முத்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து மாடிக்கு போனான். சுற்றிலும் இருட்டு கவிந்திருந்தாலும் தெரு விளக்கின் வெளிச்சம் லேசாக  மாடியின் முன் பக்க வரை பரவியிருந்தது. போனை எடுத்துப்பார்த்தான். அப்பாவுவிடமிருந்து பத்து முறைக்கு மேல் தவறிய அழைப்பு வந்திருந்தது. போனையே பார்த்துக்கொண்டிருந்தான். இருந்தாலும் நாம் அதை செய்திருக்க கூடாது. எத்தனை தடவை தன் மீது நியாய போர்வைகள் போர்த்தினாலும் எதிர் கேள்விகள் பொந்திலிருந்து பறக்கும் ஈசல் போல வந்துக்கொண்டே இருந்தது. இனியும் இந்த வாதையை பொருத்துக்கொள்ள முடியாது என்று போனை எடுத்து அப்பாவுவிற்கு போட்டான்.

முதல் அழைப்பிலேயே எடுத்தார்

’மாமா’ என்று பேச்சை தொடங்கும்போதே,

’என்னடா இப்படி பண்ணிட்ட. ஊங் கிட்ட வேலை செய்த கூலி கேட்க வந்தா அதுக்கு காது மேல அடிப்பியா. இல்ல நா தெரியாமத்தான் கேக்குற?’

அவர் பேச்சில் கொஞ்சம் நிதானம் வந்தது போல இருந்தது.

’தோ பாரு மாமா எதா இருந்தலும் காலையில வா பேசிக்கலாம். இப்ப  போனை போட்டு தொந்தரவு பண்ணாதே சொல்லிட்டேன். வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்க’ என்று போனை கட் பண்ணினான் முத்தன்

விளக்கு வெளிச்சத்தில் எதிர் பக்கத்தில் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் நிழல் தேங்கியிருந்த அழுக்கு நீரில் அலையாடிக்கொண்டிருந்தது. மனம் கூலி என்ற வார்த்தையையே மெல்ல ஆரம்பித்தது.

எதை வைத்து கூலியை கணக்கிடுவது நேரத்தை வைத்தா, அல்லது வேலையை வைத்தா,. அல்லது மனிதர்களின் ஆசையை வைத்தா?

மறுபடியும் அப்பாவுமிடமிருந்து போன் வந்துக்கொண்டே இருந்தது. அந்த சத்தம் கேட்டு பாலனும், திதியும் மாடிக்கு வந்தார்கள்

’ஏ ஒரு மாதிரியாவே இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா முத்து?’

’இல்ல ஒரு சின்ன டிஷ்டபன்ஸ் அதான்’

முத்தன் அவர்களை பார்க்காத மாதிரி மார்கழி மாத மூடு பனியில் வெளிறி தெரியும் பெரு மலையையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்பாவுவை நினைக்க நினைக்க கோவமும், குற்ற உணர்ச்சியும் மனதில் பாரமாக அழுத்தியது. அவனையறியாமல் கண்கள் கலங்கின

பாலனும்,திதியும் காதலில் இருக்கிறார்கள் வேறு வேறு தேசம். பாலனோடு புத்தாண்டை கொண்டாட இந்தியாவுக்கு வந்திருக்கிறாள் திதி. ஒல்லியான தேகமும் கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்த்தால் இருபதுக்குள் அடங்குகிற வயதாய் இருந்தாள். ஆனால் அவள் பேச்சிலும் முகத்திலும் நடுவயதை அடைந்திருந்தாள். அவள் கண்களில் ஒரு அனாதிதம் நிரந்தரமாக குடியிருப்பதாக தோன்றியது. பெண்ணியத்தை கருத்தில் பேசவும்,இலக்கியம்,புகைப்படம்,சினிமா வழியே உலகை பார்ப்பவனான பாலன் தன் ஒத்த ரசனை உள்ள இணையை தேடிக்கொண்டிருந்தவனுக்கு திதி சரியாய் இருப்பாள் என்று காதலை சொன்ன நான்கு வாரத்திலே புத்தாண்டு வர அவளை இந்தியாவுக்கு வரவழைத்து சுற்றாலாவுக்கு ஏற்பாடு பண்ணி இங்கே வந்திருக்கிறார்கள்

கீழே மனைவியின் போன் அடிக்க, ப்ளீஷ்! என்று சொல்லிவிட்டு வேகவேகமாய் விட்டுக்குள் ஓடினான் முத்தன்

கோழி குஞ்சு போல சுருண்டு படுத்திருந்தாள் ரத்னா.

போன் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்த ரத்னா, ’மூனு காலுக்கு மேல வந்திருச்சி ஏ அவரு உடாம அடிச்சிகிட்டுருக்காரு?’

’ஒன்னுமில்லை’ சொல் வராமல் தொண்டையிலே  சிக்கி நின்றது

இது நாடகத்தின் மைய்யத்துக்கு வந்திருக்கிறது. இத்தோடு நிறுத்த வேண்டும் இல்லையென்றால் ஊர் பஞ்சாயத்துக்கு வரைக்கும் போக சாத்தியமிருக்கு. மேல பாலனும் திதியும் கவிதை ரசனையில் இரவை குடித்துக்கொண்டிருந்தார்கள்

அப்பாவு மாமா பக்கத்து நிலத்துக்காரர். அதுமட்டுமில்லாமல் சித்தப்பாவின் மச்சானும் கூட இது உறவுகளுக்குள் மட்டுமல்ல அவன் இருப்புக்கும் ஊறு விளைவிக்கிற சம்பவம். அப்பாவு என்ன பண்ண போகிறார் என்று கணிக்க முடியாமால் தினறினான். மனம் பதறிக்கொண்டே இருந்தது அதை மறைத்தபடி படியேறி மாடிக்கு போனான் முத்தன்.

கிழக்கு மூலையில் திதியை அணைத்தபடி நிலவை பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களை தொந்தரவு செய்யாதவாறு படியில் அமர்ந்துக்கொண்டான் முத்தன். அப்பாவுவை நினைக்க நினைக்க கோபம் பொங்கிக்கொண்டு வந்தது.

லேசாக குளிர் காற்று வீசியதும் மாடியை ஒட்டியிருந்த இருந்த முருங்கை மரத்தின் பூக்கள் அவன் மீது கொட்டியது. அதை எடுத்து பார்த்தான் நிலவொளியில் மொட்டுகளின் விளிம்பில் ஒரு சிற்றெரும்பு பூவுக்குள் சதா உள் புக சுழண்டுக்கொண்டே இருந்தது.

தோட்டத்தில் ரத்னா பதியம் போட்டிருந்த மல்லிகை பூக்களின் வாசம் அவ்விடத்தை நிரப்பியது.

சட்டென அப்பாவு பேசியது ஞாபகம் வந்தது.

’என்னா மச்சா இதலாம் ஒரு வேலைன்னு மரத்து மேல கொட்டாய போட்டு ராத்திரிலாம் யார் யாரோடவெல்லாம் சுத்துற. குந்த ஊடு இல்லாதவனெல்லாம் எப்படி ஊருல பவ்சா இருக்குதுங்க’ என்று பெரிய மனிதனின் தோரனையோடு பேசவும் பாலனிடமிருந்து போன் வரவும் சரியாக இருந்தது. அப்பாவுவை சட்டை செய்யாமல் தூர போய் பேச ஆரம்பித்தான் முத்தன்.

கோயம்பேட்டுல பஸ் ஏறதுக்கு நிக்குறோம், பாலனின் பேச்சில் அவ்வளவு துள்ளல் இருந்தது. சரி வாங்க பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கொடுக்காபுலி மூலையில் கிடந்த முட்களை வெட்டசொல்லி சைகையிலே ஆணையிட்டான்

அவர் எழுந்த தோரனையில் அலட்சியம் மூஞ்சிக்காட்டி சிரித்தது

மறுபடியும் பாலனிடமிருந்து போன் வந்தது

’நாங்க வர்ர விசயம் யாருக்கும் தெரியவேண்டாம். திதியோட வீட்டிலிருந்து எதிர்ப்பு இருக்கு அதனாலத்தான் நாங்க வர்ரது பரம ரகசியா இருகட்டும்’

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை அப்பாவு மாமா துள்ளியமாக அனுமானித்துக்கொண்டிருந்தார்

’என்ன மாப்ள ஏதாவது விசேசமா இல்ல எல்லா இடத்தையும் சுத்தப்படுத்த சொல்றீயே அதான் கேட்டேன்’

’ஒன்னுமில்ல ஒரு விருந்தாளீங்க வர்ராங்க அதான்’

அவர் கண்கள் அம்மரத்தை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தது. இரண்டு அணில்கள் எந்த சலனமும் இல்லாமல் மரத்திலிருந்து இறங்கி  அவர் காலருகில் சுற்றி விளையாடுவதை பார்த்ததும் உடல் சிலிர்த்து நின்றார்.

அதன் பிறகு  பேச்சற்று  வேலையில் ஒன்றி போனார் அவர் கைகளும் கால்களும்  அந்நிலத்தில் சுழன்று ஆடியது.

இரண்டு மணிநேரம் கழித்து அவ்விடம் திருவிழாவுக்கு முந்திய மவுனத்தில் சாயங்கால ஒளியில் பிரகாசித்தது

பாலைவனத்தில் அலையும் யாத்திரிகனுக்கு கிடைக்கும் ஒரு கை நீர் போல சிந்திவிடாமல் இக்கணத்தை ருசிக்க வேண்டும் என்று தோன்றியதுமே மனம் புத்துயிர் பெற்றது

அருகில் இருந்த ஒரு பாறையில் அமர்ந்து கை விரித்து தாங்கும் மரகுடிலையே பார்த்துக்கொண்டிருந்தான். வெளியில் அலையும் இரச்சலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லாத யோகியின் தவத்தில் மூழ்கியிருந்தது மரம். அந்த நேரம் பார்த்து லேசாக காற்று இலைகள் மேல் தவழ யோகியின் இதழ்கள் மலர்ந்தது போல இருந்தது. மஞ்சள் ஒளி அம்மரத்தை சுற்றி பிரகாசிக்க அந்தி தூரல் சட்டென அவ்விடத்தில் மட்டும் விசிறி விட்டு போனது.இதோ இதோ இக்கணம் இக்கணம் என மனம் எழுந்து துள்ளியது. அருளப்பட்ட வாழ்வின் ரூபாவிஷேஷத்தை தரிசித்த பேருண்னத்தில் முழ்கியிருந்தான் முத்தன்

திரும்பி பார்த்த போது தான் மலையையை பார்த்தபடி அப்பாவு உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

’என்ன மாப்ள மரத்தையே புசுசா பாக்கற மாதிரி பாக்குற’

’மாமாவுக்கு மணி அடிச்சிடுச்சி நா சுருக்கா போகனும் நம்மள கொஞ்சம் கவனிச்சி அனுப்புங்க’ என்றதும் முத்தன் பையை துளாவி பணத்தை எடுத்துக்கொடுத்தான்.

’என்ன மாப்ள இது கோட்டருக்கு கூட பத்தாது போல இருக்கே? சரி நீ என்ன மாமன ஏமாத்தவ போற’

அவர் குரலில் தடுமாற்றம் அலைந்தது.

காசா முக்கியம் மனுசங்க தானே முக்கியம். நா பாக்காத காசா. சொத்தா எவ்வளவோ பேருக்கு கொடுத்துருப்பேன். இப்ப என்னடான்னா ஊருக்குள்ளே ஒரு நாயும் மதிக்க மாட்டுங்குது என்று தன் பிலாக்கினத்தை தொடங்கினார். அவர் அப்படி சாதரணமாக பேசுபவர் அல்ல. இதில் ஏதோ உள் குத்து இருக்கோ என்று திரும்பி பார்த்த போதுதான் முத்தனின் சித்தப்பா மரத்தை ஒட்டி வருவது தெரிந்தது. ஒருங்களையாய் வானத்தை வெறித்தபடி நீங்க நிக்கிற நிழல் கூட எங்கப்ப போட்ட பிச்சை தாண்டா என்று வாய்க்குள்ளே பொருமினார்.

நாடகத்தின் முதல் கனுவில் மெல்லிசாக பகை துளிர்ப்பதை அப்பாவு மாமாவின் கண்களில் தெரிந்தது. நீ யார்ர்ரா இங்கே என்ற பார்வையில் முத்தனின் சித்தப்பா இவர்களை கடந்து போய்க்கொண்டிருந்தார்

அந்நேரம் மாயையின் இரு நடனங்களை அளவிட்டுக்கொண்டிருந்தன. முத்தனின் மனம். மேற்கே அந்தி சூரியன் கவுத்தி மலை சரிவில் இறங்கிக்கொண்டிருந்தது. சிதறி விட்ட மஞ்சள் ஒளி வான் முகிலில் அடர்த்தியாக மோனத்தை பரப்பியிருந்தது. தூரத்து நிலத்தில் மேய்ச்சலுக்கு போன மாடுகளை சம்சாரிகள் வீட்டுக்கு பத்திக்கொண்டிருந்தார்கள்

லேசாக இருள் கவிந்ததும் மரக்குடிலில் லைட்டை போட்டு பார்த்தான். அந்தி சூரியன் குடிலுக்குள் வந்தது போல இருந்தது

மரத்தடியில் நார்க்கட்டிலை எடுத்து போட்டு படுத்தபடி மூன்று நாட்களுக்கு முன் பாலன் அனுப்பிய குருஞ்செய்தியை படித்துக்கொண்டிருந்தான் முத்தன்.

உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்லனும் நான் காதலிக்கிறேன். இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் உங்களோடு பகிர்ந்துக்கொள்ளனுமுன்னு தோனுச்சி. அத்தோடு அந்த மரத்திடமும்தான்!

பாலனின் வரியில் கவித்துவம் இருந்தது.

பாலனுக்கும்,முத்தனும் பத்து வருட பழக்கம். ஆனால் அவனிடம் இதுவரை இல்லாத ஒன்று அவனுள் பிரவேசித்துருப்பதாக தோன்றியது

கட்டிலில் படுத்தபடியே பெரு மலையையே பார்த்துக்கொண்டிருந்தான். மண்ணில் இருந்து பொங்கும் நீருற்று போல ஒவ்வொரு கணமும் இம்மலை புதிதாய் இருப்பதாய் தோன்றியது. பகலில் பார்க்கிற மலை இரவில் வேறோன்றாக இருக்கிறது. அதற்குள் எப்பொழுதும் காலாதீதமான ஒரு ஆழ்ந்த அமைதி குடியிருப்பதாக தோன்றியது. பெரு மலையின் விளிம்பு முகட்டில் ஒற்றை நட்சத்திரம் பிரகாசித்துக்கொண்டிருந்தது.

அதை பார்த்தவுடன் போன முறை பாலனோடு குடிலில் தங்கியிருந்த இரவை அசை போட்டான் முத்தன்.

பெளர்ணமிக்கு முந்திய இரவு கிழக்கில் செந்நிற வட்டத்தில் வெண் தட்டு நிலவு எழுந்து  முகிலற்ற வானில் நிலவு எழ எழ பூரணத்தின் பால் ஒளி வெளியெங்கும் பிரகாசிப்பதை உணர்ச்சி ததும்ப மரத்துக்கடியில் கயிற்று கட்டிலில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்

பாலா உலகம் முழுக்க நிறைந்திருக்கிறது தான் பூரணம் ஆனால் ஏதோ ஒரு இடத்தில் தான் அதை நாம் உணர்வதற்க்கான சூழல் அமையும். அப்பூரண வெளியை,இயற்கையின். தரிசனங்களை.ஒத்திசைவை இம்மரத்தடியில் இருக்கும் போது  உணர்ந்தேன், இதை சொன்னால் கொஞ்சம் ஓவராக தெரியும் இருந்தாலும் பரவாயில்லை புத்தனுக்கு பூரணத்தை உணர அரச மரத்தடி என்றால் எனக்கு இந்த மாமரம் தான்.

ஆனால் பாலா தன்னை அசட்டுதனங்களிலிருந்து காப்பது போல இந்த இடத்தையும் காப்பது பெரும் படாய் இருக்கிறது. நான் சொல்லுவது புனிதத்தை அல்ல பூரணத்தை.

பெரிய அலைதலுக்கு பிறகு இந்த மரத்தடியில் வந்து நின்று அன்னாந்து  பார்த்தேன். சிரிக்கும் முகத்தோடு இரண்டு கைகளையும் விரித்து வா என் மடியில் இரு என்று சொல்லுவது போல இருந்தது.

அந்நேரம் பாலாவின் கண்களில் முத்தன் சொல்லுவதில் நம்பிக்கையற்றது போல இருந்தது.

பாலா அக்கிளையை பார் அப்போது உனக்கே தெரியும்.மேலே பார்த்த பாலாவின் கண்கள் பிரமிப்பில் ஆழ்ந்தது. மரம் முழுக்க மின்மினி பூச்சிகள் சூழ்ந்து கை விரித்து அழைக்கும் தேவனின் கைகளில் வந்து மொத்தமாக உட்கார்ந்து பிரகாசித்தது. பாலாவின் கண்கள் பாத்திரத்தின் விளிம்பில் வழிய காத்திருக்கும் நீர் போல கண்ணீர் தளும்பியது. பாலா தண்ணுனதல் பாதையில் மிதப்பதை முத்தனின் நெஞ்சிரத்தால் உணர்ந்தான்.

அதற்கு பிறகு அவனிடமிருந்த ஒவ்வொரு அசைவிலும் இயற்கையின் உயிர்ப்பு சூழ்ந்தது.

பாலா நம்மிடமிடமிருந்து நம்மையே தூர நின்று பார்க்கும் கண்ணாடிதான் இந்த பிரபஞ்சம்.இதற்கு எந்த பொருளும் இல்லை என்கிறார்கள் எனக்கு அப்படி தோன்றவில்லை. எளியவைகளில் உள்ள பிரமாண்டத்தை காண மனிதர்கள் பயப்படுகிறார்கள் அப்படி. பார்த்தவர்கள் முன்னாடி இருந்த அத்தனையிலிருந்தும் விடுபட்டவராகிறார்கள்.

அன்றிரவு முழக்க இயற்கையின் உன்னத ஒலியின் மனமொழியோடு லயித்திருந்தார்கள் முத்தனும் பாலாவும்.

பாலனிடமிருந்து இன்னொரு குருஞ்செய்தி வந்திருந்தது. நாங்கள் செஞ்சியை தாண்டி விட்டோம் என்று.

லைட்டை போட்டு விட்டு மரத்தை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி வந்து நின்று பார்த்தான் முத்தன்.

போர்த்தியிருக்கும் இலைகளுக்கு நடுவே ஒலியும்,இருளும் முயங்கிய கர்ப்பகிரகத்தில் சுடரும் விளக்கொக்களி போல காட்சி அலையாடியது.

சொல்லண்ண முடியாத பேருருவம் தன்னுள் நிலைக்கொண்டிருப்பதை தாங்க முடியாமல் தினறினான் முத்தன்.

இது போதம் போதம் மட்டுமே அப்படி நினைத்தால் மட்டுமே இங்கே நிற்க முடியும். அப்படி நினைத்த கணமே உள்ளுள் பேருருவம் குறைவதை உணர்ந்தான் முத்தன்.

திதியும்,பாலனும் பின்னரவில் குடிலுக்கு வந்தார்கள். சுற்றிலும் சிறு பூச்சிகளின் ரீங்காரத்தில் உயிர்த்திருந்ததது நிலம்.

மரத்தை சுற்றி இருந்த நிலத்தில் சாமந்தி பூக்களின் வாசத்தால் ஈர்க்கப்பட்ட தேனீக்களின் பாடல்கள் காதலில் திளைத்திருந்த திதிக்கு என்னமோ செய்வது போல இருந்தது.

குதூகலத்தின் வாசல்கள் திறப்பதை திதியின் முக மலர்ச்சியிலேயே தெரிந்தது.பாலன் பழக்கப்பட்ட சிரிப்புடன் தள்ளி நின்றான். மரத்தருகே இருந்த காட்டோடையின் குத்துச்செடிகளில் மேல் ஏறியிருந்த சுரக்கொடியில் மின்மினிகள் மின்னுவதை பார்த்து அதை நோக்கி ஓடினாள்.

ஒன்று இரண்டு என கை நிறைய மின்மினிகளை பிடித்து முகத்தருகே கொண்டு போய் பறக்க விட்டாள். பால் பேதமற்ற பால்யத்தின் குருஞ்சிரிப்பு அவள் உடலெங்கும் பரவுவதை பார்க்கமுடிந்தது.

அந்நிமிடம் திதி ஓடி வந்து இருவரையும் கட்டி அணைத்தாள்.

தூரத்தில் அப்பாவுவின் குரல் கேட்க அவர்களை குடில் மேலே போக சொல்லிவிட்டு குரல் வந்த திசை நோக்கி ஓடினான் முத்தன்.

நெடுவாய் நின்றிருந்த ஒற்றை பனமரத்தருகே ஓடி வந்துக்கொண்டிருந்தார் அப்பாவு. அரிதாரம் பூசியவுடன் களத்துக்கு ஓடும் துடியின் ரெளத்திரம் அந்த இருட்டில் கூட அவரின் கண்களில் தனித்து தெரிந்தது.

முத்தனின் எட்டளுக்கு பிடிபட்டதும் அப்பாவு திமிறி கொழுமினார்.

முத்தன் செய்வதறியாது அவரை பின்னோக்கி இழுத்தான். ஆனால் அவரின் முழு வேகமும் மரத்தை நோக்கியே இருந்தது.

போத வாசலில் புரிந்துணரமுடியாத சம்சாஷனைகள் அவரிடமிருந்து கொட்டியது.

’அது,நான்,அப்பன்,மாரி,மாரி,மாரியம்மா’ என பிதற்றினார்

அத்துடி முத்தனுக்கும் ஏறி அப்பாவுவை திமிறி அழுத்தினான். உறையேறிருந்த துடி சட்டென விலகி அவர் நிதானத்துக்குள் வந்தார்.

அரை மயக்கத்தில் எழுந்து நின்று யாசகனின் பாவனையில்

’அத யாங்கிட்ட கொடுத்துடு.. இல்லையன்னா’

பின்னாடியிருந்து யாரோ தொடும் உணர்வு வந்து திரும்பி பார்த்தான் முத்தன்.திதியும் பாலனும் நின்றிருந்தார்கள்.

விடிகாலை கருக்கல் வீட்டை சுற்றி இருந்தது. கனவிலிருந்து எழுந்தவன் போல படியிலிருந்து எழுந்தான் முத்தன்.

குடிலுக்கு போலாமா காலை ஒளியில் அங்கிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்று சொன்னவுடம் சிறு தயக்கத்துடனே முத்தன் கிளம்பினான்.

இருள் கிழித்து கிழக்கில் காலை ஒளி எழுந்த போது குடிலருகே நின்றிருந்தார்கள் மூவரும். மரத்தடியில் யாரோ தண்ணி தெளித்து சாணியுருண்டையில் காட்டுப்பூவை வைத்திருந்தார்கள்.

முத்தன் சுற்றிலும் தேடினான்.

தூரத்தில் எந்த சலனமும் இல்லாமல் காலை பனியை விலக்கியபடி பட்டாம்பூச்சிகள் சூழ ஒரு உருவம் போய்க்கொண்டிருந்தது.

00

மாரி.கிருஷ்ணமூர்த்தி

நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவன்.தொடர்ச்சியாக கனலி,தளம்,யாவரும் போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.அத்துடன் விவசாயப்பணியும்,சமூக பணிகளிலும் ஈடுபடுத்தியுள்ளேன்.எங்கள் கிராமத்தில் குழந்தைகளுக்கான தும்பட்டான் என்ற நூலகமும், மாலை நேர பள்ளியும் நடத்தி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *