தமிழரசியின் கேள்விகள் ரகுநாதனின் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவள் கேட்ட போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரகுநாதனுக்கு இன்றைக்கு அது தனக்கு விடுக்கப்பட்ட ஒரு கணையாகவே தோன்றியது.

நேற்றைய இரவிலும் சரியாகத் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டே இருந்தான். அப்படியும் மீறி தூங்கியபோதும் கனவிலும் அவளது கேள்விகள் வந்து விழுந்து தன்னைத் தாக்குவது போலவே இருந்தது.

“சாதனை” ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாதன். தோட்டம் காடு வயல் வீடு என்று எது விலைக்கு வந்தாலும் அதை எப்பாடு பட்டாவது தனக்குச் சொந்தமாக்கி விடுவான். எத்தனை போட்டி இருந்தாலும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்.

இப்படித் தொழிலில் தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டே இருப்பதால் வேறு யாரும் இந்தப் பகுதியில் கால் பதிக்க முடியவில்லை.

திருப்பூர் நகரம் விரிவடைந்து கொண்டே வந்து இப்போது பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருந்த நாச்சிபாளையத்தையும் கைப்பற்றி விட்டது.

திருப்பூரில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் எங்கு பார்த்தாலும் ”சாதனை” ரியல் எஸ்டேட் பதாகைகள்தான். போதாக் குறைக்கு திருப்பூரில் இயங்கும் உள்ளூர் சேனல்களிலும் இதே விளம்பரம்தான்.

”முன்பணம் ஒரு லட்சம் மட்டும்… ஆனால் சந்தோஷம் வாழுங் காலம் மட்டும்”

“மாதா மாதம் பால் வாங்கும் காசிருந்தால் தவணையைக் கட்டி முடித்து பத்தே பத்து வருடத்தில் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம்”

“அட்வான்ஸை இன்றே கொடு… ஒரே மாதத்தில் சாவியை கையில் எடு”

”குறைந்த தவணையில் வீடு சொந்தம்”. ”கிரையச் செலவு இல்லை”

இப்படியான விளம்பரங்களால் மயங்கிய மக்கள் திருப்பூரில் இருந்து படையெடுக்கத் துவங்கினர். வீட்டு மனை வாங்க காரும் பைக்குமாய் கிராமத்தை முற்றுகையிட்டது. மளமளவென காடு மேடெல்லாம் வீடுகளாக மாறியது. குட்டி கிராமமாக இருந்த நாச்சிபாளையம் இரண்டே வருடத்தில் பேரூராட்சி அளவிற்கு உயர்ந்தது.

சிறிய அளவில் தொழில் செய்ய ஆரம்பித்த ரகுநாதன் வயதில் சிறியவனாக இருந்தாலும் தன் திறமையால் இன்றைக்கு ரியல் எஸ்டேட் உலகில் பெரிய புள்ளியாகி விட்டான்.  தனக்கு ஒரு கார். தன் மனைவிக்கு ஒரு கார். தன் செல்ல மகள் தமிழரசி பள்ளிக்குச் செல்ல ஒரு கார் என்று வீட்டு வாசல் முன் கார் மயமாக இருக்கும். அதுபோகவும்., வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்ல பத்துக்கும் மேற்பட்ட கார்கள் என்று அவனுடைய செல்வாக்கு எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது.

இப்படி ரியல் எஸ்டேட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ரகுநாதனைத்தான், தன் கேள்விகளால் அசைத்துப் பார்த்து விட்டாள் பத்து வயது நிரம்பிய தமிழரசி.

ஒரு நாள் ரகுநாதன், தான் வாங்கிய புதிய காட்டை பார்வையிடச் சென்றிருந்தான். காட்டை சமன் செய்யும் இயந்திரங்களை இயக்குபவர்களும் மரம் மட்டைகளை வெட்டும் தொழிலாளர்களும் சற்று நேரத்தில் வேலைக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு என்ன வேலை கொடுக்கலாம் என்பதை யோசிக் கொண்டே காட்டிற்குள் நடந்தான்.

நடந்து கொண்டிருக்கும்போது அடுத்த அடி வைக்கும் இடத்தில் ஏதொ ஒன்று தட்டுப் பட்டதும் அப்படியே நின்றான். நல்ல வேலையாக அதை மிதிக்கவில்லை.

அது என்னவென்று கூர்ந்து கவனித்தான். ஏதோ ஒரு குருவியின் முட்டைகள் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் அது என்ன குருவியின் முட்டை என்பது தெரியவில்லை. அதை அப்படியே கைகளில் எடுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். எந்தப் பறவையும் கண்ணில் தென்படவில்லை. கைகளில் ஏந்திக் கொண்டே கார் நிற்கும் பகுதிக்கு வந்தான்.

அவன் வரவும் வேலையாட்கள் வரவும் சரியாக இருந்தது. ரகுநாதனின் கைகளைப் பார்த்தபடியே அவனின் பக்கத்தில் வந்து நின்றவர்களில் ஒருவர் கேட்டார்.

“என்ன தம்பி… காடைக் கூருவியோட முட்டைகள எடுத்திட்டு வந்திருக்கீங்க போல”

”ஓ, இது காடையோட முட்டைகளா? எவ்வளவு அழகா இருக்கு. இத என் மகள் தமிழரசிகிட்ட காட்ட கொண்டு போவேன்” என்றான் ரகுநாதன்.

“இதோட டேஸ்ட் நல்லா இருக்கும் மொதலாளி. காடையோட கறியும் செம டேஸ்டா இருக்கும்” என்றான் ஒரு இளைஞன்.

அவனுடைய பதிலைக் கேட்டு சிரித்துக் கொண்டே… முட்டைகளை காரில் பத்திரமாக வைத்துவிட்டு காட்டில் நடக்க வேண்டிய வேலைகளையெல்லாம் சொல்லிவிட்டு வீடு நோக்கிக் கிளம்பினான்.

பொரிப் பொரியாக கூழாங்கற்களைப் போல் அழகாக இருந்த முட்டைகளைப் பார்த்த ரகுநாதனின் மனைவி ஜானகியும் மகள் தமிழரசியும் வியந்து போயினர்.

தமிழரசிக்கு முட்டைகள் இருந்த இடத்தையும், அந்த காடைக் குருவியையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. நாளைக்கு சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் அந்தக் காட்டிற்கு தானும் வருவதாகச் சொன்னாள். ரகுநாதனும் சரியென்று ஆமோதித்தான்.

புதியதாய் வாங்கிய நிலத்தப் பார்வையிட ஜானகியையும் அழைத்துக் கொண்டு போனான் ரகுநாதன். நாச்சிபாளையத்திற்கு ஒதுக்குப் புறமாய் வெள்ளிமலை செல்லும் பாதையில் இருக்கும் பத்து ஏக்கர் நிலம் அது. மரங்களும் காட்டைச் சுற்றிலும் வேலியுமாய் பார்ப்பதற்கே மிகவும் பிரம்மாண்டமாய் இருந்தது.

காரில் இருந்து இறங்கும்போது தனது கையில் ஒரு சிறிய அட்டைப் பெட்டியையும் எடுத்து வந்தாள் தமிழரசி.

“என்ன பாப்பா அந்தப் பெட்டில” என்றான் ரகுநாதன்.

“நீங்க நேத்து எடுத்து வந்த குருவி முட்டைங்கதாம்பா. வீட்டுல இருந்து எடுத்திட்டு வந்திட்டேன். அத எங்கிருந்து எடுத்து வந்தீங்களோ அந்த எடத்தப் பார்க்கணும்பா”

“அப்படியா. வா. கூட்டிட்டுப் போறேன். நீயும் வா ஜானகி”

குழந்தையும் ஜானகியும் அவனை பின் தொடர்ந்தனர்.

“சின்னதா ஒரு பள்ளம் இருக்கில்ல. இதுதான் குட்டி அந்த இடம்”

“ஓஹோ. அப்போ அந்தக் குருவி எங்கே போயிருக்கும்.”

“அது எங்கியாச்சும் போயிருக்கும். ஆளுங்க நெறையா வேல செய்யறாங்க இல்ல”

“சரிங்கப்பா. ஆனா நான் இந்த முட்டைய இங்கேயே வச்சுடுவேன். அது குஞ்சு பொரிக்கற வரைக்கும் பத்திரமா இருக்கட்டும்னு ஆளுங்ககிட்ட சொல்லிடுங்கப்பா” எனச் சொல்லியவாறே பத்திரமாக அந்த முட்டைகளை அதே இடத்தில் வைத்தாள்.

“சரி சரி செல்லம்.  நீ சொன்னதாகவே சொல்லிடறேன். வாங்க அப்படியே காட்டை ஒரு சுத்துச் சுத்தி வரலாம்” 

ஜானகியும் தமிழரசியும் ரகுநாதனுடனே சென்றனர்.

ஒரு இடத்தில் கூடு ஒன்று கிடந்தது. அது இப்போது வெட்டப்படும் வேலியில் இருந்து பிய்ந்து விழுந்ததாக இருக்க வேண்டுமென்று ஜானகி நினைத்துக் கொண்டிருக்கும்போது தமிழரசி கேட்டாள்.

“அம்மா இதென்னம்மா கூடு. இதுக்குள்ள என்ன இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே கூட்டைக் கையில் எடுக்கப் போனாள். ஜானகி அதைத் தொட வேண்டாமென்று தடுப்பதற்குள் அதை புரட்டிப் போட்டு விட்டாள்.

அதற்குள் இன்னும் கண் விழிக்காத ஒரு அணில் குஞ்சு துடித்துக் கொண்டு இருந்தது. அதையே பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தமிழரசியின் கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்துக் கொண்டு போனாள் ஜானகி.

நடுக் காட்டிற்குள் இருந்த ஒரு மரத்தின் கிளைகளை வெட்டும் முயற்சியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த மரத்தைச் சுற்றிலும் காக்கைகளும் சில பறவைகளும் சுற்றிச் சுற்றி வந்தன. தொழிலாளர்களை கொத்தவும் செய்தன.

இவர்களை அந்த மரத்திற்கு அருகில் வரவேண்டாமென தொழிலாளர்கள் சைகை செய்தனர். அங்கு வந்தால் காக்கைகள் இவர்களையும் கொத்தி விடும் என்பதால் எச்சரிக்கை செய்யும் விதமாகச் சொன்னார்கள். அதைக் கவனித்த தமிழரசி தன் அம்மாவிடம் கேட்டாள்.

“ஏம்மா அந்தக் குருவிங்க எல்லாம் இப்படி சுத்துது. அந்த மாமாவெல்லாம் ஏன் அதுங்கள வெரட்டி விடறாங்க”

“அது வந்து… கிளைகளயெல்லாம் வெட்டறாங்க இல்ல. அதுல குருவிங்க எல்லாம் கூடு கட்டிருக்கும் இல்ல. அத அழிக்கிறாங்கன்னு கோபத்துல அப்படி சுத்துது. சரி சரி வா. கேள்வியா கேட்டுட்டே இருக்காதே. அப்பா அங்கே போய்ட்டங்க. வா நாமும் போவோம்”

ஜானகி தமிழரசியை இழுத்துக் கொண்டு மரம் வெட்டும் இடத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்த ரகுநாதனின் அருகில் சென்றாள்.

ரகுநாதன் யாருடனோ போனில் பேசி முடித்துவிட்டு இவர்களிடம் வந்தான்.

“என்ன ஜானகி இந்த காடு பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்கு. இதுல எத்தன வீட்டு மனைகளா பிரிக்க ஏற்பாடு செஞ்சிருக்கீங்க”

“ஒரு நூத்தைம்பது வீடுகளா பிரிக்க முடியும். ரோட்டுக்கும் கொஞ்சம் எடம் போய்டும் இல்லையா” என்றான்.

அப்போது தமிழரசி இடைமறித்துப் பேசினாள் சிணுங்கிக் கொண்டே.

“அப்பா. எனக்கு இந்தக் காடு பிடிச்சிருக்கான்னு என்னக் கேட்க மாட்டீங்களா” என்று சிணுங்கினாள்.

“சாரிடி செல்லம். உனக்கும் இந்தக் காடு பிடிச்சிருக்கான்னு சொல்லு பார்ப்போம்”

“எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்குப்பா”

“தாங்க்யூ. என் செல்லக் குட்டியே” என்று அவளின் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

”சரிப்பா. இந்தக் காட்ட எதுக்கு வாங்கினீங்க”

“நெறையா வீடுகளா கட்டத்தான்”

“யாருக்கு வீடு கட்டப் போறீங்க”

“குடியிருக்க வீடு இல்லாம நெறையப் பேரு இருக்காங்க இல்ல. அவுங்களுக்கெல்லாம் கொறஞ்ச வெலைல தவணை மொறைல கட்டிக் கொடுக்கப் போறேன்”

“அப்போ இந்த அணில் குஞ்சு, காடைக் குருவி, காக்கை இதுக்கெல்லாம் வீடு வேண்டாமாப்பா? அதுங்களோட கூடுகள அழிச்சுத்தான் மனுஷங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போறீங்களாப்பா? நெறையா நெறையா வீடுகள கட்டிக் கொடுக்கிறீங்களே அப்பா… இந்தக் காட்டுக்குள்ள வாழற அணில் முயல் குருவி இதுக்கெல்லாம் ஏம்பா நீங்க வீடு கட்டி கொடுக்கக் கூடாது?.”

யாரும் எதிர்பார்க்காத வகையில் கேள்விகளை அள்ளி வீசினாள் தமிழரசி. ரகுநாதன் உட்பட அங்கிருந்தவர்கள் பேச தைரியம் இல்லாமல் அசந்துபோய் நின்றனர்.

இதைக்கேட்ட ஜானகிக்கு தன் மகளின் புத்திக் கூர்மையை நினைத்து பெருமையாய் இருந்தாலும் சற்றுக் கோபமும் வந்தது.

”பெரியவங்க முன்னால அதிகப் பிரசங்கித்தனமா கேள்வியா கேட்டுட்டு இருக்கே. வா காருக்குப் போலாம்” என்று கடிந்து கொண்டே தமிழரசியை இழுத்துக் கொண்டு காரை நோக்கிப் போனாள் ஜானகி.

அப்போதைக்கு அந்தக் கேள்விகளை ரகுநாதன் உதாசீனப் படுத்தி விட்டாலும்., பிறகு அந்தக் கேள்விகளின் தாக்கம் அவனை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது. அணில்களும் குருவிகளும் முயல்களும் காக்கைகளுமாய் அவனையே சுற்றிச் சுற்றி வந்து ”எங்களுக்கும் வீடு வேண்டும்., வீடு வேண்டும்” என்று போராட்டம் நடத்துவது போல ஒரே பிரம்மையாகவே இருந்தது.

தன் செல்ல மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று குழம்பிப் போன ரகுநாதன் ஓவியம் வரைந்து கொண்டிருந்த மகளின் அருகில் வந்து அமர்ந்தான். செடி கொடிகளை வரைந்து அதற்கு வண்ணம் தீட்டும் வேலையில் மும்முரமாய் இருந்தாள் தமிழரசி.

ஓவியத்தை வரைந்து முடித்து விட்டு ரகுநாதனிடம் காட்டினாள்.

“அப்பா…. இப்போ என்னோட பார்க் ரெடி. நல்லா இருக்கான்னு பாருங்கப்பா”

”வெரி குட் வெரி குட்” சொல்லிக்கொண்டே மகளின் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

அதே நேரம் அந்த ஓவியப் பூங்காவை பார்த்தவன் மனதில் பளிச்சென ஒரு சிந்தனை உதயமானது. அந்த சிந்தனையானது அவன் மனதை மொத்தமாய் ஆக்கிரமித்தது. அவனுக்கு ஒரு விடையினையும் புரிதலையும் கொடுத்தது.

தமிழரசி கேட்ட கேள்விகளால், தற்சமயம் வரை சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தனுக்கு அவள் வரைந்த ஓவியமே அவனுக்கான பதிலையும் தந்துவிட்டதாய் உணர்ந்தான்.

அடுத்த நாள் அந்த நிலத்திற்கு நேரத்திலேயே சென்றான். அப்போதுதான் தொழிலாளர்கள் வேலைகளை ஆரம்பிக்க இருந்தனர். காரைவிட்டு இறங்கியவுடன் வேலையை நிறுத்தச் சொல்லிவிட்டு எல்லோரையும் ஓரிடத்திற்கு அழைத்தான். வேலைகளை அப்படி அப்படியே விட்டு விட்டு., என்னமோ ஏதோவென்ற பதற்றத்துடன் அவர்கள் ஓடி வந்தனர்.                                   

 “மரம் மட்டை வேலி இதெல்லாத்தையும் வெட்டறத இத்தோட நிறுத்திடலாம். நெலத்தை சமன் படுத்தறதையும்தான்” என்றான் ரகுநாதன்.

 “என்ன காரணம் சார். இந்த எடத்தில ஏதாவது வில்லங்கமா சார்? நாம் தான் எல்லாத்தையும் சரி பார்த்துத்தானே வாங்கிருக்கோம்” என்றான் ரகுநாதனின் உதவியாளர் ஒருவன்.

 “வேல செய்ய வேற ஆளுங்களுக்கு பேசிட்டீங்களா மொதலாளி” என்றார் மரம் வெட்டும் முதியவர் ஒருவர் வருத்தத்துடன்.

“அதெல்லாம் இல்ல… இது வேற விஷயம்…” மேலும் சொல்லாமல் நிறுத்தினான் ரகுநாதன்.

“மேல் வெலைக்கு விக்கலாம்னு முடிவெடுத்திட்டீங்களா” சிலர் ஒரே குரலில் கேட்டனர்.

“விக்கப் போறது இல்ல. அனா பொதுச் சொத்தா மாத்தி வைக்கப் போறேன்”

 “புரியும்படியா சொல்லுங்க சார்” என்றான் உதவியாளர் ஒன்றும் புரியாமல்.

“கொஞ்சம் பொறுமையா இருங்க. தீர்க்கமா யோசன செஞ்சுட்டு ஒரு நாள் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு வேகமாய் கிளம்பிவிட்டான்.

ஒரு நாள் ரகுநாதன் வேப்ப மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த பலகைக் கல்லில் அமர்ந்தபடி அந்தக் காட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவரைப் பார்க்க ஒரு நில புரோக்கர் வந்தார்.

“வாங்க புரோக்கரே… என்ன இந்தப் பக்கம். ரொம்ப நாளா ஆளைவே காணமே”   

“ஆமாங்க ரகுநாதன். ஏகப்பட்ட புரோக்கர் வந்துட்டாங்க. வெலைய ஆளாளுக்கு தூக்கிப் போட்டு ஏவாரத்தைக் கெடுத்துடறாங்க. இப்போதான் தோதா ஒரு பூமி வருது. மெயின் ரோட்டுலயே சவுனான பூமி அது. எதுக்கும் உங்க காதில மொதல்ல போட்டு வைக்கலாம்னு வந்தேன்” என்று சொல்லிவிட்டு ரகுநாதனின் பதிலுக்காகக் காத்திருந்தார் புரோக்கர்.                                   

அமர்ந்திருந்தவன் எழுந்து காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தான். புரோக்கரும் அவனை பின் தொடர்ந்தார்.

சில செடி கொடிகளை தடவிப் பார்த்தான். மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த பறவைகளை உற்றுப் பார்த்து ஒரு  பெருமூச்சை விட்டான்.

சில மயில்கள் அவனைக் கண்டதும் மரக் கிளைக்கு தாவிப் பறந்தது. பறவைகளின் கூச்சல் காடு முழுவதும்  நிறைந்திருந்தது.

வடக்கு மூலையில் இருந்து குப்பென்று வீசிய காட்டு மல்லியின் மணத்தை சுவாசித்தபடியே திரும்பி வந்தான். வரும்போது ஒரு அணில் அவனின் கால்களுக்கு நடுவில் புகுந்து வேகமாய் ஓடி புதருக்குள் மறைந்தது. அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே திரும்பவும் வந்து அந்த பலகைக் கல் மீது அமர்ந்தான். அவரும் அவன் எதிரே அமர்ந்தார்.

“கொஞ்ச நாளுக்கு முன்னால இந்த மாதிரியான செய்தியெல்லாம் எனக்கு தேனாட்டம் இனிச்சுது. ஆனா இப்போ அப்படிக் கேள்விப்பட்டா வேதனையா இருக்குதுங்க புரோக்கரே. நாம எத்தன  நகரங்கள வேணாலும் நிர்மானிக்கலாம். ஆனா ஒரு நெலத்த புதுசா உருவாக்க முடியுமா என்ன. அதனால இருக்கறதையாவது இப்போ காப்பாத்தணும்னு எனக்குத் தோணுது. ஒன்னு பண்ணுங்க புரோக்கரே. அந்த நெலத்தோட சொந்தக்காரர்கிட்டே நெலத்த விக்க வேண்டாம்னு சொல்லுங்க. அதோட மதிப்பு இப்போ தெரியாது. ஆனா அத வித்து வந்த காசெல்லாம் காணாமப் போனதுக்கு அப்புறந்தான் தனக்கு இருந்த ஒரு சொத்த அநியாயத்துக்கு இழந்திட்டோம்னு வருந்தி அழ வேண்டி வரும். அதனால நான் நெனைக்கறத அவருகிட்ட சொல்லுங்க. அப்புறம் உங்க பாடு அவரு பாடு”

ரகுநாதனின் மன மாற்றத்தாலும் வந்த காரியம் கைகூடவில்லை என்பதாலும் ஏமாற்றம் அடைந்த புரோக்கருக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. தான் கிளம்புவதாகச் சொல்லிச் சென்றுவிட்டார்.

ரகுநாதன் மனதில் ஒரே யோசனையாக ஓடிக் கொண்டிருந்தது. இதுவரை எத்தனையோ இடங்களை வாங்கி விற்று இருக்கிறோம். எத்தனையோ தோப்புகள் நிறைந்த இடங்களையும் மரம் செடி கொடிகள் நிறைந்த இடங்களையும் வாங்கி விற்று இருக்கிறோம். அவைகளால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை. யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாத எதுவுமே விளையாத நிலங்கள் சில்வற்றையும் வாங்கி வீட்டு மனைகளாக அமைத்து இருக்கிறோம். இப்போது இந்தக் காட்டைப் பொறுத்தவரை பார்ப்பதற்கே ஒரு பசுமை பூமியாகத்தான் இருக்கிறது. ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் இருக்கின்றன.

பல மரங்களின் வயது குறைந்தது, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். சில மரங்கள் ஆல மரம் போல் பரந்து விரிந்து இருக்கின்றன. அதனடியில்தான், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் வெயில் காலங்களில் தங்கி ஓய்வெடுப்பார்கள். சில நேரங்களில் கால் நடைகளும் படுத்திருக்கும். வீட்டு மனைகளாக பிரிக்க இருக்கும் இந்தக் காட்டைப் பார்ப்பதற்கே ஒரு வனம்போல் இருக்கும். இப்படியெல்லாம் யோசனைகளில் இருந்த ரகுநாதனுக்கு தமிழரசியின் கேள்வி, இந்தக் காட்டை ஒரு வனம் போன்ற தோற்றத்திற்கே அழைத்துச் சென்றது.

சில நாட்களுக்குப் பிறகு அந்தக் காட்டிற்கு., தன் உதவியாளர்கள் சில தொழிலாளர்கள் மரம் வெட்டுபவர்கள் என்று எல்லோரையும் அழைத்திருந்தான். அவர்களும் இன்று என்னதான் சொல்லப் போகிறாரோ என்ற எதிரபார்ப்புடன் முன்னமே வந்து காத்திருந்தனர். குறித்த நேரத்தில் ரகுநாதன் தன் மனைவி மகளுடன் காரில் வந்திறங்கினான்.

“உங்கள எதுக்கு இங்கே வரச் சொல்லி இருக்கேன்னா… அன்னைக்கும் புதிரா சொல்லிட்டுப் போய்ட்டேன் இல்ல… இப்போ சொல்றேன். அதாவது யாருக்குமே வராத ஒரு யோசன எனக்கு வந்தது. அதுவும் என் செல்லக் குட்டி தமிழரசி கேள்வியாலதான் அப்படிப்பட்ட யோசன வந்ததுன்னு சொல்லலாம்…”

கொஞ்சம் மௌனம் சாதித்துவிட்டுத் தொடர்ந்தான்.

“இனி நீங்க மரத்தை. அந்த செடி கொடிகள வெட்டறதுக்குப் பதிலா… காப்பாத்தறதுலயும் புதுசா நடவு செய்யறதிலயும் ஈடுபடலாம். என்ன சொல்ல வர்றேன்னு புரியல இல்ல. புரியும்படியா சொல்றேன்… இந்த நெலத்த ஒரு வனமா மாத்தப் போறேன். மரங்களும் செடி கொடிகளுமா நட்டு வைக்கப் போறேன். இயற்கையின் சொத்தா மாத்தி வைக்கப் போறேன். வீட்டு மனைகளை உருவாக்கியதில் மட்டுமல்ல ஒரு வனத்தை உருவாக்கியதிலும் சாதனை புரிந்தது ”சாதனை” ரியல் எஸ்டேட் என்று வருங்காலம் சொல்லும்படி செய்யப் போறேன்” என்று சொல்லி நிறுத்தினான்.

தமிழரசி எம்பி எம்பி குதித்தபடி கை கொட்டி ஆர்ப்பரித்தாள். ஜானகி கண்கள் லேசாகப் பணித்தது.

எல்லோரும் மெய்மறந்து நின்றனர். அவன் உதிர்த்த வார்த்தைகள் உண்மைதானா என்பதை நம்ப முடியாமல் சிலையாய் நின்றனர். பின் ஒவ்வொருவராய் அவனின் பெரிய மனதை எண்ணி பாராட்டி மகிழ்ந்தனர். ரகுநாதனின் வித்தியாசமான எண்ணத்தைக் கேள்விப்பட்டு ஊரே பெருமையுடன் பேசிப்பேசி மாய்ந்தது.

தான் முன்பே தொடங்கி நடந்து கொண்டிருந்த கட்டுமான வேலைகளை மட்டும் முடித்துக் கொடுக்கும் முடிவில் இருந்தான். அந்த வேலைகளுக்கு மத்தியில் இந்தக் காட்டின்மேலும் தீவிர அக்கறை செலுத்தினான். மனைவி மகளுடன் அங்கு அதிக நேரம் செலவிட்டான்.

கூடுதல் கண்காணிப்பின் காரணமாக ஓராண்டில் பத்து ஏக்கர் பரப்பளவு முழுவதும் பசுமை வெளியாய் தென்பட ஆரம்பித்தது. அந்த நிலத்திற்கு “தமிழரசி பசுமைப் பூங்கா” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.

தமிழரசியின் கேள்விகளும் அவள் வரைந்த ஓவியமும்., ரியல் எஸ்ட்டேட் உரிமையாளராக இருந்த ரகுநாதனை இப்போது வனம் படைத்த வள்ளலாக உலகமெல்லாம் உயர்த்தி வைத்தது.

******

ரத்தினமூர்த்தி

ஆவாரங்காடு, தாகநதி, குமரன் சாலை ஆகிய நாவல்களும், ஆத்மாவின் சுவாசங்கள், காட்டு மல்லி, அடர்வனம், விசாலம் ஆகிய கவிதை தொகுதிகளும், அப்பாச்வின் நிழல் என்கிற சிறுகதை தொகுப்பும் முன்பாக வெளியிட்டவர். திருப்பூரில் வசிக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *