என் பெயர் தனியரசி என்கிற ரூத். நான் சொல்லப் போறது என் கதை, ஆமாம் என் கதைதான் ஆனா எழுதப் போறது நா இல்ல ஒரு எழுத்தாளர்.
ஏ நீயே எழுதலாமே! என்று கேட்கலாம்.
நான் முடிவற்ற காலத்தில் புதைந்து போய் கொஞ்ச நாட்கள் ஆகிவிட்டது. திரும்பி வரமுடியாத குகைக்குள் மாட்டிக்கொண்டவள் போல அங்கேயே கிடக்கிறேன். எப்பொழுதாவது ஒரு முறை தான் தன்னுணர்வு வரும். அப்பொழுது உயிர் பிழைப்பதற்கான வேலையே சரியாக இருக்கும். இதன் மத்தியில் எங்கே எழுதுவது?
அதற்குத்தான் நான் மாட்டிக்கொண்டிருக்கிற காலவெளிக்குள் இந்த எழுத்தாளர் கொஞ்ச நேரம் வந்து போனார். எனக்கு சரியான ஆள் கிடைத்துவிட்டாரென்று எழுதுவதற்கு இவரை தேர்ந்தெடுத்தேன்.
சரி கதைக்கு போவோம்.
அது ஒரு மதிய நேரம். எங்கள் வீட்டு முன்வாசலில் இருந்த மாமரத்தடியில் காலம் கைவிடப்பட்ட ஒரு கல்வெட்டு நட்டுவைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தேடி ஒருவர் வந்திருந்தார். இப்பொழுது நினைக்கிறேன். அவரை நான் பார்க்காமல் இருந்திருக்கலாம். சரி விதியோ அல்லது தற்செயலோ அவரை பார்த்துவிட்டேன்.
அப்பொழுது நான் பனிரெண்டாவது படித்துக்கொண்டிருந்தேன். அது பரிட்சை நேரமும் கூட. வந்தவர் நாற்பது வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தார். அந்தக் கல்வெட்டு முழுக்க எங்க அம்மா காலையில் போடும் சாணி அப்பியிருந்தால் அதை கழுவ என்னைத்தான் தண்ணி எடுத்து வர சொன்னார். ஆவலுடன் ஓடிப் போய் தண்ணி எடுத்து வந்து கொடுத்தேன்.
நீட்டாக பேன்ட் சர்ட் அணிந்து ஷேவ் செய்த முகத்தில் குவி லென்ஸ் கண்ணாடி மாட்டிக்கொண்டிருந்தார். தலைமுடிக்கு டை அடித்திருந்தாலும் காதோரம் மட்டும் புதிய முடிகளில் வெள்ளை ரோமம் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. இடது பக்கம் இருந்த கழுத்து இறக்கத்தில் விசித்திரமான ஒரு மச்சம் நட்சத்திரம் மாதிரி இருந்தது. அது பார்ப்பதற்கு அழகாகவும் அதே சமயம் எதிர்ப் படுபவர்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தை கடத்தும் குறியீடாகவே எனக்கு பட்டது. அவர் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியர் என்று சொன்னார்கள். அதை பின்னாளீல் அவரை தேடும்போதுதான் தெரிந்து கொண்டேன்
(அந்த நேரம் பார்த்து ஆட்டை பட்டியிலிருந்து ஒட்டுவதற்கு முன் எங்கள் வீட்டுக்கு பின்னாடியிருந்த ஏரிக்கரை காளி கோயிலுக்கு பூசை செய்வதற்காக பூசை சாமான்களை வாங்கி வந்து என்னை கூட்டிக்கொண்டு போனார் தாத்தா. வெள்ளிக்கிழமையானால் தாத்தா தான் அந்த காளி கோயிலுக்கு தண்ணி ஊத்தி பொட்டுல்லாம் வைத்து பூசை செய்வார். அவரிடம் அருள் வாக்கு கேட்க நிறைய பேர் வருவார்கள். பூசை நடக்கும் வரை ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் அவ்வளவு துரு துருவென்று செய்வார். பூசை நடந்து முடிந்து சக்கரத்தில் உட்கார்ந்தால் அவ்வளவு தான் துடி எழுந்து ஆடும் காளி அவருள் பிரவேசிப்பாள். அப்புறம் சொல்வதெல்லாம் மாயம் தான். ஐந்து நிமிடம் தான் அதன் பிறகு தன்னிலைக்கு வருவார். குழந்தை முகம் மீண்டும் வந்து விடும்.
பூசை முடிந்து திரும்பி வந்து பார்த்த போது அந்தக் கல்வெட்டில் ஏதோ புரியாத மொழியில் எழுதியிருந்ததற்கு மேல் மை தடவியிருந்ததால் கருப்பான எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தது. அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது அதற்குள் அவர் போய் விட்டிருந்தார்.
அந்தக் கல்வெட்டின் வலது பக்கம் கீழ்க் கோடியில் தாமரை மொட்டு போல ஒரு சின்னம் இருந்தது. அதைப் பார்த்த கணம் அவர் கழுத்தில் இருந்த அந்த நட்சத்திர மச்சம் ஞாபகம் வர உடல் சிலிர்த்து நரம்புகளில் துடி எழுவதை உணர முடிந்தது.
தாத்தாவிடம் ஓடிப் போய் சொல்லியபோது அவர் காளி கோயிலைப் பார்த்து, ஆத்தா எனக்கு அடுத்து யார் என்று பயந்துக்கொண்டிருந்தேன். நீயே வந்து எனக்கு வழி சொல்லிட்ட என்று தரையில் நெடுவாகாய் விழுந்து கும்பிட்டார்
நான் திரும்பி அந்தக் கல்வெட்டை பார்த்தேன். அது எரியும் காணலில் மிதக்கும் எழுத்துருக்கள் அலைஅலையாய் எழுந்து என்னை நோக்கி வந்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை தோன்றியது. நான் கண்களை மூடி அப்படியே தரையில் சாய்ந்துவிட்டேன். இரண்டு நாட்களுக்கு மேல் உள் காய்ச்சல் வந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன். கொஞ்ச நாட்கள் அந்தக் கல்வெட்டை பார்ப்பதையே தவிர்த்தேன்
அப்பொழுதுதான் ஒருநாள் பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்தது. அதில் எனக்கு எண்பது சதவிதத்துக்கு மேல் மார்க் வந்திருந்தது. அது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நான் சுமாராக படிக்கும் மாணவிதான். அந்த காய்ச்சல் கண்ட பிறகு எனக்குள் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று நம்ப ஆரம்பித்தேன்.
என்னை ஒரு கிருஸ்த்துவக் கல்லூரியில் நர்சுக்குக் படிக்க வைக்க அப்பா ஊரிலிருந்த சர்ச்சில் தாஸ் பாதிரியாரிடம் சிபாரிசுக் கடிதம் வாங்க போயிருந்தோம். ஓட்டு கூரைக் வேய்ந்த நீளமான கட்டிடத்தில் காற்றும் வெளிச்சமும் சரி கணத்தில் அந்த அறையை நிரம்பியிருந்தது. அது சாயந்திரம் நேரமானதால் உள்ளே இருந்த கன்னி மேரி மாதா கையில் இருந்த குழந்தை இயேசு மேல் ஜன்னலின் வழியாய் வந்த வெளிச்சம் நட்சத்திரம் மாதிரி விழுந்துக்கொண்டிருந்தது
நீங்கள் நம்பமாட்டீர்கள்.
அந்தக் கணம் என்னுள் எழுந்த உணர்வெழுச்சிக்கு இந்த உலகத்தின் எத்தனை இன்பம் கொடுத்தாலும் தகாது. அப்போதே முடிவெடுத்தேன் நான் ஒரு கன்னியாஸ்திரி ஆகவேண்டும் என்று. ஆனால் அடுத்த கணமே அந்த கல்வெட்டில் ஓரம் இருந்த தாமரை மொட்டும், அவர் கழுத்தில் இருந்த நட்சத்திர மச்சமும் ஞாபகம் வர உடல் அதிர ஆரம்பித்தது
வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக அந்தக் கல்வெட்டை சாணி ஊத்தி மொழுகி விட்டு தெருவில் கிடந்த சாக்கு பைகளை எடுத்து அதன் மேல போட்டு மூடினேன். அன்று இரவு முழுக்க அந்த மாய எழுத்துக்கள் கானலில் எழுந்து வந்த கனவு போல திரும்ப திரும்ப வந்துக்கொண்டே இருந்தது. அதிலிருந்து தப்பிக்க நான் காடு மேடு என எங்கெல்லாமோ சுத்துகிறேன். அது விடாமல் என்னை துரத்திக்கொண்டே பின்னாடி வந்து கொண்டிருந்தது.
திடுக்கிட்டு எழுந்து பார்க்கிறேன். தாத்தா என் பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவர் எப்பொழுதும் ஆட்டுப் பட்டியில் தான் படுப்பார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் வீட்டுக்குள் படுத்ததே இல்லை. நிலாவெளிச்சத்தில் வாசலில் இருந்த அந்த கல்வெட்டில் நிழல் தாத்தா காலடியை தொட்டுக்கொண்டிருந்தது. நான் எதுவும் சொல்லாமல் வெளித் திண்ணையில் வந்து படுத்துக்கொண்டேன். விடிகாலையில் எழுந்து பார்க்கும் போது தாத்தா எனக்கு பக்கத்தில் திண்ணை உத்திரத்து தூணை கட்டிபிடித்தபடி மொனறிக்கொண்டிருந்தார். நெற்றியில் கை வைத்து பார்த்தபோது கை சுடும் அளவுக்கு உடல் சூடு கண்டிருந்தது. பாதி கண்ணைத் திறந்தபடி ஒரு யாசகனை போல என்னை பார்த்து. ஆத்தா உனக்குள்ள காளியிருக்கா அத நீ நம்பனும் ஒங்கப்ப ஆத்தா சொல்றத கேக்காதே. எனக்கு அப்புறம் நீ தான் காளிய பார்த்துக்குனும். அது தான் தாத்தா பேசிய கடைசி வார்த்தை. இரண்டு நாள் படுக்கையில் கிடந்தவர், அப்படியே அன்ன ஆகாரம் இறங்காமல் இறந்து போனார்.
தாத்தா இறந்து சரியாக மூன்றாவது நாள் மதியம் நர்ஸ் கல்லூரியிலிருந்து கடிதம் வந்தது
2
அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு விடிகாலையில் நானும் அப்பாவும் உயர்ந்து நின்ற கல்லூரி காம்பவுண்டுக்குள் நுழைந்தோம்.
அலுவலக அறைக்கு முன்னாடி இருந்த பெரிய மைதானம் ஆள் அரவமற்று காலியாகக் கிடந்தது. மாமரங்களும்,தென்னை மரங்களும்,பெரிய வாதாம் மரங்களுக்கிடையில் சுற்றிலும் இருந்த வேலி முழுக்க காகித மரம் சொறிந்த பூக்களுக்கிடையில் குழந்தை முகம் கொண்ட இயேசு சிலை தனித்திருந்தது. அதன் பக்கத்தில் மூன்று மெழுகுவர்த்திகள் பாதி எரிந்து ஒழுகிக்கொண்டிருந்தது
கொஞ்ச நேரத்தில் கல்லூரிக்கு பின்னாடியிருந்த மழலை பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக காலை துதிக்கு சிலையின் முன் கூடினார்கள். பின்னாடியே நீல அங்கியில் ரூத் சிஸ்டர் நின்று கொண்டிருந்தார்.
அவரின் முகம் பார்த்துமே எனக்குள் இருந்த கன்னியாஸ்திரி கனவு துளிர் விட ஆரம்பித்தது. அவரை ஒவ்வொரு அசைவாக கவனிக்க ஆரம்பித்தேன். துளிகூட கடுமையில்லாத முகம், ஒல்லியான தேகம், இன்னும் முப்பதை தாண்டாத உடல் வாகு என அவரை யார் பார்த்தாலும் அடுத்த கணமே மனதில் கருணை சுரக்கும். நான் அப்பாவிடம் சொல்லிவிட்டு அக்கூட்டத்தோடு ஓடிப் போய் நின்றுக்கொண்டேன். அதற்கு அப்புறம் நடந்த ஆராதனைப் பாடல் என்னுள் இன்னும் பசுமையாக இருக்கிறது.
ரூத் சிஸ்டரை சிறு வயதில் அம்மாவோடு பார்த்திருக்கிறேன். அவர் எங்கள் ஊர் சபையில் தான் முதலில் ஊழியம் பார்த்தார்கள். கன்யாகுமரிக்காரர் அவர்கள் பேசும் தமிழே அவரிடம் பிள்ளைகள் ஒட்டிக்கொள்ளுவதற்கு பிடித்தமாய் இருந்தது.
”உனக்கு தனியரசின்னு பேர் வைச்சதே ரூத் சிஸ்டர்தான் கல்யாணமாகி ஏழு வருடம் பிள்ளையில்லாமல் இருந்தும் எங்கெல்லாமோ கோயில் குளம் சுத்தியும் நீ பிறக்கல”.
ஒரு நாள் இரவு தெருவில் நடந்த ஜெபக் கூட்டத்தில் ரூத் சிஸ்டர் பாடிட்டு இருக்கும் போதே மழை சோன்னு அடிக்க ஆரம்பித்தது கரண்டு வேற போயிடுச்சி. கூட பாடினவங்க எல்லாம் வீட்டு தாழ்வாரத்து பக்கம் ஓடி அண்டிக்க ரூத் சிஸ்டர் மட்டும் அந்த கொட்டும் மழையிலும் பிரார்த்தனைப் பாடலை மனமுருக முட்டி போட்டபடி பாடிட்டே இருந்தாங்க. சுத்தி இருந்த ஜனங்களுக்கு எல்லாம் ஆச்சிரியமாய் போச்சு. சாமி மேல அவ்வளவு பக்தியா இருக்கமுடியுமன்னு ரூத் சிஸ்டரை பார்த்துத்துத்தான் கத்துக்கிட்டேன்.
அன்னியியான்னிக்கு மறுநாளே ஓங்கப்பாவ கூட்டிக்கிட்டு போய் சர்ச்சிலே ஞானஸ்தானம் வாங்கிகிட்டோம். நாங்க மதம் மாறனதால, உங்க தாத்தா எங்கள வீட்டுக்குள்ளேயே விடல. ஆறு மாசம் வீட்டுக்கு பின்னாடியிருந்த ஆட்டுக்கொட்டகையிலியே பொங்கி தின்னிட்டுருந்தோம்.
தினமும் சாயந்திரம் சர்ச்சிலிருந்து வந்து ஆட்டு கொட்டகையிலியே உங்க தாத்தாவுக்கு தெரியாம ரூத் சிஸ்டர்தான் உனக்காக ஜெபம் பண்ணுனாங்க. நாலு மாதம் கழித்து நீ எனக்குள்ள ஜனிச்.ச நீ வயத்துக்குள்ள இருக்கும் போதே ரூத் சிஸ்டர் சொல்லிட்டாங்க, நீ பொண்ணாத்தான் போறப்பன்னு.
ராத்திரி வீட்டு வெளி முற்றத்தில் பாயில் படுத்தபடி நட்சத்திரங்களை பார்த்தபடி அம்மா தினம் தினம் ரூத் சிஸ்டரை பத்தி அவ்வளவு கதை சொல்லியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் சாட்சியாய் சாணி படிந்த அந்த கல்வெட்டு பலகை மட்டுமே தேமே என்று நின்று கிடக்கும். ரூத் சிஸ்டரை பற்றி அம்மா என் மனதுக்குள் ஒரு சித்திரம் போல தினம் தினம் வரைந்து வைத்த நாட்கள் அவை.
அவர்களைத்தான் நான் இவ்வளவு பக்கத்தில் இருந்து கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
3
கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே அப்பாவிடமும்,நிர்வாகத்திடமும் அடம் பிடித்து ஆஸ்டலில் தங்காமல் ரூத் சிஸ்டரோடு தங்கிக்கொள்ள சம்மதம் வாங்கினேன். வாங்கினேன் என்று சொல்லுவதை விட ரூத்சிஸ்டரிடம் கெஞ்சினேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் சிறு குறும்பு புன்னைகையோடு என்னை ஏற்றுக்கொண்டார்
அந்த இயேசு சிலைக்கு இடது புறம் வாதம் மரங்கள் அடர்ந்த சிறிய அறை ரூத் சிஸ்டருக்கு ஒதுக்கியிருந்தார்கள். அதற்கு முன் இந்த இடம் சமையல் செய்யும் இடமாக இருந்திருக்க வேண்டும். கரி படிந்த சுவரின் மேல் வெள்ளை நிற சுண்ணம் பூசப்பட்ட தடயமாய் சுவரெல்லாம் திட்டு திட்டாய் உரிந்து மஞ்சம் பாறியிருந்தது. அந்த அறையில் ஒரு ஜன்னல் மட்டுமே திறந்திருந்தது. மீதி சுவரில் இருந்த ஜன்னல்களையெல்லாம் இரும்பு பலகை கொண்டு அடைத்திருந்தார்கள். ஆளுயர வளைவு வாசகால் பக்கத்தில் ஒரு பக்க திறப்புக்கொண்ட மர பீரோவும் அறைக்கு நடுவே ஒத்த ஆள் படுக்கும் கட்டில் மட்டுமே கிடந்தது. வலது மூலையில் டீப்பாயில் ஆட்டுக்குட்டியை மடியில் வைத்து கொஞ்சும் இயேசு படமும் அதற்கு கீழே புதிய ஏற்பாடு புத்தகம் இருந்தது. அதன் பக்கத்தில் இரண்டு கைகள் கொள்ளும் அளவு சிறிய கடல் கிளிஞ்சல்களும்,பவளம் மாதிரி மின்னுகிற கூழாங்கற்களும் கிடந்தன. புதிய ஏற்பாட்டை தொட்டு திறந்த போது புத்தக மடிப்பில் சிறகு ஒன்று இருந்தது. அந்த பக்கத்தில் இருந்த வாசகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
41 ‘’பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கும் படி செய்யும்: ஆயினும் என் சித்தத்தின் படியல்ல. உமது சித்தத்தின் படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.
42. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை பலப்படுத்தினான்.
படித்துக்கொண்டிருக்கும்போதே ஏனோ தாத்தாவின் முகமும் கானலில் எழுந்து அலையும் மாய எழுத்துக்களும் நினைவில் வர என் தொண்டை கம்மி கண்கள் கலங்கின.
புத்தகத்தை மூடி வைத்து விட்டு திரும்பி பார்த்த போது அமைதியாக ரூத் சிஸ்டர் அருகில் நின்றுக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நொடியே அவர் தோளில் சாய்ந்து கேவ ஆரம்பித்தேன். எதிர் பார்க்காத நேரத்தில் ரூத் சிஸ்டரின் குரல் மெல்லிதாய் அந்த வசனத்தை உச்சரித்தது.
‘’வானத்தில் இருந்து ஒரு தூதன் தோன்றி அவரை பலப்படுத்தினான்’’
நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். கருணையின் இரண்டு நட்சத்திரத்தை அவர் கண்களின் கண்டேன்.
அன்றிரவு சிலைக்கு அருகே குழந்தைகள் விளையாடுவதற்காக கொட்டி வைத்திருந்த மணல் திட்டில் உட்கார்ந்தபடி நாங்கள் நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருந்தோம். ரூத் சிஸ்டர் அமைதியாக மணலில் கிடந்த வெள்ளை கூழாங்கற்களை பொறுக்கி எடுத்து மடியில் வைத்துகொண்டிருந்தார்
’’குட்டி உங்கம்மா எனக்கு மானசீகமான தோழி. ஒவ்வொரு நாளும் பிரார்த்திக்கும் போதும் உங்கம்மாவ நினைச்சுக்குவேன். நா உங்க ஊருக்கு ஊழியம் பண்ண வந்த புதுசு, இதோ இருக்கிறயே அதே வயசுதான் எனக்கு. அங்க இருக்கிற யாரையுமே அவ்வளவா தெரியாது. தாஸ் பாதிரியார் சபையில ஊழியம் பண்ண ஒரு பெண் தாதி இருந்தா. ஏழை மக்களுக்கு கர்த்தர் மேலயும் சபை மேலயும் நம்பிக்கை வரும் என்று சொல்லி என்ன கூட்டிட்டு போனாரு. ஆனா அங்க நிலைமையே வேறயா இருந்தது.
சபைக்குன்னு மக்களே இல்ல. ஆறேழு குடும்பம் மட்டும்தான் சபை விசுவாசியா இருந்தாங்க. அவங்களும் பாதி பேரு ஆடி மாதம் வந்தா குலதெய்வத்துக்கு போயிடுவாங்க. சனங்களுக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமான காலம். அந்த ஊருல இருக்கிற சத்திரத்து நிலத்துல மொத்த ஊரும் நாள் பூரா உழைக்கும். ஆனாலும் வயித்துக்கும் வாயிக்குமே போராடிட்டு இருந்துச்சிங்க. கூலிய உயர்த்தி கேட்க யாருக்குமே துணிச்சலில்லை. அப்படி யாராவது கேட்டா அடுத்த நாளூ வேலைக்கு சேக்க மாட்டாங்க.
அப்பத்தான ஏழு நாள் உபவாசம் இருந்து வைராக்கியமா இரவு பகல்ன்னு இல்லாம ஒவ்வொரு தெரு முக்குலேயும் நின்னு மக்கள வெலைக்கு தகுந்த ஊதியம் கேக்க சொல்லி ஜெபம் பண்ணிட்டு இருந்தோம். மழை கொட்டோ கொட்டோன்னு கொட்டிட்டு இருந்தது. எல்லாத்தையும் மறந்து நான் எல்லாருக்காகவும் ஜெபிச்சிட்டு இருந்தேன். ஜெபப் பாடல் முடிந்து கண் விழித்து பார்க்கிறேன். உங்கமா எனக்கு முன்னாடி முட்டி போட்டு நான் சொல்றத சத்தமா சொல்லிக்கிட்டுருந்தாங்க. என்ன நம்பி வந்த முதல் மனுசி… அன்றிரவு உங்கம்மா கையால உபவாசத்த முடிச்சேன்”
”அடுத்த நாளே ஊரே கூடி போய் கூலிய சேத்து கேட்டாங்க. அரைப் படி நெல்லு கூலியும் சேர்த்து கொடுத்தாங்க. ஆனா அதற்கு பலியா உங்க தாத்தாவ மடை காவல் வேலையில இருந்து நிறுத்திட்டாங்க. மடை காவல் வேலைங்கறது கூலி இரண்டு மடங்கு தர்ர வேலை. அதோட எர நூறு குடும்பத்துக்கும் அவர்தான் ஊர் நாட்டாமை. மடை காவல் வேலை போனதால நாட்டாமை பட்டமும் போய்டுச்சி. அதற்கு காரணம் உங்கம்மா எனக்கு சாப்பாடு போட்டதுதான்னு உங்க தாத்தாவுக்கு எங்க மேல உள்ள கோவத்துல உங்கம்மாவ வீட்டுக்குள்ள விடல.
உங்கப்பா பிள்ளையில்லாத விரக்தியில குடிச்சிட்டு வீட்டுக்கே வரதில்லை. ஆனா மனசாட்சி உள்ள மனுஷன். உங்க தாத்தா உங்கப்பாவுக்கு வேற கல்யாணம் பண்றதுக்கு பொன்னுளா பாத்து உங்கப்பாட்ட வந்து சொன்னப்ப இருந்தாலும் செத்தாலும் அவளோடு மட்டும்தான்னு சொன்னவரு.
ரொம்ப பிடிப்பா உங்க வீட்டுக்கு போய் நான் ஜெபம் பண்ண காலம் அது.
ஒரு சாயங்காலம் உங்க ஆட்டு கொட்டகையில ஜெபம் பண்ண போனப்ப உங்கம்மா வீட்டில் இல்ல வெளியில மழை தூறல் வேற, கொட்டாயில் ஓரமாபோட்டிருந்த கயிற்றுக் கட்டலில் உட்கார்ந்து வெளிய பாத்துட்டு இருக்கிறேன். ஒரு ஆடு நிறை வயித்தோடு உள்ள வந்து ஏ பக்கத்துல நின்னுச்சு. நா அதையே பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி வந்தது அப்படியே என்ன பார்த்த படியே வெளியே போச்சு. நானும் பின்னாடியே போனேன். அது உங்க வீட்டுக்கு முன்னாடி நடப்பட்டிருந்த கல்லுகிட்ட போய் நின்னு குட்டிய ஈன ஆரம்பிச்சுது. சின்ன வலி கூட இல்லாம அவ்வளவு லாவகமா குட்டிய ஈந்தது. ஆனா ஒரு கணம் கூட ஆட்டோட கண்ணு என்ன பார்க்கிறதிலிருந்து விலகவேயில்லை. மெய் சிலிர்த்து குட்டியே பார்த்துக்கிட்டே இருந்தேன். அப்பத்தான் அந்த ஊருல இருந்த ஒரு அம்மா வந்து அந்த கல்லுக்கடியில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தார். அந்த கல்லுல அகல் சுடர்ந்த வெளிச்சத்தல நா பார்த்தது ஒரு நட்சத்திரத்த.
அந்த இடம் முழுக்க ஆட்டின் கருப்பை வாசம் காற்றில் பரவி என் நாசியை நிரப்பியிருந்தது
அன்று இரவு கருக்கலில், உங்கம்மா வந்து நீ வயித்துக்குள்ளே ஜனிச்சிருக்கிற செய்திய சொன்னாங்க
இதுதான் கடவளோடசெய்தின்னு புரிஞ்சுகிட்ட..
குட்டி காலையில நீ வந்து பக்கத்துல நிக்கும்போது அந்த ஆட்டின் கருப்பை வாசத்த இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் அவ்வளவு நெருக்கமா உணர்ந்தேன்.
“நீ மேரியின் குழந்தை’’ குட்டி என்று சொல்லியபடி கன்ணீர் ததும்ப முட்டி போட்டு ஜெபம் பண்ண ஆரம்பித்தார்.
4.
முதல் ஆண்டு பரிட்சை முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது சிஸ்டரின் ஞாபகமாய் ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போகலாம் என்று அவர் அலமாரியில் துழாவிய போது கையடக்கத்தில் ஒரு டைரி கிடைத்தது. அதை திறந்து பார்த்தபோது.
விதியின் பகடையாட்டத்தில் தற்செயல்கள் அதை நகர்த்தும் காய்கள்
ரூத் சிஸ்டரின் டைரியின் முதல் பக்கத்தில் இந்த வசனம் இருந்தது.
அதற்கு கீழே ஒளிரும் நட்சத்திரத்தை அழகாக வரைந்திருந்தார்.
அதை எடுத்து காட்டி இதை எடுத்துக்கொண்டு போய் படிக்கட்டுமா என்று கேட்டபோது ரூத் சிஸ்டர் பதட்டம் இல்லாமல். ‘’குட்டி இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும். அப்பொழுது நானே படிக்க தருகிறேன் இப்போதைக்கு நீ பாட புத்தகத்தை மட்டும் படி” என்று சொன்னார்.
இங்கே இருந்தவரை காலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து காலை ஜெபம் ஒன்றாக பண்ணுவோம். பிறகு குழந்தைகளை எழுப்பி காலை ஆராதனைக்குத் தயார் செய்வோம். எட்டு மணிக்கு ஒன்றாக சாப்பிட்டு விட்டு கல்லூரி போய் விடுவேன். சாயந்திரம் திரும்பி வந்தால் குழந்தைகளோடு கொஞ்சம் நேரம் விளையாட்டு. இரவானால் நாங்கள் இருவரும் மட்டும் தனித்து மணலில் உட்கார்ந்து நிறைய கதைகளை பேசுவோம்.
ஒவ்வொரு நாளும் அந்த இரவுக்காக காத்திருப்பேன். காலையில் இருந்து இருக்கும் ரூத் சிஸ்டர் காணாமல் போய் ஆட்டுகுட்டியை வாஞ்சையாக கொஞ்சும் மனுசியாய் என் அருகில் அமர்ந்திருப்பார்.
ஒரு நாள் ஏதேட்சையாக சிஸ்டர் ஏன் நம்ம அறையில இருக்கிற மூணு பக்க ஜன்னலையும் அடச்சி வைச்சிருக்கீங்க?. முதன் முதலில் சிஸ்டர் பதட்டமானதை அன்றுதான் பார்த்தேன்.
’குட்டி நம்மள சுத்தி நிறைய காதுகளும், கண்களும் நம்மை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் மனதில் வாங்காமல் நாம முன்னேறனும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லுவேன். காலம் வரும் போது நீயே எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவ’.
முப்பதுக்கும் மேற்பட்ட சிஸ்டர்கள் ஊழியம் செய்யும் இந்த கல்லூரியில் ரூத் சிஸ்டர் மட்டும் தனியறையில் இருப்பது ஏதோ ஒரு ரகசியத்தை காப்பது போலவே இருந்தது.
நான் சிஸ்டரின் குழந்தை அவர் சொல்லி இந்த ஒரு வருடத்தில் எதையும் மீறியதில்லை.
வீட்டுக்கு கிளம்பும்போது, ’குட்டி இத பத்தரமாக உன்னோடவே வச்சிக்க’ என்று புதிய ஏற்பாட்டை கொடுத்தார்.
’எப்பொழுதெல்லாம்,பயமும்,சலனமும் வருகிறதோ அப்பொழுதெல்லாம் இதபிரிச்சி படி. உனக்கான வழி இருக்கும்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்
அந்த தற்செயலின் பகடைக் காய் என்னை பின் தொடர்வது தெரியாமல் ரூத் சிஸ்டரிடம் இருந்து பிரிந்து வீட்டுக்கு வந்தேன்.
5
வீட்டுக்கு வந்து இரண்டு மணிநேரம் கூட ஆகியிருக்காது. அம்மாவோடு பேசி விட்டு ஏதேட்சையாக வெளியே வந்து பார்க்கிறேன்.
அந்த கல்வெட்டை சுற்றி பத்து பேருக்கும் மேல் மொட்டை தலையோடு வெள்ளை அங்கியை அணிந்தபடி சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நடுவில் மார்வரை வெள்ளைத் தாடி புரள காவியுடையில் ஒருவர் திரும்பி நின்று அவர்களுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவர்களை நெருங்கி பார்த்தேன். அந்நேரம் சூரியனை கருமேகம் மறைத்து சட்டென அந்த இடம் சொல்லன்னா இருளில் நகர்வது போல் இருந்தது.
சட சட வென ஒரு பூ மழை அந்த மாமரத்தில் தூவி விட்டு போனது. கரு மேகம் சூரியனை கடந்து போனதும் வெளிச்சம் பளிரென்று திறக்க அவர் என் பக்கம் திரும்பவும் சரியாக இருந்தது.
இரவில் சுடரும் பூனைக் கண்கள் போல பஞ்சடைந்த இமைகளுக்குள் அசையாமல் அந்த கண்கள் என்னை நோக்கியது. ரூத் சிஸ்டரிடம் இருக்கும் அதே சலனமில்லாத கருணையின் சாந்தம். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஈரமண்ணில் பறக்கும் தட்டான்களைப் போல அவர் முகத்திலிருந்து புன்னகை ததும்பி விரிந்தது. என்னையறியாமல் நானும் புன்னகைத்தேன். அவர் இட பக்கம் திரும்பும்போது தான் அவரின் பின் கழுத்தைப் பார்த்தேன். வெண்ணிற கேசத்துக்குள் கருப்பு நட்சத்திரம் பிரகாசமாக தெரிந்தது.
பின் பேசியது எல்லாம் கனவுரு காட்சியா என்னுள் விரிய ஆரம்பித்தது.
அனாத காலத்தில் மக்கள் துயரமும், குரோதமும், பொறாமையும், காமமும் வெறி கொண்டு இந்த மண்ணை மூடியிருந்தது. அதை தாங்க முடியாமல் மண் பிளந்து இங்கிருந்த பெரும் நகரம் உள்ளிழுத்துக்கொண்டது. மாபெரும் ஆலயங்களும்,மக்களின் சேமிப்பும்,கால்நடைகளும் மண்ணுக்குள் போக ஒரு பக்கம் மட்டும் எஞ்சியிருந்த மக்கள் திராவகத்தில் எரியும் உடலாய் தினம் தினம் நோயிலும் பஞ்சத்திலும் உழன்றார்கள். நாளுக்கு நாள் இறப்பும்,பஞ்சமும் அதிகமாக சுடுகாட்டில் கூட இடமில்லாமல் தெருவெங்கும் அழுகிய பிணங்கள் நாறிக்கொண்டிருந்தது. அப்பொழுது இந்நிலத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் என்னென்னவொ செய்து பார்த்தான். ஆயிரம் வைத்தியர்களை கொண்டு வந்து நோயுக்கான காரணத்தை கண்டு பிடிக்க சொன்னான். கண்டுபிடிக்கமுடியவில்லை. வடதிசையிலிருந்து அந்தணர்களை கொண்டு வந்து யாகம் நடத்திப் பார்த்தான். அப்பொழுதும் நோய் குறைவதாய் இல்லை. ஒவ்வொரு நாளும் பரவும் நோய் நான்கு திசைகளிலும் பெருகி நாடெங்கும் பிணக்காடாய் மாற ஆரம்பித்தது, மன்னனும் நோயில் இறந்து போக கைவிடப்பட்ட தேசமாய் ஆகியிருந்தது
குறி அறிந்து வடகிழக்கிலிருந்து வந்த இருபத்தியொரு அருகர்கள் மூன்றாம் பிறை நாளில் இந்த இடத்தில் கூடினார்கள். அவர்களது கூட்டு ஆழ்மனதில் இதற்கான காரணத்தை பிரபஞ்சத்தை நோக்கி அலசி ஆராய்ந்தார்கள். நோய்க்கான காரணத்தை அறிந்தார்கள். உயிர்களில் வெறிக்கொண்டு எழுந்திருக்கும் இச்சைகளின் அச்சம் என அவர்கள் அறிந்தார்கள். இருபத்தி ஓர் பேரின் உயிர் சக்கரங்களைத் தூண்டி ஒரே மனமாக்கி சாந்தம் கொள்ள முயற்ச்சித்தார்கள். கோடி கணக்கான உயிர்களின் பேரச்சத்தின் சக்தியை தாங்க முடியாமல் ஒவ்வொருவராக மனம் கலைந்து ஓடினார்கள். சிலர் விசுத்தி விட்டு கீழறங்கிய விஷத்தால் நீலம்பாரித்து இறந்து போனார்கள். அண்டத்தின் கதிர் ஆற்றல் தாங்க முடியாமல் சிலர் எரிந்து சாம்பலானார்கள். ஒரு மண்டலத்துக்கு பிறகு மூன்று பேர் மட்டுமே அத்தனையும் தாங்கி தவத்தில் சாந்தியில் நின்றார்கள். அவர்களின் கூட்டு நனவிலி ஆழத்தில் கண்ட லிபியை கற்களில் வடித்து அழியாத சாந்தத்தையும், ஞானத்தையும் இந்நிலத்தில் விதைத்தார்கள். நோய்மை கொஞ்ச கொஞ்சமாக தனிய ஆரம்பித்தது. மக்களிடம் அறமும்,கருணையும் பெருக ஆரம்பித்தது
கூட்டத்திலிருந்து ஒருவர் இந்த கல்வெட்டின் காலம் எத்தானாவது நூற்றாண்டு? என்று கேட்க,
அவர் பறவையைப் போல திரும்பி, ’ஆறு அல்லது ஏழு இருக்கலாம் அதுவும் இந்தக் கல்லை வைத்துத்தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இந்த லிபியின் காலம் முடிவற்றது’ சொல்லியபடியே அவர் என் பக்கம் திரும்பி என் கண்களை ஆழமாக ஊடுருவினார். என்னுள் முடிவற்றது என்ற குரல் உச்சாடனம் போல ஒலித்துக்கொண்டே இருந்தது.
எப்பொதெல்லாம் மக்கள் துயரரு காலம் வருகிறதோ அப்பொழுது இந்த மந்திர எழுத்து அவர்களை காக்கிற ஒருத்தரை தேர்ந்தெடுத்துக்கொள்ளும். அவர்களுக்கு மட்டுமே இந்த எழுத்துக்களின் முழு அர்த்தம் புரியும் என்று சொல்லி விட்டு, என் பக்கம் திரும்பி, ’ரூத் சிஸ்டர் நல்லா இருக்காங்காள குட்டி?’ என்றார்
அந்த குரல் ரூத் சிஸ்டர் கூப்பிடுவது மாதிரியே இருந்தது.
6
அடி வயிற்றில் எழுந்த உச்சாடனம் தொண்டையில் முட்டி நினைவற்று போய் திண்ணையில் படுத்து கிடந்தேன். தாத்தா இறந்த அதே இடத்தில் தான் வான் நோக்கி கண்கள் நிலைகுத்தி பார்த்துக்கொண்டிருக்கும்போது நெற்றி சூடேறி வின்னென்று திறக்க காலத்தின் முடிவற்ற பெண்டுலம் ஆடிக்கொண்டிருப்பதை மனத்திரையில் பார்க்க முடிந்தது. சுழல்வலைக்குள் காலவெளியற்று போய்க்கொண்டிருந்தேன். அண்டவாசலின் கதவுகள் திறந்ததும் நான் பார்த்த முதல் உருவம் தாத்தாவின் முகம் தான்.
இருளடைந்திருந்த சமையலறையின் வடக்கு சன்னல் கதவை ஒரு கை திறப்பது தெரிந்தது. சன்னல் ஊடே வந்த வெளிச்சத்தில் காலம் தொடு வானம் வரை நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்தது. அங்கே பெரிய ஏரிக்கரைகளுக்கு கீழே இருக்கும் நிலம் முழுக்க வெறுமையின் கானல் எழுந்து அலைபாய்ந்துக்கொண்டிருந்தது. வறண்ட நிலத்தில் பிளந்த வாய்களுக்குள் சொருகிய ஈட்டியாய் வரிசையாக கல் கம்பங்கள் நின்று கொண்டிருந்தன. பசியின் ஈன சுரங்கள் அத்தனை உயிர்களிடமிருந்தும் மெலெழுந்து என் காதை அடைத்தன.
ஏரியின் வட மடை கால்வாயின் அருகே விரிசடையாய் விரிந்திருக்கிற ஆலமர விழுதுகளின் நடுவே ஏழு கன்னி பாறை. ஆள ஆள் அரவமற்று கிடந்ததது. நிழல் அழுத்தும் இருள் ஒளியில் ஏழு கன்னியர்களும் மஞ்சள் பாவடை சூடி உடலெங்கும் கதம்ப பொடி வாசத்தில் படுத்துக்கிடந்தார்கள். அதன் அருகில் அக நிர்வாணத்தோடு தவக்கோலத்தில் வான் நோக்கி உட்கார்ந்திருந்தேன்.
யாரோ எழுப்பும் பிரக்ஞை கேட்டு கண் விழித்து எழுந்து உட்கார்ந்த போது மழை நீர் நிலம் முழுக்க ஓடிக்கொண்டிந்தது. என் மடியில் ரூத் சிஸ்டரின் கையடக்க டைரி இருந்தது. அதை பிரித்து பார்த்தேன்.
கல்வெட்டில் வடித்திருந்த அதே மாய எழுத்துக்களால் எழுதியிருந்தது.
அந்த எழுத்துக்களில் இருந்த ஒவ்வொரு கோடுகளிலும், வளைவுளிலும், காலத்தின் இருளடைந்திருக்கிற அறையின் சாத்திவைக்கப்பட்டிருக்கிற ஆயிரம் சன்னல்கள் தெரிந்தன.
என் கைகள் அடுத்த சன்னலை திறக்க முற்பட்ட போது ரூத் சிஸ்டரின் டைரியில் முதல் பக்க மாய எழுத்துக்கள் மறைய தொடங்கி அந்த இடத்தில் ஒரு வால் நட்சத்திரம் தோன்ற ஆரம்பித்தது.
++
நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவன்.தொடர்ச்சியாக கனலி,தளம்,யாவரும் போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.அத்துடன் விவசாயப்பனியும்,சமூக பணிகளிலும் ஈடுபடுத்தியுள்ளேன்.எங்கள் கிராமத்தில் குழந்தைகளுக்கான தும்பட்டான் என்ற நூலகமும் மாலை நேர பள்ளியும் நடத்தி வருகிறேன்.