பெங்களூருவிலிருந்து கோயில் கொடைக்கு ஊருக்கு திரும்பிய கந்தனுக்கு
மனைவியையும்,பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போய் தான் சுற்றிய இடத்தையெல்லாம் காட்டவேண்டும் என்று தான் தோன்றியது.ஆனால் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தால் அவன் மட்டும் வெறிச்சோடி கிடக்கும் சத்திரத்து தெரு பக்கம் நடந்து போனான். அவன் பார்த்து வளந்த வீடு,திண்ணை,கிணறு,பள்ளிக்கூடம் என எல்லாம் மாறியிருந்ததை பார்த்தான் சூரியன் மேற்கு பக்கம் இறங்கிக்கொண்டிருக்க ஒன்றிரண்டு பறவைகள் வலசை பாதையை நோக்கி போய் கொண்டிருந்தன.
சத்திரத்தை ஒட்டி வியாபித்திருந்த இலுப்பை மரத்தடியில் கல் பலகைகள்
விரவியிருக்க .அதன் மேல் நாடோடி கூட்டம் ஒன்று படுத்துக்கிடந்தார்கள்.
மரத்தில் மேக்கால பக்கம் புடவைகளால் போடப்பட்ட குடிசைகளில் ஆறேழு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த ஊரில் இன்னமும் மாறாத இருக்கும் ஒரே இடம் இந்த இலுப்பை மரமும்,மரத்தடியில் வந்து தங்கி செல்லும் நாடோடி கூட்டம் மட்டும் இன்னும் தொடர்வது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பூம் பூம் மாட்டுக்காரர்கள்,குறி சொல்ல வரும் நாடோடிகள்,கார்த்திகை தீபத்துக்கு மலை தேன் விற்க வரும் பழங்குடிகள், குறியக்காரர்கள்,குரங்காட்டி காட்டுபவர்கள், கிளி சோசியர்கள், கரடி மயிர் விற்பவர்கள்,என வருடம் முழுக்க இம்மரத்தடியில் ஏதோ ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருப்பதை சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறான்
மரத்துக்கு பக்கத்தில் பழைய காலத்து செக்கு ஒன்று இருக்கும்,சிறு வயதில் அவன் தாத்தா அதை பற்றி சொல்லி கேட்டிருக்கிறான்.
முன்னொரு காலத்தில் அந்த செக்கிலிருந்துதான் மலைமேல் ஏற்றும் தீபத்துக்கு எண்ணை ஆட்டுவார்கள் என்றும் அதை கண்டுபிடித்தவர்கள் அருகர்கள் என்றும் இரவில் அவனுக்கு கதை சொல்லியிருக்கிறார் அதை தேடிய போது அது அனதாரவாக பாதி மண்ணுக்கள் மூடிக்கிடந்தன.
சிறு வயதில் பள்ளிக்கூடம் விட்டவுடன் அதனை சுற்றி குழந்தைகளோடு விளையாடியதும் தீப நாட்களில் அங்கு தங்குபவர்கள் செக்குக்கடியில் விளக்கேற்றி வைத்து கும்பிட்டதும் அவனுக்குள் நிழலாடியது.
அன்னிச்சையாகவே ராஜிவின் கண்கள் குடிசைக்குள்ளே சாக்கி இருக்கிறாளா என்று தேடியது.
சாக்கியை முதன் முதலில் பார்த்தது அவனது பதினாறு வயதில் இடது மாராப்பு போட்டு காலை பனிக்கு குடிசைக்கு வெளியே மூட்டம் போட்டு குளிர் காயும் போது தான் அவளை பார்த்தான். பச்சை கலர் பாவாடைக்கு மேல் அரஞ்சு தாவணியில் வெளிச்சத்தில் அவள் முகம் அக்காலை வேலையில் பூக்கும் மந்தாரைப்பூ போல அவன் கண்ணுக்கு தெரிந்தாள் சாக்கி
குடிசையை சுற்றி விழுந்திருந்த இலுப்பை பூவும்,அதன் மனமும் அவளுடைய அந்த காலைக்காட்சியும் இன்னும் அவன் மனதில் பசுமையாக இருந்தன.
சத்திரத்தை ஒட்டி ஓடும் ஏரி கால்வாயில் பசங்களோடு குளிக்கும் போதும் துணி துவைக்கும் போதும் யாருக்கும் தெரியாமல் ஓரமாக நின்று ரசித்திருக்கிறான்
கழுத்தில் வண்ண மணிகளும்,கைகளில் போட்டிருக்கும் மருதாணி கோலமும் அந்நீரில் அலையாடும் போதுதான் அவள். இடது கை மணிக்கட்டு பக்கத்தில் உருவம் போல ஏதோ ஒன்று பச்சை குத்தியிருந்ததை பார்த்த போது அவனுக்கு கொல்லையில் தெற்கு மூலையில் தொடங்கும் துருஞ்ச காட்டுக்கு நடுவில் இருக்கும் பாறையில் செதுக்கியிருக்கும் உருவம் போலவே தெரிந்தது.
முடி காற்றில் பறக்க நடந்து போகும் அச்சித்திரத்தை யாரும் இல்லாத நேரத்தில் போய் பார்த்திருக்கிறான் வருடத்துக்கு ஒரு முறை அதற்கு படையல் இட பாப்பாத்தி கிழவி மட்டுமே அதற்குள்ளே போய் வருவாள். ஒரு நாள் இரவு அங்கு தங்கி மறு நாள் வெய்யில் ஏறும் நேரத்தில் பூசை முடிந்து வெளியே வருவாள் பாப்பாத்தி கிழவி.
ஊரே அக்காட்டுக்கு வெளியே காத்துக்கிடக்கும்.
உடல் சுருங்கி போன கிழவியின் கண்கள் காந்தள் போல சுடர்ந்து குறிச்சொல்லி கேட்டிருக்கிறான்
ஆனால் சாக்கியின் கண்கள் அவனுக்கு தாமரை இதழ் போல தெரிந்தது.
அவளோடு காதலில் திளைத்த நாட்களில் அக்காட்டோரம் அவள் மடியில் படுத்துக்கொண்டு அவள் கைபிடித்து நெஞ்சில் வைத்துக்கொண்டு அவ்வுருவத்தை தடவியபடி அதை பற்றி கேட்டபோது அதை சட்டை செய்யாதது மாதிரி காட்டு பக்கம் வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள் சாக்கி
அப்பொழுது அவள் கண்களில் அச்சுடர் பிரகாசித்தது.
அதன் பிறகு அவள் காணாமல் போனது வரை அதை பற்றி அவன் பேசவேயில்லை.
00

மாரி.கிருஷ்ணமூர்த்தி
மாரி.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர்
கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும், கடந்த பத்து வருடமாக
இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்”சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும்,ஊர் பொது கிணறு புணரமப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார்.அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார்.தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார்.அப்பா மாரிமுத்து.அம்மா ஜெகநாதம்மாள்.மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.

