அன்பால் தீட்டி வைத்திருக்கும்
கத்தியை எதைச் சொல்லி
உங்கள் தொண்டை மீது வைத்து
என் பாசத்தையும்
என் கோபத்தையும் மெல்ல மெல்ல துளியும் வலியில்லாமல்
உங்கள்மீது காட்டுவேன்.
உங்களால்,
சொர்க்கத்திற்குத் தயாராக இருக்கும்
இந்த உயிரை கொஞ்சம் கொஞ்சமாக
தேற்றிக் கொண்டிருக்கிறேன்
உங்களால் சொர்க்கம் எப்படியும் அடைந்திடுவேனென்று தெரிந்து.
000
உனக்காக நானெழுதிய
ஒவ்வொரு கடிதத்திலும்
பல கண்ணீர் நிறைந்திருக்கும்.
அதனால், வார்த்தைகள் அழிந்திருக்கலாம்
இடம் மாறி பொருள் புரியலாம்
புரியாமலும் போகலாம்.
அதனால், இந்த முறை
நான் எதையும் எழுதவில்லை
இனி எழுதப் போவதுமில்லை.
நீ ஒன்று மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்.
முன்னனுப்பிய ஒவ்வொரு கடிதத்திலும்
நான் எழுதிய ஒவ்வொரு எழுத்தும்
உன்னைப் பற்றியதாகவே இருந்திருக்குமென்று நம்பிக்கைகொள்.
00

என்னுடைய பெயர் நீ.இராதாகிருஷ்ணன். ‘துங்கன்’ என்ற புனைப்பெயரில் கதை மற்றும் கவிதை எழுதி வருகிறேன். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் படித்து வருகிறேன். கவிதை நூல் தொகுப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறேன்.

