ஜார்ஜ் ஜோசப்
எண்பதுகளுக்குப் பின் முகிழ்த்த புதிய சிறு-குறு தொழில்கள், உதிரி தொழிலாளர்களின் கடும் உழைப்பையே மூலதனமாகக் கொண்டவை. ஒரு தலைமுறையினரே, தங்களை இயந்திரங்களின் உதிரிப் பாகங்களைப் போல் மாற்றிக் கொண்டு உழைத்துள்ளனர். இன்றளவும் கடின உடல் உழைப்பையும் இயந்திரங்களைக் கையாளும் திறனையும் கோரும் பட்டறைசார் தொழிற்கூடங்களின் கதி, அப்படியேதான் உள்ளது. பரத்ராஜ் ரவிதாஸின் ‘பட்டறை’ நாவல் அதை மையப்படுத்தியதுதான்.
1
நாவல் வடிவம், காவியம் எனும் மரபிலிருந்து இறங்கி வந்த இந்த முந்நூறு நூற்றாண்டுகளுள் வரலாற்றில் கிஞ்சித்தும் இடம்பெற முடியாத உழைக்கும் திரள் அதில் இடம்பெறத் தொடங்கியது. அதுவே நாவல் எனும் இலக்கிய வடிவம் செய்த முதல் நவீன மாற்றம் எனக் குறிப்பிடலாம். தமிழில் உழைப்பாளிகளைப் பற்றிய நாவல்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. தொ.மு.சி ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ நாவலிலிருந்து அதைத் தொடங்குவர். விவசாய, உப்பள, மீன்வள, பனைசார்ந்த என பலவகைப்பட்ட தொழில் புரியக்கூடியவர்களின் வாழ்க்கை இலக்கியத்தில் பதிவாகியிருப்பினும், லேத் மிஷினை முதன்மையாகக் கொண்டு இயங்கும் சிறு பட்டறைகளின் மனிதர்களை முதன்மைப்படுத்திய களம் தமிழுக்குப் புதிது. ஆனால் அது தமிழ் வாழ்க்கைக்குப் புதிதன்று என்பது வாசிக்கையில் அணுக்கமாகப் புரிகிறது.
திருநீர்மலையில் இயங்கும் கிரி & கோ எனும் நடுத்தர லாபம் தரக்கூடிய கம்பெனியில், குறைந்த சம்பளத்திற்குக் கடுமையாய் உழைக்கக்கூடிய முப்பது பணியாளர்கள் வேலைபுரிகின்றனர். அவர்கள் உலவும் இப்பட்டறையே நாவலின் களமும் நிலமும். நாவலெங்கும் அந்தக் கம்பெனி பற்றிய தகவல்களையும் அமைப்பையும் பரவலாக விவரிப்பதன் வழி, அக்குறுகிய இடம்பற்றிய பரந்த சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. பட்டறை பிரதியெங்கும் வியாபித்து, மாற்றிக்கொள்ள முடியாத மனிதர்களின் உருவகமாகப் படிகிறது.
பஞ்சப் பின்னணிலிருந்து உணவு கிடைத்தால் போதுமென கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் தொடங்கி, குறைந்த கூலிக்கு உழைக்கும் பீகாரிகள், கமிஷன் பார்க்கும் நுட்பங்களை அறிந்த நிர்வாகி, பெரிய கம்பெனிகள் வேலையில் எடுக்க எதிர்பார்க்கும் அனுபவத்திற்காகப் பொறியியல் படித்துவிட்டுத் தரநிர்ணயர்களாகப் பணிபுரிபவர்கள் எனப் பலதரப்பட்ட தொழிலாளிகளின் பின்னணி விரிவாகப் பேசப்படுகிறது. நாவலில் இவரைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவில்லையே என்று யோசிக்காதபடி, அறிமுகப்படுத்தப்பட்ட எல்லோர் குறித்தும் ஒரு துலக்கமான சித்திரத்தைப் பரத்ராஜ் தன் விவரணையின் வழி உருவாக்கிவிடுகிறார். அது சில இடங்களில் வாசகருக்கான கற்பனா இடைவெளியைத் தேவைக்கும் அதிகமாக மறைத்துக் கொண்டு நிற்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
பட்டறையில் உள்ள மனிதர்கள் ஒருநாளில் பெரும்பகுதி இயந்திரங்களுடன்தான் புழங்குகின்றனர். இரைச்சல் ஒலிகளுக்கு மத்தியில்தான் பேசிக்கொள்கின்றனர். பல்வேறு பின்னணி கொண்ட மனிதர்களுடன் உணவையும் இருப்பிடத்தையும் பகிர்ந்துகொள்கின்றனர். ஆதலால் அவர்கள் பேசும் மொழி மிக இலகுவாக எல்லோருக்கும் புரியும் தன்மையில் அமைந்திருக்கிறது. சென்னை வட்டார வழக்கு பரவி நிற்பினும் அதனுள் எளிமையே நிரம்பியுள்ளது. சாலா (சால்வா – பிரச்சினை ஓய்ந்ததா), பனாதி (கெட்ட சகுனம்), ஜாரி (விலைப் பெண்) ஆகிய வட்டாரச் சொற்பயன்பாடு அழுத்தமாகப் பதிகின்றன.
2
பன்னிரு மணிநேரத்தில் உணவு ஓய்வைத் தவிர பெருமூச்சு விடக்கூட அனுமதிக்காத வேலைக்கு வரும் உள்ளூர்ப் பொடியன்களால் பட்டறை நிரம்பியிருக்கிறது. ‘சின்ன வயதிலேயே பள்ளிக்கூடத்திலிருந்து நின்றவர்கள், பொட்டலம் ஏற்றிவிட்டு வயதுக்கு மீறிய காரியங்களைச் செய்தவர்கள், அநாதைகளாகத் திரிபவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்து ஊரில் யார் பேச்சையும் கேட்காதவர்கள்…’ (பட்டறை,ப.40) என அவர்கள் குறித்த பின்னணி அவசியமான பதிவாக உள்ளது. சமூகத்தில் உதிரிகளாகவும் அடையாளமற்றவர்களாகவும் ஆக வாய்ப்புள்ள இளைஞர்களாக அவர்கள் இருப்பதற்குச் சாதிப் பின்புலம் பிரதான காரணங்களுள் ஓன்றாக இருக்கிறது. படிப்பை விட்டு விலகிய, விலக நேர்ந்த சிறார்களில் மிகச் சொற்ப அளவினர்தான் இதுபோல் பணிக்குத் திரும்புகின்றவர்களாக உள்ளனர். அவர்களுக்குத் தொழிற்கூடத்தில் ஒரு வேலை என்பதே ஒரு கண்ணியமிக்க அடையாளம்தான்.
கம்பெனியின் தொடக்கக் காலத்தில் இருந்து கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் சொக்கத்தங்கம், செய்யாத குற்றத்திற்காக ஊதிய குறைப்பை நோக்கி நகர்த்தப்படுகிறான். நாவல் முழுக்கப் பரவி நிற்கும் பாத்திரங்களில் ஒருவனான தங்கம், தனது உழைப்பு உறிஞ்சப்படுகிறது என்று அறிந்தபின்னும் ஊருக்குத் திரும்ப முடியாது என்று விஜியிடம் தீர்மானமாகச் சொல்கிறான்.
’கீத்தெரு காரென், காலனி காரென், பறப்பைய, சக்கிலி, வில்லிச்சி, வண்ணான்… யோசிச்சு பாரு, இப்டிதான் கூப்பிடுவானுங்க. அங்க இருந்தா நமக்கிது உறுத்தகூட செய்யாது. அப்டி மாத்திடுவானுங்க’ (மேலது,ப.220) என ஊரில் தனக்கிருக்கும் இடத்தை, சமூகப் படிநிலையின் தாக்கத்தை உணர்ந்து உழைப்புச் சுரண்டலே அதற்குமேல் என்ற புள்ளியில் உறுதியாக நிற்கிறான்.
மயிலு, வேலு என்ற இரு சகோதரர்களும் உதிரித் தொழிலாளர் குழுவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் உழைப்பாளிகள். மயிலு, கட்சியில் நல்ல பொறுப்பில் இருப்பவன். அவனது தம்பி வேலுவுக்குத் திருமணம் நிகழ்த்தி வைக்கும்போது ஆதிக்கச் சாதியினருடன் ஏற்பட்ட தகராறில் கட்சியெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு சங்கம் முன்வருவதையும், கட்சிப் பேதமின்றி சாதி எனும் அலகு அவனையும் அவனைச் சார்ந்தோரையும் எதிர்ப்பதையும் புரிந்துகொள்கிறான். ஓட்டு என்ற ஒன்று இல்லாவிட்டால், தங்களைப் பிற ஆதிக்கச் சமூகங்கள் எவ்வளவு மோசமாய் எதிர்கொண்டிருக்கும் என்று உடைந்துபோகிறான். ஆனால் இந்நாவலில் யாரும் நொறுங்குண்ட மனம் கொண்டவர்கள் அல்லர். யாரும் கவலையில் உழன்றபடி கழிவிரக்கத்தை நோக்கிப் பாய்ந்து செல்வதில்லை. உடனே மீள்கிறார்கள் (இக்கதையில் மீட்சி என்பது இருக்கும் நிலையைத் தக்க வைத்துக்கொள்வது மட்டுமே). அல்லது யாருடைய கரமாவது அவர்களைத் தூக்கிவிடுகிறது. அப்படி நிகழாவிட்டாலும்கூட கழிவிரக்கம் கொண்டு மருள, அவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது. அன்றாடத்திற்கான உழைப்பே வாழ்க்கையாக இருக்கையில், துயர் கொள்வதும்கூட சொகுசு என்ற நிலையில் இருக்கிறார்கள். அத்தகைய மனங்களை மிக ஆழமாக உணர்ந்துகொள்ள, நாவலின் தொடக்கப் பகுதிகளில் தங்கமும் முகேஷும் கோழிக் கறிவை உணவைப் பற்றி வியந்து பேசுவது உதவுகிறது.
மயிலு தனது ஊரில் போட்ட கல்யாண விருந்திலும் ராசா கம்பெனியை நீங்குகையில் மயிலு வீட்டில் போடும் விருந்திலும் தங்கமும் முகேஷும் சாப்பிடுவது, நல்ல உணவுக்கான ஏக்கத்தை வருடம் முழுக்கச் சுமப்பவர்களின் உள்ளங்களைக் காட்டுகிறது. மாட்டிறைச்சி எப்படி மத அடையாளத்துடன் இணைக்கப்பட்டது என்றும் அறமேடு கிராமத்தில் திருமணச் சடங்கில்கூட ஒடுக்கப்பட்டவர்கள் மாட்டிறைச்சி விருந்து போட்டனர் என்றும் ‘பட்டறை’ பதிவுசெய்கிறது.
”தலித் இலக்கியத்தை, வெறுமனே ஒருத்தி அல்லது ஒருவனுடைய கதையாகவோ, அவருடைய துன்பியலாகவோ நோக்குவதைத் தவிர்க்க வேண்டும்” (தலித் பண்பாடு,ப.109) என்பார் ராஜ் கௌதமன். இந்நாவலில் மயிலுக்கு உண்டாகும் பிணக்கு தனிக்குடும்பத்திற்கு உண்டான ஒன்று எனும் வெளியிலிருந்து மிகச் சீக்கிரத்திலே ஆதிக்கப்பிரிவினருக்கும் தலித்துக்குமான பொது பிரச்சினையாக மாற்றம் கொள்ளுகிறது. தனியொரு தலித்துடன் பகை என்று முன்னிறுத்துவதும்கூட, அக்குறிப்பிட்ட தலித்தை ஒரு ஆளுமையாக மாற்றுவது என்ற பார்வை, ஆதிக்கச் சாதியினருக்கு உள்ளது என்பதை இப்பகை வளர்ச்சி தெளிவாகக் காட்டுகிறது. வயிறாற உண்டாட்டை முடித்துவிட்ட அறமேடு கிராமத்தினரையே பார்க்கும் ராசா ”எல்லோரையும் ஒருமுறை மெதுவாக மேலும் கீழும் குறுகுறுவென பொறாமைப் பார்வையில் விழுங்கினான். அந்தவொரு விஷயம் மட்டும் அவனை பயங்கரமாக தொந்தரவு செய்தது. எவ்வளவு தேடியும் வயிறு என்கிற பகுதி மட்டும் அவர்களின் உடலில் எங்கிருக்கிறது என்பதை ராசாவால் கண்டுபிடிக்கவே முடியவில்லை” (பட்டறை,ப.185) என்று நினைத்துக் கொள்கிறான். அவனது இந்த நினைப்பு அக்கிராமத்தினர் அன்றாட உழைப்பினால் பெற்றிருக்கும் உடல்கட்டைப் பற்றிய நுட்பமான அழகியல் பார்வையை முன்வைக்கிறது. ஆனால் இதுபோன்ற பார்வை, கலைமொழியில் குறைவான தருணங்களில்தான் வெளிப்படுகிறது. எனினும், இப்பிரதியில் உள்ள இறுக்கமான வாழ்க்கை, அத்தேடலை எளிதில் கடக்கச் செய்துவிடுகிறது.
தலித் பிரதியாக வாசிக்க எல்லா வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் இப்பிரதியில், ”மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கீழ்ச்சாதிக்காரர்கள் கணிசமாக இருப்பார்கள்” (மேலது,ப.63) என்ற பதம் தொந்தரவுக்குரியதாக உள்ளது. இச்சொற் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாம்.
3
ஆயுத பூஜை, பீகாரிகள், காதல், பசி, ஓனர் சம்சாரம், படையல், இன்றுபோய் நாளை வா, மீண்டும் ஆயுதபூஜை, இன்னொரு வாழ்க்கை, இன்னொரு என இந்நாவல் பத்து அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஆயுதபூஜை, பீகாரிகள், பசி, படையல் ஆகியன தனித்த குறுநாவலுக்கான பண்புகளுடன் மிளிர்கின்றன.
முதலாளி நாராயணமூர்த்தி ஆண்டு இடைவெளிகள்தோறும் புதிதாகக் கையாளும் பேசிகளைக் கொண்டு காலத்தைக் கணிக்கும்படி செய்திருக்கிறார் நாவலாசிரியர். அக்குறிப்புகளைக் கொண்டு 2010க்கு முந்தியும் பிந்தியுமான பத்தாண்டுக்குள் கதை நிகழ்வதாக அனுமானிக்க முடிகிறது. காலம் ஒரு குறிப்பாகத்தான் இடம்பெற வேண்டும் என்பதற்கான எந்த நியாயத்தையும் கதை கோராத பட்சத்தில், இன்னும் வெளிப்படையாக அது வந்திருக்க வேண்டும். சொல்லப்போனால் கதை கால மாற்றத்தை, அறிவிக்க வேண்டுவதாக உள்ளது.
மிகவும் அடிமட்டப் பொருளாதாரச் சூழலிலிருந்து முன்னேறி பட்டறை அமைத்த முதலாளி நாராயணமூர்த்திகூட, உழைப்பாளர்களுக்கு வருடந்தோறும் போனஸ் வழங்கவேண்டிய ஆயுதபூஜை நாளைத் தட்டிக்கழிக்கவே பார்க்கிறார். பெனாலிட்டி என்ற பெயரில், பழுதான இயந்திரங்களால் உண்டாகும் செலவுகளை அதை இயக்குபவர்கள் மேலேயே கட்டிவிடுகின்றார். ஒவ்வொரு ஆர்டரிலும் தரகு பணம் பார்க்கும், நாகராஜ் நாவல் முழுக்கப் பயணிக்கிறான். அவனுக்கும் பருஷிக்குமான காதலும் தன்பால் உறவும் அவர்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் எட்டிப் பார்ப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.
பருஹி – நாகராஜ், உறவை முன்வைத்து தங்கம் அவர்களை சக ஊழியர்கள் முன் விமர்சித்துப் பேசுகையில், பொதுப் புத்திப் பார்வையோடு அவர்களை ஏளனப்படுத்திவிட்டதாக வருந்துகிறான். தனக்கும் உடன் ஊழியர்களுக்கும் முதலாளி போனஸ் தராதபோது, அவரை மனதிற்குள் திட்டினாலும் பிறகு படியளக்கும் எஜமான் என வருத்தம் கொள்கிறான். விசுவாசமுள்ள செக்கு மாடாகத் தன்னை உருவகித்துக் கொள்கிறான் தங்கம். நாவலின் போக்கும் அவனை அப்படித்தான் காட்சிப்படுத்துகிறது.
பருஷியின் பீகாரி வாழ்க்கைப் பற்றிய பின்கதை, கதைக்கு வலுச்சேர்க்கிறது. வட இந்திய தொழிலாளிகளின் பாக்கு, சைனி கைனி பழக்கத்திற்குப் பின்னும் பொருளாதாரம் எங்ஙனம் வேலை செய்கிறது என்பது காட்டப்படுகிறது. சிகரெட், பீடியெல்லாம்கூட அவர்களுக்குச் செலவுமிக்க பழக்கமாகப் படுகிறது. வடவர்கள், அடையாள அட்டைகள்கூட இல்லாமல், கூலிகளாகத் தென் மாநிலங்களில் குடியேறுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் தரும் பகுதிகள் நாவலில் இடம்பெறுகின்றன. அவர்கள் தங்களுக்குள் பேணிக்கொள்ளும் இணக்கமும் மிகச் சிக்கனமாகச் செலவிட்டு மிஞ்சும் அற்பக்கூலியை ஊருக்கு அனுப்பும் அவர்களது வாழ்முறையும் அவசியமான பதிவாக உள்ளது. ஆங்காங்கே கூர்மையான பகடிப் பேச்சுகளும் வேடிக்கையான விவரிப்புகளும் கதையின் வாசிப்புத்தன்மைக்குப் பலம் கூட்டுகின்றன.
4
இந்நாவல் ஆயுத பூஜையில் தொடங்கி ஆயுத பூஜையில் முடிகிறது. ஆண்டுதோறும் ஆயுதபூஜை நாள் குறித்த வேலையாட்களின் எதிர்பார்ப்பில் எப்படிப் பெரிய மாற்றங்கள் இல்லையோ, அதுபோலவே ஏமாற்றத்திலும் மாற்றங்கள் இல்லை. இயந்திரங்களின் கிரீஸ் நெடிகளும் குறுகலான வேலை அறைகளும் நிறுவனத்தை அண்டியே கிடக்கும் ரங்கன் நாயும் பத்தாமல் போகும் தினச் சாப்பாடுகளும் இயந்திரங்களிலிருந்து எதிர்பாராப் பொழுதில் தெறிக்கும் அலுமினியக் குழம்புகளும் காயம்பட்ட எரிச்சலோடு தொடர்ந்து வேலை செய்யும் நிர்ப்பந்தமும் நிர்வாகி நாகராஜின் ஓயாத அவச்சொற்களும் சம்பந்தின் சொற்ப கால காதலும் அதன் வெற்றியும் ராசாவின் கன்சல்டன்ஸி எழுச்சியும் தங்கத்தின் ஜுனியர் இன்ஜினியர் ஆசையும் மேற்படிப்புக்கு வாய்ப்பில்லாத முடக்கமும் என இறுக்கமான மூச்சுத் திணறக்கூடிய உலகை, பாரமிகு சொற்பயன்பாடின்றிக் கடத்தமுடிகிறது பரத்ராஜால். அதுவே இப்பிரதியின் பலமாகவும் சில இடங்களில் பலவீனமாகவும் இருக்கிறது. முத்தாரச்செல்வி, செல்வி ஆயா, சீதா ஆயா என மூன்றே பெண் பாத்திரங்கள்தாம் நாவலில் பேசும்படி இடம்பெறுகின்றனர். அவர்கள் மேலும் விரிவாக வந்திருக்க வேண்டியவர்கள்.
‘வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே’ என்ற பொன்முடியார் பாடலின் அடி, பட்டறைசார்ந்து இரும்புகளுடன் புழங்கும் தமிழர் வாழ்வியலின் ஆரம்பகால சான்றுகளில் ஒன்றாக உள்ளது. இன்றைய நவீன காலக்கட்டத்தில், நகர்மயப் பெருக்கத்தில், உடல் உழைப்பை மையப்படுத்திய இத்தொழிலில் எவ்வித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் நவீன கல்வி அவற்றில் என்னென்ன மேம்பாடுகளை நிகழ்த்தியுள்ளது என்றும் மாறிவரும் விழுமியங்களைப் படிக்காத உழைக்கும் ஆண்கள் எங்ஙனம் அணுகுகின்றனர் என்றும் இந்நாவல் அலசலாகப் பேசுகிறது. ஆண்கள் மட்டுமே நிறைந்த இரும்புலகில், ஆண்கள் தங்கள் பாலிச்சை மறைத்துக் கொள்ளும் வாய்ப்பாகவும் வேலையே உள்ளது.
பெரு நிறுவனங்கள் ஒதுக்கும் சிறு வேலைகளை நம்பி நூற்றுக்கணக்கான பட்டறைகள், நகர்ப்புறங்களின் விளிம்புகளில் அல்லும் பகலும் இயங்குகின்றன. அவற்றில் ஒன்றை, அதில் இயங்கும் மனிதர்களை மையப்படுத்தியதே இந்நாவல் எனினும், இப்பட்டறை அவ்வகைப்பட்ட அனைத்துக் கூடங்களுக்குமான சாட்சியாக நின்று அத்தொழில்சார் மனிதர்களின் பிரதிநிதிப் பிரதியாக அமைந்துள்ளது.
ஆதார நூல்கள்:
1. பட்டறை, பரத்ராஜ் ரவிதாஸ், பரிசல், முதல் பதிப்பு டிசம்பர் 2025
2. தலித் பண்பாடு, ராஜ் கௌதமன், என்.சி.பி.ஹெச், மூன்றாம் பதிப்பு நவம்பர் 2024
00

ஜார்ஜ் ஜோசப் என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனச் செய்துவரும் இவரது இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எமரால்ட் என்கிற சிறுகதைத் தொகுப்பும், பூனைகளில்லா உலகம் என்னும் ஜப்பானிய மொழிபெயர்ப்பு நாவலும் சீர்மை வெளியீடாக வெளிவந்துள்ளன. இஸ்மாயில் என்கிற அமெரிக்க சூழலிய மொழிபெயர்ப்பு நாவலும் வெளிவர இருக்கிறது. மெய்யியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். கலீல் ஜிப்ரான், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், மா. அரங்கநாதன் போன்றோரை எழுத்துலக ஆதர்சங்களாகக் கருதுகிறார்.

