும் வெடிப்புகள் போல காலத்தில் வெடித்திருப்பதையும் பார்த்தாள். காலுக்கும்,தலைக்கும் இடையே இருக்கும் இந்த உடலுக்குத்தான் எத்தனை எத்தனை கோலம் என்று அங்காலாய்ந்த மறுகணம் சின்னயன் நினைவு விட்டுவிட்டோமா என்று தோன்றியது.
மறதிக்கும்,நினைவுக்கும் இடையில் சின்னயன் ஆதுரமாய் அவள் மடி சாய்ந்து பேசிக்கொண்டிருந்த தட்டான் பாறைகள்
இப்பொழுதெல்லாம் அடிக்கடி கனவில் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை
போன வாரம் கூட கூட்டுக்காரியாய் இருந்த ராவாத்தா வந்த போது
சின்னயனை ஞாபகப்படுத்திவிட்டு போனாள்.
”ஏக்கா அந்த இடத்த உன்னும் உங்க பசங்க கொடுக்காம சாமி நிலம்னு வம்பளக்கிறானுக அது மட்டும் கொடுத்துட்டா ஊரும் சேரியும் ஒண்ணாயிடும்னு எல்லச்சாமினு அளக்கிறாய்க எத்தனை உசுரு அதுக்காக போவுனு தெரியலையே”
”அது சாத்தன் தாத்தகிட்ட உங்கப்பாரு குத்தகைக்கு புடுச்சுதுதானே அப்புறம் ஏ இவ்வளவு வீம்பு பன்னிறானுக நீயாவது சொல்லக்கூடாதா” என்று கேட்ட போது
”நா என்னடி பன்னுவேன் இவனுங்களே கொடுக்கலாம்னு நினைச்சாலும் மேலே இருக்கிறவன்க விடமாட்டுறான்க”
அவளிடம் யாருக்கும் தெரியாமல் சின்னயன் அடிக்கடி கனவில் வந்துக்கொண்டிருக்கிறான் என்று சொன்ன போது
”ஏக்கா ஆச நிறவேறாம போனவன் திரும்ப திரும்ப கனவுல வர்ரான்னா நீ எதுக்கும் பாறையாண்ட இருக்கிற புத்து கோயிலுக்கு பூசை போட்டுடு” என்று சொன்ன போது ஒரு நிமிடம் அவன் கனவில் வருவது இதமாகத்தான் இருக்கிறதை சொல்லலமா என்று வாயெடுத்தவள் விட்டுவிட்டாள்
ஏ உடம்பு அவன் கனா கானுற வயசானு பேச்சை திருப்பி ஊள்ளுர அவன் கனவில் வர வேண்டும் என்று புத்து கோயில வேண்டிக்கொண்டாள்.
ஒரு நாள் செவகாட்டு மாட்டை ஓட்டியபடி, இன்னொரு நாள் மொடை முள்ளை வேலி கட்டியபடி, மற்றொரு நாள் பஞ்சாரத்த்து கிணற்றில் குளித்தபடி,இன்னொரு நாள் காவ கோட்டை எல்லைக்கு வரும் எதிரியை அடித்து மார் மேல் போட்டபடி என அவன் கனவில் வந்துக்கொண்டு இருப்பது சந்தோஷமாக இருந்தாலும் எல்லக்கல் பக்கத்தில் இருக்கும் கள்ளிக்காட்டில் விசமேறி அவன் இறந்து கிடந்த நினைவுகள் வந்தால் மட்டும் உடம்பு உதற ஆரம்பிக்கிறதை அவளால் தடுக்க முடியவில்லை
யானை மீது சின்னயனை சிறை மீட்டு கொண்டுவருவது போல கனா வரலையே என்று துக்கப்படும் போதே அவள் கண்கள் கலங்கியது
அடி வயிற்றில் பீக்கட்டு முட்டி கொள்ள மறுபடியும் அங்கிருந்த டப்பாவை எடுத்து பீ மோண்டு விட்டு இருக்கும் போதுதான் பேரன் உள்ளே கத்தும் சத்தம் கேட்டது
அவ தங்கச்சிய காலேஜிக்கு போனமா வந்தமான்னு இல்லாம அந்த பற பயல அதுவும் ஏ முன்னாடியே காதலிக்கிறேன்னு சொல்லுவியா நான் சொல்றது கேக்கலைன்னா இருக்கவே இருக்கு தட்டாபாறை கள்ளிகாடுனு அவன் சொன்னது நெஞ்சில் திக்கென்றிருந்தது.
வெளியே வந்த பேரனை பார்த்ததும் பயத்தில் பீடப்பாவை தவறி விட்டாள் சுகவனம். அது ஒரு கோடு போல அவன் காலடியில் ஓடி நின்றது. கொக்கரித்து அடங்கிய அவன் நாலு இளவட்டங்களை கூட்டிக்கொண்டு தட்டான் பாறை எல்லகல் திருவிழாவுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போன பிறகும் அந்த கள்ளிகாட்டில் இறந்து கிடந்த சாக்கையன் உருவம் அப்படியே நிலைத்து நிற்க
வீட்டுக்குள்ளிருந்து ஒருவன் சாக்கயன் நிழல் போல வெளியே வந்தான். அவளோடு யானையில் ஏரி வரும் திமிர் நடையில் பேத்தி வந்து அவன் கை அணைத்து நின்றாள். சுகவனத்துக்கு நெஞ்சும்,கண்களும் ஓரே நேரத்தில் ஈரமானது.
00

மாரி.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர்
கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும் கடந்த பத்து வருடமாக
இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்”சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும்,ஊர் பொது கிணறு புணரமப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார்.அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார்.தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார்.அப்பா மாரிமுத்து.அம்மா ஜெகநாதம்மாள்.மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.

