கவிஞர் யோகியின் ‘எனும்போது’ கவிதைத் தொகுப்பு
மலேசிய எழுத்தாளர்கள் குறித்தும் அவர்களின் புத்தகங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் நமது தொடரை வாசிக்கின்ற நடுகல்.காம் இணைய இதழ் வாசகர்களுக்கு வணக்கம்.
இன்று இந்தத் தொடரில் 15வது புத்தகத்தைக் குறித்து தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். இந்தக் கட்டுரை முழுக்கவும் மலேசிய இலக்கியச் சூழலில் வாசிப்பின் மீது அன்பும் காதலும் கொண்ட ஒரு வாசகனின் இரசனையை அடிப்படையாக வைத்தே எழுதப்படுகின்றது. ஒவ்வொருமுறையும் ஒரு கட்டுரையை எழுதும்போது என் இரசனையை நானே தள்ளி நின்றுதான் பார்க்கிறேன். ஆம் வாசிக்க வாசிக்க வாசகனின் இரசனை கொஞ்சமேனும் முன்னோக்கி செல்லத்தான் செய்கிறது.
எனக்கு இப்படி புரிந்திருக்கிறது. அதனை உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுக்கும் அப்படித்தான் புரிய வேண்டும் என்கிற எந்தவித எதிர்ப்பாப்பும் என்னிடம் இல்லை. ஆனால் நாம் இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் புரிதலின் வழியே ஓர் உரையாடல் நிகழ்வதையே நானும் எதிர்ப்பார்க்கிறேன்.
இந்த மாத தொடரில், மலேசிய கவிஞரும் களப்பணியாளருமான கவிஞர் யோகியின் ‘எனும்போது’ என்கிற கவிதைத் தொகுப்பைக் குறித்து எழுதுகிறேன்.
படைப்பாளிகளாக இயங்கும் பலரில் ஒரு சிலரே இங்கு களப்பணியாளராகவும் இருக்கிறார்கள். மலேசிய இலக்கியச் சூழலில் அப்படி குறிப்பிட்டு சொல்லத் தகுந்த ஒரு சில படைப்பாளிகளில் கவிஞர் யோகியும் ஒருவர். சக மனிதனின் துயரை தன் படைப்புகளின் வழி மட்டுமல்லாது நேரடியாக அந்த மனிதனோடு நின்றும் அவனுக்கு ஆறுதல் சொல்கிறவர்களில் ஒருவராகவே இவரைப் பார்க்கிறேன்.
2005-ஆம் ஆண்டு முதல் நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் கவிதை, கட்டுரைகள் எழுதினார். ‘மன்னன்’ மாத இதழில் நிருபராகவும் இருந்தார். 2005-ம் ஆண்டு பத்திரிகை உலகின் ஜாம்பவான் என அறியப்படும் 0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D” \o “எம். துரைராஜ்” எம்.துரைராஜ் அவர்களிடம் நிருபருக்கான அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றார்.
அது போலவே 2005-ஆம் ஆண்டில் மலேசியாவில் தொடங்கப்பட்ட ‘காதல்’ சிற்றிதழின் வழி நவீன கவிதைகள் எழுதத் தொடங்கினார். 2006 முதல் 2016 வரை வல்லினத்தில் கவிதை, பத்தி, கட்டுரைகள் என தொடர்ந்து பங்களித்து அக்குழுவின் செயல்பாடுகளிலும் இணைந்து பணியாற்றினார்.
இன்னும் சொல்லப்போனால் 2006-ல் மலேசிய நவீன இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் பாய்ச்சலுக்கும் கவிஞர் யோகி வல்லினம்.காமில் எழுதுவந்த பத்திகள் குறிப்பிட்ட பங்கை வகித்தன.
அவர் எழுதிய ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ எனும் பத்திகள் அதே பெயரில் புத்தகமாகவும் வெளிவந்து பலரின் கவனத்தை ஈர்த்தது.
மலேசியாவில் ‘பத்தி எழுத்தின்’ மீது பலருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. அந்த வகைமையைக் கூட கட்டுரைகள் என்பதாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். கட்டுரை என்றால் என்ன பத்தி எழுத்து என்றால் என்னவென்றே தொடர்ந்து நாம் வழியுறுத்தவேண்டியுள்ளது.
2012-ஆம் ஆண்டில் வல்லினம் பதிப்பகத்தில் வெளிவந்த ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ என்னும் பத்திகள் தொகுப்பு நிச்சயம் மலேசியாவில் குறிப்பிட வேண்டிய புத்தகங்களில் ஒன்று. யோகி ஒரு பெண்ணாக இருந்து அவர் பார்த்தவையும் அவருக்கும் நிகழ்ந்தவையையும் எந்தவித பாசாங்குமின்றி எழுதியிருப்பார். இங்கு ஏன் அவரை பெண் என்று இந்த இடத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது என்பதற்கும் அந்தப் புத்தகத்திலேயே அதற்கான காரணமும் உண்டு.
இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் எழுத தயங்குவதை மட்டுமல்ல; எவர் ஒருவரும் தயங்காது எழுதவேண்டியதையும் அதில் அவர் எழுதியிருப்பார். ஒருவகையில் அது அவரது தன்வரலாறு சாயலில் இருந்தாலும் அந்த அனுபவத்தில் பல மனிதர்களில் சாயல் இருக்கவே செய்கிறது, ஒருநாள் அந்தப் புத்தகத்தை குறித்தும் நாம் பேசுவோம்.
கவிஞர் யோகி, 2019-ஆம் ஆண்டுமுதல் 0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&action=edit&redlink=1” \o “மலேசியசோசலிசக்கட்சி(page does not exist)” மலேசிய சோசியலிசக் கட்சியின் தலைமையகத்தில் பணிபுரிவதோடு அக்கட்சியின் அனைத்து திட்டங்களிலும் இணைந்து செயலாற்றுகின்றார். முக்கியமாக பூர்வக்குடிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் யோகி கூடுதல் கவனம் செலுத்திவருவதோடு, மலேசிய பூர்வக்குடிகள் சார்ந்த தன் அனுபவங்களையும் ஆய்வையும் அவ்வப்போது கட்டுரைகளாகவும் எழுதி வருகிறார். சமீபத்தில் அவரை சந்தித்து பேசிய போது பூர்வகுடிகள் பற்றி எழுதியவை புத்தகமாக வரவிருப்பதாகச் சொன்னார்.
விரைவில் அதுவும் புத்தகமாக வந்தால் இச்சூழலுக்கு தேவையான ஆவணப்பதிவாக அந்தக் கட்டுரைகள் தனித்து நிற்கும்.
இயற்கைப் பேரிடர், மக்களுக்கான அவசர உதவிகள் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்திவருகின்ற ‘ஆளுவோம் தமிழா’ தொண்டூழிய நிறுவனத்தில் கௌரவ ஆலோசகராகவும் செயலாளராகவும் யோகி இருக்கிறார்.
2015 முதல் ‘0%AE%8A%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81&action=edit&redlink=1” \o “ஊடறு(page does not exist)” ஊடறு’ பெண்கள் அமைப்பில் இணைந்து, செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது புகைப்படக்கலையிலும், பயணங்கள் செய்வதிலும் ஆர்வம் கொண்டவர். அவருடைய முதல் புகைப்படக் கண்காட்சி 2019-ல் சிங்கப்பூரில் நடந்த அனைத்துலக 0%AE%8A%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81&action=edit&redlink=1” \o “ஊடறு(page does not exist)” ஊடறு பெண்கள் சந்திப்பில் ஓர் அங்கமாகவே நடத்தப்பட்டது
தனது இலக்கிய செயற்பாட்டில் அடுத்த கட்டமாக தன் கணவர் ஓவியர் சந்துருவுடனும் தனது தோழர்களுடனும் இணைந்து கூகை பதிப்பகத்தை 2018-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இப்பதிப்பகத்தின் வழி இலக்கிய நூல்களோடு மலேசிய இடதுசாரி வரலாற்று நூல்களையும் பதிப்பித்து வருகிறார்.
2015/16-ம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரைக்காக தேசிய விருதை மலேசிய சுற்றுலாத் துறை அமைச்சு இவருக்கு வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாட்டின் ‘கவியரசர் கலைச் சங்கம்’ 2022-ஆம் ஆண்டு ‘சிங்கப்பெண்ணே’ என்கிற விருதையும் இவருக்கு வழங்கி சிறப்பித்தது
இந்தப் படைப்பாளியை வெறுமனே கவிஞர் என்றும் களப்பணியாளர் என்றும் சொல்லிவிட்டு இத்தொடருக்கு செல்ல என்னால் இயலவில்லை.
அது அவர் ஆற்றும் களப்பணிக்கு மரியாதையாகவும் இருக்காது என்பதால் அவரின் கவிதைக்குச் செல்வதற்கு முன்பாக அவரின் களப்பணியையும் அவரையும் உங்களுக்கு கூடுதலாய் அறிமுகம் செய்யவேண்டியுள்ளது. அது போலத்தான் மலேசிய இலக்கியச் சூழலில் எழுத வரும் புதிய தலைமுறைக்கு அவர்கள் தவறவிடக்கூடாத எழுத்தாளர்களில் கவிஞர் யோகியின் பெயரையும் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறேன்.
2012-ஆம் ஆண்டு ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ என்ற பத்திகள் தொகுப்பையும், 2016-ஆம் ஆண்டு ‘யட்சி’ என்ற முதல் கவிதைத் தொகுப்பையும், 2021-ஆம் ஆண்டில் ‘கோறனி நச்சில்’ என்கிற கட்டுரை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘எனும்போது’ என்ற கவிதைத் தொகுப்பு குறித்து இன்றைய தொடரில் தெரிந்து கொள்வோம்.
‘எனும்போது’ கவிஞர் யோகியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. அவரின் கூகை பதிப்பகம் இந்தப் புத்தகத்தை 2020-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்கள்.
இந்தப் புத்தகம் இரு பகுதிகளாக இருக்கும். முதற்பகுதியில் உள்ள கவிதைகள் அனைத்தையும் அடுத்த பகுதியில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இணைத்திருப்பார்கள். இக்கவிதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீ என் ஶ்ரீவத்ஸா செய்திருக்கிறார். பேராசிரியர் அ.ராமசாமி இந்தப் புத்தகத்திற்கு சிறிய அறிமுகத்தையும் கவிஞர் கலாப்ரியா இத்தொகுப்பிற்கு முன்னுரையையும் கொடுத்திருப்பார்.
எந்தக் படைப்பாளியும் குழந்தையைப் பற்றி ஏதாவது ஒன்றைப் பாடிவிடுகிறான். கவிதையாகவும் இசையாகவும் பாடலாகவும் ஓவியமாகவும் புகைப்படமாகவும் திரைப்படமாகவும் கதையாகவும் அவனது ஆன்மா வாழும் கலைப்புலத்தின் கலைப்படைப்பாக தன்னை எப்படியும் வெளிகாட்டி விடுகிறது. அது அவனது குழந்தையாக இருக்கலாம்; அல்லது அவனே குழந்தையாக இருந்ததாகவும் இருக்கலாம்.
இன்னும் சொல்லப்போனால் தன் வாழ்நாளில் ஒருநாளும் கைக்குழந்தையொன்றைத் தன் கையால் எடுத்து அணைத்து முத்தமிடும் பாக்கியம் அற்றவனின் ஒப்பாறி குரலாகவும் இருக்கலாம். அக்குரலே அவனது வாழ்நாள் துயரங்களுக்கான ஒரே நிவாரணியாகவும் இருக்கலாம்.
இப்படி குழந்தைகளைப் பாடும் படைப்புகளையே பெருந்தொடராக எழுதலாம் அவ்வளவு இருக்கிறது.
கவிஞர் யோகியும் தன் பங்கிற்கு குழந்தையைப் பேசியிருக்கிறார். தன்வீட்டிற்கு வந்து போகிறது குழந்தை. எப்போதும் வீட்டிற்கு வந்துபோகும் குழந்தைதான். விளையாட்டு பொருட்களை கொட்டியும் அடுக்கியும் விளையாடும் வழக்கமான குழந்தை. இப்போது கொஞ்சமாய் வளர்ந்துவிட்டதையும் எழுத தொடங்கியிருப்பதையும் தெரிந்து கொண்ட கவிஞன்; அந்தக் கடந்த காலத்தை கடக்க இயலாமல் தவிப்பதாகவே இந்த கவிதையில் தெரிகிறது. இறுதியாக அந்தக் குழந்தை இந்த வீட்டை விட்டு போகும் போது கொடுத்த ஏக்கப் பார்வையால் கவிஞரின் மனதில் ஏற்பட்டிருக்கும் ஏக்கத்தை அதுவே வந்து சரி செய்யும் எனவும் எதிர்ப்பார்க்க வைக்கிறது.
அந்தக் கவிதையை நீங்களும் வாசிக்க வேண்டாமா?
–நவிஷா–
விளையாட்டுப் பொருட்கள்
அடங்கிய பையைப் பிடுங்கி
வீடு முழுவதும் இறைத்துவிடுகிறாள் நவிஷா
சலிக்காமல் இறைந்து கிடக்கும் அத்தனையையும்
பையில் சேகரிக்கின்றேன்
அத்தனை ஆவலாக
அதைப் பிடுங்கி
மீண்டும் வீடெங்கும்
இறைக்கிறாள்
அவற்றை
சேகரிப்பதை விடுத்து
அவளையே பார்க்கின்றேன்
நான் ஏன் சேகரிக்கவில்லை
என்பது போல்
என் முகத்தை
ஏக்கமாகப் பார்க்கிறாள்
அவள் விட்டுச்சென்ற
கேஸ் சிலிண்டர், கரண்டி, கிலுகிலுப்பை இத்யாதிகள்
அனைத்தும்
என்னைப் போலவே அவளுக்கென
காத்திருக்கின்றன…
நவிஷா இப்போது எழுதத் தொடங்கிவிட்டாளாம்
தங்கை சொன்னாள்
விளையாட்டுப் பொருட்களை
இப்போது அவள்
சீண்டுவது இல்லையாம்
இறுதியாக
அவள் விட்டுச் சென்ற
அந்த ஏக்கப் பார்வை
என் வீட்டின்
சுவர் முழுவதும் சுண்ணாம்பு
பூசிக்கொண்டிருக்கிறது
நாளை அவள் வந்து அதில்
சித்திரம் வரைவாள்..
குழந்தைகள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி இருப்பதுபோல அவர்கள் இழந்து வரும் குழந்தைமை மீதான ஏக்கமும் நமக்கு இருக்கவே செய்கிறது.
தேர்ந்த படைப்பாளி தன் படைப்புகளில் தன் வாழ்வியலையும் தன் நிலத்தையும் ரொம்ப நேர்த்தியாக பொருத்திவிடுகிறான். அந்தக் படைப்பில் கலை மட்டுமே இருப்பதில்லை. அதனுள்ளே ஒரு வரலாறும் அதனால் இணைந்து கொள்கிறது. கவிஞர் யோகி அப்படித்தான் தன் கவிதைகளில் தன் நிலத்தை தவறாது இணைத்து வருகிறார்.
நம்முடன் வாழ்ந்து நம்மாலேயே கொலை செய்யப்பட்டவர்கள்தான் நம் குலதெய்வங்களாக மாறியிருக்கின்றார்கள் என்பது எவ்வளவு முரண் மிகுந்தது.
உணர்ச்சி வசப்பட்டுவிட்டோம். முட்டாளாய் இருந்து விட்டோம். ஜாதிவெறியில் ஊறியிருந்தோம் என பல காரணங்களை வைத்துக்கொண்டு கொன்றுவிட்ட நம் வீட்டு பெண்களுக்கு கோயில் கட்டி நம் குலத்தின் காவல் தெய்வமாக ஆக்கிவிட்டு அந்த தெய்வம் நம்மையும் காக்கும் என நம்புகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள்தானே.
இதில் கொடுமை என்னவென்றால் இப்படியான குல தெய்வங்களைக் கொஞ்சமும் கூச்சமோ குற்றவுணர்ச்சியோ இன்றி தொடர்ந்து உருவாக்கி கொண்டேதான் இருக்கின்றோம்.
ஒரு பெண்ணை தெய்வமாக்க வேண்டுமெனின் அவளை கொன்று போடலாம் என்ற விதைக்கும் ஒரு பெண்ணை கொன்றுவிட்டால் அவளை தெய்வமாக்கிவிடலாம் என்கிற விதைக்கும் யார் இன்றளவும் நீர்வார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாவங்களுக்கு யார்தான் தொடர்ந்து மன்னிப்பை வழங்கி கொண்டே இருக்கிறார்கள்?

கவிஞர் யோகியின் ‘குருதி 2’ என்னும் கவிதை இப்படியெல்லாம் வாசிக்கின்றவர்களைச் சிந்திக்க வைக்கிறது. இந்த கவிதையில், ’காசிப்பிள்ளை தெரு’ என்னும் இடமும் வருகிறது. என்றாவது நீங்கள் மலேசியா வந்தால் தவறாது அந்தக் காசிப்பிள்ளை தெருவிற்கு வந்துவிட்டு போங்கள்.
‘குருதி 2’
35 வயதாகும் மாயா
வன்புணர்வு செய்யப்பட்டாள்
அதன்பின் அவளின் உடலும் வயிறும்
மருந்துகளினால்
பரிசுத்தமாக்கப்பட்டது
மனநல மருத்துவரால்
கிளிப்பிள்ளையாய்
தனக்கேதும் நிகழவில்லை
எனச்சொல்லவும்
பயிற்றுவிக்கப்பட்டாள் மாயா.
கடித்து எறியப்பட்ட மாயாவின்
ஒரு முலை
பலாத்காரம் நிகழ்ந்த
காசிப்பிள்ளை தெருவின்
தெய்வமாக அவதாரம் எடுத்துவிட்டதென
ஆறுமுகம் கூறுமையில்…
தனக்கேதும் நேரவில்லை என
மீண்டும் மீண்டும் சொல்லியவாறே
இன்னொரு முலையை
மிகப் பொறுமையாக
அறுத்துக் கொண்டிருக்கின்றாள்…
‘எனும்’ என்ற தலைப்பில் 6 கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர். தோல்வியை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொருத்துதான் வெற்றி நமக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என தெரியும். ஆனால் வாழ்நாள் முழுக்க தோல்விகளையே சந்தித்தவனின் மனம் என்னவாக இருக்கும் என்பது நமக்கு அச்சத்தைக் கொடுக்க கூடியதாக இருக்கும்.
அதைவிட தனது தோல்விகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கும் ஒருவன் கடைசியில் வெற்றி பெறுகிறானோ இல்லையோ அவனுக்கான ஓர் அடையாளத்தையே அவன் உருவாக்கிவிட்டுதான் சென்றிருப்பான்.
‘எனும் 5’
முதல் முறை தோற்கும்போதே
மரணித்துவிட வேண்டும்..
தொடர் தோல்விகள்
மரணத்தைத் தோற்கடிக்கக்
கற்றுக்கொடுத்து விடுகின்றன…
இங்கு ஒருவன் மரணத்தைத் தோற்கடிக்கும் அளவிற்கு தோல்விக்கு பழகிவிட்டான் என வருந்துவதா; அவன் அடைந்த தோல்விகள் ஒவ்வொன்றும் அவனுக்கு மரணத்தையே இரண்டாம்பட்சமாக மாற்றிவிட்டதற்காய் மகிழ்வதா. சாகாதிருப்பது போல் மீளா துயரம் ஒன்று இருக்கிறதா என்ன? அப்படித்தானே இதுவும்.
ஏறக்குறைய இதே பாணியில் இன்னொரு கவிதையும் உண்டு.
‘எனும் 4’
என் சுயம் சுடப்படும்போதெல்லாம்
அவனைத் தேடிச் சென்று விடுகிறேன்
இன்று அவனையும் தொலைத்த
என் சுயம்
வலிமையானது..
கவிதை நமக்கு ரொம்பவும் அந்தரங்கமானது. ஆனால் எழுதப்படும் எல்லா கவிதைகளுமே நமக்கானது அல்ல; நம் அந்தரங்கத்திற்கானதும் அல்ல. நாம்தான் நமக்கான கவிதைகளைக் கண்டறிய வேண்டும். நான் கவிதைகளை இருமுறைகளில் வாசிப்பேன். வாய்விட்டு வாசிப்பதில் ஒரு முறையும் மௌன வாசிப்பில் இன்னொரு முறையும்.
வாய்விட்டு வாசிக்கும் போது தோன்றும் உள்ளுணர்வை விட; மௌன வாசிப்பில் தோன்றும் உள்ளுணர்வு நமக்கான கவிதையை நமக்கு அடையாளம் காட்டிவிடும். நாமும் நம்மை அந்தக் கவிதையில் ஓர் அங்கமாக சேர்த்துக்கொள்வோம். அப்படி நான், என்னை சேர்த்துக் கொண்ட கவிதைகளில் ஒன்றுதான் அடுத்த வரவிருப்பது.
‘கால்கள்’
கால்களுக்குப் பொய் பேசத் தெரியாது
காயமாகும் அத்தனை பயணங்களையும்
கால்கள் கடந்து போகின்றன…
சில வேளைகளில் வலி தாங்காமலும்
சில வேளைகளில் மகிழ்ச்சியிலும்
கால்கள் தடுமாறவே செய்கின்றன…
கால்கள் முறியும் தருணத்திலும்
கால்கள் சீழ் பிடிக்கும் வேளையிலும்
கால்கள் பொய் சொல்வதில்லை
ஆனால்
கால்களாக இருப்பதில் பிரச்சனை
உள்ளதாக
யார் யாரோ சொல்வதை
கேட்டுக்கொண்டே இருக்கின்றன
ஏதும் அறியா கால்கள்
‘காமத்தில் காதல் எனும் போது’ என்ற தலைப்பில் 10 குறுங்கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர். காமம் என்ற சொல்லையோ அதன் பொருளையோ வெறுமனே விட்டுவைக்காத கவிஞர்களே இல்லை எனலாம். இதுவரை இருந்ததின் பொருளையும் அவர்கள் மாற்றியமைத்து விடுகிறார்கள்
‘காமம் 2’
சிதையில்
வெந்து மீந்த
அஸ்தியைப்போல
சாம்பலாய்
ஆறிக்கொண்டிருக்கிறது
காமம்…
என்று ஒரு கவிதையில் காமத்தை ஆறிப்போகும் சாமபில் வைக்கிறார் கவிஞர்.
‘காமம் 9’
அவன் பெண்ணாகவும்
அவள் ஆணாகவும்
கடக்கும் தருணத்தில்
விழித்துக்கொள்கிறது
காமம்…
என்று தன் கவிதையில், உடலிச்சை யாரை யாராக மாற்றி அவர்களுள் இருக்கும் ஆதி இச்சையின் அடிக்குரலைக் கேட்க வைப்பதைச் சொல்கிறார். காமம் எந்த நேரத்திலும் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றிக் காட்டக் கூடியதுதானே.
இந்த குறுங்கவிதை வரிசையில் எட்டாவதாக வரும் கவிதை, ஏனோ எனக்கு பிடித்துவிட்டது.
‘காமம் 8’
வான்கோ–வின் முடிக்கப்படாத
ஓவியங்களைப் போல
ஒவ்வொரு கலவியிலும்
முழுமைபெறவிடாமல் மிச்சத்தை வைத்துவிடுகிறது
காமம்….
வான்கோவின் முடிக்கப்படாத ஓவியமாக அல்ல இனி ஒரு போது முழுமையடையாத ஓவியமாகவே இந்தக் காமம் இருக்கபோவதுதான் இந்தக் கவிதை மீதான ஈர்ப்பின் காரணமாகவும் இருக்கலாம்.
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும்
என அன்று கேட்ட மகாகவி பாரதியைப் போலவே இன்றைய கவிஞர்களும் தங்களுக்கான நிலங்களைக் கேட்கிறார்கள். அது அவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்காக அல்ல, உதிரி மனிதன் கொஞ்சமேனும் நிம்மதியாய் படுத்துறங்கத்தான்.
கூட்டமாக இருந்தவர்கள் குழுக்களாக சுருங்கினார்கள். குழுக்கலாக சுருங்கியவர்கள் வட்டமாக மாறினார்கள். வட்டமாக மாறியவர்கள் தனித்தனியாக விலகினார்கள். தனித்தனியாக விலகியவர்கள் பின் ஒட்டுமொத்தமாக எதிலிகளாக மாறிவிட்டார்கள். அதிகார கரங்கள் எல்லாவற்றில் இருந்தும் அவர்களை தூக்கி எறிந்துவிட்டது. எறிந்துகொண்டே கொண்டே இருக்கிறது.

‘எதிலியாய் வாழ்கிறோம்’
எதிலியாய் வாழ்கிறோம்
வீடற்று
நிலமற்று
உரிமைகள் பறிக்கப்பட்ட
எதிலிகள்
நாங்கள்
அக்கரையில் தெரியும்
துளியளவு பச்சையை
உடல் முழுவதும் பூசிக்கொண்டு
நம்பிகை எனும் ஆணிவேரையும்
பிடுங்கி எடுத்துக்கொண்டு
அன்றிப் பறவையாக
கடலிலிருந்து நிலத்திற்கும்
நிலத்திலிருந்து ஆகாயத்திற்கும்
புலம் பெயர்ந்துகொண்டே இருக்கிறோம்
எங்களின் சொந்த தாய்மண்
எங்களைப் பிடுங்கி எறிகிற இடத்தில்
எங்களை அப்படியே ஊன்றிக்கொள்கிறோம்
சில வேளைகளில்
துளிர்விட்டு மெல்ல விருத்தியடையும்
சில வேளைகளில்
அனுஅனுவாக மரணிக்கவும்
சில வேளைகளில்
அங்கிருந்தும் பிடுங்கப்பட்டு
யாரோ தீர்மானிக்கும்
எங்கள் வாழ்க்கையை
போராடி போராடி
வாழ்ந்து முடிக்கிறோம்
நாடுடைய
அதிர்ஷ்டசாலிகளே
செவி கொடுங்கள்
ஆண்டப் பரம்பரை
மூத்தகுடி என
எச்சமாய்
மீந்துபோயிருக்கும்
இந்தத் துருபிடித்துப்போன
வரலாற்றை விடவும்
ராமன் பாலம்
அனுமன் பாதம்
சோழனின் கடாரம்
என்பதைவிடவும்
வேண்டும்
எங்களுக்கு
எங்கள் வாழ்க்கைக்கான
ஒரு நிலம்
என முடிக்கும் கவிதை எல்லோருக்கும் புரிந்துவிடக் கூடியதுதான். ஆனால் இந்தியாவை அடுத்து மலேசியாவில்தான் தமிழ் அதிகம் பேசப்படுகின்றது என சொல்லப்படும்போது இங்கிருக்கும் ஒரு தமிழ்க்குரல் இப்படியாக ஒலிப்பதை யோசித்தால் அதிலுள்ள கூடுதல் வலியையும் அது கொடுக்கும். அதே சமயம் இந்தக் கவிஞனின் குரல் ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக அல்லாமல், அதிகாரங்களால் எதிலிகளாக அலையவிடப்பட்ட ஒவ்வொருவரின் குரலாகவே ஒலிக்கிறது.
இவ்வளவுக்கு பின்னும் சொல்லவேண்டியவை இந்தப் புத்தகத்தில் உள்ளன. அது செறிவாக்கம் (எடிட்டிங்).
இந்தத் தொகுப்பில் இருக்கும் சில கவிதைகள் இன்னமுமே ஆழமாக எழுதபட்டிருக்க வேண்டியவை. சில கவிதைகள் தொடங்கிய இடத்தைவிட்டு எங்கோ போய் முடிகிறது. சில கவிதைகள் கவிதையாகும் தருணத்தை தவறவிட்டதாகவும் படுகிறது.
உதாரணமாக ஒரு கவிதையை கவிஞர் இப்படி எழுதியிருப்பார்.
‘எனும் 3’
அவன் விஷம்
மரணம் நான்…
இதையே ‘அவன் விஷம்/ நான் மரணம் என வரிசைப்படுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என தோன்றுகிறது. ஒரு கவிதையின் தொடக்கமாக வரவேண்டியதையோ ஒரு கவிதையின் கடைசி வரியாக வரவேண்டியதையோ இப்படி ஒரே கவிதையாக எழுதி வாசிக்கின்றவர்களை ஏமாற்றிவிடுகின்றார் கவிஞர்.
இந்தப் புத்தகத்தில் ‘வனமாகும் என் கவிதைகள்’ என்ற ஆசிரியரின் உரையில், தான் இந்தக் கவிதைகளை எடிட் செய்யவோ தேர்வு செய்து சேர்க்கவோ சிலர் சொல்லியும் ஒப்புக்கொள்ளவில்லை என கவிஞர் சொல்கிறார். ‘சுயத்தோடும் சுயமரியதையோடும் அதன் திமிர் கொஞ்சமும் குறையாமல் என் கவிதைகள் பிறந்திருக்கின்றன. காடுகளைப் போல வாழ ஆசைப்படும் என் கவிதைகளுக்கு அதன் பச்சை வாசத்தை நான் கொடுக்கின்றேன்… ‘ என்று தன் பக்கத்து நியாயத்தை கவிஞர் சொல்வது ஏற்க வேண்டிய ஒன்றுதான்.
அதே சமயம் அந்த கவிதைக் காட்டில் முளைத்திருக்கும் களைகளை செறிவாக்கம் செய்திருந்தால் அதனை வாசிக்கும் அந்த காட்டிற்குள் நுழையும் வாசகர்களுக்கும் அது முழுமையான வாசிப்பு இன்பத்தைக் கொடுத்திருக்கும் என்பதும் ஏற்க வேண்டிய வாசகர் பக்க நியாயம்தானே.
தான் எழுதியது அப்படியே வரவேண்டும் என படைப்பாளி ஆசைப்படுவது சரிதான். ஆனால் அந்த எழுத்து அவர் எழுத நினைத்ததற்கும் காகிதத்தில் எழுதி முடித்ததற்கும் ஒரு நியாயம் செய்திருக்க வேண்டும்தானே.
மற்றபடி மலேசிய இலக்கியச் சூழலில் எப்போதுமே தவிர்க்க முடியாத ஓர் எழுத்தாளரின் கவிஞரின் களப்பணியாளரின் கவிதைத் தொகுப்பு குறித்து உங்களோடு இந்த வார தொடரில் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.
மீண்டும் அடுத்த மாதம், மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு உங்களைச் சந்திக்க வருகின்றேன்.
00

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

