எங் கையிக்கு எட்டுற தொலவுலதான்
சொவரோட சேத்து சாத்தி வச்சுருக்காக
வெவரஞ் தெரிஞ்ச நாளா நானு
எட்டி புடிச்சும் அழுந்தி புடிச்சும்
ஒழவோட்டுன கலப்பய.
ஊருணிக் கரையோரக் காட்டுல
வெகு நாளா நின்னுகிட்டுருந்த
வெளஞ்ச நாட்டுக் கருவேல மரத்த வெட்டி
ஆசாரிமாருக எழச்சு செஞ்சதெல்லாம்
கண்ணாரக் கண்டவன் நானு.
கால ஒழவோ கடுங் கோடை ஒழவோ
எங் கை புடிச்சு காடு மேடு உழுததெல்லாம்
பெருங் கனவா நிக்கிதிப்போ.
இன்னும் நாலு நாளக்கித்தான் தாங்கும்னு
கொட்டடியில கெடக்குற கயித்துக் கட்டுல்ல
கொண்டு வந்து போட்ட பெறகு
நல்லா வாகையாத்தான் இருக்கு
ஏரோட்டுன கலப்பய கண் கொண்டு
பாக்குறதுக்கு.
அடைகலமான புறா குஞ்சுக்கு
தன் சதைய அரிஞ்சு கொடுத்த
சிபி மகாராசனக் கெணக்கா
அரிக்கிற கரையானுக்கு தன்னக் கொடுத்து
நிக்கிற கலப்பையக் கெனக்கா கூட இல்ல
இந்த மனுச உசுரு.
கலப்பை கரையானுக்கு
கரையான் கோழிக்கு
கோழி சீக்காளிக்குங்கிறது
கூட வரமான வாழ்வுதான்.
என் நெஞ்சுக் குழிக்கும் தொண்ட குழிக்குமிடையில ஓடி தவிக்கிற
உசுரு எப்பம் வேணுமின்னாலும்
பொசுக்குனு பொறப்பட்டு போயிறலாம்
உழச்ச உடல எரிக்கவோ பொதைக்கவோ
செஞ்சுடலாம்
இந்த நெனவுகளத்தான்
என்ன செய்யிறதோ தெரியல ;
பெலமெல்லாங் கூட்டி கண்ணத் தொறந்து
ஒருவாட்டி கலப்பைய பாத்துட்டு
எங் கண்ணு ரெண்டயும் மூடயில
கலப்பைக்கே எடம் மாறத்
தொடங்கியிருந்தது உசுரு.
++
வீ.வைகை சுரேஷ்
தேனி மாவட்டம் வைகை நதிக்கரை விவசாயக் குடும்பத்தை சேர்ந்த சுரேஷ் தற்போது கோவையில் சுகாதார ஆய்வாளராக பணி செய்து வருகிறார். நடுகல், ஆனந்த விகடன் குமுதம் இதழ்கள் மற்றும் மின்னிதழ் கோளில் கவிதை கட்டுரைகள் எழுதி வருகிறார்.