சுஜித் லெனின்
01.நுண்கதை
௦
இரவு. தனிமை. அவள் மார்பின் மீது அமர்ந்திருந்தது சாவு வீட்டில் கண்ணாடிப் பேழைக்குள் கண்ட அதே கனத்த உருவம். இப்போது அதன் முகம் பெருத்துப் பெருத்து அறையை நிறைத்தவாறு அவள் முகத்தை நக்கத் துவங்கியது. மூச்சுத்திணறத் துவங்கியவளின் உடலில் இருந்து வியர்வையும் மூத்திரமும் கசிந்திருந்தது. விழித்துக் கொண்டவளுக்குச் சாவுவீடும் கண்ணாடிப் பெட்டியும் பஞ்சடைத்த நாசியும் அந்த நெற்றியில் ஒட்டவைக்கப்பட்டிருந்த ஒரு மூலையில் வெட்டுப்பட்ட மீனுரு பொறித்த 1928 ஆம் ஆண்டு நாணயமும் நினைவிற்கு வந்தன. தடுமாறியவள் தண்ணீர் நிரம்பியிருந்த பித்தளைப் புட்டியை எடுக்க அதனடியில் ‘அதே நாணயம்’ பேரமைதியுடன் கிடந்தது.
0
02.குறுங்கதை
௦
யாமம் .
விளக்கின் நீலவொளி அறையை மென்மையாக்கி நிறைத்திருந்தது. தனிமையால் தன் உடைகளைத் தளர்த்திக்கொண்டவள் இளம் வயதில் தவறிப்போன அவளது அலுவலக சகாவின் நினைவில் ஆழ்ந்தவாறே உறங்கியும் போனாள்.
வைகறை.
அவள் மார்பின் மீது சாவு வீட்டில் கண்ணாடிப் பேழைக்குள் கண்ட அவனது கனத்த உருவம் அமர்ந்திருந்தது. இவள் எவ்வளவோ மன்றாடியும் நகர மறுத்தவன் தன்னை நன்றாக ஊன்றி அவள் மீது அமர்ந்து கொண்டான். அவன் முகம் பெருத்து பெருத்து அறையை நிறைத்தவாறு அவள் முகத்தை நக்கத் துவங்கியது.
இவளுக்கு மூச்சுத் திணறத் துவங்க அவளது உடலில் இருந்து வியர்வையும் மூத்திரமும் கசிந்திருந்தது. படபடப்பில் விழித்துக் கொண்டவளுக்குச் சாவின் வீடும் கண்ணாடிப் பேழையும் பஞ்சடைத்த நாசியும் அவனது நெற்றியில் ஒட்டவைக்கப்பட்டிருந்த ஒரு மூலையில் வெட்டுப்பட்ட மீனுரு பொறித்த 1928 ஆம் ஆண்டு நாணயமும் நினைவிற்கு வந்தன.
சற்றே தடுமாறியவள் பெருமூச்சுக்களுடன் தண்ணீர் நிரம்பியிருந்த பித்தளைப் புட்டியை எடுக்க அதனடியில் ‘அதே நாணயம்’ பேரமைதியுடன் அவளுக்காகக் காத்துக்கிடந்தது.
0
03.சிறுகதை
௦
காலை:
நகரங்கள் மனிதர்களை எழுப்ப சேவலைக் கூவ விடுவதில்லை. ஆகவே, அவர்கள் தங்களைத் தாங்களே எழுப்பிக்கொள்ள அலாரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அகரிக்கு அன்றையப் பொழுது அலாரத்திற்குப் பதிலாக அலைபேசியின் அழைப்பொலியால் நிகழ்ந்தது. பதறாதே என பதட்டத்துடன் ஒலித்த குரல் உடன் வேலை பார்க்கும் சகாவின் இறப்புச் செய்தியை உண்மையான வருத்தத்துடன் பகிர்ந்தது.
உடல் மீது அக்கறை கொள்ளென சொல்லும்போதெல்லாம் ஏதோவோர் அலட்சியம் அவனுள் இருந்தது. ஒன்றாக அமர்ந்து அருந்திய தேநீரும் உணவும் நாவில் ஏறின.
கண்கள் நீரால் நனைந்திட துடைத்துக்கொள்ளாமல் கொண்டையைப் போட்டுக்கொண்டு, குளியலறை சென்று பல்துளக்கி மீண்டவள் இரு சக்கர வாகனத்தின் சாவியையும் தலைக் கவசத்தையும் கைப்பையையும் எடுத்தபடி அறையைப் பூட்டிவிட்டு அகன்றாள்.
நண்பகல்:
இழவு வீடு. பறை அதிர்ந்தது. இளம் வயதில் மாரடைப்பு என்பது இப்போதெல்லாம் பேஷன் என்பதுபோலாகிவிட்டது என சுற்றம் பேசிக் கொள்கிறது.
கண்ணாடிப் பெட்டிக்குள் பஞ்சடைத்த மூக்குடன் கால் கட்டை விரல்கள் கட்டப்பட்ட பருத்த கரிய உருவமாகக் கிடக்கிறான் சகா. சற்று வெளுப்பாய்த் தெரிகிறான்.
அவனது மூன்று வயது குழந்தைக்கு நடப்பது என்னவென்றே புரியவில்லை. அவ்வப்போது வந்து பேழையைத் தொட்டு கண்ணாடி வழியே உள்ளே பார்த்துவிட்டு ஓடுகிறது. வீட்டாரை எதிர்த்து காதலித்து மணம் செய்தவள் நீர் வற்றிய கண்களுடன் எவ்வித அசைவுமின்றிப் பேழையின் அருகே ப்ளாஸ்டிக் சேரில் அமர்ந்திருக்கிறாள்.
பறையின் கிளர்த்தலில் மனம் ஆடுகிறது. அலுவலக நண்பர்கள் அல்லது அப்படியான தோற்றத்தில் உள்ளோர் மாலைகளுடன் வந்து இறுதிக் கடனைச் செலுத்தி விடைபெறுகின்றனர்.
எற்பாடு:
உறவுகள் அத்தனையும் வந்தாயிற்று என்பதால் குளிக்கவைக்கப்பட்ட உடல் பூரண சம்பிரதாயத்துடன் கிளம்புகிறது.
‘காட்டுக்கு வர முடியாதவங்க கடைசியாப் பாக்குறதுனா பாத்துக்கங்க’ என்ற அலறலின் பின்னால் முண்டியடித்துப் பார்க்கிறாள் அகரி.
எத்தனையோ நினைவுகள். அவன் கன்னத்தில் உள்ள நீள் தழும்பைப்போலவே நெற்றியில் ஒட்ட வைக்கப்பட்டிருந்த காசிலும் இருந்தது. உருப்படியா ஒரு காசு கூடவா இவனுங்களுக்குக் கிடைக்கல. சை! என்றானது அகரிக்கு.
தெருவெங்கும் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த கேந்தி மலர்கள் இறைந்துக் கிடந்தன. இடையே ரோஜாவின் இதழ்களும் சிதறிக் கிடந்தன. தெருவின் சாலையில் கலவையாக ஒரு மணம் வீசிற்று.
குழிக்குள் இறக்கியபின் அந்த வெற்றுடலில் இருந்த நகைகள் அகற்றப்பட்டன. அத்துடன் நெற்றியிலிருந்த காசையும் எதோ ஒரு கை எடுத்திருந்தது.
மாலை:
காட்டிற்குச் சென்றோர் ‘எல்லாம் முடித்து’ திரும்பினர். அரப்பும் எண்ணெயும் தொட்டு வைக்கப்பட்டு ஏற்றப்பட்ட விளக்கினைக் கும்பிட்டனர். ஒவ்வொருவராய் வெளியேறினர். இறுதியாக அகரியும் அவன் மனைவியின் கைகளை ஆறுதலாக ஒருமுறை அழுத்திவிட்டு வெளியேறினாள்.
காலையிலிருந்து வயிற்றுக்கு ஆகாரமென எதுவுமே செல்லாததால் தலை விண்விண் என்று தெரித்தது. தெரு சந்திக்கும் முதன்மைச் சாலையிலிருந்த கடையில் இழவு வீட்டிற்கு வந்தோர் பலர் தேநீர் அருந்தியபடி இருந்தனர். அகரியும் வண்டியை ஓரம்கட்டி நிறுத்தினாள்.
நம் மரணம் ஏனையோரையும் என்ன செய்யும் என்பதற்கான ஓர் அடையாளமாக அக்கடை இருந்தது. ஓருவர் மிளகாய் பஜ்ஜியில் இரண்டு சட்னி வைத்து உண்ண மற்றொருவர் முட்டை போண்டாவில் மிளகு தூளை தூவிக் கொண்டிருந்தார். ஸ்ட்ராங் / அரைச் சர்க்கரை / தூக்கல் என டீ க்கள் பறந்தன.
மரணம் என்பது அவ்வளவுதான் எனத் தோன்றியது அவளுக்கு. தான் உட்பட எல்லோரையும் எண்ணி நகைத்துக் கொண்டாள்.
டீ சொன்னவள் பருகி முடித்து, பணம் கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கி சரிபார்க்காமல் கூட பையில் திணித்துக்கொண்டு கிளம்பினாள்.
யாமம்:
அறைக்கு வந்தவள் வெந்நீர் வைத்து இதமான சூட்டில் தலைக்கு ஊற்றினாள். தலைவலி சற்று மட்டுப்பட்டதைப்போல் இருந்தது. ஜன்னல்களைத் திறந்தவள் காற்றை அறைக்குள் அனுமதித்ததாள்.
சமைத்து உண்ண சலிப்பாக இருந்தது. தோசைக் கல்லில் இரண்டு துண்டு ப்ரட்டைப் பிய்த்துப் போட்டு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறினாள். உண்டாள். அதிலும் கொஞ்சம் மிச்சம் வைத்தாள். பிறகு, பித்தளை புட்டியில் நீரை எடுத்து வந்தவள் படுக்கையின் தலைமாட்டில் வைத்துவிட்டு தலையணையைச் சுவரில் சாய்த்துவைத்தபடி அமர்ந்தாள். கைப்பையைத் திறந்தவள் அலைபேசியை மட்டும் எடுத்துக்கொண்டு மூடாமல் ஓரம் வைத்தாள்.
விளக்கின் நீலவொளி அறையை மென்மையாக்கி நிறைத்திருந்தது. தனிமையால் தன் உடைகளைத் தளர்த்திக்கொண்டவள் சகாவின் நினைவில் ஆழ்ந்தவாறு அவளையும் அறியாமல் உறங்கியும் போனாள்.
வைகறை:
அவள் மார்பின் மீது கண்ணாடிப் பேழைக்குள் கண்ட சகாவின் வெளுத்துப்போன கனத்த உருவம் அமர்ந்திருந்தது. எவ்வளவோ மன்றாடியும் நகர மறுத்தவன் மேலும் தன்னை நன்றாக ஊன்றி அவள் மீது அமர்ந்து கொண்டான்.
அவன் முகம் பெருத்து பெருத்து அறையை நிறைத்தவாறு பெருஞ் சிரிப்புடன் அவள் முகத்தை நக்கத் துவங்கியது. மூச்சுத் திணறத் துவங்க அவளது உடலில் இருந்து வியர்வையும் மூத்திரமும் கசிந்திருந்தது.
படபடப்பில் விழித்துக் கொண்டவளுக்குச் சாவு வீடும் கண்ணாடிப் பேழையும் பஞ்சடைத்த நாசியும் அவனது நெற்றியில் ஒட்ட வைக்கப்பட்ட வெட்டுப்பட்ட நாணயமும் நினைவிற்கு வந்தன.
சற்றே தடுமாறியவள் பெருமூச்சுகளுடன் தண்ணீர் நிரம்பியிருந்த பித்தளைப் புட்டியை எடுக்க, கட்டிலின் விளிம்பிலிருந்த கைப்பை தவறி விழ ‘சிலிங் சிலிங்’ என்கிற சப்தங்களுடன் அதிலிருந்த நாணயங்கள் தரையில் விழுந்தோடின.
நீரருந்தியவள் குப்புறப் படுத்தவாறு பக்கவாட்டில் கையை நீட்டி கைப்பையை எடுக்க அதனடியில் ‘அதே நாணயம்’ பேரமைதியுடன் அவளுக்காகக் காத்துக்கிடந்தது.
0

சுஜித் லெனின்
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்றும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது. 2026-ல் எதிர் வெளியீடாக ’கடவுளும் மண்ணாங்கட்டியும்’ நுண்கதைகளின் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

